காலப்பயணம் – 2

இத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: ஹாலிவுட் அறிவியல்

22-ஆம் நூற்றாண்டில் மானுடத்தின் ஆகச் சிறந்த ஓவியங்களை உருவாக்கியதாகப் புகழப்பட்ட ஓவியர், 2050-இல் பதின்ம வயது ஓவிய மாணவர். கால இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டுவிட்ட இருபத்தி இரண்டாம் நூற்றாண்டின் கலை விமர்சகி ஒருவர், காலப்பயணம் மேற்கொண்டு இந்த ஓவியரை அவரது பதின்ம வயதில் 2050- ஆம் வருடத்தில் சந்திக்கிறார். அப்போது அவரது கலைப்படைப்புகள் கொண்ட ஒரு பேப்பர்பேக் புத்தகத்தையும் கையோடு எடுத்துக் கொண்டு வருகிறார். பார்த்தால் இந்த பதின்ம வயது ஓவியரோ படு திராபையான ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார். விமர்சகிக்கு ஒரே அதிர்ச்சி. ‘நீயா பின்னாட்களில் இப்படி பிரபலமடைய போகும் இந்த அற்புதமான ஓவியங்களை வரையப் போகிறாய்?’ என அந்த பேப்பர்பேக்கைக் காட்டுகிறார். ஓவியர் யோசிக்கிறார். அந்த விமர்சகி திரும்ப 22 ஆம் நூற்றாண்டுக்கு போவதற்கு முன்னால் இந்த பேப்பர்பேக்கை திருடி எடுத்து வைத்துக்கொண்டு விடுகிறார். பிறகு அவற்றில் இருக்கும் ஓவியங்களையே சிரமேற்கொண்டு தன் கான்வாஸ்களில் பிரதி எடுக்கிறார். இந்த ஓவியங்களே இதுவரையான மானுடத்தின் ஆகச்சிறந்த ஓவியங்களாக இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் கருதப்படுகின்றன. ஆக, நமது ஓவியர் புதிதாக எதையும் உருவாக்கவில்லை. அப்போது அந்த ஓவியங்கள் எங்கிருந்து வந்தன?

பொதுவாகவே பலவிதமான காலப்பயண முரண்களை அறிவியல் புனைகதைகளின் களமாக உருவாக்குவது இப்போது தொன்றுதொட்ட மரபாக ஸைஃபி (sci-fi) உலகில் வேரூன்றிவிட்டது. ஆனால் தத்துவவியலாளர்களும் இயற்பியலாளர்களும் உருவாக்கும் எண்ணப்பரிசோதனைகளிலும் இம்முரண்கள் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. அப்படி விவாதிக்கப்பட்டதொரு முரண்தான் மேலே தரப்பட்டிருக்கும் ஓவியரின் கதை. “12 குரங்குகள்” திரைப்படக் கதையின் ஆதார முரண், இந்த ஓவியர் முரண் – இவை எல்லாம் ஒரே வகையானவைதான்.

planet_of_the_apes1968-இல் வெளிவந்த படம் Planet of the Apes. இத்திரைப்படம் அது முன்வைக்கும் சமூகப் பார்வைக்காக தனியாக பேசப்பட வேண்டியது. (அதில் பிரதிபலிக்கும் சோவியத்-அமெரிக்க போர் அச்சங்கள், அது முன்வைக்கும் குரங்கின-மானுட உறவுகள் போன்றவை அமெரிக்க சமூகத்தின் இன உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை என சில விமர்சகர்கள் கருதுகின்றனர்.) ஆனால் இங்கு நாம் பார்க்கப் போவது அதில் காட்டப்படும் காலப்பயணத்தைக் குறித்து. விண்வெளியில் செல்லும் விண்கலம் காலப்பயணத்துக்குள் நுழைந்துவிடுகிறது. பின்னர் பல ப்ளாஷ் கோர்டன் காமிக்ஸ் கதைகளிலும் இதைப்போலவே ‘விபத்தாக நிகழும் காலப்பயணம்’ (accidental time travel) காட்டப்பட்டது. ‘வெளி’யில்(space) பயணிக்கும் ஒருவர் காலப்பயணியாகும் கற்பனையின் அறிவியல் உந்துதல் என்ன?

காலமும் வெளியும் இணைந்து நெய்யப்பட்ட பாவாக பிரபஞ்சத்தை ஐன்ஸ்டைனின் ‘பொது சார்பியல் கோட்பாடு’ (general theory of relativity) முன்வைத்தது. நான்கு மூலைகளிலும் இழுத்துக்கட்டப்பட்ட துணியில் ஒரு பந்து ஏற்படுத்தும் வளைவைப் போல பொருண்மை (matter) கால-வெளியில் வளைவுகளை ஏற்படுத்தும். ஆக காலம் தனித்து ஓடும் வெள்ளம் அல்ல. ஆங்காங்கே பொருண்மை ஏற்படுத்தும் குழிகளின் வளைவுகளுக்கு ஏற்ப வளைந்தும் நிமிர்ந்தும் கிடக்கும் ஒரு விஷயம். அது தனி இருப்பு கொண்டதும் அல்ல. வெளியுடன் பின்னிப் பிணைந்தது. பெருவெடிப்பின் காரணமாக வெளி உண்டானதென்று வைத்துக்கொண்டால், காலமும் அதனுடன் இணைந்தே உருவாகியிருக்க வேண்டும். ஆக பொருண்மையின் ஈர்ப்பு மண்டலம் (gravitational field) காலத்தின் இருப்பையும் நிர்ணயிப்பதாக அமைகிறது. இவ்விதத்தில் காலம்-வெளி ஆகியவை பொருண்மையின் ஈர்ப்புடன் இணைக்கப்பட்டது. விண்வெளி ஓடங்கள் இத்தகைய ஈர்ப்புமண்டலங்களில் சிக்கும் போது இறந்தகாலத்திலோ, எதிர் காலத்திலோ விபத்தாக நுழைந்துவிடுவதாகக் கற்பனைகள் உருவாகின.

காலப்பயணம் செய்வதன் ஒரு முக்கியமான தடையை உங்கள் கோப்பையில் இருக்கும் சூடான தேநீரில் பார்க்கலாம். சூடாக இருக்கிறதே என்று ஒரு அரை மணி நேரம் கழித்து அந்த தேநீர் கோப்பையை நீங்கள் கையில் எடுக்கும் போது அது ஏன் மேலும் அதிக சூடாக இருப்பதில்லை? ஏன் சூடு குறைந்திருக்கிறது? இதற்குக் காரணம் வெப்ப இயங்கியலின் இரண்டாவது விதி. கால ஓட்டத்தின் அம்பு முன்னகர முன்னகர ஆற்றல் உதிர்ந்தோடுகிறது. காலத்தின் நீட்சி அதிகம் ஆக, ஆக, தேநீரின் சூடு அதிகமாகாது. நீரில் கரைந்த சர்க்கரை மீண்டும் தானாக உருக்கொள்ளாது. அத்தனை பௌதீக அமைப்புகளுக்கும் (பிரபஞ்சம் உட்பட) இந்த விதி செல்லுபடியாகும். அப்படியென்றால் காலத்தில் எப்படி பின்னகர முடியும்?

ஆனால் வெப்ப இயங்கியல் விதி உண்மையில் ஒரு புள்ளியியல் விதிதான். அதாவது உங்கள் தேநீர் மேலும் சூடாகவும் ஒரு சாத்தியம் இருக்கிறது. ஆனால் அதன் வெகு அதீதமான நிகழ்தகவு (probability) அதனை சாத்தியமற்றதாக்குகிறது. வெப்ப இயங்கியல் விதி ஒரு புள்ளியியல் தொகுப்பு என்றால் எதன் புள்ளியியல் தொகுப்பு இது? கோடானு கோடானு கோடி அணுக்களின், அணுத்துகள்களின் இயக்கம் குறித்த புள்ளியியல் தொகுப்பு. இந்த பல்லாயிரம் கோடி பந்தாட்டங்களின் கூட்டுத் தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட பந்தின் இயக்கத்தை முழுக்க முழுக்க கணிக்க முடியாது. எட்டாம் வகுப்பு வெப்ப இயங்கியல் பாடத்தில் முதல் தேற்றமாக நீங்கள் இதைப் படித்திருக்கலாம். இதனையே தனது அறிவியல் புனை நாவல்களான ’ஃபவுண்டேஷன்’ தொடர்களில் மானுட சமுதாயத்துக்கு விரித்தார் ஐஸக் அஸிமாவ். தனிமனிதனின் இயக்கம் முழுக்க முழுக்க கணிக்க முடியாதது. ஆனால் பல்வேறு கிரகங்களுக்கு பல்கிப் பெருகிவிட்ட மானுட சமுதாயத்தின் இயக்கங்களை துல்லியமாக கணிக்கமுடியும். எப்படி? கணிக்கவே முடியாத இயக்கம் கொண்ட தனி அணுக்கள் கோடானு கோடி சேர்ந்து வளியாக செயல்படும் போது, புள்ளியியல் அடிப்படையில் சார்ல்ஸ் விதியும், பாயில்ஸ் விதியும் துல்லியமாக வளி இயக்கங்களை கணிக்கின்றனவோ. அது போல.

அப்போது தனி அணுக்கள் அல்லது அணுத்துகள்கள் காலத்தில் முன்னும் பின்னுமாக இயங்க முடியுமா? முடியும் என்கின்றனர் கணித இயற்பியலாளர்கள். உதாரணமாக எலக்ட்ரான்களை நீங்கள் காலத்தில் முன்னகரும் எலக்ட்ரான்களாக மட்டுமல்ல, காலத்தில் பின்னகரும் பாஸீட்ரான்களாகவும் கணிதப்பார்வையில் பார்க்கமுடியும். ஒரு பொருள், அது எலக்ட்ரானோ அல்லது எதிர்த்த வீட்டு பெண்ணோ, காலவெளியில் பயணிக்கிறது. இந்த பயணத்தொடர்ச்சியை ஒரு கோட்டு உருவகமாக மாற்றினால் கிடைப்பதன் பெயர் worldline. இந்த வோர்ல்ட்லைனுக்கும் காலப்பயணத்துக்குமான தொடர்பு என்ன? ஒரு எலக்ட்ரான் அது பாட்டுக்கு ‘சிவனேன்னு’ இருக்கிறதென வைத்துக்கொள்வோம். அது காலத்தில் முன்னகர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் அதற்கு வெளியிலும் (space) ஒரு இருப்பு இருக்கிறது. அதற்கு ஒரு ஃபோட்டான் (photon) மூலம் சக்தி கிடைக்கிறதென வைத்துக் கொள்வோம் அது அடுத்த கணம் ஒரு எம்பு எம்புகிறது. பிறகு ஃபோட்டானை வெளியனுப்புகிறது. இதை இப்படியும் பார்க்கலாம். பாஸிட்ரான் ஃபோட்டானை உள்வாங்கி அதன் முந்தைய கணத்தில் சென்று மீண்டும் ஃபோட்டானை வெளியனுப்புவதாகவும் பார்க்கலாம்.

அணுவின் உட்துகள்களின் ஆற்றல்-இயக்கங்களை இவ்வாறு சித்தரிக்கும் கணிதச்சமன்பாடுகளை அவற்றின் முழுத் தாக்கத்துடன் கோட்டுச்சித்திரங்களாக காட்டினார் ஃபெய்ன்மேன். க்வாண்டம் மின் இயங்கியலில் கால-வெளி அணுகல் முறையை ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் கொண்டு வந்தது இந்த துறைக்கு சுவாரசியமான பல புதிய சிந்தனைகளை கொண்டு வந்திருக்கிறது.

feyn3

ஒரு முன்னோக்கிய ஓட்டத்தின் குறியீடாக இருக்கும் தன்மையை காலமே இழந்துவிட்டதெனலாம். காலத்தின் பிரவாகத்தில் மேலும் கீழுமாக சென்று கொண்டிருக்கின்றன நுண் துகள்கள். நுண் துகள்கள் தோன்றுவதாகவும் மறைவதாகவும் காண்பதெல்லாம் அவை காலப்பிரவாகத்தில் தம் பயணத்திசைகளை மாற்றிக்கொள்வதை மட்டுமே என்கிறார் யோய்சிரோ நம்பு (yoichiro nambu) என்கிற ஜப்பானிய இயற்பியலாளர்.

எலெக்ட்ரான்களும் ஃபோட்டான்களும் காலப்பிரவாகத்தில் செய்யும் திசை மாற்றங்களை உங்கள் எதிர்வீட்டு பெண்ணும் செய்யமுடியுமா? செய்யமுடியும். உண்மையான கேள்வி – அதற்கான நிகழ்தகவு சாத்தியமாகுமா? உங்கள் கோப்பை தேநீர் தானாக சூடாகுமா? உங்கள் துணையின் கோபம் தானாகக் குளிரடையுமா? வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியின் புள்ளியியல் ஓட்டைகளுக்குள்ளாக கால இயந்திரத்தில் நாம் பயணிக்கமுடியுமா?

மற்றொரு காலம் நமக்குள் தூங்குகிறது. நம் பரிணாம வரலாற்றுக் காலத்தின் நினைவுகள். அதற்குள் நாம் பயணம் செய்யமுடியுமா? நம் பிரக்ஞையின் நினைவுகளுக்குள்ளாக நாம் காலப்பயணம் செய்யமுடியுமென்பதை நாம் அனைவருமே அறிவோம். அதனை எந்த அளவுக்கு நீட்டிக்க முடியும்? ஹிப்னாட்டிஸ்ட்கள் சிலர் ‘முந்தைய ஜென்மங்களுக்கே அழைத்துச் செல்லமுடியும்’ எனச் சொல்வார்கள். மறுபிறவிக் கோட்பாடு நிச்சயமாக நித்திய சுவர்க்க-நரக சிறுபிள்ளைத்தனத்துக்கு வளமான மாற்றாக இருந்தாலும், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியான விஷயம்தான். மேலும் ஹிப்னாட்டிஸ உறக்கத்தின்போது காலத்தில் பின்னோக்கிச் செல்ல கேட்கப்படும் கேள்விகளும் அத்தனை சார்பற்ற கேள்விகள் என சொல்லமுடியாது. கேள்வி கேட்பவர் நினைத்தால் பொய் நினைவுகளை (false memories) உருவாக்கவும், ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகள் அல்லது மனத்தோற்றங்களை வலுவாக்கவும் நிச்சயமாக முடியும்.

ஹிப்னாட்டிசத்தை காட்டிலும் வலுவான புறவய வழி ஒன்று கிடைத்தால்? மறுபிறவியையும் கடந்த பிறவியையும் காட்டிலும் நிச்சயமான நம் பரிணாம அடிச்சுவட்டின் நினைவுகள் நம் நினைவுகளில் பதிந்து இருந்து அவற்றுக்குள் செல்லமுடியுமென்றால்?

alteredstatesதொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான பாடி சாயேஃப்ஸ்கி (Paddy Chayefsky) எழுதிய ஒரே நாவல் “மாற்றப்பட்ட (பிரக்ஞை) நிலைகள்” (Altered States) அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்த பகடியாக எழுதப்பட்டதானாலும் இந்த நாவல் மேலே சொன்ன கேள்விகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் ஒரு ஆராய்ச்சியாளன் அவனது பிரக்ஞையில் மானுட பரிணாம காலத்தில் பின்னோக்கி பயணிக்கிறான். ஆனால் வெறும் பிரக்ஞைபூர்வமான மாற்றங்கள் மட்டுமில்லாமல், உடற்தன்மையிலும் மாறுதல்கள் வந்துவிடுகிறது. மானுட முன்னோடி இனத்தின் உடற்தன்மைகளே அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இன்னும் பின்னோக்கி சென்று ஆதிக்கடலின் உயிர்மக் குழம்பாகவே ஆகிவிடுகிறான். இந்த நாவல் திரைப்படமாகவும் ஆகியது.

ஆனால் இக்கதைக்கருவின் அறிவியல் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. ஒவ்வொரு உயிரினமும் அதன் இனப் பரிணாமப் பாதையைத் தன் தனிவாழ்வின் வளர்ச்சியில் மீண்டும் கடக்கிறது என்பது எர்னஸ்ட் ஹெக்கல் (Ernst Haeckel, 1834-1919) என்னும் உயிரியலாளரால் 1866 இல் கூறப்பட்ட ஒரு உயிரியல் “விதி”. குறிப்பாக கருவளர்ச்சியில் மீனும், ஆமையும், கோழியும் மானுடக் கருவும் ஒத்திருப்பதை தனது விதியின் வலுவான ஆதாரமாக ஹெக்கல் கருதினார். இந்தக் கருவளர்ச்சி ஒற்றுமைகளை கொஞ்சம் அதீதப்படுத்தியே அவர் இந்த முடிவை வந்தடைந்தார். அவர் காட்டிய வரைபடங்கள் இன்றைக்கும் பாடநூல்களில் காணக்கிடைக்கும். ஆனால் டார்வினிய பரிணாம அறிவியலின் ஒளியில் இந்த “விதி” அடிப்பட்டு போய்விட்டது. பொதுமூதாதை ஒற்றுமையையும் அதிலிருந்து பிரிவதையும் காட்டும் ஆதாரமாகவே இந்தக் கருவளர்ச்சி ஒற்றுமை கருதப்படுகிறது.

ஆனால் ஏதோ ஒருவிதத்தில் நம் மொத்தப் பரிணாம வளர்ச்சியின் நினைவும் நம்முள் இருப்பதான நம்பிக்கை, அதனை நாம் மீண்டும் உள்சென்று பார்க்கமுடியும் என்கிற நம்பிக்கை இத்திரைப்படத்தின் ஆதாரமாகும். இந்த நம்பிக்கை பலவிதங்களில் நம்முடன் இருக்கிறது. உதாரணமாக நம் உடல் திரவங்களின் மூலம் ஏதோ ஒருவிதத்தில் ஆதிப் பெருங்கடலை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பது பரவலாக நிலவும் ஒரு ’அறிவியல் பூர்வமான’ நம்பிக்கை. கார்ல் உங்கின் கூட்டு நனவிலி கூட இந்த ஹெக்கலிய ‘விதி’யின் உளவியல் பிரதி என்பாரும் உண்டு.

இந்த பிரக்ஞை சார்ந்த காலப்பயணத்துக்கு துணை செல்லும் தொழில்நுட்பமாக இத்திரைப்படத்தில் காட்டப்பட்டதும் அன்று நிலவிய ஒரு தொழில்நுட்பத்தின் பிரதியே. ஜான் கன்னிங்காம் லில்லி (John C. Lilly) என்கிற உளவியலாளர் தன்னுணர்வின் இயற்கையை அறிந்து கொள்ள உருவாக்கிய ”தனிமைத் தொட்டிகள்” (isolation tank) என்னும் தொழில்நுட்பம்தான் அது. தனிமைத்தொட்டி என்பது உப்புக்கரைசல்கள் மூலம் அடர்த்தி அதிகமாக்கப்பட்ட நீர்த்தொட்டி. அதில் ஒருவர் மூழ்க முடியாது மிதக்கத்தான் முடியும். இந்த நீர்தொட்டியில் வெளிச்சத்தங்கள் எதுவும் கேட்காது. இதில் மிதப்பவர் ஏறக்குறைய கருவறையில் இருந்த நிலையில் இருப்பார். ஒரு கட்டத்தில் இந்தத் தொழில் நுட்பம் மன அழுத்த்த்தைப் போக்கி புத்துணர்ச்சி தரும் கருவியாகப் பெரும் அலையடித்தது. இன்று வேகமாக வளர்ந்து வரும் நரம்பியக்க-இறையியல் (Neuro-theology) துறையில் லில்லியின் பங்கு முக்கியமானது. வெளியிலிருந்து வரும் புலன் அறிதல்களை மிகமிகச் சிறியதாக குறைத்து அகமுகமாக ஒருவன் இயங்கும் போது ஏற்படும் அறிதல்நிலைகளை ஆராய ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் ஒரு “கல்ட்” நிலையையே அடைந்துவிட்டது. (லில்லியின் ஆராய்ச்சிகளை வடிவமைப்பதில் அவர் பதஞ்சலியின் யோக சூத்திரங்களையும் ரமண மகரிஷியின் “நான் யார்” என்கிற ஆன்மிக சாதனையையும் பயன்படுத்தினார் என்பதை இங்கே குறிப்பிட்டால் “கீழைத்தேய மேலைத்தேய பார்முலா” என்று யாராவது விசில் ஊதி சிவப்பட்டை தந்துவிடப் போகிறார்கள்.)

அடுத்ததாக ஹாலிவுட்டின் வேற்றுலகவாசிகளை கொஞ்சம் பார்க்கலாம்.