கலர்க் கனவுகள்

amudan1இரண்டு நாளைக்கு முன்பு அலுவகத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், எப்போதும் போல அமுதன் ஓடி வந்து என் மீது ஏறிக்கொண்டான். கையில் தந்தையர் தின வாழ்த்து அட்டை. நர்சரி ஸ்கூலில் அவன் கை அச்சை கொண்டு செய்தது. என் வாழ்நாள் பொக்கிஷம்.

– 0 – 0 –


நான் வரைந்த படங்களைப் பார்ப்பவர்கள், எப்படி வரையக் கற்றுக்கொண்டேன் என்ற கேள்வியை தவறாமல் கேட்பார்கள். எங்கள் குடும்பமே கலைக்குடும்பம் என்றோ, சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறைய கலை ஆர்வம் என்றெல்லாம் படம் போடாமல் சிரித்து மழுப்புவேன்.

trees_oil

எல்லோரையும் போல், கிரிக்கெட், காமிக்ஸ், குச்சி ஐஸ், சினிமா போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு. அம்மா மார்கழி மாதம் விடியற்காலையில் கோலம் போடும்போது, இழுத்த இழுப்புக்கு அப்பாவைப் போல கோலமும் வருவதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பேன். கோலம் போட்டு முடித்தபின் அதற்கு கலர்கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. என்ன வண்ணம் என்பதைத் தேர்ந்தெடுத்து கோலத்தில் கலர் கொடுப்பேன்.

“என்ன அழகா கலர் கொடுத்திருக்கான் பாருங்களேன்,” என்று அம்மா அப்பாவைக் கூப்பிட்டு காண்பிப்பாள்.

“பொம்மனாட்டி மாதிரி என்னடாது இது வேலை?” என்று அப்பா கண்டிக்காதது நான் செய்த அதிர்ஷ்டம்.

பள்ளி நாள்களில் ஓவிய வகுப்பு இருந்தால், அன்று சீதபேதியாக இருந்தாலும் லீவு போட மாட்டேன். டிராயிங் மாஸ்டர் வரைவதை ஆர்வமாகவும் பார்ப்பதில் அலாதி இன்பம். சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும்.

சரக்’ சரக்’ என்று கோடு போட்டு ஏதோ ஒன்றை நிமிஷத்தில் வரைந்துவிடுவார். அவர் வரையும் புள்ளி, கோடு, வளைவு எல்லாம் ஏதோ ஒன்றைக் குறிக்கும். வியந்து போவேன்.  இதை பின்நாளில் ஸ்ட்ரோக் என்று தெரிந்துக்கொண்டேன். ஸ்ட்ரோக் என்பது ஒருவருடைய கை எழுத்து போல என்ன வரைந்தாலும் மாறாது. மாருதி வரையும் கிழவிக்கும் குமரிக்கும் ஒரே மாதிரி கண்கள் முக ஜாடை இருப்பது, ம.செ சாமி படமும் மாமி படமும் ஒரே மாதிரி இருப்பது எல்லாம் இதனால்தான்.

டிராயிங் மாஸ்டர் சில சமயம் யாருடைய புத்தகத்தையாவது வாங்கி, கடைசிப் பக்கத்தில் எதையாவது வரைந்துகொடுப்பார். உடனே ஃபிரேம் போட்டு மாட்டிவிடலாம். ஒரு முறை அவர் என் நண்பன் புத்தகத்தில் வரைந்த மரமும், கீழே நான்கைந்தே கோடுகளில் புல் சாப்பிடும் மாடும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

என்றாவது ஒரு நாள் என் புத்தகத்தில் வரைவார் என்று  ஐந்தாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை காத்திருந்தேன். என் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் அவர் வரையவே இல்லை. அவரைப் போல வரைய வேண்டும் என்ற ஆசை என்னுள் வந்ததற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

காலெண்டர் பின்புறம் வெள்ளையாக இருந்தால் உடனே அதில் ஏதவது வரைய ஆரம்பித்துவிடுவேன். ஏதோ ஒரு மாசக் கடைசியில் காலெண்டர் ஷீட் கிடைக்க அதில் ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அனுமார் படம் வரைய ஆரம்பித்தேன். ஏ.பி.டி அனுமாரின் விஷேசம் பச்சை கலர். பச்சை தசைகள், பச்சை விரல்கள், பச்சை வால்… ஏன் அனுமாருக்கு உடம்பு முழுவதும் இருக்கும் ரோமங்கள் கூட பச்சைதான். இடுப்பில் இருக்கும் சிறிய பட்டுத் துண்டு மட்டுமே பிங்க் கலர். அந்தப் பச்சை என்னை ஈர்த்தது!  அவர் சஞ்சீவி மலையைத் தூக்குவதைவிட உடம்பு முழுவதும் பச்சையாக வரைவது எனக்கு ஒரு சவாலாக இருந்தது.

“அனுமார் மாதிரி இருக்கு பெருமாள் சன்னதில வெச்சுடு,” என்று சொல்லிவிட்டாள் பாட்டி.

அனுமாருக்கு பார்டர் எல்லாம் போட்டு கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் அறையில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலைகோத்து சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணையை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் கொடுத்த செந்தூரத்தை அந்த காலெண்டர் அனுமார் மீது தடவ புதிதாக அந்த அனுமாருக்கு ஒரு தேஜஸ் கிடைத்து, ஆஞ்சநேயர் ஆகிவிட்டார். பல வருடங்களாக இருந்த அந்தப் படம் வெள்ளை அடிக்கும் போது எங்கோ போய்விட்டது. ரொம்ப நாள் மலையைச் சுமந்தவருக்கும் ரெஸ்ட் வேண்டாமா?

எனக்கு இருந்த இந்த ஆர்வத்தைக் கவனித்த என் அப்பா, வீட்டுக்கு வரும் வாழ்த்து அட்டை மற்றும் பத்திரிகைகளில் வரும் ஓவியங்களைக் கொடுத்து பார்க்கச் சொல்லுவார். கொஞ்ச நாளில் பத்திரிகைகளில் வரும் படங்களை மட்டும் தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தேன். பத்திரிகையில் பல ஓவியர்கள் என்னைக் கவர்ந்தாலும், ம.செ இன்றும் என்னை வசீகரிப்பவர். சிவகாமி சபதம் கல்கியில் வந்த போது அவர் வரைந்த ஓவியங்களுக்காகவே சேகரிக்க ஆரம்பித்தேன். அடுத்த என்னைக் கவர்ந்தவர் ஜெ… என்கிற ஜெயராஜ். எப்படி புடைவைக்குள் ஜாக்கெட் தெரிகிற மாதிரி படம் போடுகிறார் என்ற ஆச்சரியம் இன்னும் எனக்குள் இருக்கிறது. பலமுறை முயற்சி செய்தும், அப்படி வரைவது மிகவும் கடினம் என்பதை புரிந்துகொண்டேன்.

பத்திரிகைகளில் வரும் படங்களின் மீது இருந்த கவனம், தீவாவளி மலரில் வரும் பெருமாள் படங்களின் மீது திரும்பியது. வழ வழ பெருமாள் படங்களை எப்படி வரைகிறார்கள் என்ற ஆர்வத்தில் பலரிடம் விசாரித்தேன். யாரோ ஒருவர் அவை எல்லாம் ஆயில் பெயிண்டிங் என்றார்.

அந்தக் காலத்தில் ஆயில் பெயிண்ட் எல்லாம் மெயின்கார்ட் கேட் பத்மா ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில் கிடைக்கும். நேராக அங்கே சென்று ஆயில் பெயிண்ட் செட் ஒன்று வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தேன். வந்த பிறகு சந்தேகம் வந்தது. வாட்டர் கலர் பெயிண்டை தண்ணீருடன் கலந்து அடிக்கலாம். ஆனால் ஆயில் பெயிண்ட்? சரி மண்ணெண்ணெயை கலந்து அடிக்கலாம் என்று கலந்து அடித்தால் வரைந்த படத்தைச் சுற்றி இந்தியா மேப் போல எண்ணெய் ஓடியது. அடுத்து இருக்கவே இருக்கிறது தேங்காய் எண்ணெய் என்று அதையும் முயற்சி செய்து பார்த்தேன். இப்போது படத்தைச் சுற்றி சின்னதாக இலங்கை மேப்.

ஆயில் பெயிண்டிங்கில என்ன வரைந்தே என்று அப்பா விசாரிக்க, நான் கலக்க முடியாமல் கலங்கி இருப்பதை பற்றி சொன்னேன்.

சில நாள்கள் கழித்து, “என் ஆபீஸ் கலீக் ஒருத்தரோட ரிலேடிவ் ஓவிய ஸ்கூல் மாஸ்டராம்; அவர்கிட்ட போய் கேட்டுப் பார்,” என்று ஒரு முகவரி கொடுத்தார். திருச்சி மரக்கடை பக்கம் இருக்கும் ஆத்திக்குடி மெஸ் அருகில் இருக்கும் கல்யாணி கவரிங் கடையின் இடது பக்கம் இருக்கும் சந்தில் சென்றால், இரண்டு கசாப்பு கடை வரும், மூன்றாவது கசாப்புக் கடையைத் தாண்டியவுடன் இருக்கும் அடுத்த சின்ன சந்தில் ஒரு சின்ன வீடு அவருடையது.

அங்கே போய், “எனக்கு ஆயில் பெயிண்டிங் கத்துக்கணும் சார்,” என்று நான் வாங்கிய ஆயில் பெயிண்டிங் செட்டை பெருமையாகக் காண்பித்தேன்.

அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, “உனக்கு வாட்டர் கலர் தெரியுமா?” என்ற கேள்வியை கேட்டார்.

“தெரியும்” என்ற என் பதிலில் அவர் அவ்வளவு திருப்தி அடையவில்லை போலிருக்கிறது. “நீ வரைந்த நல்ல வாட்டர் கலர் படத்தை நாளைக்கு கொண்டுவா பார்க்கலாம்,” என்று என்னை அனுப்பிவிட்டார்.

அடுத்த நாள் நான் வரைந்த சில வாட்டர் கலர் படங்களை பார்த்துவிட்டு எனக்கு ஒரு டெஸ்ட் வைத்தார்.

ஒரு வட்டத்தை வரைந்து அதில் ஏதவது ஒரு கலரை உள்ளே அடிக்க சொன்னார். நானும் அடித்தேன். பார்த்துவிட்டு, “இப்படி அடித்தால் கலர் தீர்ந்துவிடும்,” என்றார். பேப்பரின் பின்பக்கம் ஈரத்துக்கு இடுப்பு மடிப்பு போல ஆகியிருந்தது.

இன்னொரு பேப்பரை எடுத்து அதே மாதிரி ஒரு வட்டம் போட்டு, தூரிகையை எடுத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சூப் குடிப்பது போல தண்ணீரைக் கொஞ்சமாக உறிஞ்சி, மூடியில் ஒட்டியிருந்த வண்ணத்தை எடுத்து அடித்தார். ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் வண்ணம், கொஞ்சம் தண்ணீர் என்ற டயட்டால் பேப்பர் பின்பக்கம் மடிப்பு இல்லாமல் சிக்கென்று இருந்தது.

“இது மாதிரி கலர் அடிக்க முதல்ல கத்துக்க. அப்றம் என்கிட்ட வா. வாட்டர் கலர் தான் கஷ்டம். அதைத் தெரிஞ்சா ஆயில் பெயிண்டிங் ஈசி. வாட்டர் கலர் நீ நல்லா கத்துகிட்டதும் நானே ஆயில் பெயிண்டிங் பத்தி சொல்றேன்,” என்று அனுப்பிவைத்து விட்டார்.

பல மாதங்கள் வாட்டர் கலர் அடித்துப் பழகிக்கொண்டேன்.

திரும்பவும் ஒருநாள் அந்த முஸ்லீம் பெரியவரிடம் சென்று நான் வரைந்ததைக் காண்பித்தேன். அவர் என் வாட்டர் கலர் பாக்ஸை எடுத்து வரச் சொன்னார். அதைக் காண்பித்தபோது, “வெள்ளை கலர் ஏன் இவ்வளவு யூஸ் செய்திருக்க. வெள்ளை கலர் யூஸ் செய்யாம வரைய கத்துக்க,” என்றார்.

“எப்படி?”

“பேப்பர்ல இருக்கற வெள்ளையை அப்படியே வெச்சுக்க,” என்றார்.

சில மாதங்கள் கழித்து, வேறு சில படங்களை வரைந்து அவரிடம் காண்பிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லுவார். இப்படி இரண்டு வருடங்கள் ஓடியது. ஆனால் ஆயில் பெயிண்டிங் எப்படி என்ற தகவலை மட்டும் சொல்லவே இல்லை. நானும் கேட்கவே இல்லை.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் வந்த சமயம். கமல் கூலிங் கிளாஸ் போட்ட ஸ்டில் படம் பிரபலமாக இருந்தது. கண்ணாடிக்குள் இருக்கும் கண்ணை வரைந்து பார்த்தால் என்ன என்ற ஆர்வம் வர,  அந்த படத்தைத் தேடிக் கண்டுபிடித்து வரைய ஆரம்பித்தேன். முடித்தபின் கமல் போலவே இருந்தது.

உடனே அந்தப் படத்தைச் சுருட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினேன். படத்தைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். இங்கே எப்படி வரைந்தாய், அங்கே எப்படி வரைந்தாய் என்று கேள்விமேல் கேள்வி கேட்டார். சிறிது நேரம் கழித்து, “இந்தப் படம் 90% சரியா இருக்கு. நான் வரைஞ்சாலும் இப்படித்தான் இருக்கும்,” என்றவர், தன்னுடைய பேனாவில் ஓவியத்தின் மூலையில் என் பெயரை எழுதி “இனிமே நீ வரையும் ஓவியங்களுக்கு கீழே உன் பெயரை போட்டுக்கொள்” என்ற போது மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்து அவர் சொன்னதுதான் மேலும் ஆச்சரியமாக இருந்தது.
“நாளைக்கு வரும்போது ஆயில் பெயிண்டிங் பாக்ஸை எடுத்துகிட்டு வா!”

oil_water_color2

மறுநாள் ‘வார்னிஷ்’ மற்றும் ‘லின் சீட் ஆயில்’ இரண்டும் கலந்து ஆயில் பெயிண்டிங் செய்யலாம். சாதாரண பேப்பரில் செய்ய முடியாது. கான்வாஸ் அல்லது ஆயில் பெயிண்டிங் ஷீட் தேவை என்று ஐந்து நிமிஷம் கிளாஸ் எடுத்தார்.

வீட்டுக்குப் போகும்போது, அதை வாங்கிக்கொண்டு சென்றேன். ஏதோ ஒரு பெண் முகத்தை வரைந்து கலர் கொடுத்தேன். மறுநாள் பெண்ணின் உதட்டைத் தொட்டுப் பார்த்தால் கையில் லிப்ஸ்டிக் வண்ணம் ஒட்டிக்கொண்டது. ஒருவாரம்… ஒரு மாதம் ஆகியது; வண்ணம் காயவே இல்லை. திரும்பவும் அவர் வீட்டுக்குச் சென்றேன்.

“வரைஞ்சேன். காயவே இல்லை,” என்றேன்.

சிரித்துக்கொண்டு லின் சீட் எவ்வளவு எடுக்க வேண்டும் எவ்வளவு வார்னிஷ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த அளவுகளைச் சொன்னார். அதற்குப் பிறகு அழும் இந்தக் குழந்தை படத்தை வரைந்தேன். பெயிண்டிங் ஒரு வாரத்தில் காய்ந்துவிட்டது. ஆனால் அந்தக் குழந்தையின் கண்ணீர் காயாமல் இன்னும் அப்படியே இருக்கிறது.

இந்த இடத்தில் நான் ஸ்டேட் பேங்க் சென்ற அனுபவம் பற்றியும் சொல்ல வேண்டும். அப்பா ஏதோ வேலை விஷயமாக வெளியூர் செல்லவேண்டிவர, என்னிடம் ஏதோ ஒரு சின்ன வேலையைக் கொடுத்திருந்தார். வங்கிக்கு சென்ற நான் மேனேஜர் அறையை யாரோ திறக்க உள்ளே சுவற்றில் இரண்டு புளிய மரம் இருக்கும் ஓவியத்தை முதன்முதலில் பார்த்தேன். அழகான பெண்களைப் பார்த்தால் வரும் நெஸ்கஃபே காதல் போல எனக்கு அந்த படத்தின் மீது வந்தது. யாராவது மீண்டும் மீண்டும் கதவைத் திறப்பார்களா என்று காத்துக்கொண்டே அறைவாசல் முன் உட்கார்ந்திருந்தேன். ஒவ்வொரு முறை கதவு திறக்கும்போதும் அந்தப் படத்தை பார்ப்பேன். காதல் அதிகமாகியது.

காதலர்கள் பிரபோஸ் செய்வது போல, சில மணி நேரம் கழித்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேனேஜர் ரூமுக்குச் சென்றேன்.

“உனக்கு என்னப்பா வேண்டும்?” என்பது பார்வையிலேயே தெரிந்தது.

“சார்…” என்று தயங்கி நின்றேன்.

“என்னப்பா வேண்டும்?”

“மேலே இருக்கற படத்தைத் தந்தீங்கன்னா, பார்த்து வரைஞ்சுட்டு திருப்பித் தந்துடறேன்” என்றதில் ஏதோ ஒரு கோடி ரூபாய் லோன் கேட்டது போல அதிர்ச்சியை அவர் முகத்தில் பார்க்கமுடிந்தது.

“இதைக் கழட்றது கஷ்டம், அதோட இல்லாம இது பேங் பிராப்பட்டி சும்மா கழட்டி கொடுக்க முடியாது,” என்றார்.

“இல்லை சார் ஒரு வாரத்தில திருப்பி தந்துடறேன். கோர்ட் பக்கம் தான் எங்க வீடு… “

“இல்ல தம்பி, இதை கழட்டிக் கொடுத்தாலும் எப்படி எடுத்துக்கிட்டு போவ?”

“ரிக்ஷா இல்லைன்னா ஆட்டோவில எடுத்துண்டு…”

“இப்ப ஆஃபீஸ் டைம். சாயங்காலம் வாயேன்,” தட்டிக்கழிப்பது போலத் தெரிந்தது.

மெதுவாக அறையைவிட்டு வெளியே வந்தபோது, “இருப்பா” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். சின்னதாக பெல் அடித்து, வெளியே இருக்கும் ஒருவரைக் கூப்பிட்டு அந்த பெயிண்டிங்கை கழட்டச் சொன்னார். தூசி, ஒட்டடை எல்லாம் தட்டி, துடைத்து என்கையில் கொடுக்க, பேங்க்கே என்னை வேடிக்கை பார்க்க, அதை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

என் புதுக் காதலியுடன் தனியாக ரூமுக்குள் சென்றேன். படத்தின் வலது ஓரத்தில் “Eswaran” என்று கையெழுத்து போடப்படிருந்தது. ஒரு வாரம் அந்தப் படத்தைப் பார்த்து வரையத் தொடங்கினேன். ஆயில் பெயிண்டிங்கில் ஒரு பிரச்சனை, உடனே காயாது. சில சமயம் ஒருவாரம் ஆகும் காய. அதனால் காயும் வரை காத்திருந்து பின்பு அதற்கு மேல் வண்ணம் அடிக்க வேண்டும். அதனால் இந்தப் படம் வரைய எனக்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. ஒவ்வொரு வாரமும் நான் மேனேஜரிடம் போய் எக்ஸ்டன்ஷன் வாங்கிக்கொண்டு வந்தேன்.

ஒன்றரை மாதம் கழித்து இரண்டு படத்தையும் எடுத்துக்கொண்டு சென்றேன். அவர் பார்த்துவிட்டு, “இதில எது நான் கொடுத்தது?” என்றார் சிரித்துக்கொண்டே!

அதற்கு பிறகு ஈஸ்வரன் வரைந்த எல்லா ஓவியங்களும் என் கண்ணில் பட்டன. சிலவற்றை நான் படியெடித்த மாதிரி வரைந்தேன். இவரின் ஓவியங்களை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இன்றும் புளிய மரத்தை பார்த்தால் எனக்கு ஈஸ்வரன் நினைவு தான் வரும்.

line_drawings2அதே போல மனோகர் தேவதாஸ் வரைந்த மதுரை கோட்டோவியங்கள், சில்பி வரைந்த கோபுரம், கோயில்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை.

‘மறுபடியும்’ ஒரு அனுபவம். பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ படம் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் டைனிங் டேபிள் பக்கம் தஞ்சை பெரிய கோவில் கோட்டோவியம் இருப்பதைப் பார்த்தேன். உடனே அதை வரைய வேண்டும் என்ற அடுத்த படலம் ஆரம்பம் ஆனது. உடனே பாலுமகேந்திரா வீட்டுக்குச் சென்று தவம் கிடந்து அந்தப் படத்தை வாங்கி வந்து வரைந்தேன் என்றெல்லாம் நினைக்காதீர்கள். யதேச்சையாக ஒரு ஸிராக்ஸ் கடையில் அதே படத்தைப் சில வருடங்கள் கழித்து பார்த்தேன். அதற்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

இந்த சமயத்தில் சுஜாதா எழுத்தின் மீது காதல் வந்து அவரையும் வரைந்தேன். திருச்சியில் ஒரு கூட்டதுக்கு வந்த சுஜாதாவிடம் நான் வரைந்த ஓவியத்தைக் காண்பித்த போது, “அட என்ன மாதிரியே இருக்கே!” என்று அதில் கையெழுத்து போட்டுத் தந்தார்.

sujatha_portraitஇப்படி வரைந்துதள்ளியபோது, நான் கல்லூரியில் படிக்கவும் செய்தேன் என்பதை மறந்துவிடாவேண்டாம். டிகிரி முடித்தபின் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். கோடம்பாகத்தில் இருந்த ஒரு பிரபலமான கணிப்பொறி நிறுவனத்தில் வேலை கேட்டுச் சென்றபோது, No Vacancy சொன்னவர்கள், என் பயோடேட்டா கடைசியில் ‘பொழுதுபோக்கு: பாட்டு கேட்பது, ஓவியம் வரைவது’ என்பதைப் பார்த்து என்ன ஓவியம் வரைவேன் என்று கேட்டார்கள். சொன்னேன். சரி நாளைக்கு எடுத்துக்கொண்டு வா என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். நான் வரைந்த சில ஓவியங்களை அடுத்தநாள் பார்த்துவிட்டு எனக்கு வேலை தந்துவிட்டர்கள். வேலை– கார்ட்டூன் படம் போடுவது!.

சில நாள்களில் கணிப்பொறி உதவியுடன் எப்படிப் படம் போடுவது என்று கற்றுக்கொண்டேன். விதி நீல நிறத்தில் வந்தது.  ஏதோ ஒரு கார்ட்டூனுக்கு சிகப்பு கலர் சட்டை போட்டேன். நான் போட்ட சிகப்பு சட்டையை நீல நிறத்துக்கு மாற்றச் சொன்னார் என் மேனேஜர். நான் முடியாது என்று அடம்பிடிக்க, அவர் தானே கலரை மாற்றிவிட்டார். லன்ச் பிரேக்கில் அப்பாவுக்கு ஃபோன் போட்டு, எப்படி ராஜினாமா கடிதம் எழுதுவது என்று கேட்க, அப்பாவும் ஃபோனில் டிக்டேட் செய்ய, அதை எழுதி என் மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து பொழுதுபோக்கு என்ற பகுதியை பயோடேட்டாவிலிருந்து எடுத்துவிட்டேன்.

பல வருடங்கள் கழித்து சுஜாதா அறிமுகம் கிடைத்தபின் அவர் எழுதிய ஸ்ரீரங்கத்துக் கதைகளைத் தொகுத்து, “சினிமால தனியா காமெடி டிராக் வரமாதிரி உங்க கதைகளுக்கு படம் வரையட்டுமா?” என்று கேட்டேன். மகிழ்ச்சியுடன் சம்மதித்து, ஆர்வமாக எதை எல்லாம் கவர் செய்யலாம் என்ற விவாதித்தது இனிய அனுபவம். ஸ்ரீரங்கம் கோபுரத்தின் கோட்டாவியம் தான் அவர் கணினியில் வால்பேப்பராக கடைசி வரை இருந்தது. யாராவது கணினியில் எதையாவது இன்ஸ்டால் செய்ய வந்தால் “அந்த வால்பேப்பரை மட்டும் டிஸ்டர்ப் செய்யாதீங்க” என்று சொல்லியது என் பாக்கியம்.

srirangam_pictures

“கதைகளில் அடிக்கடி வரும் ரங்கு கடை எங்கே இருக்கிறது?” என்ற கேள்விக்கு வரைபடம் வரைந்து காண்பித்தார்.

ஸ்ரீரங்கம் சென்று ரங்கு கடையைப் படம்பிடித்தபோது, கடைக்கு உள்ளே இருந்தவர் என்னிடம், “உங்களை சுஜாதாதானே அனுப்பினார்?” என்று கேட்டார்.

“எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“இந்தக் கடையை மெனகெட்டு வேற யார் சார் படம் எடுக்கப் போறாங்க?”

– 0 – 0 –

என் அப்பாவிடம் வெளிநாட்டு வாட்டர் கலர் பென்சில் வேண்டும் என்று ஒரு முறை கேட்டேன். எவ்வளவு என்று கூட கேட்காமல் “பீரோவில் பணம் இருக்கு எடுத்துக்கொண்டு போய் வாங்கிக்கோ” என்றார்.

என் முதல் சம்பளம் வந்த போது “உன்னுடைய முதல் சம்பளம், நான் ரிடையர் ஆகும் போது வாங்கிய கடைசி சம்பளம்” என்றார். அவர் வாங்கிக்கொண்டுத்த அந்த கலர் பென்சிலின் விலை கிட்டத்தட்ட அவர் சம்பளத்தில் 15%.

என் ஓவியங்களை வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமையாக காண்பிப்பார். என் ஓவியங்களுக்குக் கடைசிவரை ரசிகராக இருந்தவர் அவர்தான்!.  தந்தையர் தினம் அன்று அமுதன் கொடுத்த முதல் ஆர்ட் அட்டையை பார்த்த பிறகு, இரண்டு நாள் கழித்து எழுதிய கட்டுரை இது. நான் கொஞ்சம் லேட்.

(இக்கட்டுரையிலுள்ள ஓவியங்கள் தேசிகன் வரைந்தவை. படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க அவற்றின் மீது க்ளிக் செய்யவும்).