அத்தனை கேஸும் முத்தின கேஸ்!

நேற்று பேப்பரில் ஒரு பயங்கரச் செய்தி: நம் கையிலுள்ள மொபைல் போனில் ஏராளமான பாக்டீரியாக் கிருமிகள் அப்பிக் கொண்டிருக்கிறதாம். ஒரு சராசரி மொபைல் போனில் வசிக்கும் கிருமிகளின் எண்ணிக்கை, நம் டாய்லெட் ஸீட்டில் இருப்பதை விட அதிகமாம்! ‘சேச்சே, இனி ஃபோனைக் கொஞ்சம் தள்ளி வைத்தே பேச வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மற்றொரு படு பயங்கரச் செய்தி: நம் கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கிருமிகள், டாய்லெட் ஸீட்டில் இருப்பது போல ஐந்து மடங்காம். கீ போர்டைத் தொட்ட விரல்களால் நாக்கில் எச்சில் தொட்டுப் புத்தகம் புரட்டினால் ஃபுட் பாய்சனிங்தானாம். இந்த வயிற்று வலிக்கு க்வெர்ட்டி டம்மி என்று அமெரிக்கத்தனமாக ஒரு பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.

அடுத்ததாக ஏதாவது ஒரு பத்திரிகையில், டாய்லெட் ஸீட்டை விட அதிகமான கிருமிகள் நம் டூத் ப்ரஷ்ஷில் இருப்பதாக எழுதிவிடப் போகிறார்களே என்று கவலையாக இருக்கிறது. அப்படி ஏதாவது செய்தி கண்ணில் பட்டால் உடனே நான் முற்றிலும் நிறுத்திவிடுவேன் – பல் தேய்ப்பதையா, பத்திரிகை படிப்பதையா என்பதை மட்டும்தான் இன்னும் முடிவு செய்யவில்லை.

ஏற்கனவே இப்படி ஒரு முற்றுகைச் சூழலில் மனிதன் வசிக்கும்போது, மனோதத்துவ டாக்டர்களிடமிருந்து மற்றொரு மகா பூச்சாண்டி: குழந்தைகள் பலூன் வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிப்பது முதல், உபரியாக நாலு மிளகாய் பஜ்ஜி தின்றுவிட்டு அஜீரணத்தில் அவஸ்தைப் படுகிறோமே அது வரை, ஏறக் குறைய நம் தினசரி அலுவல்கள் அனைத்தையும் மனோ வியாதி என்றே அவர்கள் முத்திரை குத்திவிட்டார்கள்!

dsm-5அமெரிக்காவின் பைத்திய வைத்தியர்கள் கழகம் வெளியிடும் DSM எனப்படும் புத்தகம், மன நோய்களைப் பற்றிய பைபிள் என்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுவது. வியாதிகளின் வர்ணனை, விவரங்கள், எப்படி எடுத்துச் சொன்னால் பேஷண்டைப் பயமுறுத்தலாம் என்று சகல தகவல்களும் அடங்கிய புத்தகம். இதன் வெளிவர இருக்கும் ஐந்தாம் பதிப்பில் ஏகப்பட்ட புதிய வியாதிகள் சேர்க்கப்படவிருக்கின்றன.

உதாரணமாக, பரீட்சை ஹாலுக்குள் நுழையும்போது வரும் படபடப்புக்கு ‘மைல்ட் ஆங்ஸைட்டி டிப்ரஷன்’ என்று பெயராம். காதலனுடன் சண்டை போட்டுக்கொண்ட இளம் பெண் மனச் சோர்வு அடைந்து, இறுகிய முகத்துடன் பார்க்கில் உட்கார்ந்து புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போடுவது, கடைசியில் அந்த ராஸ்கல் செல்போனில் கூப்பிடும்போது துக்கத்தில் பேச்சு வராமல் தடுமாறுவது – இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’. எல்லாவற்றையும் விட விசேஷமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவது. இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான்!

இந்த மன நல பைபிளின்படி பார்த்தால் இனி உலகத்தில் யாருமே மன ஆரோக்கியத்தோடு இருப்பதாகச் சொல்ல இயலாது. கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், கார்டிஃப் பல்கலைக் கழகம் போன்றவற்றின் உளவியல் பேராசிரியர்களே இதைப் பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்கள். எல்லாரையும் சகட்டு மேனிக்குப் ‘பைத்தியம்’ என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தித் தள்ளிவிட்டால் அப்புறம் நார்மலான மனிதர்களின் எண்ணிக்கையே மிகச் சுருங்கிவிடும் என்கிறார்கள். பிறகு அவர்களை வெளியே விட்டுவிட்டு நாம் உள்ளே போய் அடைந்து கொள்ள வேண்டியதுதான்!

ஏதோ புத்தகத்தில்தானே எழுதியிருக்கிறார்கள், எழுதிவிட்டுப் போகட்டுமே என்று இதை விட்டுவிட முடியாது. இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள்தான் எதிர்காலத்து மாஃபியா. ஏனெனில் ஆஸ்பத்திரிச் செலவுகள் எல்லாம் கேத்தன் தேசாய்க்கு மட்டும்தான் இனி கட்டுப்படி ஆகும். இன்ஷ்யூரன்ஸ் எடுக்கப் போனால் நமக்கு பைல்ஸ் உண்டா, சர்க்கரை வியாதி உண்டா என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, கடைசியில் ‘உனக்குக் கோபம் வருவதுண்டா ?’ என்று கேட்பார்கள். ஆமாம் என்று சொன்னால் போச்சு – டெம்ப்பரமண்ட்டல் கண்ட்ரோல் டிஸார்டர் என்று முத்திரை அடித்து ப்ரீமியத்தை ஏகத்துக்கு ஏற்றிவிடுவார்கள். தொடர்ந்து இன்ஷ்யூரன்ஸ் குடையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் அதற்கான சிகிச்சையை ஒழுங்காகச் செய்துகொள்ள வேண்டும். டிஸார்டரைக் கட்டுப்படுத்த தினம் மூன்று வேளை குழாய் மாத்திரைகள், ஒவ்வொன்றின் விலை ரூபாய் எண்பது!

இப்படியெல்லாம் பொது அறிவுக்குப் பொருந்தாத விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்பதை ஊகிப்பது எளிது. கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளும் ஃபார்மா கம்பெனிகளும் கூட்டுச் சேர்ந்துவிட்டால் தொழிலை விஸ்தரிக்க வேண்டும். அதற்கு, நோய்களை விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. பேஷண்ட் வந்தார், மண்டையில் தட்டிப் பார்த்தோம், மருந்து கொடுத்தோம் என்று அனுப்பிவிட முடியாது. இன்ஷ்யூரன்ஸுக்காக ஆயிரத்தெட்டு படிவங்களை நிரப்பியாக வேண்டும். படிவத்தில் எழுதுவதற்கு ஒரு வியாதியின் பெயர் வேண்டுமே? அதற்காகத்தான் புதுப் புது வியாதிகளைக் கண்டுபிடித்துப் பெயர் சூட்டு விழா நடத்தியாகிறது.

‘வியாதி’ என்று வகைப்படுத்தினால்தான் நிறைய மருந்து எழுதிக் கொடுக்க முடியும். பிடிப் பிடியாக மாத்திரை எழுதிக் கொடுக்கும் போட்டியில் வென்றால்தான் டாக்டர் அங்க்கிள் குடும்பத்துடன் மொரீஷியஸ் தீவில் விடுமுறை அனுபவிக்க முடியும். விடுமுறையை ஸ்பான்சர் செய்வது யார் என்று சொல்லத் தேவையில்லை. (முன்னொரு காலத்தில் இவர்கள் ஒரு இலவச காம்பிஃப்ளாம் காலண்டர், பேனா ஸ்டாண்டுடன் திருப்தி அடைந்தார்களே?)

சைக்கோஸிஸ் ரிஸ்க் சிண்ட்ரோம் போன்ற பொத்தாம் பொதுவான வில்லைகளை சுலபமாக யார் கழுத்தில் வேண்டுமானாலும் மாட்டிவிடலாம். ஜலதோஷம் வந்தவர்கள் அனைவரையும் ‘நிமோனியாவாக இருக்கலாம், ஆஸ்பத்திரிக்கு வந்து படு’ என்று சொல்வது போலத்தான் இது. இந்த மாதிரி சைக்கியாட்ரிஸ்ட்களிடம் ‘ஏதோ மனது சரியில்லை’ என்று ஆறுதலுக்காக ஒரு முறை போய்விட்டால் போச்சு! உங்களுக்கு ஏதாவது ஒரு வகைப் பைத்தியம் என்று பட்டம் கட்டியே தீருவார்கள். இதெல்லாம் ஒரு முறை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளின் தகவல் தளத்தில் பதிந்துவிட்டால் சுலபத்தில் அதை நீக்க முடியாது. அதை அவர்கள் யாருக்கெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதும் தெரியாது. அதன் பிறகு இன்ஷ்யூரன்ஸ் எடுப்பதும் கடினம், வேலை கிடைப்பதும் சிக்கலாகிவிடும்.

அதிக வியாதிகள் -> அதிக மருந்துகள் -> அதிக பேடண்ட்டுகள் -> அதிகப் பணம் -> அதிகம் பக்க விளைவுகள் -> இன்னும் அதிக வியாதிகள் என்று சக்கர வட்டமாகத் தன் வாலையே கௌவிக் கொண்டிருக்கும் மலைப் பாம்பு இது.

DSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD – அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் – என்று ஒன்றைச் சேர்த்தார்கள். தம்பிப் பாப்பாவை அம்மா தூக்கிக் கொஞ்சும்போது அண்ணன்காரன் பொறாமையில் அழுது அடம் பிடிக்கிறானே, அதற்குத்தான் இப்படி ஒரு திகிலூட்டும் வியாதிப் பெயர்.

இதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்கள். ஒரு கால கட்டத்தில் ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியது.

அடுத்து அமெரிக்க டாக்டர்கள் செய்ததை ……த்தனம் என்றே வர்ணிக்கலாம். குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை, மை தீரும் வரை பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தள்ளிவிட்டார்கள்! 2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்கு.

இந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்தால் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் என்பது போதை மருந்துகளின் காக்டெயில்! இதையே யாராவது ரோட்டில் வைத்து விற்றால் கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்துப் போய்விடும். அதை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு.

சீனி மிட்டாய் கேட்டுக் குழந்தை அழுதால் அது ஒரு மன வியாதி. இல்லத்தரசி ஒருவர் ஏதோ கடுப்பில் வெண்கலப் பானையை ‘ணங்’கென்று இறக்கி வைத்தால் அது ஒரு வியாதி… இப்படிக் கண்டுபிடித்துக்கொண்டே போய்க் களைத்துப் போன மனநல மருத்துவர்கள் இப்போது மற்றொரு அருமையான வியாதி சொல்லியிருக்கிறார்கள்: ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கூட ஒரு வகை மன நோயாம்.

உண்மை! விளையாட்டுக்குச் சொல்லவில்லை! இந்த வியாதிக்கு ‘ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா’ என்று பெயர். இந்த நோய் பீடித்தவர்கள் கடலை எண்ணெய் சொட்டும் பக்கோடா சாப்பிட மாட்டார்கள். இனிப்பு, கொழுப்பு, உப்பு உறைப்பைக் கூடிய வரையில் தவிர்ப்பார்கள். டால்டா, மைதா, பிட்ஸா, பர்கர் எல்லாம் தள்ளுபடி. டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குப் போனால் அட்டைப் பெட்டிகளின் மீது கடுகு எழுத்தில் எழுதியிருக்கும் கலோரிகளைப் படித்துப் பார்ப்பார்கள். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கைக் குத்தல் அரிசி போன்றவற்றைத் தாமும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள்… இதெல்லாம் ஒரு வகை மன வியாதி! ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா!

ம்? அப்படியா? பூச்சி மருந்தில் குளித்த காய்கறிகள், ஜெனடிக் திரிசமன் செய்யப்பட்ட பயிர்களை விலக்கி வைத்தால் நான் பைத்தியமா? ஆக்ஸிடோஸின் ஊசி போட்டுக் கறந்த பாலைக் குடிக்க மறுத்தால் நான் கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆக வேண்டியதுதானா?

செயற்கையான ரசாயனங்களில் ஊற வைத்து மாதக் கணக்கில் டப்பாவில் அடைத்து வைத்த உணவைச் சாப்பிட்டால்தான் நார்மலான மனிதன் என்று இவர்கள் வாதாடுவதற்குக் காரணம் இருக்கிறது. ஃபுட் ப்ராஸஸிங் என்பது பல பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி. அதிகம் பதப்படுத்தினால் அதிக மதிப்புக்கூட்டல். எல்லோரும் இயற்கையாக விளைவதைப் பறித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டால் இடையில் உள்ள பல பேரின் தொழில் படுத்துவிடும்!

இயற்கையான, உயிரோட்டமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலும் மனமும் லேசாக இருக்கும். தன்னம்பிக்கையும் புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். ஆன்மீக உணர்வுகள் மேலே எழும்பும். மாறாக, பசித்தாலும் பசிக்காவிட்டாலும் ஜங்க் ஃபுட் தின்று கொண்டு சோபாவில் சரிந்து கிடப்பவர்கள், சோம்பலும் மந்தத்தனமுமாக இருப்பார்கள். ப்ராய்லர் கோழி மாதிரி கசாப்புக்காகவே வளர்க்கப்படுபவர்கள் இவர்கள்.

மக்கள் சாப்பிடும் பண்டம் அனைத்திலும் அஸ்பர்டேம், யீஸ்ட் நொதிகள், மானோ சோடியம் க்ளூடமேட் போன்ற செயற்கைச் சேர்மானங்களால் நாக்கையும் மனதையும் மரத்துப் போக வைத்துவிட்டால், அவர்கள் கேள்வி கேட்காமல் சொன்ன சொல் கேட்டு நடப்பார்கள். ஷாம்பூ விளம்பரம் முதல் ‘தங்கத் தலைவருக்கே உங்கள் ஓட்டு’ வரை எல்லாவற்றையும் நம்பிப் பின்பற்றுவார்கள். வியாபாரத்துக்கு அதுதான் நல்லது.

யாராவது இதை ஒப்புக் கொள்ள மறுத்தால் எடு, ரப்பர் ஸ்டாம்ப்பை! ஆயிரம் வகைப் பைத்தியங்கள் கைவசம் இருக்கின்றன.