பாகிஸ்தான் உறவு – பத்ரிக்கு ஓர் எதிர்வினை

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளும் நோய்க்கூறு மனநிலைகளும்

india-pakistan-warசொல்வனம் இதழில் பத்ரி எழுதிய ‘பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சுவார்த்தை சாத்தியமா?’ என்ற கட்டுரை படித்தேன். பத்ரி பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளவேயில்லையோ என்று தோன்றியது. பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடந்து முடிந்த பேச்சுவார்த்தைகளில் உண்மையில் பெரிதாக யாரும் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மும்பை கொலைவெறியாட்டங்களுக்குப்பின் நடக்கும் முதல் மேல்மட்டப் பேச்சுவார்த்தை இது. வெளியுறவுத்துறையளவில் நடைபெற்ற இந்தப்பேச்சு வார்த்தைக்கு இந்தியாதான் அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தை சுமுகமாகவே முடிந்ததாய் அனைவரும் எண்ணிய நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி இந்திய அதிகாரிகளை மட்டரகமாகத் திட்டத் தொடங்கினார். இந்திய வெளியுறவுச்செயலர் ஜி.கே.பிள்ளையை லஷ்கர்-இ-டய்பா பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுப்பேசினார். மும்பை கொலைவெறியாட்டத்தில் அங்கம் வகித்து அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஜேம்ஸ் ஹெட்லி மும்பை பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் அரசுகளுக்கும் இடையே உள்ள நேரடித்தொடர்பை விசாரணையில் வெளிப்படுத்தி விட்டதை ஜி.கே.பிள்ளை சுட்டிக்காட்டி விட்டதுதான் குரேஷியின் கோபத்தைத்தூண்டி விட்டு விட்டது. உண்மையில் ஹெட்லி மூலம் இதை விட அதிகமாகவே பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன:

– ஐ.எஸ்.ஐயும் பாகிஸ்தானிய ராணுவமும் மும்பை பயங்கரவாதிகளுக்கும், லஷ்கர்-இ-டய்பா பயங்கரவாதிகளுக்கும் நேரடியாகவே பயிற்சி அளித்தது.

– இவர்களது பயிற்சி முகாம்கள் சில டர்பலா அணைக்கட்டுப்பகுதிய்ல் உள்ளன. இப்பகுதிக்குள் கடுமையான பாகிஸ்தானிய ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள இடம். பாகிஸ்தான் ராணுவ அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது. முகாம் அமைத்து பயங்கரவாதப் பயிற்சி அளிப்பது பாகிஸ்தானிய ராணுவம் மூலமகாவே நிகழ்ந்திருக்கிறது.

–  பாகிஸ்தானிய கடற்படை கமாண்டோக்கள் மும்பை பயங்கரவாதிகள் 10 பேரை பயிற்றுவித்தார்கள்.

– பாகிஸ்தானிய ராணுவ மேஜர்கள் மூவர் – மேஜர் ஹரூன் ஷா, மேஜர் இக்பால், மேஜர் சமீர் அலி ஆகியோர் நேரடியாக மும்பை பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தனர்.

– பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐயின் டைரக்டர் ஜெனரல் லெஃப்டினண்ட் ஜெனரல் அஹ்மது ஷுஜா பாஷா, மும்பை பயங்கரவாதிகள் பயன்படுத்திய விசைப்படகுக்காக 25 லட்சம் ரூபாய் தந்தார்.

விக்கி லீக் வலைப்பக்கம் வெளியிட்டுள்ள உளவுத்தகவல்கள் (90,000 பக்கங்கள் என்கிறார்கள்) ஐ-எஸ்-ஐக்கும் தாலிபானுக்கும் உள்ள நெருங்கிய உறவையும், ஐ.எஸ்.ஐ தாலிபானுக்கு நேரடியாக ஒருபக்கம் உதவிக்கொண்டு மறுபக்கம் தாலிபானை ஒழிக்கிறோம் என்று அமெரிக்காவிடம் பணம் வாங்கிக்கொள்ளும் பித்தலாட்டத்தையும் (பாகிஸ்தானுக்கு 50 பில்லியன் டாலர்கள் வரை அமெரிக்கா அள்ளித்தந்திருக்கிறது) வெளிச்சம் போட்டிருக்கிறது.

இதற்கு முன்பும் கூட மும்பை குண்டு வெடிப்புச்சம்பவங்கள் போன்ற கொடூரங்களில் ஐ-எஸ்.ஐயின் பங்கு இருப்பதை இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பு, 11/26 மும்பை பயங்கரவாதம் ஆகியவற்றில் முக்கியப்பங்கு வகிக்கும் தாவூத் இப்ராஹிம் கராச்சியில் சுதந்திரமாய்த் திரிகிறான். இந்திய அரசு இவனது கராச்சி முகவரிகளைக்கூட வெளியிட்டு இருக்கிறது. பாகிஸ்தானோ அப்படி யாருமே அங்கு இல்லையென்று சாதித்து வருகிறது.

அரசின் பங்களிப்பில் நடக்கும் அரசு-சார்ந்த-பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டுக்கு இன்றைய நிலையில் முழுத்தகுதியும் உள்ள நாடு பாகிஸ்தான். இப்படிப்பட்ட ஒரு நாட்டுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது இவ்விஷயங்களைப்பேசாமல் நிகழக்கூடிய ஒன்றாக எப்படி இருக்க முடியும்?

அரசு அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தையை, ஊடகக் களியாட்டமாக்கி அரசியல் தூஷணைகளை அள்ளியெறிந்த குரேஷியின் செயலுக்கு பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தில் முன் உதாரணங்கள் நிறைய உள்ளன. இவ்வருடம் பிப்ரவரியில் நடந்த வெளியுறவுத்துறை செயலர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் பாக் தரப்பின் சல்மான் பஷீர் பேச்சுவார்த்தையின்போது அமைதியாய் இருந்து விட்டு பின் அந்த பேச்சு வார்த்தையையே அவமதிக்கும் விதத்தில் “இந்தியாவுடனான பேச்சு வார்த்தைக்கு நாங்கள் ஒன்றும் துடித்துக்கொண்டிருக்கவில்லை” என்று கூறினார். மும்பை பயங்கரவாதத்தில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவா தலைமை ஹஃபீஸ் சயித் மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னதற்காக பத்திரிகையாளர் முன் அவர் உதிர்த்த முத்து இது. 2001-இல் முஷாரஃப்பும் இதுபோலத்தான் பேச்சு வார்த்தையின்போது அமைதியாய் இருந்து விட்டு வெளியில் பத்திரிகையாளரிடத்தில் வந்து இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார்.

ஸ்டேட் ஆக்டர், நான்-ஸ்டேட் ஆக்டர் என்ற வித்தியாசத்தை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் அழித்தே வந்திருக்கிறது. விடுதலைக்குப்பின் ஆப்கன் பத்தான்களை வைத்து ராணுவத்தின் உதவியுடன் காஷ்மீரைக் கைப்பற்றச் செய்த முயற்சி தொடங்கி மும்பை குண்டு வெடிப்புகள், காஷ்மீர் கொலைவெறியாட்டம், கார்கில் போர், 11/26 மும்பை பயங்கரவாதம் என்று ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் என்ற ஸ்டேட்-ஆக்டரே ராணுவம், ஐ.எஸ்.ஐ ஆகியவற்றின் மூலம் இந்தியாவுக்கெதிரான பயங்கரவாதத்தை உருவாக்கியும், நிதியுதவி செய்தும், அடைக்கலம் தந்தும், பயிற்சி அளித்தும், இந்தியாவிற்குள் நுழையவும், இந்தியாவிலிருந்து தப்பிக்கவும் உதவி செய்தும் வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை state actorகள் non-state actorகள் என்பதெல்லாம் எப்படிப்பட்ட மயிர்பிளக்கும் வாதங்கள் என்பதுதான் மீண்டும் மீண்டும் நிரூபணமாக்கப்பட்டு வருகின்றது.

சுதந்திரம் அடைந்த உடனேயே ஆப்கன் பத்தான்களை ஜிஹாதிகளாக உள்ளே அனுப்பி, ராணுவத்தை வைத்து ஊடுருவி, தொடர்ந்ததொரு போரைத் துவங்கி வைத்தது பாகிஸ்தான். எனவே ஜிஹாதிகள் இப்பிரச்சனைக்குள் வந்தது ஏதோ இப்போது சில வருடங்களில் நிகழ்ந்ததுபோல் பேசுவது வரலாற்றின் உண்மைகள் தெரியாமல் அல்லது தெரிந்தே உதாசீனப்படுத்தி, உதிர்க்கப்படும் வாதம் மட்டுமே.

pak2பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை உதவியுடன் இந்தியாவுக்கு எதிரான இப்படிப்பட்ட நிழல் யுத்தத்தின் புதியதொரு அத்தியாயத்தை 1989-இல் துவக்கியது. பாகிஸ்தானில் அரசு என்பது உண்மையில் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் உள்ளங்கையில் அடக்கம் என்பதால் இனி பாக் அரசு என்று இக்கட்டுரையில் குறிப்பிட்டால் அது ராணுவம், ஐ,.எஸ்.ஐ ஆகியவற்றை உள்ளடக்கியதே என்று புரிந்து கொள்க.  பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்த பல காரணங்கள் இருக்கலாம் – அமெரிக்காவின் அழுத்தம் உட்பட. ஆனால் அவை எல்லாவற்றிலும் நம் தேசியப்பாதுகாப்பு முதன்மையாய் இருக்க வேண்டும். இதைத்தான் இந்தியா சரியாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்காமல், பாக் அரசே தெளிவாக ஆதரித்து வளர்த்து விடும் கொலைக்கும்பல்களை ஒழிக்காமல் காஷ்மீரையோ வேறு எந்தப்பிரச்சனையையோ பேச முற்படுவது என்பது, மென்மையாகச்சொன்னால் – மடத்தனம். அழுத்திச் சொன்னால் – தற்கொலைக்கொப்பான தேசிய துரோகம். பேச்சுவார்த்தைகளில் தேசியப்பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் அரசும் பாஜக அரசும் இந்த விஷயத்தில் பெரும்பாலும் உறுதியாகவே இருந்துள்ளன.

பாகிஸ்தானுடன் அமைதி ஏற்படுத்தி இந்தியாவின் பாதுகாப்புச்செலவைக் குறைக்காவிட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப்பாதிக்கும் என்று சொல்வது யதார்த்தத்திற்கு நேர்மாறாக உள்ளது. பார்க்கப்போனால் பாகிஸ்தான் தனது நிழல்யுத்தத்தைத் தொடங்கிய கடந்த 20 ஆண்டுகளில்தான் இந்தியா மாபெரும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்தப் பொருளாதார வளர்ச்சியே நம் எல்லைகளை விழிப்புடன் பாதுகாக்கவும் ராணுவத்தின் திறன்களை அதிகரிக்கவும், இன்னமும் வலுவான காரணங்களையும் எழுப்பியுள்ளது.

சண்டையில்லாத நேரத்தில் பொருளாதாரம் வளரும்தான், ஆனால் அச்சமயத்தில் பாதுகாப்பைக் குறைத்துக்கொள்ளலாம் என்று சொல்வது உலக மற்றும் ஆசிய நாடுகளின் தொலைநோக்கு அரசியல் முனைப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எளிமையான அசட்டுச் சிந்தனை. சேரிக்குடிசைக்கும் தட்டிக் கதவு இருக்கிறது. அந்த ஏழை நாளை சிறியதொரு வீடு கட்டினால், மரக்கதவு போடுவான், பணக்காரனாகி மாளிகை கட்டினால் அதற்கு சுற்றுச்சுவரும் காவலும் போடுவான். நாட்டின் வளம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் புத்தகக் கடை போட்டு மடிக்கணிணி பறிகொடுத்த கதையாகி விடும். நோய்க்கூறு மனநிலை இருப்பவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் முன் -யோசனையும் தெளிவும் முதலில் இருக்க வேண்டும். பறிகொடுத்தபின் புலம்ப தேசமும் சுதந்திரமும் கடைச்சரக்கல்ல.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்க இயலாமல் ஓரங்கட்டப்பட்டு நிற்கும் எத்தனையோ கோடிக்கணக்கான பேர் இருக்கையில், லட்சக்கணக்கான நம் நாட்டு மாணவர்களுக்கு மேற்படிப்பு எட்டாக்கனியாய் இருக்கையில், நம் நாட்டு தொழில் முனைவோரும், வியாபாரிகளும் தொழிலாளர்களும் உலகச்சந்தையென்ற போட்டி மைதானத்தில் கடும்போட்டிக்கு உள்ளாகி வரும் இந்த நிலையில் – இவர்களையெல்லாம் விட்டு விட்டு “பாகிஸ்தான் பிரச்சனையைத்தீர்க்க பாகிஸ்தான் வியாபாரிகளுக்கு வரி விலக்கு தர வேண்டும், பாகிஸ்தான் மாணவர்களுக்கு நம் கல்லூரிகளில் முன்னுரிமை தர வேண்டும்” என்றெல்லாம் பத்ரி போன்றவர்கள் எழுதுவது அதிர்ச்சியாக உள்ளது.

உண்மையில் பாகிஸ்தானின் பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது நம் கடமையே அல்ல. அவ்வாறு எண்ணுவது – ஆசிய, ஆப்ரிக்க நாடுகளை நாகரீகப்படுத்துவது வெள்ளையர்களின் சுமக்க வேண்டிய சுமை (white man’s burden) என்று சொன்ன மில்டனின் மனப்பான்மை போன்றது. அல்லது குழம்பிய குட்டையில் தனக்கு எவ்வளவு மீன் கிடைக்கும் என்று கணக்குப் போடும் புத்தியாக இருக்கலாம் – மெக்கா மசூதி ஆக்கிரமிப்பின் முடிவில் மத்திய கிழக்குப்பிரதேசமே குழம்பிக்கிடந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானத்தை ஆக்ரமித்த சோவியத் யூனியன் போல. ஆனால் உண்மையில் பிற நாட்டு பிரச்சனைகளை தீர்க்க முனைவது வல்லரசுகளுக்கே பிரச்சனையாகத்தான் பெரும்பாலும் முடிந்திருக்கிறது. இந்தியாவும் இலங்கையில் இப்படி ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறது. (இலங்கையைச்சொல்லும்போது நினைவுக்கு வருகிறது; பத்ரி எப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு வியாபாரத்தில் முன்னுரிமை, மாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் முன்னுரிமை என்று கேட்டிருக்கிறாரா என்று அறிய ஆவல்).

pakus-truth

இந்திய வலதுசாரிகளையும், தேசியவாதிகளையும் நிராகரித்து விட்டுத்தான் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று பத்ரி சொல்லியிருப்பது சீரியஸான கட்டுரையில் தெரியாமலேயே விழுந்து விட்ட நகைச்சுவைப்பகுதி. தேசியவாதிகளை நிராகரிக்க வேண்டும் என்று கறாராக ஃபத்வா கொடுத்திருக்கிறார். தனித்தமிழ்தேசியவாதிகள், வடகிழக்கு பிரிவினைவாதிகள் போன்ற தேசியவாதிகள்-அல்லாதோரையெல்லாம் ஆட்டத்திற்கு சேர்த்துக்கொள்ளலாம். மட்டுமல்ல, இந்திய வலதுசாரிகளை நிராகரிக்க வேண்டுமென்று இவர் அருள்வாக்கு சொன்னதால் இந்திய இடதுசாரிகளுக்கெல்லாம் அந்தத் தீட்டு இல்லையென்று ஆகிறது. எனவே இந்திய இடதுசாரிகள் (அதாவது மாவோயிஸ்டுகள், சீன தேசியவாதிகள்-aka கம்யூனிஸ்டுகள்) ஆகியோரை காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க யோசனை கேட்கலாம் என்கிறார். கடைசியில் இது போதாதென்று அந்நிய நாடுகளின் மத்தியஸ்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கறாராய் சொல்லி விடுகிறார். சபாஷ், ஜின்னாவும், முஷாரஃபும், லஷ்கர்-இ-டய்பாவும் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. இந்த ஃபார்முலாவை வைத்து இந்தியாவிலிருந்து காஷ்மீரையென்ன, எல்லா மாநிலங்களையும் பிய்த்துப்பிய்த்துப்போட்டு விட முடியாதா என்ன? அந்நிலையில் காஷ்மீரெல்லாம் தம்மாத்துண்டு பிரச்சனையாகி விடாதா? காஷ்மீர் பிரச்சனையைத்தீர்க்க இதைவிட சமீப காலத்தில் வேறு யாரும் சிறந்த யோசனையை முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை.

எனக்கொரு சந்தேகம் எழுகிறது – வலது சாரி என்றால்தான் என்ன? இஸ்லாமிய, கிறித்துவ மதவாதிகளோடு கைகோர்த்தால் அது வலதுசாரித்தனம் கிடையாதோ? இல்லை, அதுவும் வலதுசாரித்தனம்தான் என்றால் நம் நாட்டில் இடதுசாரிகளே கிடையாது என்றல்லவா ஆகிறது. இடதுசாரித்தனத்தில் பழம் தின்று கொட்டை போட்ட இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுதானே, முஸ்லீம் பெரும்பான்மையை காங்கிரஸுக்கு எதிராக உபயோகப்படுத்திக்கொள்லும் விதத்தில், 1969-இல் மலப்புரம் என்கிற முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டத்தையே மதவாத அடிப்படையில் பிரித்து உருவாக்கியது? அக்மார்க் இடதுசாரி மார்க்ஸிஸ்ட் அச்சுதானந்தன்தானே மதானியை விடுதலை செய்ய தூது போனவர்? மாறாக இஸ்லாமிய மதவாதிகளோடு கூட்டு வைப்பது இடதுசாரித்தனத்திற்குள் வந்து விடும் என்றால், அப்படிப்பட்ட இடதுசாரிகளை காஷ்மீர் பிரச்சனையைத்தீர்க்க உபயோகிக்க வேண்டும் என்று பத்ரி சொல்வதாகின்றது. இதற்கு நேரடியாக காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும் என்று எழுதியிருக்கலாம்.

பத்ரி போன்றவர்கள் இப்படி எழுதுவது ஒருவேளை அரசியல் சரித்தனம் என்று நினைத்து எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இது ஆபத்தை நோக்கி இட்டுப்போகும் வடிகட்டின அசட்டுத்தனம் மட்டுமே என்பதை அவர்கள் உணரவேண்டும். பாகிஸ்தானின் சுன்னி இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்தும் வஹாபிய சவுதி அதற்கு உரமாய்த்திகழ்வது குறித்தும் அவர் மேலும் ஆழமாய்ப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, பாகிஸ்தானின் பிரச்சினை என்னவாக இருந்தாலும் அதற்குத் தீர்ப்பெழுதும் பொறுப்பு நம்மிடம் இல்லை என்பதைத் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானத்தின் பிரச்சினையை பாகிஸ்தானின் அரசியலும், அங்குள்ள தலைவர்களும்தான் தீர்க்க வேண்டும். இந்தியாவுடன் பயங்கரவாதப்போர் நிகழ்த்துவது அவர்களது பிரச்சினையைத் தீர்க்க வழி என்று அங்குள்ள தலைவர்கள் முடிவெடுத்தார்கள் என்றால் அது அவர்களது தேர்வு. அந்தத்தேர்வின் விளைவுகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது மட்டுமே நாம் கவனம் செலுத்திச்செய்ய வேண்டிய ஒன்று. அப்படிப்பட்ட பயங்கரவாதப்போருக்கு அந்நாட்டை தொடர்ந்து கடும் விலை தரச்செய்ய வேண்டும். நீண்ட கடற்கரையில் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கலாம் என்று நமக்குத்தோன்றினால், கடற்கரைகளை பலப்படுத்த வேண்டும். கடற்படை ரோந்துகளை அதிகரிக்க வேண்டும். தேவையானால் சில கடலோரப்பகுதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். தோளைக்குலுக்கி விட்டு அதெல்லாம் முடியாது என்று சொல்லும்போதெல்லாம் அக்‌ஷர்தம்மிலும் மும்பை குண்டுவெடிப்பிலும் இறந்த குழந்தைகள் முகம் நம் கண்முன் வந்து நிற்க வேண்டும். வேறு வழியில்லை, எப்போதும் விழிப்புடன் இருப்பதுதான், சுவாசிக்கும் சுதந்திரக்காற்றிற்கு நாம் தரும் விலை.

pak41பாகிஸ்தானின் பிரச்சினை உண்மையில் ஜனநாயகமின்மையோ, காஷ்மீரோ கிடையாது. அதன் பிரச்சினை அது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதத்தில் உள்ளது. பாகிஸ்தான் என்பது அவநம்பிக்கையிலும் வெறுப்பிலும் பழமைவாதத்திலும் உருக்கொண்ட ஒரு தேசியம். ஆனால் சுதந்திரம் கிடைத்த அந்த தினத்தில், அதன் முன் இரண்டு பாதைகள் இருந்தன. ஒரு பாதை மலையேறுவது போன்ற சிரமமான பாதை, அதில் கற்கள் நிறைந்திருந்தன, பாதை சரியாய் இருக்கவில்லை. அந்தப் பாதையில் வழியெங்கும் நவீனக்கல்வி, பரந்த சிந்தனை, தொலைநோக்கு, தொழில்வளர்ச்சி, சிறிய குடும்பம், மக்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகிய கனவுகள் நிறைந்திருந்தன. இன்னொரு பாதையும் இருந்தது: அது மலையிலிருந்து கீறங்குவது போன்ற பாதை. எளிதாய் நடக்க ஏதுவாகப் பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய மதவாதத்தால் போடப்பட்டிருந்த பாதை அது. அப்பாதையின் இருபுறமும் வரலாற்றின் ரத்தங்களும், வெறுப்புகளும், மத அடிப்படைவாதமும், பயங்கரவாத மரங்களாய் வேர்விட்டு வளர்ந்திருந்தன. அதன் முடிவில் இஸ்லாமிய சுவனக்கனவு இருந்தது. பாகிஸ்தானின் முன் அன்று ஒரு தேர்வு இருந்தது. அது தெரிவு செய்தது இரண்டாவது பாதையை. அதில் தெளிவாகவே நடைபோட்டது. விளைவாக, உலகெங்கும் உள்ள அத்தனை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும், அதன் சுவனக்கனவுகளுக்கும் அச்சாணிப்பிரதேசமாய் இன்று அது உருவெடுத்து நிற்கிறது. அது அந்தத் தேர்வின் விளைவு. சுயமாகவே பாகிஸ்தான் விரும்பி ஏற்ற தேர்வு அது. அந்தத்தேர்வின் இன்னொரு விளைவாக வீழ்ந்துவிட்ட ஒரு தேசியமாய் இன்று அது ஆகி விட்டிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் தேசியமோ, அரசியலோ அதுபற்றிக் கவலைப்படுவதில்லை. கவலைப்பட்டால் மதவாதப்பாதையிலிருந்து விலகிச்செல்ல அது ஒட்டு மொத்தமாகத் திரண்டிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட முடிவை அது ஏன் எடுக்க வேண்டும்? இந்தியாவுடன் அமைதி வந்தால் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்? அல்லது இப்படியும் கேட்கலாம்: இந்தியாவுடன் தொடர்ந்து பூசல் கொண்டிருந்தால் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்?

பாகிஸ்தான் என்பது சோவியத் யூனியனிற்கும், அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும், சீனாவிற்கும் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதங்களில் உதவிட வல்ல ஒரு ரவுடி அடியாள் போல. அடியாள் என்று ஏன் சொன்னேன் என்றால், அதன் தலைவனாய் இருப்பது வஹாபிய அடிப்படைவாத சவுதி அரேபியா என்பதால். பாகிஸ்தானின் அத்தனை தலைவர்களும் வஹாபிய சவுதி அரேபியாவிலிருந்து ஆணைகள் பெறுகிறார்கள். எந்தத்தரப்பாய் இருந்தாலும் சவுதி அரேபியா அவர்களுக்கு அடைக்கலம் தருகிறது. பண உதவி செய்கிறது. பாகிஸ்தான் மாஃபியாக்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் சவுதி அரேபியா புகலிடம் தருகிறது. சவுதி அரேபியாவின் கட்டுக்குள் பாகிஸ்தான் இருப்பது அமெரிக்காவிற்கு வசதியாக இருக்கிறது. சோவியத்தை உடைக்கப் பயன்பட்ட இந்த அடியாள் வேறு ஏதாவது ஒரு வீட்டை உடைக்கவும் எதிர்காலத்தில் உதவ மாட்டானா, என்று அது கணக்குப்போடுகிறது. 1989 முதல் 2001 வரை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தூண்டிவிட்ட பயங்கரவாதம் காஷ்மீர் இந்துக்களை ஆயிரக்கணக்கில் காவு கொண்ட போதுதான், இந்தியாவிடம் அமெரிக்க அரசு காஷ்மீரில் மனித உரிமை மீறல் குறித்து பிரசங்கம் நிகழ்த்தி வந்தது. இந்த ரவுடிக்கு பணத்தை அள்ளிக்கொடுக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. பாகிஸ்தானின் முக்கியமான ஏற்றுமதி பயங்கரவாதம் – அந்த பயங்கரவாதம் பில்லியன் கணக்கில் டாலர்களாய் அமெரிக்கா மூலம் அந்நியச்செலவாணியை ஈட்டித்தருகின்றது. ரவுடித்தனத்தை நிறுத்தினால் இந்த ரவுடிக்கு என்ன லாபம் வரப்போகிறது? நாளைக்கே பாகிஸ்தான் மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்தியா ஒரு கோடி ரூபாய் தருகிறது என்று வைத்துக்கொள்வோம் – அதனால் பயங்கரவாதம் நின்று விடுமா, என்ன? இன்னமும் நவீனமாய் பலமடங்கு வலிமையாய்ப் பெருகி அது நம்மீதே திரும்பியடிக்கும் என்பதுதான் நிதர்சனம். இது அவநம்பிக்கை கிடையாது. கண்ணெதிரே நிகழும் உண்மை. டாலர்களை பில்லியன்களாய் கொட்டித் தந்தும் அமெரிக்கா மேலும் மேலும் இந்த ரவுடியின் குறிக்கு இலக்காகித்தானே இன்றும் இருக்கிறது.

பாகிஸ்தானின் உள்ளுறை ஆசை இந்தியாவைத் துண்டாடுவதே ஆகும். பங்களாதேஷ் பிரிந்ததை நிரந்தர அவமானமாக அது கருதுகிறது. பாகிஸ்தானின் இனவாதத்தையும், மொழித்திணிப்பையும், அடக்குமுறையையும் எதிர்த்து பங்களாதேஷ் பிரிந்ததென்று அது கணக்கில் கொள்வதில்லை. இந்தியாவுடன் அமைதி வந்தால் பாகிஸ்தான் தேசியத்திற்கு ஒரு லாபமும் கிடையாது. இந்தியாவுடன் பூசல் தொடர்ந்தால் சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அது உகந்ததே. எனவே பாகிஸ்தான் இந்தியாவுடன் பூசல் கொண்டிருப்பது இந்தியாவின் விருப்பு வெறுப்பு, இந்தியா என்ன செய்கிறது என்ன செய்யவில்லை, எதைக்கொடுக்கிறது எதைக்கொடுக்கவில்லை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது. வேறு விதத்தில் சொல்லப்போனால், பாகிஸ்தான் இந்தியாவுடன் பூசல் கொண்டிருப்பது ஏதோ ஒரு குறிக்கோளுக்கான வழி என்று எண்ணுவது தவறு. பூசல்தான் முதன்மைக் குறிக்கோளே! ஏனெனில் இந்தப்பூசல் வழியாகவே அந்தத்தேசியத்தின் இருப்பு நியாயப்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு நோக்கில் இந்தியாவின் பெரும் தலைவலி பாகிஸ்தான் அல்ல. ஜார்ஜ் பெர்னாண்டஸ் சரியாகவே சொன்னது போல அது சீனா. இந்தியாவைச்சுற்றி வளைக்கும் வகையில் இந்தியாவைச்சுற்றியுள்ள தீவுகளில் தனது தளங்களை நிறுவி வருகிறது. அருணாசலப்பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடுகிறது. பொருளாதாரத்தில் வலுப்பெறும் இந்தியாவோ, அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கி வருவதோ சீனாவின் நில மற்றும் கடல் எல்லை விஸ்தீரண ஆசைகளுக்கு உகந்ததல்ல. இந்தியாவின் மாவோயிஸ்டு கும்பல்களுக்கு தீனி போட்டு வளர்ந்து வருகிறது சீனா. கன்யாகுமரியில் சமீபத்தில் பிடிபட்ட ஜார்கண்ட் மாவோயிஸ தீவிரவாதிகளிடத்தில் பாகிஸ்தானில் அடிக்கப்பட்ட இந்தியக் கள்ளநோட்டுகள் பிடிபட்டன என்ற செய்தியைப் பார்த்தால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனையின் தீவிரம் புலப்படும். இந்தியாவின் ராணுவச்செலவுகள் பாகிஸ்தானை மட்டும் மனதில் கொண்டு அமைக்கப்படுவது அல்ல. பாகிஸ்தான் அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. இந்தியாவின் பொருளாதாரம் வளம் பெற வளம் பெற அதனை ஸ்திரப்படுத்தவும் பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் நம் ராணுவம் பலப்படுத்தப்படுவதே அவசியம்.

பாகிஸ்தான் என்பது வல்லரசுகளின் ஆணுறை. வேலை முடிந்ததும் கழற்றி எறியப்படும், பிறகு வேறு வடிவில் வேறு ஒரு வல்லரசுக்கு உபயோகமாகும். வல்லரசுகளுக்கு ஆணுறை தேவையாய் இருக்கும் வரையிலும், பாகிஸ்தான் அந்த ஆணுறையாகச்செயல்பட உற்சாகமாய் முன்வரும் வரையிலும் இது தொடரவே செய்யும். இப்படிப்பட்ட ஆணுறைகளிடமிருந்து நமது புழைகளை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

சிதிலமடைந்த கூடு தேசமாய் ஆகி வருகிறது பாகிஸ்தான். சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தானம், வடமேற்கு என ஏகப்பட்ட உள்ளுறைப்பூசல்களைக் கொண்ட நாடு அது. பிரச்சினை கைக்கடங்காமல் போனால் மேற்கு நாடுகள் அதனைக் கூறு போடவும் தயங்காது. ஆனால் திறனின்றித் தோற்றவன் கண்டுபிடிக்கும் நொண்டிச்சாக்கு போல, அதற்கான பழியையும் பாகிஸ்தான் இந்தியாவின் மீதே சுமத்தும். பாகிஸ்தானை நேர்வழிப்படுத்தவே முடியாதா என்றால் அதற்கான விடை, அது இந்தியாவின் கையில் கிடையாது, அது இந்தியாவின் வேலையும் கிடையாது என்பதே.

நம்மை நாமே உள்ளேயும் வெளியேயும் பலப்படுத்திக்கொள்வதே நாம் செய்ய வேண்டியது – நோயண்டாமல் நூறு ஆண்டுகள் வாழ வியர்வை பொங்க உடற்பயிற்சி செய்வது போல.

One Reply to “பாகிஸ்தான் உறவு – பத்ரிக்கு ஓர் எதிர்வினை”

Comments are closed.