ரகு ராய் – பேட்டி

சென்ற இதழில் சேதுபதி அருணாசலம் எழுதிய கண்கள் என்ற கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரை வழியாக ரகு ராய் சமீபத்தில் அளித்த பேட்டியையும் படிக்க நேர்ந்தது. ஜீ நியூஸைச் சேர்ந்த பிப்லோ கோஷல், ரகு ராயுடன் நடத்திய நேர்காணல் அது.

இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் கொடுமையான போபால் விஷவாயுக் கசிவின் தீர்ப்பு ஒருவாறாக வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பு நீதியை கேலிக்குரியதாக்கி, குற்றவாளிகளை சிறு தண்டனைகளுடன் தப்பிக்க விட்டுள்ளது. ரகுராய் போபாலில் நடந்த நிகழ்வுகளை ரசாயனப்போர் நடந்து முடிந்த இடத்துடன் ஒப்பிடுவதுடன், இந்திய அரசாங்கமே யூனியன் கார்பைடின் முன்னாள் சேர்மனும், முக்கிய குற்றவாளியுமான வாரன் ஆண்டர்சனை தப்பிக்க விட்டதாய்க் குற்றம் சாட்டுகிறார்.

சமூக அக்கறையுள்ள கலைஞனுக்கேயுரிய கோபம் அவருடைய இப்பேட்டியில் வெளிப்பட்டிருந்தது. அரசாங்கம் சொன்னதைச் செய்து தோப்புக்கரணம் போடும் நம் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய பேட்டி இது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் சொல்வனம் வழியாகப் பலரையும் சென்றடையும் என இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன்.

picture52

பிப்லோ கோஷல் : நீங்கள் எடுத்த சில புகைப்படங்கள் திடுக்கிடவைப்பவையாக இருக்கின்றன. அந்த மனதைக் கனக்கச் செய்யும் புகைப்படங்களை எடுக்கும்போது உங்களுக்கு மனதளவிலும், உணர்வளவிலும் எவ்வளவு கடினமானதாய் இருந்தது?

ரகுராய்: உணர்வு ரீதியாக எனக்குக் கடினமாக இல்லை. ஏனெனில் உணர்ச்சிவயப்படும்போது உங்கள் வேலையை சுத்தமாகவும், தெளிவாகவும் செய்ய முடியாது. புலன் உணர்ச்சிகள் அடக்கப்பட வேண்டும். அங்கிருக்கும் சூழ்நிலையை அமைதியான பார்வையிலும், எதற்கும் தயாரான இதயத்துடன் பார்க்கும்போதுதான் அந்தத்துயரமே தன்னை வெளிக்காட்டும் விதத்தில் அதைப்படமெடுக்க இயலும். தொழில்முறையாளர்களுக்கு இருக்கக்கூடாத ஒன்று உணர்ச்சிவயப்படுதல். உண்மையில் எதற்கும் உணர்ச்சிவசப்படக்கூடாது. மாற்றம் விளைவிக்கக்கூடிய, அர்த்தமுள்ள ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமெனில் விழிப்புடனும், நியாய உணர்வுடனும் இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும்.

பிப்லோ கோஷல்: போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்தபோது உங்களுடைய உடனடியான மனோநிலை எப்படியிருந்தது?

ரகுராய்: இதுவரை யாரும் பார்த்திராத மற்றும் அனுபவித்திராத ஒன்றாக இருந்தது அது. அடக் கடவுளே, இப்படியும் நடக்குமா? இறந்த விலங்குகள், உப்பிய மனித உடல்கள், நோயுற்ற மனிதர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனை முழுதும் கிடந்தது. எங்கு காணினும் மரணம் மட்டுமே. இப்போது அதை திரும்பிப் பார்த்தால், ஒரு ரசாயனப் போர் நடந்தால் விளைவுகள் இதைப்போன்றே இருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம்.

பிப்லோ கோஷல்: இன்று போபால் விஷவாயுக் கசிவின் அடையாளமாய் ஆகியிருக்கும் கழுத்துவரை புதைக்கப்பட்ட அந்தக் குழந்தையின் புகைப்படத்தை எடுக்கும்போது உங்கள் உணர்ச்சிகள் என்னவாய் இருந்தது என்பதை வாசகர்களுக்கு விளக்குங்களேன்..

ரகுராய்: நமது வாழ்க்கையின் மென்மையான பகுதியான குழந்தைகள். அவர்களைப்பற்றிய கவலைகளையும், உணர்வுகளையும் நம்மில் உருவாக்குகின்றனர். ஆகையால், இதுவும் அதைப்போன்ற ஒரு சூழ்நிலையே. முழுதும் கண்திறந்த, உயிருடன் இருப்பதைப்போன்ற – ஆனால் இறந்துவிட்ட குழந்தை புதைக்கப்படுகிறது. இதில் நாம் என்ன தெரிந்துகொள்ள முடியும், அல்லது இது என்ன சொல்கிறது? இது ஒரு சோகமான அனுபவம். இதை நாம் பார்க்கும்போது ’ கடவுளே! இந்தக் குழந்தையின் கண்கள் திறந்திருக்கிறதே, இது உயிருடன் இருக்கிறதா இல்லை இறந்துவிட்டதா?’ என்ற எண்ணம் ஏற்படும். இப்போது இது போபால் விஷவாயுக் கசிவின் அடையாளமாகவே ஆகிவிட்டது.

பிப்லோ கோஷல்: இந்தப் புகைப்படம் ஒரு அடையாளமாக ஆகும் என எதிர்பார்த்தீர்களா?

ரகுராய்: இல்லை. எடுத்துக்கொண்ட வேலையின் அவசியத்திற்காக உழைத்தேன், அவ்வளவே.

பிப்லோ கோஷல்: போபாலில் இந்தக் கொடுமை நடந்தபோது மக்கள் அனுபவித்த வலிகளையும், குழப்பங்களையும் நேரடியாகக் கண்டிருக்கிறீர்கள். இந்தத் தீர்ப்பைக் குறித்து என்ன சொல்ல விரும்பிகிறீர்கள்?

ரகுராய்: இந்தத் தீர்ப்பு ஒரு குரூரமான நகைச்சுவை. உலகின் மோசமான தொழிற்துறை விபத்து என்று சொல்லப்படும் இந்த பேரழிவைக்குறித்து, 25 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு இப்படி ஒரு தீர்ப்பை வழங்க வேண்டுமெனில் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஊழல் மலிந்த, மோசமான, எதற்கும் லாயக்கற்றவர்களாக இருக்கவேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி. ஆனால் தாமதிக்கப்பட்ட நீதி என்பது நீதியும், ஆதாரங்களும் அழிக்கப்பட்ட ஒன்று என. உண்மையில் என்ன நடந்தது, ஆண்டர்சன் எப்படி தப்பித்தார், அல்லது என்னென்ன நடந்ததோ அந்த தகவல்களையெல்லாம் மீண்டும் பெறமுடியும் என நினைக்கிறீர்களா?

அவர்கள் இதை வேண்டுமென்றே தாமதித்தார்கள், அந்த நிகழ்வைப் பற்றிய ஆதாரங்கள், நினைவுகள் அனைத்தும் தானாகவே சாகட்டும் என. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இது இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும் என அவர்கள் நினைக்கவில்லை. இந்த நிகழ்வு அப்படியே மறக்கப்பட்டுவிடும் என அரசாங்கம் நினைத்தது. எனவே இந்த விசாரணை என்பது முழுதும் நேர்மையற்றதாக மற்றும் ஊழல் நிறைந்ததாகவும் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட சமபந்தப்பட்ட எல்லோரும் பணம் சம்பாதித்தனர்.

RaghuRaiபிப்லோ கோஷல்: யாரைக் குற்றம் சாட்டுவீர்கள்? அரசாங்கத்தையா அல்லது நீதித்துறையையா?

ரகுராய்: நீதித்துறையைப் பற்றி நான் சொல்லமுடியாது. ஆனால், சி.பி.ஐ இந்த விசாரனையைச் செய்துகொண்டிருந்தது. சி.பி.ஐ என்பது ஒரு பயிற்றுவிக்கப்பட்ட காளை. அதனைச் செயல்படச் சொன்னால் செயல்படும் . சி.பி.ஐ வேண்டுமென்றே தகவல்களைச் சேகரிக்காமலோ, அல்லது தடயங்களை அழித்திருந்தாலோ அல்லது மிகக்குறைந்த ஆதாரங்களையோ நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தாலோ நீதித்துறை என்ன செய்ய இயலும்? எனவே நான் யாரையும் குறிப்பிட விரும்பவில்லை.

பிப்லோ கோஷல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் செய்வது குறித்து உங்கள் கருத்தென்ன?

ரகுராய்: ஒன்றுமில்லை. அவர்கள் சோம்பேறித்தனமாக இருக்கின்றனர். ஊழல்நிறைந்த நாட்டில் மனித உயிர்கள் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.

பிப்லோ கோஷல்: சமீபத்தில் போபால் போயிருந்தீர்கள். நிலைமை அங்கு எப்படி இருக்கிறது? சீரடைந்துள்ளதா அல்லது முன்பைவிட மோசமடைந்துள்ளதா?

ரகுராய்: ஓரளவுக்குப் பரவாயில்லை. நல்ல சாலைகளும், ஆலையை ஒட்டிய காலனி வீடுகளும் உள்ளன. அங்கிருக்கும் டேங்குகள் துருப்பிடித்துக் கொண்டு நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. அரசுசாரா அமைப்புகளும், பத்திரிக்கைத்துறையும் இல்லாமலிருந்திருந்தால், எல்லோரும் பணம் சேர்த்து அவரவருக்கான ராஜாங்கத்தை அமைத்துக்கொண்டிருந்திருப்பார்கள். ஊழல் நிறைந்த மக்களைக் கொண்ட நாடு நம்முடையது. உண்மையில் இது ஒரு நாடே அல்ல. திரும்பிப்பார்த்தால் நீதி வழங்க 25 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இது ஒரு கௌரவமோ அல்லது சுயமரியாதையோ அற்ற நாடு. ஆண்டர்சனை முதலில் தப்ப விட்டுவிட்டு அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் நம்மை சமமாக மதிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? சரிசமமாக நடத்தத் தகுதியற்றவர் நீங்கள். பிரிட்டிஷ் பெட்ரோலியக் கிணறு கசிவில் இறக்கும் பறவைக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த விபத்தில் இறந்த மக்களுக்கு இல்லை.

desastre-bhopal

பிப்லோ கோஷல்: ஆண்டர்சன் வெளியேறியதை எப்படிப் பார்க்கிறீர்கள்? தேசிய நலனுக்காக விடுவிக்கப்பட்டு, தப்பவிடப்பட்டார் என்று சுற்றிக்கொண்டிருக்கும் பேச்சை ஒத்துக்கொள்கிறீர்களா?

ரகுராய்: ஒரு அமெரிக்கன் சாவதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர்களால் ஏழு முதல் எட்டாயிரம் பேர் வரை முதல்வாரத்திலும் மொத்தமாக 25ஆயிரம்பேர்வரை இறந்துள்ளனர். எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்? அவர்கள் (இப்படிப் பேசிக்கோண்டிருப்பவர்கள்) அடிமைகள். அதனால்தான் இப்படி பேசிக்கொண்டிருக்கின்றனர். இப்படியா ஒருவர் பதில் சொல்வது? அடிமைப் புத்தியினால சூழப்பட்டுள்ளவரால் மட்டுமே இப்படி பேசமுடியும்.

நீங்கள் அப்சல்குருவை தூக்கிலிடக்கூடாது, அஜ்மல் கசாப்பை வீட்டுக்கு அனுப்புங்கள் ஏனென்றால் அதற்கு பின் விளைவுகள் உண்டாகும். [அவர்களின்  ஆதரவாளர்கள்] உங்களைக் கொல்வார்கள். நாம் தொடைநடுங்கி தேசத்தவர்கள்.

பிப்லோ கோஷல்: இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி ஒருவர் சமாளித்துச் செல்வது?

ரகுராய்: மக்களுக்கு சுய விழிப்புணர்வும், நடப்புகளைப்பற்றி அறிந்திருத்தலும், மக்கள் கைகோர்த்துக்கொள்ளுதலும் இல்லாமல் யாராலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. ஏனெனில் முழு அரசாங்கமும் ஊழலால் நிறைந்த அழுகிப்போன மனநிலையிலும், இனிமேல் நீதியே வழங்க முடியாது என்ற நிலையிலும் இருக்கிறது.

நம்மால் முடிந்ததைச் செய்வோம். முடிவில் கையறு நிலையில்தான் இருப்பதாக உணர்வோம். (அதற்கு) நாம் என்ன செய்துவிட முடியும்? நாம் திடமனதோடும், உறுதியோடும் இருக்க வேண்டும். செய்யவேண்டியவற்றை எப்படிச் செய்யவேண்டுமோ அப்படிச் செய்யவேண்டும். நம்மால் முடிந்ததெல்லாம் அவ்வளவே.

இதை மொழிபெயர்த்து முடித்தவுடன் படிக்க நேர்ந்ததொரு செய்தி மிகவும் வருத்தம் தருவதாக இருந்தது. மும்பை துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டதொரு க்ளோரின் சிலிண்டர் இன்று அதிகாலை கசிந்ததில் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அறுபது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள். இந்தக் கசிவைப் பற்றிய வழக்கு நடந்து, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து தீர்ப்பு வருமோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.