விஞ்ஞானிகள் பொதுவாக மிகவும் சீரியஸானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். நம் புத்தகங்களில் கருப்பு வெள்ளையில் அவர்களை சோகமாக தாடியுடன் படம் போட்டு மேலும் இந்த எண்ணத்தை வளர்க்க நம் பாட நூல் வெளியீட்டாளர்கள் தூபம் போடுகிறார்கள். பாடப்புத்தகத்தில் ஏதாவது ஒரு விஞ்ஞானி தன் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடுவதைப் போல எங்காவது யாரவது பார்த்து ‘சொல்வனத்திற்கு’ அனுப்பினால் ஹமாம் க்ருஹப்ரவேசம் வீடு கொடுப்பதாகக் கூட அறிவிக்கலாம். இக்கட்டுரைக்காகத் தேடியதில் மிகவும் சீரியஸான புகைப்படங்கள்தான் கிடைத்தன. பல விஞ்ஞானிகள் மிகவும் தேர்ந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். ஐசக் அஸிமோவ் ஒரு முறை சொன்னார் “யுரேகா… இதுதான் இன்றைய கண்டுபிடிப்பின் இன்றைய அடையாள வாசகமாக இருக்கிறது. அதை, ‘அட வேடிக்கையாக உள்ளதே!‘ (It’s funny) என்று மாற்ற வேண்டும்”.
விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் ஐசக் அஸிமோவ் போன்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர்களும் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்தான். அஸிமோவ், கர்ட் வானகட், ரே ப்ராட்பரி போன்றோரின் அறிவியல் புனைகதைகளில் எங்கெங்கும் நகைச்சுவை விரவியிருப்பதைப் பார்க்கமுடியும். தமிழில் சட்டென்று நினைவுக்கு வரும் உதாரணம் சுஜாதா. சுஜாதாவின் கட்டுரைகளில் அறிவியல் தொடர்பான, விஞ்ஞானிகள் தொடர்பான சுவாரசியமான நிஜவாழ்க்கைச் சம்பவங்களைப் படிக்க முடியும்.
அப்துல் கலாமும், சுஜாதாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். கலாமைக் குறித்ததொரு சுவாரசியமான சம்பவத்தை சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அப்துல் கலாமுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த விஞ்ஞானிகளின் விருந்தில் வற்புறுத்தி அவர் கைகளில் மதுக்கோப்பையைத் திணித்து விடுகிறார்கள். பதற்றமாக அங்குமிங்கும் பார்த்த கலாம் கண்களில் பட்டவர் அதே ஹோட்டலில் வேறொரு விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த சுஜாதா. சுஜாதாவிடம் ஓடோடி வந்து தன்னிடம் இருந்த வோட்கா கோப்பையை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்த தண்ணீர் கோப்பையை வாங்கிக் கொண்டு, “ஆல்கஹால் சாப்பிடமாட்டேன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க!” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார் கலாம்.
கலாமைப் போலவே சி.வி.ராமனும் ஆல்கஹால் சோதனையைச் சந்தித்து மீண்டவர்தான். சி.வி.ராமன் (C.V. Raman) இயற்பியல் நோபல் பரிசு பெற்றது ராமன் எஃப்க்ட் என்ற ஒளியியல் தொடர்பான ஆய்விற்காக. ஸ்வீடன் சென்று பரிசைப் பெற்ற ராமன் இங்கிலாந்துக்கு வரவேற்கப்பட்டார். அவர் நோபல் பரிசு பெற்ற காலத்தில் இந்தியா ஒரு ப்ரிட்டிஷ் காலனி. அவரை கெளரவித்து நடந்த வரவேற்பில் ஒருவர் அவரை நெருங்கி, ‘வைன் அருந்துகிறீர்களா?’ என்று கேட்டுள்ளார். ராமன் மது அருந்தும் பழக்கமில்லாதவர். ஆனால் உபசரணையை உதறுவது நாகரீகமும் இல்லை. அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு, “வைன் மேல் ராமன் எஃப்க்ட் எப்படி இருக்கும் என்று ஆராய ஆசைதான். ஆனால் ராமன் மேல் வைனின் எஃப்க்ட் பற்றி ஆராய எந்த ஆசையும் இல்லை”, என்று எல்லோரையும் சிரிக்க வைத்து வைனிலிருந்து நழுவியிருக்கிறார் ராமன்.
அப்துல் கலாம், சி.வி.ராமன் இருவரும் மதுவை நெருங்காதவர்கள். ஆனால் மொடாக்குடியர்களாகவும் பல விஞ்ஞானிகள் இருந்திருக்கிறார்கள். ரிச்சர்ட் ஃபெயின்மன் மொடக்குடியர் இல்லையென்றாலும், குடித்துவிட்டு மதுக்கூடத்தில் சண்டையெல்லாம் போட்டிருக்கிறார். அவற்றை விலாவாரியாகத் தன்னுடைய ‘Surely you are joking Mr.Feynman’ புத்தகத்திலும் எழுதியிருக்கிறார்.
விஞ்ஞானிகள் எல்லோருமே படு சீரியஸானவர்கள் என்று நினைப்பவர்கள் இந்த ‘Surely you are joking Mr.Feynman’ புத்தகத்தை நான்கு மண்டலம் பாராயணம் செய்ய வேண்டும். ரகசியங்கள் வெளியே கசியக்கூடாது என்று அரசு அதிகாரிகள் கடிதங்களைப் பிரித்துப் பார்த்ததைத் தெரிந்து கொண்டு, தன் மனைவியிடம் கடிதத்தில் பிரித்தவுடன் கீழே சிதறுமாறு பெளடர் வைத்து அனுப்பச் சொல்வது, அதிமுக்கியமான கோப்புகள் வைக்கப்படும் அரசு அலுவலகத்தின் அலமாரிகளை சாவியில்லாமல் திறப்பது, தன்னிடம் விளையாட நினைத்த சீன விஞ்ஞானியிடம் அவரைப் போலவே வேறொரு மொழியில் பேசி அவரைத் திணறடித்தது என ஃபெயின்மன் செய்த ரகளைகள் கொஞ்சநஞ்சமல்ல. இவை போலப் பல சம்பவங்கள் அப்புத்தகத்தில் தரப்பட்டிருக்கின்றன.
உலக நடப்புகளை மிகவும் கூர்மையாகக் கவனித்தவர் ஃபெயின்மன். ஆனால் சற்று ஞாபக மறதியும் அதிகம். இப்புத்தகத்தில் தரப்பட்டிருக்கும் ஒரு சம்பவத்திலிருந்து தன்னுடைய ஞாபகமறதி தந்த சங்கடங்களிலிருந்து ஃபெயின்மன் எப்படித் தப்பித்தார் என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை, வட காரலினா மாநிலத்தில் உள்ள ராலி நகரில் ஒரு கருத்தரங்கிற்காகச் செல்ல வேண்டியிருந்த்து. கருத்தரங்கிற்கு ஒரு நாள் தாமதமாக மற்ற வேலை இருந்த்தால் செல்ல வேண்டி வந்த்து. கருத்தரங்கு அழைப்பிதழை மறந்து ஃபெயின்மனுக்கு ராலி விமான நிலயம் அடைந்தவுடன்தான் ஞாபகம் வந்தது. என்ன செய்வது? ராலி நகரில் மூன்று பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. எதில் கருத்தரங்கம்? இங்கே ஃபெயின்மனின் விஞ்ஞான மற்றும் சமயோசித மூளை இரண்டும் வேலை செய்தது.
டாக்ஸி ஓட்டுனர் ஒருவரிடம் நெருங்கி, “நேற்று முந்தைய நாள், பலர் இங்கு விமான நிலயத்தில் டாக்ஸி அருகே அவரவர்களுடன் பேசிக் கொண்டு பக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு பயனித்திருப்பார்களே! நீங்கள் பார்த்தீர்களா?” என்றார்.
அதற்கு டாக்ஸி ஓட்டுனர், “உம்…பார்த்தேன்”.
ஃபெயின்மன், “சரி, அந்த பல்கலைக்கழகத்திற்கு செல்லுங்கள்”, என்றார்.
சரியாக சாபல் ஹில் பலகலைகழகத்தில் கருத்தரங்கு நடக்கும் இடத்திற்குக் கார் செல்ல, ஃபெயின்மன் எல்லாம் தெரிந்தவர் போல கருத்தரங்கிற்குள் நுழைந்திருக்கிறார்!
ஃபெயின்மன் இயற்பியலில் க்வாண்டம் எலெக்ட்ரோடைனமிக்ஸில் (Quantum Electrodynamics) தன்னுடைய பங்களிப்புக்காக 1965 ஆம் ஆண்டு நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். அமெரிக்க அணு ஆயுத ஆராய்ச்சி, உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அணுக்கருப்பொருட்களுக்கிடையேயான உறவுகளைப் பற்றிய இவருடைய வரைபடங்களான “Feynman Diagrams”, இயற்பியலின் சில முக்கிய கருத்தாக்கங்களில் (String theory, M theory) இன்றும் பெரும்பங்கு வகிக்கின்றன.
ஃபெயின்மனுக்கு அறிவியலைப் போல தர்க்கரீதியாக நிறுவமுடியாத விஷயங்கள் மீதும், துறைகள் மீதும் அவ்வளவு உயர்வான அபிப்ராயம் இருந்ததில்லை. பொழுதுபோகவில்லையென்றால் தன் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறைக்குச் சென்று அவர்களைப் பலவிதமான கேள்விகள் கேட்டுக் கலாய்த்துவிட்டு வருவது
அவருக்கு பொழுதுபோக்காக இருந்திருக்கிறது.
தத்துவத்துறை குறித்ததொரு ஜோக் அறிவியல் உலகில் பிரபலாம். ஒரு கல்லூரியின் பிரின்ஸிபால் இயற்பியல் துறைத் தலைவரிடம் அலுத்துக் கொண்டாராம் “ஏனய்யா உங்க டிபார்ட்மெண்ட்ல எப்ப பாத்தாலும் விலை உசந்த இன்ஸ்ட்ரூமெண்ட்ஸாவே வாங்கித் தள்ளுறாங்க? பக்கத்துல கணிதத்துறையை பாருங்க அவுங்க கேட்கிறதெல்லாம் பேப்பர், பேனா பென்ஸில் ரப்பர். அதுக்கும் பக்கத்துல தத்துவத்துறை இன்னும் பரவாயில்லை. அவங்களுக்கு ரப்பர் கூட தேவைப்படுறதில்லை.” [இங்கே குறிப்பிடப்படும் ரப்பர், பென்சில் குறிப்புகளை அழிக்க உதவும் அழிப்பான். அமெரிக்க ‘ரப்பர்’ இல்லை].
1933 ஆம் ஆண்டு பெளதிக நோபல் பெற்ற பிரிடிஷ் விஞ்ஞானி பால் டிராக் (Paul Dirac). அணுவியல் துறையில் க்வாண்டம் கோட்பாடிற்காக மிகவும் அறிவார்ந்த முயற்சியாளர்களில் இவரும் ஒருவர். இவருக்கு மதம், கவிதை யாவுமே வீண் உதவாக்கரை சமாச்சாரம். அதுவும் இவருக்கு கவிதை என்றாலே மிகவும் கிண்டல். இவரின் கவிதை பற்றிய கருத்து மிகவும் பிரபலமானது. “இதுவரை யாருக்குமே புரியாத புதிய விஷயத்தை விளக்கி எல்லோருக்கும் தெளிவாக புரியும்படி செய்வது விஞ்ஞானம். இதுவரை எல்லோருக்குமே புரிந்த விஷயத்தை குழப்பி எவருக்குமே புரியாதபடி செய்வது கவிதை”.
பால் டிராக்குக்கு கவிதை மட்டுமில்லை மற்ற எழுத்து வேலைகளும் அவ்வளவு பிடித்தமானதாக இருந்ததில்லை. ஃபெயின்மனுக்கும் மேலாண்மை மற்றும் காகித வேலைகள் அறவே பிடிக்காது. 1965ல் நோபல் பரிசு வாங்கிய கையோடு, ஸ்விஸ் நாட்டில் உள்ள CERN ஆய்வுக்கூடத்திற்கு சென்றிருக்கிறார். CERN தலைவர் நக்கலாக, ’இனிமேல் என்ன… ஃபைன்மேன் ரேடியோ நிகழ்ச்சிகள், பொது சொற்பொழிவு மற்றும் காகித வேலைகள் செய்து மற்ற விஞ்ஞானிகள் போல காலம் தள்ள வேண்டியதுதான். நான் $11 பெட் கட்டுகிறேன். இன்னும் 10 ஆண்டுகளில் ஃபெயின்மேன் மாறி விடுவார்!” என்று சவால் விட்டிருக்கிறார்.
மறக்காமல் ஃபெயின்மேன் 1975 ல் $11 தருமாறு கேட்டு கடிதம் எழுதி பெற்றும் கொண்டார். கடைசி வரை காகித வேலையில் சிக்காமல் விஞ்ஞான முயற்சிகளிலேயே வெற்றி பெற்றவர் ஃபெயின்மேன்.
ஆனால் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட்டைப் பார்க்கையில் பால் டிராக் பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். பால் டிராக் அறிவியலைத் தவிர பிற துறைகள்தான் மோசம் என்றார். ஆனால் ரூதர்ஃபோர்டோ அறிவியலிலேயே கூட இயற்பியல் துறை மட்டுமே சிறந்தது என்ற கருத்துடையவர். அணு வடிவமைப்புக்காக உலகெங்கிலும் அறியப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் (Ernest Rutherford) ஓர் இயற்பியல் விஞ்ஞானி. “விஞ்ஞான உலகில் இயற்பியல் மட்டுமே உள்ளது. மற்றதெல்லாம் வெறும் தபால் தலை சேர்க்கும் விவகாரம்!” என்றார். ஆனால் விதி வலியது. இவருக்கு 1908 ஆம் ஆண்டு நோபல் பரிசு கொடுத்தார்கள். எந்தப் பிரிவில்? வேதியியல் பிரிவில்! விட்டர்களா நிருபர்கள்? “நீங்கள் தபால் தலைகள் சேகரிப்பதாகச் சொல்லவே இல்லையே?”. வழிய வேண்டி போய்விட்டது ரூதர்ஃபோர்டுக்கு.
இது அறிவியலின் ஒரு சில துறைகளுக்குள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் கலாட்டா என்றால், க்வாண்டம் இயற்பியல் முன்வைக்கப்பட்டபோது பிற இயற்பியலாளர்களே அக்கருத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்திருக்கிறார்கள்.
டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் நீல்ஸ் போர் (Neils Bohr). பெளதிகத்துறையில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானி. இவர் ஒரு விஷயத்தை ஆராய்ந்து சரி என்று சொல்வதற்காக தவம் கிடந்தார்கள் மற்ற விஞ்ஞானிகள். 1922 ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கும் ஐன்ஸ்டீனுக்கும் நடந்த கருத்து வேறுபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. நீல்ஸ் போர் க்வாண்டம் கோட்பாடுகளை பைத்தியக்காரத்தமானவை என்று கருதியவர். ஒரு க்வாண்டம் கோட்பாடு ஆய்வுரைக் கூட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு ஒரு சித்தாந்தத்தை ஒரு இளம் விஞ்ஞானி விளக்கினாராம். போர் அதை கேட்டுவிட்டு, “இங்கு எனக்கு முன் பேசியவர்கள் அனைவரும் உங்கள் ஐடியா பைத்தியக்காரமானது என்று ஒப்புக் கொண்டார்கள். இப்பொழுது நமக்குள்ள கருத்து வேறுபாடு என்ன? உங்கள் ஐடியா அளவுக்கு அதிகமான பைத்தியக்காரத்தனமா அல்லது அளவுக்கு குறைவாகவா? என்னைப் பொருத்த வரையில் உங்கள் கோட்பாட்டில் பைத்தியக்காரத்தனம் குறைவாக உள்ளது. நம் உலகிற்கு இது ஒத்து வராது!”. கேட்ட இளம் விஞ்ஞானியும் சிரித்து விட்டார்.
விஞ்ஞான உலகின் போக்குகள் சில விஞ்ஞானிகளுக்கு பிடிப்பதில்லை. சக விஞ்ஞானிகளை கடுமையாகச் சாடுவதால் கருத்து வேற்றுமை வளர்கிறதே தவிர மாற்றம் எதுவும் கொண்டுவர முடிவதில்லை. இது எல்லா துறைகளிலும் இடுப்பது போல விஞ்ஞான துறையிலும் உண்டு. 1970 மற்றும் 1980 களில் கணினி விஞ்ஞானப் போக்கு அத்துறையில் முதன்மையான நூத் என்னும் விஞ்ஞானிக்கு பிடிக்கவில்லை. ஆனால், சக விஞ்ஞானிகளைச் சாடாமல் அழகாக, நகைச்சுவையாக அவர் சொன்ன கருத்து இன்றும் மேற்கோள் காட்டப்படுகிறது.
சம காலத்தில் வாழும் அமெரிக்க கணினி விஞ்ஞானி டொனால்ட் நூத் (Donald Knuth). இவரை அறியாத கணினி விஞ்ஞானியே இலலை என்று சொல்லலாம். பல கணினி மொழி அமைப்பு மற்றும் தகவல் கட்டமைப்பு பற்றிய ஆராய்ச்சி இன்றைய கணினி முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது. இவர் வாங்காத கணினி பரிசுகளே இல்லை. கணினியின் ஆரம்ப காலத்தில் பல மொழிகள் வந்த வண்ணம் இருந்தன. சில வருடங்களில் இம்மொழிகள் யாரும் உபயோகப் படுத்தாததால் மறைந்தும் போயின. புதிய மொழி இருப்பதால் புதிய பிரச்சினைகளை யாரும் தீர்க்கக் காணோம். நூத் இவ்வாறு நக்கல் அடித்தார், “நம் கணினி உலகில் மொழிகள்தான் எல்லாமே என்கிறார்கள். அதுவும் மொழிக்கு மிக அழகான பெயர் தேவை என்று பலரும் சொல்லி வருகிறார்கள். என்னிடம் அழகான ஒரு பெயர் உள்ளது. சரியான கணினி மொழியைத் தேடி வருகிறேன்”.
விஞ்ஞானிகளைப் பற்றிய ஒரு மேதைமை பிம்பம் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. அவர்கள் தங்களது துறைகளில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும், மற்ற அன்றாட முயற்சிகளில் நம்மைப் போல தடுமாறத்தான் செய்கிறார்கள். உதாரணம், ஐன்ஸ்டீன் வாழ்கையிலிருந்து ஒரு சம்பவம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி அனைவரும் கேள்விப்பட்டுள்ளோம். 20 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான ஜீனியஸ். நியூட்டனின் கணிப்பில் மெர்க்குரியின் கோளப்பாதையில் உள்ள மிக நுண்ணிய கோளாறை கணக்கிட்டு காரணமும் சொன்ன மேதை. சார்பியல் தத்துவத்திற்காக இன்றும் போற்றப்படுபவர் ஐன்ஸ்டீன். ஆனால் ஆரம்ப காலங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய தியரியாக இருந்ததால் 1921ல் இவருக்கு ஒளிமின் கோட்பாட்டுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு வயலின் வாசிப்பதில் மிகவும் விருப்பம். மேற்கத்திய செவ்வியலில் மிகவும் ஆர்வம். ஹேய்டனின் இசையை பல முறை இசைத்தும் வயலினில் சரியாக வரவில்லை. சலித்துக் கொண்ட இசை ஆசிரியர், “ஆல்பர்ட், உனக்கு கணக்குப் போடவே வராதா?” என்றாராம்.
அமெரிக்காவில் குடி புகுந்த ஐன்ஸ்டீனை ஒரு சினிமா நட்சத்திரம் போல நினைக்கத் தொடங்கியது அந்நாடு. எல்லோரும் ஐன்ஸ்டீனை கவர்ந்துவிட துடித்தார்கள். சமயம் கிடைத்தால் அவரது மனைவியையும் கவரத் துடித்தார்கள். ஒரு முறை திருமதி ஐன்ஸ்டீனுக்கு அமெரிக்க ஆராய்ச்சிக்கூடம் ஒன்றைச் சுற்றிக்காட்டினார்கள். அங்கிருந்த மிகப்பெரிய ஆராய்ச்சி இயந்திரம் ஒன்றைப் பெருமையாக விளக்க வந்தார் விஞ்ஞானி ஒருவர். திருமதி ஐன்ஸ்டீன், ‘இது என்ன ஆராய்ச்சி இயந்திரம்?” என்று கேட்க, மிக ரகசியமான குரலில், ‘பிரபஞ்சத்தின் மிக ஆழமான ரகசியங்களை ஆராய்ச்சி செய்யும் ராட்சச இயந்திரம் இது” என்று காலரை தூக்கி விட்டு கொண்டார். அதற்கு திருமதி ஐன்ஸ்டீன், “இவ்வளவுதானா? என் கணவர் தபால் கடித உறையிலேயே அதைச் செய்வாரே!” என்று ஒரு போடு போட்டிருக்கிறார்!
விஞ்ஞானிகளைப் பற்றி, குறிப்பாக ஐன்ஸ்டீனைப் பற்றி இப்படிப் பல ஜோக்குகள் மேற்கில் பிரபலமாக இருக்கின்றன. இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் எது உண்மையான சம்பவம், எது இட்டுக்கட்டப்பட்டது என்று கண்டுபிடிப்பதுதான். எப்படி நம்மூர் பட்டிமன்றங்களில், “எங்க வீட்ல… ” என்று ஆரம்பித்து ஒரு இடைவெளி விட்டு, எல்லோரிடமும் கைத்தட்டுகள் வாங்கும் அபத்த நகைச்சுவைகள் பிரபலமோ, அப்படி மேற்கில் “விஞ்ஞானிகளின் வாழ்வில்…” ஜோக்குகளும் ஏராளமாக இருக்கின்றன.
இதைக் குறித்து ஐசக் அஸிமோவ் தன்னுடைய “Treasury of Humor” என்ற ஜோக்குகளை உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ‘விஞ்ஞானிகளை வைத்து நகைச்சுவை செய்தால் உடனே ஹிட்டாகும். நீல்ஸ் போரை வைத்து நீங்கள் ஜோக்கடிக்கலாம். ஆனால் அவர் மாபெரும் கண்டுபிடிப்புகள் செய்த மேதை என்றாலும் அவரைப் பொதுமக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. நீல்ஸ் போரை வைத்து நீங்கள் சொன்ன நகைச்சுவை ஹிட்டாகவில்லை என்றால் அதே ஜோக்கை ஐன்ஸ்டீனை வைத்துச் சொல்லுங்கள். ஐன்ஸ்டீனை எல்லோருக்கும் தெரியும். என்ன ஜோக்கை வேண்டுமானாலும் அவர் தலையில் கட்டலாம்” என்கிறார் அஸிமோவ்.
இதே புத்தகத்தில் இருக்கும் ஒரு ஜோக்கோடு கட்டுரையை முடிப்போம்:
விண்வெளிப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருந்ததொரு இளம்பெண் சொல்கிறார்: “விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திரங்களுக்கிடையே உள்ள தூரம், அவற்றின் எடை, வெப்பம் இதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவற்றின் பெயரை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை!”