கீதம், சங்கீதம், தேசியகீதம்

சென்றவாரம் கொண்டாடப்பட்ட 64-ஆவது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை இது.

சுதந்திர தினத்தன்று எங்கள் பள்ளியில் லீவு நாளானாலும் ஈவு இரக்கமே இல்லாது காலையில் கொடியேற்றத்திற்க்கு வந்தே தீர வேண்டும். இல்லையென்றால் வேதியியல் நடத்தும் எங்கள் கிளாஸ் டீச்சரின் பாசத்திற்கு நீங்கள் ஆளாகப்போவது நிச்சயம். மறுநாள் பள்ளிக்கு வரும்போது அபாயம் எங்கிருந்து வரக் கூடும் என ஊகிக்கவே முடியாது. ஆய்வகத்தில் காப்பர் நைட்ரேட் சால்ட் டெஸ்ட் செய்துகொண்டு இருக்கும் பொது திடீரென அதற்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் “பொட்டாசியம் டை க்ரோமேட்டின் ஃபார்முலா என்ன?” என்ற கேள்விக்கணை உங்களை வந்து தாக்கலாம். (அதற்கான விடையை நீங்கள் K2Cr2O7 என தப்பித் தவறி சரியாகச் சொன்னாலும், “இல்ல.. இத நீ பக்கத்துல இருக்கறவன் கிட்ட கேட்டு (K2) சொல்றதை நான் பார்த்தேன்” என கிரேசி மோகன் பாணியில் உங்கள் மேல் அப்பட்டமான பழி சுமத்தப்படலாம்). இல்லை, வரும் மாத பரிட்ச்சையில் என்னதான் அடிஷனல் ஷீட் வாங்கி டால்டனின் ‘லா ஆஃப் மல்டிப்பில் ப்ரோபோஷன்ஸை’ (Dalton’s atomic law: Law of Multiple proportions) மாங்கு மாங்கு என எழுதினாலும், V.poor என்ற தீர்ப்புடன் வரும் மார்க் 35 தான். இதற்கு பதிலாக, தேசப்பற்றைக் கட்டிக்காப்பதே மேல் என ஆகஸ்ட் பதினைந்தன்று காலையில் பள்ளிக்கு செல்வது ஒரு வருடாந்திர சடங்காகியிருந்த காலம்.

11அப்போதெல்லாம் “சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” சிறப்பு நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கும் சானல்கள் இல்லை. அதற்கெல்லாம் முன் தோன்றிய மூத்தகுடியான தூர்தர்ஷனின் தனியாட்சி மட்டுமே. பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரவும், ராஜீவ் காந்தி டெல்லியின் செங்கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டு விரைப்பான ஸல்யூட்டுடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார். பின்னணியில் சீக்கிய ரெஜிமென்ட் இசைக்குழு நமது தேசிய கீதத்தை வாசிப்பர். தினமும் பள்ளியில் அணி வகுப்பு முடிந்ததும் “உச்சல ஜலதித ரங்கா” என்றெல்லாம் இல்லாத விஷ்ணுவை தப்பும் தவறுமாய் தமிழ் ஹிந்தியில் பாடி தினமும் கொலை செய்யப்படும் அந்தப் பாடல், இப்போது திடீரென இமாலய உயரத்தில் விஸ்வரூபம் எடுக்கும். அனைத்து இந்திய ராணுவ ரெஜிமென்ட்டுகளின் இசைக்குழுவைப் போல சீக்கிய ரெஜிமென்ட் குழுவும் பெரும்பாலும் ஊது வாத்தியங்களை மட்டுமே கொண்டு இசைக்கப்படும் குழு. எங்கள் வீட்டு மர வேலைகளை செய்யும் சண்முகம் ஆசாரி பயன்படுத்தும் நீளமான ‘D’ வடிவ ரம்பத்தின் முடிவில் ஒரு கிராமஃபோனை மாட்டிவிட்டால் எப்படி இருக்குமோ, அதே போல் காட்சி அளிக்கும் ட்ராம்போன், ஜிலேபிகளை வார்க்கும்போது அவைகளில் நாலைந்து தலையில் ஒட்டிய சாயாமீஸ் இரட்டையர்களை போல பிறந்தால் எப்படி இருக்குமோ அதே போல தோன்றும் பிரெஞ்சு ஹார்ன், யானை சைசில் இருக்கும் ட்யூபா மற்றும் பாரிடோன், இன்னும் பிற ஊது வாத்தியங்களான ட்ரம்பெட், ஸாக்சோஃபோன், பியூகில், கிளாரினெட் போன்றவற்றை நான் முதல் முதலில் பார்த்ததும் அப்போதுதான். ராணுவத்திற்கே உரித்தான மிடுக்குடன் அவர்களில் யார் யார் எங்கு சத்தம் அதிகமாய் அல்லது குறைவாகவோ, எங்கு வேகத்தை நிறுத்தியோ அல்லது துரிதமாகவோ வாசிக்கும்போது, ‘நாம் அனைவரும் எப்போதும் அபஸ்வரத்தில் கத்தும் இந்த பாடல் உண்மையில் இவ்வளவு அழகா!’ என வியக்கத் தோன்றும். இன்னும் சொல்லப் போனால் தேசிய கீதத்தை இராணுவத்தினரின் இந்த வடிவமைப்பில் கேட்பதற்கென்றே வருடா வருடம் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை (!) நான் காணத் தவறியதில்லை. அந்த ஒலி வடிவத்தை இங்கே கேக்கலாம்.

மேற்கத்திய இசையின் விதிப்படி மெட்டின் ஒவ்வொரு ஸ்வரத்தையும் அதை ஒத்த சேர்த்திசை ஸ்வரத்துடன் கூட்டி இசைத்தால், மிக எளிமையான ஒரு பாடலின் அழகு கூட பன்மடங்கு மெருகேறிவிடும். இந்த விதிக்கு நமது தேசிய கீதமும் விதி விலக்கல்ல என்பதை மேலே கேட்ட இசை இணைப்பின் வழியாக வாசகர்கள் அறியலாம். பொதுவாகவே மேற்கத்திய இசைக்குறியீட்டின்படி வலது கையில் வாசிக்கப்படும் பாட்டின் மெட்டு ‘ஜி’ க்ளஃப் அல்லது ட்ரேபில் க்ளஃப் (G Clef or the Treble Clef) என்பர். இது இந்த குறியால் treble-clef-2 காட்டப்படும். இந்த மெட்டைப் பொறுத்து, இடது கையில் வாசிக்கும் பகுதியை எஃ ப் க்ளஃப் அல்லது பாஸ் க்ளஃப் (F Clef or Bass Clef) என்பர். இது இந்த குறியால் bassclef காட்டப்படும். உதாரணத்திற்க்கு “ஸ ரி க க” என ‘ஜன கன’ வின் மெட்டு ‘ஜி’ க்ளஃப் ஆகும். அது இவ்வாறு மேலே ஏறுகையில் அதற்க்கான பாஸ் பகுதியை நாம் “க ரி ஸா” எனக் கீழே இறக்கி ஒரு சுவாரஸ்யமான முரண்பாட்டை தருவதன் மூலம் ஒரு புதிய கூட்டு ஒலியை பெறலாம். அதே போல “விந்தய ஹிமாச்சல” எனும் பகுதியில், பாடலில் மைனர் 3rd- ஆன ‘க ப நி’ ஆகிய ஸ்வரங்களின் சேர்த்திசை பயன்பாடு, ஒரு மெய் சிலிர்க்கும் உணர்வைத்தரும். மேலும் இந்த மெட்டு கால் மற்றும் அரைக்கால் மாத்திரை ஸ்வரங்களால் விரைகையில், அதன் இடங்கை பகுதி அரை மாத்திரையளவில் நீண்டு ஸ்திரபடுத்துவது நம் தேசிய கீதத்தின் மேற்கத்திய வடிவமைப்பிறேக்கே உரித்தான செழுமை. உதாரணத்திற்கு “நாயக” எனும் சொல்லில் நா – எனும் பாகம் கால் மாத்திரையளவு இசைக்கபடுகிறது. ‘ய’, ‘க’ ஆகிய இரு பாகங்களும் அரைக்கால் மாத்திரையளவு இசைக்கபடுகிறது. “பாரத” எனும் சொல்லிலும் இதே அமைப்பை காணலாம். ஆனால் அந்நேரத்தில் அதின் இடங்கை பகுதியோ அரை மாத்திரை அளவில் ஒரே ஒரு தைவதத்தை மட்டுமே இசைக்கும். மேற்கத்திய அஸ்திவாரம் இவை போன்ற எளிய முறைகளில் தொடங்கி பல கடினமான விதிகள் வரை சேர்த்திசை கோட்பாடை வலியுறுத்தும்.

நண்பர் சாம் சேர்த்திசை வடிவில் ஆர்கனில் வாசித்த ‘ஜன கன மன’ இங்கே:

கலிபோர்னியாவில் இருக்கும் தென் பஸடேனா சிறார் இசைக்குழு வாசிக்கும் இந்த சேர்த்திசை தந்தி வாத்திய குழுவிற்காக சற்றே மாற்றப்பட்டுள்ளது.

நமது தேசிய கீதத்தின் மேற்கத்திய வடிவம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் 1918-19ஆம் ஆண்டுகளில் முதன் முதலில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனது நண்பரான ஜேம்ஸ் கஸின்ஸ் என்பவரின் அழைப்பை ஏற்று மதனப்பள்ளியில் இருக்கும் பெசன்ட் தியசாபிகல் கல்லூரிக்கு வந்திருந்தார் ரபிந்த்ரநாத் தாகூர். ஜேம்ஸ் கஸின்ஸ் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஆங்கிலக் கவிஞர். தன் வாழ்வின் இறுதி வருடங்களை இந்தியாவில் செலவழித்தார். மதனப்பள்ளியின் தியசாபிகல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். அப்போது அவரழைப்பை ஏற்று அங்கே வந்து சில நாட்கள் தங்கினார் தாகூர். ஒருநாள் மாலை கஸின்ஸின் வற்புறுத்தலால் தான் ஏற்கனவே 1911-ஆம் ஆண்டு எழுதி அவ்வளவாகப் பிரபலமாகாததொரு கவிதையைப் பாடினார் தாகூர்.

rabindranath_tagore“பெரிய ஆகிருதியைக்கொண்டதொரு மனிதருக்குப் பொருத்தமில்லாத மெல்லிய குரலில் பாடத் தொடங்கினார் தாகூர். அந்தப்பாடலின் முதல் பகுதியில் இந்தியாவின் மாநிலப் பகுதிகளைக் குறித்தும், மலைகளை, நதிகளைக் குறித்தும் ஒரு புவியியல் குறிப்பைத் தந்தார். அடுத்த பகுதியில் இந்தியாவின் பல்வேறு மதங்களைக் குறித்துப் பாடினார். அப்பாடலின் முதல் பகுதியின் கோஷம் எங்கள் காதுகளைத் திறந்தது. இரண்டாம் பகுதியின் கோஷம் எங்கள் தொண்டைகளைச் சரிசெய்ய வைத்தது. அவரை மீண்டும் மீண்டும் அப்பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டோம். இறுதியில் நாங்களும் பெருமிதத்தோடு ’ஜயஹே, ஜயஹே!’ என்று வாய்திறந்து பாடினோம்” என்று முதன்முதலில் நம் தேசியகீதத்தைக் கேட்ட அனுபவத்தைக் குறித்துத் தன் நினைவுக்குறிப்புகளில் எழுதுகிறார் கஸின்ஸ்.

இப்படியாக, நம் நாட்டின் தேசியகீதம் தன்னுடைய முதல் உணர்ச்சிப்பிரவாகத்தை மதனப்பள்ளி தியசாபிகல் கல்லூரியில்தான் சந்தித்திருக்கிறது. ஜேம்ஸ் கஸின்ஸ்சின் மனைவி மார்கரெட் மேற்கத்திய இசையில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்கிறார். தாகூர் இவர் உதவியோடு நம் தேசியகீதத்தை மேற்கத்திய இசையின் விதிமுறைப்படி சேர்த்திசையாக அமைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நம் தேசியகீதத்துக்கு இசையமைத்தது யார் என்பதில் சர்ச்சை நிலவியபடியே இருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ‘இந்திய தேசிய ராணுவத்தில்’ (INA) பணிபுரிந்த கேப்டன் ராம்சிங் என்பவரும் சுபாஷ் சந்திரபோஸின் வேண்டுகோளின் பேரில் ’ஜனகனமன’ பாடலின் ஹிந்தி மொழிபெயர்ப்புக்கு ட்யூன் அமைத்து, இசையமைத்ததாக 1997-ஆம் ஆண்டு கூறினார். அதுவரை அதற்கு இசையமைத்தவர் தாகூர் என்றே கருத்து நிலவிய காலத்தில் இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கேப்டன் ராம்சிங்கும் நல்ல இசைக்கலைஞரே! INA-யின் கீதம் உட்பட பல உத்வேகமூட்டும் பாடல்களை உருவாக்கியிருக்கிறார். அதற்காக சுபாஷ் சந்திரபோஸிடமிருந்து பரிசுகளும் பெற்றிருக்கிறார். ஆனால் இன்றுவரை அதிகாரபூர்வமாக தேசியகீதத்துக்கு இசையமைத்தது தாகூர்தான் என அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.

2004122301100102நான் ஹைதராபாத்தில் பணி புரியும்போது, அங்கு செகந்தராபாத்தில் உள்ள புனித யோவான் தேவாலயத்தில் தேசியப் புகழ் வாய்ந்த ஒரு பைப் ஆர்கன் இருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன். அதை வாசிப்பவர் தொண்ணூறு வயதை நெருங்கிகொண்டிருக்கும் தியோடர் கம்பர்ட் எனும் ஒரு முதியவர். அந்த வயதிலும் அவருடைய வாசிப்பு அவ்வளவு அபாரமானதென்றும், சுதந்திர தினத்தின் போது தவறாமல் அவர் தேசிய கீதத்தை ஆர்கனில் வாசிப்பார் என்றும் என்னுடன் பணிபுரிபவர் ஒருமுறை சொன்னார்.

என்னைப் பொருத்தவரை வேறெந்த இசைக் கருவியைக் காட்டிலும் இந்த ஆர்கன்தான் வாசிப்பதிலேயே மிகவும் கடினமானது. காரணம் இது இரண்டு கைகளால் மட்டுமல்ல, கால்களாலும் ஒரே நேரத்தில் வாசிக்கப்படும் ஒரு வாத்தியம். பியானோ, ட்ரம்ஸ் போன்ற வாத்தியங்களும் கூட இரண்டு கைகளாலும் கால்களாலும் வாசிக்கப்படுபவை. ஆனால் பியானோவில் கைகளால் வாசிக்கப்படும் இசையை கட்டுப்படுத்தும் விசைகள் மட்டுமே கால்களில் இருக்கும். ட்ரம்ஸ் ஒரு தாளவாத்தியம். இதில் வலது காலில் பாஸ் ட்ரம்மின் விசையும் இடது காலில் கையால் வாசிக்கப் படும் சிம்பலை நெருக்க, தளர்த்தப் பயன்படும் விசையும் இருக்கும். ஆனால் இந்த நான்கு அவயங்களையும் தனித்தனியாக கீ போர்ட் மூலம் ஒரே நேரத்தில் வெவ்வேறு இசைக்குறியீட்டை கொண்டு வெவ்வேறு இசைபாகங்களை வாசிக்கும் கடினமான சவால் ஆர்கனில் மட்டுமே. மேலும் ஒரே நேரத்தில் பல ஸ்வரங்களை எழுப்பும் எந்த ஒரு வாத்தியமும், அதன் ஒலி பெருக்கியில் இருந்து வெளியில் வரும்போதே அனைத்து ஸ்வரங்களும் கலந்து கூட்டு இசையாய் வரும். ஆனால் பைப் ஆர்கனிலோ ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் அதற்கான தனி ஒலி பெருக்கி உண்டு. ஆகையால் பல ஸ்வரங்களை சேர்த்து இசைத்தாலும் அவை தனித்தனியே வெளிவந்து காற்று மண்டலத்தில் ஒருசேரக் கலந்து ஒரு சேர்த்திசை உணர்வைத் தரும்.

இவ்வளவு கஷ்டமான வாத்தியத்தை ஒரு தொன்னூறு வயது முதியவர் எப்படி வாசிக்கிறார் என்று பார்க்கவேண்டும் என்று பெரும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்காகவே அடுத்த ஆகஸ்ட் பதினைந்தன்று அந்த சர்ச்சிற்குச் சென்றேன். தள்ளாடும் வயோதிகத்தில் இருந்த அவரை இருவர் தோள் கொடுத்து நடத்தி வந்து ஆர்கன் முன் அமரச் செய்தனர். உடனே அவர் ஒரு இருபது வயது வாலிபரின் துள்ளலுடன் சற்றும் கூனாது நேராக நிமிர்ந்து சபையை ஒருமுறை திரும்பிப் பார்த்து மோதித்துவிட்டு, அந்த ஆர்கனில் கை (காலும்) வைத்ததுதான் தாமதம், அதுவரை நான் கேட்டிராத ஒரு கம்பீர நாதம் எழுந்தது. அந்த ராட்சத வாத்தியம் ஜல்லிக்கட்டில் அடங்கிய காளை போல அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டது. அந்த ஆர்கனில் ராணுவக்குழு கூட்டு முயற்சியாய் வாசித்தப் பல்வேறு இசை பாகங்களைத் தனி ஒரு மனிதராய் இவர் கால்களாலும் கைகளாலும் ஒரு சேர வாசித்துக் கேட்ட தேசியகீதம் என் மனதுக்கு இனி எப்போதுமே நெருக்கமாக இருக்கப்போகும் ஒன்று.


One Reply to “கீதம், சங்கீதம், தேசியகீதம்”

Comments are closed.