01. பாப்லோ கசல்ஸ் – இசையாளுமை

ர்ப்பரிக்கும் கடலலைக்கு முன் அவர் நின்றுகொண்டிருந்தார். அலை ஓசையைத் தாண்டி நீலக்கடல் ஆழத்தின் கனத்த ஓலம் மட்டும் அவருக்குக் கேட்டுக்கொண்டேயிருந்தது. செல்லோவின் கீழ் சுருதி ஒலி நினைவுக்கு வந்தது. தன் பங்களா இருந்த பகுதியைத் திரும்பிப் பார்த்தார். ஓங்காரமான செல்லோ இசை மூலம் அந்நகரத்தின் ஆழ்ந்த மெளனத்தைக் கலைக்க முற்படலாம். ஆனாலும், கடலலையை மீறி எதுவும் செய்ய முடியாது என்பது நிச்சயம். எங்கோ வெடித்த துப்பாக்கிச் சத்தம் நகரத்தை மேலும் மெளனமாக்கியது. நகரை அரவணைத்த குரூரமான பேரமைதி கலைந்து மக்களிடையே குதூகலம் திரும்பும்போது செல்லோவை இசைத்தால் போதுமெனத் தான் எடுத்த முடிவின் தீவிரம் முன்னைவிட அதிகமானது.

1889-ஆம் ஆண்டு – ஐம்பது வருடங்களுக்கு முன் தன் அப்பாவுடன் இதே பார்சலோனா மணலில் கால் புதைய நடந்தது நேற்று நடந்தது போலிருந்தது.

அவர் பிறந்த ஊரான காடெலோனியா ஸ்பெய்னின் மிக முக்கியமான துறைநகர் பகுதி. வளம் மிகுந்த துறைமுகத்தில் வர்த்தகத்துக்குக் குறைவில்லை. செழிப்பான வாழ்வு, கொண்டாட்டமான பகல்/இரவு என ஐரோப்பாவின் முக்கிய வாழ்வாதாரப் பகுதியாக இருந்தது. குதூகலங்களுக்குக் குறைவில்லை என்றாலும், அச்சிறுவனின் இசை ஆர்வத்தை வளர்க்க காடெலோனியா சரியான இடமில்லை.

ஒரு நாள் பயணமாகத் தன் அப்பாவுடன் பார்சலோனா சென்றது வாழ்நாள் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத கயிறால் கட்டுண்ணப்பண்ணும் என அந்த பதிமூன்று வயது சிறுவன் உணரவில்லை.

bach-casals

அழகான பார்சலோனா கடலை பார்வையிட்டபடி ராம்ப்ளாஸ் என்ற செழிப்பான பகுதிக்குள் அப்பாவும் மகனும் நுழைந்தனர். அங்கிருந்த ஒரு வாத்தியக்கருவி கடைக்குள் அடிவைத்த அச்சிறுவன் வேறொரு உலகுக்கு கால இயந்திரத்தில் ஏறியது போல் மாய உலகினுள் நுழைந்தான். அக்கடையில் பழைய இசைக்குறிப்புகள் தொகுப்புகளாகக் குவிந்து கிடந்தன. தன் ஊரில் பார்த்திராத இசைக்குறிப்புகளை பெயர் தெரியாவிட்டாலும் பரவாயில்லை என இலக்கின்றி தேடினான். ஆர்வமிகுதியால் அக்கூடையைக் கிளறும் போது செபாஸ்டியன் பாக் அமைத்த `வயலின்செல்லோ கருவிக்கான ஆறு பகுதிகள்` (Six Sonatas or Suites for ViolinCello by Sebastian Bach) இசைக்குறிப்பு சிறுவனின் கைகளில் சிக்கியது.

இசை உலகின் உன்னதமான காலம் அந்நிமிடத்தில் தொடங்கியது. துறைமுக மரங்களில் மோதிய அலைகள் ஆங்காங்கு அப்படியே நின்றன; பல நிகழ்வுகள் தங்கள் இயல்பிலிருந்து நழுவின. தேவதூதன் பிறந்த செய்தியைத் தெரிவித்த நட்சத்திரங்கள் போல உலகின் மூலைகளில் இருந்த பல இசை ஆர்வலர்கள் மனதில் மணி அடித்தது!

இவ்வளவு பில்ட்-அப் கொடுக்குமளவு அச்சிறுவன் செய்த இசைத்தேர்வின் முக்கியத்துவம் என்ன?

இருநூறு ஆண்டுகளாகத் தொலைந்துபோய்விட்டது எனக்கருதப்பட்ட பாக்கின் செல்லோ இசைக்குறிப்புகள் இசை உலகின் பொக்கிஷங்களில் ஒன்றாகும். பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த இசைக்குறிப்புகள் ஜெர்மனியைத் தாண்டி சில வருடங்களில் பிரபலமடைந்தது. ஆனாலும் இசைக்குறிப்புகளாக அவை எங்கும் பாதுகாக்கப்படவில்லை. பாக்கின் பல பிள்ளைகளில் (மொத்தம் 15) ஒருவரான இமானுவேல் பாக், செல்லோ குறிப்புகள் கிடைக்காமலே போய்விட்டது என உலகுக்கு பிரகடனப்படுத்தியிருந்தார். அத்துடன் அவற்றைத் தேடும் ஆர்வமும் குறைந்தது.

பாக் அமைத்த இக்குறிப்புகளைக் கற்றுத் தேர்ந்த பிரெஞ்சு நாட்டு வயலின்செல்லோ கலைஞர் டுமா, தன் இசைக் குறிப்புகளை எழுத்தில் பதிவதற்கு முன்பாகவே இறந்துபோனார். அவருடன் தேவ இசை என வர்ணிக்கப்பட்ட இந்த செல்லோ அமைப்புகளும் சமாதி அடைந்தன. சில கலைஞர்கள் செல்லோ பகுதியிலிருந்து சில துண்டுப் பகுதிகளை இசைத்துப் பார்த்து ஆசுவாசமடைந்து வந்தனர். எவருக்கும் அதன் முழு அமைப்பு எப்படியிருக்கும் என்பதே தெரியாமல் போய்விட்டது.

பாக்கின் செல்லோ பகுதிகளைக் கேட்டபின், நாம் கேட்கும் எல்லா இசையும் இரண்டாம் தரமானதே என்று மனதை சாந்தப்படுத்திக்கொண்ட இசை உலகு இக்குறிப்புகளை மறந்திருந்தது.

யார் மறந்தாலும் மறைத்தாலும் கலைப் படைப்புகள் தகுதியுடையவர்கள் கையில் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்பது உண்மைதான் போலும். நாதமுனிகள் நாலாயிரப்பிரபந்தத்தைத் தொகுத்தது போல், இச்சிறுவன் தன் கையில் கிடைத்த இக்குறிப்புகளை ஒருங்கிணைக்கத் துவங்கினான். பதிமூன்று வயதில் இக்குறிப்புகளை கொண்டு தன் பயிற்சியைத் தொடங்கினான். அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்கு வேறெந்த எண்ணமும் குறிக்கிடாமல் செல்லோ பகுதிகளை மனப்பாடமாக இசைக்கக் கற்றுக்கொண்டான்.

பிற்காலத்தில் செல்லோ இசை என்றாலே பாப்லோ கசல்ஸ் (Pablo Casals) என குறிப்பிடுமளவுக்கு இச்சிறுவனின் பெயர் இசையுடன் இயைந்து விட்டது. தொலைந்து போன இசை பாரம்பரியத்தைத் தொடர்ந்ததன் மூலம் மிகப்பிரம்மாண்டமான உலகுக்குள் பல இசைக்கலைஞர்களை இந்த இசை அழைத்துச் சென்றுள்ளது.

இசைக்குறிப்புகள் ஆதி மொழி போன்றவை. பேச்சுவழக்குத் தெரியாமல் சிதறுண்ட எழுத்துருக்களைக் கொண்டு தொலைந்து போன மொழியை மீட்பது போல் பாக்கின் செல்லோ இசையை குறிப்புகளைக்கொண்டு கசல்ஸ் செல்லோ பகுதிகளை மீட்டார். இந்த இசை மட்டுமல்லாது செல்லோ கருவியும் நவீன இசை மேடைகளில் ஒலிப்பதற்கு கசல்ஸ் ஒரு முக்கியமான காரணம். இன்று் தனி பாடல்களை செல்லோவில் அமைக்கும் புகழ்பெற்ற யோ யோ மா (Yo Yo Ma) , மரியோ ப்ரூனோ போன்ற கலைஞர்களுக்கு முன்னோடியும் இவரே.

சரி, கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அமைத்த பாக்கின் செல்லோ பகுதிகள் இன்றும் பிரபலமாக உள்ளதா?

பாக்கின் ஆறு செல்லோ பகுதிகளில் சில துண்டுகளையாவது நீங்கள் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள் – பல நவீன விளம்பரங்களில் (American express) The Pianist, Quantum of Solace போன்ற திரைப்படங்களின் சோகமான பிண்ணனி இசை, பாடகர் Sting அமைத்த நடனப் பாடலான பாக் ராக் போன்ற பாடல்களில் இதன் பல வேறுபாடுகளில் கேட்டிருக்கலாம்.

இசையும் அரசியலும் ஊடும் பாவுமாகக் கலந்த இருபதாம் நூற்றாண்டில் பல முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு பாக்கின் செல்லோ இசை பிண்ணனியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் நொறுங்கிய போது ராஸ்ட்ரபோவிச் (Mstislav Rostropovich) எனும் ரஷ்ய செல்லோ கலைஞர் சுதந்திரத்தின் வெற்றியாக ஆறு மணி நேரம் செல்லோ பகுதிகளை இசைத்தார்.

ராஸ்ட்ரபோவிச் இசைக்கும் பாக் செல்லோ இசைப்பகுதிகள்:

1994ஆம் ஆண்டு நடந்த ருவாண்டா படுகொலை நினைவாகவும், 9/11 இரண்டாம் ஆண்டு நினைவாக இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் 2003 ஆம் ஆண்டும் செல்லோ பகுதிகள் இசைக்கப்பட்டன.

இன்றும் கிதார், வயலின், பியானோ என கிட்டத்தட்ட ஐம்பது விதமான வாத்தியக்கருவிகளில் பாக்கின் செல்லோ பகுதிகள் குறுந்தகடுகளாகக் கிடைக்கின்றன. 2007ஆம் ஆண்டு மரியோ ப்ரூனல்லோ (Mario Brunello) என்ற இத்தாலிய கலைஞர் கடல்மட்டத்திலிருந்து மூவாயிரம் அடிகள் உயரமாக வளர்ந்திருக்கும் ஃப்யூஜி மலையின் உச்சியில் இதை இசைத்தார்.கிட்டத்தட்ட முன்னூறு வருடங்களுக்குப் பின்னரும் இந்த இசையின் மகிமை குறையாததற்கு இதுவே பெரிய சான்றாகும்.

ப்ரூனல்லோ ஃப்யூஜி மலையில் இசைக்கும் செல்லோ:

இதையெல்லாம் தாண்டி 2009ஆம் ஆண்டில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட கிளாஸிக்கல் பாடலாக இப்பகுதிகளை iTunes குறிப்பிடுவது இன்றளவும் இதற்கு புது ரசிகர்கள் பிறந்துகொண்டிருப்பதைக் காட்டுகிறது.

இவை அனைத்தும் பாப்லோ கசல்ஸ் மீள்கண்டுபிடிப்பினாலேயே சாத்தியமாயிற்று.

கசல்ஸ் பாக் செல்லோ இசைப்பகுதிகளை இசைக்கும் ஒரு அரிய விவரணப்படம்:

பன்னிரண்டு வருடங்கள் பயிற்சிக்குப் பின்னரும் இந்த இசையை மேடையேற்ற கசல்ஸ் மிகவும் தயங்கினார். தன் இருபத்து நான்காவது வயதில் கசல்ஸ் பார்சலோனாவின் லா பஜரெரா என்ற இசை குழுவில் இணைந்து கொண்டார். பல சூதாட்ட விடுதிகளுக்கும், உணவகங்களுக்கும் இக்குழு தினமும் சென்று இசைப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு இரவில் கசல்ஸ் பாக்கின் முதல் செல்லோ பகுதியை இசைத்துக் காட்டினார். அந்த விடுதிக்கு வந்திருந்த ஐசக் அல்பெனி எனும் ஸ்பானிய இசைக்கலைஞரை கசல்ஸின் இசை ஈர்த்தது.

அடுத்த நாளே கசல்ஸின் அம்மா டோன் பிலேரைச் சந்தித்த ஐசக் அல்பெனி அவர் வீட்டில் வளர்ந்து வரும் இசை மேதை மீது தனக்கிருக்கும் மிகப் பெரிய நம்பிக்கையைத் தெரிவித்தார். இதைக் கேட்டு கசல்ஸுக்கு உள்ளூர சந்தோஷம் பிறந்தது. ஆனாலும், அம்மாவுக்கும் ஐசக் அல்பெனிக்கும் இருந்ததில் ஒரு சதவிகிதம் கூட கசல்ஸுக்கு தன் இசைத்திறமை மேல் நம்பிக்கை இல்லை என்பதே உண்மை.

கசல்ஸின் பிரச்சினை என்ன? பாக்கின் ஆறு செல்லோ பகுதிகளையும் தன் உள்ளங்கை ரேகை போல் துல்லியமாக இசைக்கத் தெரியும். அதன் ஒவ்வொரு ஸ்வரமும் அவருக்கு மனப்பாடம். ஆனால் அது மட்டும் போதுமா? ஐரோப்பாவின் பிரதானமான இசைக்குழுக்களுடன் இசைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் தனக்கிருக்கும் குறுகிய இசைத்திறமையைக் கொண்டு அதை தக்கவைத்துக்கொள்ள முடியுமா?

மரபான பயிற்சி இல்லாமல் இசை உலகில் சாதிப்பது மிகவும் கடினம் என்பதை கசல்ஸ் உணர்ந்திருந்தார். அதேசமயம் ஐசக் அல்பெனி போன்றவர்களின் தொடர்பைத் தவறவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவர் கொடுத்த சிபாரிசு கடிதத்தைக் கொண்டு பாரிஸுக்கு தன் அம்மாவுடன் ரயிலேறினார். அந்த கடிதம் தனக்குத் தேவையில்லை என்பதை உணர இன்னும் சில நாட்கள் இருந்தன.

இலக்கு: பாரிஸ் ஒபரா அரங்கம்.

அங்கு சார்லஸ் லமோரே (Charles Lamoureux) என்ற முன்கோபி இசை ஒருங்கிணைப்பாளரிடம் தன் சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்தார். அதைப் படிக்கக்கூட பொறுமை இல்லாத சார்லஸ், `இங்கு குமாஸ்தா வேலை எடுப்பவர் நானில்லை’ என ஏளனமாகக் கூறினார். இயல்பிலேயே பல மூட்டைகள் சுயமரியாதையைச்  சேர்த்திருந்த கசல்ஸ், கடிதத்தைத் திரும்பப் பெறாது அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினார்.

மூச்சு வாங்க பல படிகள் இறங்கிய கசல்ஸ் கோபத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தார். சுற்றிலும் பல பார்வையாளர்களும், இசைக்கலைஞர்களும் தனக்குப் புரியாத பிரெஞ்சு மொழியில் பேசியபடி நின்றிருந்தனர். ஒபரா தொடங்க சிறிது நேரமிருந்தது. புகை வண்டி போல் மூச்சு வாங்கியபடி நின்றிருந்த கசல்ஸுக்கு அது மிக அந்நிய இடமாகத் தோன்றியது.

தனக்குத் தெரிந்தது ஒன்றுதான் – பன்னிரண்டு வருடங்களாக பயிற்சி செய்த பாக்கின் செல்லோ பகுதிகள்.

பெருமூச்சுடன் ஒரு முடிவுக்கு வந்தவராக அரங்கத்துக்கு வெளியே ஒரு மூலையில் அமர்ந்து இசைக்கத் தொடங்கினார்.

மெல்ல கூட்டம் அவரைச் சுற்றிக்கொண்டது. காற்றில் ரீங்காரமிட்ட தேவகானத்தை ஒபரா துவங்கியது கூடத் தெரியாமல் மக்கள் ரசித்தனர். நடுநடுவே ஆரவாரமிட்டும், கைதட்டியும் கசல்ஸை உற்சாகப்படுத்தினர். அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாது தன் அவமானம், கோபம் தீர மிகத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தார்.

முடியும்வரை வேடிக்கைப் பார்த்துவிட்டு மெல்ல கூட்டத்தை விலக்கி கசல்ஸ் அருகே வந்தார் சார்லஸ் லமோரே. கடவுளைக் கண்டவர் போல் அவர் முகம் பிரமிப்புடனும், பிரகாசமாகவும் இருந்தது – `இசை தேர்தெடுத்த வித்தகனே, வா இளைஞனே` என கசல்ஸுக்குத் தோள் கொடுத்து பாரிஸ் ஒபரா அரங்கத்துக்குள் அழைத்துச் சென்றார்.

இசையெனும் நதி இருபதாம் நூற்றாண்டில் எடுத்த முக்கியமான திருப்பமாக இந்நிகழ்வு அமைந்தது. இசையால் மக்களை வசியப்படுத்த முடியும்; நினைத்ததை சாதிக்க முடியும் என்பதையும் கசல்ஸுக்குக் கற்றுக்கொடுத்தது.

அதே நேரம் கசல்ஸின் பிறப்பிடமான காடெலோனியாவில் சில குழுக்கள் ஸ்பானிய ராஜ குடும்பம் நடத்திக்கொண்டிருந்த அரசை கவிழ்க்க ரகசியத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள். கசல்ஸின் மக்கள் அரசியல், அறம், புரட்சி முளைத்த நாளாகவும் இது மாறியது.

கசல்ஸின் இசை வாழ்க்கைக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல அது.

(தொடரும்)