வாசகர் மறுமொழி

icon

இரா.முருகன்

நண்பர் ஜெ.மோவோடு உரையாடல் படித்தேன்.

அவரளவில் புலம் பெயர்தல் பற்றிய கருத்து உண்மையாக இருக்கலாம்.

தொழில் நிமித்தமாக நான் கடந்த பதினைந்து ஆண்டுகள் அடிக்கடி புலம் பெயர வேண்டி வந்தபோது, பல இடையூறுகளையும் கடந்து அதை வரவேற்க முடிந்தது.

என்னைப் பொறுத்தவரை இப்படியான பெயர்வு என் படைப்பு எல்லைகளை விரிவாக்குகிறது. வாசக எல்லையையும் விசாலப்படுத்துகிறது. முக்கியமாக என் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து பெயர்வுகள்.

பத்து நாள் பயணம் போய் எழுதுகிற டூரிஸ்ட் எழுத்து இல்லை நான் சொல்வது. பால் தொரொ செய்வது அதைத்தான். அவருடைய கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் தில்லி – சென்னை பயணக் கட்டுரையைப் படித்தால் புரியும். தி கிரேட் ரயில்வே பஜார் புத்தகத்தில் உள்ளது. பார்த்ததை நாடகீயத் தன்மையோடு சொல்ல அவர் கற்பனை உரையாடல்களையும் கலப்பார் என்று கேள்விப்பட்டேன். இன்னொரு பயண எழுத்தாளரும் நகைச்சுவையாளரும், அறிவியலாருமான பில் ப்ரைஸன் சொன்னதாக நினைவு.

லண்டன் டயரியையும், விஸ்வரூபம் நாவலையும் நான் புலம் பெயராமல் இருந்தால் எழுதியிருக்க முடியாது. இங்கேயே இருந்தாலும் எது என் ஊர்? அசோகமித்திரன் சுற்றிய அதே தி.நகர்தான். ஆனால் தி.நகரை விட அம்பலப்புழையும், சிவகங்கையும், மதுரையும், தில்லி, மும்பையும் இன்னும் நான் நாளது தேதி வரை இருந்த பல இடங்களின் மண்ணும் மனிதர்களும் பிரேதங்களும் தேவதைகளும் என் படைப்புகளில் இடம் பெறுவது தானே நிகழ்கிற ஒன்று. சொந்த மண் என்று என்னால் எந்த இடத்தோடும் நமர் என்று யாரோடும் பிணைத்துக் கொள்ள முடியாமல் இருப்பதாலேயே எழுத முடிகிறது என்று கூடத் தோன்றுகிறது.

உரையாடலாம் வாங்க

அன்புடன்

இரா.முருகன்

icon
ஹரன்பிரசன்னா

சொல்வனம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட ஓர் இதழ். இன்று இணையத்தில் பல்வேறு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும் முக்கியமான தளமாக சொல்வனம் விளங்குகிறது.

சொல்வனம் ஓராண்டை சிறப்பாக கடந்திருக்கிறது. சொல்வனத்தில் வரும் எளிமையான அறிவியல் கட்டுரைகள் மிக முக்கியமானவை. அதேபோல் சொல்வனத்தில் வந்த சில நல்ல கவிதைகளும் மனதில் நிழலாடுகின்றன. சொல்வனம் இதுவரை நேர்காணலில் எதுவும் செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த போது வெளியாகியிருக்கிறது வெங்கட்சாமிநாதனின் நேர்காணல். தென்றல் இதழில் வந்ததுதான் என்றாலும், நேர்காணல் என்னும் பிரிவில் எதேனும் செய்யவேண்டும் என்கிற எண்ணம் சொல்வனத்துக்கு இருப்பது குறித்து மகிழ்ச்சி. இன்னு சொல்வனம் தடம்பதிக்காத பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு, தமிழின் முக்கியமான இதழாக, வெற்றிகரமாகத் தொடர்ந்து வெளிவர வாழ்த்துகள்.

–ஹரன் பிரசன்னா

icon
ஜெயக்குமார்

இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் சொல்வனத்திற்கு வாழ்த்துக்கள்.

தரமான ஒரு இணைய இலக்கியப்பத்திரிக்கையை ஓராண்டு காலம் தொய்வின்றியும், இலக்கிய இதழ்களுக்கே உரித்தான சிண்டுமுடிதல்கள், உள் அரசியல்கள், பிற எழுத்தாளர்களை வசைபாடுதல் என்ற அக்கபோர்கள் ஏதுமின்றி ஒரு இலக்கியப் பத்திரிக்கையை “இப்படியும் நடத்தலாம்” என்று நடத்திக்காட்டியிருக்கும் சொல்வனம் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சொல்வனம் மென்மேலும் சிறப்பாய் செயல்படவும், நல்ல இலக்கியக் கட்டுரைகளையும், ஆய்வுகளையும், கலைச்செல்வங்கள் யாவையும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அளிக்கவும் வாழ்த்துக்கள்.

சொல்வனத்தின் வெற்றிக்கான காரணங்களாக நான் நினைப்பவை:

மிகச் சிறப்பான விமர்சனங்களையும், இலக்கியவாதிகளின் பேட்டிகளையும், இசைகுறித்தான கட்டுரைகளையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தது,

வலைப்பக்கத்தை இளமைப் பொலிவுடன் கட்டியமைத்ததும், மகரந்தம் போன்ற பொதுத்தளத்தில் கிட்டாத பொதுஅறிவுச் செய்திகளை தவறாமல் வழங்கியதும்,

புன்முறுவலுடனே படிக்க வைக்கும் ராமன்ராஜாவின் அறிவியல் கட்டுரைகள் மற்றும், சுகாவின் அனுபவக் கட்டுரைகள்,

மொழிமாற்றக் கதைகளில் மிகச் சிறப்பானதொரு நேர்த்தியும், தொடர்ந்து அதை கடைப்பிடித்ததும்,

வழக்கமான கேலிச்சித்திரங்களாய் இல்லாமல் இன்றைய குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் விதமாய் அமைந்த கேலிச்சித்திரங்களும்,

தரமான கவிதைகளும், சினிமா விமர்சனங்களுமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளதே சொல்வனத்தின் வெற்றி.

தரமான எழுத்தாளர்களாகவே இருப்பினும், தெரிந்த பெயர்களையே மீண்டும், மீண்டும் பார்க்கும்போது படிக்கும் ஆர்வம் சிறிது குன்றாமலில்லை.

இன்னும் கொஞ்சம் இறங்கிவந்து, தரத்தில் சமரசமின்றி அதேசமயம் பெருவாரியான வாசகர்களைக் கவர என்ன செய்யலாம் என்பதுகுறித்து சொல்வனம் குழு யோசிக்கலாம்.

ஆனால், இவையெல்லாம் தாண்டி இலக்கிய உலகில் வாராதுவந்த மாமணி “சொல்வனம்” என்றால் அது மிகை இல்லை.

ஜெயக்குமார்

icon
சங்கரநாராயணன்

Dear Editor,

“ஆட்டையும் மாட்டையும் கொல்லாமல் ஆம்பூர் ஃபாக்டரியில் தயாரித்த சுத்த சைவ மட்டன் பிரியாணி என்றால், அருட் பிரகாச வள்ளலார் கூட ஆட்சேபிக்க நியாயமில்லை!”

அருமையான கட்டுரை! மாணவர்கள் சொல்வனத்தை படித்தால் பல விஷயங்கள் தெரிந்து கொண்டு என்ன படிக்க வேண்டும் என முடிவு செயலாம் போல இருக்கிறதே! நன்றி!

“இந்தக் கட்டுரையை எழுதியபின் பூமித்தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்கு நன்றி”
இந்தக் கட்டுரையை வாசித்த பின்னால் சொல்வனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்!

நன்றி!

சங்கரநாராயணன்

icon
தேசிகன்

மார்டின் கார்டனர் பற்றி மிக அருமையான கட்டுரை. இன்று தான் சமயம் கிடைத்தது படிக்க. மார்டின் கார்டனர் மீது கொண்ட மதிப்பால் எழுதிய கட்டுரை என்று படிக்கும் போது தெரிகிறது. கட்டுரையில் பல விஷயங்கள் எனக்கு தெரியாதவை.

சுஜாதா தன்னுடைய தொடர்கதைகளுக்கு இவரது புதிர்களை உபயோகப்படுத்தியுள்ளார். இதை என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒரு முறை அவர் புத்தக அலமாரியை அடுக்கும் போது கார்டனருடைய சில புத்தகங்களை “நீ வெச்சிக்கோ” என்று என்னிடம் தந்தார். தொடர்ந்து இது போல சேதுபதி அருணாசலம் எழுத வேண்டும்.

அன்புடன்,
தேசிகன்