‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – பகுதி 3

வெங்கட் சாமிநாதன் எழுத ஆரம்பித்து இந்த வருடத்தோடு ஐம்பது வருடங்களாகின்றன. இத்தருணத்தில் வெ.சாவின் விரிவான பேட்டியை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

இந்த நேர்காணலின் முதல் பகுதி | இரண்டாம் பகுதி

புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்.

csc_2950ஹிராகுட்டில் இருந்த போது நண்பர்களோடு சேர்ந்து படித்தோம் என்று சொன்னீர்கள், இலக்கியப் பரிச்சயங்களுக்கு அது ஒரு சிறந்த வழிதானா?

யாருமே தனித்திருந்து தனக்குள்தான் படிக்க வேண்டும். It’s something that you do in your – in the privacy of your – room, something between you and the book, Between you and the person and the world that you know, that emerges out of the book. அந்த மாதிரிதான். ஆனால் நாலைந்து பேர் சேர்ந்து ஒரு காரியம் செய்யும் போது ஒருவித ஒட்டுதல் ஏற்படுகிறது. இரண்டாவது அங்கே எனக்கும் சீனிவாசனுக்கும் இருந்த நெருக்கம். மூன்றாவது எல்லோருமே சேர்ந்து செய்யக் கூடிய காரியத்தைத்தான் செய்திருக்கிறோம். மற்றவர்களுக்கு அதனால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் எல்லோரும் விருப்பப்பட்டுத்தான் அதற்கெல்லாம் வந்தார்கள். ரஸ்ஸலின் மேரேஜ் அண்ட் மாரல்ஸ் எல்லாம் தனியாக உட்கார்ந்து படித்தால் அல்லது ஒருவர் படித்துக் கேட்டால் அதன் ஆழம் தெரியாமல் போய் விடும் என்றெல்லாம் சொல்லக் கூடிய புத்தகமும் அல்ல. நாங்கள் படித்தபோது பெரிய டிஸ்கஷன்ஸ் எல்லாம் இருக்காது. எல்லாம் முடிந்த பிறகு சீனிவாசன் ஏதாவது கமெண்ட் செய்வார். சமயங்களில் அது அடாவடித்தனமாக இருக்கும். எல்லாம் strange and very interesting characters. இப்படித்தான் அந்தக் கூட்டு வாசிப்பு அனுபவங்கள் எல்லாம்.

விருதுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதாவது தகுதியானவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்தென்ன?

இதைப் பற்றிப் பேசுவதற்கே லாயக்கில்லை. இந்தச் சமூகத்திலிருந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் வரும். நாம் எதிர்பார்க்க முடியும். அதைப் பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்தச் சமூகம் மாறினால் ஓரளவு இவையெல்லாம் மாறலாம் என்று எதிர்பார்க்கலாம். உஸ்தாத் விலாயத் அலி கான், ”நீ யார் எனக்கு விருது கொடுக்க?” என்று விருது கொடுக்க வந்தவர்களைக் கேட்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை கோட்டூர்புரத்தில் அவர் வசித்த தெருவுக்கு வைக்கலாம் என்று முடிவு செய்தபோது, ”வேண்டாம், என்னை விட சீனியர் டி.கே.பட்டம்மாள். அவர் பெயரை வையுங்கள்,” என்று சொன்னார். அது போல ஆந்திராவில் ஒரு எழுத்தாளருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது, டி.சாம்பசிவ ராவ் அதை விளாசித் தள்ளிவிட்டார். சாகித்ய அகாதமியின் ஜர்னலில் அது வெளியானது. சாம்பசிவ ராவ் சாகித்ய அகாதமியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். அவர் அங்கே வேலை பார்த்துக் கொண்டே, அவர்கள் அகாடமி தேர்ந்தெடுத்துப் பரிசளித்த நூலை எப்படி விமர்சிக்கலாம் என்று பெரிய பிரச்சினை வந்தது. அப்போது சாகித்ய அகாதமியின் பிரெசிடெண்ட் ஆக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்தான் அவர் வேலைக்கு ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றினார். விஷயம் என்னவென்றால், சாகித்ய அகாடமியில் வேலை செய்யும் தெலுங்கு இலக்கிய ரசிகருக்கே விருது தரப்பட்ட புத்தகத்தின் தகுதி அகாடமி பத்திரிகையில் எழுதி கண்டிக்குமளவுக்கு மோசமாக இருந்திருக்கிறது. தன் வேலையைப் பணயம் வைத்து எழுதிய அவர் என் மதிப்புக்குரியவரானதில் ஆச்சரியமில்லை. இது எங்கள் இருவருக்கும் இயல்பானது.

லா.ச.ராமாமிர்தத்திற்கு விருது கிடைத்தபோது, என்னை அதுகுறித்து எழுதித் தருமாறு சாம்பசிவ ராவ் என்னைக் கேட்டுக் கொண்டார். நான் எழுதிக் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்துவிட்டு என்னை அலுவலகத்திற்கு வருமாறு கூப்பிட்டார். நானும் போனேன். அப்படித்தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவர் தொடர்ந்து அகாடமி வெளியிடும் இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிகைக்கு என்னை எழுதச் சொன்னார். என்னுடைய ஆங்கிலத்தை பாராட்டிய ஒரே மனிதர் அவர்தான். மனதாரப் பாராட்டுவார். பின் அகாதமி விருது வாங்கிய சு.சமுத்திரம் பற்றி எழுதச் சொன்னார். நான் மறுத்ததும், நான்தான் எழுதவேண்டும் என்று வற்புறுத்தினார். நான் எழுதினேன். யாமினி கிருஷ்ணமூர்த்தி சந்தேகமேயில்லாமல் ஒரு கிரேட் டான்ஸர். But i had made some critical references about her performance. கதக்கிற்கு ரொம்ப பாஸ்ட் ஃபுட் வொர்க் வேண்டும். கால் தாளம் போடும் தபலாவாக மாறும். தபலா மீது விரல்கள் நர்த்தனமாடும். எல்லாமே ஒரே நேரத்தில் தாளம் போடும். ஆனால் அது ஆர்ட் அல்ல. சர்க்கஸ் வித்தை மாதிரித்தான். பரதநாட்டியம், குச்சுப்புடிக்கெல்லாம் பாவம் முக்கியமாக இருக்கும். இசையும் சேர்ந்திருக்கும். ஆனால் இதற்கு தாளமும் தப்லாவும்தான் முக்கியம். தபலா செய்கிற காரியத்தை உன் கால் ஏன் செய்யணும்? யானை ஸ்டூல் மேல் ஏறி நிற்கிற மாதிரிதான் என்று சொல்லிவிட்டு, ”Yamini need not do this. But she does it. She is capable of doing it. But that is not an art. கதக் ட்ரெடிஷனில் வரும் உமா ஷர்மாவுக்கு வேண்டுமானால் இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் யாமினிக்கு இந்த சர்க்கஸ் வேலையெல்லாம் தேவையில்லை. அது பரத நாட்டியமுமில்லை” என்று எழுதினேன். அந்த கட்டுரை யாமினியின் ஃபைலில் இருந்ததைப் பார்த்தேன். Still, she suggested my name to write a monograph on her work. நானும் எழுதினேன். ஆனால் அது வெளிவரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அத்தகைய மனப்பக்குவமும், தன் கலையில் நம்பிக்கையும் யாமினியிடம் இருந்தது. அது பெரிய விஷயம் இல்லையா? அத்தகைய மனப்பக்குவம், தன் காரியத்தில் இருக்கும் சுய நம்பிக்கை, இப்போது நம் தமிழ் எழுத்தாளர் வர்க்கத்தில் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை

‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்திற்குப் பிறகு வேறு திரைப்படங்களில் பங்கு பெறாதது ஏன்?

ஒருத்தரும் கேட்கவில்லை. யாமினி கிருஷ்ணமூர்த்தியின் தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்காக, ஸ்க்ரிப்ட் ஆறு எபிசோடுகளுக்கு எழுதக் கேட்டார்கள். எழுதினேன். அது நடனத்தையும், கோவிலையும் மையமாகக் கொண்டது. தஞ்சாவூர், சிதம்பரம், மும்பை எலிஃபெண்டா குகைகள் இப்படி ஆறு இடங்கள், முதல் ஆறு episodeக்கு யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. மற்றதற்கு நான் எழுதினேன். யாமினியைப் பற்றி முன்னதாகவே நான் ஒரு மோனோகிராப் எழுதியிருந்தேன். அப்புறம் Indian dance scene பற்றி பொதுவாக, what is creative – what is just grammatically correct but not creative – what is repetitive, what is just a circus like feat but passed off as a dance form இப்படியெல்லாம் விவரித்து எழுதியிருக்கிறேன். சங்கீத நாடக அகாடமி ஜர்னலுக்காகக் கேட்டார்கள். நான் எழுதிக் கொடுத்தேன். அதில் கொஞ்சம் பல பெரிய தலைகளை எல்லாம் கிண்டல் செய்திருப்பேன்.

யாமினி கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய மோனோகிராப் நான் எழுதிக் கொடுத்த பிறகு அது பப்ளிஷ் ஆகவில்லை. காரணம், இன்னொரு ஜர்னலிஸ்ட். அவர் மிகவும் அழகானவர். She was quite close to many influential people. அவளுடைய கணவனை இவர் எழுதச் சொல்லியிருக்கிறார், தானே! அதுதான் இது வெளிவராததற்குக் காரணம்.. நான் எந்த அழகியோடு போட்டி போட முடியும்? சரி எந்த ஆண்தான் போட்டி போடமுடியும்? யாமினி கிருஷ்ணமூர்த்தி என்னை எழுதச் சொன்னார், நான் எழுதினேன். அது ஒன்றுதான். என்னை எழுதச் சொன்னால் எழுதுவேன். நானாகப் போய் யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. மேலும் இதற்கெல்லாம் ஒரு பாபுலர் இமேஜ் இருக்க வேண்டும். அதெல்லாம் எனக்குக் கிடையாது.

டெல்லி வாழ்க்கை அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!

என் வாழ்க்கையில் டெல்லி காலகட்டம் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொருநாளும் ஒரு அனுபவம் என்று சொல்லலாம். மிகவும் exciting ஆக இருந்த நாட்கள் அவை. காலையில் நான் அலுவலகத்திற்குச் சென்றால் அலுவலகம் முடிந்த பின்னர் மாலையில் எங்கெல்லாமோ அலைந்து விட்டு இரவு 11 மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்ப வருவேன். சினிமா, நாடகம், நாட்டியம், ஆர்ட் எக்ஸிபிஷன் என்று ஒவ்வொரு நாளும் நண்பர்களோடு எங்காவது வெளியில் சென்று விடுவேன். பல மனிதர்களுடனான சந்திப்புகள். பலதரப்பட்ட அனுபவங்கள். அவர்களுள் தமிழரில் மறக்க முடியாதவர் க.நா.சுப்ரமண்யம். டெல்லியைப் பொருத்தவரை அங்கு பலபேர், மொழி போன்றவற்றைத் தாண்டி, தாங்கள் எந்தத் துறையில் இருக்கிறோமோ அதையும் தாண்டி மாற்றுக் கருத்துக்களை வரவேற்பவர்களாக இருந்தார்கள். அதனால்தான் நான் டெல்லியிலேயே பிழைக்க முடிந்தது. சங்கீத் நாடக அகாதமி, சாகித்ய அகாதமி என்று நான் எதிர் கருத்துக்களைச் சொன்னாலும் என்னை எதிரியாகப் பாவிக்காத நிலை அங்கே இருந்தது. என் கருத்துக்களை விரும்பாதவர்களும், எனக்கு எதிராக அவர்கள் காதில் ஓதிச் செல்லும் சென்னை நபர்களும் இருந்தார்கள்தான். சாகித்ய அகாதமி என்ற நிறுவனம் பல பேரின் கைப்பாவையாக இருந்தது. ஆனால் அதில் இருந்த பலபேரிடம், அந்த நிறுவனத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி நட்போடு பழக முடிந்தது. உதாரணமாக சாகித்ய அகாதமியின் குழு உறுப்பினராக இங்கே இருந்து அங்கே சென்றவர்கள், என்னைப் பற்றி, என் தகுதி பற்றியெல்லாம் கேள்வி எழுப்பியும், அங்கே செயலாளராக இருந்த என் நண்பர் சச்சிதானந்தத்தை மீறி, சதாசிவராவை மீறி அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. ஆனாலும் என் எழுத்தின் மீது, என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அவர் சில பொறுப்புகளை அளித்திருந்தார். He valued my friendship. இப்படித்தான் பல்வேறு அனுபவங்களோடும், பொறுப்புக்களோடும் இருந்தது டெல்லி வாழ்க்கை.

தி.ஜானகிராமனுடன் வெ.சா
தி.ஜானகிராமனுடன் வெ.சா

சமகால எழுத்தாளர்களுடனான உங்கள் அனுபவம் குறித்து…

நான் டெல்லி வருவதற்கு முன்பாகவே க.நா.சு அவரது ‘ஒருநாள்’ நாவல் மூலம் எனக்கு அறிமுகமாகியிருந்தார். அது ஒரு அற்புதமான நாவல். அப்போது டெல்லியில் ‘தாட்’ என்ற ஒரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் க.நா.சு எழுதி வந்தார். அதை நான் ஒருமுறை பார்த்தேன் – பின்னால் நானும் அதில் அதிகமாகவே எழுதியிருக்கிறேன். அவர் எழுதி வருவதை எல்லோரும் குறையாகச் சொல்வார்கள். ‘நன்றாக எழுதிக் கொண்டிருந்த மனுஷன் இப்போ விமர்சனம் அது, இதுன்னு ஏதேதோ பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படி வீணாப் போய்விட்டார்’ என்று. அதாவது ‘நாங்கள் நாவல், கதைகள் எழுதுகிறோம். நீயும் எழுது. அதை விடுத்து எங்களை விமர்சனம் பண்ணிக் கொண்டிராதே’ என்பது அவர்கள் சொல்ல வருவது.

அப்போது நான் டெல்லி கரொல்பாக்கில் இருந்தேன். நான் எப்போதும் வெளியில் சென்று விட்டு லேட்டாகத்தான் வருவேன். ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக ராஜாமணி என்ற நண்பருடன், க.நா.சு வந்து காத்திருந்ததாக அறை நண்பன் சொன்னான். நான் வரக்கூடும் என்று வெகுநேரம் வெளியில் செமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு கடலையைக் கொறித்துக்கொண்டிருந்ததாகவும், நான் வர லேட்டானதால் அவர்கள் சென்று விட்டனர் என்றும் மறுநாள் காலை வந்த ராஜாமணியிடம் செய்தி கேட்டு,  அதன்பிறகு அவர் முகவரியை விசாரித்து நான் போய்ப் பார்த்தேன். எங்களுக்குள் ஒரு நல்ல ஒத்திசைவு இருந்தது. அதன்பிறகு நாங்கள் எங்கு சென்றாலும் இருவருமாகத்தான் செல்வோம். பேசினால் எல்லாம் ஒரே இலக்கிய சர்ச்சையாகத்தான் இருக்கும். என்னைவிட எத்தனையோ வயது மூத்தவர். அறிவில் என்னை விட மிக உயர்வானவர். படிப்பே தொழிலாக வைத்துக் கொண்டு பல நூல்களைப் படிப்பவர். என்றாலும் என் கருத்துகளுக்கு – மடையன், அதிகப்பிரசங்கி, ஏதோ உளறுகிறான் என்றெல்லாம் நினைக்காமல் மிகவும் பொறுமையாக – அப்படியும் பார்க்கலாம் என்றுதான் பதில் சொல்வார். அவருக்கு ஈடுபாடு இல்லாத இடத்திற்கெல்லாம் கூட நான் அவரை வற்புறுத்தி அழைத்துச் செல்வேன். அவரும் வருவார். ஃபிலிம் ஷோஸ், பான் சாய் எக்ஸ்பிஷன்ஸ், ஆர்ட் எக்ஸிபிஷன்ஸ் என்று பல நிகழ்ச்சிகளுக்குப் போவோம்.

வெளியில் சொல்லாத பல கருத்துக்களைக் கூட அவர் என்னிடம் சொல்வார். அதே சமயம் – எனக்கு அப்போது அசோகமித்திரனோடு கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் அசோகமித்திரனுக்கு எனக்கு எதிராக கருத்து வேறுபாடு இல்லை, பகைமை இருந்தது. க.நாசு “நீ சண்டையெல்லாம் போடாதே,” என்று எனக்கு அறிவுறுத்துவார். “of course he was nasty with you. ஆனாலும் சண்டை எல்லாம் வேண்டாம்” என்பார். அந்த attitude எனக்குப் புரியவும் இல்லை. அப்படி என்னால் அப்படி இருக்கவும் முடியவில்லை. ஆனால் தன்னை கடுமையாக விமர்சித்து எழுதியிருந்த பி.எஸ். ராமையா மீதும் மிக அன்போடும், மரியாதையோடும் நடந்தவர் அவர். என் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். இவன் நம்மை தாக்குகிறான். இருந்து விட்டுப் போகட்டுமே. இவன் தாக்குவதால் நான் அழிந்து போய் விடப் போவதில்லை. அப்படியாவது அவன் வளரட்டுமே என்ற பெருந்தன்மை உணர்வோடு அவர் இருந்தார். அவர் மீது ஒரு மாறுபாடான அபிப்ராயம் இருந்து, அதைப் பற்றி அவரிடம் சொன்னால் அதைக் கேட்பார். ஆனால் அப்படி ஒரு மனப்பான்மை, சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை. எல்லோரும் சுயம் பிரகாச சுவாமிகளாக மிக உச்சத்தில் இருக்கிறார்கள். நமது இலக்கியச் சூழல் மிக மோசமான சூழல்.

அவரும், இவ்வாறு நாவல் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக – ”வம்பை விலைக்கு வாங்குவதாகச்” சொல்லப்பட்டதையும் – இது போன்றவற்றை எல்லாம் செய்தாக வேண்டும்; இந்தச் சூழலுக்கு இது அவசியம் தேவை என்று – விமர்சனங்களை – கண்டனங்களையெல்லாம் புறந்தள்ளி விடாப்பிடியாக எழுதி வந்தார். பல பேருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டாலும், நாம் செய்ய வேண்டும் என்று அவருக்கிருந்த அந்த கமிட்மெண்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செல்லப்பா கூடச் சொல்வார், ‘நீங்கள் ஏன் இதையெல்லாம் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஜீவன் இருந்தால் அதுவாகவே நிலைத்து நிற்கும். நீங்கள் விமர்சனம் செய்துதான் நிற்குமா?’ என்று.  ஆனாலும், க.நா.சு அதற்கு ’இல்லை, அது செய்தாக வேண்டிய காரியம்’ என்று செல்லப்பாவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பாராம். அடிக்கடி… அதன்பிறகுதான் செல்லப்பா விமர்சனத்திற்கு வந்தார். க.நா.சு உருவாக்கிய ஆள்தான் செல்லப்பா என்ற விமர்சக அவதாரம். அவர் ‘இலக்கிய வட்டம்’ என்றொரு பத்திரிகை ஆரம்பித்தார். அதில் என்னை எழுதச் சொன்னார். அதற்கு முன்னால் 1947 முதல் 1964 வரை உள்ள தமிழ் எழுத்துக்களைப் பற்றி எழுதியிருந்தேன். அதை அவர் இலக்கிய வட்ட மலராக வெளிவந்த இதழின் நடுப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது பாலையும் வாழையும் தொகுப்பிலும் பின் வந்த பான்ஸாய் மனிதன் தொகுப்பிலும் இருக்கும்.

செல்லப்பாவுடன் வெ.சா
செல்லப்பாவுடன் வெ.சா

செல்லப்பாவும் அப்படித்தான். “நீ தப்புப் பண்றே. உனக்கு ஒண்ணும் தெரியலை” என்று என்னோடு சண்டை போடுவார். ஆனால் நல்ல மனிதர். நாங்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தாலே கூட அது கூச்சல் நிறைந்ததாகத்தான் இருக்குமாதலால், ”இவர்களுக்குள் ஏதோ ஜென்மப் பகை போலிருக்கிறது, அதான் இப்படி அடித்துக் கொள்கிறார்கள்”, என்று நினைப்பார்கள். ஆனால் அவ்வளவு passionate ஆக ஒரு விஷயத்தைப் பற்றி அவர் பேசுகிறார் என்பதுதான் அதற்குப் பொருளே தவிர, கோபத்துடன் சத்தம் போடுகிறார் என்பதல்ல. டெல்லியிருந்து நான் லீவிற்குச் சென்னை வரும்போதெல்லாம் அவர் வீட்டிற்குப் போவேன். அவர் வீட்டுக்கு யார், யாரோ எல்லாமோ வருவார்கள். அவரைத் திட்டியவர்கள், வசை பாடியவர்கள், விமர்சனம், கேலி செய்தவர்கள், எதிர்முகாமில் இருந்தவர்கள் என்று. எல்லோருக்கும் காபி, டிபன் கொடுத்து நன்கு கவனிப்பார் செல்லப்பா. ஆனால் அவருக்கு வருமானம் என்று ஏதும் கிடையாது. எப்படி செலவுகளை எல்லாம் சமாளித்தார் என்பதும் தெரியாது.

அவரும், ‘பாரத மணி’ என்ற பத்திரிகையை நடத்துகிற காந்தி பக்தர் பி.என்.சீனிவாசன் என்பவரும் ஒருமுறை டெல்லி வந்திருந்தார்கள். செல்லப்பா காந்தி இறந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். பிர்லா ஹவுஸிற்குச் சென்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார். பின் காந்தி சுடப்பட்டு வீழ்ந்த அந்த இடத்திற்கு முன் அப்படியே வெகு நேரம் கை கூப்பியபடியே நின்று விட்டார். அந்த மாதிரி உள்ளம் அவர் உள்ளம். அவர் மிகவும் கஷ்டப்பட்டவர். மனைவியின் நகைகளை விற்று எழுத்து ப்த்திரிகையை நடத்தியவர். எழுத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். கி.வா.ஜகந்நாதன் கலைமகளுக்கு எழுதும்படி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது, செல்லப்பா நிர்தாட்சண்யமாக அதை நிராகரித்தார். ஒருமுறை “என்னமோ எனக்கு அதில் எழுதத் தோணலை. மூட் இல்லை” என்றார். மற்றொரு முறை “மதியாதார் வீட்டுக்கு எல்லாம் நாம் ஏன் போக வேண்டும்” என்றார். சமரசமே இல்லாத ஆள். நா.பா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். “ஏதாவது புத்தகம் போடுங்கள். சாகித்ய அகாதமி பரிசுக்காவது முயற்சிக்கலாம்” என்று. ஆனால் இவர் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. ஒருமுறை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து அவருக்கு விருது கொடுத்தார்கள். “எனக்கு விருது கொடுக்க நீங்கள் யார்?” என்று அதை உதறித் தள்ளிவிட்டார். இத்தனைக்கும் அவர் மிகக் கஷ்ட நிலையில் இருந்தார். அவருக்குப் பணத்தேவை அப்போதிருந்தது. ஆனாலும் அனுசரித்துப் போகவில்லை. நிர்ப்பந்தத்தில் இருந்தாலும் வளைந்து கொடுக்காதவர், சமரசங்களுக்கு ஆட்படாதவர் செல்லப்பா. அவரை அக்காலத்தில் கேலி செய்தவர்கள் செய்த கோமாளித்தனங்களைச் சொல்ல வேண்டாம்.

நீங்கள் ஒருமுறை காந்தியைப் பார்க்கப் போனது பற்றி எழுதியிருந்தீர்களே, அதைத் திரும்ப எங்களுக்கும் சொல்லுங்களேன்…

dsc_2944ஒருமுறை காந்தி எங்கள் ஊருக்கு அருகே உள்ள அம்மைநாயக்கனூருக்கு வருவதாக இருந்தது. உடனே மாமா என்னை அழைத்து, “நீ வேண்டுமானால் மத்த பசங்களோட சேர்ந்து போய் விட்டுவா,” என்றார். எனக்கு ஒரே சந்தோஷம், உடன் கிளம்பி விட்டேன். நண்பர்கள் யாரும் கூட வரவில்லை. ஆனால் வழியெல்லாம் ஒரே கூட்டம். நிலக்கோட்டையிலிருந்து மட்டுமல்லாது, சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் மக்கள் திருவிழாக் கூட்டம் போல் கும்பலாகச் சென்று கொண்டிருந்தனர் காந்தியைப் பார்க்க. இத்தனைக்கும் காந்தி அம்மைநாயக்கனூரில் பேசப்போவதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ரயிலில் வரும் வழியில், ஸ்டேஷனுக்கு முன்பாகவே ரயிலை மறித்து நிறுத்தி அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தது கூட்டம். நானும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று விட்டேன். மாமாவும் ஸ்கூல் மானேஜ்மெண்ட் ஏற்பாடு செய்த வில் வண்டியில் போய் விட்டார்.

காந்தியைப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து எல்லாம் இல்லை. வண்டி பிளாட்பார்மில் வந்து நின்றது. கதவுக்கு அருகே காந்திஜி நின்று கொண்டிருந்தார். பின்னால் ராஜாஜி. காந்தியைப் பார்த்த மக்கள், என்னவோ திருப்பதி வெங்கடாஜலபதியையே தரிசனம் செய்கிற மாதிரி அப்படியே கையை உயர்த்திக் கும்பிட்டனர். ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஒரு எலக்ட்ரிபையிங் பவர் அவரிடம் இருந்தது. ஒரு ஐந்து நிமிடம் ஏதோ பேசினார். கூட்டத்தில் எல்லோரிடமும் ஒரே பரவசம். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் ரொம்ப எளிமையான மனிதர் என்று. ஆனால் காந்தியைவிட எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் W.B.சௌந்திரபாண்டி நாடார், ஏ.டி.பன்னீர் செல்வம் போன்றோர்தான். இல்லாவிட்டால் கவர்னர் ஆர்தர் ஹோப் போன்றோர்தான். ஒரு முறை ஆர்தர் ஹோப் கொடைக்கானலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, நிலக்கோட்டை பெரியவர்கள் ரோடில் அவர் காரை நிறுத்தி, அவருக்கு மாலை போட்டார்கள். இவர்களைத்தான் தலைவர்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் காந்தியோ கோடையிடி ராமசாமி இல்லை. முத்துசாமி வல்லத்தரசில்லை. அண்ணாதுரையும் இல்லை. அவர்களைப் போல் இடிமுழக்கம் செய்யும் பேச்சாளரும் இல்லை. மிக ஒல்லியான ஒரு மனிதர், மென்மையான குரலில் பேசிக் கொண்டு, இடுப்பில் அணிந்த அரையாடைத் துணியுடன் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தார். வந்த மக்கள் எல்லோரும் அவர் பெருமையை விதம் விதமாகப் பேசிக் கொண்டிருந்தனர். “என்னமா உடம்பு தங்க ரேக்கு மாதிரி பளபளக்குதுங்கிறீங்க?” என்ற வியப்பு அவர்கள் பேச்சில் கேட்டது. இவ்வளவு பேரை, இந்தியா முழுதும், கோடிக்கணக்கில், அவரால் எப்படி ஈர்க்க முடிந்தது என்பது மிகவும் பெரிய விஷயமாக இருந்தது.

சுஜாதா பற்றிச் சொல்லுங்கள், உங்கள் அபிப்ராயம்?

நான் அதிகம் சுஜாதாவினுடைய புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனால் அவர் ரொம்ப புத்திசாலியான மனிதர். எல்லா துறைகளிலும் நிறைய விஷயங்கள் தெரிந்தவர். நிறைய எழுதியிருக்கிறார். பரவலான வாசிப்பு அனுபவம் உடையவர். ஆனால் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். தன்னுடைய திறன்களை எல்லாம் சந்தைக்குக் கொண்டு வந்த மனிதர். ஆனால் சிலதெல்லாம் குப்பை என்பது அவருக்கு நன்கு தெரியும் – அப்படித்தான் நான் நினைக்கிறேன் – ஆனால் ஏன் செய்தார்? அவர் எதிர்நீச்சல் போட விரும்பவில்லை. அவருக்கு அந்த பலம் உண்டு. திறன் உண்டு. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. நிறைய விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு விட்டார். காரணம் பணம், புகழ் என்று சொல்வதை விட பிராபல்யம் என்று சொல்லலாம். சாகித்ய அகாதாமியின் ஸ்ம்காலீன் பாரதிய சாஹித்ய என்னும் இதழின் ஒரு விசேஷ இதழ், தமிழின் இன்றைய சிறுகதைகள் என்று தேர்ந்தெடுத்த சில கதைகளைத் தொகுத்து ஒரு சிறப்பிதழ் வெளியிட சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும்படி என்னைக் கேட்டார்கள். நான் அதற்கு 75, 80 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். அவை மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்ததன. அதில் பெங்காளிகளையும், ஹிந்திக்காரர்களையும் மிகவும் பாதித்த, அவர்கள் மிகவும் விரும்பிய முதல் மூன்று சிறுகதையாசிரியர்கள். முதலில் சுஜாதா. அவரது அறிவியல் சார்ந்த சிறுகதை அவர்களை மிகவும் பாதித்தது. அடுத்தது ஜெயமோகன். அவரது எழுத்து மிக வித்தியாசமாக இருந்தது. அடுத்து வரவேற்பைப் பெற்ற எழுத்து ஆ.மாதவனுடையது. இப்படியெல்லாம் எழுதக் கூடியவர்கள் தமிழில் இருக்கிறார்களா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்படித் திறமையான ஆள்தான் சுஜாதா. அவரது வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும். அவரிடம் நான் ஒரு முறை ஒரு ஆலோசனை சொன்னேன். அவருடைய மொத்த கதைகளையும் எனக்குத் தந்தால், அதில் நான் தேர்ந்தெடுக்கும் கதைகளை ஒரு தனி வால்யூமாகப் போடலாம் என்று. அதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை.

ஆரம்ப காலத்தில், அதாவது அறுபது எழுபதுகளில், நான், ஸ்ரீரங்கம் டி.எஸ்.ராஜகோபாலன், சுஜாதா, இன்னும் சில நண்பர்கள் எல்லோரும் டெல்லியில் கரோல் பாக் பகுதியில் வசித்தவர்கள். அங்கே ஒரு மெஸ் இருக்கும். அதன் அருகே ஒரு பெட்டிக்கடை இருக்கும். நாங்கள் எல்லாம் அங்கே வருவோம். கடை வாசலில் குமுதம், விகடன் எல்லாம் தொங்கவிடப்பட்டிருக்கும். அவற்றை அங்கேயே புரட்டிப் பார்ப்பதும், அதில் இருப்பதைக் கேலி செய்வதும் அப்போது நடக்கும். அதைப் பார்த்து சுஜாதா, ’இது மாதிரி ஆயிரம் கதை எழுதுவேன் நான்’ என்பார். உடனே டி.எஸ்.ராஜகோலான், ‘முடியாது. ஒரு ஸ்ரீரங்கத்துக்காரனால இவ்வளவு பேத்தலா எழுத முடியாது’ என்பார். இப்படி கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பின்னர் அதே குமுதத்தில் சுஜாதா கதை வெளியானது. நான் எது எழுதினாலும் குமுதம் போடும் என்று சந்தோஷத்தோடு சொல்லிக்கொண்டார். பின்னர் அவர்கள் மீண்டும் கேட்டுக் கொண்டதும் தான் விரும்பிய ஸ்டைலில் ஒரு கதையை எழுதி அனுப்பினார். ஆனால் அவர்கள் அதை பிரசுரம் செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்து விட்டார்கள். “நீங்கள் உங்கள் பழைய ஸ்டைலிலேயே அனுப்புங்கள் இது வேண்டாம்” என்று. ஸோ, மார்க்கெட்டிற்கு எது தேவையோ அதை அவர்கள் டிமாண்ட் செய்தார்கள். இவரும் அதற்கேற்றவாறு எழுத ஆரம்பித்தார். ஆனால் அது சாமர்த்தியமா, அல்லது வெகு ஜன ரசனைக்காக தன்னுடைய திறனை தாழ்த்திக் கொண்டதா என்பதை அவரவர் தீர்மானத்திற்கு விட்டுவிடலாம். .

“இன்றைய தமிழ் எழுத்தில் சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்” என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். ‘சுஜாதா – தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்’ என்று யாரோ அதை கொட்டை எழுத்தில் எடுத்து பத்திரிகையில் போட்டு விட்டார்கள். இதனால் சுஜாதா மிகவும் காயப்பட்டுவிட்டார் என்பது என் கவனத்திற்கு வந்தது. பலபேரைக் கவரக் கூடியது வேறு விஷயம். பல பேரைக் கவரக் கூடியது எது என்று தெரிந்து கொண்டு அதை மட்டுமே செய்வது வேறு விஷயம். சுஜாதா மிகவும் திறமை வாய்ந்தவர். அந்தத் திறமை மூலம் படைப்பின் மிக உயரிய உச்சத்திற்குச் சென்றிருக்கக் கூடியவர். ஆனால் சமரசங்களின் மூலம் அவர் அதைச் செய்யாதது நமக்கு ஒரு பேரிழப்பு. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான மனிதர். மற்ற எழுத்தாளர்கள் எல்லாம், சாகித்ய அகாதமி போன்ற விருதுகளைப் பெற என்னென்னவோ தகிடுதத்த வேலைகளையெல்லாம் செய்த பொழுது, இவர் அது போன்ற எதிலும் ஈடுபாடு கொள்ளாமல் அமைதி யாக இருந்தார். நைலான் கயிறு எழுதிய சுஜாதாவைத்தான் தமிழகம் அறியுமே தவிர, இன்னொரு சுஜாதாவை, நாமறிந்த சுஜாதாவை இழந்து விட்டோமே என்று வருத்தப்படுகிற சுஜாதாவை, அவர்களுக்குத் தெரியுமா என்பது தெரியாது.

கண்ணதாசன் பற்றியும் சொல்லுங்கள்…

கண்ணதாசனை சினிமாவால் கெட்டவர் என்று சொல்லி விடலாம். ஆனால் அவர் மாதிரி தமிழை ஆண்டவர்கள் கிடையாது. தமிழ் அவருடைய நாவிலே விளையாடியது. அவருடைய மூன்றாவது தொகுப்பில் உள்ள மீனாட்சியம்மை பற்றிய பாடல்கள் எல்லாம் அவ்வளவு அற்புதமானவை. தனது மோசமான வாழ்க்கை நிகழ்வுகளை தெளிவாக, அதுபற்றிய எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லும் நெஞ்சுரம் – அது ஒரு பெரிய விஷயம். அவருக்கு இருந்தது. தான் கடந்துவந்த மோசமான அந்தப் பாதையை மீறி எழுந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. உண்மையில் அவர் அதை மீறியும் எழுந்துவிட்டவர் என்பது நமக்குத் தெரியும். அதே சமயம் இவர் கூட்டாளிகள் தம் மோசங்களையும் ஆபாசங்களையும் மறைத்து பொய்களை வரலாறாக எழுதுவதும் நமக்குத் தெரியும். கண்ணதாசனுக்கு இருந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்பத்ற்கு இதுவே நிரூபணம். இதையெல்லாம் மீறி, அவர் ஒரு சிறந்த கவிஞர் – பாடலாசிரியர். இன்னும் ஆரோக்கியமான, சுய விமர்சனம் கொண்ட சூழலில் அவர் இன்னும் பெரிய கவிதா வியக்தியாகியிருப்பார். தம் திறனையெல்லாம் சினிமா பாடல்களுக்கும் தரமற்ற அரசியல் பாட்டுக்களுக்கும் வியர்த்தமாக்கியவர். சுஜாதா பத்திரிகைப் புகழ், சினிமா புகழுக்கு ஆசைப்பட்டு தன் திறனை வியர்த்தமாக்கியது போல.

நிலக்கோட்டையில் நடந்த திருமணம் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தீர்களே. அதையும் சொல்லுங்கள்:

ஒரு முறை எங்களுடைய ஸ்கூல் மேனேஜரின் மகளுக்குத் திருமணம். அவள் என்னுடன் படித்தவள். எங்கள் வகுப்பில் மூன்று பேர் பெண்கள் இருந்தார்கள். ராம திலகம் என்று ஒரு தாசி வீட்டுப்பெண். அப்புறம் தாலுகா ஆபீஸ்காரர் ஒருவரின் பெண் என்று மொத்தம் மூன்று பேர். மூன்று பேரும்தான் எப்போதும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பணக்காரர், ஏழை என்ற ஏற்றத்தாழ்வுகளெல்லாம் இல்லாமல், சாதி வித்தியாசம் ஏதும் இல்லாமல், எப்போதும் சிரித்துப் பேசிக்கொண்டு, எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள். அதுபோல எங்கள் பக்கமும் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. அங்கண்ணன் என்று ஒரு பையன் எங்களோடுதான் அமர்ந்து கொண்டிருப்பான் எப்போதும். அவன் செட்யூல்ட் கேஸ்ட் பையன். But nobody will say anything. எங்களுக்குள் அந்த வித்தியாசமெல்லாம் தெரியாது. அவனைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த முக்கியமானதொரு விஷயம், ஒவ்வொரு கிளாஸிலும் இரண்டு வருடம் இருப்பான் என்பதுதான். எங்கள் வகுப்பிலேயே மிக உயரமாக இருந்தவன் அவன்தான்.

அந்த மேனேஜரின் பெண்ணுக்கு, பையனுக்கு கல்யாணம் நடந்தது. பெரிய கல்யாணம். நிலக்கோட்டையிலேயே அந்த மாதிரிக் கல்யாணம் நடந்ததில்லை என்னும்படியாக மிக விமரிசையாக நடந்தது. ஒவ்வொருநாள் மாலையும் கச்சேரி நடந்தது. ஒரு கச்சேரியில் ஆலத்தூர் சகோதரர்கள் பாடினார்கள். மற்ற நாட்கள் கச்சேரி செய்தது யார் என்று எனக்கு ஞாபகமில்லை. என் வாழ்க்கையில் நான் கேட்ட முதல் கச்சேரி அதுதான். மறுநாள் நடந்த நாதஸ்வரக் கச்சேரி யார் பாடியது என்பது தெரியவில்லை. இப்படியெல்லாம் கூடக் கல்யாணம் நடத்துவார்களா என்று மிக விசேஷமாக அது நடந்தது. அதன்பிறகும் ஒரு 2,3 வருஷம் நிலக்கோட்டையில் இருந்திருக்கிறேன். ஆனாலும் யாரும் அவ்வளவு பெரிய திருமணம் நடத்தியதாக ஞாபகம் இல்லை. அந்தக் காலத்திலேயே பனிரெண்டாயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். அது மிகப் பெரிய பணம்.

(தொடரும்)