மகரந்தம்

கணிப்பொறிகளின் மயானம்

மேற்குலகம் தன்னுடைய கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளில் குவித்து வைக்கும். முதலில், குப்பைகள் ஏந்திய கப்பல்கள் வரும். அதைத் தொடர்ந்து வரும் சுகாதாரக் குழு அந்நாட்டு மக்களை சுகாதாரம் குறித்த பிரக்ஞை சிறிதுமில்லாதவர்கள் என்று அடையாளம் கண்டு அறிவிக்கும். அமெரிக்காவின் குப்பைகள் கொட்டப்படுவது கோயம்புத்தூரில். சீனாவின் குப்பை கொட்டப்படுவது தூத்துக்குடியில். நாம் இருக்கும் கிணறைத் தாண்டி வெளியே பார்த்தால் நம்மை விட ஆப்பரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்படுவதை அறியலாம். 20 வருடங்களுக்கு முன்பு உபயோகத்திலிருந்த கணிப்பொறிகளை ஒழித்துக் கட்ட உலக நாடுகள் தேர்ந்தெடுத்திருக்கும் இடம்: கானா. வளர்ந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே உள்ள “தொழில்நுட்ப இடைவெளி”யை குறைக்கும் விதமாக அனுப்பப்படும் இந்த கணிப்பொறிகளின் பின்ணணி என்ன? இந்த தொழிலில் ஈடுபடும் இளம் சிறார்கள் குறித்தும் பேசும் புகைப்படக் கட்டுரை ஒன்று இங்கே.

அடக்குமுறையிலிருந்து ஜனநாயகத்திற்கு?

சீனா அடக்குமுறை ஆட்சியில் பல நூறு ஆண்டுகளாகத் தன் மக்களை ஆழ்த்திய ஒரு நிலம். ஜனநாயகம் என்பது சீனரின் கனவில் கூட சாதிக்கப் படக் கூடிய ஒரு இலக்காக இருந்ததே இல்லை. சீன மாவோயிச அரசு என்னதான் மக்கள் ஜனநாயகம் என்றெல்லாம் முழங்கினாலும் ஆயுதம் தாங்கியவன் கையில் ஜனநாயகம் என்றிருந்தால் அது உயிரற்ற சவமாகத்தான் இருக்கும். இன்றும் ஜனநாயகம் என்ற சொல்லையே கூடக் கொல்ல நினைக்கும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் கொள்ளையர் ஆட்சிதான் அங்கு உள்ளது. ஆனால் சீன மக்கள் மெல்ல மெல்லத் தாமும் உரிமைகள் உள்ள மனிதரே, தம்மை ஆள்பவர்கள் வெறும் அதிகார வெறி பிடித்த மனிதர்களே என்பதை அறிந்து எதிர்ப்பைக் காட்ட முயன்று வருகின்றனர். சீன மருத்துவமனைகளில் மக்கள் மருத்துவரின் அதிகார வேட்கை மேலும் ஊழல் நிறைந்த வழிகளை எதிர்க்க வழி தெரியாமல் நேரடி வன்முறையில் இறங்கத் துவங்கி உள்ளனர் என்று இந்தச் செய்தி தெரிவிக்கிறது. வன்முறையால் வன்முறை ஆட்சியை சீர்ப்படுத்த வழி இல்லை என்றாலும், இதன் வேர் ஜனநாயக உந்துதல் என்று நாம் கருத இடமிருக்கிறது. செய்தியை இங்கு பாருங்கள்.

உலகத்தை ஆளப்போவது எந்த நாடு?

எந்த நாடு இந்த நூற்றாண்டின் பெரும் வல்லரசாக இருக்கப் போகிறது? சீனா என்று பலர் சொல்கிறார்கள். இல்லை. எந்த நாடுமில்லை. பெருநகரங்கள்தான் அடுத்த நூறாண்டுகளின் அரசியல் மையங்கள், அவற்றில் வாழும் மக்களும், அவற்றிடையே நடக்கும் வியாபாரமும், அவை உற்பத்தி செய்யும் பொருட்களும், அவற்றில் குவியும் பெரும் நிதிவளமும் உலகை ஆளப்போகின்றன. இவை கிட்டத்தட்ட தாம் இருக்கும் நாடுகளின் உற்பத்தி, நிதி வளத்தில் கால்வாசியில் இருந்து அரைவாசி வரையிலும் கூடக் கையாளும் பேரமைப்புகள். இவற்றில் அரசியல் கட்டுப்பாடு என்பது முன்பு போல தேசியக் கட்டுப்பாட்டில் இருந்து புறப்படுவதில்லை. இந்த நகரங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த அரசியலமைப்புகள், அரசுகள், ராணுவங்கள் எல்லாம் அத்தனை உதவாதவை. வணிகத்திடம் உலகம் மறுபடி தன் எதிர்காலத்தைக் கைமாற்றிக் கொடுக்கிறது என்பதை இந்த பெருநகரங்களின் அசுர வளர்ச்சி சுட்டுகிறது என்கிறார் இந்தக் கட்டுரையாசிரியர். இது அத்தனை ஏற்கக் கூடிய வாதமா? தேசியம் என்பதோ மத மையச் சிந்தனையோ, சிறுகுழுக்களின் அரசியல் அதிகார வெறியோ அப்படி எளிதில் ஒழிக்கப்பட்டு விடக் கூடியவையா? முழு கட்டுரையை இங்கே படிக்கலாம்.

katrinatnகாத்ரீனா…

…புயலடித்து ஓய்ந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. இந்த கொடூரத்தின் சூழலியல் தாக்கங்களை அறிய சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகள் கவலை மட்டுமன்றி ஆச்சரியத்தையும் அளிப்பதாக இருக்கிறது. நியூ அர்லியன்ஸ் மாகாணத்தில் நச்சுத்தன்மை கொண்ட மணல்வெளிகள் பல. காத்ரீனா கொடூரத்தால் ஊரினுள் புகுந்த வெள்ளம் இந்த மணல்வெளிகள் மேல் வளமான மணலை கொண்டுவந்து போர்த்தியிருக்கிறது. இது சந்தோஷ செய்தி. சூழலியலாளர்கள் வருத்தம் கொள்ள தக்க செய்திகளும் உண்டு. மேற்கொண்டு அறிய இதைப் படியுங்கள். சுனாமியைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்ட சூழலியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு ஏதும் நடைபெற்றதா? நடைபெறவில்லையெனில், ஏன் அப்படிப்பட்ட எந்த முயற்சியும் நாம் மேற்கொள்ளவில்லை? இந்த கேள்வி நம் எல்லோருக்குமானது.