வெங்கட் சாமிநாதன் எழுத ஆரம்பித்து இந்த வருடத்தோடு ஐம்பது வருடங்களாகின்றன. இத்தருணத்தில் வெ.சாவின் விரிவான பேட்டியை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
இந்த நேர்காணலின் பிற பகுதிகளைப் படிக்க: வெங்கட் சாமிநாதன் நேர்காணல்.
புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்.
புலம்பெயர்ந்த படைப்பாளிகள் குறித்து நீங்கள் நிறைய எழுதியுள்ளீர்கள். குறிப்பாக ஈழ இலக்கியம் குறித்து நீங்கள் நிறைய அறிமுகம் செய்துள்ளீர்கள். இது எப்படி சாத்தியமானது என்பது குறித்தும், உங்களைக் கவர்ந்த ஈழப் படைப்பாளிகள் குறித்தும் சொல்லுங்களேன்!
ஆரம்ப காலம் முதலே என்னுடைய எழுத்திற்கு இங்கிருப்பவர்களை விட ஈழத்து வாசகர்களே மிக அதிகமாக இருந்தார்கள். எழுத்து பத்திரிகை அதிக பிரதிகள் விற்றது அங்கேதான். அவர்கள் பரவலான இலக்கிய வாசிப்பை உடையவர்கள். தமிழ்நாட்டில் தன்னுடையதை மட்டுமே படிப்பார்கள் அல்லது தன்னைப் பற்றி புகழ்ச்சியாக ஏதாவது விமர்சனம் வந்தால் படிப்பார்கள். ஆனால் ஈழத்தில் அப்படி இல்லை. அவர்கள் எல்லாவற்றையுமே படிக்கக் கூடியவர்கள். அப்படி ஒரு நல்ல சூழ்நிலை அங்கே இருந்தது. ஆனால் அது பாதகமாகப் போனது இரண்டே இரண்டு பேர்களால். ஒருவர் க.கைலாசபதி. பெருமளவுக்கு இவரைத்தான் குற்றம் சாட்டவேண்டும். இவரை ஒட்டிப் பின்சென்றவர், மற்றவர் கா.சிவத்தம்பி. அவர்கள் ஆரோக்கியமான அந்தச் சூழ்நிலையையே மாற்றிக் கெடுத்து விட்டார்கள். அவர்கள் யார் யார்க்கு Good conduct certificate கொடுக்கிறார்களோ அது நல்ல இலக்கியமாகும் என்று சொல்லுமளவுக்கு ஈழத்துச் சூழலைக் கெடுத்து வைத்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், “நீங்களா என்னை அங்கீகாரம் செய்தீர்கள், கைலாசபதிதானே எனது நூலுக்கு முன்னுரை கொடுத்தார் என்று”. அதாவது அவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த காரணத்தை அவ்வளவு வெளிப்படையாகச் சொல்லி ஒப்புக் கொண்டார் பெருமையுடன். அவர் வேறு யாருமல்ல. மல்லிகை டொமினிக் ஜீவாதான். இதையெல்லாம் கொஞ்சமாவது எதிர்த்து நின்றது எஸ்.பொ.தான். அவர் ஆரம்ப காலத்தில் கைலாசபதியின் great admirer ஆக இருந்தவர். பின்னால் விளைந்த சூழல்களைக் கண்டு பொறுக்க முடியாமல் மாறிவிட்டார்.
எழுத்து பத்திரிகைக்கு தமிழ்நாட்டை விட ஸ்ரீலங்காவில்தான் நிறைய சந்தாதாரர்கள் இருந்தார்கள். பின்னால் ஏற்பட்ட சில சூழல்களால் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக அங்கு வரும் பெரிய வணிக பத்திரிகைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால் சரஸ்வதி, எழுத்து போன்ற பத்திரிகைகள்தான் நிறுத்தப்பட்டன. சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களுக்கு பத்திரிகைகள் நேரடியாக அஞ்சல் மூலம் வரும். ஆனால் மற்றவர்களுக்கு அப்படிக் கிடைக்க வழியில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது எழுத்து மற்றும் சரஸ்வதிதான். எழுத்து இதழ் நிறுத்தப்பட்டதற்கே இலங்கை சந்தாதாரர்களை அது இழந்ததுதான் முக்கிய காரணமாயிற்று. ஏனென்றால் எழுத்தின் பாதிக்கு மேலான சந்தாதாரர்கள் அங்கேதான் இருந்தார்கள். இதே நிலைதான் சரஸ்வதிக்கும் ஏற்பட்டது.
எழுத்து இலங்கையில் எந்த அளவுக்கு பிராபல்யமாக இருந்ததோ அந்த அளவிற்கு எழுத்தில் எழுதிய நானும் அவர்களிடம் அதிகம் தெரிய வந்தேன். உண்மையில் எழுத்தையும், அதில் வெளியான புதுக்கவிதைகளுக்காக செல்லப்பாவையும் அக்காலத்தில் எல்லோருமே கேலி செய்தார்கள். சி.சு.செல்லப்பாவுக்கு நெருக்கமான ராமையா, சிட்டி உட்பட பலருடைய கேலிக்கு எழுத்து ஆளானது. அநேகமாகக் கேலியில்தான் எழுத்து வாழ்ந்தது. வானம்பாடிகள் கேலி செய்தார்கள். இப்படி ஒர் சூழ்நிலை இங்கே அப்போது நிலவியது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், இங்கே சூழ்நிலைகள் அப்படியிருக்க, அங்கே நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் மனோநிலை நிலவியது அவர்களிடத்தே அக்காலத்தில். இன்றுவரைக்கும் அது தொடர்கிறது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருந்தது. அப்போது நா.பா-வும், பகீரதனும் அங்கே போயிருந்தார்கள். அங்குள்ளவர்களிடம் போய் இவர்கள், “ஈழத்து இலக்கியம், தமிழ் நாட்டு இலக்கியத்தை விட இருபது வருடம் பின்தங்கி இருக்கிறது… ஆகவே நீங்கள் ரொம்பதூரம் முன் வரவேண்டியிருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே அங்குள்ள இலக்கியவாதிகள், வாசகர்கள் எல்லாம் இவர்களை வறுத்து எடுத்து விட்டனர். இதென்ன எஞ்சினியரிங் காலேஜ் விவகாரமா, அல்லது ரோடு போடும் வேலையா, பின் தங்கி இருக்கிறோம் என்று சொல்வதற்கு? என்று திட்டித் தீர்த்து விட்டனர். அப்படி ஒரு சூழல் அங்கே இருந்தது.
இந்த சூழ்நிலையின் பின்னணியில்தான் அங்குள்ள நூல்கள், பத்திரிகைகள் எனக்கு வர ஆரம்பித்தது. பலர் தங்களுடைய புத்தகங்களை எனக்கு அனுப்பி வைத்தார்கள். டேனியல் போன்றவர்களைப் பற்றி அப்படித்தான் எனக்குத் தெரிய வந்தது. படிக்கவும் எனக்குப் பிடித்திருந்தது. சிலரைப் பற்றி எழுதினேன். இப்படித்தான் அது ஆரம்பித்தது. ஆனால் பிற்காலத்தில் அது தடைபட்டது. என்றாலும் அவர்களைப் பற்றி கொஞ்ச காலம் வரைக்கும் மிக அதிகமாக இங்கே எழுதியது என்றால் அது என்னைத் தவிர வேறு யாருமில்லை.
கைலாசபதியினுடையது எல்லாம் யந்திரத்தனமாக, மார்க்ஸியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாது வாய்ப்பாடாக வாந்தி எடுப்பதாக இருக்கும். படிக்கவே கஷ்டமாக மடத்தனமாக இருக்கும். அவரிடம் அதிகாரம், ஆட்சி இருந்ததால் அந்த மடத்தனம் அப்போது செல்லுபடியானது. புதுக்கவிதையை அவர் நிர்தாட்சண்யமாகவே கிண்டல் செய்தார். ஆனால் அவரே ஈரோடு தமிழன்பனின் கவிதைகளைப் பாராட்டி எழுதினார். ஏன்? தமிழன்பன் வானம்பாடி, முற்போக்கு முகாமில் தன்னைக் கண்டவர். ஆகவே பாராட்ட வேண்டும். அப்படித்தான் அங்கும் அவர் விருப்பும் வெறுப்பும் இருந்தது. ஆனால் திருமாவளவன், அகிலன் போன்ற கவிஞர்களை அவருக்குப் பின்னும் ஏன் கவனிக்கவில்லை? அல்லது அவரது கோஷ்டியினரால் அவர்கள் ஏன் பேசப்படவில்லை என்பது தெரியவில்லை. அதுபோல வ.அ.ராசரத்தினம். நன்கு எழுதக்கூடியவர். ஆனால் நாளடைவில் அவரும் – இங்குள்ள முற்போக்கு முகாம்களைப் போல – மாறி விட்டார். காரணம் அந்த ப்ராண்ட்தான் அங்கு செல்லுபடியாகும். அதுபோல ஒரு பெண் கவிஞர் – அவர் பின்னால் கொல்லப்பட்டு விட்டார் – சிவரமணி என்பது அவர் பெயர். ஆனால் அவர் இறந்தபிறகுதான் அவரது கவிதைகள் எல்லாம் சேர்த்து, தொகுக்கப்பட்டு வெளியானது. மிக நல்ல கவிஞர். அதுபோல இன்னொருவர் வில்வரத்தினம் – இவர் சுனாமி பாதிப்பின்போது இறந்து விட்டார் என்று நினைக்கிறேன். அவர் மிக நன்றாகக் கவிதைகள் எழுதக் கூடியவர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். ”காலத்துயர்”. என்று ஒரு கவிதைத்தொகுப்புதான் எனக்குப் படிக்கக் கிடைத்தது. ஈழப் போரட்டத்தில் மக்கள் படும் அவதி, மரணத்தை என்னேரமும் எதிர்நோக்கியிருக்கும் அந்த அவல நிலை எத்தனை தலைமுறைகளாகத் தொடர்கிறது. இருப்பினும் அந்தத் துயரைச் சொல்ல வந்தவர் அலங்கார வாத்தைகளை, உவமைகளைத் தேடி மிகவும் பிரயாசைப்படுகிறார். பழங்கால புலவர் மரபில் செய்யுள் இயற்றும் முனைப்புத்தான் தெரிகிறதே தவிர, அடக்கமுடியாத துக்கமும் வேதனையும் பீறிடும் மொழியாக, அது இல்லை.
பொதுவாக, இலங்கையில் சமகால அனுபவத்தைப் பதிவு செய்கிறார்கள். அது ஒரு பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. எப்படிப் பதிவு செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் பதிவு செய்கிறார்கள். ராஜமார்த்தாண்டன் தமிழினிக்காக ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டு வந்திருந்தார். அது முழுக்க முழுக்க எனக்கு ஒப்புதலான ஒன்று. ஏனென்றால் யார், யார் எல்லாம் அதிக தம்பட்டம் அடித்து, அதிகார தோரணையில் தங்களை கவிஞர்களாக முன்னிறுத்திக் கொண்டார்களோ, அவர்களையெல்லாம் முற்றிலுமாக அவர் ஒதுக்கி விட்டிருந்தார். வானம்பாடிக் கவிஞர்கள், பிரம்மராஜன் எனப் பலரை அவர் ஒதுக்கிவிட்டிருந்தார். அதுபோல சேரனுடைய கவிதைகளும் தனியாகத் தெரியக் கூடியவை. அவரைப் பற்றியெல்லாம் ராஜமார்த்தாண்டனைத் தவிர வேறு யார் கவனித்து எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போல அகிலன், திருமாவளவனைப் பற்றி ஈழத்தவர்களே அதிகம் பேசியதில்லை. இப்படி நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். நான் இவர்களையெல்லாம் கவனித்து வந்திருக்கிறேன். எழுதி வந்திருக்கிறேன்.
எழுத்து வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத அனுபவங்கள், நினைவுகள் பற்றிச் சொல்லுங்களேன்!
பல சம்பவங்கள் இருக்கின்றன என்றாலும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். நான் வெகுவாக ஒதுக்கப்பட்ட ஒரு மனுஷன். என்னுடைய விமர்சனங்களைக் கண்டு ஒருசமயம் எல்லோருமே என்னை வெறுத்தார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் எத்தனையோ பேரை நான் பாராட்டியிருக்கிறேன் என்பது அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற புறக்கணிப்புகளால் நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். எனக்கு அந்த வாய்ப்பு வந்தது, எழுத ஆரம்பித்தேன். ஆனால் எனக்கிருந்த குறை என்னவென்றால் நான் யாருக்காக எழுத வேண்டும் – தமிழருக்காக எழுத வேண்டும் – அதுவும் தமிழில் எழுத வேண்டும். ஆனால் மற்றவர்களுக்காக ஆங்கிலத்தில் ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
1966-67ல் ’என்லைட்’ ஒன்று பத்திரிகை பரோடாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. க.நா.சு என்னை அதில் எழுதச் சொன்னார். “இங்கிலீஷ்லேன்னா எழுதணும். இங்கிலீஷ்லே எழுதி எனக்குப் பழ்க்கமில்லையே. என் இங்க்லீஷ் செல்லுபடியாகுமா, தெரியலையே,” என்று தயக்கம் காட்டினேன். அதற்கு அவர், “சரிதான்யா, எழுதும், உம்ம இங்க்லீஷும் இங்கிலீஷ்தான். என் இங்கிலீஷும் இங்கிலீஷ்ங்கற மாதிரி. இங்கிலீஷிலே எத்தனையோ இங்கிலீஷ் இருக்கு. தைரியமா எழுதும்,“ என்றார். ஆக, நானும் அதில் எழுத ஆரம்பித்தேன். நான் இங்கிலீஷில் எழுத க.நா.சு தான் காரணம். முதலில் சுந்தரராமசாமி, அப்புறம் செல்லப்பா, ஆர்.சண்முகசுந்தரம், எம்.வி.வெங்கட்ராம், ஜெயகாந்தன் என்று வரிசையாக எழுதினேன். எனக்கு விருப்பமானவர்களைப் பற்றி எல்லாம் நான் எழுதினேன் என்று சொல்லலாம். அப்படி எழுதும் போது ஒருமுறை எம்.வி.வெங்கட்ராமிற்கு அவருடைய போட்டோ வேண்டும் வெளியிடுவதற்காக என்று கடிதம் எழுதினேன். அவர் அப்போது கும்பகோணத்தில் இருந்தார். நான் அவரைப் பார்த்ததில்லை. அவர் கும்பகோணத்தில் எங்கே இருக்கிறார் என்பதும் கூட சரியாகத் தெரியாது. அவரிடமிருந்து போட்டோ வந்தது. அவர் அங்கே இருக்கும் தன் நண்பர்களிடம் போட்டோவையும், என் கட்டுரையையும் காட்டியிருக்கிறார். கும்பகோணம் காலேஜில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த – சேஷாத்ரி என்று நினைக்கிறேன் – அவர் நண்பர், ’அவரை விட்டுடாதீங்கய்யா, ரொம்ப நல்லா எழுதற ஆள்’ என்று சொல்லியிருக்கிறார். பின் கும்பகோணம் செல்லும் போது எம்.வி.வெங்கட்ராமைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் எனக்கு நல்ல நண்பராகி விட்டார்.
ஒருமுறை அவர் வீட்டிற்கு என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஊரிலிருந்து என் மாமா வந்திருந்தார். அதனால் நான் அவர் வீட்டிற்குப் போகவில்லை. அதற்குள் அவர் பையனை என் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டார். பின்னர் நான் அவர் வீட்டிற்குப் போனால் அங்கே சாப்பாடு தயாராக இருந்தது. என்னை சாப்பிடு, சாப்பிடு என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். பின்னர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இவ்வாறு கும்பகோணம் செல்லும் போதெல்லாம் அவரைச் சந்திப்பது வாடிக்கையானது. நெருக்கமான நண்பராக அவர் இருந்தார்.
ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்த போது, தன்னோடு கூட மூன்றுபேரை அழைத்து வந்திருந்தார். அவர்கள் தஞ்சை பிரகாஷ், இருளாண்டி, பிரபஞ்சன் ஆகியோர். அன்று வெங்கட்ராம் ஒன்றுமே பேசவில்லை. ஆனால் வந்திருந்தவர்கள் சரமாரியாக என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். நானும் அவர்கள் விசாரணைக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது நான் சர்ச்சைக்கு உள்ளான ஆள். அதனால் அந்த மூவரின் அனுதாபம் எனக்கு எதிர்ப்பக்கம்தான் இருந்தது. ஆனால் அந்தச் சந்திப்பிற்குப் பின் நடந்ததோ வேறு. எல்லோரும் எனக்கு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர். அதைப் பற்றி பின்னால் இருளாண்டி ஒருமுறை சொன்னார், ”உங்களைக் கேள்வி மேல கேள்வி கேட்டு நல்லா மடக்கிப் போட்டுடறதுன்னு நினைச்சுட்டுதான் வந்தோம். ஆனா வெங்கட்ராம் சொல்லிட்டாரு, ’நான் ஏதும் பேச மாட்டேன். எங்களோட நட்பு வேற மாதிரி. அதுனால நீங்களே பேசிக்குங்கன்னு’. நாங்களும் சரின்னுட்டு வந்துட்டோம். ஆனா எந்தத் தயக்கமும் இல்லாமல் நீங்க பேசினது எங்களுக்கு ரொம்ப அபூர்வமா இருந்தது.” என்றார். இருளாண்டி இடையில் காலமாகிவிட்டார். பின்னால் பிரபஞ்சனும் பிரபல பத்திரிகையாசிரியராகி விட்டார். தஞ்சை பிரகாஷ் மட்டும் நான் டெல்லியிலிருந்து கும்பகோணம் வரும்போதெல்லாம் வந்து என்னைச் சந்திப்பார். மணிக்கணக்காக ராத்திரி, பகல் என்றெல்லாமல் என் கூடவே இருப்பார். பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருப்போம்.
ஒருசமயம் இரவு நேரத்தில் நான் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே எதேச்சையாக தனது நண்பர்களுடன் வந்திருந்த பிரகாஷ் என்னைப் பார்த்து விட்டார். ”என்ன இங்கே?” என்று கேட்டார். ஊருக்குப் போகிறேன் என்று சொன்னேன். அவ்வளவுதான். ‘நாம் சந்திக்காமல் எப்படிப் போவது?’ என்று சொன்னவர், தன் நண்பர்களை விட்டு அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போடச் சொல்லி, மூன்று நாள் வரைக்கும் அங்கேயே தங்க வைத்தார். அந்த மூன்று நாளும் அவரும் வீட்டுக்குப் போகவில்லை. அங்கே இன்னொரு எழுத்தாள நண்பரையும் சந்தித்தேன். அவர் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார் – பெயர் நினைவில்லை – பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் சொல்கிறேன் என்றால் பிரகாஷிற்கு என் மேல் அவ்வளவு ஈடுபாடு.
பிரகாஷ் நாவல்கள், சிறுகதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவர் ஒரு எழுத்தாளன் என்று தன்னை காட்டிக் கொண்டது கிடையாது. அவ்வப்போது நாடோடிக் கதைகள் என்று தாமரையில் எழுதியிருப்பது தெரியும். மற்றபடி அவர் தன்னை எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. மேலும் அவருக்கு தெலுங்கு தெரியும், மலையாளம் தெரியும். இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். லாரி ஓட்டுவதற்கான ஹெவி டிரைவிங் லைசென்ஸூம் அவர் வைத்திருந்தார். அவருடைய தாய் ஒரு ஐயங்கார். தந்தை தேவர். பிரகாஷின் பாட்டி ஒரு பெரிய டாக்டர். இதெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது. அவரது பேச்சு மட்டுமே தெரியும். ஆனால் அவர் நிறைந்த படிப்பாளி. பெங்காளி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சிறந்த, ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உடையவர். பல புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். நல்ல ஞாபக சக்தி உடையவர். எனக்காக ஒரு பத்திரிகையே அவர் ஆரம்பித்து நடத்தினார். “வெங்கட்சாமிநாதன் எழுதுகிறார்” என்பதைச் சுருக்கி ‘வெசாஎ’ என்ற தலைப்பில் ஒரு புதிய பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அதில் முழுக்க முழுக்க நான்தான் எழுதினேன். வேறு யாரும் கிடையாது. அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. ஆனாலும் பிடிவாதமாக நடத்தினார். இரண்டு இதழ் வந்தது. மூன்றாவது இதழ் வரும்போது அவர் இல்லை.
நான் டெல்லியில் இருந்த போது எனக்கு ஒரு பஞ்சாபி நண்பர் மிக நெருக்கமாக இருந்தார். நான் டெல்லியை விட்டு வரும்போது ‘இவர் இல்லாமல் இனி எப்படி இருக்கப் போகிறோம்’ என்று அவர் இல்லை என்ற வேதனையால் மனம் அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அதேசமயம் தஞ்சை பிரகாஷ் இருக்கிறார், அவர் இருப்பது ஒரு இழப்புக்கு நிறைவு தருவதான ஒரு சமாதானம் இருந்தது. சந்தித்து நிறைய பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் எல்லாம் தவறாகப் போனது. நான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னாலேயே பஞ்சாபி நண்பர் இறந்து போய் விட்டார். இங்கு வந்த சில மாதங்களில் ப்ரகாஷூம் காலமாகி விட்டார். பஞ்சாபி என்றால் ரொம்ப முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பது பரவலாக தெரிந்தது. ஆனால் டண்டன் அப்படியெல்லாம் இல்லாமல் மிக அன்பானவராக அவர் இருந்தார். பஞ்சாபி, பிரகாஷினுடனான நட்பெல்லாம் ரொம்ப ஆழ்ந்தது. அன்னியோன்யமானது.
கருத்து ரீதியான விமர்சனம் என்பது குறித்த உங்கள் கருத்து என்ன?
நாம் ஒரு கருத்தைச் சொன்னால் அதைக் கருத்தாகவே எதிர் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இங்கே கும்பல் சேர்ந்து கருத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு ஆளை எதிர்க்கிறார்கள். அது மிக மிகத் தவறானது. அதற்கு அவரவர்கள் சார்ந்த கட்சிகள் உதவுகின்றன. உண்மையே இல்லாத விஷயங்களுக்காக, இவர்களும் உண்மையே இல்லாமல் கும்பல் சேர்ந்து, வெற்றுக் கோஷங்கள் எழுப்பி மிரட்டுவதால் மற்றவர்கள் அதற்கு பயப்படுகின்றனர். சில அமைப்பினரைப் பற்றி நான் இந்தியாடுடே தமிழ்ப் புத்தாண்டு மலரில் கருத்து தெரிவித்ததற்கு எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்ததென்று தெரியுமா? தஞ்சாவூரிலும், பாண்டிச்சேரியிலும் உள்ள எழுத்தாளர்கள், பேராசிரியப் பெருமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டி, சாமிநாதன், வல்லிக்கண்ணன் எழுத்து அச்சடிக்கப்பட்டுள்ள இந்தத் பக்கங்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தை எடுத்து அவ்வாறே செய்து, இந்தியா டுடே அலுவலகத்திற்கு பார்சலில் அனுப்பி வைத்தார்கள். இதில் பிரபல சில பேராசிரியர்களும் அடக்கம். அதில் முக்கியமானவர் அந்தோணி மார்க்ஸ் என்னும் அ.மார்க்ஸ்.
இதுதான் என்னுடைய கருத்திற்கு ஒரு பேராசிரியரின் பதில். இதிலிருந்தே அவர்களது தராதரத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். நான் அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தது – இவர்கள் எல்லோரும் பாசிஸ்ட்ஸ், இவர்களுடைய attitude எல்லாம் பாசிஸமாகவே இருக்கும். இவர்கள் பாஸிஸத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதுதான் – அது அப்படி இல்லை என்று அவர்கள் கருத்தோடு என் கருத்தை எதிர்கொண்டிருந்தால் வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஆனால் நான் என்ன எழுதினேனோ அதை உண்மை என்று அவர்களே தம் செயல்கள் மூலம் நிரூபித்தும் காட்டிவிட்டார்கள். They proved that my charges were correct. இவர்களிடம் குடிகொண்டிருப்பது கருத்தோ சிந்தனையோ அல்ல. கும்பல் கலாசாரம்.
இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியின் மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளரும் அடக்கம். இது நடந்த சில மாதங்களுக்குப் பிறகு – அகரம் அல்லது அன்னம் பதிப்பாக என்று நினைக்கிறேன் அந்த எழுத்தாளரின் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன. அதன் பிரதிகளை எனக்கு அனுப்பியிருந்தார் மீரா. ஏற்கனவே அந்தப் எழுத்தாளருடைய நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது சாம்பசிவராவ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நான் அந்த நூலைப் பாராட்டி இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை எடுத்து இப்போது இந்தப் புத்தகத்தில் இணைத்திருந்தார்கள். நான் உடனே மீராவுக்கு எழுதினேன், “நான் எழுதிய எழுத்துக்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் உதவும் என்ற தீர்மானத்தில் கையெழுத்திட்டவர் இந்த எழுத்தாளர். அதை அப்படியே எடுத்து இந்த எழுத்தாளர், என்னிடமும் அனுமதி கேட்காமல், தனது புத்தகத்துக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டது ஏன்?” என்று கேட்டு எழுதினேன். ஆனால் அதற்கு மீராவிடமிருந்தும் சரி, அந்த எழுத்தாளரிடமிருந்தும் சரி, எந்தப் பதிலும் வரவில்லை. என்னுடைய அனுமதி எதுவும் கேட்காமல், என்னுடைய எழுத்தையும் கேவலமாக தூஷித்து விட்டு, ஆனால் அதை தனது புத்தகத்தில் தனக்கான பாராட்டாக, அவர் பயன்படுத்தியிருந்தார். இது என்ன நியாயம்? இவர்களுக்கு விவஸ்தை என்று ஏதும் உண்டா?
பிறகு அதே எழுத்தாளர் சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழு உறுப்பினராக டெல்லிக்கு வந்தபோது, தனியாக அவரைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டேன். அவரால் அதற்குச் சரியானபடி பதில் சொல்ல முடியவில்லை. “நீங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தீர்கள்தானே! உங்களுக்கும் அந்தக் கருத்தில் ஒப்புதல்தானே! அதனால்தானே கையெழுத்திட்டீர்கள்” என்று கேட்க, “இல்லை, இல்லை. நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். அவர்கள் அப்படிச் செய்தார்கள். ஆனால் என்னால் அதைத் தடுக்க முடியவில்லை” என்றார். இவரும் ஒரு எழுத்தாளர். சாகித்ய அகாடமி ஆலோசகர். ஆனால் செய்வது என்னவோ முதுகெலும்பில்லாத, வன்முறையைக் கண்டு எதிர்க்காமல், அதனோடு சேர்ந்து அதற்கு உறுதுணையாக இருக்கும் செயல். இதுதான் பாஸிஸம் என்பது. பயிற்றுவிக்கப்பட்ட கும்பல்கள் ஒன்று சேர்ந்து செய்யக் கூடியது. அதை எதிர்க்காமல் கண்டிக்காமல் மௌனமாக இருந்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கள்ள மௌனம் சாதிக்கும் இவர்கள் செயலில் கண்ணியமோ, நேர்மையோ, விவஸ்தையோ எங்கிருக்கிறது? இது தான் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் லட்சணம். இது தான் இங்கிருக்கும் சூழல்.
தற்போதைய பத்திரிகைச்சூழல் குறித்து உங்கள் கருத்தென்ன?, முன்னெல்லாம் நிறைய சிறுகதைகளுக்கு இடமிருக்கும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
முன்பெல்லாம் கதை, கட்டுரை என்று நிறைய வரும். ஆனால் தற்போது வெறும் துணுக்குகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. அதுவும் மோசமான சினிமாவுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது பெரிய ஆக்கிரமிப்பாக இருக்கிறது. சினிமா அரசியலைத் தீர்மானிக்கிறது. அரசியல் சினிமாவைத் தீர்மானிக்கிறது. ஒரே விஷச் சுழல் இரண்டு பக்கமும் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு சினிமாவும், சினிமாக்காரர்களுக்கு அரசியலும் அதிகமாக வேண்டியிருக்கிறது. அது ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஒன்றின் துணை மற்றொன்றுக்கு வேண்டியிருக்கிறது. அவர்கள் பத்திரிகை என்றில்லாமல் எல்லா ஊடகங்களிலும் விரவியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலை ஆரோக்கியமானதல்ல. தமிழ்நாட்டில் எந்தத் தரத்தில் சினிமா இருக்கிறதோ அந்தத் தரத்தில்தான் அரசியலும். கடைத்தரமானதும், மூர்க்கமும் ஆபாசமும் கலந்ததும்தான்.
இப்போது நிலவும் இலக்கியச் சூழல் குறித்து உங்கள் கருத்து என்ன? சண்டைகளும், சர்ச்சைகளும் பெருகி வரும் சூழல் ஆரோக்கியமானதுதானா?
ஆரோக்கியம், ஆரோக்கியமில்லை என்பதை விட, அவ்வப்பொழுது வருவது வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நமது தேர்வுதான் முக்கியம். இந்தச் சூழல் அப்படியிருக்கிறது, இப்படியிருக்கிறது என்பதில்லை. சில சூழல்கள் வரவேற்பிற்குரியதாயிருக்கலாம். சில பரபரப்பு கொண்டதாக இருக்கலாம். சிலவற்றிற்கு எதிர்ப்புகள் இருக்கலாம். அந்தந்த சூழலைப் பொறுத்து நமது எதிர்வினைகள் இருந்தால் போதும். ஆனால் நமக்கு வரும் எதிர்வினைகளுக்கு நாம் பணிந்து விடாமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஆக சூழலைக் குறை சொல்லிப் பயனில்லை. அது அப்படி இருக்கிறது. சரி. அதை மீறி நீ என்ன செய்கிறாய்? என்பதுதான் முக்கியம். க.நா.சு அந்தச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லையா? செல்லப்பா முயற்சிக்கவில்லையா, அவர் அதில் வெற்றிபெறவில்லை என்றாலும் முயற்சி செய்தார் அல்லவா? ஆக அந்த முனைப்புதான் முக்கியம். ஆனால் இப்போது எல்லோருமே அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து விடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை சலுகைகள். அதிகாரத்தின் கனிந்த பார்வை. முன்பு எதிர்த்து நின்றவர்கள், தற்போது சமரசம் செய்து கொள்ள வேண்டாதவர்கள் கூட, ஏனோ பணிந்து சமரசமாகி விடுகிறார்கள். அவ்வாறு கீழ்ப்படிந்தவர்களில் ரொம்ப பேர் அப்படிக் கீழ்ப்படிய அவசியமில்லாதவர்கள். ஆனால் ஆசை இருக்கே. அது மயக்குகிறதே. . அதனால் சில சௌகரியங்களுக்காக, ஆசைகளுக்காக பணிந்து போகிறார்கள்.
என்னைப் பொருத்தவரை எப்போதும் ஒரு ஆர்டிஸ்ட் தனியன்தான். பெரும்பான்மையான சூழல் அவனுக்கு எதிரானதாகவே இருக்கும். இயல்பாக, அவன் இருக்கும்படிக்கு இருந்தால் அதில் போராட்டங்கள் இருக்காது. சௌகரியங்களுக்காகக் கீழ்ப்படிந்தால், எனக்கு அது கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்திற்காகப் பணிந்தால் அப்போதுதான் அது போராட்டமாகிறது. ஆகவே எனக்கு இது போது என்ற மனதோடு சமரசம் செய்து கொள்ளாத மனநிலையோடு இருந்தாலே போதும்.
(நேர்காணல் நிறைவடைந்தது. இந்த விரிவான நேர்காணலை சொல்வனத்தில் பிரசுரிக்க அனுமதி தந்த தென்றல் பத்திரிகைக்கும், மதுரபாரதி, அர்விந்த் சுவாமிநாதன் ஆகியோருக்கும் சொல்வனத்தின் நன்றிகள்.)
One Reply to “‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – இறுதிப்பகுதி”
Comments are closed.