வணக்கம்.
சந்திரமோகனின் பட விமர்சனம் மிக சுவாரசியமாக இருந்தது. நான் ‘ராஜ்நீதி’ திரைப்படம்தான் பார்த்தேன். விமர்சனம் நான் நினைத்தவற்றை மிக அழகாக பிரதிபலித்தது. ஒரு புறம் ‘மகாபாரதம்’ என்று பிரசாரம், மறுபுறம் ‘சோனியா காந்தி’ யின் கதை என்று பலவாறும் சொல்லி வெறுப்பேற்றிவிட்டார்கள். என் வட இந்திய நண்பர்கள் என் விமர்சனத்தை கேட்டு என்க்கு சினிமா ரசனையே இல்லையோ என்கிறார்கள். நல்ல வேளை சந்திரமோகனின் விமர்சனம் வந்து உதவியது. இப்படத்தில் காட்டப்பட்டவர்கள் ‘law makers’ – ஆனால், படம் முழுவதும் சட்டத்தை உடைக்கிறார்கள். கத்ரீனா பாவமாய் இருக்கிறார். இவரின் இதுவரை அருமையான நடிப்பு என்றெல்லாம் அலட்டினார்கள். இனிமேல்தான் இவர் நடிக்க வேண்டும் என்பது என் கருத்து. மேலும் மனோஜ் பாஜ்பாய், அஜய் தேவ்கன், நானா படேகர் போன்ற அருமையான நடிகர்களை வீனாக்கியுள்ளார்கள்.
ராவண் பற்றி படித்ததோடு சரி. மணியின் படங்கள் அலுத்துவிட்டன. அவர் என்று ‘தெடக்கு’ (தெற்கு +வடக்கு) படங்கள் எடுக்க தொடங்கினாரோ, அன்றே அதில் செயற்கை தோன்றத் துவங்கியது. ‘பம்பாய்’ ஒன்றுக்தான் களத்திற்கு சரியான வட இந்திய கதை. ரஹ்மானின் இசையும் அகில இந்திய ரசிகனைக் கவர பலவித சர்க்கஸ் போல ஆகிவிட்டது. ’அலைபாயுதே’ போன்ற படைப்புகளை இனிமேல் எதிர்பார்க்க முடியாது. மணி, இசையமைப்பாளரை மாற்றி புதியவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும். இளையராஜா சமீபத்தில் ஒரு மேடையில் சொன்னது நினைவுக்கு வருகிறது – ‘இயக்குனர்களுக்கு உள்ள ஒரே ப்ரச்னை – ஹீரோ போல இமேஜ் பிரச்னை. ஒரு ஃபார்முலா வேலை செய்து விட்டால், அதையே மாற்றி போட்டு, மாற்றி போட்டு கதை சொல்வதையே மறந்து விடுகிறார்கள்”.
சந்திரமோகனுக்கு வாழ்த்துக்கள்.
ரவி நடராஜன்
‘விஞ்ஞானிகளும், நகைச்சுவையும்’ கட்டுரை படிக்கப் படிக்க திகட்டாத தேனாய் இனித்தது, நல்ல விறுவிறுப்பான கட்டுரை. அட அதற்குள் முடிந்து விட்டதே என்று எண்ணினேன். நன்றி.
Jayadeva Dasa
ரவி நடராஜனின் ’அறிவியலில் நகைச்சுவை’ கட்டுரை படித்தேன். இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம். ஆனால் நல்ல, சுவாரசியமான சப்ஜெக்ட்.
அந்த நாக்கை நீட்டியபடி போஸ் கொடுக்கும் ஐன்ஸ்டீன் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அதைக் குறித்து எழுதியிருப்பாரோ என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.
தன்னுடைய 72-ஆவது பிறந்த நாளுக்கு, நாளெல்லாம் புகைப்படத்துக்கு செயற்கையாக சிரித்து சிரித்து போஸ் கொடுத்து கொடுத்து நொந்து போன ஐன்ஸ்டீன், கடைசியில் இப்படி நாக்கை வெளியில் தள்ளி ஒரு போஸ் கொடுத்தார். அது வெகு பிரபலமான படமாகிவிட்டது. ஜுன் 2009-இல் 75,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டது.
மேலும் படிக்க: http://en.wikipedia.org/wiki/Albert_Einstein_in_popular_culture
நன்றி.
ராபர்ட் முத்துக்குமார்.
Excellent article by Sujatha Desikan.கலர்க்கனவுகள் அருமையான கட்டுரை, keep up your good work.with Regards,
Muthuganesh
ராகம்-தானம்-பல்லவி சில சந்தேகங்கள்
இக்கட்டுரை முழுதுமே பொதுவாக, ஏற்கனவே கர்நாடக சங்கீதம் பரிச்சயமானவர்களுக்காக எழுதப்பட்டது போல் இருக்கிறது. ஏற்கனவே தெரிந்த விஷயங்களை அவர்கள் இக்கட்டுரையைப் படித்து சரிபார்த்துக் கொள்ளலாம். ஆனால் என்னைப் போன்ற ஆர்வலர்கள் இதைப் படித்து ராகம்-தானம்-பல்லவி என்றால் என்னவென்று புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது.
நான் முன்பொரு முறை படித்த கட்டுரையில் கச்சேரியின் ஆரம்பத்தில் பாடப்படும் ஒரு விஷயம் (வர்ணம்?) பாடகர் தொண்டையைப் பதப்படுத்திக் கொள்வதற்கேற்ற வகையில் இருக்கும் என்று எழுதியிருந்தார்கள். அதனால் என்னால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயத்தின் purpose என்னவென்று புரிந்தது.
ஆனால் இக்கட்டுரையில் ராகம்-தானம்-பல்லவி என்றால் என்ன அர்த்தமென்று விளக்குகிறார் கட்டுரையாளர்.
ஆனால் –
1) ராகம் என்றால் என்ன? அதை ஏன் பாடுகிறார்கள், அதற்கும் பிற பாடல்களுக்கு முன்பு பாடப்படும் ராக வடிவத்துக்கும் என்ன வித்தியாசம்?
2) தானம் என்பதை ஏன் பாட வேண்டும்? அதன் பயன் என்ன? [அந்தப் பயன் தெரிந்தால்தானே அது வேண்டுமா, வேண்டாமா என்று சொல்ல முடியும்?]. இதில் பாடகர் வெளிப்படுத்தும் க்ரியேட்டிவிட்டிக்கும், தனிப்பாடல்களில் வெளிப்படுத்தும் க்ரியேட்டிவிட்டிக்கும் என்ன வித்தியாசம்?
3) அதைப் போலவே பல்லவி குறித்தும். ஏன் அப்படி பல்லவியைப் போலப் பாட வேண்டும்? அதன் தனித்துவம் என்ன?
உங்கள் கட்டுரையிலிருக்கும் சில வாக்கியங்கள்:
1) //பொதுவில் சௌககாலத்தில் ராகத்தை மெதுவாய் விஸ்தரித்து ஆலாபனை செய்திருக்கையில், மத்தியமகாலத்தில், அதாவது மிதவேகத்தில் தானம் செய்வது ஸொஸ்தமானது.//
இதை நீங்களே படித்துப் பாருங்கள். எனக்கு செளககாலம் என்றால் என்னவென்று தெரியாது. ஸொஸ்தமானது என்றால்? சுகமானதா? இந்த வரியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.
2) //பல்லவி என்றால் பதம் லயம் வின்யாசம் (ப-ல-வி) இவற்றின் கூட்டு என்பர். பதம் என்றால் சாஹித்தியம் அல்லது பாட்டு வரிகள். லயம் என்றால் என்ன தாளம், கால இடைவெளிகளில் பாடுகிறோம் என்பது. வின்யாசம் என்றால், கற்பனைவளஞ்செரிய ராகத்தையும், லய கணக்குகளையும் இசையாய் வெளிக்காட்டுவது.//
மேற்கண்ட வரிகளையும், நீங்கள் கொடுத்தும் எடுத்துக்காட்டையும் என்னால் தொடர்புபடுத்திக் கொள்ளவே முடியவில்லை. அதனால்தான், இது ஏற்கனவே இசைப்பரிச்சயம் உள்ளவர்களுக்கான கட்டுரை என்கிறேன். இன்னும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
3) //பிறகு பக்க வாத்தியங்களின் தனி ஆவர்த்தனம், முடிவில் பல்லவியை மீண்டும் ஷட்காலத்திலும் (அமைந்திருந்தால், இல்லை த்ரிகாலத்தில்) பாடி நிறைவுசெய்யவேண்டும்.//
இதில் ஷட்காலம், த்ரிகாலம் என்றால் என்ன?
சங்கீத மொழியிலேயே இப்படிப்பட்டதொரு அறிமுகக் கட்டுரை எழுதினால், நீங்கள் சொல்லும் விஷயம் மக்களுக்கு சென்று சேராமலே போவதற்கு வாய்ப்பிருக்கிறது. நீங்கள் சாதாரண கச்சேரி விமர்சனக்கட்டுரை, கலைஞர் விமர்சனக்கட்டுரை என்றெல்லாம் எழுதியிருந்தால் நான் இதை இங்கே எழுத முகாந்திரமே இல்லை. ஆனால், அறிமுகக்கட்டுரை என்றெழுதும்போது, இசை அறிமுகமில்லாத, ஆனால் தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கும் ஆர்வலரின் பார்வையிலிருந்து பார்த்து எழுதுவது நல்லது.
இதையெல்லாம் நீங்கள் அடுத்த பாகத்தில் சொல்வது எனக்கெல்லாம் உபயோகமாக இருக்கும் என்றே இக்கடிதத்தை எழுதுகிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்,
பாலரங்கன்
அருண் நரசிம்மனின் ராகம்-தானம்-பல்லவி கட்டுரை படித்தேன். அபாரமான நடையில் அட்டகாசமாக விளக்கியிருக்கிறார். பல கேசட் அட்டைகளில் பார்க்க நேர்ந்த RTP என்றால் என்னவென்று எனக்கு இப்போதுதான் புரிந்தது. தொடர்ந்து அடுத்த பகுதிகளைப் பார்க்க, கேட்க, படிக்க ஆவலாக இருக்கிறேன்.
நன்றியுடன்,
சத்தியமூர்த்தி