சென்ற வாரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் சென்றிருந்தார். பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது ஒரு பக்கம்; அதைவிட மோசமாகத் தனி மனிதத் தாக்குதல்களும் பெருத்த பின்னடைவும்தான் ஏற்பட்டுள்ளது என்பது வருத்தமான விஷயம்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி பத்திரிகையாளர் சந்திப்பின்போது எஸ்.எம்.கிருஷ்ணாவை அவமதித்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. தொலைக்காட்சியில் காண்பித்த காட்சிகளில் குரேஷி கோபத்தில் கொதித்து வாயிலிருந்து நுரை தள்ள ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கிருஷ்ணா சரியாகத் தயாரித்துக்கொண்டு வரவில்லை என்றார். அவ்வப்போது தில்லியிலிருந்து அவருக்கு போனில் தகவல்கள் வந்துகொண்டிருந்தன என்றார். அமைதி பற்றிய எந்தவித ஆர்வமும் இல்லாமல் 26/11 மும்பை தாக்குதல் பற்றியே இந்தியா பேசிக்கொண்டிருந்தது என்பது குரேஷியின் கோபம்.
கிருஷ்ணா இதையெல்லாம் மறுத்தார்.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் விளக்கி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏனெனில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை இப்பொது நடக்கும் வழியில் நடந்தால் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவராது. இதைப் புரிந்துகொள்ள, இரு பக்கத்திலும் உள்ள பாத்திரங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியத் தரப்பில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பிரதமரின் அலுவலகத்தின் (பி.எம்.ஓ) முதன்மைச் செயலர் டி.கே.ஏ.நாயர், உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் முக்கியப் பங்காற்றுவார்கள். தவிர இந்த இரு அமைச்சரகங்களின் பிற செயலர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோரும் ஏதோ சில வகைகளில் பங்களிக்கலாம். உளவுத்துறை, பி.எம்.ஓ அலுவலகம் வழியாகவும் உள்துறை அமைச்சகம் வழியாகவும் பங்களிக்கும். பொதுவாக இந்திய ராணுவம் நேரடியாகப் பங்கு வகிக்காது. இந்தியக் குடியரசுத் தலைவர் இதில் எந்தவிதப் பங்கும் வகிக்கமாட்டார். ஆனால், அனைத்துக்குமாகச் சேர்த்து மன்மோகன் சிங்கே பொறுப்பாளி ஆவார்.
பாகிஸ்தான் தரப்பில் இதுபோன்ற நிலைமை கிடையாது. பாகிஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி ஒரு பக்கம், பிரதமர் யூசுஃப் ரேசா கிலானி ஒரு பக்கம். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி கிலானியின் ஆளாகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். தவிர, பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகத் தலையிடும். ஐ.எஸ்.ஐ தன் பங்குக்கு மதிப்பு கூட்டும். பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தன் குறைகளைச் சொல்வார். ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதன் காரணமாக பாகிஸ்தான் தரப்பு பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்த முகத்தைக் கொண்டிருக்காது.
இது ஒரு பக்கம் என்றால் அடுத்ததாக நாம் கவனிக்கவேண்டியது இலக்கைப் பற்றி.
அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா அடையவேண்டியதாக நினைக்கும் இலக்கு என்ன? இந்தியாவைப் பொருத்தவரை இலக்குகள் தெளிவாக உள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படவேண்டும். காஷ்மீரில் பாகிஸ்தான் கலவரத்தைத் தூண்டிவிடுவதை நிறுத்தவேண்டும். காஷ்மீர் இந்தியாவுடையது; அதில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை. பாகிஸ்தானில் உள்ள இந்திய விரோதத் தீவிரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ஆதரிக்ககூடாது; அவர்களுக்கு இடம் கொடுத்து நிதி உதவிகளைத் தரக்கூடாது. இவைதான் இந்தியாவின் முக்கியமான நோக்கங்கள். இவற்றுக்கு அடுத்துதான் மற்ற விஷயங்கள்.
ஆனால் பாகிஸ்தானின் இலக்குகள் எவை? காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தம் அல்ல; எனவே காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறவேண்டும். பலுசிஸ்தானில் இந்தியா விஷமம் செய்வதை நிறுத்தவேண்டும். இவைதான் பாகிஸ்தானின் அரசின் கொள்கைகள். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் இலக்கு என்ன? இலக்கற்ற இலக்கு அது. இந்தியாமீது வன்மம்; அவ்வளவுதான். ஐ.எஸ்.ஐயின் இலக்கு? இந்தியா பற்றி எரியவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் என்ன? இந்தியா உலகில் எந்தவிதத்திலும் முன்னேறிவிடக் கூடாது. மும்பை 26/11 போல மேலும் பல அநியாயங்களை ஜிஹாத் என்ற பெயரில் செய்யவேண்டும். இப்படி எண்ணற்ற இலக்குகள் இருக்கும்போது குரேஷி என்ன செய்வார்? எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாதவகையில் இழுத்தடிப்பது மட்டும்தான் அவர்களது நோக்கமாக இருக்கும்.
மூன்றாவதாக, அமைதியில் யாருக்கு விருப்பம்? அமைதியால் யாருக்கு லாபம்?
அமைதியால் லாபம் அடையப்போவது இந்தியாதான். இந்தியா செய்யும் ராணுவச் செலவுகள் குறையும். அதனால் வளர்ச்சிப் பணிகளை அதிகரிக்கலாம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்பட்டால் அது பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஐ.எஸ்.ஐக்கும் பெருத்த பின்னடைவையே தரும். பாகிஸ்தான் ரணுவத்தின் பலமே இந்தியாவின் அச்சுறுத்தல்தான். அதை எடுத்துவிட்டால்?
அமைதி ஏற்பட்டால் அதனால் பாகிஸ்தான் மக்களுக்கு என்ன பயன் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. காரணம், பாகிஸ்தானில் தொடர்ச்சியாக இரு பத்தாண்டுகளுக்கு எந்தவிதமான அமைதியும் இருந்ததில்லை. ராணுவ ஆட்சி அவ்வப்போது வந்தவண்ணம் இருப்பதாலும், கல்வியறிவின்மை, நிலச்சுவாந்தார்களின் இரும்புப்பிடி, மதவாதிகளின் பழமைவாதம், தீவிரவாத இஸ்லாமியர்களின் வளர்ச்சி, நாடெங்கும் தற்போது நடக்கும் வன்முறைத் தாக்குதல்கள் ஆகிய காரணங்களால் பாகிஸ்தானியர்களுக்கு அமைதியான நாட்டில் வாழ்வது என்றால் என்ன என்றே தெரியாத நிலை. இதனால் அமைதியைவிட வெற்று கோஷங்களுக்கே அவர்கள் முன்னுரிமை தருவார்கள்.
இந்த நிலையில் அதிகாரபூர்வ இந்தியா-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை. அப்படியென்றால் வேறு என்னதான் செய்யலாம்? அடித்துப் பணியவைக்கமுடியாது. மாறாக, பாகிஸ்தானில் உள்ள பங்குதாரர்களை நம் பக்கம் இழுக்கலாம். கலாசார ரீதியில் சினிமாக்காரர்களை இங்கும் அங்கும் அனுப்பியெல்லாம் இதனைச் சாதிக்கமுடியாது. டிராக் 2 டிப்ளமசி எல்லாம் கவைக்குதவாத விஷயங்கள். இரு பக்கத்திலிருந்து வருவோரும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாங்க்ரா ஆடிவிட்டு திரும்பிவிடுவார்கள். உபயோகமான காரியங்கள் என்றால் அவை இதுபோன்ற ‘ஷோ’வாக இல்லாமல் அடிமட்டத்தில் பயன்தரக்கூடியதாக இருக்கும்.
முதலில் காஷ்மீர். இந்தப் பிரச்னையை எளிதில் தீர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது. எனவே இதை முதலில் தீர்த்தால்தான் மற்றவற்றைப் பற்றிப் பேசலாம் என்பதை ஏற்கமுடியாது. எனவே காஷ்மீர் தவிர்த்த பிறவற்றில் இந்தியா கவனம் செலுத்தவேண்டும். அமைதியை விலைகொடுத்து வாங்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
கல்வி: உயர்கல்வியைப் பொருத்தமட்டில் பாகிஸ்தானில் சொல்லிக்கொள்ளும்படியான கல்வி நிலையங்கள் கிடையாது. எனவே பெரும்பான்மை பாகிஸ்தானியர்கள் உயர்கல்வி கற்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும்தான் செல்கிறார்கள். ஆனால் அதற்கு ஆகும் செலவு அதிகம். சாதாரண பாகிஸ்தானியர்களால் இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. எனவே பாகிஸ்தானியர்களின் உயர் கல்விக்கான விசாக்களை இந்தியா தாராளமாக வழங்கவேண்டும். கூடவே நிறைய உதவித்தொகையையும் தரவேண்டும். இப்படி உதவி பெறும் ஒவ்வொரு குடும்பமும் இந்தியாவை நன்றியோடு பார்க்கும். இதிலும் சில பிரச்னைகள் இருப்பதாக வலதுசாரிகள் நினைக்கலாம். மாணவர் வடிவில் தீவிரவாதிகள் இந்தியா வந்து குண்டுவைப்பார்கள் என்று நினைக்கலாம். ஆனால் குண்டு வைக்க முடிவெடுப்பவர்களுக்கு இந்தியாவின் கடற்கரை இருகரம் நிட்டி வரவேற்கிறது. சாதாரண மீன்பிடிப் படகே போதும்.
ஆண்டுக்கு 50,000 முதல் ஒரு லட்சம் இடங்களை பாகிஸ்தான் மாணவர்களுக்கு என்று இந்தியா தரலாம். இதில் பாதிப் பேருக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் இந்திய அரசு இலவசமாகக் கொடுத்துவிடும்.
வர்த்தகம்: இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு எண்ணற்ற சலுகையும் முன்னுரிமையும் தரலாம். பலவிதங்களின் இதனைச் செய்யலாம். 100% repatriation; 10 ஆண்டுகளுக்கு முழுமையான வரிவிலக்கு. தாங்கள் தயாரிக்கும் பொருள்களை எந்தவித சுங்கவரியும் செலுத்தாமல் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துகொள்ளலாம். தங்களுக்குத் தேவையான எந்த கேபிடல் பொருளையும் (அதாவது தயாரிப்புக்கு உதவும் மெஷின்களை) பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் எந்தவித வரியும் செலுத்தாமல் இறக்குமதி செய்துகொள்ளலாம். இதனால் என்ன நன்மை? பாகிஸ்தானின் பொருளாதாரம் மேம்படும். பாகிஸ்தானிய முதலாளிகளுக்கு இந்தியாவின் அமைதியில் ஒரு பங்கு வரும். இந்தியாவில் அமைதி குலைந்தால் அதனால் தங்கள் நிறுவனங்களின் லாபம் குறையும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். அதனால் உடனடியாக ஐ.எஸ்.ஐக்கு போன் போட்டு, ஒழுங்காக நடந்துகொள்ளுமாறு அவர்கள் சொல்லப்போவதில்லை. ஆனால் அரசியல்வாதிகளிடம் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். சரியான தகவல் போகவேண்டியவர்களுக்குப் போய்ச் சேரும்.
இந்த வாய்ப்பை பாகிஸ்தான் நிறுவனங்களுக்குத் தருவதற்கு பதிலாக நாம் நமக்கென எதையும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்களாகக் கொடுத்தால் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடன்: இதைப்பற்றி முன்னரே நான் எழுதியுள்ளேன். இந்தியாவிடம் நிறைய அந்நியச் செலாவணிக் கையிருப்பு உள்ளது. அதை உபயோகமான முறையில் பயன்படுத்தலாம். அதில் ஒன்று பாகிஸ்தானுக்கு டாலர்களைக் கடனாகக் கொடுப்பது. சீனாவும் அமெரிக்காவும் சர்வதேச நிதியமும் உலக வங்கியும் உதவவில்லை என்றால் பாகிஸ்தான் தினம் தினம் திவாலாகும். இவர்களுடன் இந்தியாவும் பாகிஸ்தானுக்குச் சேர்ந்து உதவினால், பாகிஸ்தான் அரசாங்க மட்டத்தில் இந்தியாமீது மரியாதை உண்டாகும். அந்தப் பணத்தைக் கொண்டே இந்தியாமீது அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்று நினைப்பது அபத்தம். பாகிஸ்தானில் state actors, non-state actors என்று இரண்டு தரப்பினர் உள்ளனர். ஐ.எஸ்.ஐயும் பாகிஸ்தான் ராணுவமும் state actors என்ற தரப்பில் வந்தாலும் பெரும்பாலான தாக்குதல்களுக்கு non-state actors தான் காரணம். நாம் எந்த உதவிகளைச் செய்யாவிட்டாலும் அவர்கள் தொடர்ந்து இந்தியாமீது தாக்குதலைச் செய்யத்தான் போகிறார்கள். ஆனால் வெளிப்படையான உதவிகள் வரும்போது அதனை பொதுமக்கள் தெரிந்துகொள்வதை யாராலும் தடுக்கமுடியாது.
ஆரம்பத்தில் இதுபோன்ற உதவிகளைக் கண்டுகொள்ளாமல், அல்லது இதற்குத் தப்பர்த்தம் கொடுத்துதான் விளக்குவார்கள். பாகிஸ்தான் ஊடகங்களும் திடீரெனெ தரப்பு மாறாது. ஆனால் நாளடைவில் இந்தியாவின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டபின் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.
காஷ்மீர்: வேறு வழியில்லை. இங்கு நாம் வந்துதான் ஆகவேண்டும். காஷ்மீர் பிரச்னையை ஊதிவிட்டுப் பெரிதாக்குவதுதான் பாகிஸ்தான் அரசின், ராணுவத்தின், ஐ.எஸ்.ஐயின் வேலையாக இருந்தது. பிறகுதான் ஜிஹாதி குழுக்கள் இணைந்துகொண்டார்கள். அதற்கு ஏற்றார்போல, இந்தியாவிலும் காஷ்மீர் பிரச்னையை எதிர்கொள்ளத் தேவையான மனநிலை இல்லை. இந்திய வலதுசாரிகள், தேசியவாதிகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டுத்தான் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க நாம் முனையவேண்டும். காஷ்மீரிகள் இந்தியாவின் ஓர் அங்கமாகத் தங்களைக் கருதுவதில்லை – அதாவது காஷ்மீர் பள்ளத்தாக்கு காஷ்மீரி முஸ்லிம்கள். அவர்களைத் தனியாக்கி, பிற காஷ்மீர் பகுதிகளை – ஜம்மு, லடாக் பகுதிகளை – இந்தியாவுடன் உடனடியாக முழுமையாக இணைத்துக்கொள்ளவேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிப் பிரச்னையை ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் பிரச்னையாக ஆக்கவேண்டியதில்லை. அதுபோலவே, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்/ஆஸாத் காஷ்மீர் என்பது முற்றிலுமாக இந்தியாவின் கையை விட்டுப் போய்விட்டது என்பதை இந்தியர்கள் உணரவேண்டும். தினம் தினம் இந்திய ராணுவம் காஷ்மீர் புதைகுழிக்குள் சிக்கிக்கொள்வதை நாம் அனுமதிக்கக்கூடாது. இதனால் வெறுப்புதான் வளர்கிறது. அதை வெற்றிகரமாகச் சாதிப்பதில் ஜிஹாதிக் குழுக்கள் சிறந்து விளங்குகின்றன. அதற்கு இந்திய ராணுவத்தின் அணுகுமுறையும் துணைபோகிறது.
ராணுவ நடவடிக்கையால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. மேலும் மேலும் வெறுப்பைத்தான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம்.
எனவே காஷ்மீர் தொடர்பாக பலதரப்புப் பேச்சுவார்த்தையில் இறங்குவதில் தவறே இல்லை (இந்திய அரசு, பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் பள்ளத்தாக்குக் குழுக்கள், தேசிய கான்ஃபரன்ஸ் கட்சி, பிடிபி கட்சி). அதே நேரம் அந்நிய நாடுகளின் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்வதிலும் தவறே இல்லை. ஏதோ ஒருவகையில் இந்தியாவுக்கு அமைதி வேண்டும். சில பத்தாண்டுகள் கழித்து ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படலாம். எனவே ஒரே கருத்தையே பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கவேண்டியதில்லை.
One Reply to “பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா?”
Comments are closed.