மகரந்தம்

சீனாவைக் கலக்கும் அறிவியல் புனைவு
நல்ல அறிவியல் புனைவுப் படைப்புகள் கற்பனை என்ற சட்டகத்தைத் தாண்டிய வாசிப்பைக் கொண்டதாக இருக்கும். சமகால சமூக (அல்லது) அரசியல் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை தனக்குள் கொண்டிருக்கும். தான் வாழும் சமூகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள், புனைவின் வழியாகத் தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கும் அவசியம் எழுத்தாளனுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, அடிப்படை மனித உரிமை மறுப்பு அதன் உச்சத்தில் இயங்கும் சீனா போன்ற நாடுகளில் புனைவுகள் மூலமாக அரசியலமைப்பை விமர்சிக்கும் படைப்பிலக்கியம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே செயல்பட்டுவந்திருக்கிறது. 1904-ல் வெளியான, முதல் சீன அறிவியல் புனைவு என்று கருதப்படும், ”நிலவுக் குடியிருப்பு”(Moon Colony) எனும் நாவல் அக்காலத்திய சமூக/அரசியல் விமர்சனத்தை உள்ளடக்கியது. இதைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியான சீன அறிவியல் புனைவுகள் சமகால நடப்புகள் மீதான தன்னுடைய விமர்சனத்தை உள்ளடக்கியவை. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ”சீனா 2013” (China 2013) எனும் அறிவியல் புனைவு அந்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக அறிவியல் புனைவான இந்நாவல் சீனாவின் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பதாகக் கருதப்படுகிறது. இது குறித்த ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம்.

விலங்குகளின் தற்கொலை உணர்வு
”விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுண்டு” என்று ஒரு தரப்பும், “இல்லவே இல்லை” என்று மறுக்கும் மற்றொரு தரப்பும் பலகாலமாக விவாதித்து வருகின்றன. ரோமனியர்கள் குதிரைகள் தற்கொலை செய்துகொள்ளும் என்று நம்பினர். அதை அவர்கள் உன்னதமான பண்பாக நினைத்தனர். அவர்களைத் தொடர்ந்து பல சமூகங்களிலும் விலங்குள் தற்கொலை செய்துகொள்வதாக நம்பப்பட்டது. குதிரை மட்டுமன்றி நாய், வாத்து, பூனை, தேள் போன்ற பல விலங்குகளும் தற்கொலை உணர்வு கொண்டவையாக கருதப்பட்டன. ஆனால் இது உண்மையா? அறிவியல் இதைப் பற்றி என்ன நினைக்கிறது? இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

ஒளியை அறியுங்கள்
ஒளி என்பதைப் பற்றி நமக்குத் தெரியாதது எத்தனை இருக்கப் போகிறது? இப்படி நமக்குத் தோன்றும். பொதுப்புத்தியின் முடிவுகள் எப்போதும் மூடத்தனமானவை அல்ல, முழு புத்திசாலித்தனமானவையும் அல்ல. மேற்படி அறிவு நம்மில் எல்லாரிடமும் உண்டு என்றாலும், அந்த அறிவை மேலும் மேலும் கேள்விகள் மூலமும் ஆய்வுகள் மூலமும் துளைத்துப் பார்த்துதான் நவீன அறிவியல் ஒளி என்பதைப் பலவிதமாகப் புரிந்து கொண்டு வருகிறது. இன்றைய கட்டத்தில் ஒளி என்பதைக் குறித்து நம்மில் (அறிவியலாளராகவோ, ஒளியை ஆய்பவராகவோ இல்லாத) பலருக்கும் என்னென்ன ஒளியைப்பற்றித் தெரியாது? இங்கே ஒரு சிறு பட்டியல்.

சீனத்து ரயில் வண்டிகள்
இடது சாரி தொழிற்சங்கங்கள் அரசு நிறுவனங்களின் நிழலில் பெரும் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டி உள்ளே எல்லாரும் ஹாயாக உறங்கிக்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 50 வருடங்கள். மேல்தளத்தில் காங்கிரஸ் தரகர்களும், ஜாதித் தலைவர்களும் மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டினர். தொழிற்சங்கத் தலைவர்கள் டீ குடித்து, பீடிப் புகை ஊதி 3000-ஆம் வருடத்தன்று வரப்போகிற பெரும் புரட்சியைப் பற்றிப் புராணங்கள் படித்து, 10 மணி முதல் 5 மணி வரை கதை பேசி எல்லா உற்பத்தியையும் முடக்கி மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் மேலும் மேலும ஆழ்த்தினர். சோசலிசம் இப்படித்தான் சிலகாலம் மக்களை நொண்டிகளாக, குருடர்களாக ஆக்கி வைத்தது. இன்னமும் நாட்டை ஊழலாக்க எல்லாவற்றையும் அரசுடைமையாக்கு என்று வேறு பொழுது விடிந்தால் கத்த ஒரு கூட்டம் பிரசுரங்களில் உலாவுகிறது. சீனர்கள் என்ன செய்கிறார்கள்? அங்கு ரயில் வண்டிகளின் தயாரிப்பு எப்படி நடக்கிறது என்று பாருங்கள். ஐசிஎஃப் எப்படி இயங்கியது என்று யோசியுங்கள்.