ஆழியிலிருந்து ஆகாயத்துக்கு

என்னைப் பொருத்தவரை நல்ல பயணநூல் என்பது வெறும் இடத்தைப் பற்றிய விவரங்களை மட்டும் தரக்கூடிய புத்தகம் இல்லை. இந்த இணைய யுகத்தில் எந்த ஒரு இடத்தைப் பற்றியும் மூச்சுத் திணறும் அளவுக்கு நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு நல்ல பயணநூலிலிருந்து, ஒரு இடத்தைப் பற்றிய – அது ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமான இடமாக இருந்தாலும் – உள்ளார்ந்த புதிய பரிமாணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்; நாம் பார்க்கத்தவறிய புதிய கோணங்களில் அந்த இடத்தை விளங்கிக் கொள்ள முடியும். ஒரு நாவல் எழுத்தாளர் மனிதர்கள் வழியே வாழ்வை தரிசிக்கிறார் என்றால், ஒரு நல்ல பயணநூல் எழுத்தாளர் பயணிக்கும் இடங்கள் வழியே வாழ்வை தரிசிக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்னால், என்னுடன் வேலை பார்ப்பவர் எனக்குப் பரிசளித்த எட்மண்ட் ஹிலரியின் பயணநூல் எனக்கு ஆச்சரியம் தருவதாக இருந்தது.  தன்னுடைய நண்பர் டென்சிங் நார்கேயுடன் (Tensing Norgay) இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் குழுவில் இருந்தவர் என்ற வகையில் இவர் உலகெங்கிலும் நன்கு அறியப்பட்ட மலையேற்ற வீரர். ஆனால் இவர் பயணநூல்களும் எழுதுவார் என்பது நான் அறிந்திராத விஷயம். அந்தப் புத்தகத்தின் பெயர் “ஆழியிலிருந்து ஆகாயத்துக்கு” (From the Ocean to the Sky). 58 வயதான எட்மண்ட் ஹிலரியும், அவருடைய நண்பர்களும் மூன்று விசைப்படகுகளில் கங்கை நதி கடலில் கலக்கும் இடமான கங்காசாகரிலிருந்து, இமயமலையிலிருக்கும் அதன் உற்பத்தி ஸ்தலம் வரை 1977-ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணத்தைக் குறித்ததே இப்புத்தகம். புத்தகம் 1979-ஆம் வருடம் வெளியாகியிருக்கிறது. 

hillary-everest

ஹிலரியும், அவர் நண்பர்களும் இப்பயணத்தில் இரண்டு மாதங்கள் கங்கையின் விஸ்தீரணம் முழுதும் பயணம் செய்கிறார்கள். பத்ரிநாத்துக்கும், ரிஷிகேசத்துக்கும் இடையே இருக்கும் நந்தப்பிராயகையின் பலமான அருவி அவர்களைத் தடுத்து நிறுத்தும் வரை, அந்தப் பெருநதியின் பல தடைகளையும் விசைப்படகுகளில் கடக்கிறார்கள். அதற்குப் பின் அவர்கள் மலையேற்றம் செய்து நர் பர்பத், ஆகாஷ் பர்பத் போன்ற அதற்கு முன் வெற்றிகொள்ளப்படாத சிகரங்களைக் கடந்து ஊற்றுக்கண்ணை அடைகிறார்கள்.

020734ஆங்கிலத்தில் ‘The Ganges’ என்று சொல்லப்பட்டாலும், இந்தியர்கள் அழைப்பதைப் போல ‘கங்கா’ (Ganga) என்றே கங்கை நதியைக் குறிப்பிடுகிறார் ஹிலரி. மனிதனின் பாவங்களைக் கழுவுவதற்காக பூமிக்கு வந்ததாகக் கருதப்படும் கங்கை நதி,  கடவுளைப் போல, பெற்றோரைப் போல இந்தியர்களால் மிகப்புனிதமாக மதிக்கப்படும் ஒன்று.  அந்த நதியின் மொத்த நீளத்தையும் ஒருவர் கடந்து பார்க்க நினைப்பதைக்கூட கடவுளின் விருப்பம் என்று இந்திய மக்கள் நினைப்பதும் இயல்பானதே. எனவே தன்னுடைய தீரப்பயணம் முழுதுமே ஹிலரி மக்களால் வரவேற்கப்பட்டு மரியாதை செய்விக்கப்படுகிறார். ஹிலரி சாகச்செயல்களில் ஆர்வம் கொண்டவர். ஆனால் இந்தப் பயணத்தில், ஹிலரியைக் கவர்ந்தது வெறும் சாகசம் மட்டுமல்ல, கங்கை நதிக்கரையில் ஏழ்மையிலும், அறியாமையிலும் உழலும் எளிய மனிதர்களின் அன்பும் கூட என்பதை இப்புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இமயமலை மீதிருக்கும் தீராத காதலாலும், தன் முந்தைய பயணங்கள் வழியே இந்தியாவைக் குறித்து நன்கு அறிந்திருந்ததாலும், கங்கை நதி ‘இந்தியாவின் இதயம்’ என்பதையும், அவர் மேற்கொள்ளும் சாகசப் பயணம் ஒருவிதத்தில் ‘கலாசார யாத்திரை’ என்பதும் ஹிலரிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அப்பயணத்தில் யாருக்குமே எளிதாகக் காணக் கிடைக்கும் அழுக்கடைந்த வாழ்க்கையைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லவில்லை அவர். ஆனால் அதே நேரத்தில், பெரும்பாலான மேற்கத்திய எழுத்தாளர்கள் போல இந்த அழுக்கையும், துயரத்தையும் மிகைப்படுத்தாமல், இந்தியாவைக் குறித்து இழிவாகப் பேசுவதில் மகிழ்ச்சியடையாமல், ‘இது இப்படியிருக்கிறது’ என்று தன்னுடைய பார்வையை மட்டுமே பதிவு செய்கிறார் ஹிலரி. இந்தியாவின் அழுக்கில் தன் பார்வையைச் செலுத்தி திசை மாறிச் செல்லாமல் இருப்பதால், அவரால் இந்தியாவின் பிற சிறந்த விஷயங்களை அவரால் கண்டுகொள்ளமுடிகிறது; அவற்றைக் குறித்து அவரால் குறிப்பிடமுடிகிறது. தனக்கு அந்நியமான இந்தியத் தத்துவங்களின் குறியீட்டுத் தன்மைகளை அவர் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. அதே சமயம், இந்திய வாழ்வின் சிறந்த காரணிகளைக் குறித்து நல்ல நகைச்சுவையோடும், இதமாகவும் அவரால் குறிப்பிட முடிகிறது.

tp_ganges_candles

புத்தகமெங்கும் கொஞ்சமும் எள்ளல் தொணியில்லாத சிறந்த நகைச்சுவை விரவிக் கிடக்கிறது. அதனால் சில கசப்பான உண்மைகளைக் கூடப் புண்படுத்தாமல் சொல்லிவிடுகிறார் ஹிலரி. எடுத்துக்காட்டாக, பத்ரிநாத் கோயிலின் பூசாரி எட்மண்ட் ஹிலாரியைத் தொட்டால் தன் ஆச்சாரத்துக்குப் பங்கம் வந்துவிடுமென்று, மேலே பட்டுக்கொள்ளாமல் அவர் கழுத்தில் விழுமாறு மாலையைத் தூக்கி எறிகிறார். வேறொரு மேற்கத்திய எழுத்தாளராக இருந்திருந்தால் இதைச் சாக்கிட்டு, மொத்த இந்தியக் கலாசாரத்தையுமே இழிவுபடுத்தி எழுதியிருப்பார். ஆனால் எட்மண்ட் ஹிலாரியோ, “Quoits விளையாட்டு வீரர் போல, அவர் வெகு கவனத்தோடும், நிபுணத்துவத்தோடும் மாலையை எறிந்தார்” என்று நகைச்சுவையாகச் சொல்கிறார். இப்படி எளிதாகப் புண்படுத்திவிடக்கூடிய, அதன் மூலம் கசப்பான முன்முடிவுகளுக்கு வரக்கூடிய விஷயங்களைக் கூட, அவர் மெல்லிய நகைச்சுவையோடு கடந்துவிடுகிறார்.

சாகசப்பயணம் மேற்கொள்ளும் குழுவில் நல்ல நகைச்சுவை உணர்வுடைய ஒரு சிலராவது இருப்பது மிக அவசியம் என்று வேறொரு பேட்டியில் சொல்கிறார் ஹிலரி. “பல சமயங்களில் இயற்கையின் பெருஞ்சீற்றத்துக்கு முன் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகலாம்.  பனிப்பொழிவு, பனிப்புயல் போன்ற அசந்தர்ப்பவசமான சூழல்களில் கூடாரத்துக்குள்ளோ, மலை முகட்டின் பின்னோ எங்கேயும் நகரமுடியாமல் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.  மேலேறிச்செல்லவோ, கீழிறங்கிச் செல்லவோ முடியாமல் போகலாம். அச்சமயங்களில் ஒன்றாக அமர்ந்து வாழ்க்கையின் இனிமையான நினைவுகளைப் பேசியபடி ஒருவருக்கொருவர் கிண்டலும், கேலியுமாக இருப்பதே நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும்” என்கிறார் ஹிலரி.

ganges-big

கங்கைக்கரையில் ஹிலரியும், அவர் நண்பர்களும் கூடாரமடித்துத் தங்க நேர்ந்த இடங்களைக் குறித்து மிக அழகான வர்ணனைகளை எழுதியிருக்கிறார். இந்திய உடைகளை அணிந்து வாரணாசியில் தான் தங்கநேர்ந்த மூன்று நாட்களைக் குறித்து ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார். தனக்கு அந்நியமான கலாசாரத்தின் மீது மரியாதையும், புரிதலும் கொண்ட ஒருவரால் மட்டுமே சாத்தியப்படும் விதத்தில் அந்த அடர்த்தியான நகரத்தைக் குறித்து எழுதியிருக்கிரார் ஹிலரி. வாரணாசியில் ஒரு உயிரியலாளரை சந்திக்கிறார். கங்கை நீரில் எந்த பாக்டீரியாவும் வளரா விதத்தில் அது தூய்மையாக இருப்பதற்கான காரணம் என்ன என்று அவர் ஆராய்ச்சி செய்கிறார். அதற்கான காரணங்களாகத் தனக்கேயுரிய நகைச்சுவையோடு பலவற்றை முன்வைக்கிறார் ஹிலரி. வாரணாசியில் அவர் சந்திக்கும் இன்னொரு சுவாரசியமான ஆளுமை அந்த நகரத்து மகாராஜா. இப்படிப்பட்ட சுவாரசியமான ஆளுமைகளுடனான சந்திப்பும், அதில் விரவியிருக்கும் நகைச்சுவையும் இப்புத்தகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. இப்பகுதிகள் எனக்கு மார்க் ட்வைன் எழுதிய மிஸ்ஸிஸிபி நதிக்கரை வாழ்க்கையின் நினைவுகளை வெகுவாக நினைவுபடுத்தின.

varanasi_morning

வலுவான நீரோட்டங்களைக் கொண்ட கங்கை நதியின் செங்குத்தான ஆரம்பப் பகுதிகளில் சாகச நிகழ்வுகள் அதிகமாக இருக்கின்றன. கங்கை நதியைக் குறித்து வெளியுலகத் தகவல்கள் அதிகமில்லாத காலத்தில் செய்யப்பட்ட பயணம் என்பதை நாம் இங்கே நினைவிற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வலுவான நீரோட்டப் பகுதியைக் குறித்தும் நுணுக்கமான விவரங்களோடு ஹிலரி தந்திருக்கும் தகவல்கள் சாகசப் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இத்தனை வீரதீர சாகசங்களைச் செய்த எட்மண்ட் ஹிலரி பள்ளி நாட்களில் மிகவும் கூச்ச சுபாவத்துடனும், தனிமையிலும் இருந்திருக்கிறார். சிறுவயதில் அவர் உடலளவில் பிற சிறுவர்களைக் காட்டிலும் நோஞ்சானாக இருந்திருக்கிறார். புத்தகங்களைப் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அவர், தான் படிக்க நேர்ந்ததொரு சாகசப்புத்தகத்தால் வெகுவாகக் கவரப்பட்டார். தொடர்ந்து சாகசப்புத்தகங்களை சேகரிக்கத் தொடங்கினார். இப்புத்தகங்களும், 16 வயதில் அவர் கற்றுக்கொண்ட குத்துச்சண்டையும் அவர் தன்னம்பிக்கையை வெகுவாக உயர்த்தின. அந்நாட்களில் அவர் மேற்கொண்டதொரு மலையேற்றப்பயணத்தின் மூலம் தனக்குள் இருக்கும் ஒரு சாகசப்பிரியரைக் கண்டுகொண்டார். அதன்பின் 2008-ஆம் வருடம் தன்னுடைய 88-ஆம் வயதில் இறக்கும் வரை ஏதோ ஒரு விதத்தில் சாகசப்பயணங்களோடு தொடர்பு வைத்தபடியே இருந்தார். 

‘ஆழியிலிருந்து ஆகாயத்துக்கு’ புத்தகத்தைப் படித்தபின் இந்தியாவைப் பற்றியதொரு பார்வை – அதன் மக்கள், அவர்களுடைய நம்பிக்கைகள், நெடிதுயர்ந்த ஆலயங்கள், பெரு நகரங்கள் இவற்றைக் குறித்ததொரு அவதானிப்பே எஞ்சுகிறது. இந்தியாவின் இக்காரணிகளை புதிதாகச் சந்திக்க நேரும்போது, கூர்மையான நுண்ணறிவுடைய மனதால் மட்டுமே, மனிதத்தின் நிலைப்புக்குத் தேவையான தொடர்ச்சியில் நிலைபெறும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும். வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் கூட, ஹிலரியின் கங்கை சாகச அனுபவத்தில் இந்திய வாழ்க்கையைப் பற்றிய  அப்படிப்பட்டதொரு புரிதல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நிறைந்த ஹிலரியின் மனதோடு, கங்கை தன் போக்கிலிருக்கும் சிறந்த விஷயங்களையும், வாழ்க்கையை வளமாக்குவதற்குத் தான் அளித்திருக்கும் கொடைகளைக் குறித்தும்  தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். அவற்றைத் தெளிவாக நினைவுகூர்ந்து நமக்குச் சொல்லியிருக்கும் எட்மண்ட் ஹிலரியை வணங்கத் தோன்றுகிறது.