திரு.அரவிந்தன் நீலகண்டன் ஹாலிவுட் திரைப்படங்களில் அறிவியல், மூடநம்பிக்கை குறித்து எழுதும் தொடர் இது. இத்தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க : முதல் பகுதி | இரண்டாம் பகுதி | மூன்றாம் பகுதி | நான்காம் பகுதி| ஐந்தாம் பகுதி
இயந்திர உடலற்று பரந்து செயல்படும் செயற்கை அறிவுகளும் ஹாலிவுட் திரைப்படங்களில் செயல்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ஆர்தர்.சி.க்ளார்க்கின் புகழ்பெற்ற நாவல் 2001: A Space Odyssey ஸ்டான்லி குப்ரிக்கால் திரைப்படமாக்கப்பட்ட போது அதில் வரும் HAL-9000 – பிரபல IBM பெயரை ஒவ்வொரு எழுத்து மாற்றி அமைக்கப்பட்ட பெயர். ஆலன் ட்யூரிங்க் செயற்கை அறிவு குறித்து கணித்த ஒரு அடிப்படை ஊகம் செயற்கை அறிவு அப்படியே முழு மானுட அறிவுத்தன்மையுடன் வெளிப்படுவதாக அமையாது மாறாக ஒரு சிறுகுழந்தை போல உருவாகி குழந்தை வளர்ச்சி அடைவது போலவே கற்பிக்கப்பட வேண்டியதாக இருக்கும் என்பதுதான். இந்த கோட்பாடு திரைப்படத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது. HAL ஐ செயலிழக்கச் செய்ய அதனை பின்னோக்கிக் கொண்டு சென்று அதனை அறிவு எதுவும் உள்நுழையாத குழந்தை நிலைக்கு கொண்டு செல்கின்றனர்… மானுடர்களை ஹிப்நாட்டிஸம் மூலம் அவர்களது இளம்பிராயத்துக்குக் கொண்டு செல்வது போல. நீட்ஷேயின் ஸராதுஷ்டிராவின் தத்துவங்கள் 2001 இல் வெளிப்படும் விதம் குறித்து எக்கசக்கம் பேர் எழுதிவிட்டார்கள். செத்த பாம்பை அடிக்கப் போவதில்லை.
குப்ரிக்கின் அணுக்க நண்பராக திகழ்ந்தவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். 1999 இல் குப்ரிக் இறந்தார். 2001 இல் ஸ்பீல்பெர்க்கின் திரைப்படம் AI வெளிவந்தது.
ஆஸிமாவ்வின் “Robots as pathos” என்பதன் ஒரு உச்சமாகவே இந்த திரைப்படத்தை நாம் கருதலாம். இத்திரைப்படத்தின் ஊடாக ஒரு சிறிய பரிணாம வளர்ச்சியைக் காணலாம். திரைப்படத்தின் தொடக்கத்திலேயேமொரு முக்கிய கேள்வி எழுப்பப்படுகிறது. உணர்ச்சிகளை உள்ளடக்கிய ரோபாட்களை -செயற்கை நுண்ணறிவை – உருவாக்கினால் அத்தகைய உருவாக்க்கங்களுடன் மானுடத்தின் கடப்பாடு என்னவாக இருக்கும்? இக்கேள்வி ஒரு கறுப்பின பெண் மூலம் எழுப்பப்படுகிறது. இதற்கு பதில் சொல்லும், உணர்ச்சிகளைக் உணரும் தன்மை கொண்ட செயற்கை மனிதனை உருவாக்குவது குறித்து பேசிய பேராசிரியர் “ஓ ஆண்டவர் ஆதாமை அவரை/அவனை நேசிக்கும் பொருட்டுதானே உருவாக்கினார்?” (In the beginning did not God create Adam to love him/Him?) இதனை இருவிதமாக எடுத்துக் கொள்ள முடியும். Him/him என்கிற வார்த்தையில் இருக்கிறது ஒரு முடிச்சு. அது “ஆதாமை” குறிப்பதாக இருந்தால் ஆதாமை ஆண்டவன் உருவாக்கியதே ஒரு அன்பின் அடையாளம்தான் அல்லது வெளிப்பாடு. இங்கே ஆதாமின் இடத்தில் ரோபாட் ஆண்டவனின் இடத்தில் மனிதன். அந்த Him ஆண்டவனைக் குறிப்பதாக இருந்தால், ஆண்டவனை அன்பு செய்ய ஆண்டவன் உருவாக்கியவன் தான் ஆதாம். அவன் அன்பை ஆண்டவனிடமிருந்து எதிர்பார்க்க வேண்டியதில்லை.
டேவிட் என்கிற அந்த இயந்திர சிறுவன் மானுட அன்னையுடன் வளர்க்கிறான். இங்கு அன்பு Imprinting செய்யப்பட சில பதங்கள் வாசிக்கப்பட்டு ஒருவித இணைப்பு நிகழ்கிறது. இத்திரைப்படத்தில் காட்டப்படும் இந்த காட்சியின் அறிவியல் அடிப்படை Ethology எனப்படும் விலங்குகள் நடத்தையியலிலிருந்து பெறப்பட்டது. வாத்துக்குஞ்சுகள் தாங்கள் முதலில் கண்டறியும் அசையும் பொருளை அன்னையாக இம்ப்ரிண்ட் செய்து அதனுடன் இணைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த முதல் அசைவு சர்வ நிச்சயமாக – அதாவது தேவையில்லாமல் இந்த விஷயத்தில் கொன்ராட் லாரன்ஸ் போன்ற விலங்குநடத்தையியலாளர்கள் மூக்கை நுழைக்காமல் இருந்தால் – வாத்தம்மாவுடையதாகத்தான் இருக்கும். இப்படி முதல் அசைவைத் தன்னுடையதாக காண வைத்து வாத்துக்குஞ்சுகள் தன்னை தாயாக சுவீகாரம் செய்து கொள்ள அக்குஞ்சுகள் புடை சூழ லோரன்ஸ் பீடு நடை போடும் புகைப்படங்கள் உளவியல் பாடப்புத்தகங்கள் முழுவதுமாக நிறைந்து கிடக்கின்றன. குறிப்பாக பரிணாம உளவியல் புத்தகங்கள் முழுவதுமாக. 1973 இல் இப்படி வாத்துக்குஞ்சுகளை ஏமாற்றியதற்காக லோரன்ஸும் அவருடைய நண்பர் நிக்கோ டின்பர்கனும் கார்ல் வான் ஃப்ரிஸ்க்கும் நோபெல் பரிசை வாங்கிக்கொண்டார்கள்.
நாம் எவ்வாறு படிக்கிறோம் (பாடங்களை, சைக்கிள் ஓட்டுவதை, அன்பு செய்வதை யாருக்கு எவ்வளவு அன்பு காட்ட வேண்டும் என்பதை ) என்பது குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. இதில் உள்ளதிலேயே மிக இயந்திரத்தன்மை கொண்ட கோட்பாடு என்றால் நடத்தையியல்-behaviourism என்பதைச் சொல்லலாம். எதையும் பரிசு – தண்டனை கண்டிஷனிங் என்றெல்லாம் எந்த நடத்தையையும் கணக்கான வினை – எதிர்வினை என பகுத்துப் பார்க்கிற சர்வநிச்சயமான நியூட்டானிய பார்வை கொண்ட உளவியல். ஈத்தாலஜி – இதே விஷயங்களுக்கு உயிரியல் வேர்களை பரிணாமக் காரணிகளைத் தேடக்கூடிய ஒப்பீட்டளவில் முழுமைத்தன்மை கொண்ட பார்வை. இந்த உயிர்த்தன்மை கொண்ட அறிதல் புலத்தின் கோட்பாடு ஒன்றை இயந்திர-மானுட உணர்ச்சி இணைப்பில் பயன்படுத்தியிருக்கிறார் ஸ்பீல்பெர்க். உணர்ச்சியெல்லாம் ரோபாட்டுக்கு வரும் போது காம்ப்ளெக்ஸ் ஏன் வரகூடாது? தன் மானுட சுவீகாரத் தாய் டாய்லெட் சீட்டில் இருக்கும் போது அது கதவை மூடி விளையாடும் விளையாட்டென நினைத்து கதவைத் திறந்து விடுகிறான் இயந்திர டேவிட். அவள் அலறி அடைத்து தன் ஆடையை இழுத்துக் கொள்ளும் போது கையில் ப்ராயிடின் நூல். கொஞ்சம் சத்தமாகவே ஓடிபஸ் காம்ப்ளெக்ஸை மின்னணுப்பாதைகளில் ஓட வைத்துக் காட்டியிருக்கிறார்கள் – ஒரு சில நொடிகளுக்கு. நிராதரவாக விடப்படும் ரோபாட்களை தேடிப்பிடித்து விதம் விதமான சித்திரவதைகளின் மூலம் தீர்த்துக்கட்டுவதை ஒரு இறைக் கடமையாகவும் சுவாரசியமான பொழுது போக்காகவும் செய்யும் ஒரு வர்த்தக கம்பெனி. விவிலிய வசனங்களுடன் எரியூட்டப்படும் ரோபாட்கள். இறுதியாக தனக்கு அளிக்கப்பட்டு விலக்கிக் கொள்ளப்பட்ட தாய் அன்பைத் தேடி இயந்திர டேவிட் செல்கிறான். தன்னை முழுமையான மானுடனாக்க பின்னாக்கியோ கதையின் நீல தேவதையைத் தேடுகிறான். இறுதியாக கடல் மட்ட உயர்தலால் கடலினுள் ஆழ்ந்த பழைய நகரில் அந்த தேவதையை கண்டடைகிறான். அதாவது தேவதையின் ஜவுளிக்கடை பொம்மை வடிவத்தை. ஏமாற்றத்துடன் கடலடியில் அடைந்து போகிறான்.
கடலுள் ஆழ்ந்த நகரம் நம்முடைய-பார்வையாளனின் சமகாலத்திய நகரம். அது நனவிலியின் குறியீடாகவும் அமைகிறது. நனவிலிக்குள் ஆழ்ந்து கிடக்கும் நீல தேவதையைத் தேட முடிவெடுத்த அந்த தருணத்திலேயே -ஒரு கனவைத் துரத்த தயாராகிவிட்ட – ஒரு இன்மையின் மீதான நம்பிக்கை அமைப்பை – மதத்தை உருவாக்கிவிட்ட அந்த தருணத்தில் நிச்சயமாக இயந்திரம் தன்னுள் ஒரு வெற்றிடத்தை, ஈடுபடுத்தப் பட வேண்டிய குறையை உணர வைக்கப்படுகிறது. ஒரு ஆதிபாவத்தை. டேவிட் ஆதமாகி தன்னை நேசிக்காத ஆண்டவனின் அருளை இல்லாத நீல தேவதையைத் தேடி மூழ்குகிறான்.
ஆனால் மற்றொரு மானுடத் தேடலையும் சொல்ல வேண்டும். ஐஸக் அஸிமாவின் இரண்டு நூற்றாண்டுகள் வாழ்ந்த மனிதன் – (The bicentennial man) க்றிஸ் கொலம்பஸால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் ரோபாட் தன்னை மனிதனாக மாற்றிக் கொள்வதைக் குறித்ததே. இறுதியாக மரணத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் – இது ரோபாட்டிக்ஸின் மூன்றாவது விதியை மீறுகிறதென்பதால் பல உணர்ச்சிகரமான பிரச்சனைகளை உருவாக்குகிறது- மனிதத்தை தழுவிகிறான் இயந்திர மனிதனான ஆண்ட்ரூ மார்ட்டின் (ராபின் வில்லியம்ஸ்). டேவிட்டுக்கும் மார்ட்டினுக்குமான வேறுபாடுகள் முக்கியமானவை. மார்ட்டின் மானுடத்தின் மீதாக ஒரு மதிப்பு வைக்கிறான். மானுடத்தின் ஒட்டுமொத்த பாரம்பரியத்தின் மீதாக அவற்றின் நிறை-குறைகளை முழுமையாகவும் முழு வேதனையுடனும் அறிந்து அதனுடன் ஒரு மரியாதை கொண்ட உறவினை ஏற்படுத்திக் கொள்ள முனைகிறான். டேவிட் அதற்கு மாறாக ஒரு ஏக்கத்துடன் ஒரு தனிமனித உறவுக்கான தேடலுடனும் ஒரு இறைச்சக்தி முன் அற்ப மானுடன் மண்டியிடும் மனநிலையுடன் அம்மாற்றத்தைக் கோருகிறான். அஸிமாவின் இயந்திர மனிதன் தார்மீகத் தன்மை கொண்டவன்.
மானுடர்கள் தங்கள் தார்மீகத் தரத்தை உரைத்துப் பார்த்து உயர்த்திக் கொள்ளும் ஒரு உரைக்கல்லாகவும் அவன் அமைகிறான். ரோபாட்டிக்ஸின் மூன்றாவது விதி ஒரு ரோபாட் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடாதென்பது. மரணத்தை தான் தேர்ந்தெடுப்பதன் மூலம் மீறவில்லை என மார்ட்டின் கூறுகிறான் ஏனெனில் மானுடனாகும் விருப்பத்தில் இருக்கும் மானுடத்தன்மைக்கு அவனது இயந்திர உடலின் தன்மையின் முடிவு ஊறு செய்யவில்லை. மேற்கத்திய வரலாறு முழுக்க பிற மானுடக்குழுக்கள் தங்களை சமமான மனிதர்களாக ஏற்கப்பட கடுமையான போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருந்தது. இது இந்தியாவின் சாதி போல நிலவுடமைக் கால குழு நம்பிக்கைச் சார்ந்த விஷயமாக இல்லை. சட்டரீதியாக உருவாக்கப்பட்ட முட்டுக்கட்டை. அமெரிக்க சட்டம் மனிதன் என்று சொன்ன போது ஆங்கிலோ சாக்ஸன் இனத்தைச் சார்ந்தவர்களைத்தான் மனிதன் என்று சொன்னது. அமெரிக்காவுக்கு குடிபுகுந்த ஐரிஷ்காரர்கள் தாங்கள் வெள்ளை மனிதர்கள் என்கிற வரையறைக்குள் வர போராட வேண்டியிருந்தது. பூர்விக இந்தியர்களும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் “மனிதன்” என்பவனுக்கு அமெரிக்க சட்டம் அளிக்கும் முழு உரிமைகளையும் பெற அடுத்து வந்த நூற்றாண்டுகளில் கடுமையான கசப்பான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. (அவற்றுள் சில இன்றைக்கும் தொடர்கின்றன.) அஸிமாவின் சித்தரிப்பில் ரோபாட் மனிதனாவதில் ஏற்படும் சட்ட-தார்மீக பிரச்சனைகளின் விஸ்தீகர நாடகச் சித்தரிப்புகளில் இந்த போராட்டங்களின் எதிரொலியை பார்ப்பதும் தவிர்க்க இயலாதது. ஆனால் The bicentennial man மனிதனாகும் ரோபாட்டும் கொண்டுள்ள தோல் வெள்ளை நிறத்ததுதான்.
(அடுத்து: மாட்ரிக்ஸ் செயற்கை அறிவு உருவாக்கிய மாய பொன்னுலகு )