ஜெயமோகனின் கதைக்களனும், நகுலனின் நாவல் நடையும்

சொல்வனத்தில் ஜெயமோகன், சேதுபதி, ஜடாயு கலந்துரையாடிய “கதைக்களன்: ஓர் உரையாடல்” படித்தேன். மிகவும் விரிவான அணுகலும், களமும் தேவைப்படும் ஒரு விஷயம் கதைக்களன். அதைக்குறித்து வெகு சுருக்கமாக அமைந்து விட்டது அந்த உரையாடல். ஆனால் அதில் விஷயமே இல்லை என்று சொல்ல மாட்டேன். படைப்பாளிகளின் நேர்மை, தரிசனம் இவற்றை முன்வைத்துப் பேசுகிறார் ஜெயமோகன் என நினைக்கிறேன். பெரும்பாலும் இலக்கியத்தைக் குறித்து ஒரு சிறு குங்குமச்சிமிழில் அடங்கும் கருத்துகளால் கறாராக அளவிடுவது கடினம் என்பது என் கட்சி. ஆனால் இப்படிப்பட்ட சிறு, சிறு விவாதங்கள் தேவைதான். ஜெயமோகனின் கருத்துகளுக்கு இரா.முருகன் அனுப்பிய எதிர்வினை சுவாரசியமாக இருந்தது. இரா.முருகன் சொல்லும் சுற்றித்திரியும், திரிந்த இடத்தைப் பின்புலமாக்கிக் கதை எழுதும் படைப்பாளிகளும் உலகெங்கிலும் இருக்கிறார்கள்தாம். ஆனால் ஜெயமோகன் சொல்லுவது விரிவான அணுகல் தேவைப்படும், ‘இலக்கியகர்த்தாக்கள்’ என்று நம்மால் சுட்டமுடியும் படைப்பாளிகளையே என்று நான் நினைக்கிறேன். இரா.முருகனின் எதிர்வினைக்கு ஜெயமோகன் என்ன எதிர்வினையாற்றுவார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

தரிசனம், நேர்மை, உள்ளொளி இதெல்லாம் க.நா.சு, செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி, வெ.சா – கொஞ்ச நாட்கள் சுந்தர ராமசாமி இவர்கள் காலத்தில் கேட்க முடிந்த வார்த்தைகள். ‘பெரிசு புலம்புகிறது’ என்னும் சொலவடையை மீறி நான் சொல்ல விரும்புவது இதுதான். அக்கால சிறுபத்திரிகைகளில் நிறைய உருப்படியான விவாதங்களும், எண்ணப் பரிமாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. நிறைய அக்கப்போர்களும் இருந்திருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் அதையும் மீறி அங்கே பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. இன்றைய சிறுபத்திரிகைகளைப் பார்க்கும்போது எங்கே போயின அந்தக் காலங்கள் என்றே ஏங்கத் தோன்றுகிறது. ஜெயமோகனுடனான கலந்துரையாடலும், இரா.முருகனின் எதிர்வினையும் ஒரு சிறு நம்பிக்கையை மெல்ல எழுப்பியிருக்கின்றன.

‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழில் நகுலன் இதைப் போலவே ஒரு உரையாடல் வடிவில் நாவலில் மொழியின் முக்கியத்துவத்தைக் குறித்துத் தன் கருத்துகளை எழுதியிருக்கிறார். அப்படிப்பட்டதொரு இலக்கிய உரையாடலைக் கூட சுசீலாவின் நினைவுகள், சிறு சிறு நையாண்டிகள் என்று சுவாரசியமாகத் தந்திருக்கிறார். நகுலனுக்கு க.நா.சுவின் மீதிருக்கும் மரியாதையும் இந்த உரையாடலில் தெரிகிறது. அது வியப்பளிப்பதாகவும் இருக்கிறது.

அந்த உரையாடலைக் (அல்லது கட்டுரையை) கீழே தந்திருக்கிறேன். இலக்கிய வட்டம் சிற்றிதழில் 1964-ஆம் ஆண்டு நகுலன் எழுதிய கட்டுரை இது. இதைப் போன்ற பல முத்தான படைப்புகள் இலக்கியவட்டம் இதழ்த்தொகுப்பில் படிக்கக் கிடைக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள், அதுவும் அக்காலத்திய ஆரோக்கியமான இலக்கியப்போக்கைத் தெரிந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய புத்தகம் இது. சந்தியா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கிறது.

இலக்கிய வட்டம்
இதழ்த்தொகுப்பு
தொகுப்பாசிரியர்: கி.அ.சச்சிதானந்தம்
சந்தியா பதிப்பகம்
நியூடெக் வைபவ் பிளாட்ஸ்
77 (பழைய எண் 57), 53 – வது தெரு
அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி: 24896979 / 55855704
பக்கங்கள் 560. விலை: ரூ.250

nakulan

நாவலில் நடை – ஒரு சம்பாஷணை

அன்று நான் வழக்கம்போல ஸைக்கிளை எடுத்துக்கொண்டு மாலையில் வீடு விட்டு வெளிக்கிளம்பினேன். போகிற வழியில் ஒரு தெருவளைவில் அகஸ்மாத்தாகச் சுசீலாவைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு இருபது அடிக்கு அப்பால் அவளைக் கண்டதும், வேண்டுமென்றே என்னைக் காணாமல் நகர்ந்ததும், எனக்கு ஏற்பட்ட பரபரப்பில் ஸைக்கிளை நிறுத்திவிட்டு, அவள் செல்லும் திசையை அவள் உருவம் மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றேன். ஒருமுறையாவது அவள் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை என்ற கசப்பில் நான் மீண்டும் என் பாதையைத் தொடர்ந்து சென்றதும்தான், நான் வழிமாறி எஸ்.நாயர் வீட்டைத் தாண்டிப் போவதை உணர்ந்தேன். எஸ்.நாயர் – அவன் வீட்டின் எதிரில் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் என்ன நினைத்துக் கொண்டானோ என்னவோ பேசாமல் என்னை அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்குள் சென்றான்.

எஸ்.நாயர்: உன் முகம் பார்க்கச் சகிக்கவில்லை, நீ இதையெல்லாம் மறந்துவிட வேண்டும். கடைசியில் ஆபத்தாக முடியும்.

நான்: நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்?

எஸ்.நாயர்: ஏன் என்னிடம் மறைக்கிறாய்? நீ ஒன்றும் பேச வேண்டாம்.

இதைச் சொல்லிவிட்டு அவன் அலமாரியைத் திறந்து ஒரு பாட்டிலும் இரண்டு டம்ளருமாக வந்து சேர்ந்தான். பிறகு அதிலிருந்து பிராந்தியை என்னுடைய டம்ளரில் அதிகமாகவும் தன்னுடையதில் “பேருக்காகவும்” ஊற்றினான்.

நான் ஒன்றும் சொல்லாமல் என் டம்ளரைக் காலி செய்துவிட்டு அவனுடன் பேசுவதற்குத் தயாரானேன்.

நான்: சரி, என்ன வேண்டும்?

எஸ்.நாயர்: கடைசியாக உன்னைப் பார்த்துக் கொஞ்ச நாட்களாகி விட்டன. அன்று பேசியது ஞாபகம் இருக்கிறதா?

நான் ஒன்றும் சொல்லவில்லை. என் மனம் மந்தநிலையைத் தாண்டி, துரிதநிலையை அடைந்த பிறகு நிதானமாகச் சலித்துக் கொண்டிருந்தது. என் கண்கள் எஸ்.நாயரின் மேஜைமேல் இருந்த ஒரு பிரபல ஆங்கிலப் பட வார இதழில் சென்று லயித்தன. அதைச் சுட்டிக் காட்டி நான் அவனிடம் “நீ இந்தப் பத்திரிகையைப் பார்ப்பதுண்டா?” என்று கேட்டேன்.

எஸ்.நாயர்: (சிரித்துக் கொண்டே) நான் என்னைக் கல்லூரி மாணவனா என்ன? இதைப் படிக்கலாம் இதைப் படிக்கக் கூடாது என்பதற்கு. பிடித்ததைப் படிக்கிறேன். மேலும் உன் வருகையை எதிர்பார்த்து வேண்டுமென்றே அதை அந்த இடத்தில் வைத்திருக்கிறேன்!

நான்: சரி; அதில் எப்படி என்ன இருக்கிறது?

எஸ்.நாயர்: காரியம் இல்லாமலா இருக்கும். உனக்கு ஞாபகம் இருக்கலாம் அல்லவா? போன தடவை நாம் இலக்கிய நடையைப் பற்றிப் பேசினது?

நான்: ஏன் நன்றாக ஞாபகம் இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு தமிழ் இலக்கியப் பத்திரிகையில் தமிழ் நாவல்களின் நடையைப் பற்றி ஒரு ஆசிரியர் எழுதியது ஞாபகம் வருகிறது. ஆனால் இப்பொழுது இதெல்லாம் இவ்வளவு முக்கியமாகப் படவில்லை.

எஸ்.நாயர்: நீ அவசரப்படுகிறாய். எனக்கும் சுசீலாவைத் தெரியும். நீ நினைக்கிற மாதிரி அவள் உன்னை வேண்டுமென்றே உதாசீனம் செய்யவில்லை. அவள் திறமைசாலி.

நான்: நீ கெட்டிக்காரன்தான்.

எஸ்.நாயர்: சரி இருக்கட்டும். இந்த ஆங்கிலப் பத்திரிகையில் ஆசிரியர் தனக்கு ஒரு ஸ்தானம் வகித்துக்கொண்டு இலக்கிய நடைக்கும் பத்திரிகை நடைக்கும் ஒரு வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார். அப்பொழுது நீ நடையைப் பற்றி விமர்சித்தது எனக்கு நினைவுக்கு வந்தது.

நான்: அவர் என்ன சொல்கிறார்?

எஸ்.நாயர்: பத்திரிகையைப் பொருத்தமட்டில் வாசகனை முன் நிறுத்திக் கொண்டு, தான் சொல்ல வருவதைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்வதுதான் சிறந்த நடையின் உதாரணமாகச் சொல்ல முடியுமென்று.

நான்: சரி.

எஸ்.நாயர்: ஆனால் ஒரு இலக்கிய ஆசிரியனைப் பொருத்தவரையில் அவனுக்குத் தன் அனுபவத்தை வெளியிடுவதுதான் முக்கியம்.

நான்: அதாவது நான் என் நாவலில் எழுதியது மாதிரி இந்த எழுதும் விஷயத்தில், நமது வேதாந்தத்தில் “நான்” என்பது எவ்வளவு அடிப்படையான விஷயமோ அவ்வாறே கலைக்கும் இது ஒரு ஆதாரமான விஷயம்.

எஸ்.நாயர்: நீ சுயப்பிரக்ஞையுடன்தான் பேசுகிறாயா?

நான்: ஆமாம், இது நம்மைப் பொருத்தவரைச் சுலபமானதுதான். ஏனென்றால் நம் தத்துவப்படி இந்த “நான்”என்பதில்

“நான் தனியாக
என்னை மீறிய
என்னிலும் வேறான
நானே ஆய”

ஒன்றும் உருபுரியாமல் கலந்திருக்கவில்லையா?

எஸ்.நாயர்: உன்னிடம் இலக்கியத்தைப் பற்றிப் பேச வந்தேனே! என்னைச் சொல்… சுசீலாவைப் பற்றிப் பேசலாமா?

நான்: நீ நினைப்பது தவறு. என்னைப் பற்றியவரை சுசீலா கூட ஒரு அடையாளாம்தான், அவளுக்கு இப்பொழுது இது பிடிபட்டு விட்டதாலும், என் கவிதையைப் பற்றி மதிப்பு இருப்பதாலும் (அவள் கெட்டிக்காரிதான்) அவள் என்னை ஏற்காவிட்டாலும் என்னை இகழவில்லை.

எஸ்.நாயர்: (சிரித்துக்கொண்டே) இன்னும் உனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்! ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்!

நான்: இல்லாமல் இல்லை. எனக்குச் சுசீலா எப்படியோ அப்படித்தான் ஒரு நாவலாசிரியனுக்கு அவன் உபயோகிக்கும் பாஷையும்.

எஸ்.நாயர்: இன்னும் சற்று விளக்கிக் கூறுவாயா?

நான்: சரி, இதைக்கேள். ஒரு பத்து வருஷத்திற்குமுன் நானும் சிதம்பரத்திற்குத் தமிழ் படிக்கப்போனேன்.

எஸ்.நாயர்: சரி

நான்: ஆனால் உன்னைப் போல் படிக்கப் போனாலும், என்னுடைய முக்கிய நோக்கம் அது இல்லை. அங்கு என் மதிப்பிற்குரிய ஒரு தமிழ் நாவல் ஆசிரியர் தங்கி இருந்தார் என்பதுதான். நான் அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.

எஸ்.நாயர்: அவசியமில்லை, அவர் யார் என்று எனக்குத் தெரியும்.

நான்: நான் அவரை முதல் முதலில் சந்தித்ததும் அவர் தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகக் கிழித்து அதைத் தலைகீழாக நிறுத்தி அது பற்றி எரிந்து கரிந்து விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதுவும்தான் ஒரு இலக்கிய ஆசிரியரின் நடை.

எஸ்.நாயர்: அதாவது?

நான்: மனதின் உளைச்சலைப் பொறுக்க முடியாமல் எழுத உட்காருகிறோம். நமது பக்குவத்திற்கேற்ப மொழியை உபயோகித்து நமது கற்பனை மூலம் அது சிறிது ஒளிபரப்பிக் கரித்து விழுவதைப் பார்த்துக்கொண்டு பேசாமல் மெளனமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். மனதிற்கு ஒரு ஆச்வாசம்.

எஸ்.நாயர்: நீ கொடுத்து வைத்தவன். இப்படியெல்லாம் உனக்குப் பேச ஆற்றல் ஊட்டிய சுசீலாவை நான் வாழ்த்துகிறேன்!

நான்: நம் இருவருடைய வாழ்த்தும் அவளுக்குத் தேவையில்லை. இதையும் கேள். ஒரு இலக்கியப் பத்திரிகையில் –

“க.நா.சுப்பிரமணியத்தின் ‘பொய்த்தேவு’, ‘ஒரு நாள்’, சிதம்பர சுப்ரமணியத்தின் ‘இதய நாதம்’, செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’ ஆகியவை நல்ல தமிழ்நடை பெற்றிருந்ததால் மிகச் சிறந்த நாவல்களாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

சோமுவின் நாவல்கள் தமிழ் நடைக்காகவே படித்து இரசிக்கத் தகுந்தவை.

– கனகசவுந்தரி இளந்திரையன்”

என்ற மேற்கோளைப் படித்தேன்.

எஸ்.நாயர்: இந்த ஆசிரியை யார்?

நான்: எனக்குத் தெரியாது. ஆனால் சாலை இளந்திரையன் கவிதைகளைச் சுடர், கலைமகள் முதலியவற்றில் அபூர்வமாகப் படித்திருக்கிறேன். ஒரு நிலையில் நன்றாக அமைந்திருந்தன என்று நினைவு.

எஸ்.நாயர்: சரி விஷயத்திற்கு வா.

நான்: இந்த மேற்கோள்கள் எனக்கு நாவலில் நடை என்பதைப் பற்றி இன்னொரு பிரச்சினையை எழுப்புகிறது.

இப்படிச் சொல்லிவிட்டு நான் நிறுத்தினேன்.

எஸ்.நாயர் எழுந்து சென்று வெற்றிலை, பாக்கு, புகையிலை சகிதமாக வந்தான். நான் நிதானமாக வெற்றிலை போட்டுக்கொண்டு வேதனையால் துடிக்கும் என் மனதை ஒரு நிலையில் வைத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தேன்.

தேசிகனுடன் ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்தபொழுது “தெளிவுறவே மொழிந்திடுதல்” என்ற பாரதியின் மேற்கோளை எடுத்துக்காட்டி அதை நல்ல நடைக்கு அடையாளமாகக் காட்டினான்.

எஸ்.நாயர்: சரி.

நான்: சரிதான். ஆனால் நாவல் எழுதுபவனுக்கு அதில்லை முக்கியம். இந்து ஸ்ரீமதி கனகசவுந்தரி இளந்திரையன் அதே தவற்றையே செய்கிறார். (ஆனால் இவர் சில நல்ல நாவல்களை நல்ல நாவல்கள் என்று சொல்லியது பற்றித் திருப்திப் பட வேண்டியதுதான்). என்னைப் பொருத்தவரை மனதின் அவசர நிலைகளை, வார்த்தைக்கு அப்பாற்பட்டதை வார்த்தைக்கு மடக்கிக் கொண்டு வர, மொழி கசிந்து உருகுவதையும், எரிந்து கருகுவதையும் பார்த்துக்கொண்டு , சாதனையாக நிற்கும் என் சிருஷ்டியைக் கண்டு வாயடைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்.நாயர்: அதுதான் சுருக்கமான விஷயம். ஒவ்வொரு ஆசிரியனும் தன் நடையைத் தானே சிருஷ்டித்துக்கொண்டு விடுகிறான். இல்லையா?

நான்: ஆம். முதலில் இவன் செய்ததை ஏளனம் செய்த பேராசியர்கள் நாளடைவில் இவன் செய்ததை ஏற்றுக்கொண்டு பிறருக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்!

எஸ்.நாயர்: இப்படியெல்லாம் பேசினால் நம் ஆட்களுக்குப் புரியுமா? ஓரிரு உதாரணம் கொடுக்க முடியுமா?

நான்: ஏன், Faulkner-இன் கையில் மொழி எரிந்து கரிவதைத்தான் பார்க்கிறேன். ஓரளவு அது கசிந்து உருகுவதை V.Woolf-இன் நடையில் பார்க்கலாம்.

எஸ்.நாயர்: இந்தக் “கையில்” என்பது அபஸ்வரமாக ஒலிக்கிறதே!

நான்: படிக்க வேண்டாம்! என்னைப் பொருத்தவரையில் நடைக்காக மாத்திரம் நான் ஒரு புஸ்தகத்தையும் படிப்பதில்லை!

எஸ்.நாயர்: தமிழிலிருந்து சில உதாரணங்கள் தர முடியுமா!

நான்: முடியும். ஆனால் எனக்குத் தாகமாக இருக்கிறது.

எஸ்.நாயர்: வீணாக உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே!

நான்: நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த உடல் அழியும். ஆம், நமது தமிழ் அறிஞர்கள் நமது அனுதாபத்திற்கு உரியவர்கள். நான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய மாதிரி கமலாம்பாள் சரித்திரம் அம்மையப்பப் பிள்ளையின் நடையில்தானே எழுதப்பட்டிருக்கிறது! இங்குத் தமிழ் ஈரவிறகாய்ப் புகைந்தாலும் இந்த நாவலுக்கு இலக்கியச் சிறப்பு இருக்கிறதுதானே! மாதவையாவின் நடையிலும் இவர்கள் எதிர்பார்க்கும் தமிழ் இருக்கிறது. ஆனால் “கிருத்திகாவின்” தமிழ், தீக்குச்சி கிழிக்கிற மாதிரிதான்.

எஸ்.நாயர்: (சிரித்துக்கொண்டே) க.நா.சுவின் நடை?

நான்: எனக்குச் சுசீலாவைப் பற்றி எப்படித் திட்டமான அபிப்பிராயம் உண்டோ அதைப் போலவே க.நா.சுவைப் பற்றியும் உண்டு. அவர் நடையைப் பற்றி இரண்டு இடங்களில் எழுதியும் இருக்கிறேன்.

எஸ்.நாயர்: சொல்.

நான்: “திங்கட்கிழமை காலைப் பளிச்செனப் பிரகாசிக்கும் காலைக் கதிரவனைப் போல அவர் நாவல்கள் தோற்றமளிக்கின்றன” என்று ஒரு கவிதையிலும், க.நா.சுவின் தமிழ்நடை “போகும் வேகத்தில் சில சத்தான கருத்துகளை உதிர்த்துச் செல்கிறது” என்று ஒரு கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன். ஆனால்…

எஸ்.நாயர்: என்ன?

நான்: இந்தத் தமிழ் அறிஞர்கள் தமிழையும், வடமொழியைப் போல ஒரு “மறைமொழியாக” ஆக்க விரும்புகிறார்கள்! அதனால் இன்று இலக்கிய பூர்வமான நடையில் எழுதப்பட்ட எந்த நாவலையுமே பிரசுரிப்பது கஷ்டமாக இருக்கிறது. அதுவும் அறிமுகமாகாத ஆசிரியர் என்றால் கேட்கவே வேண்டாம்.

எஸ்.நாயர்: இனியும் நாவலைப் பற்றி என்ன பேசுவது.

நான்: அடுத்தமுறை நீ பேச வேண்டும். மேலும் என் மனசு இருக்கும் நிலையில் நாகர்கோயில் போய் ஒரு மூன்றுவாரம் தங்கிவிட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.

எஸ்.நாயர்: அதைரியப்படாதே. நீ நினைக்கும்மாதிரி சுசீலா உன்னை உதாசீனம் செய்யவில்லை.

அவன் சொன்னதை நினைத்துக் கொண்டே நான் வீடு திரும்பினேன்.

(இதழ் 9. 13.3.64)