மகரந்தம்

57539-1உயிரின் தோற்றம் எத்தனைப் பழையது? உயிரின் வரலாற்றை நாம் இன்னும் முழுமையாக படித்துவிடவில்லை. பல கிளைக்கதைகள் கொண்ட மகா மகா மகா பாரதத்தின் பல பக்கங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவே இல்லை. பல செல்கள் கொண்ட உயிரிகளின் தோற்றம், இது வரை கணிக்கப்பட்டிருந்த கால அளவைக் காட்டிலும் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையாக இருக்க வேண்டுமென புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஃபாஸில்கள் (Fossils – தொல்லெச்சங்கள்) காட்டுகின்றன. இந்த ஃபாஸில் ஆப்பிரிக்காவிலிருந்து கிடைத்தது.

மேலும் விவரங்களுக்கு: http://www.the-scientist.com/blog/display/57539/

மொழியியல் வரலாறும், மாற்றங்களும்: ஹோமரின் இரண்டு காப்பியங்களில் வண்ணங்கள் பற்றிய வர்ணனைகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன.  இதை ஆராய்ச்சி செய்து உலகுக்கு அறிவித்தவர் 19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதம மந்திரியாக இருந்த க்ளாட்ஸ்டோன்.  23 வயதிலிருந்தே பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர். நான்கு முறை பிரிட்டனின் பிரதம் மந்திரி.  83 வயதிலும் கொஞ்சம் செவிடானாலும் ஆரோக்கியமாக இருந்தவர்.  இவருக்கு எப்படியோ மொழி ஆராய்ச்சி, பண்டை இலக்கிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய நேரம் இருந்திருக்கிறது.  அவர் காலத்திலும் சரி, இன்றும் சரி, மொழியியல் (linguistics) ஆய்வுகள் அடிக்கடி அக்கப்போரில் சிக்கிக் கொள்கின்றன.  மொழிப் போரையே மையமாக வைத்து அரசியல் செய்யும் நம் மாநிலத்தினருக்கு இதெல்லாம் புதிதாகவே இருக்காது. ஆனால் அந்த அரசியலைத் துவக்கியதே  காலனியமும், அதற்கு முந்தைய பாதிரிகளின் வருகையும்தான் என்பதைப் பலரும் கவனிப்பதில்லை.

ஹோமரின் காப்பியத்திலும் சரி, பல பண்டை இலக்கிய நூல்களிலும் சரி, வண்ணங்கள் பற்றிய விவரணை மிகக் குறைவாக இருப்பதால், மனிதக் கண்ணின் திறன் கடந்த 3000 – 4000 வருடங்களில்தான் வளர்ந்திருக்கிறது என்றும், நவீன காலத்தில்தான் வண்ணங்கள் நிறைய உருவாகி இருக்கின்றன என்றும் நிறைய முட்டாள்தனமான முடிவுகளுக்கெல்லாம் வந்திருக்கிறார்கள். அதெல்லாம் உளறல் என்று பரிணாமவியல் அறிவியல் துறை மேலோங்கி இருக்கும் இன்று தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் மொழியியலில்  நிறைய குழப்படிகள் தோன்றி மடிந்தபடி இருக்கின்றன.  சமீபத்தில் நோம் சாம்ஸ்கி, மனிதர்கள் பிறக்கும்போதே இலக்கணத்துக்கான இயல்புடன் பிறக்கிறார்கள், அனைத்து மொழிகளுக்கும் அடிப்படையில் ஒரு பொது இலக்கணம் உண்டு, காரணம் மனிதரின் உள்ளியல்பு என்று வாதிட்டார்.  இடதுசாரியாய் இருந்து இப்படி வாதிடலாமா என்று அவர் யோசிக்கவில்லை போலும். பின்னால் இதே கோட்பாடு ஓரளவு மாற்றிப் புரிந்து கொள்ளப்பட்டது. மொழியியலில் ஏற்பட்ட பல மாறுதல்களைப் பட்டியலிடுவதோடு, அவற்றின் தற்கால முடிவுகள் என்ன என்று ஒரு சமீபத்துப் புத்தகம் சொல்கிறது.  இந்த மதிப்புரையில் இப்புத்தகம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

http://www.ft.com/cms/s/2/587579ba-7a61-11df-9cd7-00144feabdc0.html

செல்லின் இமை முதல் விந்தின் வால் வரை

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸயிண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை “படைப்புவாத மடத்தனத்துக்கு 15 பதில்கள்” என ஒரு அருமையான கட்டுரையை வெளியிட்டிருந்தது (15 Answers to Creationist Nonsense, Scientific American, July 2002: இதனை pdf ஆக இங்கே தரவிறக்கம் செய்யலாம்) இதில் 15 ஆவது மடத்தனமாக சொல்லப்பட்டது “கட்டுடைக்க முடியாத சிக்கலான அமைப்பு” அதாவது எந்த ஒரு சிக்கலான உறுப்பையும் பரிணாம அறிவியல் அதன் பாகங்களின் பரிணாம வளர்ச்சியின் மூலம் விளக்க முடியும். அப்படி விளக்க முடியாத சிக்கலான பாகங்களைக் கொண்ட ஒரு உறுப்பு காணப்பட்டால் அது ஒரு சிருஷ்டி கர்த்தருக்கான ஆதாரம் என்பது. இதற்கு அடிப்படைவாதிகள் கொடுக்கும் உதாரணம் நுண்ணுயிரிகளில் இருக்கும் சவுக்கு போன்ற அமைப்பு (flagellum). ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் இந்த அமைப்பின் உட்பாகங்களின் பரிணாம வளர்ச்சியை தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளார்கள். இதோ அதே போன்றதொரு மற்றொரு பரிணாம ஆச்சரியம் நுண்ணுயிரியல் அமைப்பான சிலியம். நுண்ணுயிரிகளை 1660களில் நுண்ணோக்கியில் பார்த்த ஆண்டனி வான் லீவென்ஹாக் முதன் முதலில் பார்த்தது அவற்றின் சிலியாக்களைத்தான் செல்களின் கண்ணிமைகள் எனும் பொருள்பட சிலியா எனும் பெயர் அவற்றுக்கு வந்தன. சிலியாக்களின் உலகத்துக்குள் ஒரு நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட வாழ்க்கைப் பயணத்தை இங்கு காணலாம். பரிணாமத்தின் சுவாரசியமான நானோ டெக்னாலஜி இது… நுண்ணுயிருலகில் பரிணமித்த இந்த அமைப்பு நம் மானுடத்தின் விந்துக்களின் இயக்கம் வரை எப்படி முக்கிய பங்களிக்கிறது என்பதை பாருங்கள்.

புற்றுநோயின் விளைநிலமாகும் சீனா

சீனக் கிராமங்களில் பல புற்றுநோய் விளைநிலங்களாக மாறிக்கொண்டிருக்கின்றனவாம். சீன ஆறுகளில் கட்டுப்பாடு இல்லாமல் கலக்கும் ரசாயனக் கழிவுகளும், பலவிதமான தொழிற்சாலைக் கழிவுகளும் ஆறுகளையும் நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் மோசமான நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை இந்தியாவுக்கு ஓரளவு வந்திருக்கிறது என்றாலும், சீனா அளவு உலகத்தின் தொழிற்சாலையாக இந்தியா இன்னும் ஆகாததால் இந்தியக் கிராமங்கள் இன்னும் இந்தக் கொடுமையால் அதிகம் தாக்கப்படவில்லை. மாறாக இந்தியக் கிராமங்கள் வறுமை என்னும் புற்று நோய், அதிகாரி வர்க்கம் என்ற மலேரியா நோய், வட்டிக்கடைகள், சாராயக்கடைகள் என்னும் விஷப் பூச்சிகளின் தொல்லை போன்றன தவிர பலவிதமான மதப் பிரசாரகர்கள், வன்முறையாளர், மோசமான சினிமாக்கள் என்ற கொசுக்கடிகளாலும் துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றன. இத்தகைய துன்பங்களை என்றுமே ஒரு வறட்டு சித்தாந்தமோ, அதிமனிதர்களோ துடைத்தெறிந்துவிடப் போவதில்லை. சீனக் கிராமங்களின் பரிதாப நிலை குறித்த கட்டுரையும் விடியோவும் இங்கே.