அ.முத்துலிங்கம் சமீபத்தில் எழுதிய ‘படித்ததை எப்படி மறப்பது?’ என்ற கட்டுரை, நான் கொஞ்சகாலமாக யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்கும் என் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த புனைகதையாசிரியர்கள் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், கொள்கைகளுக்கும் அவர்கள் தங்கள் படைப்புகள் வழியே தங்கள் ஆளுமையாகப் பிரதிபலித்துக் கொள்ளும் விஷயத்துக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பது புரியாத புதிர்தான்.
கத்தி போலக் கூர்மையாக இறங்கக் கூடிய அரசியல் புனைவுகளுக்கும், சமூக அங்கதங்களை எழுத்தாக்குவதிலும் என்னை பிரமிக்க வைத்த வி.எஸ்.நைபால், சொந்த வாழ்க்கையில் தன் மனைவியிடம் ஒரு பொய்யராகவும், குரூரமானவராகவும் நடந்து கொண்டிருக்கிறார். தன் படைப்புகளில் பெண்களின் ஆளுமைகளை மிகவும் தீவிரமான, கனமான பாத்திரங்களாகச் சித்தரிப்பவர், தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி நடந்து கொள்கிறார். அப்படியென்றால் அவர் பெண்களைப் பற்றி தீவிரமாக முன்வைத்ததெல்லாம், வெறும் ’எழுத்துக்கலை’ என்ற தொழில்நுட்பத்தையல்லவா?
சரி, இந்த எழுத்தாளர்களும் மனிதர்கள்தான். மனிதர்களுக்குரிய பலவீனம் இருந்தே தீரும், அவர்களை ஒழுக்கசீலர்களாகப் பார்ப்பது முட்டாள்தனம் என்ற தர்க்கம் ஒன்றும் இருக்கிறது. சில எழுத்தாளர்கள் அவற்றை ஒத்துக் கொள்கிறார்கள், சிலர் அவற்றை மறைத்து இறுதிவரை தங்களை உத்தமர்களாக முன்னிருத்துகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட ‘எழுத்துக்கலை’யில் தேர்ந்த, ஆனால் பாதி உண்மை – பாதிப்பொய் என செலக்டிவாகத் தங்கள் பார்வையை முன்வைத்து படைப்புகளாக்கிவிடும்போது, அவர்கள் படைப்புகளை வெறும் நுட்பத்துக்காகவும், இலக்கியத்தன்மைக்காகவும் படிக்கும்போது ஆழ்மனம் விழித்து நுண்ணரசியலை கவனித்தபடியே இருக்கிறது. பொதுவில் பெண்ணியம் பேசிய பூவாஹ், புரட்சி பேசிய சார்த்தர் இருவரும் இணைந்து, தங்கள் எழுத்துகளை நம்பித் தங்களை நாடி வந்த இளம்பெண்களைச் சூறையாடியதைக் குறித்து மைத்ரேயன் திண்ணையில் எழுதிய கட்டுரை வேறு எக்கச்சக்க மனசஞ்சலத்தைத் தருவதாக இருந்தது. எதையும் நம்பவைக்கும் திறன் படைத்த சரளமாகக் கைவரும் எழுத்துக்கலையோடு சேர்ந்த அடிப்படை நேர்மையற்ற செலக்டிவான எழுத்து, ஆழ்ந்த அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. பூவாஹ்ஹை நம்பி மோசம் போன இளம்பெண்களை நினைத்துக் கொள்கிறேன்.
இதனாலேயே இப்போதெல்லாம் ஓர் எழுத்தாளரின், முக்கியமாக புனைகதைகள் (fiction) எழுதுபவரின் வாழ்க்கையைக் குறித்துத் தெரிந்துகொள்வதைக் கொஞ்சம் தயக்கத்துடனே தவிர்த்து வருகிறேன். ஆனால் அவர் இறப்பின்போது சுற்றிச்சுற்றி எழுதப்படும் அஞ்சலிக்கட்டுரைகளைப் படிக்காமலிருப்பதையும் தவிர்க்க முடியவில்லை.
அப்படி சென்றவாரத்தில் நான் அதிகம் தெரிந்து கொண்டது போர்ச்சுகீசிய எழுத்தாளர் ஜோசே சாரமாகோவைக் குறித்து.
அவர் எழுதிய ‘பார்வையின்மை’ (Blindness) என்ற ஒரு நாவலைப் படித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த உலக நாவல்களில் அதுவும் ஒன்று. சாரமாகோ குறிகளில் நம்பிக்கையில்லாதவர். நிறுத்தற்குறி, காற்புள்ளி, அரைப்புள்ளி, உரையாடலைக் குறிக்கும் மேற்குறிகள் என எதையுமே தன் எழுத்தில் அவர் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் தயவு தாட்சண்யம் பார்த்து காற்புள்ளியை உபயோகித்திருக்கிறார். பத்தி பிரித்தல் என்ற கொடும்பழக்கத்திலும் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அவராகப் பார்த்து சோம்பல் முறிக்கக் கையை உயர்த்தினால்தான் உண்டு. அந்த இடங்களிலெல்லாம் போனால் போகிறது என்று ஒரு வரி இடைவெளி இருந்தது. விஷயம் புரியாமல் படிக்க ஆரம்பித்தபோது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் புத்தகத்தை லேண்ட்மார்க்கின் ஆடிக்கழிவுத் தள்ளுபடியில் வாங்கியிருந்தேன். 750 ரூபாய் கெட்டி அட்டை புத்தகத்தை 99 ரூபாய்க்குத் தள்ளி விட்டிருந்தார்கள். இத்தனை சல்லிசாகக் கிடைத்ததால் புத்தகத்தில் நிறுத்தற்குறிகளோ, பத்திகளோ இல்லாமல் இருப்பது ஏதோ பதிப்புப் பிழைதான் என்று கொஞ்சநாள் நினைத்துக் கொண்டிருந்தேன்.
பிறகொருமுறை சாரமாகோவைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் வேண்டுமென்றே இப்படி எழுதுகிறார் என்று தெரியவந்தது. இந்த வடிவத்தை அவர் போர்ச்சுகீசிய நாட்டுப்புறக் கதைகளிலிருந்து எடுத்துக் கொள்கிறார் என்றும், நிறுத்தற்குறிகளையும், உரையாடல் குறிகளையும் உபயோகிப்பதை அவர் நாட்டுப்புற வழக்கத்துக்கு எதிரான நவீன நிலைப்பாடாகக் கருதுகிறார் என்றும் தெரியவந்தது. மேற்கொண்டு அப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். கதை இன்னதென்று சொல்லப்படாத ஒரு ஊரில், இன்னதென்று சொல்லப்படாத நாட்டில், இன்னதென்று தெரியாத காலகட்டத்தில் நடைபெறுகிறது. வெகு சில இடங்களில் கதை நடைபெறும் நாடு போர்ச்சுகல் என்று யூகிப்பதற்கான சில குறிப்புகள் இருந்தன. நாவலின் கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் கிடையாது. அவர்கள் குணாதிசயங்கள் வழியாகவே குறிப்பிடப்படுகிறார்கள். டாக்டரின் மனைவி, கார் திருடன், முதல் குருடன், கருப்புக்கண்ணாடி அணிந்த பெண் இப்படி. எழுத்துக்குறிகளில் வேண்டுமானால் சாரமாகோவுக்கு நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கலாம், புனைவுக் குறியீடுகளில் (symbols) அவருக்கு நிறையவே நம்பிக்கை இருந்திருக்கிறது. கதை அதிபுனைவு (fantasy) முறையில் பல குறீயீடுகள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஓர் ஊரில் திடீரென்று கண்பார்வையைப் பறிக்கும் ’குருட்டுநோய்’ தொற்றுநோய் போல எல்லோருக்கும் பரவுகிறது. அரசாங்கம் பயந்துபோய், வேறு யாருக்கும் பரவாமல் இருக்க பார்வை பறிபோனவர்களை ஒரு கொட்டடியில் அடைத்து வைக்கிறது. அவர்களைப் பாதுகாக்க சில காவலர்களும் நியமிக்கப்படுகிறார்கள். காவலர்களும் ஒவ்வொருவராகக் கண்பார்வையைப் பறிகொடுக்க, அவர்களுக்கு அது பெரும் பீதியைக் கிளப்புகிறது. அரசோ பார்வை பறிபோனவர்களுக்கு எளிய மருத்துவ உதவிகளைக் கூட மறுக்கிறது. பார்வையற்றவர்களுக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை செய்த ஒரு மருத்துவருக்கும் பார்வை பறிபோகிறது. அவரும், அவர் மனைவியும் பிற பார்வையற்றவர்களோடு சேர்த்து கொட்டடியில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் மருத்துவரின் மனைவிக்கு மட்டும் அந்தத் தொற்றுநோய் ஒட்டவில்லை. அவர் ஒருவரால் மட்டும் எல்லோரையும் பார்க்க முடிகிறது. அதை அவர் ரகசியமாக வைத்துக் கொள்கிறார்.
அதனால் அவருக்குத் தன்னோடு சேர்த்து அடைக்கப்பட்டிருக்கும் பிறரைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு ஏற்படுகிறது. பார்வை பறிபோனவர்கள் கடுமையான மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள்; தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். சுகாதாரம், நல்ல உணவு என்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கீழ்த்தரமான பைத்தியக்கார விடுதியைப் போல அந்த கொட்டடி மாறுகிறது. இச்சூழலில் பார்வையோடு இருக்கும் ஒரே ஒரு ஆளான மருத்துவரின் மனைவி தானும் குருடாகிவிட்டால் நன்றாக இருக்கும் என ஏங்க ஆரம்பித்துவிடுகிறார். பார்வையற்றவர்களும், மருத்துவரும், அவர் மனைவியும் ஒரே குடும்பமாகத் தங்களை உணருகிறார்கள். கொட்டடியைக் காவல் காத்துக்கொண்டிருந்த சொற்ப காவலர்களும் அதீத மன அழுத்தத்தில் பலரைக் கொன்றுவிட்டு ஓடிப்போகிறார்கள். கிடைத்துக்கொண்டிருந்த கொஞ்சம் உணவும் கிடைக்காமல் போக, பொறுக்க முடியாத பார்வையற்றவர்கள் சிறையை உடைத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள். வெளியே வந்தபிறகுதான் நாட்டில் யாருக்குமே பார்வையில்லை எனத் தெரிய வருகிறது. தங்கள் உண்மையான குடும்பமெல்லாம் எங்கோ சிதறிப்போய், அவர்களுக்குள்ளாகவே தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். டாக்டர், அவர் மனைவி, இன்னும் சில பார்வையற்றவர்களோடு இணைந்து ஒரு ஒழுங்கைக் கொண்டு வர முயலுகிறார்கள்; விதிகளையும், வழிமுறைகளையும் செயல்படுத்த யத்தனிக்கிறார்கள். அப்போது எப்படிப் பார்வை போனதோ, அதே போல திடீரென்று ஒரு நன்னாளில் எல்லோருக்கும் பார்வை கிடைத்துவிடுகிறது.
மிகவும் சிரமப்பட்டு முதல் சில பக்கங்களைத் தாண்டியவுடன், நாவலின் அந்த வடிவம் பழகிப்போய்விட்டது. அதன்பின் வேறெந்தத் தடங்கலும் இல்லாமல் விறு, விறுவென்று சுவாரசியமாகப் படிக்க முடிந்தது. திடீரென்று கவ்வும் பெருந்துயரம் எப்படி மக்களை அறமற்றவர்களாகவும், சக மனிதர்களை மதிக்காதவர்களாகவும் மாற்றும் என்பதையும், பல துன்பங்களுக்கு மத்தியில் சாதாரணமாக இருக்க நேரும் ஒருவரின் மனநிலையையும் வெகு சிறப்பாக வடித்திருந்தார் சாரமாகோ. இந்த நாவல் சாரமாகோவால் 1995-இல் எழுதப்பட்டது.
2008-இல் இந்த நாவலின் திரைப்பட வடிவம் வெளியிடப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் ‘City of God’ என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கிய பிரசீலிய இயக்குநர் ஃபெர்ணாண்டோ மெய்ரல்லஸ். இத்திரைப்படத்தைப் பார்த்து சாரமாகோ கண்கலங்கி, “நான் இதை நாவலாக எழுதியபோது எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேனோ அதைப் போலவே திரைப்படத்தைப் பார்க்கும்போதும் உணர்ந்தேன்” என்று சொல்கிறார். அதைக் கேட்ட இயக்குநரும் உணர்ச்சிவசப்பட்டு கட்டித் தழுவி கண்ணீர் சிந்துகிறார். (அந்த யூட்யூப் வீடியோவை இங்கே பார்க்கலாம்). சில விமர்சகர்களால் இத்திரைப்படம் சிலாகிக்கப்பட்டாலும், பெரும்பாலும் எதிர்மறை விமர்சனத்தையே சந்தித்தது இத்திரைப்படம். ‘உலகக் கண்பார்வையற்றோர் அமைப்பு’ இத்திரைப்படத்துக்கும், ஜோசே சாரமாகோவுக்கும் வன்மையான கண்டனங்களத் தெரிவித்தது. ‘கண் பார்வையற்றவர்கள் இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டது போல மிருகங்களைப் போலவும், காட்டுமிராண்டிகளைப் போலவும் நடந்து கொள்ள மாட்டார்கள்’ என்று போராட்டங்கள் நடத்தினார்கள். அதற்கு ஜோசே சாரமாகோவின் பதில்: ‘முட்டாள்தனம் பார்வையுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்றெல்லாம் வேறுபாட்டைப் பார்ப்பதில்லை’.
அதன்பின் சாரமாகோவின் ‘இரட்டை’ (The double) என்றொரு நாவலைப் படிக்க முயற்சித்தேன். இதுவும் ‘பார்வையின்மை’ நாவலைப் போன்ற அமைப்பிலேயே, குறிகளும், இடைவெளிகளும் இல்லாமல் இருந்தது. பலமுறை படிக்க ஆரம்பித்து சோர்வில் சில பக்கங்களிலேயே தோல்வியடைந்தேன். ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’ கட்டுரைத் தொகுப்பில் இந்திரா பார்த்தசாரதி இந்த நாவலை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். அவர் எழுதிய கட்டுரையைப் படித்தபோது, ஏதோ பொன்னியின் செல்வன், பிரதாப முதலியார் சரித்திரம் போல ‘இரட்டை’ நாவலை சரளமாகப் படிக்க முடிவது போல இருந்தது. கதையை என்றாவது ஒருநாள் முழுக்கப் படித்துவிட்டு, படிக்க முயற்சித்துத் தோற்றதால் எழுந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றிருக்கிறேன்.
’இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?’ என்ற கேள்வியும், சாத்தியமில்லாதவைகளின் சாத்தியமுமே தன் புனைவுகள் வழியாகத் தான் தொடர்ந்து தொட்டுப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் உலகம் எனச் சொல்கிறார் சாரமாகோ. இலக்கியத்தில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்தாலும், தன்னுடைய 45 வயதுக்கு மேல் தீவிரமாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்தது, 55 வயதுக்கு மேல் இன்னும் தீவிரமாகப் புனைவிலக்கியம் பக்கம் சென்றது, 60 வயதுக்கு மேல் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலம் உலகப்புகழ் பெற்றது, 75-ஆவது வயதில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றது போன்ற விஷயங்களை விக்கிபீடியாவிலிருந்தோ, இவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவிருக்கும் அடுத்த மாத சிறுபத்திரிகை கட்டுரைகளிலிருந்தோ தெரிந்து கொள்ளலாம்.
ஜோசே சாரமாகோ அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் எதிராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். தன்னை ஒரு தாராளவாத கம்யூனிஸ்டாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். தீவிர கடவுள் மறுப்பும், நிறுவன எதிர்ப்பும் இவரை இயல்பாகவே கத்தோலிக கிறுத்துவத்துக்கு எதிராகத் தள்ளியது. இயேசு கிறிஸ்துவை ஒரு தேவமனிதராகப் பார்க்காமல், எல்லா மனிதக் குறைகளும், மன உந்துதல்களும் கொண்ட சாதாரண மனிதராகச் சித்தரித்து, அவர் வரலாற்றை, “The Gospel According to Jesus Christ” என்ற நாவலாக எழுதினார். அது போர்ச்சுகலில் கத்தோலிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் வலதுசாரி அரசும் அந்தப் புத்தகத்தைத் தடை செய்ய முயற்சித்தது; பரிசுகளுக்கு அனுப்பக் கூடாது என்று தடை விதித்தது. அதனால் தன் மனைவியோடு ஒரு ஸ்பெயின் தீவுக்கு இடம்பெயர்ந்தார் சாரமாகோ. சென்ற வருடம் கூட பைபிளைக் குறித்த இவருடைய விமர்சனம் பெரும் கண்டனத்தைச் சந்தித்தது.
போர்ச்சுகலில் பல பத்தாண்டுகளாக நடந்த ஃபாசிஸ தேசியவாதத்துக்கு எதிராக இடதுசாரி இயக்கத்தில் இணைந்தார் சாரமாகோ. தன்னைக் கடைசி வரை கம்யூனிஸ்டாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். அதனால் ஆளும் வலது சாரி அரசின் அதிபர் சாரமாகோவின் இரங்கல் கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. இதனாலெல்லாம் இயல்பாகவே இவர் ஒரு நிறுவன எதிர்ப்பாளர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவத்தை விமர்சித்ததைப் போலவே சாரமாகோ யூதக்கோட்பாடுகளையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். 2003-இல் பிரேசிலில் நடந்ததொரு கூட்டத்தில், “இன அழிப்பு (holocaust) என்னும் நிழலில் பதுங்கியபடி இவர்கள் செய்யும் எந்தக் கொடூரமான விஷயத்தையும் நியாயப்படுத்த நினைக்கிறார்கள். அது அருவருப்பாக இருக்கிறது. தங்கள் பெற்றோர்களும், முன்னோர்களும் அனுபவித்த துயரத்திலிருந்து இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவேயில்லை” என்கிறார் சாரமாகோ. இவருடைய இப்படிப்பட்ட தடாலடியான பேச்சு உலகெங்கிலுமிருக்கும் யூதர்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. ஆனாலும் தொடர்ந்து பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வந்தார்.
போர்ச்சுகலில் 1974-ஆம் ஆண்டு வரை, கருத்துச்சுதந்திரத்தைக் கடுமையாக மறுத்துவந்த ஃபாசிஸ அரசு நடந்து வந்தது. அரசியல் கலவாத கவிதைகளையே அக்காலகட்டங்களில் சாரமாகோ எழுதியிருக்கிறார். 1974-இல் வலதுசாரி அரசை வீழ்த்தி கம்யூனிஸக் கட்சி ராணுவ ஆட்சியை சில மாதங்கள் நடத்தியது. அப்போது சாரமாகோவுக்கு ஒரு பத்திரிகையின் ஆசிரியராக வேலை கிடைத்தது. தன்னுடைய கருத்தோடு ஒத்துப்போகாத பிற எடிட்டர்களை, எந்த உறுத்தலும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கியிருக்கிறார் சாரமாகோ. அப்படி வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24. அப்பத்திரிகையை ஆளும் கம்யூனிஸ ராணுவ அரசின் பிரச்சார பீரங்கியாகவே நடத்தினார் சாரமாகோ. 1975-இல் கம்யூனிஸ ஆட்சி வீழ்ந்து, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அப்படி ஒரு சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த நாளை சாரமாகோ, “ஒரு இருண்ட நாள்” என்று அறிவித்தார்.
தன்னுடைய ‘பார்வையின்மை’ நாவலை, ‘அடக்குமுறையைப் பற்றிய என் விமர்சனம் இந்த நாவல். பல பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டி மேலும், மேலும் அவர்களை ஏழ்மையாக்குவதைக் குறித்த என் மன வருத்தத்தை என் நாவல் வழியே முன்வைக்கிறேன்” என்கிறார் சாரமாகோ. அப்படிப்பட்டவர் இரண்டு சர்வாதிகாரங்கள் மறைந்து ஒரு ஜனநாயகம் மலர்ந்த தினத்தை ‘இருண்ட நாளாக’ ஏன் பார்க்கிறார்? தான் அதிகாரத்தில் அமர்ந்த ஒரே ஒரு முறை (பத்திரிகையாசிரியர்), கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை ஏன் நெறித்தார்? தான் நம்பும் கொள்கைகளுக்காக எந்தவிதமான சர்வாதிகாரத்தையும் சகித்துக் கொள்ள ஏன் அவர் தயாராக இருந்தார்? தெரியவில்லை.
தன்னுடைய நோபல் பரிசு ஏற்புரையின் ஆரம்பப் பகுதிகளில் மிகவும் உணர்ச்சிகரமாகத் தன் தாத்தா, பாட்டியைக் குறித்து நினைவுகூர்ந்திருந்தார் சாரமாகோ. சாரமாகோவின் தாய்வழித் தாத்தா-பாட்டி சிறுவிவசாயிகள். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். மரங்களை நேசித்தவர்கள். சிறு வயதில் கிராமத்தில் அவர்களிடம்தான் வளர்ந்திருக்கிறார் சாரமாகோ. அந்த எளிய மனிதர்களை என்றென்றும் அழிக்கமுடியாத இலக்கிய பாத்திரங்களாக மாற்றுவதற்காகவே, தான் எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார் சாரமாகோ. “பக்கவாதம் வந்து சிகிச்சைக்காக நகரத்துக்குக் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன், முற்றத்திலிருந்த அத்தி மரம், ஆலிவ் மரங்களை ஒவ்வொன்றாகக் கட்டியணைத்து அழுது, விடைபெற்றுக் கொண்டார் என் தாத்தா. ஏனென்றால் தான் திரும்பி வரப்போவதில்லை, அவற்றைக் கடைசி முறையாகப் பார்க்கிறோம் என்று அவர் நன்றாக அறிந்திருந்தார். அப்படி ஒரு நிகழ்வைப் பார்த்தபின்னும் உள்ளத்தில் சலனம் ஏற்படவில்லை என்றால் உங்களுக்கு உணர்ச்சியே இல்லை என்று அர்த்தம்” என்று சொல்கிறார் சாரமாகோ.
அப்படிப்பட்ட உணர்ச்சிகரமான நிகழ்வை, மரங்களை நேசித்ததொரு விவசாயியை அருகிலிருந்து பார்த்தபின்னும், தன்னுடைய தாத்தாவைப் போன்ற ஆயிரக்கணக்கான கிராம விவசாயிகளை நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு, நகரத்து தொழிற்சாலைகளுக்கு இடம்பெயர்த்திய கம்யூனிஸ சர்வாதிகாரத்தைக் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல், கண்டும் காணாமலும் இருக்க சாரமாகோவால் எப்படி முடிந்தது?
இலக்கியப் படைப்புகளை படித்ததை எப்படி மறப்பது என்று யோசித்ததுபோய், எழுத்தாளர்களின் சொந்த வாழ்க்கையைக் குறித்துப் படித்ததை எப்படி மறப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.