பாரம்பரியங்களும், பகுத்தறிவும்

web20trees20eating20temple

1946-1949 காலகட்டத்தில் நான் மன்னார்குடியில் ஆரம்பக்கல்வி பயின்றபோதுதான் பகுத்தறிவு பற்றிய ஒரு விஷயம் புரிபட்டது. மன்னார் குடியில் உள்ள அக்கிரஹாரம் முதல்தெரு, 2-ம் தெரு, 3-ம் தெரு, 4-ம் தெரு என்ற நான்கு தெருக்களில் அடக்கம். நான் மேலரண்டாவது தெருவாசி. இந்த நான்கு தெருக்களையும் தாண்டிச் சென்றால் ”ராஜாந்தோப்பு” என்று ஒரு இடம். இரண்டாம் தெருவிலிருந்து சிறுவர்களாகிய நாங்கள் அந்தத் தோப்பில் நாகப்பழம், முந்திரிப்பழம் (கொட்டை முந்திரி) திருடச் செல்வோம். திரும்பி வரும்போது இருட்டிவிடும். நடுவழியில் எங்களைவிடச் சற்றுப் பெரிய பையன்கள் எங்களைச் சூழந்து கொள்வார்கள். ”பாப்பாரப் பசங்களா” என்று ஏசிப்பேசி நையப் புடைப்பார்கள். பூணுால் போட்டிருந்தால் அறுத்துவிடுவார்கள். அப்படி பிராமணச் சிறுவர்களை அடித்து உதைக்கும் அந்தக் கூட்டத்தற்கும் ராஜாந்தோப்புக்கும் சம்பந்தம் இல்லை. நாகப்பழம் சாப்பிட்டதற்கு அடி இல்லை. தந்தை பெரியார் அப்போது ஒரு கூட்டத்தில் ”பாப்பானையும் பாம்பையும் பார்த்தால் முதலில் பாப்பானை அடித்துவிட்டுப் பின்னர் பாம்பை அடி” என்று பேசியதின் விளைவு போலும். பாம்பு ஏதுவும் தென்படாததால் பாப்பானை, குறிப்பாக பிராமணச் சிறுவர்களை மட்டுமே தொண்டர்கள் அடித்து நொறுக்குவதுண்டு. பாப்பானை அடிப்பதால் ”சாமி இல்லை” என்றாகிவிடாது. மூடநம்பிக்கை ஒழிந்துவிட்டது. இரண்டாவதாகப் பாம்பை அடிப்பதால் விவசாயம் பாதிக்கும். எலித்தொல்லை அதிகமாகலாம். விவசாயத்திற்கு நண்பன் பாம்பு. விவசாயத்திற்கு எமன் எலி. பாப்பானையும் பாம்பையும் அடிப்பது பகுத்தறிவா? எலியை அடிப்பது பகுத்தறிவா? இனிமேல் ஈ.வே.ரா. உயிருடன் வந்து எப்படி விளக்கம் தருவார் என்பது நடக்காத காரியம். இப்படி என் பட்டறிவுக்குக்கிட்டிய பகுத்தறிவு சிந்தனைகள் நிறைய உண்டு.

திராவிட இயக்கத்தின் ”கண்ணீர்த்துளிகளாக” வளர்ந்த தி.மு.க. ”சாமி இல்லை” என்று சொல்வைத விட ”ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்று போதித்த திருமூலர் வாசகம் அண்ணா வாசகமானதும் குலதெய்வசாமி கும்பிடும் தி.மு.க தொண்டர்கள் உற்சாகமடைந்தார்கள். பகுத்தறிவுத்தந்தை பிள்ளையார் பொம்மைகளுக்கும் பிள்ளையார் படங்களுக்கும் செருப்பு மாலை அணிவித்து சேலத்தில் மாபெரும் ஊர்வலம் நடத்தினார். அப்படிப்பட்ட ஊர்வலங்களில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பங்கேற்றவர்களில் சிலர், பல ஊர்களில் புதிது புதிதாகக் கட்டப்பட்ட பிள்ளையார் கோயில்களுக்கு அறங்காவலர்களாகவும் மாறி இன்று மறைந்தும் போயிருக்கலாம். திருமூலர் கூறிய ஒரே தெய்வம் கருத்தை துரைக்கு முன்பு தேசியக்கவி பாரதி நுண்ணறிவுடன் கையாண்டுள்ளார்:

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகான் – பல்
ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம்,
உண்டாம் எனக் கேளீரோ.
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் – எதனூடு
நின்றோங்கும் அறிவு ஒன்றே தெய்வம்
ஓதி அறியீரோ.
சுத்த அறிவே சிவம் என்று கூறும்
சுருதிகள் கேளீரோ – பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை யழிவீரோ.
வேடம் பல்கோடி ஒரு உண்மைக்குள் உள்ளது
என்று வேதம் புகன்றிடுமே – ஆங்கோர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வதை
வேதம் அறியாதே.
நாமம் பலகோடி ஒரு உண்மைக்குள் உள்ளது.
என்று நான்மறை கூறிடுமே – ஆங்கோர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வதை
நான்மறை கண்டிலதே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகள் எல்லாம் – நீவிர்
அவலை நினைத்து உமி மெல்லுதல் போல்
இங்கவங்கள் புரிவீரோ!
உள்ளது அனைத்திலும் உள் ஒளியாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே – இங்குக்
கொள்ளற்கரிய பிரமம் ஒன்றே மறை
கூவுதல் கேளீரோ!
மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை
காட்டவும் வல்லீரோ!
ஒன்று பிரமம் உளது உண்மை – அது உன்
உணர்வெனும் வேதமெலாம் – என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அது உன்
உணர்வெனக் கொள்வாயே.

செந்தமிழ் என்னும் பழந்தமிழில் திருமூலர் கூறிய அத்வைத ஞானத்தை – அதாவது ”ஒன்றே குலம் ஒருவனே தேவன் அதுவே உன் உணர்வு” – என்பதைக் கவிதையாக்கிய பாரதியே பகுத்தறிவின் ஆசான்.

ஆழ்ந்த நுண்ணறிவுடன் அந்தக் காலத்து ஆலயங்கள் கட்டப்பட்டன. மனித வாழ்வின் பிரதிபலிப்புகளாகவே ஆலயங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. சொல்லப்போனால் ஒரு ஆலயத்திற்குள் இன்று தடுமாறும் தட்ப வெப்பத்திற்குரிய அருமருந்தென்று உணரப்பட்ட நந்தவனங்கள், திருவருட்சோலை போன்ற வடிவங்களை கவனிக்கலாம். பழங்காலத்து ஆலயங்கள் மிகப்பெரியவை. கல்விக்கூட வளாகத்தைப் போல் வடிவமைக்கப்பட்டு வைதீக ஆகமங்களும், தேவாரமும், திவ்யபிரபந்தங்களும் கற்பிக்கப்பட்டன. இது ஒரு பகுதி. மண்ணில் வாழும் சகல ஜீவராசிகளம், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று சிலைகளாகவோ, சித்திரங்களாகவோ ஆலயங்களில் காணலாம். உதாரணமாகப் பசு காமதேனுவானது. காளை நந்தியானது. பசுவும் காளையும் பிரமம் என்று துதிக்கப்பட்டது. கருடன், குரங்கு, குதிரை எல்லாம் கருடாழ்வார், அனுமார், ஹயக்ரீவர், தும்புறுவர் என்று பிரமமாக வணங்கப்பட்டனர். பாம்பு ஆதிசேஷனாகியது. எல்லாமே பிரம்மத்தின் சுய உருவங்களே. இப்படி யோசிக்கும்போது, பாரம்பர்யமாக எழுப்பப்பட்டுள்ள கோவில்கள் பகுத்தறிவு கொண்டு கட்டப்பட்டவை எனலாம்.

பழைய கோவில்கள் கட்டப்பட்டிருந்த ஊர்களே இன்னமும் திருத்தலங்களாக உள்ளன. திருத்தலக் கோவில்களில் சிலவற்றைத் தவிர அதாவது தோஷபரிகாரமோ, டூரிசமோ இல்லாத மற்றவை பழைய பொலிவை இழந்து நிற்கின்றன. இன்று புதுப்புது கோவில்கள் கட்டப்படுகின்றன. ஆனால் பகுத்தறிவுடன் கட்டப்பட்ட பாரம்பர்யமான பழம்பெரும் கோவில்கள் நிறுவன அமைப்புகளாக – அதாவது INSTITUTIONS ஆக விளங்கி விவசாயம், நீர் மேலாண்மை பண்டகச் சாலை, உணவு வினியோகம், சிறுதொழில், நாட்டியக்கலை, சிற்பம், ஆகமம், கல்வி ஆகிய பொதுப்பணிகளையும் செய்தன. லாபநோக்கம் இல்லை. இன்று நிலை தலைகீழ். பழைய கோவில்களில் முன்பு செய்யப்பட்ட பொது வேலைகளில் கவனம் குறைந்து போய் பணம், பக்தி இரண்டுமே இலக்குகளாகிவிட்டன. புதிதாக எழப்பப்படும் கோவில்கள் – பெரும்பாலும் குடும்ப தெய்வக் கோயில்கள். ஒரு காலத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு சிலை மட்டும் இருக்கும். இப்போது பார்த்தால் பெரிய அம்மன்கோவிலாக அவதாரமெடுத்துக் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கும். குடும்ப தெய்வக் கோவில்களுக்கு முன்பு யாரும் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்வதில்லை. இரண்டாவதாக ஒரு புதிய குடியிருப்பு, நகர் என்று வந்தவுடன் பிள்ளையார் கோவில் புதிதாக எழும்பிவிடும். அப்பகுதியில் சின்னதாயிருந்த அம்மன் கோவிலுக்கு வண்ணம் பூசப்பட்டு கோலாகலமாக விளங்கும். இப்படிப் புதுக்கோவில்களுக்குப் படியளப்பவர்கள் எல்லோரும் ஈ.வே.ராவின் கடவுள் மறுப்பு திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர்களே.

தமிழ்நாட்டில் உள்ள பலகிராமக் கோவில்களில் திருவிழாக்கள் உண்டு. குறிப்பாக மதுரையை எடுத்துக் கொண்டால் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் உள்ள பல சிறப்புகளில் இரண்டு நாள் உற்சவங்கள் குறிப்பிடத்தக்கவை. மீனாட்சி கல்யாணம் ஒன்று. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் பிரதோஷம் நாளில் நிகழும். பிரதோஷம் கழிந்த இரண்டு நாளில் சித்திரா பெளர்ணமி. அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நாள். இது விழாவில் இரண்டாவது சிறப்பு. மீனாட்சியின் தமையனார் அழகர் – கள்ளழகர் விஷ்ணுவின் அவதாரம். கள்ளழகரின் தங்கை மீனாட்சி. மீனாட்சியின் கல்யாணத்திற்குக் கள்ளழகர் வரமுடியாமல் வைகையில் வெள்ளம் வந்துவிட்டதால் கல்யாணம் நடந்து முடிந்த பின்னரே திருமால் மதுரைக்கு வரமுடிந்தது. மதுரையில் நிகழும் மீனாட்சி கல்யாணத்திற்கு முன்பு மதுரையைச் சுற்றியுள்ள பாண்டி நாடு முழுவதும் ஊருக்கு ஊர் கிராமத்திருவிழா நிகழும். தெருவுக்குத் தெரு சாமி கும்பிடுவார்கள். சாமி கும்பிடுவதில் பாண்டி நாட்டு மக்களை யாராலும் வெல்லமுடியாது. ”சாமி இல்லை” என்ற கட்சியில் தினை வெடித்து வந்த ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு பக்தியை வைத்து ஓட்டு வாங்கும் சாமர்த்தியமும் உண்டு. பாண்டி நாட்டில் எந்தக் கோவில் திருவிழாவுக்கு நிதி வேண்டும் என்று எந்தத் தொண்டர்கள் போனாலும் அமைச்சர்கள் ஆயரம் ஆயிரமாக அள்ளிக் கொடுக்கும் ஒரு புதிய பண்பாடு கடந்த சில ஆண்டுகளில் மிக அதிகம் என்பதால் சாமி, பணம், பக்தி, அரசியல் எல்லாம் தமிழர் பண்பாட்டில் பின்னப்பிணைந்துவிட்டது.

திருமழபாடிஅதேசமயம் அப்பரும், சுந்தரரும், ஆளுடைப்பிள்ளையும், அருள்மொழி வாசகரும் பொருளுணர்ந்து தேவாரம் பாடிய திருத்தலங்கள் கவனிக்க ஆளில்லாமல் தள்ளாடுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கொள்ளிடக்கரையில் உள்ள திருமழபாடிக்குச் சென்றிருந்தேன். ”மன்னே, மாமணியே, மழபாடியுள் மாணிக்கமே, மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே” – என்றெல்லாம் அப்பர்படியுள்ள பொன்னார் மேனியன் லிங்கமாக எழுந்தருளியுள்ள இடத்தில் எங்கேயாவது சரக்கொன்றை தென்படுகிறதா என்று பார்த்தேன். ஒன்றும் தட்டுப்படவில்லை. மாலை வேளையில் கூட அந்தச் சிவனை வணங்க ஆள் இல்லை. (வெளியூரிலிருந்து வந்த எங்களைத் தவிர) – மிளிர்கொன்றை என்றால் சரக்கொன்றை மலர்கள் என்று பொருள். சரக்கொன்றை மலர்கள் பொன்னிறமாயிருக்கும். ”பொன்னியின் செல்வன்” – என்று சோழர் வரலாற்றைக் காவியமாக எழுதிய கல்கி திருமழபாடி பற்றியும் மழவர்களின் வீரம் பற்றியும் குறிப்படத்தவறவில்லை. கோவிலுக்குரிய நிலம் எல்லாம் மழவர்கள் சாகுபடி செய்தாலும் சிவனுக்குப்படி அளப்பதாகத் தெரியவில்லை. புகழ்மிக்க ஒரு கோவில் பாழடைந்து பொலிவில்லாமல் காணப்பட்டது. கோவிலைச் சுற்றியும், கோவிலுக்குள்ளும் நந்தவனம் பசுமை இழந்துவிட்டது. கோவில் எழுந்த காலத்தில் இருந்த காடுகள் காணாமல் போய்விட்டன. திருமழபாடி திருத்தலம் அநேகமாக பிராமணர்களில் ஒரு பிரிவான ”மழலைநாட்டு பிரேச்சர்ணம்” மக்களின் குலதெய்வக் கோவிலாக விளங்கியிருக்கலாம். இம்மக்கள் இப்பகுதியை விட்டுக் குடிபெயர்ந்து இந்தியப் பெருநகர்களிலும், உலகமகாப் பெருநகர்களிலும் சிலர் திருச்சியிலும் வசதியாக வாழலாம். இவர்கள் திருமழபாடியின் புராதனப் பொலிவை மீட்டுயிர்ப்பது நன்று. திருவையாறு கோவிலுக்கும் திருமழபாடி கோவிலுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. கொள்ளிடத்தைக் கடந்தால் திருவையாறு. திருவையாறு வருபவர்கள் திருமழபாடிக்கும் வரவேண்டும் என்று ஐதீகம் உண்டு. தியாகராஜ ஆராதனை உற்சவம் திருவையாற்றில் கோலாகலமாக நடைபெறும். திருவையாறு வரும் சங்கீத வித்வான்கள் திருமழபாடி வந்து சென்றால் கூட இக்கோயில் புத்துயிர் பெறும்.

எஞ்சிநின்ற புதர்க்காடு ஒன்று பட்டுக்கோட்டைக்கு அருகில் செறுவாவிடுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் எஞ்சியுள்ள ஒரு விஷயம் சென்ற இதழில் இயற்கை அற்புதத்தின் ஒரு அம்சமாகக் குறிப்பிட்டுள்ள பாவம். சமயங்களில் சில குலவழிபாடுகள் காடுகளைப் பழுதுறாமல் காப்பாற்றியுள்ளன. அந்த ஊருக்குச் சென்று விசாரித்தபோது அங்கு வாழும் கள்ளர், ஆசாரி, சேர்வார், கோனார், பண்டிதர் (பரியாறி), தேவர் போன்ற பலசாதிகளுக்குரிய சாமிகள் உண்டாம். ஆகவே அங்கு மரத்தை வெட்டினால் தெய்வகுற்றம் என்று அம்மக்கள் நம்புவது உண்மையில் பகுத்தறிவுதானே தவிர மூடநம்பிக்கை என்று ஒதுக்குவதில்லை. இதுபோல் இந்தியாவின் வனப்பகுதிகளில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இமயமலைக்காடுகளில் வளர்ந்துள்ள தூத்வா என்ற வெள்ளை மல்பெர்ரி மரத்தை குறிப்பிட்ட பழங்குடிகள் வெட்டுவதில்லை. சில மரங்களை வெட்டுவது தெய்வகுற்றம் என்று ”மூடநம்பிக்கை” உண்மையில் அறிவியல் அடிப்படையாக உள்ளது. ஆழ்ந்த பகுத்தறிவுதான் என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

குலதெய்வக் கோவில்கள் எவை என்பதற்குரிய விடை அதாவது அவற்றின் வரையறைகள் குழப்பமானவை. குடும்பதெய்வம் வேறு. குலதெய்வம் வேறு. குடும்ப தெய்வம் என்பது எங்காவது ஒரு கிராமத்தில் அம்மனாகவும் இருக்கலாம். ‘கருப்பணசாமி’ போல் எதுவும் அய்யன் கோவிலாகவும் இருக்கலாம். குலதெய்வம் பெரிய கோவில்களாக இருக்கும். சில குலங்களுக்கு ஒரே கோவில் தெய்வமாயிருக்கலாம். உறவு சொல்லமுடியாது உதாரணமாக ”திருப்பதி வெங்கட்ரமண சாமி” பெருமாள் கோவில் என்றாலும் சில தமிழ் பிராமண அய்யர் சாதிகளுக்கும் குலதெய்வம். பெரும்பாலான கோனார், யாதவர்களுக்கு ‘ஸ்ரீரங்கம்’ குலதெய்வம். சில குடும்பங்களை விசாரித்தால் 2,3,4, ஊர்களில் உள்ள கோவில் சாமிகள் குலதெய்வங்களாகக் கும்பிடலாம். நடைமுறை வாழ்வில் தெய்வங்களைக் கற்பனை வடிவங்கள் என்று ஒதுக்கிவிடமுடியாது. பகுத்தறிவு என்பது காரணகாரியத் தொடர்புள்ளது என்று பொருள் கொள்வோம். அப்படியெனில் தெய்வங்கள் கூட காரிய காரணத் தொடர்புள்ளதாகவே தோன்றுகிறது. ”உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் அது இல்லை.” என்று கண்ணதாசனைப் போல் நாமும் குழப்பிக் கொள்ளலாம்.

dscn2967இல்லாளின் தூண்டுதல் காரணமாக, நானும் எங்கள் குலதெய்வக் கோவில்களையும் சேர்த்து வேறு பல கோவில்களுக்கும் சென்று பாலாபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை என்று பல செய்வதுண்டு. மூலவர் மீது பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகம் செய்யும் சமயத்தில் அந்த சாமி பேசினால் எப்படியிருக்கும் என்று நான் யோசிப்பது உண்டு. கர்ப்பக்கிரகத்தை ஒட்டியுள்ள சிறப்பு தரிசனம் செய்யுமிடம் ஏ.சி.யாக்கப்பட்டிருக்கும். மூலவருக்கு ஏ.சி. இருக்காது! முல்லை வனநாதருக்குக் கோபம் வராதா? டேய், பாவி மனிதா, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நான் நல்ல வசதியுடன் வாழ்ந்தேன். எனது இடத்தைச் சுருக்கி ஒரு ஜன்னல் கூட வைக்காமல் இருட்டறையில் சிறைவைத்துவிட்டு என்மீது பால் கொட்டினால் என்ன? சந்தனால் பூசினால் என்ன? எனது உடல் எரிகிறது. என்னை ஒரு சிற்பி செதுக்கினான். அப்போது முல்லைவனம் மிகப்பெரியதாயிருந்தது. முதலில் என்னை ஒரு அரச மரத்தடியில் வைத்துத் திலகமிட்டார்கள். மாலையிட்டார்கள். விழுந்து விழுந்து கும்பிட்டார்கள். ஒரு முல்லைக் கொடி படர்ந்தது. என் உடலைத் தழுவிய வண்ணம் மரத்தில் ஏறியது. நாலுபக்கமும் நானூறு மரங்கள் இருந்தன. ஏசியாவது ஓசியாவது. காற்றோட்டமாய் வாழ்ந்த என்னை இருட்டறையில் பூட்டியுள்ளீர்களே, இது நியாயமா? என் மீது பாலை ஊற்றுவதால் நான் குளிர்ந்துவிடமாட்டேன். மூன்று பக்கமும் ஜன்னல் வையுங்கள். நந்தவனக் காற்று என்மீது வீசட்டும். என்னைச் சுற்றிப் பழையபடி நானூறு மரங்களை நடுங்கள். ஜன்னல் வழியாவது நானும் பார்க்கிறேன். நான் பகுத்தறிவுடன் தான் பேசுகிறேன் என்றார் முல்லைவனநாதர்.