வித்யா சங்கர் – ஒரு பேட்டி

‘முத்ரா’ என்ற இசை இதழுக்கு அண்மையில் காலஞ்சென்ற விதுஷி வித்யா சங்கர் ஒரு பேட்டி அளித்திருந்தார். அவர் நினைவாக அந்தப் பேட்டியை இங்கே தமிழில் அளிக்கிறோம்.

நன்றி: முத்ரா

வித்யா சங்கரின் இரண்டு புத்தகங்களைக் குறித்து இதே இதழில் லலிதா ராம் எழுதியிருக்கும் கட்டுரை:  விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை

அடிப்படையிலேயே உங்கள் குடும்பம் இசையுடன் தொடர்புடையாதா அல்லது உங்களுடைய தனிபட்ட ஆர்வத்தின் மூலம் நீங்கள் இசை கற்றுக்கொண்டீர்கள்?

veenadetailஇசை எங்கள் குடும்பத்திலேயே இருந்தது. என் அப்பா ஸ்ரீ.சி.எஸ்.ஐயர் அக்கெளண்டண்ட் ஜெனரலாகப் பணிபுரிந்தவர். தேர்ந்த இசை விஞ்ஞானி (musicologist) மற்றும் வயலின் கலைஞர். ஸ்ரீ.சபேச ஐயரிடம் இசை பயின்றார். என் தாத்தா, மகா வைத்தியநாத ஐயர் போன்ற மாமேதைகளின் இசையைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். ஒரு வயலினை வாங்கி அதை வாசிக்கும் அளவிற்கு இசை மீது ஆர்வம் கொண்டிருந்தார். என் தாத்தாவின் இசையைக் கேட்ட என் அப்பா தானும் வயலின் வாசிக்கத் தொடங்கினார் (உண்மையில் முப்பத்தைந்து வயதில்தான் என் தந்தை இசையின்பால் ஈர்க்கப்பட்டார்). இசையின் அறிவியல் தன்மைகளை அறிவதில் ஈடுபாடு காட்டிய என் தந்தை சபேச ஐயரின் துணையோடு ஸ்வரபடுத்துவதிலும் (notating) ஈடுபட்டார்.

உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள்?

நாங்கள் மொத்தம் பத்து பேர். பத்து பேரும் என் தந்தை மூலமாகவே இசை பயின்றோம். ஆனால் இசையை முழுநேர பணியாக தேர்ந்தெடுத்தது நான் மட்டுமே. அனைவரும் வயலின் அல்லது வீணை வாசிக்க கற்றுக் கொண்ட போதும், வாய்ப்பாட்டில் இருந்துதான் எங்கள் இசை பயிற்சி தொடங்கியது. நான் வீணை கற்றுக் கொள்ள துவங்கியபோது என் வயது எட்டு. ஒரு சுவாரஸியமான சம்பவம் இருக்கிறது. ஒரு முறை, ”எளியேனே” எனும் ஆனய்யாவின் கீர்த்தனையை சபேச ஐயர் பாடப்பாட, என் தந்தை ஸ்வரப்படுத்த முயன்றார். சரணத்தில், ஒரு குறிப்பிட்ட வரியை ஸ்வரப்படுத்துவதில் என் அப்பா சற்று திணறினார். நான் என் உள்ளுணர்வு சொன்னபடி உடனடியாக ஸ்வரப்படுத்தினேன். உடனே சபேச ஐயர் என் தந்தையிடம் நான் பாடிய விதமே ஸ்வரப்படுத்தும்படி சொன்னார். நான் இங்கு குறிப்பிடவிரும்புவது என்னவென்றால், சபேச ஐயர் வெறும் இசைக் கலைஞராக மட்டுமில்லாமல், ஒரு இசை விஞ்ஞானியாகவும் விளங்கினார். மற்றுமொரு சம்பவம் கூட உண்டு. அட தாள பைரவி வர்ணத்தின் முதல் வரியை என் தந்தை வாசித்துக் கொண்டிருந்தார் : நி ச ரி க ச ரி – க ரி க க ரி. ‘ரி’ வாசிக்கும் போது வயலினின் பஞ்சமக் கம்பியை வாசிக்கக்கூடாது என்று என் குரு சுட்டிக்காட்டினார். அவர் சொல்ல விரும்பியது என்னவெனில், அப்படி செய்தால் ரிஷபம் உரத்து ஒலிக்கும் என்பதே. அவர் சொன்ன இந்த கருத்து திஸ்சுருதி(tissruti) மற்றும் சதுசுருதியைக் (chatusruti) குறித்த மிகப்பெரும் உண்மையாக கருதுகிறேன். என்னுடைய கோட்பாடு என்னவெனில், கலையம்சம் நிரம்பிய எதுவுமே தேங்கிப் போகாது. அது அறிவியல் அடிப்படை இல்லாமலும் இருக்காது. இசையின் அனைத்துக் கூறுகளும் அறிவியல் அடிப்படை கொண்டதாக இருப்பதால், இசை குறித்த அறிவியல் அடிப்படையிலான ஆராய்ச்சி அவசியமாகிறது.

உங்கள் கல்வி குறித்து….

எந்தத் துறையினராக இருந்தாலும், பிற துறைகளின் அடிப்படைப் புரிதலை ஒருவர் அறிந்திருப்பது அவசியம் என்று என் தந்தை எப்போதும் கருதினார். அதனால், நான் என்னுடைய பட்டப்படிப்பை முடிக்கும்படி வலியுறுத்தினார். ராணி மேரி கல்லூரியில் என்னுடைய பட்டப்படிப்பை முடித்தேன்.

உங்கள் தந்தை உங்களைக் கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வாரா?

நிச்சயமாக! பல கலைஞர்களின் இசையைக் கேட்பதனால் மட்டுமே நல்ல இசை குறித்தும் மோசமான இசை குறித்தும் நாம் அறிந்து கொள்ளமுடியும் என்று அவர் கருதினார். ஆனால், அவர் குறிப்பாக அரியக்குடியின் இசையை பெரிதும் விரும்பினார். அவரின் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் எங்களை அங்கு அழைத்துச் செல்வார். எனக்கு முசிறியின் இசைமேல் பெரும் ஆர்வமுண்டு. என் தந்தையின் விமர்சனக் கருத்துக்கள் மிக உபயோகமானவை. தவறுகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவார். உதாரணமாக, செளடைய்யா ஏழு கம்பிகள் கொண்ட வயலினை உபயோகித்ததை என் தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இது குறித்து அவரிடமே விவாதித்திருக்கிறார்.

தன்னுடைய அலுவலக பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் எப்படி உங்கள் தந்தையால் இசைக்காக நேரம் ஒதுக்க முடிந்தது?

உண்மை. அது ஆச்சரியமானது. அவர் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். வயலின் பயிற்சியில் ஈடுபடுவார். பின் டென்னிஸ் விளையாடிவிட்டு, அலுவலகத்திற்கு எட்டு மணிக்குக் கிளம்புவார். அலுவலகத்திலிருந்து மதியம் மூன்று மணிக்குத் திரும்பிவிடுவார். வந்தவுடன் மற்ற பணிகளில் ஈடுபடுவார். அவர் தொடர்ச்சியாக பணியாற்றக் கூடியவராக இருந்தார்.

சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளைக் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஈர்ப்பு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என்னுடைய கல்லூரி நாட்களில், டி.எல்.வெங்கட்ராம ஐயரிடம் இசை கற்றேன். வாரம் இரண்டு நாள் என்ற வகையில் தொடர்ந்து ஐந்து வருடம் கற்றேன். பாடல் வரிகளையோ, ஸ்வரங்களையோ எழுதி வைத்துக் கொள்ளும் என்னுடைய பழக்கத்தை அவர் கடுமையாக எதிர்ப்பார். சில தருணங்களில், ஒரே நாளில் 4-5 கீர்த்தனைகளை ஒரே வகுப்பில் கற்றுத்தருவார். வேறு சில சமயங்களில் ஒரே ஒரு வரியை மட்டும் இரண்டு மணிநேரங்களுக்கு கற்றுத்தருவார். நான் அனைத்து பாடல்களையும் என் மனதில் வைத்துக் கொண்டு, சிறு துண்டுக் காகிதங்களில் அவற்றை எழுதி வைத்துக் கொள்வேன். இதை கவனித்த என் அப்பா என்னை இசைக் குறியீடுகளை கற்றுக் கொள்ளும்படியும், அனைத்து பாடல்களையும் முறைப்படி ஸ்வரப்படுத்தி வைக்கும்படியும் சொல்வார். பின்னாளில், சியாமா சாஸ்திரிகளின் இந்தக் கீர்த்தனைகளை மூன்று பாகங்களாக வெளியிட்டேன்.

சமஸ்கிருதப் புலமையை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

என்னுடைய பள்ளிக் காலங்களிலேயே நான் சம்ஸ்கிருதம் கற்றேன். உண்மையில், சிறுவயதிலிருந்தே சமஸ்கிருதம் மீது தீவிர பற்று கொண்டேன். இப்போதும், ஒரு கீர்த்தனையை நான் கற்றுக் கொள்ள விரும்பினால், அதை நான் சமஸ்கிருதத்திலேயே எழுதிவைத்துக் கொள்கிறேன்.

சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனை தொடர்பான் உங்கள் புத்தகம் குறித்து சொல்லமுடியுமா?

நிச்சயமாக. இசை வடிவங்கள் மட்டுமின்றி, பாடல்களின் விரிவான அர்தத்தையும் அளித்திருக்கிறேன். ஆரம்பத்தில், நான் மொழிபெயர்த்த ஆறு கீர்த்தனைகளைப் பார்த்துவிட்டு முடிகொண்டான் வெங்கட்ராம் ஐயர் சிறப்பான பணிக்காக என்னை பெரிதும் பாராட்டினார். மற்ற அனைத்து பாடல்களையும் நான் மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறினார். ஆகையால், நான் தினமும் காலை மூன்று மணிக்கு எழுந்து இந்தக் கீர்த்தனைகள் மீதான எனது பணியை துவங்குவேன். இது மட்டுமல்லாமல், தியாகராஜரின் கீர்த்தனைகள் குறித்து விரிவான மொழிபெயர்ப்பை செய்யும் எண்ணம் உள்ளது. குறிப்பாக திவ்ய நாம கீர்த்தனைகளை மொழிபெயர்க்க விரும்புகிறேன். திவ்ய நாம கீர்த்தனைகள் உள்ளடக்கத்தில் எளிமையாக காணப்பட்டாலும் ஆழமான அர்த்தம் கொண்டவை.

உங்களுக்கு சிறுவயதிலிருந்தே இசையறிவியலில் ஆர்வம் இருந்ததா?

நான் பல சமஸ்கிருத ஆய்வுக்கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். குறிப்பாக நாட்டிய சாஸ்திரம் குறித்து, ஒரு சமஸ்கிருத பண்டிதரின் துணையோடு படித்து, நன்றாகப் புரிந்து கொண்டேன்.

இசையறிவியலைப் (Musicology) பற்றித் தெரிந்து கொள்வது ஒருவருடைய இசைத்திறமையை வளமாக்குமா?

நிச்சயமாக இசையறிவியலைக் குறித்துத் தெரிந்து கொள்வது விஷய ஞானத்தைத் தரும். தம் துறையைப் பற்றி பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும். ஆனால் தெரிந்து கொண்ட எல்லா கோட்பாடுகளையும் யாரும் நடைமுறைப்படுத்துவதில்லை.

சுப்பராய சாஸ்திரி, அண்ணாஸ்வாமி சாஸ்திரிகளின் படைப்புகளையும் நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள் இல்லையா?

ஆமாம். நான் ஷ்யாமா சாஸ்திரியின் பள்ளியிலிருந்து வந்ததால், இவர்களுடைய கீர்த்தனைகளையும் நான் கற்றுக் கொண்டு ஸ்வரப்படுத்தினேன். உங்களுக்கு நான் சொல்லும் ஒரு விஷயம் ஆச்சரியமளிக்கலாம். ‘பாலிம்சு காமாக்‌ஷி’ (மத்யமாவதி) என்ற ஷ்யாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையின் ‘கனக கிரி சாதன’ சரணத்தில் வரும் மத்யமகால பகுதிகளைச் சேர்த்தது அண்ணாஸ்வாமி சாஸ்திரி. அவை மூலக் கீர்த்தனையில் கிடையாது.

dikshitarமுத்துஸ்வாமி தீட்சிதரின் படைப்புகளில் உங்கள் ஆய்வைக் குறித்து…

ஆம். என்னுடைய சம்ஸ்கிருத ஆர்வத்தின் காரணமாக அவர் படைப்புகளை நான் ஆழ்ந்து படித்திருக்கிறேன். நான் இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சமஸ்கிருதத்தில் பொதுவாகத் தனிப்பட்ட மாற்றங்களுக்கு (personal touches) ஸ்கோப் இல்லாததால், அதற்கு ஒரு சிறந்த பிரம்மாண்டமும், மரியாதையும் இருக்கிறது.

ஒரு கச்சேரிக் கலைஞராக உங்களைக் குறித்து?

எனக்கு எப்போதுமே கச்சேரிக் கலைஞராவதில் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் எனக்கு வந்த வாய்ப்புகளைத் தவிர்க்காமல் ஏற்றுக் கொண்டேன்.

உங்களுக்கு சிஷ்யர்கள் இருக்கிறார்களா?

ஆம். சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் குழுவாகப் பங்கேற்கும் சில மாணவர்கள் இருக்கிறார்கள். ஆர்வமுள்ள மாணவருக்கு இசை கற்றுத் தர நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன்.

இசையைத் தவிர உங்களுடைய வேறு தனிப்பட்ட விருப்பங்கள் என்ன?

இயல்பாகவே, நான் அழகை ரசிப்பவளாகவும், நல்ல விஷயங்களைச் செய்பவளாகவும் இருக்கிறேன்.

One Reply to “வித்யா சங்கர் – ஒரு பேட்டி”

Comments are closed.