சம்பளம், டெக்னாலஜி, வெளிநாடு – இது தான் புதிய வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் சொல்லும் காரணம். ஆனால் கொரியா, சீனா கம்பெனியிலிருந்து வருபவர்கள் சொல்லும் காரணம் – சம்பளம் கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை, நான் வேளா வேளைக்கு வீட்டுக்கு போகணும் என்பதுதான்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் புதிய கம்பெனி ஒன்றில், சேர்ந்த சில நாள்களில் பிராஜக்ட் விஷயமாக கொரியா செல்ல வேண்டும் என்றார்கள். என்ன வேலை என்று கேட்டதற்கு “பிராஜக்ட் மேனேஜ்மெண்ட்” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ‘ஹிட்டன் அஜண்டா’ (Hidden Agenda) புரியாமல், நம்மை மதித்து பெரும் பொறுப்பைத் தருகிறார்களே என்று உள்ளுக்குள் புல்லரித்து, நாமும்தான் கொரியா சுற்றிப் பார்த்ததில்லையே என்று அல்ப ஆசையை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்று கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து, ‘சரி’ என்று கிளம்பினேன்.
கொரியா சேர்ந்தவுடன் சில அதிர்ச்சிகள் அந்தக் குளிரில் காத்துக்கொண்டு இருந்தன.
இறங்கிதும் எனக்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலை அடைந்து ”ஒரு மாதத்துக்கு ரூம் வேண்டும்” என்றேன்.
“என்ன ஒரு மாசத்துக்கா?” என்று முதல் போணியாக ஆம்பளை ரிசப்ஷனிஸ்ட் அதிர்ச்சியடைந்தார்.
“ஆமாம்பா. ஒரு மாசத்துக்குத்தான்.” பதில் சொல்லிக்கொண்டே அவர் அடைந்த அதிர்ச்சியைப் பார்த்து நான் அதிர்ச்சியானேன். அவர் ஏன் அதிர்ச்சி ஆனார் என்று கடைசியில் சொல்லுகிறேன்.
அவர் இன்னொருவருக்கு ஃபோன் செய்து ஏதோ பேசிவிட்டு வாய் எல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டே எனக்கு ரூம் தந்தார்.
அடுத்த சில அதிர்ச்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன். சென்னையிலிருந்து எனக்கு முன்னால் வந்த டீம் வேறு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. அந்த ஹோட்டல் ரிசப்ஷனில் கேட்டதற்கு எல்லா ரூமும் பூட்டியிருக்கிறது என்றார்கள்; அதுவும் காலை நான்கு மணிக்கு. புரியாமல் சின்னதாக ஒரு தூக்கம் போட்டுவிட்டு காலை ஏழு மணிக்கு அலுவலகத்துக்கு கிளம்பினேன்.
அலுவலகத்தில் ஆளாளுக்கு கோட் சூட் போட்டுக்கொண்டு குளிருக்கு வேகமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டு இருந்தார்கள். நான் ‘போக்கு லீ” என்பவரைத் தேடிக்கொண்டே போய் ஏதோ ஒரு மாடியில் கண்டுபிடித்தேன். அவர் வேறு ஒரு லீயை அறிமுகப் படுத்தினார். அவருக்கு பாஸ் – பெரிய லீ.
“காலை டிபன் எல்லாம் ஆச்சா?” என்று நலம் விசாரித்தார்.
“இல்லை நேராக இங்கே வருகிறேன்.”
“சாப்பிட்டுவிட்டு வாருங்கள் பேசலாம்,” என்று என்னை சின்ன லீயுடன் அனுப்பினார்.
கேண்டினில் எல்லா இடத்திலும் ஏதோ ரத்த வாசனை அடித்துக்கொண்டே இருந்தது. ஒரு பதார்த்தம் கூட வெஜிடேரியன் கிடையாது.
“நான் வெஜிடேரியன்; அத்தோட எனக்கு இப்பப் பசிக்கலை,” என்று வயிற்றுகுள் கட முட சத்தம் கேட்டாலும் தப்பிக்கலாம் என்று பார்த்தேன்.
“கவலைப்படாதீர்கள், நாங்கள் நாய், பாம்பு இவை இரண்டும் இங்கே சமைப்பதில்லை,” என்றார் சீரியஸாக.
“வெஜிடேரியன் என்றால் தழைகள்” என்று அவர்களுக்கு விளக்கினேன். உடனே ஒருவரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார். கராத்தே படத்தில் சண்டைக்கு முன்னால் வணங்குவதை போல வணங்கிவிட்டு, பத்து நிமிடத்தில் மூடிய தட்டை என் முன்னால் வைத்துவிட்டு திரும்பவும் வணங்கிவிட்டுச் சென்றார். தட்டைத் திறந்து பார்த்தால் உள்ளே சின்ன கீரைக்கட்டு முகத்தில் குத்துவிட்டது.
மீண்டு(ம்) அலுவலகத்துக்குச் சென்றபோது அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. பெரிய லீ என்னை சாப்பிட்டாயிற்றா என்று கேட்டுவிட்டு, “வாருங்கள் பிராஜக்ட் பற்றி முதலில் பேசலாம்,” என்று ஒரு பெரிய ரூமிற்கு அழைத்துக்கொண்டு போனார். ரூமில் பெரிய வழவழப்பான வட்ட வடிவ மேஜை இருந்தது. மேஜை மட்டும் தான் வழவழப்பாக இருந்தது; அவர் பேச்சு கரடுமுரடாக இருந்தது.
பிராஜக்ட் பற்றி பேச ஆரம்பித்தவர், “உங்க டீம் சுத்த தண்டம், இதுவரை எதுவும் உருப்படியாகச் செய்யவில்லை…” என்றெல்லாம் என் டீமை எனக்கே அறிமுகப்படுத்தி, “சொன்ன டயத்துக்கு முடிக்கவில்லை என்றால் எங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்!” என்று கோபமாகக் கத்திவிட்டு, கையில் இருந்த அவர் நோட்டுப் புத்தகத்தை என் மீது வீசி எறிந்தார். நல்ல வேளை, ரூம் பெரிதாக இருந்ததால் என் மீது படவில்லை.
சரி என் டீமை பார்க்கலாம் என்று விசாரித்துக்கொண்டு அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். எல்லோரும் தூக்கக் கலக்கமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். டிசிபி ஐபியில் என்ன பிரச்சனை என்று முதல் நபரிடம் கேட்டேன்.
“நான் பல்தேய்த்து இரண்டு நாள் ஆச்சு. குளித்து நான்கு நாள் ஆச்சு,” என்றார்.
எல்லோர் முகத்திலும் திரும்ப இந்தியா போவோமா என்ற கவலையைப் பார்க்க முடிந்தது. இதைவிட அதிர்ச்சி எனக்கு மாலை காத்திருந்தது.
நான்கு மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்படும் சமயம், எங்கள் டீம் உறுப்பினர் ஒவ்வொருவர் பின்புறமும் நாற்காலி போட்டுக்கொண்டு ஒருவர் என்று வந்து உட்கார்ந்துக்கொண்டார்கள். என்ன என்று விசாரித்ததில், “நாங்கள் ஹோட்டலுக்குப் போய்விடாமல் இருக்க இவர்கள் காவல்!” என்றார். கொத்தடிமைகளை கொரியாவிலிருந்து எப்படி மீட்பது என்று புரியாமல் விழித்தேன்.
துவாரபாலகர்கள் பொழுதுபோகாமல், கையில் வீடியோ கேம், அல்லது அக்குபஞ்சர் பந்தை வைத்துக்கொண்டு அழுத்திக்கொண்டு இருந்தார்கள். காலை 6 மணிக்கு எல்லோரையும் காரில் ஏற்றிக்கொண்டு ஹோட்டலில் விட்டுவிட்டு குளித்து முடித்தபின் காலை எட்டரை மணிக்கு வந்து கதவைத் தட்டி திரும்ப அலுவலகத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், அல்லது விஜயகாந்தை கூப்பிடலாமா என்று கூட தோன்றியது. நான் என் அலுவலகத்துக்கு போன் செய்து இப்படி நடக்கிறது, யாராவது பெரிய மேனேஜர் கட்டாயம் இங்கே வர வேண்டும் என்றேன். “அதுக்குத்தானே உன்னை அனுப்பினோம் யூ ஹாண்டில் த சிச்சுவேஷன்,” என்று இங்கே நடப்புப் புரியாமல் பேசினார்கள்.
லீயிடம் போய் பேசினால் ஏதாவது நடக்கும் என்று அவர் ரூம் உள்ளே சென்றபோது “என்ன ஸ்டேடஸ்?” என்றார்.
நான் “சில பேர் இந்தியா செல்ல வேண்டும், அவர்களுக்கு பதில் வேறு சிலர் வருவார்கள்,” என்றேன்.
“இவர்கள் வந்த வேலையை முடித்துவிட்டு தாராளமாக இந்தியா போகட்டும், யார் வேண்டாம் என்றது?” என்றார்.
இவரிடம் பேசிப் பயனில்லை என்று திரும்பவும் வந்துவிட்டேன்.
நிறைய பட்டுவிட்டதால், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று சின்ன வயதில் படித்த கதை ஞாபகத்துக்கு வந்தது. ஒரு பிளான் போட்டேன்.
பிளான் இதுதான். ஐந்து டாக்ஸியை புக் செய்து அலுவலகத்துக்குக் கீழே நிற்க வைத்தேன். சரியாக மாலை 9 மணிக்கு ஒருவன் எழுந்து நிற்க வேண்டும், உடனே எல்லோரும் எழுந்து நேராக லிப்ட் நோக்கிச் சென்று இறங்கி கீழே நிற்கும் டாக்ஸியில் ஏறிக்கொண்டு ஹோட்டலில் போய் தூங்க வேண்டும்.
அன்று, ஒருவர் நிற்க எல்லோரும் கும்பலாகப் போக காவல்காரர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடினார்கள். அடுத்த நாள் யார் எழுந்து நிறக வேண்டும், என்ன டைம் என்று மத்திய உணவு போது முடிவு செய்வோம். இப்படியே ஒருவாரம் செய்ய, காவல்காரர்கள் கழண்டுகொண்டார்கள்.
நாங்களும் மூன்று மாசத்தில் ஏதோ வேலையை முடித்துவிட்டுக் கிளம்பினோம். போகும் போது லீ என்னை கூப்பிட்டு, அவர் மேஜை டிராவிலிருந்து ஒரு கீ செயினை எனக்குப் பரிசாகக் கொடுத்தார். கொரியா சென்ற ஞாபகத்தைவிட அந்த அனுபவத்தின் ஞாபகமாக வைத்திருக்கிறேன்.
ஹோட்டலை விட்டு காலி செய்யும் போது, கையில் இருக்கும் சில்லறையை எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல், ஹோட்டலில் இருக்கும் வெண்டிங் மிஷினில் போட்டு ஏதவாது புளிப்பு மிட்டாய் வந்தால் எடுத்துக்கொண்டு போகலாம் என்று உள்ளே போட்ட போது ஏதோ சின்னச் சின்னப் பொட்டலமாகக் கொட்டியது. சுவிங்கமாக இருக்குமோ என்று ஒன்றை திறந்து பார்த்தேன் – காண்டம்!
அப்பறம் விசாரித்ததில், நான் தங்கியிருந்த ஹோட்டலில் பொதுவாக எல்லோரும் மணிக் கணக்கில் தான் ரூம் போடுவர்களாம். வந்தவேலை முடிந்ததும் கிளம்பிவிடுவார்கள். ஒரு மாதம் என்று சொல்லிவிட்டு மாதக் கணக்கில் இருந்த என் திறமையை பார்த்து “அடுத்து எப்ப வரீங்க?” என்றார் ரிசப்ஷனிஸ்ட் சிரித்துக்கொண்டே!
2 Replies to “கை நிறைய காண்டம்”
Comments are closed.