காலப்பயணம் – 1

இத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: ஹாலிவுட் அறிவியல்

‘காலம் என்றால் என்ன?’ என்பது தொன்றுதொட்டு வழங்கப்படும் இலக்கியங்களிலும், சிந்தனைகளிலும், அறிவியல் கோட்பாடுகளையும் பெரிதும் ஆக்ரமிக்குமொரு கேள்வி. புரிதல்களையும், சிந்தனை முறைகளையும் பொருத்து இக்கேள்விக்கான பதிலும் மாறுபடுகிறது. காலத்தில் முன்னோக்கியோ, பின்னோக்கியோ பயணம் செய்வது அறிவியல் புனைவுகளில் முக்கியமான ஒன்று. 1960-ஆம் ஆண்டு வெளிவந்த ‘டைம் மெஷின்’திரைப்படம், ஹெச்.ஜி.வெல்ஸின் 1895 நாவலின் திரைச் சித்தரிப்பு. இத்திரைப்படத்தின் கதாநாயகன் கிபி 802701- ஆம் வருடத்துக்குச் செல்கிறான். இந்த நாவலில் ஹெச்.ஜி.வெல்ஸ் கால இயந்திரத்தின் அறிவியலை விளக்கவில்லை. ஆனால் இக்கதை மூலம் ‘கால இயந்திரம்’ என்றொரு கருவியின் மூலம் மனிதன் தான் இஷ்டப்படும் காலத்துக்குப் பயணிக்கலாம், கால ஓட்டத்தைத் தன்னிஷ்டத்துக்குக் கையாளலாம் என்றொரு சிந்தனையை முன்வைக்கிறார் ஹெச்.ஜி.வெல்ஸ். இந்தப் பார்வை விக்டோரிய இங்கிலாந்துக்கே உரிய பார்வையாகும். (கால இயந்திரத்தின் சில பகுதிகள் யானை தந்தத்தால் ஆனவை – அவை பிரிட்டிஷ் காலனிகளிலிருந்து ஒருவேளை இந்தியாவிலிருந்தே கூட வந்திருக்கலாம்.) அதன் பின்னர் இன்றைக்கு வரைக்கும் இந்த கோட்பாடே காலப்பயணத்தைக் குறித்த அறிவியல் புனைவுகளில் முக்கிய இடம் வகிக்கிறது.

la_jetee_poster‘கால இயந்திரம்’ திரைப்படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1962-ஆம் ஆண்டு வெளிவந்த இன்னொரு திரைப்படம், காலப்பயணத்தை மானுட எதிர்கால அச்சங்களுடனும், தனி மனித மனதின் ஆழ்நினைவுகளுடன் இணைத்து இன்னும் ஆழமான சிந்தனையை முன்வைக்கிறது. இது ஹாலிவுட் படமல்ல. ஃப்ரான்ஸில் தயாரிக்கப்பட்ட, ‘துறை’ ( La Jetée ஆங்கிலத்தில் The Jetty) என்னும் 28 நிமிட குறும்படம். காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல், கருப்பு வெள்ளை புகைப்படங்களின் தொகுப்பாக எடுக்கப்பட்ட குறும்படம் இது. இப்படத்தில் மூன்றாம் உலகப்போருக்குப் பிறகு நிலத்தடியில் எலிகளுடன் வாழும் மானுட சமுதாயம் காலப்பயணத்தை முயற்சிக்கிறது. கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சென்று நிகழ்காலத்தை மீட்கும் முயற்சி. யாரை அனுப்புவது? யாரால் காலப்பயணம் அளிக்கும் உள்ள அதிர்ச்சியைத் தாக்குப் பிடிக்கமுடியும்? ஒரு இளைஞன் முன்வருகிறான். அவன் சிறுவனாக இருந்தபோது ஒரு பெண் அதிர்ச்சியான வன்முறை நிகழ்ச்சியைப் பார்த்து அதிர்ந்ததைக் குறித்த நினைவு அவனை உறுத்தியபடியே இருக்கிறது. மீண்டும், மீண்டும் உள்ளத்தால் அந்த சிறுவயது நினைவை அசைபோட்டபடியே இருக்கிறான். எதிர்காலத்துக்குச் செல்லும் அவன், தான் மீண்டும் நிகழ்காலத்துக்குத் திரும்பினால், தன்னை அனுப்பியவர்களே தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்பதை அறிந்து கொள்கிறான்.

எதிர்காலத்தவர்கள் அவர்களின் காலத்தில் அவன் வாழ்ந்து கொள்ளலாம் என காலப்புகலிடம் அளிக்கிறார்கள். அதை மறுத்து, அவன் மீண்டும், மீண்டும் நினைத்துக்கொண்டிருக்கும் பெண் வன்முறை நிகழ்வொன்றை கண்டு அதிர்ச்சியடையும் அந்த இறந்த காலத்தின் புள்ளிக்கே திரும்புகிறான். அவனைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட ஓர் ஒற்றன் அவனை அங்கே கொல்கிறான். அத்தருணத்தில் அவன் உணர்கிறான் – அவன் நினைவில் உறைந்த பெண்ணை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வன்முறை சம்பவம் அவனுடைய மரணமேதான். இக்குறும்படம் தத்துவ உளவியல் உள்ளோட்டங்கள் கொண்டது. ஹெச்.ஜி.வெல்ஸ் காலத்தை ஒரு நதியோட்டமாகத்தான் உருவகித்தார். அதே உருவகம் இங்கும் தொடர்கிறது. ஆனால் இதில் நிகழும் காலப் பயணம் எங்கே நிகழ்கிறது பௌதீகமான காலத்திலா அல்லது உளவியல் காலத்திலா? பூமிக்கடியிலான இருப்பு நிச்சயமாக நனவிலிக்கான குறியீடுதான். பிரக்ஞையை நீரோட்டமாகக் கருதுவது மேற்கத்திய தத்துவவியலில் ஒரு முக்கியமான பார்வை. வில்லியம் ஜேம்ஸ் “பிரக்ஞையின் நீரோட்டம்” (stream of consciousness) என்கிற வார்த்தை சேர்க்கையை உருவாக்கினார். ஆல்ப்ரெட் நார்த் வைட்கெட் இந்தக் கோட்பாட்டை நம்முடைய அன்றாட அனுபவங்களின் கோர்வைகளுக்கு விரிவடையச் செய்தார். கால ஓட்டத்தையும், பிரக்ஞையின் ஓட்டத்தில் இருக்கும் நனவிலி சுழல்களையும் இணைப்பதாக அமைகிறது ‘துறை’.

க்ரைஸ் மார்க்கரால் (Chris Marker) மிகக்குறைவான பட்ஜெட்டில், எவ்வித பிரம்மாண்ட ஸ்பெஷல் எஃப்கெட்ஸ்களும் இல்லாமல், முன்னரே சொன்னதுபோல் வெறும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் உருவாக்கப்பட்ட இக்குறும்படம் பின்னாட்களில் ஹாலிவுட்டில் வெளிவந்த பல காலப்பயண திரைப்படங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. Back to the Future, Terminator, Judgement Day போன்ற பிரபல ஹாலிவுட் திரைப்படங்கள் இக்குறும்படத்தின் ஆழமான பாதிப்பைக் கொண்டது. இவை தவிர, இக்குறும்படமே ஒரு முழுநீள ஹாலிவுட் திரைப்படமாக “Tweleve Monkeys” என்னும் பெயரில் 1995-ஆம் ஆண்டு வெளிவந்தது.

“The Jetty” குறும்படம் முழுதுமே யூட்யூபில் காணக்கிடைக்கிறது. முதல் பகுதியைக் கீழே காணலாம்.

இக்குறும்படத்தின் இரண்டாம் பகுதி | மூன்றாம் (இறுதிப்) பகுதி.

காலப்பயண முரண்கள் (Time travel paradoxes) சில உண்டு. ஒருவன் காலப்பயணம் செய்து அவன் மூதாதையைக் கொன்றுவிட்டால் அவன் இருப்பு என்ன ஆகும்? இது மிகவும் பிரசித்தி பெற்ற முரண் ஆகும். ‘Back to the Future’ தொடர் திரைப்படங்கள் இந்த முரணை நகைச்சுவையுடன் கையாளுகின்றன. காலத்தில் பின்னோக்கிச் செல்லும் அமெரிக்க பதின்ம சிறுவன் அவனது பெற்றோர்களின் இளவயது காலத்துக்கு செல்கிறான். அங்கு அவனது பதின்ம வயது தாயுடன் மயக்கம் (infatuation) கொள்கிறான். மற்றொரு சுவாரசியமான முரண் “இரு உடல்கள்” முரண் என்பது. கடந்த காலத்திற்கோ எதிர்காலத்துக்கோ நீங்கள் பயணிக்கும்போது உங்களை நீங்களே சந்திக்கக் கூடாது என்கிற விதி காலப்பயண விதிகளில் முக்கியமானதாக அமையலாம்.

1994 இல் வெளியான கால-காவலன் (Timecop) திரைப்படத்தில் வில்லனை ஒழிக்க இந்த விதி பயன்படுத்தப்படுகிறது. ஒரே பருப்பொருளின் இரு இருப்புக்கள் ஒரே நேரத்தில் ஒரே வெளியில் இருப்பது இயலாது என்பதே (காலப்பயணத்துக்கென அறிவியல் புதினம் ஏற்படுத்திய கற்பனை) அந்த விதி. இரு வேறு காலங்களைக் கொண்ட உடல்கள் சந்திக்கும் போது தன்னுணர்வு எத்தகைய இருப்பு கொண்டதாக இருக்கும்? அது எத்தகைய இருப்பியல் பிரச்சனைகளை சந்திக்கும்? “துறை”யில் இந்த சந்திப்பு ஒரு உடலின் அழிவை இளமையான இருப்பு பார்ப்பதாகவும் பின் அது தெளிவற்ற ஆனால் சங்கடம் ஏற்படுத்தும் நினைவாக தங்குவதாகவும் காட்டப்படுகிறது.

twelve_monkeys_ver3‘துறை’யின் ஹாலிவுட் பிரதியான பன்னிரண்டு குரங்குகள்” மற்றொரு சுவாரசியமான முரணை உள்ளடக்கியுள்ளது. வைரஸ் நோயால் பேரழிவைச் சந்திக்கும் வருங்காலத்துக்கு (2035 வருடத்துக்கு), 1996-இலிருந்து ஒரு வாய்ஸ் மெயில் கிடைக்கிறது. “12 குரங்குகளின் இராணுவம்” என்கிற பயங்கரவாத அமைப்புதான் இந்த வைரஸை பரவச்செய்ததாக அந்த வாய்ஸ் மெயில் தகவல் தருகிறது. இந்த மெயிலின் அடிப்படையில் வைரஸ் பரவுவதலை நிறுத்த முடியுமா எனப் பார்க்க, 2035-ஆம் வருடத்திலிருந்து 1996-க்கு அனுப்பப்படுகிறான் கதாநாயகன். அவன் 1996-ஆம் ஆண்ட்டுக்கு வந்து சேர்ந்து மனநல சிகிச்சை அறையில் அடைக்கப்படுகிறான். அவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் (பெண்தான். கதாநாயகன் ப்ரூஸ் வில்லிஸாக இருக்கும்போது வேறெப்படி இருக்க முடியும்?) கதாநாயகனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளவா அல்லது அவனது மனநலத்தை சந்தேகிப்பதா என்கிற சந்தேகத்தில் ஊசலாடியபடி அவன் அளிக்கும் (வருங்காலத்துக்குரிய) எண்ணில் அவன் கிடைத்ததாகச் சொல்லும் செய்தியைச் சொல்கிறாள். பிறகு வருங்காலத்துக்கு திரும்பும் கதாநாயகனுக்கு ஒரு விஷயம் புரிகிறது. 2035 இல் விஞ்ஞானிகளுக்கு கிடைக்கும் வாய்ஸ் மெய்ல் இப்படி வந்ததுதான். இதில் இருக்கும் முரண் என்ன?

1.1996இல் இருந்து 2035 க்கு அனுப்பப்பட்டு கிடைக்கும் வாய்ஸ்மெயில் 2035 இன் விஞ்ஞானிகளுக்கு “12 குரங்குகளின் இராணுவம்” குறித்த தகவலைத் தருகிறது.

2. “12 குரங்குகளின் இராணுவம்” குறித்த தகவலை கதாநாயகனுக்கு 2035 இன் விஞ்ஞானிகள் தருகின்றனர்.

3. 1996 க்கு செல்லும் கதாநாயகன் இந்த தகவலை மனநோய் மருத்துவருக்கு தருகிறான்.

4. அவன் தந்த தகவலை மனநோய் மருத்துவர் மெயில் பாக்ஸில் 1996 இலிருந்து 2035க்கு அனுப்புகிறார்.

1-இல் இருந்து 4 வரை காரண காரியம் ஒவ்வொரு தனி செயலுக்கும் சரியாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்தாக அது ஒரு சுழலாகிவிட்டதை காணலாம். காலப்பயணம் உருவாக்கும் இந்த முரண் “காரண-காரிய முடிவிலிச்சுழல்” எனப்படுகிறது.

இந்த முரண்களுக்கு அப்பால் காலப் பயணம் சாத்தியமாகுமா? சாத்தியமாகுமா என ஏன் எதிர்காலத்தில் கேட்கவேண்டும். ஒரு முறை அப்படி சாத்தியமாயிற்று என்றும், அமெரிக்க கப்பற்படையின் ஒரு முக்கிய பரிசோதனை இதனை நிகழ்த்தி அதனை அதிபயங்கர ராணுவரகசியமாக மறைக்கப்பட்டுவிட்டது என்றும் ஒரு புத்தகம் எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து எக்கச்சக்க வதந்திகளும் பரப்பப்பட்டன. ஐன்ஸ்டீன் வெற்றிகரமாக நிகழ்த்தியதொரு ஆதார இயற்பியல் கண்டுபிடிப்பை உபயோகித்து, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 1943-இல் ஒரு கப்பலை காண முடியாமல் ஆக்கினார்களாம். இதனால் கப்பல் சிப்பந்திகள் சிலர் காலப்பயணத்துக்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்றார்கள் என்றும், இதனை வெளியுலகுக்கு சொன்ன மனிதர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.

john-carpenters-the-philadelphia-experimentஏற்கனவே இத்தகைய விஷயங்களுக்கு அமெரிக்க மலின புத்தக சந்தையில் இருந்த கிராக்கியை நன்றாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த சார்ல்ஸ் பெர்லிட்ஸ், இந்த மர்மங்களையெல்லாம் சேர்த்து ‘Philadelphia Experiment’ என்றொரு புத்தகத்தை எழுதினார். ஹாலிவுட்காரர்கள் சும்மா இருப்பார்களா? பிலடெல்பியா பரிசோதனை திரைப்படமாகி உலகெங்கிலும் பார்வையாளர்களை பரிசோதித்தது. ஆனால் இந்த பரிசோதனைக்கு ஆதாரம் உண்டா என்றால் எதுவும் இல்லை. இந்த பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ‘Unified field theory’-ஐ ஐன்ஸ்டைன் தமது வாழ்க்கையில் சாதிக்கவே இல்லை. ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்களில் உள்ள தொலையறிவுக் கருவிகள், கப்பல்களை உணராவண்ணம் அவற்றைக் குழப்ப காந்தப்புலங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது காந்தப்புலத்தால் பாதிக்கப்படக்கூடிய கருவிகளை கப்பல் சிப்பந்திகளிடமிருந்து அகற்றிவிடுவார்கள். இதனை தொலையுணர்வு கருவிகளால் காணமுடியாத கவசம் என்பதாக அதிகாரிகள் சொல்வதுண்டு. இந்த ‘invisibility’-யையும், அரைகுறையாகத் தெரிந்து கொண்ட உயர் இயற்பியலையும், சூழ்ச்சித் திட்டங்கள் குறித்த அச்ச உணர்வையும் குழப்பிக் கொண்டதன் விளைவுதான் பிலடெல்பியா பரிசோதனை.

ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பாலாக காலப்பயணம் சாத்தியமாகுமா? இது குறித்து பொதுவான அறிவியலின் பார்வை என்ன என்பதையும், மற்றொரு ஹாலிவுட் திரைப்படம் முன்வைத்த முழுக்க முழுக்க வேறுபட்ட காலப் பயணத்தையும் அடுத்து காணலாம்.