‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அடுத்தவர் மேல் அதை விட மாட்டேன்…’ ‘எல்லா மொழியும் நன்று தமிழும் அதிலே ஒன்று.’ 67ல தமிழ் பேசினவங்க ஆட்சிக்கு வராங்க. இந்த மாதிரி கவிதைகளுக்கு இடம் கிடையாது. ஆனா நீங்க எழுதறீங்க. இதை காரணமாத்தான் எழுதனீங்களா?
சமஸ்கிருதம் படிச்சேன். தமிழ் படிக்கணும்கிறதுக்காகத் தமிழ் படிச்சேன். வித்வான் படிக்க ஆசைப்பட்டேன். முடியல. வித்வான் வகுப்புக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் படிச்சேன். தொல்காப்பியம் 17,18 வயசுலயே படிச்சிட்டேன். ராமாயணத்தல்லாம் முழுசா படிச்சிட்டேன். சங்க இலக்கியம் முழுவதும் முழுசா படிச்சிருக்கேன். இப்போகூட நற்றிணை படிச்சேன். எங்க அப்பா சமஸ்கிருதம் படிக்கிறவர். அதனால சமஸ்கிருதம் படிச்சேன். கம்பன, சங்கப் புலவன, ஆண்டாள, நவீன காலத்து சுந்தர ராமசாமிய, மௌனிய, ஆனந்த, உங்க கவிதைய, கனிமொழிய எப்படிப் படிக்கிறனோ அப்படி ராமாயணத்த அதனோட மொழியில, பகவத்கீதைய, சாகுந்தலத்த அதனோட மொழியில படிச்சேன். கன்னடத்தையும் நான் படிச்சேன். எல்லா மொழிகளும் சந்தோஷமாத்தான் இருந்தது, ஏற்றதாழ்வுகள் ஒண்ணும் கிடையாது. இந்த சந்தோஷத்த நாம கெடுத்துக்கக் கூடாது.
– ஞானக்கூத்தன். (காலச்சுவடு நவம்பர் 2009 இதழில் வெளிவந்த நேர்காணலிலிருந்து)
சென்ற சொல்வனம் இதழில் டேவிட் கிறிஸ்டல் என்பவர் ஆங்கிலத்தின் வளர்ச்சிக்கான காரணங்கள் குறித்துப் பேசிய ஒரு யூட்யூப் காணொளியைப் பார்த்தேன். ஆங்கிலம் இன்று உலகெங்கும் பரவி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சில வரலாற்று நிகழ்வுகளே அன்றி, அதற்கென்று இருக்கிற எவ்விதமானத் தனித்தன்மையும் அல்ல என்று அவர் சொல்கிறார். இது நியாயமான பேச்சாகத்தான் தெரிகிறது.
ஆனால் இதன் மாற்றுப் பார்வையாக, ராபர்ட் மெக்ரம் என்பவர் அண்மையில் Globish என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். கற்பதற்கு எளிதாக இருக்கிறது, பொதுவாக எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் பொருத்தமான சொற்களைக் கொண்டிருக்கிறது, நெறியான மொழி, கற்பனையைத் தூண்டும் மொழி, மற்ற மொழிகளிலிருந்து சொற்களை எடுத்துத் தன்வயப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டது – இவை எல்லாம் ஆங்கிலத்தின் பெருஞ்சிறப்பு என்று அவர் சொல்கிறார். இதனால் உலக மொழியாவதற்கு அதற்குத் தனித் தகுதி இருக்கிறதாம். இதனால்தான் ஆங்கிலம் அறிவிக்கப்படாத உலகப் பொது மொழியாகவும் இருகிறது என்கிறார் அவர்.
இது உலக மொழியைப் பற்றிய ஆராய்ச்சி என்றால், நம் நாட்டில் செம்மொழி கோஷம் சமீபத்தில் உரக்க ஒலித்து அடங்கியது. தமிழ் தொன்மையான மொழி என்பதிலோ, அதன் மொழி வளத்திலோ யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அது குறித்து, “எனது மொழி உலகின் முதன்மையான மொழி” என்ற உணர்வு பலரிடமும் வெளிப்பட்டது. விளையாட்டாக கூகுளைத் தட்டிப் பார்த்தால் பல்வேறு மொழியினரும் தங்கள் மொழியைக் குறித்ததொரு பெருமிதத்தில் இருப்பது தெரிகிறது. தங்கள் மொழி ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை உடையதாக இருக்கிறதென்று சொல்லிக் கொள்கிறார்கள். பிற மொழிகளைக் காட்டிலும் தங்கள் மொழி ஏதோவொரு விதத்தில் உயர்ந்தது என்று நினைக்கிறார்கள். மொழி தொடர்பான இவ்வித எண்ணங்கள் வேடிக்கையாக இருக்கின்றன.
எல்லா மொழிகளும் ஒவ்வொரு வகையில் தமக்கெனத் தனிச் சிறப்புடையனவே. பேசப்படும் வட்டாரத்தின் தேவைகளுக்கேற்ப அது புதுப் புது சொற்களைப் படைத்து வாழ்வு காண்கிறது.
உதாரணத்துக்கு, வட ஆஸ்திரேலியாவில் உள்ள Kuuk Thaayorre என்ற பூர்வகுடிகளை எடுத்துக் கொள்வோம். அவர்களிடையே பக்கபட்சம் இல்லை – இடம் வலம் தெரியாது, முன்னே பின்னே என்பனவும் கிடையாது – எல்லாம் திசைகள்தான்: ஒருவர் நிற்கிற திசையை வைத்து “உனது தென்மேற்கு காலில் ஒரு தேள் இருக்கிறது பார்!” என்பார்கள், அல்லது “உன் வடமேற்கு திசையில்…”. அதே தேள் அவனுக்குப் பின்புறம் நின்று கொண்டிருந்தால், நம்மைப் போல் “உன் பின்னால் ஒரு தேள் இருக்கிறது,” என்று அவர்கள் சொல்வதில்லை. அவர் நிற்கிற திரையைப் பொருத்து, “உனக்குக் கிழக்கில்…” அல்லது “உனக்கு வடக்கில் ஒரு தேள் இருக்கிறது” என்கிறார்கள். “எங்கே போகிறாய்?” என்று கேட்டால் கூட சரியான பதில் கிடையாது: “தென்தென்மேற்கு திசையில் கொஞ்ச தூரம்…”. திசைகள் விஷயத்தில் அவர்கள் பக்காவாக இருப்பதால் அவர்கள் எந்த இடத்திலும் வழி தவறி தடுமாருவதே கிடையாது. திசைகளைக் குறித்த அறிவு அவர்களுக்கு வலது கை மாதிரி.
ஒரு கதையை அட்டைகளில் வரைந்து காலக் கிரமப்படி அமைக்கச் சொன்னால் நாம் இடமிருந்து வலம் போகிற மாதிரி அமைப்போம். ஆனால் எப்படி உட்கார வைத்தாலும் கூக தாயோர் கதை கிழக்கு மேற்காக போகிற மாதிரிதான் அமைப்பார்கள்.
அவர்கள் இப்படி திசைப் பைத்தியமாக இருப்பது நமக்கு நகைக்கிடமாக இருக்கிறது இல்லையா? பாலைவனத்திலோ ஒரு காட்டிலோ நம்மை கொண்டு போய் விட்டால் நடந்த பாதைக்கே திரும்ப வந்து சுற்றிச் சுற்றியே சோறு தண்ணீரின்றி செத்தொழிவோம் (திரைப்படங்களில் அப்படிதான் காட்டுகிறார்கள்). ஆனால் திசைகளைக் குறித்த அறிவிருந்தால் கிழக்கு மேற்கு தவறுமா? நேர்ப்பாதையில் செல்வது எளிதாக இருக்கும்.
மொழிகள் அனைத்துமே தேவைகளை நிறைவேற்றத்தான் வளர்கின்றன என்றில்லை: நமக்கிடையே இருக்கிற சிறு திறன்கள் பயன்பாட்டில் வலுவாகி அதுவே நம்மை வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்கள் ஆகிற மாதிரி மொழிகளும் வளர்ச்சிப் பாதையில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றன.
கூக் தாயோர்தான் திசை விஷயத்திலும் கால விஷயத்திலும் அப்படி என்றால் சீனாவில் இருக்கிற மாண்டரின் மொழி பேசுபவர்கள் வேறு வகை. நமக்கு கடந்த காலம் பின்னால் இருக்கிறது, எதிர் காலம் முன்னால் இருக்கிறது, இல்லையா? அவர்களுக்கு எல்லாம் தலைகீழ். அவர்களது காலம் உடலை நீத்த உயிர் போல் கீழேயிருந்து மேலே போகிறது – அடுத்த மாசம் என்று நாம் சொன்னால், அவர்கள் கீழ் மாசம் என்று சொல்வார்கள். போன மாசம் மேல் மாசமாம். (இந்த எடுத்துக்காட்டின்படி பார்த்தால் அவர்களுடைய காலம் மேலிருந்து கீழிறங்குகிறது இல்லையா? Escherin கோட்டோவியம் மாதிரி காலத்தின் திசை கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே!)
“அவன் ஒரு புத்தகத்தைப் படித்தான்,” என்று நாம் சுலபமாக சொல்லி விட்டுப் போய் விடுகிறோம். இதுவே நீங்கள் ரஷ்யர்களாக இருந்தால், பாதியில் முடித்த புத்தகத்துக்கு வேறு படித்தான் வரும், முழுசாக படித்து முடித்த புத்தகத்துக்கு வேறு படித்தான் வரும். டர்கிஷ் மொழியில் இன்னும் மோசம்- “அவன் ஒரு புத்தகத்தைப் படித்தான்,” என்று நீங்கள் சுருக்கமாக சொல்லிவிட முடியாது. “அவன் ஒரு புத்தகத்தைப் படித்ததைப் பார்த்தேன்,” “அவன் ஒரு புத்தகத்தைப் படித்தாகக் கேள்விப்பட்டேன்,” என்று ஒரு முழு நேர நிருபரைப் போல உங்களுக்குத் தகவல் கிடைத்த விதத்தையும் சொல்லியாக வேண்டும்.
மொழிகள் தாமறியும் பாதையில் தனித்துச் செல்வதில்லை: அதன் பயனீட்டாளர்களாகிய நம்மையும் தம்மோடு துணைக்கழைத்துச் செல்கின்றன: மொழியோடு இயைந்த வாழ்வுக்கு நாம் கொடுக்கும் விலை நம் அறிவு. ஆமாம் மனமொத்த தம்பதியரைப் போல் சில நியாயங்களை மனமறியாத மாதிரி மறைத்துதான் வாழ வேண்டி இருக்கிறது. எப்படி என்கிறீர்களா?
கிரேக்கர்களும் ஆங்கிலேயர்களும் தம் மொழிக்காக செய்கிற தியாகத்தைப் பாருங்கள்-. ஆங்கிலம் பேசுபவர்கள் “அது ஒரு குறுகிய கால்வாய்,” “இது ஒரு நீண்ட பாலம்,” என்றெல்லாம் சொல்கிறார்கள், இல்லையா? கிரேக்கர்கள், “அது ஒரு சிறிய கால்வாய்,” “இது ஒரு பெரிய பாலம்,” என்றுதான் சொல்கிறார்கள் (இந்த விஷயத்தில் தமிழர்களாகிய நாம் இரண்டு பெண்டாட்டிக்காரர்களாக இருக்கிறோம் – எழுத்தில் ஆங்கிலேயர்களாக இருந்தாலும் பேச்சில் கிரேக்கர்கள்தான்). நம்மைப்போல் இல்லாததால் இவர்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கிறீர்களா?
ஒரு கணினியின் திரையில் நீண்டதாய் ஒரு கோடு, குறுகியதாய் ஒரு கோடு என்று இரண்டை வரைந்து இரண்டையும் அடுத்தடுத்து ஒரே கால அளவுக்குக் காட்டி விட்டு, எந்த கோடு நீண்ட நேரம் திரையில் நின்றது என்று கேட்டால், ஆங்கிலேயர்கள் நீண்ட கோடுதான் நீண்ட நேரம் தெரிந்தது என்று சொல்வார்கள். இந்தக் கேள்விக்கு சரியாக பதில் தருகிற கிரேக்கர்கள், பெரிய பானை சிறிய பானை இரண்டையும் திரையில் அடுத்தடுத்து சமகாலத்துக்குக் காட்டி மறைத்தால் மாட்டிக் கொள்வார்கள் – பெரிய பானை நிறைய நேரம் திரையில் தெரிந்தது என்பார்கள்.
மொழி விஷயத்தில் இது போன்ற கண்ணைக் கட்டும் தருணங்கள் குறைவே – மொத்தமாய்ப் பார்த்தால் மொழி நமக்கு வளம் சேர்ப்பதாகவே இருக்கிறது: ரஷ்யர்களை எடுத்துக் கொண்டால் வெளிர் நீல வண்ணத்தை ‘கொளுபாய்’ என்கிறார்கள், அடர் நீலத்தை ‘சிநியி’ என்கிறார்கள். இப்படி வர்ணங்களைக்கூட பாகுபடுத்திப் பார்ப்பதில் அவர்களுக்கு என்ன சௌகரியம் என்றால், வெவ்வேறு நீல நிறங்களைப் பார்க்கும்போது ரஷ்யர்கள் ரொம்ப உஷாராக அவற்றை சரியாக அடையாளம் கண்டு கொண்டு விடுகிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு இந்த நிறங்களைப் பிரித்தெடுக்க கால அவகாசம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அடையாளப்படுத்தத் தகுந்த சொல் இருப்பவை அனைத்தும் எளிதில் அறிவைச் சேர்கின்றன.
மொழி வேறு மனம் வெறு என்று நாம் நினைக்கிறோம்: ஆனால் அது விவாதத்துக்குரிய விஷயமாகி விட்டது. நாம் பேசும் மொழி, அத்தோடு நின்று விடாமல் நமக்காகப் பேசுகிறது. எதை எப்படிப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது என்றுகூட சொல்லலாம்.
உதாரணமாக ஸ்பானிஷ் மொழியில் சாவிக்குப் பெண்பால் தந்திருக்கிறார்கள். அவர்களிடம் சாவியை விவரிக்கும் சொற்கள் என்னென்ன என்று கேட்டால், “பொன்னானது” “நளினமானது” “சிறியது” “அழகானது” “பளபளப்பானது” என்ற சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் சாவியை ஆணாய்ப் பார்க்கும் ஜெர்மானியர்களோ, அது குறித்து, “கரடுமுரடானது” “உலோகத்தாலானது” “பயனுள்ளது” “கனமானது” என்றெல்லாம் சொல்கிறார்கள். சாதாரண சாவி கூட மொழியின் காரணமாக எப்படி வெவ்வேறு குறியீடுகளாக மாறுகிறது பாருங்கள்.
சாவியை விடுங்கள்- ரொம்ப சிறிய வஸ்து. பாலத்துக்கு வாருங்கள். சாவியை ஆணாய்ப் பார்க்கும் ஜெர்மானியர்களுக்கு பாலம் ஒரு பெண் போல் (ஸ்பானிஷ் சாவியைப் போல என்று சொல்லத் தோன்றுகிறது) – பாலத்தை “அழகியது” “நளினமானது” “மென்மையானது” “சன்னமானது” என்றெல்லாம் கவிஞர்களாக மாறி வர்ணிக்கிறார்கள் அவர்கள். ஆனால் அதே பாலமோ ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களின் பார்வையில் ஒரு ஆணாக மாறி பேராண்மைக் கோலம் பூண்கிறது – “பெரியது”, “நீண்டது”, “வலுவானது”, “உயர்ந்தது”, “ஆபத்தானது” என்பனவற்றைப் பாலத்தைக் குறிக்கும் இணைச்சொற்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஸ்பெயின்காரர்களுக்கு நளினமாயிருக்கும் சாவி ஜெர்மானியர்களுக்கு கரடுமுரடானதாகத் தோற்றமளிக்கும் மொழி விளையாட்டை வியப்பதன்றி நாம் என்ன செய்ய முடியும்? இதில் எது மேன்மையானது என்று கேட்டால், அந்த கேள்வியே அபத்தமாகத் தோன்றுகிறது அல்லவா?
மொழி என்பது நம் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், காசு கொடுத்துப் பொருள் வாங்குகிற மாதிரி, எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்காக மட்டும் மொழியைப் பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை. நம்மை அறியாமல் மொழி நம் மூளையை மயக்குகிறது. நம் மனப்போக்கையும் மாற்ற வல்லதாக இருக்கிறது.
அரபி மற்றும் ஹீப்ரு தெரிந்த இஸ்ரேலிய அரேபியர்களை வைத்து ஒரு சோதனை செய்திருக்கிறார்கள். அந்த ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அரேபிய மொழியில் சோதனையை செய்யும்போது ஏறத்தாழ எல்லா அரேபியர்களும் நல்லவர்கள், பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதே சோதனை ஹீப்ரு மொழியில் நடத்தப்படும்போது அரேபியர்கள்தான் நல்லவர்கள், இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற நிலையை அவ்வளவு தீவிரமாக எடுக்கவில்லையாம். நாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது நம் விருப்பு வெறுப்புகளையும் மாற்றுவதாக இருக்கிறது!
பேசும் மொழிகள் மட்டுமல்ல, உவம உருமேயங்களும்கூட நம் மனநிலையோடு உடலமைப்பையும் மாற்றியமைக்கின்றன. கடந்த காலத்தைப் பற்றி நினைப்பவர்கள் நினைவோடையின் போக்கையொட்டி பின்னோக்கிச் சாய்கிறார்கள்; எதிர்காலத்தை சிந்திப்பவர்கள் சிந்திக்கும்போதில் முன்னோக்கிச் சாய்கிறார்கள். கைகழுவும்போது நம் மனதிலிருக்கும் குற்ற உணர்வும் நீங்குகிறது. கனமான விஷயங்கள் சுமையாகின்றன: அதிக எடையைக் கையில் வைத்திருப்பவர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள்; தீவிரமான புத்தகங்கள் எடை கூடியனவாக உணரப்படுகின்றன.
மொழி, சிந்தையையையும் உலகையும் நம்மையும் நாம் காணும் பார்வையைத் தீர்மானிக்கிறது என்ற கோட்பாட்டுக்கு Sapir-Whorf hypothesis என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அண்மையில் வெளிவந்துள்ள ஒரு ஆய்வின் முடிவுகள் இதை உறுதி செய்யும் வகையில் உள்ளன – பேசும் மொழிகள்தான் என்றில்லை – சைகை மொழியும்கூட உலகை நாமறியும் வகையை, உலகில் நாமியங்கும் முறையை பெருமளவில் தீர்மானம் செய்கின்றன.
1970களில் நிகராகுவாவிலிருந்த பேச இயலாச் சிறுவர்கள் சிறப்புப் பள்ளிகளில் படிக்கையில் தாமாகவே ஒரு சைகை மொழியைக் கண்டுபிடித்தார்கள். இது காலப்போக்கில் மற்ற மொழிகளைப் போல் வளர்ந்தது. இம்மொழியின் வளர்ச்சியும் இயல்பும் மொழியியல் வல்லுனர்களின் ஆய்வுக்கு இப்போது ஒரு அரிய வாய்ப்பைத் தந்திருக்கிறது.
துவக்க காலகட்டங்களில் இம்மொழியில் இடம் வலம் என்ற சொற்களுக்கானத் தகுந்தக் குறியீடுகள் இல்லை. பத்து வருடங்களில் இச்சிறுவர்கள் இடம்-வலம் இவற்றைக் குறிக்கும் சமிக்ஞைகளைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் இடம் வலம் என்ற சொற்களை அறியாமல் வளர்ந்த குழந்தைகளுக்கும் அறிந்து வளர்ந்த குழந்தைகளுக்கும் இடையே பிற்காலத்தில் ஒரு பெரிய வேறுபாடு காணப்படுகிறது:
இவர்களின் கண் முன்னரே ஒரு அறையில் ஒரு பொருளை ஒளித்து வைத்து விட்டு இவர்கள் கண்ணைக் கட்டி சுற்றி விடப்பட்டார்கள். இடம் வலம் என்ற சொற்களை அறியாது வளர்ந்தவர்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பொருளைக் கண்டு பிடிக்க மிகவும் தடுமாறினார்கள். இத்தனைக்கும் அவர்கள் தற்போது இந்த சொற்களைப் பயன்படுத்துபவர்கள். ஆனால் கல்விப் பருவத்திலேயே இந்த சொற்களுக்கான குறிகளைக் கற்றுத் தேர்ந்த, இவர்களைவிட பத்து வயதே இளையவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை: அறையில் இருக்கிற பொருட்களை வழிகாட்டிகளாக வைத்துக் கொண்டு (மேசைக்கு இடப்பக்கம் ஒளித்து வைத்திருக்கிறார்கள்) மிக எளிதாக மறைத்து வைத்த பொருளைக் கண்டு பிடித்து விட்டார்கள்.
மொழி நமக்கு மூச்சு என்கிறோம். தப்பில்லை, அது நமது பேச்சாக மட்டுமில்லாமல் பார்வையாகவும் இருக்கிறது. எனக்கு எப்படி தமிழோ அதுபோல் ஒவ்வொருத்தருக்கும் தத்தமது மொழி அமைந்துள்ளது. என் தாயின் உயர்வை நான் நினைவுகூரும்போது மற்றவர்களின் தாய்மார்களோடு அவரை ஒப்பிடவோ அல்லது அவர்களை தாழ்த்திப் பேச வேண்டிய தேவையோ எனக்கு இல்லை. சொல்லப்போனால், பொதுவாகத் தாய்மை குறித்த என் எண்ணம் எதுவோ அதுவே என் தாய்க்கு நான் செலுத்தும் மரியாதை.
அது போலவே மொழியும். காலத்தால் முற்பட்டதாக இருக்கலாம், உலகில் மிக அதிக பேர் பேசுவதாக இருக்கலாம், மற்ற மொழிகளில் சொல்லப்பட முடியாததை சொல்லும் திறன் கொண்டதாக இருக்கலாம், சிறந்த இலக்கியங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம், அல்லது பூர்வகுடிகள் என்று சொல்கிறோமே அவர்களது தாத்தன் முப்பாட்டன் காலத்திலிருந்து வழி வழியாக வந்த, எழுத்து வடிவமே இல்லாத, அழிந்து கொண்டிருக்கும் மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் – எப்படி இருந்தாலும் எல்லா மொழிகளும் மானிடர்களாகிய நமக்கு உரியனவே. இவை அனைத்தும் நம் மரியாதைக்குத் தக்கனவே. இவற்றில் உயர்வு தாழ்வு பாராட்டுவது நம் பகுப்புணர்வைக் காட்டுமே அன்றி பகுததறிவைக் காட்டாது.
மொழியியல், உலக இலக்கியம், பன்னாட்டு அரசியல், அறிவியல் இவற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் மித்திலன், உலக இணைய வெளியில் கிடைக்கும் முக்கியமான படைப்புகளைத் தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் தொடர்ந்து பகிர்ந்துகொண்டு வருகிறார். அவற்றை இங்கே படிக்கலாம்: http://twitter.com/kalimankalayam
சுட்டிகள்:
EDGE- HOW DOES OUR LANGUAGE SHAPE THE WAY WE THINK? : By Lera Boroditsky
New York Times- Abstract Thoughts? The Body Takes Them Literally By NATALIE ANGIER
Science Daily: Person’s Language May Influence How He or She Thinks About Other People.
Discover Magazine: New Nicaraguan sign language shows how language affects thought.
One Reply to “யாமறியும் மொழிகள்”
Comments are closed.