ஒரு நிஜமான Sting Operation
மரவள்ளிக் கிழங்கு வளரும் நாடுகளின் ஏழை மக்களின் முக்கிய சத்துணவு. தாய்லாந்தில் முக்கியமான பயிர். குறிப்பாக சிறுநிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு. மட்டுமல்ல தாய்லாந்தின் 60 சதவிகித ஏற்றுமதிப் பொருளும் அதுதான். பல வளரும் நாடுகளின் உணவு பாதுகாப்பு தாய்லாந்தின் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை நம்பி இருக்கிறது. இதற்குதான் இப்போது ஒரு வில்லன் பூச்சி வந்திறங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா மூலமாக ‘தற்செயலாக’ வந்து இறங்கியிருக்கும் மாவுப்பூச்சி 2,00,000 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை அழித்துவிடக் கூடுமென கணிக்கப்படுகிறது. ஒரு வழி இருக்கிறது. அமெரிக்கா வியட்நாம் காடுகளில் செய்த இராசயனப் போரை போல ப்ரோஃபனோபஸ்,அசாடிராக்டின் கெமிக்கல்களைத் தெளித்து புஷ் பாணியில் மாவுப்பூச்சிக்கு எதிரான போரில் இறங்கிவிடலாம். பெருச்சாளிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக மரவள்ளிக் கிழங்கு மாவில் விஷம் ஏறிவிடும். எனவே விரைவான சுற்றுச்சூழலுக்கு உகந்த விதமாக மற்றொரு வித பூச்சிக் கட்டுப்பாட்டில் இறங்கியுள்ளனர் தாய்லாந்து பூச்சியியலாளர்கள். இரண்டு மில்லிமீட்டரே உள்ள குழவிகளை பெரிய அளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பிரதேசங்களில் பரப்பப் போகிறார்கள். உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப வரலாற்றில் மற்றொரு முக்கிய படலம் நிகழ்ந்தேறப் போகிறது. (நம் ஊரிலும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் மாவுப்பூச்சி பிரச்சனை இருக்கிறது. ஏக்கருக்கு 12 முதல் 15 டன் விளைய வேண்டிய மரவள்ளிக்கிழங்கு 5 டன்னாக குறைந்து ஸ்டார்ச் விலை ஏறுகிற கொடுமையை ஈரோடு சந்தித்தது வெகு அண்மையில்தான்) எனவே நம் ஊர் விவசாயிகளுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்தத் தகவலை உங்க ஊர் வேளாண்மை விரிவாக்க மையத்திலயும் சொல்லுங்கள்.
சுட்டி:
http://www.eurekalert.org/pub_releases/2010-07/bc-sma071310.php
ஒரு வித்தியாசமான விண்வெளிக்கழகம்
இந்திய விண்வெளி கழகம் (ISRO) ஒருவிதத்தில் உலகத்திலேயே மிகவும் வித்தியாசமான விண்வெளிக்கழகம். உலக விண்வெளி வரலாற்றிலேயே என்று சொன்னால் சன்டிவித்தனமாகத் தோன்றலாம். இருந்தாலும் இந்த அளவு மக்கள் தொடர்பு மற்றும் வளர்ச்சிப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு விண்வெளி கழகத்தைச் சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறிதான். அதுவும் வளரும் நாட்டின் விண்வெளிக்கழகம் என்கிற முறையில் இந்த அமைப்பு பிற வளரும் நாடுகளுக்கு ஆதர்சமாகவும் விளங்குகிறது என்பதையும் சொல்ல வேண்டும். அவர்களது இணையதளத்தில் செயற்கை கோள் பயன்பாடுகள் குறித்த ஒரு ஸ்லைட் ஷோ இருக்கிறது. அருமையான படங்கள். உண்மையிலேயே பெருமைப் படலாம். ஆனால் ஒவ்வொன்றையும் இன்னும் விளக்கமாக ஒரு தலைப்பு அல்லது விளக்கம் கொடுத்து செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும் இணையதளம் இணைய பயன்பாட்டு இந்தியர்களுக்கும் போகிற மாதிரி டெஸ்க்டாப் தீம் வால்பேப்பரெல்லாம் அவர்களுடைய செயற்கைகோல் புகைப்படங்களிலிருந்து செய்ய முடியும். இங்கு சொடுக்கிப் பாருங்கள் இது புரியும்.
லியோ டால்ஸ்டாய் – அஸ்டோபோவா ரயில்நிலையத்தில் நிகழ்ந்த மரணம்: வாழ்ந்த காலத்திலேயே மிகவும் புகழோடு இருந்த டால்ஸ்டாயின்
சாவு, மிகவும் விரிவாகப் பதிவு செய்யப்பட்ட ஒன்று. தன்னுடைய மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டிலிருந்து ‘தப்பி’ ஓடிவந்த லியோ டால்ஸ்டாய், அஸ்டோபோவா என்ற ஊரின் ரயில்நிலைய அறையில் நிமோனியா காய்ச்சலால் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் தருவாய்க்குச் சென்றார். அந்த செய்தி ரஷ்யாவெங்கும் பரவிப் பல செய்தியாளர்கள் அந்த ரயில்நிலையத்தில் குவிந்தார்கள். தொடர்ந்து சிறு, சிறு தகவல்களைத் தந்தி மூலம் தங்கள் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அப்படி அனுப்பப்பட்ட தந்திகள் மட்டுமே பல ஆயிரங்களைத் தாண்டியிருக்கின்றன. லியோ டால்ஸ்டாய் ஏற்கனவே தன்னுடைய வெளிப்படையான கருத்துகளின் மூலம் ஆளும் ரஷ்யப் பேரரசையும், பழமைவாத சர்ச்சையும் பகைத்துக்கொண்டார். ரஷ்ய அரசு, டால்ஸ்டாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செய்தாலும், அவர் மறைவின் மூலம் பெரிய கொந்தளிப்போ, கலவரமோ நிகழாதவாறு அதை ஒரு சிறிய நிகழ்வாகவே வைத்துக்கொண்டது. சர்ச்சோ, டால்ஸ்டாய் இறைவனோடு சமாதானம் செய்து கொள்ளாத பாவி என்று அறிக்கை வெளியிட்டது. இப்படி டால்ஸ்டாய் இறந்த நிகழ்வினை மிக நுணுக்கமாக ஆராய்ந்து ‘The Death of Tolstoy: Russia on the Eve, Astapovo Station’ என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் வில்லியம் நிக்கெல். அதைக்குறித்ததொரு கட்டுரை இங்கே: http://online.wsj.com/article/SB10001424052748703426004575339433159959718.html
நம்பகத்தன்மையை இழக்கும் ஹோமியோபதி: ஹோமியோபதி மருத்துவத்தின் நம்பகத்தன்மையைக் குறித்த விமர்சனம் ஏற்கனவே உலகெங்கும் இருந்தாலும், சமீபகாலமாக ஐரோப்பாவில் மிக வெளிப்படையாகவே ஹோமியோபதி எதிர்ப்பு தொடங்கிவிட்டது. ஹோமியோபதி மருத்துவம் உண்மையில் சர்க்கரை உருண்டைகளைத் தந்து மக்களை ஏமாற்றுகிறது, அதற்கு எந்த அறிவியில் பின்னணியும் இல்லை, அரசாங்கம் ஹோமியபதி மருத்துவத்துக்குக் காப்பீட்டுப் பணம் தரக்கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. 1023 என்றொரு அமைப்பின் உறுப்பினர்கள் சென்ற வாரம் ஒரு பொது இடத்தில் கூடி, மன அழுத்தம், உணவு விஷம் ஆகியவற்றைத் தீர்க்கக்கூடிய ஹோமியோபதி மருந்துகளை பாட்டில் கணக்கில் உட்கொண்டு, அதனால் எந்தவித விளைவும் இல்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு: http://www.spiegel.de/international/germany/0,1518,706971,00.html
சென்னை – புதிய டெட்ராய்ட்? ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’,
“இந்தியாவின் சென்னை, உலகின் புதிய மோட்டார் நகரமாகிக் கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளது. வாகன உற்பத்தியாளர்களும், உதிரி பாக விற்பனையாளர்களுமான ஃபோர்ட், ஹ்யூண்டாய் போன்ற உலகின் பிரும்மாண்ட கம்பெனிகள் பில்லியன் கணக்கில் நவீன தொழிற்சாலைகளில் முதலீடு செய்து கொண்டிருக்கின்றன. ஏற்றுமதிக்கும், இந்திய உபயோகத்திற்குமான சிறிய கார்களை உற்பத்தி செய்யப் போகின்றன. “ஃபோர்ட் கம்பெனிக்கு உலகின் இரு அதி முக்கிய சந்தைகளில் ஒன்று இந்தியா” என்கிறார் அதன் இந்திய நடவடிக்கைகளின் நிர்வாக இயக்குனர். இரண்டு இலட்சம் வேலைகளையும், வருடத்திற்கு பதினைந்து இலட்சம் புதிய கார்களையும் சென்னை தரப் போகிறது என்கிறது இந்தச் செய்தி.