முகப்பு » சூழலியல், பனுவல் போற்றுதும், புத்தக அறிமுகம்

பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன், தன்னைக் கவர்ந்த புத்தகங்களைக் குறித்து ஒரு தொடராக சொல்வனம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். இத்தொடரின் பெயர்: ‘பனுவல் போற்றுதும்’.

nanjil-nadan1சமீபத்தில் அக்கினிநட்சத்திர வெயில் உக்கிரமாய்க் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு வைகாசி நாளில், நண்பர் செழியனின் புதுமனை புகுவிழாவுக்காக மரபின்மைந்தன் முத்தையா, செளந்தர் வல்லதரசு அண்ணா ஆகியோருடன் தஞ்சாவூர் போயிருந்தேன். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை விற்பனைப்பிரிவில் எனக்குச் சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. தோதாக, ஒருநாள் முன்பாகவே தஞ்சாவூரில் இருந்தேன். நான் தேடிய புத்தகங்கள் – உரையுடன் சங்க இலக்கியங்கள், பெருஞ்சொல் அகராதி இதுவரை வெளியான நான்கு தொகுதிகள், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் நான்கு தொகுதிகள், பேராசியரியர் கு.சீநிவாசன் எழுதிய ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ என்பன.

தங்கியிருந்த விடுதியில் இருந்து நடக்கின்ற தூரம்தான். என்றாலும், கத்திரி வெயில் களைப்பேற்படுத்தியது. ஒருகாலத்தில் 44 டிகிரி செண்டிகிரேட் வெயிலில் நாக்பூர், அக்கோலா, வார்தா, ஹிங்ஙன் காட் என்று அலைந்தவன்தான் என்றாலும் அந்தப் பருவம் வேறு. ATM-ல் பணம் எடுத்துக் கொண்டு, பதிப்புத்துறை விற்பனைப்பிரிவு போய்ச் சேர்ந்தேன். புத்தக விற்பனைப் பிரிவுக்கான எந்த அடையாளமும் அற்று, வேஸ்ட் காட்டன் மில் பஞ்சுக் கிடங்கு போலிருந்தது. தூசியிலும், வியர்வையிலும் கசகசத்துத் தேடியபோது, பெருஞ்சொல் அகராதி நான்கு தொகுதிகளில் இரண்டும் நான்கும் கிடைத்தன. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் நான்கு தொகுதிகளில் மூன்றாம் தொகுதி மட்டும் இல்லை. உரையுடன் சங்க இலக்கியங்கள் எதுவும் இல்லை. முக்கியமாக நான் தேடிவந்த ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ இல்லவே இல்லை. எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு, ‘வெறுவாக்கலியம் கெட்டவன் விறகுக்குப் போனா, விறகு கிடைத்தாலும் (கட்டுகிற) கொடி கிடைக்காது’ என்று. என் யோகம் எப்போதும் அப்படித்தான். ஆனால் அரசியல்வாதி ஒருவர் எழுதிய, ஆய்வுக்கும், அறிவுக்கும் எந்த விதத்திலும் உதவாத புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆளுயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ‘நஞ்சு நானாழியா வேணும்?’ என்றொரு பழமொழியும் ஞாபகம் வந்தது. எவ்வாறாயினும் கிடைத்ததை விடவேண்டாம் என்று, பெருஞ்சொல் அகராதி தொகுதி இரண்டும் நான்கும், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிகள் ஒன்றும், இரண்டும், நான்கும் வாங்கினேன். விற்பனை செய்யும் ஊழியர் பெருந்தன்மையுடன் இருபத்தைந்து விழுக்காடு கழிவு செய்து பில் கொடுத்தார். மேலதிகம் தகவல் ஒன்றும் சொன்னார். பேரறிஞர், மாமேதை, இன்னாட்டு இங்கர்சால், தென்னாட்டு பெர்னாட் ஷா என்றெல்லாம் அறியப்பட்ட அண்ணாதுரை பிறந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஐம்பது சதமானம் தள்ளுபடி என்று. வேறு எந்தத் தமிழ்க் கொம்பன் பிறந்த மாதமானாலும் இருபத்தைந்து விழுக்காடுதான். வரும் செப்டம்பரில் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். நமக்கென்ன, மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை சொல்வது போல, ‘அப்பம் தின்னவோ அலால் குழி எண்ணவோ?’.

பஞ்சுக்கிட்டங்கி பக்கத்திலேயே பதிப்புத்துறை இயக்குநர் அலுவலகம். புரட்சித்தலைவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், முதல் துணைவேந்தராக இருந்த, தகுதி சால் பேராசிரியர், ஆய்வறிஞர் வ.அய்.சுப்ரமணியம் வாங்கிப் போட்ட லைனோ அச்சு இயந்திரம் கீழ்த்தளத்தில். எதற்கும் தகவல் பரிமாறிப் போவோம் என்று, அனுமதி பெற்று அறைக்குள் நுழைந்தேன். இயக்குநர் நம் பெயர் அறிந்தவராக இருந்தார், உற்சாகமாக உரையாடினார். செம்மொழி மாநாட்டுக்காக அறுபத்தெட்டு நூல்கள் மறுபதிப்பு அச்சாகி வருவதாகவும் நான் தேடுவன கிடைக்கும் என்றும் சொன்னார். மனதுக்கு உற்சாகமாக இருந்தது.

‘விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது’

எனும் திருக்குறள் ஞாபகம் வந்தது.

செம்மொழித் தமிழ்க்குடிமகனுக்கு, திருக்குறள் பொருள் விளங்குவது அரிது என்பதால் G.V.பிள்ளை என்று அழைக்கப்பட்ட, திருச்சி பேரறிஞர் கோ.வன்மீகநாதன் பிள்ளையின் ஆங்கில மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

‘Unless the drops from the sky fall, it would be impossible to see even a sprout of green grass!’

இனி இந்த மொழிபெயர்ப்பு எங்கு கிடைக்கும் என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம், ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்றொரு நூல் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் உரைகளும், கோ.வன்மீகநாதன் பிள்ளையின் ஆங்கில மொழிபெயர்ப்பும். அறத்துப்பால் ஆறாம்பதிப்பு 1993, பொருட்பால் மூன்றாம் பதிப்பு 1990, காமத்துப்பால் நான்காம் பதிப்பு 1991, மூன்று தொகுதிகளும் 1093 பக்கங்கள், டெமி அளவு, சாதாக்கட்டு. கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் திருவிழாவில் 1996-ல் வாங்கினேன். எழுத்தாளர் எனும் தகுதிக் கழிவு பதினைந்து விழுக்காடு நீக்கி, நான் கொடுத்த விலை ஐம்பத்தோரு ரூபாய்தான் என்றாலும் என்னிடம் இருக்கும் பெருஞ்செல்வம் அது.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்துப் புத்தகவிற்பனைப் பிரிவில் ’சங்க இலக்கியத் தாவரங்கள்’ கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது என்று சொன்னேன். என்னிடம் ஏற்கனவே ஒரு படி இருக்கிறது. நூலக இரவல், திருப்பித் தர வேண்டும் கட்டாயமாய். சிலமுறை வாசித்து விட்டேன் என்றாலும் சொந்தமாய் ஒரு படி வைத்துக் கொள்ள, ஆர்வமாய்த் தேடிக் கொண்டிருக்கும் ‘ஓசை’ நண்பர் திரு.காளிதாசுக்கும் புலவர் இரணியனுக்கும் பரிசளிக்க சில படிகள் வாங்க எண்ணினேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், வெளியீட்டு எண். 73, 1987-இல் வெளியிட்ட புத்தகம் இது. இருபத்து மூன்று ஆண்டுகளாய் மறுபதிப்பு இல்லை. 810 பக்கங்கள், காலிக்கோ கட்டு, அன்றைய விலை ரூ.120-00. ஆசிரியர் முனைவர் கு.சீநிவாசன், எம்.எஸ்.சி, பி.எச்.டி தொல் அறிவியல் துறை. இன்று நிச்சயம் ஓய்வு பெற்றிருப்பார். சீவித்திருக்கிறாரா, சிவலோக பதவியோ வைகுந்த பிராப்தியோ சேர்ந்து விட்டாரா என்னும் தகவலும் இல்லை. எனக்கு அவரை அறிமுகம் கிடையாது. பதிப்புத்துறை இயக்குநரிடம் கேட்டிருக்கலாம். எதிர்மறைப் பதிலுக்கு அஞ்சி கேட்கத் துணியவில்லை. மேலும் உண்மையான அறிஞர்களைத் தடயமற்று மறப்பதுதானே செம்மொழிப் பண்பு!

மிக அற்புதமான ஆய்வு நூலது. அரிய தகவல்கள், மேற்கோள்கள், விஞ்ஞானபூர்வமான செய்திகள் கொண்டது.

’சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை 150 தாவரங்களையே குறிப்பிடும். என்னையெனில் ஒரே தாவரத்துக்கு வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு பெயர்களைக் கூறியுள்ளமையின் என்க’ என்கிறார் ஆசிரியர், முன்னுரையில். உண்மைதானே! மஞ்சணத்தி என நான் அறிந்த மரம்தான் நுணா என்றறிய எனக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்தன. மைனா எனும் பறவைதான் நாகணவாய்ப் புள் என்று அறியும்போது எனக்கு அறுப்பத்திரண்டு வயதாகிவிட்டது.

இந்த 151 தாவரங்களின் சங்க இலக்கியப் பெயர், சங்க இலக்கியத்தில் வேறு பெயர், உலக வழக்குப் பெயர், தாவரக்குடும்பம், தாவரப்பெயர், ஆங்கிலப்பெயர் எனும் அனைத்துத் தகவல்களும் தருகிறார். மேலும் தாவர இயல்வகை, தாவரத் தொகுதி, தாவரக் குடும்பம், தாவரப் பேரினப் பெயர், தாவரச் சிற்றினப் பெயர், தாவர இயல்பு, தாவர வளரியல்பு, உயரம் அல்லது நீளம், கிளைத்தல், வேர்த்தொகுதி, தண்டுத்தொகுதி, சிற்றிலை, நுனிச்சிற்றிலை, மஞ்சரி, மலர், புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்த வட்டம், சூல் தண்டு, காய், கனி, மகரந்தச் சேர்க்கை, பயன், வளர்ப்பு என அநியாயத்துக்குத் தகவல்களா என ஆசிரியர் கால்கள் பற்றிக் கதறத் தோன்றும் சில சமயம்.

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் தொகுத்துக் கூறும் மலர்களின் பெயர்கள் தொண்ணூற்று ஒன்பது. ஒரு காலத்தில், மாணவராக இருந்த கா.காளிமுத்து, பின்னாளில் சட்டசபைத் தலைவராக இருந்தவர், திராவிட முன்னேற்றக் கழக மேடையில் இந்த மலர்களின் பெயர்கள் தாங்கிய குறிஞ்சிப் பாட்டின் பாடல்வரிகளை மனப்பாடமாகச் சொல்லும்போது மெய்சிலிர்க்கக் கேட்டதுண்டு. ஆனால் அங்கேயே தங்கிப் போகாத அரசியல்வாதி அவர். இறக்கும்வரை, நவீன இலக்கியப் புத்தகங்களை விரும்பி, வாங்கி, உடனே வாசிப்பவர். அவருடன் உரையாட நேர்ந்த பல பொழுதுகளில் அதை நான் உணர்ந்திருக்கிறேன்.

குறிஞ்சிப்பாட்டு குறித்துள்ள பல மலர்களை இன்னது என்று யாராலும் இன்றும் அறுதி இட்டுச் சொல்ல முடியவில்லை என்கிறார் கு.சீநிவாசன்.

sangupushpamபல தாவரங்களின் இலைகள், மலர்களின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் தாவரங்கள் பற்றிய நமது அறிவை ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, சங்கு புஷ்பம் என்று பரவலாக அழைக்கப்படும் கொடிப்பூவை நாமறிவோம். வெள்ளை, கருநீலம் என இருநிறங்களில் பூக்கும். ஈதொரு மூலிகைக் கொடியும் ஆகும். இதை நூலாசிரியர் கருவிளை, செருவிளை எனும் தலைப்பில் ஆராய்கிறார். கருவிளை என்பது கருங்காக்கணம், செருவிளை என்பது வெண்காக்கணம்.

‘காதலர் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலர’

– என்று அகநானூற்றின் 294-ஆவது பாடலை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர்.

‘தன்புனக் கருவிளை கண்போன் மாமலர்’

– என்பது நற்றிணையின் 262-ஆவது பாடல் மேற்கோள்.

திருக்குறளில் நான்கு பாடல்களில் குறிப்பிடப்படும் ‘அனிச்ச மலர்’ பற்றிய கட்டுரை சுவாரசியமானது.

குவளை, கழுநீர், செங்கழுநீர், நீலம், காவி, செங்குவளை, நெய்தல், பானல், சிந்திவாசம், நீலப்பூ எனப்படும் நீலோற்பலம் பார்த்ததுண்டா, கேட்டதுண்டா? சில ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞர் சல்மா எழுதிய ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ எனும் நாவலுக்கு, இந்து நாளிதழில் பிரசன்னா ராமசாமி எழுதிய ஆங்கில மதிப்புரை வாசித்தேன். அதில் நாவலாசிரியர் கண்களை நீலோற்பல மலருக்கு ஒப்பிட்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. இலக்கியத் திறனாய்வு எடுக்கும் புதிய பாடம்!

அடிப்படையில் கிராமத்து மனிதனான நான், பல தாவரங்களை, புகைப்படங்களைக் கொண்டு இந்த நூலின் மூலம் அடையாளம் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு ‘அழிஞ்சில்’. இஃதோர் சிறுமரம். இதன் தொல்காப்பியப் பெயர் ‘சே’. பிற்கால இலக்கியப் பெயர் அழிஞ்சில்.

நாஞ்சில்நாட்டு உழவர், ஏர் அடிக்கும்போது, ஏர் மாடுகள், குறிப்பாக எருமைக்கடாக்களை முடுக்க, உழவு கம்பு வைத்திருப்பார்கள். அதன் நுனியில் தார் இருப்பதால் அது தார்க்கம்பு. தார் என்பது, கம்பின் நுனியில் அடித்து இறுக்கி, நுனி கூராக அராவப்பட்ட வேப்பிலைக் காம்பு கனமுள்ள ஆணி.சிலர் கிராமபோன் காந்த ஊசியைப் பயன்படுத்துவார்கள். அந்த ஊசியினால் குத்தி, கடாவின் புட்டியில் புண் ஆனால் ஆறுவது கடினம் என, இரக்கமுள்ள உழவன் காந்த ஊசி பயன்படுத்துவதில்லை. கோணல் இல்லாத, கைப் பெருவிரல் கனமுள்ள, நீண்ட கம்பு அது. மாட்டை ஓங்கி அடித்தாலும் கீறாத, நுனி வெடித்துச் சிதறாத, காட்டுக் கம்பு. அதன் தன்மை அது. உழவு கம்பால் அடி வாங்காமல் உழவன் வீட்டில் எந்தச் சிறுவனும் வளர்ந்து ஆளானதில்லை. ‘உழவன் கணக்குப் பார்த்தால் உழவு கம்புதான் மிச்சம்’ எனும் பழமொழி நினைவில் தட்டும்போது காட்சிப்படுவது இந்த அழிஞ்சில் கம்புதான். அதை நாங்கள் அழிசங்கம்பு என்போம். அதன் இலை, வரிசை எனக்கு அடையாளம் தெரியும். அழிசு என்பதும் அழிஞ்சில் என்பதும் ஒன்றேதான் என்றறிய எனக்கு அதிக நேரமாகவில்லை.

அதுபோல் எனக்கு இன்னொரு அதிசயம் ‘மராஅம்’ எனப்பட்ட செங்கடம்பு. யாமறிய கடம்பு இருவகை – மஞ்சள் கடம்பு மற்றும் செங்கடம்பு. ‘உடம்பை முறித்துக் கடம்பில் போடு’ என்பது பழமொழி. கடம்ப மரத்தில் செய்யப்பட்ட கட்டில் உடல்வலி போக்கும் என்பது குறிப்பு. முருகனைக் குறிக்க ‘கந்தா, கடம்பா, கதிர்வேலா’ எனப் பாடல் உண்டு. சிவனைக் கடம்பவனத்தான் என்பார்கள்.

schoolkidsசிறுவயதில், உயர்நிலைப் பள்ளிக்கு, எங்கள் சிற்றூரின் கிழக்கே ஒரு கல் எமக்கு நடக்க வேண்டும். அவ்விதம் நடக்கும்போது கடுக்கா மூடு, புங்க மூடு, பூவத்தான் கோயில், புதுக்குளம் என்று சில ஈட்டான்களில் ஆயக்கால் போட்டு நின்று பேசுவோம்.

அவ்விதம் ஆயக்கால் போட்டு நின்று பேசுவது பற்றி லால்குடி, சப்தரிஷி ராமாமிர்தம் எனும் லா.ச.ரா ஓரிடத்தில் குறித்துச் சொல்வார். கடுக்கா மூடு என்றழைக்கப்பட்ட ஈட்டான், சாலையோரம் நின்ற ஒற்றைக் கடுக்காய் மரம். இந்த மரத்தைப் பல இடங்களில் பழையாற்றங்கரையில், சில குளத்தங்கரைகளில் கண்டிருக்கிறேன். ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ எனும் இந்த நூலில் தரப்பட்டிருக்கும் இலை, பூங்கொத்தின் புகைப்படம் பார்த்து, நான் அறிந்து கொண்டது. ஐம்பது ஆண்டுகளாய் நான் கடுக்காய் மரம் என அறியாமல் நம்பி வந்திருந்த மரம் செங்கடம்பு என்பது. உங்களுக்குத் தோன்றலாம் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என. ஆனால் எனக்கு மயிர்க் கூச்செறிந்தது.

‘கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் கொண்ட வெறிமனை வந்தோய்’

எனும் நற்றிணைப் பாடல் எனக்குப் புதியபொருளுடன் விளங்கியது.

எத்தனையோ சொல்லிக் கொண்டே போகவியலும். ஓரளவுக்குத் தாவரங்களின் மேல் ஈடுபாடு உடையவர், கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர், இயற்கை மீது ஆர்வம் கொண்டவர் பலருக்கும் இந்த நூல் ஒரு புதையல். நூல் கிடைப்பதும், கிடைக்காமற் போவதும் உங்கள் ஊழ்வினை.

2 Comments »