மாட்ரிக்ஸ்: இயந்திரம் படைத்த மாயையின் பொன்னுலகு

தன்னுடைய சுயபிரக்ஞையை இழந்து, வேறொரு அன்னியமான ஆளுமையின் பிடியில், அதன் முழுமையானக் கட்டுப்பாட்டில் இருக்க நேரிடுவது ஓர் அடிப்படையான மனித அச்சம். இப்படி மானுடர்கள் பொம்மைகளாக வாழவைக்கப்படும் ஒரு முழுக்கட்டுப்பாட்டு சமுதாயம், 1971 இல் வெளியான ஜ்யார்ஜ் லுகாஸ் படமான THX 1138-இல் காட்டப்பட்டது. இத்திரைப்படமே லூகாஸின் முதல் அதீக கற்பனையுலக திரைப்படம்.

இதே அடிப்படை அச்சத்தை, மிகச்சிறப்பான கிராபிக்ஸ் உதவியுடன் திரை நாடகமாக்கியிருந்தது மாட்ரிக்ஸ் (Matrix) திரைப்படம். இத்திரைப்படத்தில் ‘செயற்கை அறிவு’, மனிதத்தின் கூட்டு மனதை (Collective consciousness) ஒரு செயற்கை மாய உலகில் லயிக்க வைத்து, தன்னுடைய கட்டுப்பாட்டில் வாழ வைக்கிறது. இப்பெரும் செயற்கை அறிவின் இருப்புக்கு தேவையான சக்தியை அளிக்கும் உயிருள்ள பாட்டரி செல்களே மானுடம். மானுடம் அளிக்கும் சக்திக்கு இயந்திரம் அளிக்கும் பதில் உபகாரம் மானுடத்தின் மூளைக்குள் அது உருவாக்கும் மாயப் பொன்னுலகம்.

இந்த மாய உலகில் மனிதர்களுக்கென்று சுய விருப்பமோ, இயக்கமோ இல்லை. ஆனால் அப்படி இருப்பதாக அவர்கள் கருதியபடி வாழ்வர். அவர்களின் பிரக்ஞை முழுக்க, முழுக்க ‘செயற்கை அறிவின்’ கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. மாட்ரிக்ஸ் திரைப்படத்தில், மாய உலகிலிருந்து விடுபட்டவர்களுக்கும், செயற்கை அறிவுக்குமிடையே மிக உக்கிரமானதொரு போர் நடக்கிறது. கதாநாயகனின் இறப்புக்கும்  உயிர்த்தெழுதலுக்கும் பின்னர், மாட்ரிக்ஸ் உருவாக்கிய மாயாலோகம் உடைத்தெறியப்படுகிறது. கதாநாயகனின் அகவிழிப்புக்குப் பிறகு, மிகச்சாதாரணமான, ஆனால் அதுவரை திரைப்பார்வையாளர்கள் சந்தித்திராத திரை உக்திகள் மூலம் உருவாக்கப்பட்ட அடிதடிகள், அத்திரைப்படத்தை மற்றொரு ஹாலிவுட் மலினமாகவே மாற்றின. ஆனால் அதற்கப்பால் மாட்ரிக்ஸ் திரைப்படம் பயன்படுத்திய அறிவியல் கோட்பாடுகளும் வருங்கால தொழில்நுட்ப ஊகங்களும், தத்துவ இறையியல் வேர்களும் மிக சுவாரசியமானவை.

m-0048_matrix_the_quad_movie_poster_l

மாயா உலகத்திலிருந்து கதாநாயகன் நீயோவை மீட்டு வருபவர் மார்பியஸ். நியோவின் உண்மை இயற்கையை அறிய உதவும் ஒரு குரு அவர். தன்னைத்தானே அதற்காக தியாகம் செய்யவும் முற்படுபவர். கிறிஸ்தவ புரிதலின்படி மார்பியஸ் ஏசுவை முன்னறிவித்து ஏசுவுக்கு ஞான ஸ்நானம் செய்த யோவான். கிறிஸ்தவ குறியீட்டுத்தன்மைகள் மிக வெளிப்படையாகவே இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் மார்பியஸின் தத்துவமும் செயல்பாடுகளும், ஏற்கனவே க்வாண்டம் இயற்பியலுடன் கிழக்கத்திய தத்துவம் பகிர்ந்து கொண்ட ஒரு புள்ளியில் அமைந்திருந்தது.

வெகு பிரபலமான சிறுவர் இலக்கியமான ‘அற்புத உலகில் ஆலைஸ்’ (Alice in the wonderland) ஆழமான குறியீடுகள் நிறைந்த இலக்கியம் என்றதொரு கருத்து பல காலமாக நிலவி வருகிறது. ‘நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாம் வாழும் யதார்த்தம் மட்டுமே யதார்த்தமல்ல, அதற்கு இணைத்தன்மையுடன் நாமறியாமலே நமக்கு மிக அருகிலே கூட பல யதார்த்தங்கள் இருக்கலாம்’ என்பதையே அக்கதையில் ஆலைஸ் உணர்கிறாள். க்வாண்டம் இயற்பியல் காட்டும் யதார்த்த உலகின் முரண்படு இயற்கை ஒருவருக்கு அளிக்கும் அதிர்ச்சி, இதற்கு எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. மாட்ரிக்ஸில் இதுவரை தான் வாழ்ந்த உலகம் உண்மையில் ஒரு செயற்கை அறிவினால் ஏற்படுத்தப்பட்ட மனக்காட்சி மட்டுமே என கதாநாயகன் அறியும் சூழலில் ஆலைஸின் அற்புத உலக நுழைவுக் குறியூடுகள் (முயல் மற்றும் இருநிற குளிகைகள் ஆகியவை) இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

புற உலகின் மீது மனோசக்தி எத்தகைய ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதைக் குறித்து மேற்கின் கவனத்தைத் திருப்பிய சில நிகழ்வுகள் 1970களில் நடந்தன. யூரி கெல்லரின் ஸ்பூன் வளைத்தல் அதில் ஒன்று. தன்னுடைய மன ஆற்றலாலேயே, ஒரு ஸ்பூனை உற்றுப்பார்த்தே அதை வளைக்க முடியும் என்று சொல்லி அதைச்செய்தும் காட்டினார் யூரி கெல்லர். அவருடிஅய மன ஆற்றல் குறித்த ஆய்வுகள் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வுப்பத்திரிகையான நேச்சரில் கூட வெளிவந்தது.

urigeller_jamesrandi

இறுதியாக யூரி கெல்லர் ஒரு திறமையான மேஜிக் வித்தையாளரே தவிர, அவருடைய மனோசக்தி இத்யாதி எல்லாம் பொய் என்பது தெரிய வந்தது. அதுவரை அவருடைய ஸ்பூன் வளைப்பு வித்தைக்கு பாஷ்யமாக க்வாண்டம் இயற்பியல் பயன்படுத்தப்பட்டது. யூரி கெல்லர் தமது மனோசக்தியால் செய்த ஒவ்வொரு சித்து விளையாட்டையும் தமது சாதாரண கை-வேக விளையாட்டுக்களால் செய்து காட்டி, அவை வெறும் மேடை-மாஜிக் வித்தைகளே தவிர, சித்து அல்ல என நிரூபித்தவர் மேஜிக் ராண்டி என்கிற ஜேம்ஸ் ராண்டி. மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு ஆரக்கிளை (வருங்காலம் உரைக்கும் பெண்) காண வருகிறான் கதாநாயகன் நியோ. காத்திருக்கும் வேளையில் பௌத்தத் துறவி போல தோற்றமளிக்கும் ஒரு சிறுவன், பார்வையால் ஸ்பூன்களை வளைப்பதைக் காண்கிறான். நியோவும் ஸ்பூனை வளைக்க முயற்சிக்கிறான். ஸ்பூன் ஒரு மாயத்தோற்றம் அல்லது மனதின் நீட்சி என்பதை புரிந்து கொண்டால் ஸ்பூனை வளைக்க முடியும் என்கிறான் அச்சிறுவன்.

மற்றொரு முக்கியமான தொழில்நுட்பம் கணினிகளிலிருந்து நினைவுகளையும் அறிதல்களையும் நம் மூளைக்குள் இறக்க முடிவது. இது இன்றைக்கே உண்மையாகிக் கொண்டிருக்கிற தொழில்நுட்பம்தான். 2007-இல் லாஸ் ஏஞ்சல்ஸ் USCLA பல்கலைக்கழக ஆராய்ச்சி அறை ஒன்றில் எலியின் மூளைப்பகுதிகளுக்கும் சிலிக்கான் சிப்புகளுக்கும் உரையாடல்களை ஏற்படுத்தி அந்த மின் சலனங்களை திரையில் பார்த்துக் கொண்டிருந்தார் விஜய் ஸ்ரீனிவாசன். இப்போதைக்கு அவருடைய ஆராய்ச்சியும், இந்த ஆராய்ச்சியின் மூலகர்த்தாவான டெட் பெர்ஜரின் ஆராய்ச்சியும், வயதினாலோ அல்லது விபத்தினாலோ செயலிழந்த மூளைச்செல்களின் இடத்தில் இந்த சில்லுகளை வைப்பதாகவே இருக்கிறது. நாளைக்கு இது இன்னும் பரிணமித்து நம் மூளையின் நினைவுகளை சில்லுகளில் அல்லது நினைவு வங்கிகளில் வைத்துக் கொள்ளவும் அல்லது தேவையான அறிதல்களை அறிவுகளை நினைவு வங்கிகளிலிருந்து குறித்த விலைக்குப் பெற்றுக் கொள்ளவும் உதவலாம். இந்த விஷயத்தில் மாட்ரிக்ஸ் காட்டும் தொழில்நுட்பம் அப்படி ஒன்றும் தொலைத்தூர வருங்காலத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

நினைவுகளையும் அறிதல்களையும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் இப்படி சில்லுகளை மாற்றுவதன் மூலம் பெற முடியுமா? சில்லுகளை விடுங்கள். கரிம மூலக்கூறுகள் மூலம்? இதுதான் இந்த மெமரி டிரான்ஸ்ஃபர்களின் தாத்தாவான ஆராய்ச்சி எனலாம். மூளையின் வேதியியலை ஆராயும் ஹோல்ஜர் ஹெய்தன் என்கிற ஸ்விஸ் விஞ்ஞானி சில செயல்களுக்குப் பழக்கப்படும் எலிகளில் அந்த பயிற்சிகளுக்கு பிறகு அவற்றின் மூளைகளில் இருக்கும் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் தொடரமைப்பில் மாற்றம் இருப்பதாக கண்டுபிடித்தார். இது சில சுவாரசியமான ஊகங்களுக்கு வழி வகுத்தது. இவ்வாறு மாற்றமடையும் வேதிப்பொருட்களை ஒரு பயிற்சியளிக்கப்பட்ட விலங்கின் மூளையிலிருந்து எடுத்து பயிற்சி அளிக்கப்படாத விலங்கின் மூளையில் செலுத்தினால் அது பயின்ற விஷயங்கள் இதற்கு தெரிந்து விடுமா? ஆம் எனத் தெரிவித்தன இரு ஆராய்ச்சி முடிவுகள்.

1965 இல் ஆலன் ஜோக்கோப்ஸனின் ஆராய்ச்சி இதில் முக்கியமானது. அதனைத் தொடர்ந்து இருளைக் கண்டு பயப்பட ஒரு எலியை பழக்கி அதன் மூளையிலிருந்து சுரந்த ஸ்கோட்டோ ப்போபின் என்கிற பெப்டைட் (புரதத்தை கட்டமைக்கும் செங்கல்களாக இருக்கும் மூலக்கூறுகள்) மற்ற எலிகளுக்கு செலுத்தப்பட்ட போது அந்த எலிகளும் இருளைக் கண்டு அச்சமுற்றன என்றார் ஜியார்ஜஸ் உங்கர் என்கிற மற்றொரு ஆராய்ச்சியாளர். ஆனால் இது ஒரு வெற்றிகரமான அறிவியல் நிகழ்வாகவில்லை. ஏனென்றால் அறிவியலின் ஒரு முக்கிய நியதி ஒரு பரிசோதனையின் முடிவு உண்மையென்றால் அது மீண்டும் நிகழ்த்தப்படவேண்டும். 1966 இல் 23 ஆராய்ச்சியாளர்கள் ஜோக்கோப்ஸனின் பரிசோதனையை மீண்டும் நடத்தி அதே விளைவுகள் தமக்கு கிட்டவில்லை என திட்டவட்டமாக அறிவித்தனர். உங்கரின் பரிசோதனையோ சில தவறுகளால் கிடைத்த விளைவே தவிர சரியான முடிவல்ல என கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனைச் சாலைகளில் தோல்வியுற்றாலும் கற்றறிவையும், நினைவுகளையும் மூலக்கூறுகள் மூலம் மூளைக்கு மூளை இடம் மாற்ற முடியும் என்கிற சுவாரசியமான சிந்தனை பல அறிவியல் புதினங்களுக்கு நல்ல தீனியானது. மூலக்கூறுகளிலிருந்து சில்லுகளும் மூளையுடன் உறவாடும் நெட்வொர்க்குகளும் உருவானது மின்னணு யுகத்துக்கே உரிய இயற்கையான மாற்றம்.

என்னதான் ஆழமான அறிவியல் கோட்பாடுகளையும் தொழில்நுட்ப ஊகங்களையும் பயன்படுத்தியிருந்தாலும் மாட்ரிக்ஸ் முதல் படம் வழக்கமான ஹாலிவுட் அடிதடி படத்துக்கு அப்பால் வேறில்லை என்ற நிலையிலிருந்து அடுத்து வந்த இரண்டு மாட்ரிக்ஸ் படங்களும்தான் ஒரு ஆழமான தத்துவ நோக்கு கொண்ட படத்தொடர்களாக உயர்த்தின எனலாம். இறுதித்திரைப்படத்தில் “கட்டமைப்பாளன்” (Architect) என்றொரு முதியவர் வருகிறார். இவரே மாட்ரிக்ஸை வடிவமைத்தவர். மேற்கத்திய ஆபிரகாமிய மரபில் நசுக்கி அழிக்கப்பட்டு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட ஒரு பழமையான ஞானமரபில் (Gnostic) வழங்கப்பட்ட கதை, இங்கு மறு-கதையாடல் செய்யப்படுவதை மாட்ரிக்ஸ் திரைத்தொடரை ஆராய்ச்சி செய்த பல தொன்மவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்பழைய ஞானமரபின் கதைப்படி ஸோஃப்பியா என்கிற ஞானசக்தியே இப்பிரபஞ்சத்தின் உண்மையான ஆதாரமாக விளங்குபவள். இவளிலிருந்து தோன்றிய ஒரு சிறுதெய்வமே யூதேய-கிறிஸ்தவ மரபின் படைப்புக்கடவுள். இப்படைப்புக்கடவுள் தமது அகங்காரத்தால் படைக்கும் பௌதீக உலகில் ஜீவன்கள்சிறையுண்டுவிடுகின்றனர். இப்படைப்புக்கடவுள் அகந்தையின் உச்சத்தில், மேலும் பல சக-தேவ கணங்களுடன் தன்னை வணங்குமாறும், தன்னையே கர்த்தர் என்று தன் புகழைப் பாடுமாறும் ஜீவன்களை இம்சைப்படுத்துகிறான். கட்டமைப்பாளன் இங்கு யஹீவாவையும், ஆரக்கிள் ஸோஃபியாவையும் குறிப்பிடுவதாக தொன்மவியலாளர்கள் கருதுகின்றனர். மாட்ரிக்ஸ் திரைப்படம் முழுக்க இத்தகைய க்நாஸ்டிக் குறியீடுகள் நிறைந்துள்ளதெனவும் தொன்மவியலாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

wachowski_brothersஉதாரணமாக நியோவின் மாட்ரிக்ஸ் உலகத்துப் பெயர் தாமஸ் ஆண்டர்சன். ஆண்டர்ஸன் என்பது “மனு குமாரன்”. தாமஸ் ஆண்டர்ஸன் என்பது ஞானமரபு கிறிஸ்வத்தின் ஆதார நூலான தாமஸ் எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியை குறியீடாக உணர்த்துவதாக இருக்கலாம். (இது நமது ஊரின் தோமாபுளுகு கிறிஸ்தவமல்ல. பாரத ஞான மரபுகளின் எதிரொலியாக அலக்ஸாண்டிரியாவில் எழுந்து பிறகு நிறுவன கிறிஸ்தவத்தால் மிகக் கொடுமையாக அழித்தொழிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயம்.) சில நேரங்களில் இந்த ஆராய்ச்சிகளை வாச்சோஸ்கி சகோதரர்களே படித்துவிட்டு “அட! நாம் இப்படியெல்லாமா நினைத்தோம்?” என்று ஆச்சரியப்படுவார்களோ என தோன்ற வைக்கும் அளவில் இருக்கின்றன.

ஆனால் மாட்ரிக்ஸ் திரையமைப்பில் மற்றொரு பண்பாட்டின் பெண் தெய்வத்தை இயக்குநர் நுட்பமாக உள் நுழைக்கிறார். மேலே சொன்ன ஞானமரபுக் கதையின் வேர்களை நாம் கேனோபநிஷத்தில் காணலாம். அதில் அகந்தை கொள்ளும் தேவர்களுக்கு ஞானம் அளிப்பவள்: உமா. மாட்ரிக்ஸ் கதையில் ஞானம் அளிப்பவளாகச் சித்தரிக்கப்படுபவள் – சதி என்கிற சிறிய இந்தியப் பெண். இந்தியத் தொன்மத்தில் சதியின் மறுபிறவியே ஹிமவானின் சிறிய மகளான உமா. அத்துடன் இச்சிறுமியே திரைப்படத்தில் புதிய உதயத்தை உருவாக்குகிறாள். உதயத்தின் வேத தேவதை உஷஸ். இத்திரைத் தொடரை எடுத்த வாச்சோஸ்கி சகோதரர்கள் தம் இந்திய சார்பினை இறுதித் திரைப்படத்தில் வெளிப்படையாகவே உபநிடத செய்யுட்களை பின்னணி இசையாக்குவதன் மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஆபிரகாமிய இயந்திர-மானுட பிளவு, இறுதியில் பாரத மரபின் பெண் தெய்வ ஞானத்தில் ஒத்திசைவு அடைகிறது. பொதுவாகவே தென்கிழக்காசிய ஞானமரபுகளில் (வேதாந்த, பௌத்த) செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களுடன் மானுடம் இணைந்து மேன்மையடைய முடியும்; செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்கள் மானுட பரிணாமத்தில் இயற்கையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு நிலைதான் எனும் கருத்து இயல்பாகவே எழுந்துவிடுகிறது.

உதாரணமாக மாஸாரிகோ மோரி (Masahiro Mori) எனும் ஜப்பானிய ரோபாட்பொறியியலாளர் ரோபோட்களும் புத்த இயற்கையை வெளிப்படுத்த முடியும் என கருதுகிறார் ஏனெனில் புத்த இயற்கை என்பது அனைத்திலும் உள்ளிருக்கும் ஒன்றல்லவா? தலாய்லாமா இன்னும் ஒரு படி போய் சிந்திக்கிறார். ஏன் ஒரு யோகி தன்னுடைய பிரக்ஞையை அதனை ஏற்கத் தயாராகிவிட்ட கருவிக்குள் மறுபிறவியாக செலுத்த முடியாது? எனும் ஊகத்தை அவர் செயற்கை அறிவு குறித்த ஆராய்ச்சியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார். இப்படி நடக்கும் என்று அவர் சொல்லவில்லை ஆனால் இப்படி நடப்பதற்கான சாத்தியம் இல்லாமலில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் தலாய் லாமா.

இதனைப் பிரித்துப் பார்
பார்த்தேன்
என்ன தெரிகிறது?
மிகவும் புராதனமான பழமையான சிலிக்கான் சில்லு
தத்வமஸி XLIV3 (ரோபோனிஷத்)

இந்த ரோபாட்கள் செயற்கை அறிவு குறித்த திரைப்படங்களில் முக்கியமான ஒரு திரைக்கதை இருக்கிறது. ஆனால் அது திரைப்படமாக வரவேயில்லை. அதனை வேறொரு சூழலில் பார்க்கலாம். அடுத்ததாக மேற்கத்திய திரைப்படங்கள் காலப்பயணத்தை எப்படி பார்க்கின்றன எனக் காணலாம்.