காமன்வெல்த்: கல்மாடி கட்டும் மண்மாடி

commonwealth1

ஒரு செய்தி: தமிழகத் தடகள வீராங்கனை சாந்தி தனக்கு தமிழக அரசால் கருணையுடன் கொடுக்கப்பட்ட பயிற்சியாளர் வேலையை உதறிவிட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பெருந்தொகையான ரூபாய் ஐந்தாயிரம் மாத சம்பளம் அவருக்குப் போதவில்லையாம். என்ன அநியாயம் பாருங்கள்! இந்திய அளவில் சுரேஷ் கல்மாடி போன்ற விளையாட்டுக்கு உயிரை விடும் செம்மல்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து ஆயிரமோ ரெண்டாயிரமோ கோடி ரூபாய்களை மட்டும் சொற்ப ஊதியமாகப் பெற்றுத் தன்னிகரில்லாத இந்த இந்தியாவில் வாழ்க்கை நடத்தவில்லையா? ஏன் இப்படி சாந்தி போன்ற பணக்கார விளையாட்டு வீரர்கள் ‘வெறும்’ பணத்துக்குப் பின் இப்படி பேயாய் அலைகிறார்கள்? அவர்கள் போட்டுக்கொள்ள பழைய காலணியும், எட்டுக்கு பத்து அளவில் நிலமும், ரெண்டு டி-ஷர்டும் தரும் அரசின் பெருந்தன்மையான உதவிகள் போதவில்லையா? எதெதற்கோ போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று தெருவில் இறங்கும் பாவிகள் இந்த கொடுஞ்செயலைக் கண்டிக்க வேண்டாமா? நெஞ்சம் கொதிக்கிறது.

முரண்நகை போதும் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே நெஞ்சம் கொதிக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஏற்பாட்டில் தாமதம், பெரும் அளவிலான ஊழல், குளறுபடிகள் என்று கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் சுரேஷ் கல்மாடியின் லீலைகளையும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டு உண்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் சாந்தி போன்ற ஏழை விளையாட்டு வீரர்களின் நிலையையும் ஒருமுறை நினைத்துப்பாருங்கள். ரத்தக்கண்ணீர் வரும்.

kalmadi1

டெல்லியில் தொடங்கப்பட இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பை விட போட்டிகள், விளையாட்டு அரங்கங்கள் கட்டுமானம், ஏற்பாடு ஆகியற்றில் நடைபெற்றுள்ள ஊழல்தான் இங்கு திரும்பிய பக்கமெல்லாம் பேச்சாக இருக்கிறது. கோடி ரூபாய் கொடுத்து குண்டூசி வாங்கிய கணக்குதான் எல்லாம். தோண்டத் தோண்ட ரூபாய் நோட்டுதான் சிக்குகிறது. கோடிகளில். ஒவ்வொரு நாளும் புதுவிதமான ஊழல் பற்றிய தகவல்கள். ‘ஊழல்’ என்னும் வார்த்தை இந்திய மக்கள் கேள்விப்படாத ஒன்றில்லை என்றாலும், இத்தனை ஆயிரம் கோடி ரூபாயில் செய்யப்பட்ட ஊழல்களைக் குறித்து கொஞ்சமும் வெட்கமில்லாதபடி கல்மாடியும் இன்னபிற அரசியல் தலைவர்களும் தரும் பல கோமாளித்தனமான விளக்கங்கள் இதற்கு முன் இந்தியா காணாதது.

காமன்வெல்த் போட்டிகளை டெல்லியில் நடத்துவதற்கான முடிவு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் எடுக்கப்பட்ட போது போட்டிகளை நடத்துவதற்கான செலவு தொகை 760 கோடி ரூபாயில் தொடங்கியது. இன்று அதை போன்ற பலமடங்கு செலவு செய்து நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள். இடையில் ஆட்சி மாறியதும் காங்கிரசின் புனே தொகுதி எம்.பி.யான (இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவராய் இருக்கும்) கல்மாடி யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக காமன்வெல்த் போட்டிகளுக்கான தலைவரானதிலிருந்தே இப்போட்டியை நடத்துவதில் ஊழல் லீலைகள் ஆரம்பமாகிவிட்டன. சுரேஷ் கல்மாடி, விளையாட்டுத் துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஆசிய தடகள சங்கத்தின் தலைவராக இருப்பவர். பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளாகி இருந்தாலும் ’மகாராஷ்டிராவின் மண்ணின் மைந்தன்’ என்று நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை போலவே பில்ட்-அப்களை உருவாக்கி பிழைத்துக்கொண்டிருப்பவர். இந்திய ஹாக்கி அணையின் முன்னாள் கேப்டனான பர்கத் சிங்கால் ‘விளையாட்டுலகின் மாபியா’ என்ற பட்டம் வைத்து அழைக்கப்பட்டவர். சென்ற வாரத்தில் இந்தக் கட்டுரை எழுத ஆரமபித்த நாளில் இருந்து கல்மாடியின் லீலைகள் பற்றி தினமும் கிடைக்கும் தகவல்களை சேகரித்து எழுத உண்மையில் சிரமமாகத்தான் இருக்கிறது. அவ்வளவு ‘உழைத்திருக்கிறார்’ அவர்!

காமன்வெல்த் போட்டியின் தொடக்கமாக, லண்டனில் நடந்த ஜோதி ஓட்டத்தின் கவரேஜ் தொடர்பான விஷயங்களுக்காக A.M.FILMS என்ற பெயர் தெரியாத ஒரு நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ததில் நடந்த முறைகேடு பற்றி ஒரு பெரும் சர்ச்சை எழுந்தபோது, கல்மாடி கூலாக ‘இந்த கம்பெனியை எங்களுக்குப் பரிந்துரைத்ததே லண்டனில் இருக்கும் Indian High Commission அலுவலகம்தான் என்றார். அதற்கு ஆதாரமாக அங்கு பணியாற்றும் ராஜு செபாஸ்டியன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலை ஆதாரமாக காட்டினார். அடுத்த நாளே அவர் குறிப்பிடும் அந்த செபாஸ்டியன் அங்கு ஒரு சாதாரண குமாஸ்தா, அவருக்கு இந்த விஷயங்களை எல்லாம் தீர்மானிக்க எந்த அதிகாரமும் இல்லை என்ற தகவல் வெளிவர வட இந்திய மீடியா உலகம் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவரை சாடியது. ஆனாலும் கல்மாடி அசரவில்லை.

போட்டித் தொடருக்காக பல பொருட்கள் வாடகைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. அதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. ஒரு கம்ப்யூட்டரை நாற்பத்தைந்து நாள் வாடகைக்கு எடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் தொண்ணூறாயிரம். அதிக பட்ச configuration கொண்ட கம்ப்யூட்டரை சொந்தமாக வாங்கவேண்டுமென்றாலே விலை எழுபதாயிரத்தைத் தாண்டாது. நிச்சயமாக Apple கம்ப்யூட்டர்கள் வாங்கி இருக்கமாட்டார்கள். குளிர்சாதனப் பெட்டிகள் லட்சக்கணக்கான விலைக்கு ‘வாடகைக்கு’ வாங்கி இருக்கிறார்கள். கேட்டால், ”இது ஒன்றும் பெட்ரூம் ஏ. சி இல்லையாக்கும் இதெல்லாம் பெரிய பெரிய ஏ.சி இல்லையா.. அவ்வளவு விலைதான் ஆகும்” என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார் கல்மாடி. இதைப்போலவே விலைக்கு வாங்கினாலே ஒருலட்சம்தான் ஆகும் treadmill கருவிகளை, பத்துலட்ச ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். இதைக்குறித்து ஒரு செய்தித்தாள் கேள்வி எழுப்பியபோது, ‘அது வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கும் அதிநவீன treadmill’ என்றார் கல்மாடி. ஆனால் அது சாதாரணமாக நம் உடற்பயிற்சிநிலையங்களில் இருக்கும் ட்ரெட்மில்தான் எனவும், அதற்கான சந்தைவிலையையும் ஆதாரத்தோடு அடுத்தநாளே அம்பலப்படுத்தியது அந்த செய்தி நிறுவனம். அதற்கு கல்மாடியின் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

கிட்டத்தட்ட அறுநூற்று ஐம்பது கோடி ரூபாய்க்கு இது போன்ற பொருட்களை வெறும் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். இதுவரை நிகழ்ந்த ஊழலுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கல்மாடியை காப்பாற்றும் செயலில் அரசு இறங்கி இருக்கிறது. T.S.தர்பாரி , மகேந்த்ரூ எனும் இரண்டு அதிகாரிகளின் ‘வழிகாட்டுதலின்’ பேர் இந்த தவறுகள் நிகழ்ந்து விட்டதாக இப்போது சொல்லப்படுகிறது. விஷயம் ஒரு எல்லையை மீறியதைக்கண்டு சுதாரித்துக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க ஒரு கமிட்டியை அவசர அவசரமாக உருவாக்கி இருக்கிறார். ‘அமைச்சர் பெருமக்கள்’ கொண்ட குழு ஒன்று இனி கல்மாடி அண்ட் கோ-வை கண்காணிக்குமாம். இப்போதைக்கு கல்மாடி மேல் கைவைத்தால் உலக அளவில் இந்திய விளையாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்ற ‘பொதுநலனை’ கருத்தில் கொண்டு இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட போவதில்லை என்றொரு சிலிர்ப்பூட்டும் நிலைப்பாட்டையும் அரசு எடுத்திருக்கிறது. எப்படியும் விளையாட்டு போட்டிகளின் ஆரவாரத்தில் இவை கண்டிப்பாக மறக்கடிக்கப்பட்டு விடும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம் அரசுக்கு. என்ன சேட்டை பண்ணினாலும் ‘அவனுக்கு கிரகம் சரியில்லை.. பாருங்க அவன் டாப்புலே வருவான்..’ என்று ‘களவாணி’ பட அம்மா சொல்வது போல் காங்கிரஸ் அரசு தன் ‘பிள்ளையான’ கல்மாடியை காபந்து பண்ணி வைத்திருக்கிறது. ஆனால் இது போன்ற பெரிய அமைப்புகளை திறம்பட நடத்தும் திறமை சிறிதும் இல்லாதவர் என்பது தான் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அவரது துறையின் கீழ் வேலை செய்யும் அனைவரின் கருத்தும்.

செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் தரும் பதிலைப் பார்த்தால், காமன்வெல்த் போன்ற அமைப்புகளுக்கு தலைவராக இருக்க இவருக்கு என்ன தகுதி இருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. AM Films தொடர்பான சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கையில், ”லண்டனில் ஜோதி ஓட்டத்திற்கான ஏற்பாடு பற்றிய சந்திப்பில் லண்டன் போலீசார் பாதுகாப்பு காரணம் கருதி அனைத்து ஏற்பாடுகளையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று சொன்னதால் அவசரமாக அந்த நிறுவனத்தை பணியமர்த்தினோம்” என்றார். ”எந்த அதிகாரி பாதுகாப்பு காரணம் பற்றி சொன்னார்?” என்று கேட்டால் ‘லண்டன் போலீஸ் சொல்லியது’ என்று பொத்தாம்பொதுவான பதில் தருகிறார். அப்படியெனில் அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை சரிபார்க்கவில்லையா என்ற போது ‘ அப்போது அதற்கெல்லாம் நேரமில்லை’ என்று வருகிறது பதில். இவர் ஒரு தனியார் நிறுவனத்தின் தலைவராய் இருந்தால் என்றோ Terminate செய்யப்பட்டிருப்பார். அரசியலில்தான் இதெல்லாம் சாதாரணமாயிற்றே!

போட்டி நடக்க இன்னும் நாற்பது சொச்ச நாட்களே இருக்க டெல்லியின் பல்வேறு இடங்களில் இன்னும் விளையாட்டு அரங்கங்கள், வீரர்கள் தங்குவதற்கான விடுதிகள் என்று பல கட்டிடங்களின் கட்டுமானப்பணி நிறைவு பெறவில்லை என்றும் குற்றசாட்டு. பிறகும் நம் கல்மாடி அசரவில்லை. எம். எஸ்.கில் இது தொடர்பாக பேட்டி அளித்தபோது இதை மேற்பார்வையிடும் பொறியாளர்கள் அவ்வப்போது இவற்றை சரி செய்ய வேண்டி இருப்பதால் தாமதம் ஆவது போல் தோன்றுகிறது, என்றார். உண்மை நிலவரம் அது அல்ல என்பது இங்கு உள்ள குழந்தைக்கு கூட தெரியும். இன்னும் பல கட்டடங்களின் கட்டுமானப்பணி முடிவடையவில்லை; முடிவடைந்தாதாக சொல்லப்படும் கட்டிடங்களின் நிலை மோசமாக இருக்கிறது என்ற செய்திகள் இடியாய் இறங்குகின்றன. மீடியாக்கள் போட்டி நடக்கவிருக்கும் (கட்டுமானப்பணி முடிவற்றதாக சொல்லப்பட்ட) அரங்கங்களின் நிலை பற்றி செய்தி சேகரித்தபோது இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது. பல இடங்களில் ஓட்டை, அதன் மூலம் நீர்க்கசிவு என்று கட்டப்பட்ட கட்டிடங்களின் நிலை மோசமாக இருந்ததை பார்த்து இந்தியா அதிர்ந்தது.

அது தொடர்பாக பேட்டி அளித்த ஜெயபால் ரெட்டி சொன்னது இன்று வரை யாருக்குமே புரியாத ‘உயர்மட்ட’ ஜோக். ஒரு நிருபர் ”இப்படி மேலிருந்து தண்ணீர் சொட்டுகிறதே?” என்று கேட்டதற்கு யோசனை செய்துகொண்டே “இது… இது சிஸ்டமே அப்படித்தான். தண்ணீரை வெளியேற்றும் முறைகளில் ஒன்று இது..” என்று அவர் சொன்னதை பெரும் நகைச்சுவையாய் நினைத்து சிரிக்கிறார்கள் மக்கள், சற்று வேதனையுடன். தண்ணீர் சொட்டிப் பார்வையாளன் மீது விழவேண்டும் என்று திட்டமிட்டே கட்டும் கல்மாடியை என்னவென்று சொல்வது?

டெல்லியில் தற்போது வெயில் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கப்போகும் நேரம். டெல்லியின் தட்பவெப்ப நிலையை அவ்வளவு சீக்கிரம் கணிக்க முடியாது. இன்னும் ஒரு மாதத்துக்கு ‘ஆங்காங்கு’ மழை பெய்துகொண்டே இருக்கும். உண்மையில் இந்த அபத்தங்களை பொறுத்துக்கொள்ள முடியாத சமூக ஆர்வலர்கள் போட்டி நேரத்தில் மழை வந்து விளையாட்டு பாதிக்கப்பட்டால் சந்தோஷம்தான் என்று பேசிக்கொள்ளுகிறார்கள். டெல்லியின் சாதாரண குடிமக்கள் மீது காமன்வெல்த் போட்டிகள் செய்த மறைமுக பாதிப்பு – விலைவாசி உயர்வு. பருப்பில் இருந்து பஸ் கட்டணம் வரை விலை இரண்டு மடங்காகியிருக்கிறது. ஆளும் காங்கிரஸ் அரசு முதல்வரான ஷீலா தீட்சித்தின் ‘தொலைநோக்கு பார்வை’யைத் தாண்டிய தூரத்தில் இருக்கிறது காமன்வெல்த் போட்டிகளுக்கான ஆயத்தப் பணி. பல பணிகள் இன்னும் பூர்த்தியடையாமல் இருப்பது அவருக்கு பெருத்த சங்கடத்தை கொடுத்திருக்கிறது என்பது வெளிப்படை.

தற்போது டெல்லி வந்திருக்கும் காமன்வெல்த் உலக தலைவரான மைக் பென்னல் அரங்குகளை பார்வையிட்டு வருகிறார். இன்னும் பூர்த்தியடையாமல் இருக்கும் வேலைகளுக்காக உள்ளூர பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளுக்காக ஸ்பான்சர் செய்த, செய்ய தயாராய் இருந்த நிறுவனங்கள் பல தற்போது பின்வாங்க ஆரம்பித்து இருக்கிறார்கள். போட்டிக்கான மிக பெரிய ஸ்பான்சரான NTPC (National Thermal Power Corporation) மொத்தமாக ஐம்பது கோடி ரூபாயை கொடுக்க தயாராய் இருந்தது. நடைபெற்ற ஊழல்களால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் தான் முன்பு கொடுத்த இருபது கோடி ரூபாய்க்கான கணக்கை கேட்பதோடு , கொடுப்பதாக வாக்களித்த மீதி முப்பது கோடி ரூபாயை தரப்போவதில்லை என்று அறிவித்து இருக்கிறது. மற்றொரு நிறுவனமான PGCIL (Power Grid Corporation of India) வும் தான் கொடுப்பதாய் இருந்த பத்து கோடி ரூபாயை தரப்போவதில்லை என்று கறாராய் சொல்லி விட்டது. இந்நிலையில் இந்திய அரசு மற்றும் காமன்வெல்த் அமைப்பு ஆகியன என்ன செய்ய போகின்றன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அரசின் கீழ் வரும் ஒரு தனியார் துறையில் பணிபுரியும் அதிகாரியான என் நண்பர் ஒருவர், பத்திரிகையில் வருவதை விட பல மடங்கு அதிக பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக சொன்னார். கல்மாடியின் கைங்கரியத்தில் நம் வரிப்பணம் இந்த அரசியல்வாதிகள் அதிகாரிகளின் சொந்த செலவுக்கு பயன்படப்போகிறது.

new-delhi-policeமுன்னணி  விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில்  பங்கு பெறுவது இன்னும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. அதற்கும் ஒரு பதிலைத் தயாராக வைத்திருக்கிறார் கல்மாடி. “பிரபலமில்லாத வீரர்கள்  இப்போட்டி மூலம் முதல் தர வீரர்களாக மாறுவார்கள்…” என்று உறுதி தருகிறார். எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிக செலவு (!) செய்து, இன்னும் தயார் நிலையில் அரங்கங்களையோ தங்கும் விடுதிகளையோ தயார் செய்யாத கல்மாடி தற்போது மிக தைரியமாக ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராணுவம் இப்போட்டிகளுக்கு பெருந்தன்மையுடன் ‘இலவசமாக’ சேவை செய்ய வேண்டுமாம். செலவு கைமீறி விட்டதாம்.  அரசும் இவ்விஷயத்தில் அவருக்கு  துணையாய்த்தான் இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் A.K.அந்தோணிக்கு போட்டிகளை  மேற்பார்வையிடும் அமைச்சர் குழுவின் தலைவரான ஜெய்பால் ரெட்டி எழுதிய கடிதத்தில் அரசின் பல்வேறு துறைகள் இப்போட்டிகளுக்காக பெரும் அளவில் ‘உதவி இருக்கின்றன’. அதே போல் ராணுவமும் ‘செலவு தராமல்’ சேவை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  இதிலிருந்தே அரசு இவ்விவகாரத்தில் போட்டிகள் நடைபெற்றபிறகு எடுக்கப்போவதாய் சொல்லி இருக்கும் நடவடிக்கையே ஒரு கண்துடைப்புதான் என்பது மேலும் உறுதியாகிறது.

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் அவலங்களைச் சொல்லி மாளாது. இங்கு நீங்கள் சிறந்த விளையாட்டு வீரராகப் புகழும், பணமும் பெற வேண்டுமானால் கிரிக்கெட் வீரராய்த்தான் இருக்க வேண்டும். ஜெயிப்பதற்காக சில லட்சங்கள் பெறமுடியும் எனினும் நீங்கள் அணியின் தோல்விக்கு காரணமாய் இருந்தால் இந்திய புக்கிகள் உங்களுக்கு கோடி கொடுப்பார்கள். குதிரை ஏலம் போல் கிரிக்கெட் வீரர்களை ‘வாடகைக்கு’ எடுத்து IPL போட்டிகள் நடத்தி அதன் மூலம் ‘கருப்பை வெளுப்பாக்கிய’ கனவான் லலித் மோடியின் முகத்திரை போட்டிகளின் முடிவில் கிழிந்தது என்றால், கல்மாடியின் சாயம் போட்டிகள் துவங்கும் முன்னே வெளுத்திருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக கல்மாடி அங்கம் வகித்த விளையாட்டு அமைப்புகளில் நடந்த பெரும் அளவிலான ஊழல், வீரர்களின் மனக்கசப்பு எல்லாம் இந்திய விளையாட்டு உலகம் நன்கு அறியும். ஆனாலும் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் விளையாட்டு போட்டிகளுக்கான தலைவராவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியவில்லை. உலக அரங்கில் இந்தியாவின் ‘கௌரவத்தை’ நிலைநாட்ட இது போன்ற போட்டிகள் தேவை என்று மார்தட்டி கொள்ளும் தலைவர்கள் இவற்றை பற்றி கவலைப்பட போவதில்லை. ஆனால் போபால் விஷ வாயு பயங்கரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க முடியாத அரசு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக காமன்வெல்த் போட்டி நடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது எனும் குரல் இப்போது ஒலிக்கத் துவங்கி இருக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகள், தம் சக்திக்கு மீறிய செலவுகள் செய்தே இப்படிப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் முனைப்பாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அதைத் திறம்படச் செய்து முடித்தால், இதர நாடுகளுக்குத் தம் இருப்பையும், பலத்தையும் வளரும் நாடுகள் காண்பிக்க முடியும். ஆனால் இப்படிப்பட்ட சர்வதேச நிகழ்ச்சிகள் நேரும் சிறு, சிறு சறுக்கல்கள் கூட பூதாகரமாக உலகெங்கும் தெரியவந்து, பெரிய அளவில் backfire ஆவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே உலக அரங்கில் கவனம் பெறவேண்டும் என்று நினைத்தால் தெளிவான திட்டமிடல் வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் அதை முடிப்பதற்குத் தொடர்ந்த மேற்பார்வை வேண்டும். அது இரண்டுமே இந்த காமன்வெல்த் போட்டிகளுக்கான ஆயத்த பணிகளில் அறவே இல்லை என்கிறார்கள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருபவர்கள்.

மேலும் இத்தனை செலவு செய்து தன் பெருமையை நிலைநாட்டிக்கொள்ளும் இந்திய அரசு, இந்த செலவில் ஒரு சிறு சதவீதத்தை நம் விளையாட்டு வீரர்களின் நலனுக்கு செலவிட்டால் கூடப்போதும். எவ்வளவோ சர்வதேசப் பெருமைகளை நாம் ஈட்டிக்கொள்ள முடியும். மிகப்பெரும் மனிதவளம் உள்ள இந்தியா, ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் என்றாவது முதல் பத்துக்குள் வர முடிந்ததா? அடிப்படை விஷயமாக உலக அளவில் பிரகாசிக்க கூடிய விளையாட்டு வீரர்களை உருவாக்காமல், தேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், மிக முக்கியமாக மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தாமல், வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுவதாக நினைத்துக்கொண்டு இப்படி பூனை சூடு போட்டுக்கொள்வது யாருக்கு பலன் தரும்? கல்மாடி போன்ற பெருந்தகைகளைத் தவிர?

காமன்வெல்த் போட்டிகளுக்கான இசையை அமைக்கவிருக்கும் இசையமைப்பாளர் ரஹ்மான் மீடியா உலகத்திடம் ‘இந்தப் போட்டியைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் தர வேண்டாம்’ என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறார். உலக அளவில் நம் மானம் கப்பலேறி விடுமாம். கல்மாடி, லலித்மோடி போன்றவர்கள் செய்யும் ஊழல்களை உலகத்துக்குத் தெரியாமல் மறைக்க முடியும். ஆனால் காலில் அணிய ஒரு நல்ல ஷூ இல்லாமல் கஷ்டப்படும் இந்தியாவின் ஏழை விளையாட்டுவீரன் படும் பாட்டை எந்தத் திரைகொண்டும் மூட முடியாது.