வாசகர் எதிர்வினை

mast

சென்ற இதழில் திரு.நாஞ்சில்நாடன் எழுதிய ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ கட்டுரை படித்தேன். வழக்கமான நாஞ்சில்நாடனின் நுட்பமான எள்ளலோடு கூடிய அற்புதமான கட்டுரை அது. என் சொந்த அனுபவத்தில் நான் இதுபோன்ற அபூர்வமான புத்தகங்களை நூலகங்களில் தூசிபடிந்த அடுக்களிலேயே தரிசித்திருக்கிறேன். அதிலும் ஒரு அற்புதமான வரலாற்றுப்புத்தகம் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டு ஒரு குதறப்பட்ட செய்தித்தாள் போல இருந்தது. பிறகுதான் கவனித்தேன் – அப்பக்கங்களில் கிளு,கிளுப்புத் தகவல்கள் இருந்திருக்கின்றன. இந்த லட்சணத்தில் இருக்கும் பொது வாசகர்களை நம்பி அரிய புத்தகங்களை படிக்க வைப்பதே கூட பெரிய ரிஸ்காகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆய்வுப்புத்தகங்கள் நம் நூலகங்களையும், வாசகர்களையும் நம்பியே எழுதப்படுகின்றன. இச்சூழலில்தான் சீனிவாசன் எழுதிய புத்தகத்தை கவனித்து நாஞ்சில்நாடன் எழுதியிருப்பது வாசகர்களின் பேரதிர்ஷ்டம்.

சொல்வனத்தில் இது போன்ற அரிய புத்தகங்களையே கவனித்து எழுதும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். பிரபல புத்தகங்கள், பிரபலமாவதற்கு வேறு வழிகளும், ஊடகங்களும் இருக்கின்றன.

அன்புடன்,
அருண் ராமசாமி

–ooOOOoo–

11

–ooOOOoo–

ல புத்தகங்கள், மனிதர்கள் சொல்லாத தகவல்களையும் ஒரு மரம் சொல்லிவிடும் என்பார் என் தாத்தா. என் இளவயது நினைவுகள் கிராமத்து மரங்களையும், செடிகளையுமே சுற்றிவருபவை. பவளமல்லியும், சங்குப்பூவும், தும்பைப்பூவும், அந்தி மந்தாரையும் குறித்து நினைக்கும்போது ஏதோ கனவு காண்பது போல்தான் இருக்கிறது. என் நினைவுகளை மீட்டுத்தந்த நாஞ்சில்நாடனுக்கும், சொல்வனத்துக்கும் நன்றி.

நன்றியுடன்,
ராதிகா

–ooOOOoo–

சொல்வனத்தில் அருண் நரசிம்மன் எழுதிய ராகம்-தானம்-பல்லவியைப் பற்றிய கட்டுரைகள் படித்தேன் (முதல் இரு கட்டுரைகள்). அவை புதிய விஷயங்களைக் கற்றுத்தருபவையாய் இருந்தன. எனக்குக் கர்நாடக சங்கீதத்தின் இலக்கணங்கள் தெரியாது. ஆனால் கடந்த அறுபது வருடங்களாக கர்நாடக சங்கீதம் கேட்டுவருகிறேன். நான் புரிந்து கொண்டபடி, ராகம்-தானம்-பல்லவி என்பது ஒரு குறிப்பிட்ட ராகத்தை (அல்லது ராகங்களை) மிகவும் விரிவாகப் பாடுவது. பெரும்பாலும் மிதமான வேகத்தில். அப்படியென்றால் ஹிந்துஸ்தானியின் கயால் என்பதைப் போன்றதா ரா-தா-ப?

ஆனால் ரா-தா-பல்லவியுடன் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. தங்களுடைய திறமையைக் காண்பிப்பதற்காக சில பாடகர்கள் மிகவும் கடினமான கணக்கு வழக்கான தாளங்களை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் காலப்பிரமாணத்தைப் பின்பற்றுவது கஷ்டமாக இருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, ராகத்தின் மெலடியும் தொலைந்துபோகிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் ரா-தா-ப-வுக்கென்றே சில சிறப்புக்கச்சேரிகள் நடந்தன. அப்படி ஒரு கச்சேரியில் கே.வி.நாராயணசாமி பாடினார். கே.வி.என் அடிப்படையில் மெலடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடகர் (அப்படித்தான் நான் நினைக்கிறேன்). ஆனால் அன்றைய ராகம்-தானம்-பல்லவியில் அவர் ஒரு கடினமான தாளக்கட்டை எடுத்துக்கொண்டார். அதனால் அவர் தாளக்கணக்கில் கவனம் செலுத்தி பாட்டின் மெலடியில் கவனம் செலுத்த முடியாமல் போனது. ரா-தா-பல்லவியைப் பாடுபவர்கள் இதை முக்கியமாக கவனத்திற் கொள்ள வேண்டும்.

நீங்கள் தந்திருந்த செளம்யா பாடிய வர்தனி ராகம்-தானம்-பல்லவி கேட்டேன். அதில் தன்யாஸியின் சாயல் தெரிந்தது என்று நான் சொன்னால் அது தவறாகுமா?

ராகம்-தானம்-பல்லவியைப் பற்றி மேலும் எழுதுங்கள். அதன்பின் கர்நாடக சங்கீதத்தின் பிற அம்சங்களைக் குறித்தும் எழுதுங்கள்.


வெங்கட்.
(தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கடிதம்).

–ooOOOoo–

21

–ooOOOoo–

அன்புள்ள ஆசிரியர் குழு, அருண் நரசிம்மன்,

அருண் நரசிம்மன் அவர்கள் எழுதிய கட்டுரையின் இரண்டாம் பகுதியைப் படித்தேன். உண்மையில் எனக்குப் புரியாத பல விஷயங்களைப் புரிந்து கொண்டேன். என் கேள்விகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு அவர் பதிலளித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், உபயோகமாகவும் இருந்தது. அருணைப் போல நேர்மையாக பதிலளிப்பவர்கள் மிகவும் குறைவு.

சிப்பியிருக்குது-முத்துமிருக்குது, ’மோகம் என்னும்’ இரண்டு எடுத்துக்காட்டுகளோடு பிற கோப்புகளையும் கேட்டேன். தானம் என்றால் என்னவென்று நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிந்தது. இனிமேல் நானே கேட்டுக்கேட்டுத் தானத்தின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வேன்.

மிகவும் பயனுள்ள கட்டுரைத் தொடர் இது. என்னைப் போன்ற கர்நாடக இசைத் தற்குறிகளுக்கு இத்தொடரை, குறிப்பாக இரண்டாம் பகுதியைப் பலமாகப் பரிந்துரைக்கிறேன்.

மேலும் நான் என் மடலுக்கு அடுத்த பகுதியிலேயே பதிலளிப்பீர்கள் என நினைக்கவில்லை. (படிப்பீர்கள் என்று கூட நினைக்கவில்லை ;-)). உடனடியாக அருணுக்கு அனுப்பி கடிதத்தையும் பிரசுரித்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

இப்போது ஒரு வேண்டுகோள்.

இந்த ராகம்-தானம்-பல்லவி என்ற வடிவம் நம்மிடையே எத்தனை வருடங்களாக இருக்கின்றன என்ற வரலாறு தெரியுமா? நூறு வருடம் முன்பு கச்சேரிகள் ராகம்-தானம்-பல்லவியில்தான் ஆரம்பிக்குமாமே? அப்போதைய ஜாம்பவான்களுடைய சுவாரசியமான ராகம்-தானம்-பல்லவி anecdotes ஏதும் சொல்லலாமே? அதன் வழியே பல விஷயங்களை நினைவு வைத்துக்கொள்வது எளிது என்பதால் கேட்கிறேன்.

நன்றியுடன்,
பாலரங்கன்

–ooOOOoo–

சொல்வனத்தில் ராமன்ராஜா எண்ணெய்ச்சிதறல் குறித்து எழுதிய கட்டுரையைப் படித்தேன். அவர் எழுத்துகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் விரும்பிப் படிக்கிறேன். ஆனால் இக்கட்டுரையில் அவர் சொன்ன சில விஷயங்களுக்கு ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

ஒரு கல்பாக்கம் நகரவாசியாக இதை எழுதுவதை என் கடமையாகக் கருதுகிறேன்.

கட்டுரையில், “நாளைக்கே நம் கல்பாக்கம் போன்ற ஒரு அணு உலையில் ஒரு விபத்து – கடவுள் தவிர்க்கட்டும் – நடந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த சில வருடங்களுக்கு செய்தியில் என்னென்ன வெளி வரும் ? ஊகிப்பது எளிது” என்று சொல்லிவிட்டு சில யூகங்களைப் பட்டியலிடுகிறார்.

சரியாக இதே காரணத்தால், இதே போன்ற விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரிட்டையர் ஆன தாத்தா கமிட்டி ஒன்று பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிக்கை கொடுத்திருக்கும். அந்த அறிக்கைக் காகிதம் பீச்சில் வேர்க் கடலைக் கூம்புகள் தயாரிக்கப் போயிருக்கும்.

கல்பாக்கத்தின் அணுமின் ஆராய்ச்சி contemporary ஆன ஒன்று. அதனால் சில ரிடையர் ஆன தாத்தாக்கள் கமிட்டியிலிருந்து பரிந்துரை வருவதற்கு வாய்ப்பே இல்லை.

கதிரியக்க அலாரம் சர்க்யூட்டில் ஒரு ஐசி சில்லு புகைந்து போய் வேலை செய்யவில்லை என்று தெரிய வரும். உக்ரைனிலிருந்துதான் ஸ்பேர் பார்ட் வரவேண்டும். ஆறு மாதம் முன்பே இண்டெண்ட் போட்டாகிவிட்டது. உக்ரைனிலோ, உள்நாட்டுக் கலவரம்.

இது கல்பாக்கத்தில் நடப்பதை விட, கூடங்குளத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள்தான் கிழக்கு ஐரோப்பிய – ரஷ்யக் கூட்டணிகளை நம்பியுள்ளார்கள்.

அவசரத்துக்கு சில கெய்கர் கவுண்ட்டர்களாவது வாங்கி வைக்கலாம் என்றால், பட்ஜெட் இல்லை. கிடைத்த சொற்பத் தொகையும் ஒரு ரியாக்டர் திறப்பு விழாவுக்காக செலவாகிவிட்டது. பிரதமரே வந்து ரிப்பன் வெட்டினார்.

மூலைக்கு மூலை ஏற்கனவே பல கெய்கர் கவுண்ட்டர்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

அதைப்போல அந்த மும்பை உயர்குழுவைப் பற்றிய குறிப்பும், சினிமாவில் வருவதைப் போன்ற ஒன்று. அணுவிபத்துகள் போன்றவை நடக்கும்போது தீயணைப்பு, மருத்துவர்கள் இவையெல்லாம் வெகு எளிய காரணிகள். இந்தக் காரணங்களையோ, காரணிகளையோ தேடக்கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

அன்புடன்,
பாலாஜிராஜ் ரங்கநாதன்