ஆயிரம் தெய்வங்கள்

தெய்வங்களின் கதைகள் வரலாற்றுடன் தொடர்புள்ளவை. உலகத்தில் நாகரிகங்கள் தோன்றியபோது தெய்வக்கதைகள் புதிய மெருகு பெற்றன. தெய்வங்களின் எண்ணிக்கை பெருகிய காலகட்டமும் உலக நாகரிகங்களுக்கும் தொடர்பு உண்டு. சிந்துசமவெளி நாகரிகம் தோற்றுவித்த நகரங்கள் இன்று இல்லை. அதே காலத்தில் புனையப்பட்ட ரிக்வேதம் உள்ளது. ரிக்வேதகத்திலும் அதன் பின் எழுதப்பட்ட சதபத பிராமணத்திலும் உள்ள குறிப்புகள் சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புள்ளதாக எண்ணப்படுகிறது. எகிப்திய நாகரிகம் அல்லது நைல்நதி நாகரிகம் மறைந்துவிட்டது. ஆனால் பிரமீடு இலக்கியங்கள் உள்ளன. பாபைரஸ் தாள்களில் எழுதப்பட்ட / வரையப்பட்ட சித்திரங்கள் ஹீரோ கிளைஃபிக் (புனிதமான சித்திர எழுத்துக்கள்) எகிப்திய தெய்வங்களை நினைவுபடுத்தும். இதுபோலவே சுமேரியா, மெசப்பட்டோமியா பாபிலோனிய நாகரிகம் அழிந்துவிட்டது. ஆனால் மில்ஆஃப்தி டில்முன் எனுமா எலிஷ், ரஸ்ஷம்ரா போன்ற ஹமுராபி இலக்கியங்கள் அழியவில்லை. கிரேக்க நாகரிகம் அழிந்துவிட்டது. ஹிசையத்தின் தியோகோனியும் ஹோமரின் இலியத் – ஒடிஸ்ஸேயும் அழியவில்லை. இன்னும் சொல்லவேண்டிய உலகத்தின் நாகரிகங்கள் அழிந்துவிட்டன. ஆனால் அதே காலத்தின் பழைய இலக்கிய வடிவங்கள் அழியவில்லை. இழந்துவிட்ட நாகரிகங்களின் இறவாக்கதைகளையெல்லாம் பதிவு செய்து கொண்டு ஒரு கணக்குப் போட்டால் தெய்வங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேலாகவும் இருக்க வாய்ப்புண்டு. ஆயிரந்தெய்வங்கள் என்பது கூட தவறான குத்துமதிப்பு.தெய்வங்கள் ஆயிரம் ஏன்? பத்தாயிரமாகக் கூட இருக்கலாம்.

இனிமேலாவது சரியான புள்ளிவிவரத்தை வழங்க உலகில் எதுவும் ஒரு பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் சென்று சர்வே செய்வது நல்லது. ஆயிரமோ, பத்தாயிரமோ, லக்ஷமோ எவ்வளவாயிருந்தாலும் தெய்வம் என்பது உண்மையோ, புனைவோ, இதன் தோற்றம் பற்றிய புராணம் சுவாரசியமானது. உலகம் முழுவதும் தலைமுறை தலைமுறையாக பல லட்சக்கணக்கான எழுத்தாளர்களுக்குக் கருப்பொருள் வழங்கி வாழ்வளித்துள்ளது. வேதவியாசரில் தொடங்கி இக்கால கண்ணதாசன், வாலி, பாலகுமாரன் வரை வாழ்வளித்த தெய்வங்களை மறக்க முடியுமா? இப்படிச் சொல்வதிலும் பிரச்சினைகள் உண்டு. எழுத்தாளர்கள் அல்லது ரிஷிகளுக்கு மட்டுமா? ரிஷிகள் என்றால் அகத்தியர், தேரையர், காப்பியர், கபிலர், சித்திரனார், இளங்கோ, சாத்தனார், கம்பர் போன்ற எண்ணற்ற தமிழ் மாமுனிகளுக்கும் அல்லது சித்தர்களுக்கும் தெய்வீக அருள் உள்ளது.

காளிதாசன் மட்டுமா? கம்பதாசனும், பாரதியும் கூட தேவியின் அருள் பெற்றவர்கள். பக்தர்கள் என்ன ஏமாந்தவர்களா? தினம் தினம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் திருப்பதி சென்று புத்தனைப்போல் சிரத்தை மழித்துக் கொள்வோருக்கு வெங்கடாசலபதியும் பழனி முருகனும், திருத்தணியில் வாழும் கந்தவேல் முருகனும், திருப்பரங்குன்றத்திலும், பழமுதிர்ச்சோலையிலும் திருச்செந்தூரிலும், சுவாமி மலையிலும், மருத மலையிலும் புன்னகை பூத்தவண்ணம் ஸ்ரீவள்ளியுடனும் தேவயானையுடனும் பிரச்சினையே இல்லாமல் வாழும் கந்தவேள் முருகனாகட்டும், சிக்கலில் சோமஸ்கந்தராக தரிசனம் தரும் தமிழ்க் குழந்தை தெய்வமாகட்டும் கோடானுகோடி மக்களுக்கு மொட்டை போட்டவர்கள் மொட்டை போடாதவர்கள் என்றெல்லாம் வித்தியாசம் பாராட்டாமல் வாழ்க்கையில் ஒரு செக்யூரிட்டி வழங்கவில்லையா? திராவிடக் கழக யூனிஃபார்மை அணிந்துகொண்டு, ஐயப்ப தரிசனம் செய்யும் பக்தர்களையெல்லாம் ஐயனார் காப்பாற்றவில்லையா? இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்டவனை நம்பும் மாபெரும் பக்தி வெள்ளத்திற்கு மூல கோத்திரம் எங்குகிட்டும்? இது ஏன்?

தற்பெருமை மிகுந்த தமிழர்கள் சொல்லிலும் பேச்சிலும் ”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் மூத்தகுடி” என்று கூறுவதுண்டு. தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் வாழவிட்டுவிட்டு ”மூத்தகுடி” என்று பெருமை பேசுவதில் பயன் உண்டா? கல்தோன்றி மண்தோன்றாக்காலம் என்றால் அது எது? நன் அறிந்தவரை கற்காலத்திற்கு முற்பட்ட காலம் பனிக்கட்டிக்காலமே. KEAGEதென்துருவம் வடதுருவமும் உலகைக் கவ்வியிருந்தது. இது லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலை. அதாவது பெரும்பாலான உலகம் ஆர்ட்டிக் – அண்டார்ட்டிக் பனிமலைகளாயிருந்தன. சுமார் 15000ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி கி.மு.6000 வரை ஆர்ட்டிக்-அண்டாட்ட்டிக் நிலப்பரப்பு மெள்ள மெள்ளக் குறைந்தது. கடல்மட்டம் 600 அடி வரை உயர்ந்தது. இப்படிப்பட்ட காலத்தை பின்வாங்கிய கடைசிப் பனிக்கட்டிக் காலம் (Retreat of the Last Ice Age) என்கிறோம். இதன் பின்புதான் உலகநாகரிகங்கள் தோன்றி மாபெரும் நதிச்சமவெளிகளில் உணவு உற்பத்தியானது.

ஆகவே தெய்வங்களின் முதல் நிலைத் தோற்றத்தை தொல்லியல் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட பனிக்கட்டிக்காலத்தில் வாழ்ந்த மூத்தகுடி மனிதன் மிருகங்களையும், பறவைகளையும் வேட்டையாடி உண்டான். பனிக்கட்டிக் காலத்தின் மூத்தகுடி மனிதர்கள் பிரான்ஸ்-ஸ்பைன் பகுதிகளில் உள்ள குகைகளில் வாழ்ந்தனர் என்பதற்கு வரலாற்றில் முதல் ஆதாரம் லாஸ்கோ (Lascaux) ஓவியங்கள். இதைக் கண்டுபிடித்த ஆபேபிரியுல் ஓவியக்கலைஞர்களின் பாராட்டைப்பெற்ற பிரெஞ்சு பாதிரியார். ஏனெனில் இதுவே ஓவியக்கலையின் முதல் படைப்பு. அப்படி அந்த ஓவியத்தில் என்ன உள்ளது? அதன் அர்த்தம் என்ன? மண்டையைப் பிய்த்துக் கொண்டு ஆய்வு செய்து இவ்வாறு தீர்மானித்தார்கள்.

லாஸ்கா ஓவியம்
லாஸ்கோ ஓவியம்

கும்மிருட்டான குகைகளில் தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு கிடைத்த வெளிச்சத்தில் மிருகங்களின் உருவங்களை ஒன்றன் பின் ஒன்றாய் ஒரு ஓவியத்தின் மீது அடுத்த ஓவியமும் அதன் மேலேயே அடுத்த ஓவியமும் வரையப்பட்டுள்ளது. படங்கள் மீது ஈட்டிக் காயங்களும் அம்புக்காயங்களும் உள்ளன. மான், குதிரை, மாடு, காண்டாமிருகம் என்று ஒன்றின் மீது ஒன்று வரைந்து தள்ளப்பட்டதின் நோக்கம் ஒரு வகையான வழிபாடு. வேட்டையில் இறந்த மிருகத்தின் ஆவியாக எண்ணப்பட்டிருக்கலாம். இறந்தபின் மிருகங்களின் ஆவி பேயாகச் சுற்றி ஆதிமனிதனை பயமுறுத்தியிருக்கும். இறந்த மிருகங்களைப் பரிசுத்த ஆவியாக்கி வழிபட்ட மூத்தகுடி இந்த வழிபாட்டின் மூலம் பசியில்லாமல் வாழ மேலும் வேட்டையில் மிருகங்கள் வேண்டும் என்ற நோக்கத்தில் பனிக்கட்டிக் காலத்திலேயே தெய்வமாக்கப்பட்ட மிருகங்களும் பட்சிகளும் பின்னர் உணவு உற்பத்தி செய்த காலகட்டத்தில் எகிப்திய தெய்வங்களாயிருக்கலாம். இந்திய நாகரிகத்திலும் மிருகங்கள் பட்சிகள் தெய்வமாக்கப்பட்டுள்ளன. கிரேக்க புராணங்களிலும், சுமேரிய புராணங்களிலும் மிருக பசு பட்சினி வழிபாடு உள்ளது. இப்படியெல்லாம் புராணவியல்-தொல்லியல் அறிஞர்கள் லாஸ்கோ ஓவியங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

ஆயிரந்தெய்வங்கள் உண்டென்று சொல்லி அலையும் அறிவிலிகள் உலகம் முழுவதும் இருந்தார்கள். ஹிந்துமத பிராணங்களில் பசு-பட்சிணிகள் தெய்வீகப்படுத்தப்பட்ட முறையும் புராதன நாகரிகங்களில் அதை தெய்வீகப்படுத்தப்பட்ட முறையும் வேறுபடுகிறது. ஹிந்து மதம் நெகிழ்வானது. ”ஒன்றே குலம் ஓருவனே தேவன்” என்ற கருத்துக்குரிய விளக்கத்தில் ஆயிரந்தெய்வ வழிபாடுகள் நியாயப்படுத்தப்பட்டனவே தவிர, புறக்கணிக்கப்படவில்லை. கிருஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பு கிரீஸ், ரோம் நாகரிகம் வழங்கிய ஸீஸஸ், வீனஸ், ஜூபிட்டர், ஹெர்ருலஸ், எத்தினா, ஹீரா, ஹெர்மஸ், போன்ற பல தெய்வங்கள், பல வழிபாடுகள் எல்லாம் போற்றப்பட்டு அவை பாகன் (Pagan) என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. பின்னர் ரோம் கிருஸ்தவ மதத்தைத் தழுவியதும் மாமன்னர் கான்ஸ்டன்டைன் ஆதரவுடன் வன்முறை தலைதூக்கியதால் கிரீஸ்-ரோம் நாட்டுப்புராதன வழிபாடுகள் அழிந்தன.

ஏசுபிரான் நல்லவர். மனிதனாகப் பிறந்து தெய்வமானார். ஏசுபிரான் வாழ்ந்த போது உலகம் ஏசுவை ஏற்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டார். ரத்தம் சிந்துவதற்காக மதம் ஏற்படவில்லை. கிருஸ்துவ மதம் ஏற்கப்படுவதற்கு முன்பு ஏசுவைப் பின்பற்றியவர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். கிருஸ்துவமதம் ஏற்கப்பட்ட பின்னர் பாகனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ரோமசாம்ராஜ்யத்தில் நிகழ்ந்த திருவிளையாடல்கள் நிறைய உண்டு. மதத்தை அரசியலாக்கும் பண்பாட்டை முதலில் ஏற்படுத்திய மன்னன், கான்ஸ்டன்டைன். ஏசுவைப் பின்பற்றிய கிருஸ்தவர்கள் ரோமாபுரி மன்னர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதால் அம்மதம் மேலும் வளரக்காரணமாயிற்று. மக்கள் சக்தியால் ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் வயலின் வாசித்ததாகச் சொல்வார்கள். மக்கள் சக்தி காரமாகவே மன்னன் கான்ஸ்டன்டைன் தன்னை கிருஸ்துவனாகவும், ஏசு பக்தனாகவும் நடித்து ரோம சாம்ராஜ்ஜியத்தையே மதச்சார்புள்ள நாடாக்கியதோடு நில்லாமல் பழைய பாகன் வழிபாட்டுத்தலங்களையும் நிர்மூலமாக்கித் தன்னுடைய மதச் சார்பைக் காட்டிக் கொண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நாம் முதலில் கூறியது போல் விவசாயத்தை மையமிட்ட பழைய நாகரிகங்களுக்கும் வழிபாட்டுக்கும் பின்னிப் பிணைக்கப்பட்ட உறவுகள் உண்டு. அந்த உறவுகளில் அரசியல் நுழைந்து மதம் ரத்தத்தால் எழுதப்பட நிலைக்கு ஆளாயிற்று. கி.மு,வை விட கி.பி.யில் தான் மதங்களில் அரசியல் வந்தது. ஆயிரம் தெய்வங்களை கோடிக்கணக்கான மக்கள் கும்பிட்டபோது பிரச்சனை எழவில்லை. அது கி.மு.வின் பொற்காலம். ஆனால் ”ஒரே கடவுள்” என்பது உண்மையில் ஒரு மையஅதிகார அரசியலைப் பொருட்படுத்தியதால் மக்கள் துன்பமுற்றனர். ஆயிரம் தெய்வங்களுடன் ஆயிரத்தி ஒன்றாக ஏசுவும், ஆயிரத்து இரண்டாக நபிகளும் இருந்திருந்தால் உலகில் குழப்பம் வராது. இந்தியாவில் தசாவதாரம் நிகழ்ந்தது. ரத்தம் சிந்தப்படவில்லை. ஒரு மதம் ஒரு கடவுள் என்று திணிக்கப்பட்ட போதுதான் இதர நாடுகளில் பிரச்சனைகள் வந்தன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சொர்க்கம் – நரகம் என்ற கருத்துகள் வந்தன. இக்கருத்து எல்லா நாகரிகங்களுக்கும் பொது. இறப்பை ஏற்காதவர்கள் இன்றும் உள்ளனர். அன்றும் உள்ளனர். பனிக்கட்டிக்காலத்தில் மதத்தின் மூலவேர் லாஸ்கோ ஓவியத்தில் தென்பட்டது. மிருக வழிபாட்டின் தொடக்கம். வேதகால ஆரியர்கள் கடாவெட்டி யாகம் செய்தார்கள். தானியங்களை அக்னிக்கு அதாவது தீயிலிட்டார்கள். இதெல்லாம் ஏன்? சொர்க்கத்தில் வாழும் தேவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் உணவு படைக்கிறார்கள். காக்கைகள் வடிவத்தில் தேவர்கள் வந்து உணவுப் பிண்டத்தை உண்ணுவதாக உள்ள ஐதீகம் இன்னமும் தொடர்கிறது. இப்போது அம்மனுக்குக் கடாவெட்டும் சடங்கு முற்காலத்தை விட அதிகம். முன்பு திருவிழாவின் போது குறிப்பாக ஆடி மாத அம்மன் வழிபாட்டில் அம்மன் அருள் வாக்குப் பெற மருள் ஆடக்கடாவோ சேவலோ வெட்டுவதுண்டு. இப்போது நினைத்தால் போதும், திண்டுக்கல் ஆத்தூர் மலை மீதுள்ள கடையாண்டி முனீஸ்வரருக்கு மக்கள் கடாவுடன் கிளம்பிவிடுகிறார்கள். கூடவே டாஸ்மாக் பானம். சாமியைச் சாக்கிட்டுக் கடா வெட்டப்படுகிறது. தேர்தல் சமயத்தில் சடையாண்டி பக்தர்களுக்கு நித்தம் நித்தம் கடா விருந்துண்டு. இல்லாத இடம் தேடிப் பழைய நாகரிக மனிதன் தேடி வந்த வழியைப் பற்றிய நமது சொல்வனம் சற்று திசை மாறிவிட்டது.

ஹோரஸ்
ஹோரஸ்

எகிப்து நாகரிகம் ஏற்பட்ட காலத்தில் உள்ள சொர்க்கத்தை நிறுவியவர் பரோ மன்னராக இருக்கலாம். சாற்றப்பட்ட தெய்வங்களில் ஒன்று ஹோரஸ். மற்றொன்று ‘ரி’. ஹோரஸ் (HORUS) உண்மையில் பரோவின் சேவகனாயிருந்த ராஜாளிப்பறவை. இது விண்ணைக்குறிக்கும். ஹோரசிலிருந்து ஹொரைசான் (HORIZAN) என்ற சொல் உருவானது. இது சொர்க்க வாசல். எகிப்தின் ‘ரி’ கடவுள் சூரியபகவான். எகிப்திய சொர்க்கம் படகுப்பயணமாகும். மஞ்சட் பகல் படகு தெய்வம். மெசட் இரவுப் படகு. இந்தியப் புராணத்தில் வரும் சொர்க்கம் செல்ல வானரதம் வரும். அந்த வானரதத்தை அசுவின் குமாரர்கள் (இரட்டைக் குதிரை) ஓட்டுவது போல் எகிப்திய சூரியருக்கு இரண்டு படகுகள். ஹீரோ கிளைஃபில் படகுச் சித்திரங்கள் நிறைய உண்டு. பிரமீடு குகைகளில் காணலாம். மரணத்தை ஒப்புக்கொள்ளாத காரணத்தினால்தான் பிரமீடுகள் கட்டப்பட்டு மன்னரின் சவம் கெட்டுப் போய்விடாமல் மம்மிகளாகக் காப்பாற்றப்பட்டன. பிரமீடுகளே மாபெரும் கோவில்களாயுள்ளன. இந்தப் பிரமீடுகளில் எத்தனை தெய்வங்கள் உள்ளன?

பிரமீடுகளில் மட்டும் வரலாற்றுச் சான்றுகளானாலும் எகிப்து – அதாவது நைல் நதிச் சமவெளியில் வழங்கப்பட்ட தெய்வங்களின் பட்டியல் சிறிது அல்லம் அகர வரிசைப்படுத்தினால் அட்டும், அட்டன், அமுன், அமுனட், அஃபோபிஸ், அனத், அஸ்தார்த்தே, உர் அட்டும், எஜோ(பாம்பு), ஐசிஸ், ஓசரிஸ், கெக், கைக்கட், கெப், செத், சஹ்மத், (சிம்மவாகினி), டெஃப்நட், தாத், தோயரி, நட், நன், நானட், நியு, நியுயட், பா, பிதா, நெப்தைஸ், பெஸ், மாத், மோத், மின், ரி, ரிஹராக்கி, ஹத்தார், ஹராக்தி, ஹெஹ், ஹெவாட், ஷூ, ஹேரெஸ்.

மெசப்பட்டோமியா என்று கூறப்படும் புவியியல் பகுதி இன்றுள்ள மேற்காசிய நாடுகள். ஈரான், ஈராக், துருக்கி, சிரியா, இஸ்ரேல், லெபனான், சவூதி என்று வைத்துக் கொள்வோம். எகிப்திலும் சரி, மெசப்பட்டோமியாவிலும் சரி அல்லா வருவதற்கு முன் ஆயிரந்தெய்வங்கள் உண்டு. மெசப்பட்டோமியாவின் சிறப்பு தில்முன் என்ற சுமேரிய சொர்க்கம். இந்த தில்முனில் என்கியும் தூயகன்னியும் உறங்குகின்றனர். தில்முனில் காகம் கரைவது இல்லை. ஆந்தை அலறுவது இல்லை. ஆட்டுக்குட்டியை ஓநாய் உண்பதில்லை. சிங்கம் யாரையும் கொல்லாது. சாகாவரம் பெற்றவர்கள் மட்டுமே தில்முனில் வாழமுடியும். இந்தப் பகுதியில் அப்சு, இஷ்டார், என், என்லில், என்கி, என்ஷர், எரிஷ்கிகன், நம்மு, நின்ஹர்சக், நின்து, நின்மா, நின்சிகில்லா, நின்சிக், நின்துர்ரா, நின்மு, உட்டு, தில் காமேஷ், சின், தையாமத், மர்துக் என்று ஏராளமான தெய்வங்கள் தில்முனில் வாழ்ந்தனர்.

நம்மில் பலருக்கு ஒலிம்பிக் விளையாட்டு தெரியும். ஆனால் கிரேக்க வரலாறில் ஒலிம்பிக் என்றால் அது தெய்வத்தின் தெய்வமான ஸீயெஸ் உருவாக்கிய சொர்க்கம். மோசஸ் உருவாக்கிய ஜெஹோவா கிரேக்கதேசத்தில் ஸீயெஸ்ஸாக மாறியதாகவும் கருத்து உண்டு. எனினும் ஸீஸஸ் உருவாக்கியது இரண்டாவது ஒலிம்பிக் என்றும், முதல் ஒலிம்பிக் டைட்டன்களால் உருவானது என்றும் கூறப்படலாம். டைட்டன்களின் தாய் ஜெயியா (Gaea) ஒரு பூமிமாதா. இதன் திரிபுதான் ஜீயோ (Geo) இது மண். யுரேனஸ் விண். ஜெயியாவுக்கும் யுரேனஸூக்கும் பிறந்தவர்கள் டைட்டன்கள். இவர்கள் பன்னிருவர். ஒஷியானஸ், கோயஸ், கிரியஸ், ஹைபீரியன், அய்யா பீட்டர்ஸ், குரோன்ஸ். இந்த ஆண் டைட்டன்கள் அசுர தெய்வங்கள். இவ்வாறே ஆறு பெண் டைட்டன்களும் உண்டு. திய்யா, ரியா, தெமிஸ், மணிமோசைன், போயபி, திதைஸ். பின்னர் இவர்களின் வாரிசுகள் டைட்டன் எண்ணிக்கையை உயர்த்தின. இரண்டாவது தலைமுறையில் விண்ணின் வாரிசுகுளும் கடலின் வாரிசுகளும் கொண்ட உறவுகளில் ஒலிம்பிக்(சொர்க்கம்) உருவானது. டைட்டன்கள் அசுரர்களாயிருந்து பின்னர் தேவர்களாயிருக்கலாம். உலகத்தின் பல தேசப்புராணங்களை வைத்துப் பார்த்தால் மேற்கு ஆசிய நாடுகளை இஸ்ரேல், எகிப்து, லெபனான், சவூதி, ஈரான், ஈராக், துருக்கி, பாபிலோனியா- நாடுகளில் நிலவிய தெய்வப் போர்களின் ஒரு பகுதி இந்தியாவுக்கு இறக்குமதியாயிருக்கலாம். தேவர் – அசுரர் போராட்டம் உலகப்பொது. மற்றொரு பகுதி கிரேக்க தேசம் சென்றிருக்கலாம். கிரேக்க தெய்வங்களும் கதைகளும் ரோமாபுரி தெய்வக்கதைகளும் ஒன்று. பெயர் மற்றும் வேறுபடும். கிரேக்க ஸீயெஸ் ரோமில் ஜூபிட்டர், எத்தினா மினர்வாவாக மாறியது. ஹெர்மஸ் மெர்க்குரியானது. அஃப்ரொடைட்டே வீனஸ்.

உண்மையில் ஒலிம்பிக் ஒரு தேவாசுர யுத்தமே. முதல் மரபு டைட்டனான குரோனஸ் தாயாகிய ஜெயியாவின் ஆணையை மேற்கொண்டு தந்தையாகிய யுரேனஸை வீழ்த்தியது முதல் ஒலிம்பிக் யுத்தம். குரோனஸங் மீது தாய்க்கு கோபம் வந்தது. யுரேனஸ் பிடித்துவைத்திருந்த புத்திரர்களை குரோனஸ் விடுவிக்கவில்லை. அடுத்த கட்டமாக குரோனசின் மகனாகப் பிறந்த ஸீஸஸ் பிரிட்டியின் உதவி கொண்டு குரோனசை வீழ்த்தியது இரண்டாவது ஒலிம்பிக். இதில் இரண்டாவது தலைமுறை டைட்டன்கள் பங்கேற்றனர். புராண அடிப்படையில் டைட்டன்களின் யுத்தத்தைக் குறித்த ஒலிம்பிக் பிற்காலத்தில் வீரவிளையாட்டாகி அதன் பின்னர் இன்றைய தகுதியைப் பெற்றுள்ளது. ஒலிம்பிக் யுத்தத்தில் தோற்ற தெய்வங்களுக்கும் வென்ற தெய்வங்களுக்கும் ஒலிம்பியாவில் (சொர்க்கம்) இடம் உண்டு. கிரேக்க புராணமரபின்படி இந்தப் பொன்னகரத்தில் சாகாவரம் பெற்ற தெய்வங்களுக்கு மட்டுமே அனுமதி. தொல்லியல் அடிப்படையில் கி.மு.5-ம் நூற்றாண்டுக்குரிய சிதைந்த ஒலிம்பியா நகரில் புராணச் சான்றுகளுக்குரிய விடை தேடப்படுகிறது. தெற்கு கிரீஸில் பிலோப்போனஸ் மலைத் தொடரில் ஆல்ஃபீயஸ் நதியும் கிளாடியஸ் நதியும் சங்கமமாகும் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஒலிம்பியா உண்மையில் கிரீஸின் பொன்னகரமாக மதிப்பிடக் கூடிய இயற்கைச் சூழலைப் பெற்றுள்ளது. தெய்வங்கள் ஆயிரம் + என்பதால் உலக தெய்வங்களை அடுத்த இதழில் சந்திப்போம்.