வாசகர் எதிர்வினை

misspent

ஹரன் பிரசன்னா

பத்ரிக்கான அருணகிரியின் எதிர்வினை பார்த்தேன். கட்டுரையின் மையத்துக்கு எதிரான பதில் சொல்லும் வேகத்தை விட, பத்ரியைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதலில் கிடைக்கும் சந்தோஷத்தை நோக்கிப் போவதாகத் தெரிகிறது அந்த எதிர்வினை. தொடர்ந்து வரும் அசட்டுத்தனம் என்னும் வார்த்தை, மிக அசட்டுத்தனமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு எதிர்க்கருத்தை ஒருவர் வைக்கிறார் என்றால், அதை அசட்டுத்தனம் என்றும், மேம்போக்கு என்றும், வரலாறு தெரியாதவன் என்றும் சொல்லி வாதத்தைத் தொடங்குவது, எதிராளியை ஒரு கட்டுக்குள் அடக்கித் திமிற வைக்கும் விளையாட்டுக்குத்தான் உதவுமே ஒழிய கதைக்காகாது. ஆனால், அருணகிரி விரும்பது இதைத்தான் என்று புரிகிறது. மற்ற இலக்கியப் பத்திரிகைகள், இணையப் பத்திரிகைகளில் இதுவே வேலையாக நடந்துகொண்டிருக்கும்போது, இதனைப் படிப்பவர்களுக்கு இது சட்டென்று உரைக்காது. ஆனால், அதுவே சொல்வனத்தில் நடக்கும்போது துருத்திக்கொண்டு தெரிகிறது. சொல்வனம் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து அருணகிரியின் எதிர்வினையை மட்டுறுத்தியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. தனிப்பட்ட வலைப்பதிவுகளுக்கும் இணையப் பத்திரிகைக்கும் வேறுபாடுகள் நிச்சயம் உண்டு என்றே நம்புகிறேன்.


5-star-hb-pencil-red-pack-12

(இக்கடிதத்தைக் கட்டுரையாளர் அருணகிரிக்கு அனுப்பி வைத்தோம். அவருடைய எதிர்வினை கீழே – ஆசிரியர் குழு)

இந்தக் கடிதம் கண்டபின் என் கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்துப்பார்த்தேன். என் கட்டுரை மீண்டும் மீண்டும் வரலாற்று உண்மைகளையும் செய்திகளையும் அடிப்படையாக்கியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் தெளிவாகவே இது பத்ரியின் கட்டுரைக்கான ஓர் எதிர்வினை, எனவே பத்ரியைக் குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஒருவர் கருத்து நன்றாக இருக்கையில் அருமையாக இருக்கிறது என்கிறோம், அதனைத் தனி மனிதப் புகழ்ச்சி என்று யாரும் சொல்வதில்லை. அதேபோல ஒரு கருத்து விஷயம் புரியாமல் பேதமையாய் எழுதப்பட்டிருப்பதாய்த் தெரிகையில் அசட்டுத்தனமாய் இருப்பதாகச்சொல்கிறோம். அது எப்படி தனிமனித விமர்சனமாகும்? அசட்டுத்தனம் என்ற வார்த்தை ஒரே ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஆழ்ந்த சிந்தனையில்லாமல் எழுதப்பட்டிருப்பதைக் குறிக்கும் மிகவும் மென்மையான ஒரு வெகுஜன வார்த்தை. சிக்கலான ஒருவிஷயத்தின் கனபரிமாணங்களைக் கணக்கில் கொள்ளாது போகிற போக்கில் வீசப்படுவதாய் உள்ள ஒரு கருத்தின் எளிமைத்தனம் குறித்த விமர்சனமே அது அல்லாது, தனிப்பட்ட நபரை விமர்சிப்பதாகாது. கருத்தைச் சாடாமல் நபரைச் சாடும் ad-hominem தாக்குதல்களுக்கு உதாரணங்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. ஜெயமோகனைக் கனிமொழி மனம் பிறழ்ந்தவர் என்று திட்டியதைச்சொல்லலாம். காமராஜரை அண்டங்காக்கா என்று கருணாநிதி சொன்னதைச் சொல்லலாம். சோவை, மணியன் மொட்டை என்று எழுதியதைக் குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையில் என் கட்டுரையில் பத்ரியை நான் தாக்கவேயில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அவரது கருத்துகளைக் கடுமையாகவே சாடியிருக்கிறேன். சில வார்த்தைகள் எடிட்டர்களால் வெட்டப்பட்டபின்னும்கூட அந்தச் சாடலின் காரம் குறையவில்லைதான். ஆனால் அந்தச் சாடலையும்கூட பல வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில்தான் செய்திருக்கிறேன் என்பதைக் கவனிக்கலாம். மடிக்கணிணி விஷயம்கூட அவர் முன்பு எழுதிய பிரச்சினையை எளிமையாக அணுகியதையும், அவ்வித எளிமை சிக்கலான நாட்டுப்பிரச்சினைகளில் உதவாது என்று சொல்வதற்காகவும்தான் சுட்டப்பட்டது, அவ்வளவே. பத்ரியின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்தான். ஆனால் பத்ரி என்கிற தனி மனிதரைத் தாக்கியோ தூக்கியெறிந்தோ நான் எழுதவேயில்லை. இந்த வித்யாசத்தை ஹரன்பிரசன்னா புரிந்து கொள்ளாமல் போனது என் துரதிர்ஷ்டமாகத்தான் இருக்க வேண்டும். மட்டுமல்ல, பத்ரிக்கு வரலாறு தெரியாது என்று சொல்லி நான் வாதத்தைத் தொடங்கவேயில்லை. கட்டுரையின் தொடக்கத்திலிருந்து பார்த்தால், பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் தொடங்கி, கடந்தகால மற்றும் தற்கால வரலாற்றையும் நிகழ்வுகளையும் ஒருமுறை விரிவாக எழுதி எடுத்துக்காட்டிவிட்டு இவ்வளவு விஷயங்கள் இருப்பதால் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் கருத்துக்கள் சொல்லப்பட்ட விதம் ஆழமில்லாமல் இருக்கிறது என்று எழுதினேன்.

பத்ரியின் கருத்துகள் சிலவற்றில் நான் மாறுபடலாம். மாறுபடும் கருத்துகளைக் கடுமையாகவே நான் முன்வைக்கவும் செய்யலாம். ஆனால் பத்ரி என்கிற தனிமனிதர் மீதும் அவரது ஆளுமை மீதும் எனக்கு மிகுந்த மரியாதைதான் இருக்கிறது. அவர் தமிழ்ப்பதிப்புத்துறையில் செய்து வரும் சாதனைகள் குறித்து எனக்கு என்றைக்குமே வியப்பும் மதிப்பும் உண்டு. தொடர்ந்த வெற்றிகளையும் புதிய சாதனைகளையும் அவர் ஈட்ட என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் எப்போதும் உண்டு.

அன்புடன்,
அருணகிரி

அன்புள்ள சொல்வனம் ஆசிரியருக்கு,

கீழ்க்கண்ட என் பின்னூட்டத்தை திரு.அருணகிரி அவர்களுக்கு அனுப்பிவைக்கக் கோருகிறேன்.

திரு. அருணகிரி,

red-pencil-slஜனநாயகமே முதலியத்தின் அடிப்படை என்ற கூற்று சரியல்ல என்றே நினைக்கிறேன். மாறாக, முதலியவாத நாடுகள் அனைத்துமே ஜனநாயக நாடுகளாகவே இருந்தபோதிலும் அவை அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளையே சுயதேவைகளுக்காக ஊக்குவித்து வந்துள்ளன என்பதே உண்மை. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர் அமைப்புக்கள் மேற்கத்திய நாடுகளில் வேறூன்றியபின் அவை தடங்கலற்ற பொருள் உற்பத்திக்காக ஜனநாயகம் அற்ற அடக்குமுறையினால் ஆளப்படுகிற நாடுகளையே நாடி வந்துள்ளன. அடக்குமுறை சர்வாதிகாரத்தால் ஆளப்படுகிற நாடுகளில் தடங்கலற்ற பொருளுற்பத்தி உறுதி செய்யப்பட்ட ஒன்று. சமீபத்திய FOXCONN, China-வின் தொழிளாலர் தற்கொலைகளே இதற்குச் சான்று. மிகப்பெரிய தொழிலாளர் வளத்தைக்கொண்டிருந்தாலும், இந்தியாவின் ஜனநாயகம் மேற்கு நாடுகளுக்கு உறுத்தலாகவே இருந்துள்ளது. அறிவுசார் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சியானது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வேறு போக்கிடம் இல்லையென்பதாலேயே. சென்னையில் ஹூண்டாய் தொழிற்சாலை வேலைநிறுத்தம் மேற்கத்திய நாடுகளின் இந்தியாவின் தொழிலாளர்களின் மீதான சந்தேகத்தை மேலும் வலுவாக்கியுள்ளது. மாறாக, இந்தியாவில் அறிவுசார் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிநேரம் மற்றும் பணி பளு ஆகியவை யாராலும் கவனிக்கப்படாமலேயே உள்ளது. ஊடகங்களும் இந்நிறுவனங்கள் தொழிலாளர்களை மிகக்கௌரவமான நிலையில் நடத்துவதாகவே செய்தி பரப்புகின்றன. உண்மையில் அறிவு சார் நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் இல்லாமையை ஊடகங்கள் வெளிப்படுத்தா. மட்டுமேயின்றி, முதலிய நாடுகளின் விருப்பிற்கிணங்க, அரசும் இத்துறையில் அவ்வித தொழிலாளர் அமைப்புக்கள் உருவாகவே விரும்பாது, விடாது.

நன்றி
கோவர்தனன்.

4_4_red_violin__4c14acec4bcad

சொல்வனம் இதழ் வலையேற்றம் பெரும் நாளை மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்து வாசிக்கிறேன். ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள். கடந்த இதழ்களின் வெ.சா அவர்களின் விரிவான நேர்காணல், ஜெயமோகனின் ‘நாவல் – கோட்பாடு’ நூல் குறித்து எம்.ஏ.சுசீலா அவர்களின் புத்தக அறிமுகம், சுஜாதா தேசிகனின் கட்டுரைகள், சமீபத்தில் தொடங்கியுள்ள நாஞ்சில் நாடனின் பனுவல் போற்றுதும், இந்த இதழில் நா.கியின் சிறுகதையான அறன் வலி உரைத்தல், ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகள் உள்ளிட்ட ஒவ்வொரு படைப்புக்கும் தனித்தனியே வாசகர் கடிதம் எழுத மிக ஆசை.

அருண் நரசிம்மனின் ராகம் தானம் பல்லவியைப் பாராட்டவே இப்போது இந்த மடல். ஆங்காங்கே பொருத்தமான ஒலி/ஒளி கோப்புகளை இணைத்து விளக்குவது மிக அருமை. குறிப்பாக, தொடரின் நான்காவது பாகத்தில் திரையில் பாடலை ஓடவிட்டு, முன்னால் தாளம் போடும் தன் கையைச் சேர்த்து கட்டுரைக்காக வீடியோ எடுத்திணைக்க பெரிதும் மெனக்கிட்டிருக்கும் அருணைத் தனியாகப் பாராட்ட வேண்டும். இதை வாசித்தால்/பார்த்தால் சிறு சந்தேகங்கள் ஏதும் இருப்பவருக்குக் கூட முற்றிலுமே தெளிந்து விடும். சுவாரஸியமான முறையில் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. இதுபோன்ற ஒரு ராகம் தானம் பல்லவியை & தாள ‘டெமோ’வை நான் இதுவரை அனுபவித்ததில்லை; இதுபோல விஸ்தாரமாக எங்கேயும் நடந்ததாகச் சொல்லிக் கூட கேட்டதில்லை. ஆதிதாளத்தையும் சமத்தில் எடுப்பதையும், ஒரு களை ரெண்டு களை என்பதைல்லாமும் இதற்கு மேல் விளக்க முடியுமா என்பது சந்தேகம். அதுவும் RTP யை விளக்க ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ போன்றதொரு சினிமா பாட்டை எடுத்துக் கொண்டு யாரும் செய்திருக்கிறார்களா என்பது அதைவிட சந்தேகம் தான். சபாஷ்! சில நாட்களாக (கட்டுரையை வாசித்த பிறகு) காதில் விழும் சினிமாப் பாடல்களில் தாளவகையைக் கண்டுபிடிக்கும் புது ரோகம் எனக்கு. ஐயமேயின்றி கட்டுரையாசிரியர் நல்லதொரு அரிய ஆசிரியர் தான். கையைப் பிடித்து அரிச்சுவடி கற்பிப்பது போல ஆசிரியர் சொல்வது, புதிதாக RTP யை அறிமுகப்படுத்திக் கொள்பர்களைக் கருத்தில் கொண்டு என்று நன்றாகவே புரிகிறது. வெள்ளைத் துண்டு விரித்துக் கொண்டு அதன்மேல் தான் ஆதி தாளம் போட்டுப் பழகணும் போலயிருக்கு என்று மாணவர்கள் நினைக்காமல் இருந்தால் சரி : ) ) !

அடுத்தடுத்த பாகங்களுக்காகக் காத்திருக்கிறேன். இனி வரவிருக்கும் நெரவல், ஸ்வரம், தனி பற்றியெல்லாம் என்னென்னவெல்லாம் புதிதாகச் சொல்லப் போகிறார் என்ற அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுகிறது. அருண் நரசிம்மனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

வாழ்த்துக்களுடன்,
ஜெயந்தி சங்கர்.

அன்புசால் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு,

வணக்கம்.

தங்களின் 06.08.2010 தேதியிட்ட சொல்வனம் இதழ் கண்டேன்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்து.

விக்கிலீக் குறித்த திருமலைராஜன் அவர்களின் கட்டுரையில் இதுவரை என்னென்ன நிகழ்ந்திருக்கிறது என்பன குறித்தும், விக்கிலீக் குறித்த முன்னோட்டமும் அடுத்த பகுதியைக்குறித்த ஆவலைத்தூண்டுவதாய் அமைந்துள்ளது. கள்ளப்பணம் குறித்து தகவல்தர தயாராய் இருந்தும் அதைப் பெறாமல் அதை அமுக்குவதில் நமது மாண்புமிகு பிரதமர் கட்டிய வேகத்தை நினைத்து பெருமை கொள்ளாமலில்லை. காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் இந்தியனுக்கு இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பதுதான் நியாயம்.

புத்தகங்களின் தலைப்பில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? அதிலும் கட்டுரையின் தலைப்பை வைத்து அதன் ரசனையையும், சொல்ல வரும் கருத்துக்களையும் அழகாய் விவரித்துள்ளார் நாஞ்சில்நாடன்.

வெ.சந்திரமோகனின் கட்டுரையும் கலக்கல். தமிழக மக்களின் ரசனை எவ்வளவு குறைபாட்டுடனும், தான் எதார்த்தம் என்ற பெயரில் ஏமாற்றப்படுவதைக் குறித்த எந்தவித சுரனையும் இல்லாமலிருக்கிறார்கள் என்பது குறித்து எழுதியிருப்பதுதான் எவ்வளவு உண்மை!

அத்தனை கேஸும், முத்தின கேஸ் என்ற ராமன் ராஜாவின் கட்டுரை நகைச்சுவை சரவெடி. எவ்வளவு மோசமாய் நாம் மருத்துவர்களால் சுரண்டப்படுகிறோம் என்பதனை மிகச் சரியாய் எடுத்து வைக்கிறார். இனிமேல் இவர்கள் கருத்துப்படி நாம் அனைவரும் பைத்தியக்காரர்களே..

ஜெயக்குமார்

red_tree1

சொல்வனம் ஆசிரியருக்கு,

நாஞ்சில் நாடனின் கட்டுரையும், தேசிகனின் கட்டுரையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

Dr.Lakshmi