இரண்டு கவிதைகள்

அகாலம்
இரவை,
குளிரை,
உறக்கத்தை,
இனம் புரியாத பயத்தை
விரட்டும் முகமாக
பீடி ஒன்றைப்
பற்றவைக்கிறான்
பிணவறைக்
காவலாளி.
புகைநாற்றம்
பொறாமல்
புரண்டு படுக்கிறது,
தன்னைத்தானே
எண்ணெய்யூற்றி
எரித்துக்கொண்ட
பிணம்.
களவியல்
பல்
வளர்ந்தபின்னும்
பால் மறக்காது
பசியும் அடங்காது
பற்றி உறிஞ்ச முன்னும்
பிஞ்சு உதடுகளைப்
பதறப் பதற
முலையினின்றும் பிடுங்கி
மூலையில் எறிந்த தாய்
கச்சொதுக்கி
காம்புகளைச் சுற்றிலும்
கடிவாயில்
கசப்பு தடவுவாள்
காணப் பொறாது
விக்கித்து நிற்கும்
அக்குழந்தை
அழுது தேறியபின்
அள்ளி மண் தின்னப்பழகும்
மெல்ல.