சுகாவின் நட்சத்திரம் பார்த்தல் கிளறிய சில நட்சத்திர நினைவுகள்

news

சுகா

சொல்வனம் வந்தவுடன் முதலில் படிப்பது சுகாவின் கட்டுரையாகி விட்டது. நெல்லை வாழ் மனிதர்களின் இயல்பான அப்பாவித்தனங்களை, சின்ன சின்ன சந்தோஷங்களை, வியப்புக்களை, சிறிய பெரிய மனதுகளை சுகாவின் எழுத்துக்கள் அபாரமான நகைச்சுவை உணர்வுடன் ரசிக்கக் கூடிய சித்திரங்களாக அளிக்கின்றன. பொதுவாக திருநெல்வேலி போன்ற சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் வாழும் மனிதர்களின் உலகமே மிகச் சிறியது, எளிமையானது. சின்னச் சின்ன சம்பவங்களும், நிகழ்வுகளும் அவர்களின் வாழ்க்கையின் மறக்க முடியாத முக்கியமான தருணங்கள் ஆகி விடுகின்றன. பிறரிடம் சொல்லிச் சொல்லி நினைவு கூறக் கூடிய அவர்களது வாழ்வின் முக்கியமான பகுதிகளாகி விடுகின்றன. சினிமா நட்சத்திரங்கள் மட்டும் அல்ல எந்தப் பிரபலங்களையுமே அருகிலோ நேரிலோ பார்ப்பதோ, பேசுவதோ அவர்களுக்கு ஒரு விதமான வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாத கிளர்ச்சியையும் பசுமையான நினைவுகளையும் அளிக்கின்றன. உலகம் முழுவதும் பிரபலங்களையும் சினிமா நட்சத்திரங்களையும் கண்டு வெறித்துப் பார்க்காத அதிசயக்காத அவர்களைக் காண நேர்ந்ததைப் பற்றி பேசாத மக்கள் இல்லை எனலாம். சுகாவின் ‘நட்சத்திரம் பார்த்தல்‘ எனது நட்சத்திரம் பார்த்த நினைவுகளையும் கிளறி விட்டன. ஒரு காலத்தில் எங்கள் ஊருக்கு நாதஸ்வரம் வாசிக்க வந்து அதிகாலை வரை நாதஸ்வரம் வாசித்த காருகுறிச்சி அருணாச்சலத்தைக் கண்டு அருகில் இருந்து பேசிய அனுபவத்தை இன்னும் எங்கள் ஊர் தாத்தா பாட்டிகள் கண்கள் விரியச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது பேசப் பேச அலுக்காத விஷயம்.

தினமும் மாலையில் எங்கள் ஊர் ரயில் நிலையத்தின் வேப்பமரத்தின் அடியில் எங்கள் சபை கூடும் பொழுது நாங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது எங்கள் நண்பன் ஒருவனை. அவன்தான் எங்களுக்கு அப்பொழுது ஹீரோ. நாங்கள் எல்லாம் ஏரோப்ளேனை வானத்தில் பார்ப்பதுடன் சரி, சிறு வயதில் எப்பொழுதாவது 15 கிமீக்கு அப்பால் இருக்கும் விமான நிலையத்திற்கு வேகாத வெயிலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய் மத்தியான 12 மணிக்கு வந்து போகும் ஒரே ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தூரத்தில் வேலிக்கு அந்தப் பக்கம் நின்று பார்த்ததோடு சரி. வானத்தில் விமானம் பறந்து போனால் நின்று நிதானமாக அது கண்ணில் இருந்து மறையும் வரை வேடிக்கப் பார்த்த காலம் அது. ஆனால் அந்த நண்பனோ தினமும் விமானத்தில் பறப்பவன். கொரியர் சர்வீசில் வேலை. தினமும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் போய் தபால்களைக் கொடுத்து விட்டு அடுத்த ப்ளைட்டிலோ ரயிலிலோ கிளம்பி மதுரைக்கு வருவது அவனது வேலை. இன்னிக்கு யார் கூட வந்தா தெரியுமா என்பான், நாங்களும் அந்நாளையப் பிரபலங்களை அடுக்கி முடித்தவுடன் ”இன்னிக்கு என் பக்கத்து சீட்டில பாரதி ராஜா பாத்துக்க” என்பான், மறுநாள் அதுவே பாக்யராஜாக மாறி விடுவார், அடுத்த நாள் மூப்பனார் பக்கத்து சீட்டில் இருப்பார், இன்னொரு நாள் ராதிகா கையெழுத்து போட்டுக் கொடுத்திருப்பார். இப்படி நாங்கள் அவன் மூலமாக அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் பிரமுகர்களையும் மானசீகமான நெருக்கத்தில் கண்டு ரசித்திருக்கிறோம். சினிமா ரசிகனான அவன் கிளிஞ்சல் படம் பார்த்து விட்டு காதலியின் பெயரை கையில் ப்ளேடால் வெட்டிக் கொண்டான் கடைசியில் பெயர் நிற்கவில்லை. தோலில் சிக்சாக்காக தையல் மட்டும் நிரந்தரமாக நின்று போனது.

கல்யாணப் பரிசு புகழ் ஜெமினி கணேசனை நேரில் பார்த்த கதையை என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நூறு தடவையாவது என்னிடம் சொல்லி புளங்காகிதம் அடைந்திருப்பார்.

“நம்ப மொட்டையரசு மலைக்கு அந்தப் பக்கமா காலங்காத்தால வெளிக்குப் போய் கொண்டிருந்தேன் பாத்துக்க. அப்பத்தான் ஒரு சிகரெட்டப் பத்த வைச்சிட்டுக் குத்த வச்சிருப்பேன். அப்ப பாத்து ஒரு ப்ளைமவுத் கார் சர்ரென்று வந்து ரோட்டில ப்ரேக் போட்டு நிக்கிது. கார் கண்ணாடிய இறக்கிட்டு கூலிங் க்ளாஸ் போட்ட ஒருத்தரு இங்க கொஞ்சம் வாப்பான்னு கூட்டாரு. கூட்டாரா? நானும் ஓடிப் போய் கிட்டக்க போய் பாத்த நம்ம ஜெமினி. எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல. அட நம்ப கல்யாணப் பரிசு ஜெமினிப்பா. நீ நம்ப மாட்டே பாத்துக்க. அப்படியே சார் நீங்க ஜெமினில்லான்னு கேக்கலாம்னா வாய் எழும்ப மாட்டிங்கு. அவரு ஏர்ப்பொர்ட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டாரு நான் எப்படி வழி சொன்னேன்னே தெரியலை அவரையே பார்த்துக்கிட்டு நிக்கிறதுக்குள்ள கார் வேகமா போயிருச்சு பாத்துக்க, சொன்ன நீ நம்ப மாட்டே”

ஒரு முறை திருச்சியில் இருந்து மதுரை வந்து கொண்டிருந்த பொழுது பக்கத்து சீட்டில் ஒரு சினிமா பிரபலம் உட்கார்ந்து வந்தார். தமிழ் சினிமா உலகிலேயே அதிகமான படங்களில் அவர்தான் நடித்திருப்பார். என்னடி முனியம்மா உன் கையிலே ஒரு மையி என்று ஒரு பாட்டு கூடப் பாடியிருக்கிறார். நடராஜன் என்று நினைக்கிறேன். எந்த பெரிய வேடத்திலும் நடிக்காமலேயே அனைத்து படங்களிலும் வெறும் தலையை மட்டும் காட்டியே தமிழ் சினிமா பார்ப்பவர்கள் மனதில் நிலையாக இருப்பவர். பஸ் முழுவதும் அனைத்துத் தலைகளும் அவரை வியப்புடன் வெறித்துப் பார்ப்பதும் திரும்புவதும் குசு குசுவெனப் பேசிக் கொள்வதும் மீண்டும் திரும்பி வெறித்துப் பார்ப்பதும் அடுத்த முன் சீட்டுக்காரர்களை அழைத்து தங்களது நட்சத்திரக் கண்டு பிடிப்பைச் சொல்லும் பெருமையுமாக பஸ் முழுவதும் பரபரப்பாக இயங்கியது. பின் சீட்டுக்களில் இருந்தவர்கள் கூட முன்னால் வந்து வேடிக்கை பார்த்து விட்டுச் சென்றார்கள். டிரைவரும் கூட அடிக்கடித் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே பஸ் ஓட்டினார். எனக்கோ அவர் எங்காவது மோதி விடுவாரோ என்ற பயம். எல்லோரும் நடிகருடன் என்னையும் சேர்த்து வேடிக்கைப் பார்க்க நான் கிடந்து நெளிய, என் முன் சீட்டுக்காரர் துணிவை வரவழைத்து நடிகரிடம் “சார் நீங்க அந்தப் படத்தில இந்த சீன்ல வருபவர்தானே?” என்று கேள்வி கேட்க, நான் ஆமாம் அவரேதான் இவரு இப்படி வந்து பக்கத்தில் உட்கார்து பேசுங்க என்று அவரை அழைத்து என் சீட்டில் உட்கார வைத்து விட்டு பாதுகாப்பாக பல சீட்டுக்கள் நகர்ந்து விட்டேன்.

சாமிக்கண்ணு என்றொரு நல்ல நடிகர் சிலுக்குடன் ஒரு படத்தில் நடித்ததன் மூலம் திடீர் பிரபலம் ஆனவர். மற்றபடி பாலு மகேந்திரா படங்களில் எல்லாம் நடித்திருப்பார். அருமையான நடிகர். அவர் ஒரு கோவில் நகரைச் சேர்ந்தவர். கோவில் வாசலில் வெத்திலை, பாக்கு பழம் விற்கும் அவரைப் போலவே தோற்றம் அளிக்கும் அவரது சகோதரரது கடையில் உட்கார்ந்திருப்பார். அவர் வீடு தியேட்டரில் இருந்து வரும் பாதையில் இருக்கும். சரியாக அவர் நடித்த படங்கள் தியேட்டரில் ஓடும் பொழுது வீட்டு வாசலில் தெருவில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விடுவார். படம் பார்த்து வருபவர்களில் தெரிந்தவர்களிடம் எல்லாம் படம் எப்படி, தன் நடிப்பைப் பார்த்தீர்களா என்று விசாரித்துக் கொள்வார். இது நட்சத்திரம் நம்மைப் பார்க்கும் வகை. சின்ன பாத்திரமாக இருந்தாலும் அவர் நம் மனதில் பதிந்து விடுவார் என்னும் படியால் அனைவருக்கும் அவரை நினைவில் இருக்கும். கோவிலுக்குப் போகும் பக்தர்கள் கூட கடையில் உட்கார்ந்திருக்கும் இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டே வெறித்துப் பார்த்துக் கொண்டே போவார்கள்.

photowalk-192ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் நடிகர் பார்த்தல் முக்கியமான ஒரு திருவிழா. தமிழ் நாட்டில் என்றுமே பிரிக்க முடியாதது அரசியலும் சினிமாவும். இரண்டும் பாலும் நீரும் போல இரண்டறக் கலந்தது. சினிமா நடிகர்கள் வராமல் நம் தமிழ் நாட்டுத் தேர்தல் திருவிழாக்கல் பூர்த்தியடைவதில்லை. இந்திய ஜனநாயகத்தின் ஒரு தூண் போல சினிமா நட்சத்திரங்கள் ஆகிப் போயினர். சின்ன வயதில் நான் வளர்ந்த சிறு ஊரில் இருந்த புழுதி பறக்கும் திடலில்தான் அரசியல் கட்சிகளின் கூட்டம் எல்லாம் நடக்கும். அப்பொழுதுதான் எனக்கு நட்சத்திரங்களைப் பார்க்கும் பேறு கிட்டியது. தலையில் வெள்ளைக் கலரில் புசுபுசுவென்று தொப்பியுடன் வந்த சிவப்பான எம் ஜி ஆரைக் கண்ட பொழுது அவர் முன் தினம் பார்த்த வேட்டைக்காரன் சினிமாவில் வ்ந்தது போல இல்லாமல் இருந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது. அவருடன் கூட வந்தவருக்கு சிறுவனான என்னை விட்டு யாரோ மேடையில் தூக்கி விட்டு மாலை போட வைத்தார்கள். அப்புறம் அவர் பெயர் அண்ணாத்துரை என்று என் மாமா சொன்னதாக நினைவு.

எம்ஜிஆரை அருகில் சென்று பார்த்தேன், தொட்டுப் பார்த்தேன், என்ன சிவப்பு, ரத்தம் சுண்டி விடும், என்னா பளபளப்பு, என்ன ஒரு கலர், எப்படி இருந்தாரு தெரியுமா என்று வியக்கும் மக்களைத் தேர்தல் தோறும் காணலாம். அப்படி அவர்கள் எம் ஜி ஆர் பார்த்த அனுபவம் அவர்கள் வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாக அவர்கள் பேரன் பேத்திகள் வரை கதை கதையாகச் சொல்லப்படும். சாதாரணமாக சினிமாக்காரர்களை அவன் இவன் என்று விளிக்கும் நம் மக்கள் எம்ஜிஆர் என்று வரும் பொழுது கொஞ்சம் மரியாதை காட்டி விடுவது உண்டு. அவரும் பெயரிலேயே ஒரு ஆர் வைத்துக் கொண்டது அவரின் மரியாதைக்கு ஒரு கூடுதல் வசதி. எம்ஜிஆரைப் பார்க்க வரும் கூட்டம் வேறு எந்த நடிகருக்கும் வந்ததில்லை. அதனால் தம்பி ராமச்சந்திரா நீ முகத்தை மட்டும் காண்பித்தால் ஓட்டு தானாக விழும் என்று அண்ணாத்துரை சொன்னாராம். மக்கள் எதற்கு ஏமாறுகிறார்கள் என்பதை துல்லியமாகக் கணித்து முகத்தை விற்று ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். அடிபட்ட அவர் போஸ்டரைப் போட்டே ஆட்சியைப் பிடித்தார்கள். எம்ஜியார் தனிக் கட்சி துவங்கி ஊர் ஊராக வந்து தாமரை சின்னக் கொடியை ஏற்றிய பொழுது அவர் வருகிறார் என்று கேள்விப்பட்டு அக்கம் பக்கத்து வீட்டுப் கூட்டம் கூட்டமாகப் பெண்கள் புருஷன்களுக்குப் சாப்பாடு போட்ட எச்சிக் கை காயாமல், கொண்டைகள் பிரிந்து கூந்தல் பறக்க, அரக்கப் பரக்க கூட்டம் கூட்டமாக ஓடிய காட்சிகளை நான் என்றும் மறவேன். பல மணி நேரம் சோறு தண்ணீர் எதுவும் இன்றி ரோட்டோரங்களில் நூறுக்கணக்கான கிலோ மீட்டர்கள் இடைவெளியின்றி மக்கள் தொடர்ந்து நின்ற காட்சி அப்பொழுது நிகழ்ந்தது. அந்தக் காட்சி கமலாம்பாள் சரித்திரத்தில் பேயாண்டித் தேவனைப் பார்க்கச் சென்ற மொட்டைப் பாட்டியின் காட்சி போல. என் மனதில் நிரந்தரமாக உறைந்து போனவை. சினிமாவுக்குப் போன சித்தாளுவை நினைவுபடுத்தும் காட்சிகள். வேகாத வெயிலில் சிவாஜி சிவப்பு, பச்சை போன்ற கண்களைப் பறிக்கும் கலர்களில் பட்டு ஜிப்பா, சல்வார் அணிந்து வருவார். அவரைப் பார்க்க மொத்தம் ஒரு இருபது பேர்களே கூடியிருப்பதைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருக்கும்.

எம்ஜிஆர் சுகவீனப் பட்ட பொழுது அவருக்கு வந்த கூட்டம் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கும் வந்தது பின்னர் அது அவருக்குத் தொடரும் ஓட்டு வங்கியானது. பளீரென்ற ஃபோகஸ் லைட் வெளிச்சத்தில் அதை விட பளீரான ஜெயலலிதாவிடம் அபாரமான ஒரு வசீகரம் இருந்தது உண்மையே. ஆரம்ப காலத்தில் சினிமாவில் தோன்றியதை விட அழகாகவும் வசீகரத்துடனும் குண்டாகாத மெல்லிய உடலுடனும் இருந்தது எம் ஜி ஆரைக் காண முடியாதை குறையை மக்களுக்கு நீக்கி ஓட்டுப் போட வைத்தன. அவரைத் தேர்தல் கூட்டத்தில் காணச் சென்ற பொழுது அவர் என்ன பேசினார் என்பதை எவரும் கவனித்தார் இல்லை. ஜெயலலிதாவின் மிக அழகில் சொக்கிப் போய் இரட்டை இலைக்குத்தான் என் ஓட்டு என்று கூட வந்த என் நண்பன் சூளுரைத்தான்.

ஒருமுறை விமானத்தில் உடன் பயணித்ததொரு பிரபலம் தலையை நிமிர்த்தி தன்னை எல்லோரும் கவனிக்கிறார்களா என்பதை ஓரக்கண்ணால் அளந்து கொண்டே வானத்தில் மிதப்பது போல நடந்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவர் தரையில் நடக்கும் பொழுது கூட இரண்டு அடி மேலேதான் மிதப்பார் என்று நினைத்துக்கொண்டேன். அதே விமானத்தில் வந்த மம்மூட்டி என் லார்ஜ் சைஸ் அமெரிக்க பயணப் பெட்டிகளைத் தூக்கி கை வண்டியில் வைத்து உதவியதையும் மறக்க முடியாது. நட்சத்திரங்கள் எப்பொழுதும் வானத்தில் மட்டும் ஜொலிப்பதில்லை இப்படி மம்முட்டி மாதிரி தரையில் இறங்குபவர்களும் உண்டு.

இந்தப் பிரபலங்கள் எல்லாம் அவர்களுக்கும் மேலான பிரபலங்களைக் கண்டு வியக்காமலோ வேடிக்கை பார்க்காமலோ இருப்பதில்லை. பில் கிளிண்ட்டன் இந்திய பாரளுமன்றத்திற்கு வந்த பொழுது அவருடன் கை கொடுக்க நம் பாரளும்னற எம்பிக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து சேர்களையெல்லாம் ஏறிக் குதித்து அவருக்குக் கை கொடுக்க முயன்ற கண்றாவியையும் நாம் கண்டிருக்கிறோம். ஒபாமாவிடம் மன்மோகன்சிங் சின்னப் பிள்ளைகள் நடிகர்களிடம் கேட்டு வாங்குவது போல மறக்காமல் ஆட்டோகிராஃப் வாங்கி நம் பத்திரிகைகளின் கிண்டலுக்கு சமீபத்தில் ஆளானார். ஒபாமா ஜனாதிபதியாவதற்கு முன்பாகவே அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க வழிந்து கொண்டு நின்ற வை.கோபாலசாமியின் போஸ் வேடிக்கையானது. தனக்குப் பின்னால் நடந்து போகும் ஒரு நடிகையை கழுத்துச் சுளுக்க வேடிக்கை பார்க்கும் சிதம்பரத்தின் படம் ஒன்றை சமீபத்தில் கண்டேன். ஆனால் பெரும் பிரபலங்களைக் கூட தனக்குத் தெரியாத மாதிரி பந்தா விடும் ஆட்களும் இருக்கிறார்கள். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கானை தனக்கு யாரென்றே தெரியாது அவரை எங்கும் எதிலும் தான் பார்த்ததேயில்லை என்று ஒரேயடியாகப் பதில் சொன்னவர் ஹாலிவுட் பிரபலம் மனோஜ் நைட் ஷியாமளன். வீட்டுக்குள் தமிழ் பேசும் அவருக்கு எப்படி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமான ஒரு நடிகரைத் தெரியாமல் போய் விட்டது என்பது தெரியவில்லை.

பிரபலமாக இருப்பதின் முக்கியமான சிக்கலே போகும் இடங்களிலெல்லாம் மக்களால் வெறித்துப் பார்க்கப் படுவதே. சினிமா நட்சத்திரங்கள் நம்மைப் போல சாதாரணமாக ஒரு கடைத் தெருவிற்குப் போய் வெண்டைக்காய் கத்திரிக்காய் வாங்கி வந்து விட முடியாது. நம்மைப் போல சாதாரணமாக தெரு முக்கில் இருக்கும் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள முடியாது. அவசரத்திற்கு ஓடும் டவுண் பஸ்ஸில் ஏறி விட முடியாது. சாமான்யர்கள் அன்றாடம் செய்யும் எந்த விஷயத்தையுமே நான்கு பேர்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்க்காமல் செய்து விட முடிவதில்லை. அது அவர்கள் பிராபல்யத்திற்குக் கொடுக்கும் விலை. சினிமா நட்சத்திரமாக இருப்பதே ஒரு காஸ்ட்லியான சமாச்சாரம். கடன் வாங்கியாவது டாக்ஸியில்தான் எங்கும் போக முடியும். சுகாவின் தெய்வு மாமா பார்த்து வியந்த டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் இந்த வீண் செலவு குறித்து புலம்பியிருந்தார். அப்படி அவர் நடந்து போனதைத்தான் தெய்வு மாமா பார்த்து வியந்திருக்க வேண்டும். இவர்கள் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் மக்கள் வேடிக்கை பார்க்கக் கூடி விடுகிறார்கள். ஒரு காலத்தில் தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியாகப் பேரழகியாகத் திகழ்ந்த நடிகை காஞ்சனா வயதான காலத்தில் கோவிலில் ஒதுங்கிக் கஷ்டப் படுகிறார் என்பது பல முன்னாள் இளைஞர்களின் இதயத்தைப் பிழிந்தது.

ஒரு கட்டத்திற்குப் பின்னால் அவர்களுக்குத் தங்களை வெறித்து வேடிக்கை பார்க்க நாலு பேர் இல்லாமல் போனால் வாழ்க்கையை வெறுமையாக உணரும் நிலைக்குத் தள்ளப் பட்டு விடுகிறார்கள். இந்த நடிகர்கள், நடிகைகள் எல்லாம் தங்கள் மார்க்கெட் முடிந்த பின்னால் என்ன ஆகிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தீராத ஒரு சந்தேகம். வானில் எரிந்து முடிந்து காணமல் போய் விடும் எரி நட்சத்திரம் போல இந்த சினிமா நட்சத்திரங்கள் காணாமல் போய் விட முடியாதே? சாதாரணர்கள் ரிட்டையர் ஆனாலோ வேலை போனாலோ வேறு வேலைக்குப் போகலாம். ஆனால் இவர்கள் அப்படி எங்கும் போய் வேலையும் பார்க்க முடியாது. மக்களுடன் கரைந்து போவதும் இயலாது. என்னதான் செய்வார்கள் இவர்கள் என்பது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியமான ஒரு விஷயமே. இதனால்தான் நம் ஊரில் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் வெளிநாட்டில் போய் வேறு வேலைகளில் செட்டிலாகி விடுகிறார்கள் என நினைக்கிறேன். அங்கே யாருக்கும் அவர்களைத் தெரியாது. இங்கு அமெரிக்காவில் ஒருமுறை ஒரு வாரகால தொழில்நுட்பப் பயிற்சிக்குச் சென்றிருந்த பொழுது என் அடுத்த சீட்டில் இருந்தவர் தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு முன்னாள் நட்சத்திரம். அவரால் இங்கு எளிதாக ஒரு மென்பொருளாளராக மாறி தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விட முடிகிறது. ஆனால் அவரால் இன்றும் கூட தமிழ் நாட்டுத் தெருக்களில் மக்கள் கூட்டம் பின் தொடராமல் நடந்து விட முடியாது. தமிழ் நாட்டைப் பொருத்தவரை ஒரு படத்தில் முகம் காட்டி விட்ட எவருமே நிரந்தர நட்சத்திரங்களே அவர்கள் வானிலேயே தங்கி விட வேண்டியதுதான்.

நட்சத்திர வாழ்க்கை என்பது சற்று வினோதமான வாழ்க்கைதான். ஆண்டவன சாதாரணர்களை சாமான்யர்களாகவே வைத்திருப்பதற்கு சாமான்யர்கள்தான். ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.