புரை

எங்கள் வட்டாரமான பிடோக்கில் பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய மெல்லோட்டப்பாதையில் நான்காவது சுற்று வேகநடையை முடிவுக்கு கொண்டு வருமுகமாக என் நடைவேகத்தைக் குறைத்தேன். செவியில் சிறு ஒலிப்பான் மூலம் ஒலித்துக்கொண்டிருந்த பாப் இசையை நிறுத்திவிட்டு சிங்கப்பூரின் ஒலி 96.8 இன் தமிழ்ச் செய்தியறிக்கைக்கு மாற்றினேன். அப்படியே எங்கள் இல்லம் இருக்கும் சாலையில் திரும்பி வீடுவந்துசேர்ந்தேன். ஆங்கில பாப் இசை நான் அடிக்கடி கேட்பதன்று; ஆனால் இதுதான் தற்சமயம் மிகப் பிரபலமானது என்றும் தன் வகுப்பினர் மத்தியில் பெயர்பெற்றது என்றும் என் பதினான்கு வயது மகள் தூரிகா தெரிவித்திருந்தாள். சரி அதையும் ஒரு முறை கேட்டுப்பார்ப்போம் என்று அவள் தரவிறக்கிய முப்பது பாடல்களையும் கேட்டுப்பார்த்ததில் ஒன்று மட்டும் புரிந்தது. ஆங்கிலம் ஓரளவு தெரிந்த எனக்கு பாடல்வரிகளின் சொற்கள் ஏதும் புரியவில்லை. மிகவினோதமான அதிவேக இசைப்பின்னணியில் மெட்டமைக்கப்பட்ட பாடல்களின் வினோத தலைப்பும் திடுக்கிடும் ஆரம்பச் சொற்களும் பதின்மர்களைக் கவர்ந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. அதிலிருந்த சில மெட்டுகள் எனக்கும் பிடித்தன.

வீட்டிற்கு வருவது உற்சாகமாக இருந்தது. இன்று ஒருநாள் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்திருந்தேன். தொடர்ந்து விடியற்காலை எழுந்து வேலைகளை செய்துவிட்டு அலுவலகத்திற்கு ஓடுவதும், வந்தபின்னும் உட்காராமல் அடுத்த வீட்டுப்பணியைச் செய்தும் வீடு அலுவலகம் என்று மாறிமாறி வேலை செய்வது பழகியிருந்தாலும், இப்போது நாங்கள் முடித்திருந்த குழு பிராஜக்ட் மிகுந்த வேலை வாங்கிவிட்டது. சிறந்த குழுவாக எங்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு எங்கள் எழுவருக்கும் நான்கு நாள் பாலித்தீவிற்குச் சுற்றுலா, தங்குமிடம், உணவு, சுற்றிப்பார்ப்பதற்கான செலவு உட்பட பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. போக முடியுமா என்று தெரியவில்லை. சென்ற வாரம் நான் இதைச் சொன்னபோது ராஜன் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு மாற்றம் இருக்கட்டும் என்று நான் இன்று ஒரு நாள் வீட்டில் நிதானமாக இருக்கவேண்டும் என்றும் இன்று காலை பத்துமணி வாக்கில் இங்கு சிங்கப்பூரிலேயே உள்ள எங்கள் உறவினர்களுக்குத் தொலைபேசியில் பேசுவது (வயதில் மூத்தவரான அவர்கள் கைத்தொலைபேசி வைத்துக்கொள்ளாததால் அவ்வப்போது பேசுவது குறைந்துவிடக்கூடாது என்று திடீரென்று ஒரு நாள் தோன்றியதன் விளைவு), எங்கள் வீட்டிலிருந்து நான்கு ப்ளோக்குகள் தாண்டி வசிக்கும் நண்பர் ஒருவரின் மனைவி வலதுகாலில் எலும்புமுறிவு ஏற்பட்டு சில நாட்களாக நீண்ட விடுப்பில் இருக்கிறார், அவரைப் பார்த்துவிட்டு வருவது, பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிய மகள் வழக்கம் போல் தினமும் மதியம் இரண்டு அல்லது மூன்று மணிக்கு வருவாள், எப்போதும் நாங்கள் இரவு ஏழுமணிக்கு வரும்வரை தனியாக வீட்டில் இருப்பாள், மாலை அவளுடன் பந்தாட்டம் விளையாடலாம், இதுபோல் சில சிறு திட்டங்களை வகுத்திருந்தேன்.

வீட்டினுள் நுழைந்தவுடன் எப்போதும்போல் பதறிக்கொண்டு குளிக்கச் செல்லாமல், எனக்குபிடித்த பாடல் வரிகளை உரக்கப்பாடியவாறு முன்னறையில் சென்று அமர்ந்தேன்.

நான் வருவதற்காகவே காத்திருந்ததுபோல கைத்தொலைபேசி ஒலித்தது – தூரிகாவின் வகுப்பாசிரியர் திரு கோ.தூரிகா இன்று பள்ளிக்கு வந்திருக்கிறாளா என்று கேட்டார். காலையில் அவள் தந்தைதான் அவளை பள்ளியில் இறக்கிவிட்டார் என்றேன். பள்ளிநேரம் துவங்குவதற்கு முன் பள்ளியிலிருந்த சிற்றுண்டியகத்தில் அவளைப் பார்த்ததுபோல் இருந்ததாகவும் ஆனால் வகுப்பு துவங்கும்முன் அசெம்பளி நடக்கும் முன்னரங்கத்தில் அவளைக் காணவில்லை என்றும் ஒருவேளை தான் கவனிக்கத்தவறியிருக்கலாம் என்றும் வகுப்பில் பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொன்னார்.

அப்போது மணி எட்டு இருக்கும். பள்ளிநேரம் காலை ஏழரையிலிருந்து ஒன்றரைவரை. வாரத்தில் இரண்டு நாள்கள் ஏதேனும் புறப்பாட நடவடிக்கை இருக்கும் அன்று வருவதற்கு ஐந்து மணியாவது ஆகும் என்பதும் நான் அறிவேன். நான் இன்று வீட்டில்தான் இருப்பேன் என்றும் இன்று வீட்டு எண்ணிற்கும் அழைக்கலாம் என்றும் அவளிடம் சொல்லியிருந்தேன். மகளுடைய கைத்தொலைபேசி எண் தெரிந்திருந்தாலும் பள்ளி நேரத்தில் அவள் அணைத்துவிடுவாள் என்பதால் அவளுடன் பேச நான் எந்த எத்தனிப்பும் செய்யவில்லை. பரவாயில்லை வகுப்பாசிரியர்கள் மாணவர்கள் மீது நல்ல அக்கறை எடுத்துக்கொள்கிறார்களே என்று நினைத்துக்கொண்டே அடுத்தவேலையை கவனிக்கச்சென்றேன்.

அதன்பின் கடிகாரத்தை நான் பார்க்கவில்லை. நிதானமாகக் குளித்தேன். ஓரிரு முதிய உறவினர்களிடம் பேசினேன். சில சில்லறை வேலைகளைச் செய்தேன். சமையலைத் துவங்கினேன். மணி பத்தரை இருக்கும். திடீரென்று வாயில்கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. ராஜன் தான், வேகமாக வந்துகொண்டிருந்தார். என்னைக் கனிவுடன் பார்த்தார், நீ பாட்டு படுத்துக்க, வரப்போகிற விடுமுறைநாட்கள்ல, வீட்டை சுத்தம் செய்ய உதவுகிறேன், எனக்கு அலுவலக விஷயமாக இன்னும் சில நாள்களில் ஒரு சிறப்பு மாநாட்டுக்காக ஐப்பான் செல்லவேண்டும். விசா வாங்க பாஸ்போர்ட்டை அலுவலகத்தில் கேட்டார்கள், இன்னும் நான்கைந்து நாட்களில் சீனப்புத்தாண்டுக்காக தொடர்விடுமுறை வந்துவிடும், அத்துடன் வேறு சில சான்றிதழ்களும் தேவைப்படுகின்றன என்றவாறு என்னிடம் நான் கிளம்புவதற்குள் நேற்று உன்னிடம் கொடுத்த அந்த சர்டி·பிகேட்டை எடுத்துக்கொடு என்றவாறு தனக்கு வேண்டியவற்றைச் சோதித்து எடுத்துக்கொள்ள உள்ளறைக்குச் சென்றுவிட்டார்.

உங்கள் வேலை எல்லாம் முடிந்த பின் அப்படியே மதிய சாப்பாட்டையும் சூடாக சாப்பிடுகிறீர்களா என்று கேட்டேன். நீ சொல்வதும் சரி, இன்று வெளியில் போய் சாப்பிட நேரமிருக்காது என்றவாறு தன் வேலையைத் தொடர்ந்தார். அடுப்படியை ஓடிப்போய் கவனித்தேன்.

image_resizeவீட்டுத்தொலைபேசி இப்போது ஒலித்தது. மீண்டும் திரு.கோ தான் பேசினார். இப்போது தான் உங்கள் மகள் வகுப்பிற்கு பாடம் எடுத்துவிட்டு வந்தேன். வகுப்பில் அவள் இல்லை. உடன்படிப்பவர்கள் சிலரைக் கேட்டுப்பார்த்தேன். அவள் வரவேயில்லை என்கிறார்கள். பள்ளி வாயிற்காவலர் வைத்திருக்கும் வெளியே செல்லும் மாணவர்களைக் குறித்துவைத்துக்கொள்ளும் கோப்பிலும் அவள் பெயர் இல்லை. கவலையாக இருக்கிறது என்றார். உடனே கவனிக்கிறேன் என்று கூறினாலும் இப்போது எனக்கு ஒரு சிறு பதற்றம் வந்துவிட்டது. காலையில் ராஜன்தான் பள்ளியில் இறக்கிவிட்டு வீட்டிற்கு வந்து குளித்து காலையுணவைச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினார். அதுவரை தூரிகாவிடமிருந்து குறுந்தகவல்கூட வரவில்லையே. பள்ளியிலும் வரவில்லை என்கிறார்கள். உடனே அவள் கைத்தொலைபேசியை அழைத்தேன். இணைப்பு கிடைக்கவில்லை. மீண்டும் முயன்றபோது இப்போது தொடர்பு கொள்ள இயலாது என்ற அறிவிப்பு கேட்டது. அணைத்திருக்கிறாள் போலிருக்கிறதே; எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.

யாரு பேசினது ராஜன் கேட்டார்.

விவரத்தைச் சொன்னேன்.

நான் எதிர்பார்த்ததைப்போலவே என்னைக்காட்டிலும் பதற்றமடைந்துவிட்டார். உடனே கைத்தொலைபேசியில் அவள் எண்ணை ஒத்தினார். அவருக்கு தொடர்பு கிடைக்கவில்லை.

அணைச்சு வச்சிருக்கு. நான்தான் காலைல இறக்கிவிட்டேன். பள்ளியில் இல்லைன்னா எங்க போயிருக்கும். இதென்ன புதுப்பழக்கம். இப்படி மட்டம் போடுகிறாளோ அடிக்கடி

ஏன் இப்படி நினைக்கணும். ஒருவேளை உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னவோ, ஆனா அப்படியிருந்தா இந்நேரத்துக்கு வீடு வந்து சேர்ந்திருக்கணும். நான் இன்னிக்கு வீட்டுலதான் இருப்பேன்னுகூட சொல்லியிருந்தேன். வீட்டிற்கு வர பொதுவாக தினமும் இரண்டு பேருந்துகள் மாற்றி தான் பள்ளியிலிருந்து வரவேண்டும். வேறு எங்கிருப்பாள்? யோசிக்கத் துவங்கினேன். ஒருவேளை சோர்வாகி மயக்கம்,.. …..உளராதே, என்றவர் பதற்றம் குறையாமல் வீட்டுத்தொலைபேசியிலிருந்து பல முறை தொடர்பு கொள்ள முயன்றுபார்த்தார்.

அடுப்பின் அழலை சிறியதாக்கிவிட்டு விட்டு அவசரமாக எங்கள் இருவரின் கைத்தொலைபேசியிலும் ஏதேனும் குறுந்தகவல் அல்லது தவறவிட்டுவிட்ட அழைப்பு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். ஒன்றும் இல்லை.

போன் இருந்து என்ன பிரயோசனம். இப்படி அணைச்சு வச்சிருக்கு. வரட்டும் வந்ததும் பிடுங்கி வைத்துவிடுகிறேன். ஹான்போனே வாங்கியிருக்கக்கூடாது. எல்லாம் உன்னால்தான். நாம இரண்டுபேரும் வெளியில் போய்விடுகிறோம். எப்போதுவேண்டுமானாலும் பெண்ணுடன் தொடர்பு கொள்ளலாம், அப்படி இப்படின்னு அம்மாவும் பெண்ணும் என்னை மாத்திமாத்தி பிரெய்ன் வாஷ் செய்து வாங்கியாயிற்று.

முன்னறையில் தொலைக்காட்சி, இசைகட்டகம் இவை இருந்த நீண்ட மேசையில் தூரிகா எனக்களித்த செவியில் வைத்துக்கேட்கும் ஒலிப்பான் மீது அவர் பார்வை படர்ந்தது. இது ஒண்ணு தண்டத்துக்கு; குடியைக் கெடுக்க.

பொண்ணுக்கு புத்தி சொல்லறதை விட்டுவிட்டு நீயும் ஆட்டம் போடுறயா, என் தலையெழுத்து அம்மாவும் பொண்ணும் எக்கேடுகெட்டுப்போங்க, என்ன பேசாம என்னைப் பார்த்துட்டு இருக்க, என்னைப்பாத்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதோ என்று கத்தத் துவங்கினார்.

நானும் மிகுந்த பதற்றத்தில்தான் இருந்தேன். அப்போதும் கோபப்படுவதோ கத்துவதோ எனக்கு வராது. என் கைத்தொலைபேசியிலிருந்து இரண்டு முறை தூரிகாவிற்குக் குறுந்தகவல் வேறு கொடுத்துவிட்டேன். பள்ளி நேரம் என்பதால் அவள் தோழிகள் உடன் படிப்பவர்கள் எல்லாம் வகுப்பில் அல்லவா இருப்பார்கள். மனதை நிதானப்படுத்திக்கொள்ள முயன்றேன். ராஜன் கத்துவதைத் தொடர்ந்தார்.

இதுவரை இப்படி ஒரு சூழ்நிலை வந்ததேயில்லை, இதுதான் முதல் முறை. தினமும் பள்ளிமுடிந்து வீட்டிற்கு வந்தவுடன் சாப்பாட்டை எடுத்து மைக்கிரோவேவில் சுடவைத்து சாப்பிட்டேன் என்று எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்புவாள். அம்மா, அரைமணிநேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு பிறகு படிக்கத்துவங்குகிறேன் என்றிருக்கும். சில சமயங்களில் தொலைக்காட்சி வேண்டாம் அம்மா, சரியாக அரைமணிநேரம் கழித்து போதும்மா கம்யூட்டர் கேம் விளையாடிவிட்டு அணைத்துவிடுகிறேன் என்று குறுந்தகவல் அனுப்புவாள், அல்லது அப்போது எனக்குப் பேச முடிந்தால் சுருக்கமாகப் பேசுவாள்.

இரவு நாங்கள் வந்தபின் வேலைகள் முடித்து இரவு தூங்குவதற்கு முன் பள்ளியில் நடந்தவற்றையோ வரும் வழியில் பார்த்தவற்றை இல்லை மனதில் என்ன சொல்லத்தோன்றுகிறதோ அதைச் சொல்லுவாள். நான் எல்லாவற்றையும் ஆவலுடன் கேட்டுக்கொள்வதுடன் என் பங்குக்கும் பேசுவேன்; சில நாட்கள் ஏதேனும் போர்ட் கேம் விளையாடுவோம். பள்ளி நூலகத்திலிருந்து ஏதேனும் ஒரு தடித்த வினோத தலைப்புள்ள புத்தகத்தை எடுத்துவந்து ஒரு வாரத்தில் படித்துவிட்டுக் கொடுங்கள் என்பாள். எதுவாயினும் சொல்லுவாளே; இப்போது என் பயமெல்லாம், குழந்தை ஒருவேளை எங்கேனும் சாலையில் அடிப்பட்டுக்கொண்டுவிட்டாளோ என்று நினைக்கத்துவங்கியது. துக்கம் தொண்டையை அடைக்க, அவரிடம் சொன்னேன்.

எப்படி முடியும், எப்படி முடியுமுனு கேக்கறேன். பள்ளிக்கூடத்துக்குள் கொண்டுவிட்டேன். உள்ளே போனதை கண்ணால் பார்த்தேன், ஒருவேளை எதாவது படத்துக்கு கிடத்துக்கு போச்சோ என்னவோ என்றவர் முறைத்தவாறு என்னை உற்றுப்பார்த்தார்.

நிச்சயமா இருக்காது. அம்மா, ஆலிஸ் இன் வண்டர்லாண்ட், த்ரி டி படம் வந்திருக்கு. உங்களுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை முடிஞ்சா போலாம்னு சொன்னா, இதெல்லாம் இருக்காது, குழந்தைக்கு உடம்புகிடம்பு சரியில்லாமல் வீட்டிற்கு திரும்பி வரும்போது மயக்கம் எதாவது,…

அதெல்லாம் ஒண்ணும் வராது, எல்லாம் கொழுப்பு, வீட்டுல எப்பபாரு கம்ப்யூட்டர்ல கேம் விளையாடுறதும், பாட்டு கேக்குறதும், நல்லாவா இருக்கு, இவ வயசில கிழிச சட்டை போட்டுகிட்டு பழைய புத்தகத்தை வாங்கிப்படிச்சு யுனிவர்சிட்டில முதலாவதாக வந்தேன், இதோட போன மாச கணக்கு மார்க்கு வெக்கக்கேடு,…

கெமிஸ்டரி பயாலஜியில் அவள் தொண்ணூறு வாங்கியிருக்காளே, என்று நான் சொல்லத்துவங்கினால் காதிலேயே போட்டுக்கொள்ளமாட்டார், கடந்த மாதத் தேர்வில் கணிதத்தில் மதிப்பெண் மிகவும் குறைந்துவிட்டது உண்மைதான், அதற்காக அதையே சொல்லிக்காட்டித் திட்டினால், இந்தகாலத்து குழந்தைகளிடம் ஒரு நண்பரைப்போலப் பழகினால் நல்லது என்று பல நேரங்களில் அவரிடம் சொல்லவும் செய்திருக்கிறேன்; அப்போதைக்குத் தலையாட்டுவார். இப்போது அது எதுவுமே அவருக்கு நினைவிலிருக்காது.

அவர் என்னை விடுவதாக இல்லை;

லைப்ரரிக்குப் போவேன், யாரும் எடுக்காத பெரிய பெரிய கணக்கு புத்தகங்களை எடுப்பேன், பாடபுத்தகமே என்னிடம் கிடையாது, நான் தான் வகுப்பில் முதல், போடணும் தெனமும் அம்பது நூறு கணக்கு போடணும், எல்லாம் சரிதான். இனி இவரை நிறுத்த முடியாது, சக்தி தீரும் வரை கத்தித்தீர்ப்பார், உண்மையில் இவர் ஒன்றும் கிழிசல் சட்டை போட்டுக்கொள்ளவில்லை; தேவையானதை வாங்கிக்கொடு நன்றாகத்தான் வளர்த்துபடிக்கவைத்தார்கள். நல்லவேளை இதைக்கேட்டு வருந்த என் மாமியார் அருகில் இல்லை. நன்றாகப்படித்தார் என்பது மெய்தான். எங்கள் காலத்தில் வீடுகளில் கணினி, குளிர்சாதனவசதி, கைத்தொலைபேசியெல்லாம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் நம் குழந்தையை நாமே புரிந்துகொள்ளவில்லை என்றால், தவிர இந்த ஒரு காலாண்டுத் தேர்வில்தானே மதிப்பெண் குறைந்திருக்கிறது. ஒரு முகத்துடன் சமைக்கமுடியவில்லை; தூரிகா எங்கேனும் அடிகிடி காயத்தோடு வருவதான கற்பனை பூதம் என்னை தொடர்ந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது.

சீக்கிரம் சோத்தைப்போடு, இல்ல நானே போட்டுக்கறேன், உனக்கு வேறு வேலை இருக்கும்.

மீண்டும் கைத்தொலைபேசியில் அவளைத் தொடர்பு கொள்ளப்பார்த்தேன். முடியவில்லை. அவசரமாக செய்த உணவை எடுத்துவைத்தேன்,

ராத்திரி கொஞ்சறத நிறுத்து முதல்ல, கெட்டுகுட்டிச்சுவராப்போகும், மனுஷன் இப்படிப் பதற்றான், கம்முன்னு இரு, போ போ போலீஸ்ல கம்பெயின் பண்ணு பொண்ணைக் காணமுன்னு, புத்தி வரும், இருக்குற ஒரு பொண்ணை சரியா வளக்கத்தெரியலை, ஊரே சிரிக்கிறாப்பல அம்மாவும் பொண்ணும் பண்ணிடுவீங்க போலிருக்கு, சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி அனுப்பிறனும், …… இப்ப நீ வேலைக்குப் போயி கிழிக்கணுமா என்ன, விட்டுத்தொலை, குடும்பத்தை கவனிக்கறதேயில்லை,.. உனக்கு எதாவது மோடிவ் இருக்கா லைப்ல, டோண்ட் கேர் ஆட்டிடியூட், என் தலையெழுத்து, உன்னால்தான் எனக்கு பிளட் ப்ரஷரே வந்தது; டையாபடீஸ் வந்தது, இத்யாதி இத்யாதி,..

குழந்தைக்கு என்னாயிற்று என்ற பதற்றம் ஒரு புறம், கடுமையான சொற்கள் ஒரு புறம் , ஏதேனும் பொருத்தமாக பதில் பேசும் மனநிலையும் எனக்கு இல்லை; வேகமாக குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவினேன். இருவரும் வேலைக்குச் சென்றாலும், குழந்தையை கவனிப்பதிலும் வேளாவேளைக்கு வீட்டு வேலை செய்வதிலும் நான் ஒருகுறைவைத்ததில்லை. அது அவருக்கும் தெரியும். கடுமையான சொற்கள் ஏமாற்றத்திற்கு மாற்று என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ, அர்த்தமில்லாமல் என்னவேண்டுமானாலும் கத்தித் தொலைக்கட்டும், நான் எதுவும் பேசப்போவதில்லை, மனதுக்குள் குழந்தைக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என்று அமைதியாக வேண்டிக்கொண்டேன். சாப்பிட்டு முடித்துவிட்டிருந்தார்.

வாயில் கதவு திறக்கும் ஓசை கேட்டது. தூரிகா முதுகில் பள்ளிப்பையும் ஒரு கையில் பள்ளிக்கோப்புகள் கட்டுடனும் தள்ளாடி வந்தாள்.

என்னடா, என்னாச்சு, ஓடிப்போனேன்,

ஒண்ணுமில்லமா, ஒண்ணுமில்ல, ரிலாக்ஸ் என்றாள் சிவந்த கண்களுடன்

எங்கயாவது விழுந்துட்டியாடா,

காலைல என்னவோ முடியவேயில்லைமா, வயத்த வலிச்சுது, கேண்டீன் வெண்டிங் மெஷின்ல செவன் அப் வாங்கி குடிச்சேன், சரியாகலை, வகுப்பு ஆரம்பிக்க இன்னும் நிறைய நேரம் இருந்தது, சரின்னு வீட்டுக்குப் போயிடலாம்னு கிளம்பினேன், பிடோக் இண்டர்சேஞ் வந்தப்பதான் அடுத்தவாரம் பண்ணற ஸ்கூல் பிராஜக்ட் வர்க் ஞாபகம் வந்தது, சைனீஸ் நீயு இயர் லீவு வேறு வருதா, எல்லாம் மூடிடுமே, அதனால அதுக்கு தேவையான ஒண்ணுரெண்டு புக்ஸ்ஸை எடுக்க லைப்ரரி போனேன்.

லைப்ரரில போக முடியும் ஆனா பள்ளிக்கூடம் போக முடியல, அப்படின்னாக்க கூட நீ ஒன்பது மணிக்கில வந்திருக்கணும் ,

அப்பா, அப்படியே நாட் ·பார் லோன் செக்ஷன்ல சில புக்ஸ்லேந்து தம்ப் டிரைவ்ல சில விவரங்களை எடுத்தேன்பா,

அந்த தம் டிரைவ கொடு

பர்சிலிருந்து எடுத்துக்கொடுத்தாள்

செக்யூரிட்டில கையொப்பம் போட்டுட்டு வரவேணாமா?

பள்ளிக்கூடம் ஆரம்பிக்கவே அரைமணி நேரம் இருந்தது ; வேண்டாம்னு நெனச்சிட்டேன்.

ஓடிப்போய் ஒரு தம்பளர் ஜூஸ் எடுத்துவந்தேன். என்னை ஒரு முறை முறைத்தார், எல்லாம் அப்புறம் குடிக்கட்டும், என்றவாறு இதெல்லாம் முடியுது, இல்ல, ஒரு போன் கூட பண்ணமுடியல, நான் எத்தன தடவ செஞ்சேன் எடுக்கவேயில்லை

லைப்ரரி முழுக்க ஏஸியா, ஓரத்துல இருக்குற ஒரு சோபாவுல உட்காந்து ஒரு புக்க படிக்கும்போதே அப்படியே தூங்கிட்டேன், லைப்ரரில அணைச்சு வைக்கணும்மில்லையா, அதான் போன அணைச்சி வெச்சிருந்தேன், போன் பண்ணியிருக்கலாம் என்னவோ தோணவேயில்லை, ரொம்ப டயர்டாக இருந்தது;

அதற்குள் அவள் சேமித்தவற்றை வேகமாக கண்ணோட்டம் விடுத்தார். அதில் தேதி, நேரம் எல்லாம் இருக்குமே

அம்மா சாரிம்மா, ஜூஸாமா,

நீ முதல்ல உட்கார் , இது வயத்த பிரட்டும்ன்னா மைலோ போடட்டா, சூடா சாப்பாடும் ரெடியா இருக்கு,

இல்லமா, இப்ப பசிக்கிறது, சாப்படறேனே

சமையலறைக்கு விரைந்தேன்

முன்னறையில் பேச்சு கேட்டது

எனக்குத் தெரியுண்டா உன்னைப்பத்தி, இந்த அம்மாதான் போலிசுக்குபோகணும் அப்படி இப்படின்னு பயந்திட்டா அமைதியான திடமான குரல் கேட்டது

என் மிஸ்டேக்தாம்பா, அம்மாவ பாத்து கத்தலையே,

எல்லாம் ஒழுங்கா கவனி எதாவது சாப்பாடுகீப்பாடு கொடு; நீ ஏசிபோட்டுக்கோம்மா; எதாவது பாட்டு கீட்டு கேட்டு ரிலாக்ஸ் பண்ணு. நான் கிளம்பறேன்; தபாரு அப்புறமா ஒழுங்கா கணக்குபோடு; அப்பா சொத்தெல்லாம் எழுதி வப்பேன்னு யாரும் இங்க கனவு காண வேணாம்; பிற்காலத்துல மேல படிக்க இடம் கிடைக்கலன்னு அம்மாவோ பொண்ணோ வந்து கேக்கக்கூடாது என்றவாறு என் கண்களை சந்திக்காமலே, காலணிகளை வேகமாக அணிந்துகொண்டு கிளம்பினார்.

தூரிகா சாப்பிட்டுவிட்டு தூங்க ஆரம்பித்தபின் திரு கோவிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன்; திடீரென்று எனக்கு பொறி தட்டியது. படிக்கும் அறையில் ஒரு கோப்பில் வைத்திருந்த தனது சான்றிதழைக்கேட்டாரே, ஒருவேளை திரும்பி வந்தால்; பத்திரமாக ஒரு உறையில் இருந்தது வேகமாக எடுத்து வைத்தேன். அதில் பொறித்திருந்த எழுத்துக்களை மீண்டும் படித்தேன்.

இவர் வேலைபார்க்கும் ஐப்பானிய நிறுவனத்தின் பெயர் . அதன் கீழ் 2009 ஆம் ஆண்டின் சிறந்த தலைமைத்துவ பண்புகளுக்கான விருது என்று பளபளத்த எழுத்துகளின் கீழ் சிங்கப்பூர் கிளையைச் சேர்ந்த திரு.சந்தோஷ் ராஜனுக்குக் கொடுக்கப்படுகிறது என்று எழுதப்பட்டிருந்தது. நான் ஏற்கனவே பார்த்ததுதான். எடுத்து ஒரு உறையில் போட்டு முன்னறை வாங்கி’ன் மீது வைத்துவிட்டு இணையத்தில் பயிற்சி கணக்குகள் இருக்கும் இணையதளத்திலிலிருந்து சில பாடங்களை தரவிறக்கிவிட்டு, பாலித்தீவில் சுற்றிப்பார்க்கக்கூடிய இடங்களை இணையத்தில் தேடலானேன்.