தூணிலும் போஸான், துரும்பிலும் போஸான்!

சினிமா நடிகைகளைப் பற்றித்தான் அவ்வப்போது ஏதாவது வதந்திகள் எழும்பும்; விஞ்ஞானிகள் என்பவர்கள் சீரியஸான ஆராய்ச்சிக்காரர்கள்; ஷேவ் செய்யக்கூட நேரமில்லாதவர்கள். எனவே சிறு பிள்ளைத்தனமாகக் கிசுகிசு எல்லாம் பேச மாட்டார்கள் என்று நினைப்பவர்கள் அனைவரும் கை தூக்குங்கள்… அத்தனை பேரும் தப்பு!

இந்த வாரத்தின் விஞ்ஞானப் பரபரப்பே ‘அமெரிக்காவில் ஹிக்ஸ் போஸானைக் கண்டு பிடித்து விட்டார்களாம்‘ என்பதுதான். இந்த வதந்தியைக் கொளுத்திப் போட்டவர் இத்தாலியில் வசிக்கும் டொம்மாஸோ டொரீஜோ என்ற விஞ்ஞானி. தன் வலைப் பூவில் அவர் ‘ஃபெர்மி சோதனைக் கூடத்தில் அநேகமாக ஹிக்ஸ் சிக்கிவிட்டது என்று இரண்டு வெவ்வேறு பார்ட்டிகளிடமிருந்து எனக்குத் தகவல் கசிந்தது. எனவே அது உண்மையாகத்தான் இருக்கும்’ என்று எழுதிவிட்டார். உடனே உலகம் முழுவதும் ‘ட்வீட், ட்வீட்’ என்று பரபரப்பு பற்றிக் கொண்டது!

இந்த ஹிக்ஸ் போஸான் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளுக்குப் பல வருடமாகத் தண்ணீர் காட்டி வரும் சின்னஞ் சிறு பொருள். அதைக் கண்டுபிடிக்கத்தான் 37 நாடுகளில் விஞ்ஞானிகள் பைப் புகைத்துக்கொண்டு பொறுமையில்லாமல் காத்திருக்கிறார்கள். இதில் அமெரிக்காக்காரர்களும் ஐரோப்பியர்களுக்கும் யார் முந்தி என்று போட்டா போட்டி வேறு!

இந்த போஸானைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் சில அடிப்படையான கேள்விகள் கேட்டாக வேண்டியுள்ளது:

ஒவ்வொரு பொருளுக்கும் நிறை, எடை என்று இரண்டு குணங்கள் இருக்கின்றன. எடை என்பது பூமியின் கவர்ச்சியால் ஏற்படுவது. இது இடத்துக்கு இடம் மாறுபடும். தஞ்சாவூரில் எண்பது கிலோ இருக்கும் ஆசாமி சந்திரனுக்குப் போனால் சுமார் 13 கிலோதான் இருப்பார். (பிறகு டயட்டில் இருக்கவே தேவையில்லை). ஆனால் நிறை – mass – என்பது பொருளின் உடன் பிறந்த குணம். விண்வெளியில் எடையே இல்லாமல் மிதந்து கொண்டிருக்கும் பொருளுக்குக்கூட, நிறை என்பது அப்படியேதான் நிறைகுடமாகக் குறையாமல் இருக்கும்.

_48353262_9506025-a4-at-144-dpi-1எடை எதனால் வருகிறது என்பது புரிகிறது. ஆனால் நிறைக்குக் காரணம் என்ன? பன்னீர் பட்டர் மசாலாவும் பீட்ஸாவுமாக மொசுக்கியதுதான் காரணம் என்று சொன்னால் விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்ள மறுத்தார்கள். இந்தக் கேள்வியின் ஆணி வேர் வரை சென்று விடை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று முனைந்தார்கள். ஆனால் வருடக் கணக்காக ரூம் போட்டு யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. இந்த இடத்தில்தான் விஞ்ஞானிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் வருகிறது. பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால், சாதாரண மாணவனாக இருந்தால் வெள்ளைப் பேப்பரை மடித்துக் கொடுத்துவிட்டு எழுந்து வந்துவிடுவான். ஆனால் விஞ்ஞானி என்பவர், கற்பனையாகவாவது ஏதாவது கதை அளந்து காகிதத்தை நிரப்பிவிட்டுத்தான் ஓய்வார். எனவே நிறை என்பதற்கு விஞ்ஞானிகள் ஒரு புதிய தத்துவத்தை உதிர்த்தார்கள். ‘ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்று ஒரு துகள் இருக்கிறது. அதுதான் எல்லாப் பொருட்களுக்கும் நிறை ஏற்படுவதற்குக் காரணம்’ என்றார்கள். அந்த போஸான் எங்கே இருக்கிறது என்று கேட்டால் ‘அது தூணிலும் உள்ளது, துரும்பிலும் உள்ளது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் கடவுளுக்கு அடுத்தபடி நீக்கமற நிறைந்திருப்பது அதுதான்’ என்றார்கள்.

‘அப்படியா, எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்?’ என்றால் ‘ஹிஹி! அதற்குச் சில பில்லியன் டாலர்கள் செலவாகுமே’ என்று கீழ்ப் பார்வை பார்த்துக்கொண்டே சொன்னார்கள். அதற்கும் ஒத்துக்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் ஃபெர்மி சோதனைச் சாலை தவிர, சுவிட்சர்லாந்திலுள்ள செர்ன் கழகத்தில் LHC என்ற மாபெரும் ‘துகள் முடுக்கி’ இயந்திரம் ஒன்றை அமைத்தார்கள். எல்.எச்.ஸி என்பது 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இரண்டு வட்ட வடிவக் குழாய்கள். தரைக்கு 300 அடி கீழே சுரங்கம் தோண்டி, கான்க்ரீட் லைனிங் கொடுத்துச் செய்த திடகாத்திரமான இயந்திரம் அது. சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து ஃப்ரான்ஸ் எல்லையைக் கடந்து உள்ளே சென்று காவடி போல் மறுபடி திரும்பி ஜெனிவாவிற்கு வருகிறது. குழாய்களுக்குள் இரண்டு ப்ரோட்டான் கொத்துக்கள் எதிர் எதிர் திசையில் சுற்றிக் கொண்டிருக்கும். அவற்றை காந்தம் வைத்து மிக அதி வேகப்படுத்தி, ஏறக் குறைய ஒளியின் ஸ்பீடுக்கு அருகில் கொண்டு வந்துவிடுவார்கள். அடுத்தது ஒரு பயங்கர ‘டமார்’! அந்த வேகத்தில் துகள்கள் நேருக்கு நேர் மோதினால் ப்ரோட்டானாவது, குருமாவாவது ? எல்லாம் நொறுங்கி உள்ளே இருக்கும் ஸ்பேர் பார்ட் அத்தனையும் பொல பொலவென்று கொட்டி விடும். இப்படிக் கொட்டுகிற பார்ட்டிகிள் ஃபிஸிக்ஸ் குப்பையில் எங்காவது நம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா என்று தேடுவதற்குத்தான் இத்தனை நோவும். இதில் ஒரு பிரச்சினை – ஹிக்ஸ் போஸான் தோன்றினாலும் அதை நாம் பார்க்காமல் விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. காரணம் போஸானின் வாழ்நாள், நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பணிக் காலம் மாதிரி அற்ப நேரம்தான்.

பீட்டர் ஹிக்ஸ்
பீட்டர் ஹிக்ஸ்

சென்ற அறுபதுகளின் ஆரம்பத்தில் ஆறு விஞ்ஞானிகள் ஏறக் குறைய ஒரே சமயத்தில் ஹிக்ஸ் போஸான் பற்றி விவரித்தார்கள். அவர்களில் ஒருவர்தான் பீட்டர் ஹிக்ஸ். அவர் பெயர் மட்டும் போஸானுடன் ஒட்டிக்கொண்டு அழியாப் புகழ் பெற்றுவிட, மற்ற ஐந்து பேரும் காதில் புகை விட்டார்களா என்பது தெரியவில்லை. அணுவுக்கு உள்ளே, உள்ளே பிரித்துக்கொண்டே போனால் லெப்டான், க்வார்க் என்று விதவிதமான துகள்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட நிறை உண்டு. அந்த நிறையைக் கொடுப்பது, பிரபஞ்சம் முழுவதும் பின்னணி இசை மாதிரி நிறைந்திருக்கும் ஹிக்ஸ் புலம் (Higgs field). அதற்கு ஆதாரமாக இருக்கும் ஆதித் துகள்தான் ஹிக் போஸான். மற்ற எல்லாத் துகள்களும் ஹிக் போஸானுடன் நெருங்கிப் பழகுவதனாலேயே அவற்றுக்கு நிறை ஏற்படுகிறது. போஸானிலேயே சாதா, ஸ்பெஷல் என்று பல வகைகள் இருப்பதாகவும் சந்தேகம். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நீச்சல் குளம். அதில் தண்ணீரே இல்லையென்றால் சுலபமாகத் தவழ்ந்து போகலாம். குளம் முழுக்கத் தேன் நிரம்பியிருந்தால்? அதில் நீந்திக் கடப்பது கடினமாக இருக்குமல்லவா? ஹிக்ஸ் போஸான்தான் தேன். அதனால் ஏற்படும் தடைதான் நீந்துபவரின் நிறை. இப்படி ஒரு துகள் இருக்கிறது என்று தைரியமாக ஒரு அடி அடித்து விட்டார்களே தவிர, அதை நிரூபிப்பதற்கோ, அநிரூபிப்பதற்கோ இது வரை யாராலும் முடியவில்லை. எங்கும் நிறைந்திருக்கிறது, ஆனால் யாராலும் பார்க்க முடியவில்லை என்பதால் அதற்குக் ‘கடவுள் துகள்’ என்றே செல்லப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஹிக்ஸ் போஸான், பிரபஞ்சத்தின் ஸ்டாண்டர்ட் மாடல் என்ற தத்துவ சங்கிலியில் ஒரு விடுபட்டுப் போன கரணை.

செர்ன் விஞ்ஞானிகள் ‘இந்தத் தடவை வெற்றி அல்லது வீர மரணம்தான்’ என்று மிகப் பெரிய அளவில் ஒரு துகள் மோதல் நடத்திப் பார்த்துவிட முடிவு செய்துவிட்டார்கள். ஒரு செகண்டுக்கு மூன்று கோடி மோதல்கள். மோதலின் சக்தி பதினான்கு லட்சம் கோடி எலெக்ட்ரான் வோல்ட்! அந்த மகா வெடிப்பு, பிரபஞ்சம் ஆரம்பித்த கணத்தில் இருந்தது போன்ற நிலைமைகளைப் பூமியில் உருவாக்கித் தரும்.

இப்படி எல்லாம் முரட்டுப் பரிசோதனை செய்தால் விளைவுகள் எப்படி இருக்குமோ என்று கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவு வெப்பமான நரகத்தில் ப்ளாக் ஹோல் என்ற கரும் பொந்து உருவாவதற்கு சான்ஸ் இருக்கிறது. கரும் பொந்துகளுக்குப் பசி அதிகம். அக்கம் பக்கத்தில் இருப்பதையெல்லாம் விழுங்கி விழுங்கிப் பெரிதாகி வேளச்சேரி வரை வந்துவிட்டால் – நான் எங்கே ஓடுவேன்? என் லாப்டாப் வேறு ஏகப்பட்ட கனம் கனக்கிறதே! மேலும் செர்ன் பரிசோதனையின் பக்க விளைவாக, ‘ஸ்ட்ரேஞ்ச்லெட்’ என்ற வினோதத் துகள்கள், ‘மானோ போல்’ என்ற பயங்கரமான என்னவோ ஒன்று – இவையெல்லாம் உருவாவதற்கும் சற்றே வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சுக் கிளம்பிவிட்டது. ‘இந்த அசட்டு விஞ்ஞானிகள் உலகத்தை அழித்துவிட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போகிறார்கள்’ என்று ஒரு பிரச்சாரம் எழுந்தது. பற்பல கோர்ட்களில் வழக்குத் தொடரப்பட்டது.

செர்ன் விஞ்ஞானிகள் எதற்கும் அசராமல் பரிசோதனையைத் தொடர்கிறார்கள். ஆனால் அந்த எல்.எச்.ஸி கருவியில் ஏதோ பாட்டரி வீக் போலிருக்கிறது – ஆரம்பித்த நாளிலிருந்து ஏதாவது மக்கர் செய்துகொண்டே இருக்கிறது. போதாததற்கு அமெரிக்காவில் ஃபெர்மி கூடத்தில் ஹிக்ஸைக் கண்டுபிடித்தாயிற்று என்று வேறு வலைப் பூக்களில் புளியைக் கரைக்கிறார்கள். ‘அதெல்லாம் வெற்று வதந்தி; நம்பாதீர்கள். இன்னும் போஸான் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்று அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகியிருக்கிறது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை என்றால், முக்காலமும் அறிந்த அந்த ஆக்டோபஸ் சோதிட சிகாமணியிடம் கேட்டால் ஒரு வேளை தெரிய வரலாம். (ஆமாம், ஆக்டோபஸுக்குத் தமிழில் என்ன ?)

One Reply to “தூணிலும் போஸான், துரும்பிலும் போஸான்!”

Comments are closed.