அனிமேஷன் திரைப்பயணம்: 04 – தொழில்நுட்ப வரலாறு

இத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: அனிமேஷன் திரைப்பயணம்

இந்திய நதிகளைப் பற்றி எழுதும்போது கங்கையைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அதேபோல, கங்கையைப் பற்றி எழுதும் போது, கங்கோத்ரி பற்றி எழுதாமல் முழுமையடையாது. ஒரு விதத்தில் கங்கோத்ரி எல்லா இந்திய நதிகளின் ஆரம்பம் என்று சொல்ல்லாம். குறைந்தபட்சம் கங்கோத்ரியிலிருந்து இந்திய நதிப் பயணத்தை ஆரம்பிக்கலாம். க்ராபிக்ஸ் உலகில் அப்படிப்பட்ட கங்கோத்ரி, இவான் சதர்லாண்ட் என்ற விஞ்ஞானி. இவரிடம் தொடங்கி எல்லா அனிமேஷன் விஷயங்களும் வளர்ந்தன என்றால் மிகையாது. இவர் Sketchpad என்ற புதுமை நிரல் ஒன்றை 1960-களில் உருவாக்கினார். முதன் முறையாக கோடுகள், வளைவுகள், கணினி திரையில் வரைய வழி வகுத்தார். இவற்றைக் கொண்டு வரைந்த படங்களை நகல் எடுக்க முடிந்த்து, ஒட்ட முடிந்தது, சுழற்ற முடிந்தது. முதன் முறையாக இன்னொரு விஷயம் – ஜூம் செய்வது எப்படி என்று அழகாக இந்த நிரல் மூலம் விளக்கினார் சதர்லாண்ட். இவரது மாணவர் வானெவர் புஷ் எழுதிய ‘As we may think’ என்ற கட்டுரை மிகவும் சரித்திர புகழ் பெற்றது.

இவான் சதர்லாண்ட் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது பல மாணவர்களின் டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்கு உதவி செய்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார் என்றால் மிகையாகாது. இவருடைய மாணவர் டேனி கோஹென் உலகின் முதல் விமான சிமுலேட்டர் மென்பொருளை உருவாக்கினார். சதர்லாண்ட் அவருடைய மாணவர் கோஹெனுடன் முப்பரிமாண அனிமேஷன் பற்றிய அடிப்படைக் கொள்கைகளை புத்தகம் மூலம் விளக்கினார். பல்கலைக்கழகங்கள் கணினி க்ராபிக்ஸ் பற்றிய பாடங்கள் நடத்தத் தொடங்கின. சதர்லாண்ட் யூட்டா பல்கலைகழகத்திற்கு 1968-இல் மாறினார். ஒரு க்ராபிக்ஸ் புரட்சியே உருவாக்க இது உதவியது என்று அப்பொழுது அவருக்கு தெரியவில்லை. மற்றொரு மாணவர் ஹென்ரி கெளராட் முதல் நிழலமைப்பு நிரலை உருவாக்கினார். இவருடைய மற்றுமொரு புகழ்பெற்ற மாணவர் எட் காட்மல் – இவர், இன்று டிஸ்னி பிக்ஸாரின் தலைவர்.

இதே சமயத்தில் சதர்லாண்ட் புதிய நிறுவனம் ஒன்றை டேவிட் இவான்ஸ் என்ற சக விஞ்ஞானியுடன் தொடங்கினார். அதில் அவருடைய முதல் ஊழியர்கள் இன்று இந்த தொழிலின் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். ஜிம் க்ளார்க் அதில் ஒருவர் – இவர் சிலிகான் க்ராபிக்ஸ் என்ற மிக பெரிய க்ராபிக்ஸ் மென்பொருள் மற்றும் வன்பொருள் கம்பெனியை உருவாக்கியவர். மற்றவர் – ஜான் வார்னாக், இவர் அடோபி என்ற மிக பெரிய மீடியா நிறுவனத்தை தொடங்கினார். அனிமேஷன் துறையில் உள்ள இன்னொரு மாபெரும் நிறுவனம், ட்ரீம்வர்க்ஸ் – இந்நிறுவனம் ஒன்றுதான் சதர்லாண்டுடன் நேரடி சம்மந்தம் இல்லாதது. சதர்லாண்டின் புரட்சிகரமான கணினி முன்னேற்றம் பல இளம் விஞ்ஞானிகளை க்ராபிக்ஸ் துறையில் ஆர்வம் கொள்ளச் செய்த்து. கடந்த 40 வருடங்களில் இத்துறையின் முன்னேற்றம் அசாத்தியமானது. விஞ்ஞானிகள் சிக்க்ராஃப் (SIGGRAPH) என்ற அமைப்பில் ஒவ்வொரு சந்திப்பிலும் தங்களது புதிய உத்திகளை விவரித்து இத்துறையை முன்னேற்றினார்கள். பல பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஆராய்ச்சிகள் இத்துறையின் இன்றைய நிலைக்கு காரணம். இவான் சதர்லாண்ட் இத்துறையின் தந்தை என்று சொன்னால் மிகையாகாது.

ஜிம் க்ளார்க் பல க்ராபிக்ஸ் சம்மந்தப்பட்ட கேத்திர மாற்றங்கள் (geometry pipelines) பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார். 1979 ல் இவருடைய ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக ஆய்வு குழு கேத்திர என்ஜின் (geometry engine) ஒன்றை மென்பொருளில் உருவாக்கியது. இன்றுவரை அனைத்து விதமான அனிமேஷனுக்கும் ஆதாரம் இந்த அடிப்படை கொள்கையாக விளங்குகிறது. இவர் சில சக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுடன் 1982-இல் சிலிகான் க்ராபிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 1980/90-களில் ஹாலிவுட்டின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் சிலிகான் க்ராபிக்ஸ் மென் மற்றும் வன்பொருளாலேயே செய்யப்பட்டது என்றால் மிகையாகாது. ’Jurassic Park’, ‘Congo’, போன்ற திரைப்படங்கள் SGI புண்ணியத்தில் நம்மையெல்லாம் இருக்கை நுனிக்கு வரச் செய்தது!

இதே காலகட்டத்தில் அருகே கனடாவில் உள்ள டெரொண்டோ நகரில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் சிலர் க்ராபிஸ் மீது ஈடுபாடு கொண்டு பல புதிய மென்பொருள் உத்திகளை கண்டுபிடித்து வந்தனர். இவர்கள் இந்த கல்லூரியிலிருந்து வெளியேறி, ஏலியஸ் (Alias Wavefront) என்ற நிறுவனத்தை தொடங்கி ’Maya’ என்ற உலகின் முதல் முப்பரிமாண மென்பொருள் தொகுப்பை வெளியிட்டார்கள். பல அனிமேஷன் ஸ்டூடியோக்கள் இதை வைத்து பல திரைப்படங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் உருவாக்கத் தொடங்கினார்கள். ‘Jurassic Park’ ல் டைனாஸர் மிரட்டுவதெல்லாம் ’மாயா’ புண்ணியத்தில். அதே போல, ‘Terminator-இல் ஆர்னால்டு, தீயிலிருந்து எழுந்து வந்து அனைத்தையும் துவம்சம் பண்ணுவதும் ‘மாயா’ உபயத்தால். 1995 ஆம் ஆண்டு சிலிகான் க்ராபிக்ஸ் ஏலியஸ் நிறுவனத்தை வாங்கியது. இன்று சிலிகான் க்ராபிக்ஸ் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஏலியஸ் ஆட்டோடெஸ்க் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டு மாயா தொடர்கிறது. ஆட்டோடெஸ்க் ‘மாயா’வைப்போல 3DS Max என்ற முப்பரிமாண அனிமேஷன் மென்பொருள் தொகுப்பையும் விற்கிறது.

ஜான் வார்னாக் யூட்டா பல்கலைகழகத்தில் ஸதர்லாண்டிடம் க்ராபிக்ஸ் படித்தார் என்று பார்த்தோம். இவரின் டாக்டரேட் ஆராய்ச்சி, எப்படி மறை தளத்தை (hidden surface elimination) கையாள்வது என்பதைப் பற்றியது. இதை க்ராபிக்ஸ் உலகின் வார்னாக் அல்கரிதம் என்று அழைக்கிறார்கள். இவர் 1982 ல் அடோபி என்ற நிறுவனத்தை தொடங்கினார். இன்று உலகின் மிகப் பெரிய மீடியா மென்பொருள் நிறுவன்ங்களில் அடோபியும் ஒன்று. அடோபியின் முக்கிய மீடியா மென்பொருட்களில் ட்ரீம்வீவர், ஃப்ளாஷ் அனிமேஷன் துறையில் இணையதளங்களில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்றன.

ஜானைப் போல எட் காட்மல் லும் ஸதர்லாண்டின் மாணவர். எட், நியூ யார்க் இன்ஸ்டிட்யூட் என்ற அமைப்பில் க்ராபிக்ஸ் ஆராய்ச்சி செய்து வந்தார். க்ராபிக்ஸில் ஆர்வமுள்ள ஜார்ஜ் லூகாஸ் என்பவர் (புகழ் பெற்ற Star Wars திரைப்பட தொடரை உருவாக்கியவர்) க்ராபிக்ஸில் ஆர்வம் கொண்டவர். லூகாஸுடன் வேலை செய்த எட், லூகாஸின் ஸ்டூடியோவில் சேர்ந்தார். Star Trek II போன்ற வெற்றி திரைப்படங்களில் பல அனிமேஷன் சாதனைகளை படைத்தவர் எட். 1986 ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் மீண்டும் 1997 ல் ஆப்பிளுக்கே திரும்பி விட்டார்) ஜார்ஜ் லூகாஸ், எட் காட்மல் மற்றும் ஆல்வி ரே ஸ்மித் சேர்ந்து பிக்ஸார் என்ற அனிமேஷன் நிறுவனத்தை தொடங்கினார்கள். ஆரம்பத்தில் வன்பொருள் மற்றும் விளம்பர படங்கள் தயாரித்து வந்தார்கள். டிஸ்னி ஸ்டூடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு முதல் முறையாக முப்பரிமாண ‘Toy Story’ என்ற திரைப்படத்தை 1995-இல் வெளியிட்டார்கள். ஜான் லாஸட்டர் இயக்கிய இப்படத்தைப் பற்றி மூன்றாம் பகுதியில் விவரமாகப் பார்த்தோம். பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கிய பிக்ஸாரை டிஸ்னி 2006-இல் வாங்கியது. சென்ற ஆண்டு பல ஆஸ்கர்களை வென்ற ‘Up’ திரைப்படம் பிக்ஸார் படைப்பு. இவ்வாண்டு வெளிவந்து பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘Toy Story 3’ பிக்ஸார் படைப்பு. அனிமேஷன் திரைப்பட நிறுவனங்களில் டிஸ்னி பிக்ஸார் மிகவும் முக்கியமான வெற்றி நிறுவனம். அத்துடன் பல புதிய அனிமேஷன் நுணுக்கங்களை க்ராபிக்ஸ் உலகிற்கு அளித்த பங்கும் பிக்ஸாருக்கு உண்டு.

முன்பு சொன்னது போல ட்ரீம்வர்க்ஸ் SKG ஸதர்லாண்டுடன் நேரடி சம்பந்தமில்லாத ஸ்டூடியோ. இதில் S என்பது Speilberg ஐயும், K என்பது Katzenberg ஐயும், G என்பது Geffen – ஆகிய மூன்று நிறுவனர்களை குறிக்கும். 2005-இல் வியாகாம் என்ற மிக பெரிய சினிமா கம்பெனி ட்ரீம்வர்க்ஸை வாங்கியது. இந்தியாவைச் சேர்ந்த அனில் அம்பானி இந்த ஸ்டூடியோவின் 50% சொந்தக்காரர். Katzenberg டிஸ்னியிலிருந்து வெளியேறி, ஸ்பீல்பெர்குடன் இந்த புதிய அனிமேஷன் ஸ்டூடியோவை ஆரம்பித்தார். முதல் தயாரிப்பு Antz – இதைப்பற்றி முதல் பாகத்தில் பார்த்தோம். பூச்சிகளைக் களமாக வைத்து எடுத்த படம். இவர்களுடைய மிக பெரிய படைப்பு Shrek – சமீபத்தில் நாலாவது பாகம் வெளிவந்து ஒளி முப்பரிமாண அனிமேஷன் படமான இது, அவ்வளவு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

ட்ரீம்வர்க்ஸுக்கும் பிக்ஸாருக்கும் எப்பொழுதும் கடும் போட்டி. இதனால் நமக்கு நல்ல அனிமேஷன் திரைப்படங்கள் கிடைப்பதோடு, மிக வேகமாக இத்துறையில் தொழில்நுட்பம் வளரவும் காரணமாக இருக்கிறது. பிக்ஸாரின் ரெண்டர்மேன் மென்பொருளும், ட்ரீம்வர்க்ஸின் மனித சித்தரிப்பு அனிமேஷன் சாதனைகளும் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக பெரிய ஸ்டூடியோக்கள் வணிக ரீதியான மென்பொருள் தொகுப்புகளை ஆரம்பத்தில் உபயோகித்துப் படமெடுத்தாலும், மெதுவாக தங்களது ஸ்டூடியோவிலேயே உழைத்து உருவாக்கிய மென்பொருள் சாதனங்களையே பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இது ஓரளவு புதிய அனிமேட்டர்களுக்கு சவாலாக உள்ளது. பலகலைக்கழகங்களில் சொல்லித்தராத மென்பொருளால் அனிமேஷன் திரைப்படங்கள் உருவாவதால் வந்த சிக்கல். ஆனால், இந்த பெரிய ஸ்டூடியோக்கள், இதை தங்களது வெற்றிக்குக் காரணமாக இருப்பதால் வெளியே அதிகம் புழங்க விடுவதில்லை. அத்துடன் புதிய படங்களில் புதிய சவால்கள் இருப்பதால், இத்துறையை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். வருடத்திற்கு பிக்ஸாரும் ட்ரீம்வர்க்ஸும் குறைந்தது 2 படங்கள் வெளியிடுகிறார்கள். இது மனிதக்கற்பனை மற்றும் உழைப்பு அதிகமாக உள்ள கூட்டு முயற்சித் துறை. பல்லாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் கணினித் தொழில் இது. அமெரிக்க அனிமேஷன் திரைப்படத்துறை ஆண்டுக்கு ஆயிரம் கோடி டாலர் வியாபாரம் நடக்கும் தொழில்.

அனிமேஷன் சினிமாக்களில் பல கணினி தொழில்நுட்பங்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று பரவலாக அலசினோம். வெறும் கணினி தொழில்நுட்பம் மக்களை கவருவதில்லை. நம் குடும்பங்களிலேயே கவனித்திருப்பீர்கள்.

“என் மகள் ஏதோ கணினியில் செய்து கொண்டே இடுப்பாள். அவள் என்ன செய்கிறாள் என்று மட்டும் கேட்காதீர்கள்” என்று பெற்றோர் சொல்லுவதை அடிக்கடி கேட்கிறோம். இப்படி கணினி என்றாலே ஒதுங்கும் கூட்டத்தை எப்படி கணினியால் உருவாக்கிய படைப்பை பார்க்கக் கவருவது? வல்லுநர்களின் அழகியல், கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்புதான் காரணம்.

மனித சினிமாக்களுடன் ஒப்பிட்டு சில விஷயங்களை பார்ப்போம். வீடு, வயல், நகை எல்லாம் அடகு வைத்து சென்னை/மும்பாய் சென்று ராமராஜன் கணக்கில் படமெடுக்கும் சமாச்சாரம் இல்லை அனிமேஷன் திரைப்படம். நல்ல சினிமா எப்படி எடுப்பது என்று தெரிந்திருந்தால் தான் நல்ல அனிமேஷன் சினிமாவும் எடுக்க முடியும்.

மனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜினிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ‘திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை அவசியம். குத்து மதிப்பான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஸ்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம், நடிப்பை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அனிமேஷன் திரைப்படங்களில் வள, வள வென்று பேசி சிரிக்க வைக்க முடியாது. விஜயின் ஷூவை முன்னும் பின்னும் காட்டி ஜல்லியடிப்பது, விக்ரம் கண்களை க்ளோஸப்பில் காட்டி மிரட்டுவது அனிமேஷன் திரைப்படத்தில் செல்லாது. 2011-இல் முதல்வர் என ஓப்பனிங் சாங் வைக்க முடியாது. ஹீரோ இமேஜ் குழி தோண்டிப் புதைக்கப்படும். கணினியில் அசைவிக்கப்படும் உருவங்களோடு சுவாரசியமாகக் கதை சொல்வது மனித நடிகர்கள் நடிக்கும் படங்களை விடப் பல மடங்கு கடினமானது. காட்சிதான், இசைதான் எல்லாமே.

இப்படி திரைக்கதைதான் எல்லாம் என்று சும்மா புருடா விட முடியாது. ஒவ்வொரு காட்சியும் ‘ஸ்டோரி போர்டு’ மூலம் விவரமாக விளக்கப்பட வேண்டும். அதற்கு முன் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் அனைத்தையும் முன்கூட்டியே முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வரைபடம் வரையும் கலைஞர்கள் மற்றும் களிமண் பொம்மை செய்யும் கலைஞர்கள் என்று பல தரப்பட்டவர்கள் தேவைப்படலாம். ஹீரோவுக்கு பணத்தை அட்வான்ஸாக கொடுத்து இயக்குனரை பதிவு செய்து விட்டு கனவு காணும் விஷயமல்ல அனிமேஷன் திரைப்படம். ‘Character casting’ என்கிறார்கள் – இது போல முக்கியம் எதுவுமில்லை. சரி, முதல் படியாக பாத்திரங்களை தேர்ந்தெடுத்தாகிவிட்டது. வரைபடங்கள் மற்றும் களிமண் பொம்மைகள் செய்து இயக்குனர் சம்மதம் வாங்கியாகி விட்டது. அடுத்து அனிமேஷன் கணினி வேலைதானே?

அதுதான் இல்லை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பின்னணிக்குரல் தேவை. பின்னணிக்குரல் தேர்வு படம் அனிமேட் செய்யத் தொடங்குமுன் ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு தனிக்கலை. மனித சினிமாவில் பேசுபவர்கள் விவரம் புரிந்தவர்களுக்காக[ பேசுபவர்கள். அனிமேஷன் திரைப்படங்களோ குழந்தைகள் அதிகம் விரும்பி பார்ப்பவை. பேசுபவர்களின் பேச்சு முதலில் குழந்தைகளுக்கு புரிய வேண்டும். குழந்தைகளுக்கு புரியும்படி பேசுவது மிக மிகக் கடினம். கருத்தையும் சொல்ல வேண்டும், எளிதாகவும் இருக்க வேண்டும். அழகாக டயலாக் பேசத் தெரிந்த எல்லோரும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஒத்துவர மாட்டார்கள். உதாரணம், ஹாலிவுட் நடிகர் எட்டி மர்ஃபியை எடுத்துக் கொள்வோம். அவருடைய ‘Beverly Hills Cop’ என்ற திரைப்படத்தில் அதி வேகமாக டயலாக் வீசுவார். பயங்கர விஷுவல் கோமாளித்தனம் செய்வார். அதே எட்டி, ‘Shrek’ திரைப்படத்தில் எவ்வளவு நிதானமாக ஏற்ற இறக்கங்களுடன் (கழுதை பாத்திரம்) குழந்தைகளை கவர்கிறார் பாருங்களேன்.

அதே போல கனேடிய நடிகர் மைக் மையர்ஸ் தனது ‘Austin Powers’ திரைப்படங்களில் செய்யும் கோமாளித்தனமும் ‘Shrek’-இல் கொடுக்கும் குரலுக்கும்தான் எத்தனை வித்தியாசம்? சில நடிகர்களுக்கு குரல் நிதானமாக அப்படியே அமைந்துவிடுகிறது – உதாரணம், ‘Ice Age’ என்ற அனிமேஷன் திரைப்பட்த்திற்காக குரல் கொடுத்த ரே ரொமானோ என்னும் அமெரிக்க சிரிப்பு நடிகர். குரல் தேர்வு சும்மா பேச வைத்து முடிவெடுப்பதில்லை. அனிமேட்டர்களுடன் ஒரு முன்கூட்டிய டயலாக்கை ஒரு 10 வினாடி க்ளிப்புடன் சேர்த்து சரியாக வருகிறதா என்று பார்க்கிறார்கள். ஏன் இவ்வளவு முன்னமே பார்க்கிறார்கள்? குரலுக்கேற்ப வாயசைவை அனிமேட்டர்கள் முடிவெடுக்க வேண்டும்.

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனிமேஷன் கூட்டு முயற்சியின் உச்சம். வழக்கமான சினிமாக்களில், படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிக்கேற்பப் பின்னணி இசை சேர்ப்பார்கள். அனிமேஷன் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தொடர்ந்து குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும். எவரேனும் சற்று சறுக்கினால் அதோகதிதான். கடைசியில் பின்னணி இசையை சேர்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட முடியாது. ‘Up’ திரைப்பட இசையமைப்பாளர் மைக்கேல் கியாச்சினோ, பல காட்சிகளுக்கு அனிமேஷன் தொடர் முடிந்தவுடனேயே இசையமைத்து கொடுத்தார். ’Up’ திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் பின்னணி இசையும் காரணம். ராண்டி நியூமேன், போன்றோர் இத்துறையின் முன்னோடிகள். காட்டு வழியில் தனிமையில் தத்துவ பாடல் வருவது போல அமைத்தால் குழந்தைகள் தூங்கி விடுவார்கள்! அனிமேஷன் திரைப்படங்களில் கதையின் வேகத்தை ‘டாம் & ஜெர்ரி’ காலத்திலிருந்து இசைதான் நிர்ணயிக்கிறது. அதிவேக சுழற்சி மற்றும் ஜூம் எல்லாம் சாத்தியமான அனிமேஷன் திரைப்படங்களில் அக்காட்சிகளுக்கு மெருகூட்டுவது பின்னணி இசையே.

மனித திரைப்படங்களில் எடிட்டிங் என்பது கடைசி கட்ட உற்பத்திக்குப் பின் நடக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. எடிட்டிங், அனிமேஷன் திரைப்படங்களில் முன்னமே செய்யப்பட வேண்டும். ஒரு காட்சியை அனிமேட் செய்து முடித்த பின் அனிமேட்டர்கள் அதை ரெண்டர் செய்து பார்த்து விடுவார்கள். என்ன வெட்ட வேண்டுமோ அதை வெட்டி விடுவார்கள். மனித சினிமாவில் எவ்வளவு திட்டமிடல் குறைவாக உள்ளதோ அவ்வளவு எடிட்டருக்கு வேலை அதிகம்.

லைட்டிங் என்ற வெளிச்சவியல் ஃபிலிம் நாட்களிலிருந்து இன்றுவரை மனித சினிமாக்களில் மிக முக்கியம். கணினி அனிமேஷனில் லைட்டிங் அனிமேட்டர்களே ஒவ்வொரு காட்சியிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அனிமேஷன் திரைப்படங்களில் அழுது வடிந்து லைடிங் இருக்காது – குழந்தைகளைக் கவராது!

அனிமேஷன் இயக்குனர்கள் பொறுமையின், திறமையின் உச்ச நிலையில் இருக்க வேண்டும். பல காட்சிகளில் கணினி பிரச்சினைகள், எதிர்பாரா விதமாக சவால் விடும். சில சமயம் இயக்குனர் கற்பனைக்கேற்ப காட்சி அமைய தொழில்நுட்பம் வளர்ந்திருக்காது. சில சமயங்களில் புதிய க்ராபிக்ஸ் ஆராய்ச்சியே தேவைப்படும். மிக முக்கியமான சவால், ஒரே தொழில்நுட்பமாய் காட்டி அசத்த நினைத்தால் ‘Tron’ போல தோல்விதான். கணினி ஆசாமிகளுக்குத் தங்களது மென்பொருள் ஜாலங்கள் மேல் அவ்வளவு காதல். அதைக் கட்டுப்படுத்துவது இயக்குனரின் பொறுப்பு. சில சமயம் இயக்குனர் எதிர்பார்ப்புக்கேற்ப காட்சி அமையாவிட்டால் பல மாத உழைப்பு வீணாவது அனிமேஷன் உலகில் சகஜம்.

கடைசியாக, மனித சினிமாவில் இல்லாத ஒரு மாபெரும் சவால் கடைசி ரெண்டரிங். அத்தனை காட்சிகள் மற்றும் குரல், இசை எல்லாம் சேர்த்து ரெண்டர் செய்வதற்கு முப்பரிமாண அனிமேஷன் உலகில் அசாத்திய கணினி சக்தி தேவை. சில சமயம் ரெண்டர் செய்து வரும் பதிப்பில் குறைகள் இருந்தால், பயங்கர உழைப்பு தேவை சரி செய்வதற்கு. பல அனிமேஷன் ஸ்டூடியோக்கள் சில வெளி உலக கணினி வழங்கி வயல்களை இதற்காகவே வாடகை எடுத்து பயன்படுத்துகிறார்கள். ‘அவ்தார்’ அப்படி ரெண்டர் செய்து வெளிவந்த சமீபத்திய திரைப்படம்.

அடுத்த பகுதியில் இத்தொழில் இந்தியாவில் எப்படி வளர்ந்து வருகிறது என்று பார்ப்போம். மேலும் கல்வி வாய்ப்புகள் பற்றியும் அலசுவோம்.

இத்தொடரை எழுத உதவிய நண்பரும், க்ராபிக்ஸ் வல்லுனர்/ஆய்வாளரும், பேராசிரியருமான டாக்டர். ஸ்வாமி மனோகருக்கு நன்றி.