ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று

carnatic-musician-bombay-jayashri-big-1ழ்வாரின் கிளரொளி இளமையொத்த தற்கால கச்சேரி மூட்டைகளில் வழக்கொழிந்துபோய்கொண்டிருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கு இன்றியமையாத அங்கங்களில் ஒன்று, ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக RTP.

ஒரு நூற்றாண்டிற்கு முன் ராகம் தானம் பல்லவி தான் கச்சேரியை தொடங்கியதாம். பல வேளைகளில் ஒரே RTPயே மொத்த கச்சேரியாகவும் வியாபித்து பரிமளிக்கும். ஆனால் இக்கால – முக்கியமாக, சென்னை டிசெம்பர் சீசன் – கச்சேரிகளை கவனித்தால், பெரும்பாலும் இப்படி அமைந்திருக்கும். 1 வர்ணம், 1 சப் மெயின், 1 மெயின் உருப்படி, 1 சொதப்பல் முயற்சி (புது ராகம், இல்லை கீர்த்தனை), 1 அபார முயற்சி (அந்த சீசனிற்கு கலைஞரின் உழைப்பு), 3 துக்கடா, 2 பஜன், 1 மங்களம் (ரசிகர்கள் எழுந்து செல்வதற்கான பின்னனி இசை) ஆகிய பத்துப்பாட்டு. இவ்வகை கச்சேரிகள் அனைத்து தர கர்நாடக ரசிகர்களையும் திருப்தி செய்யும், இரண்டரை மணி நேர, தலை கலையாத, நேர்வகிடு சமாச்சாரங்கள்.

நகர வாழ்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள இக்கச்சேரிகளில் விஸ்தாரமான இரண்டு மணிநேர ராகம் தானம் பல்லவியை எதிர்பார்ப்பது அறிவியல் துறைகளில் இந்தியாவிலிருந்தபடியே இந்தியர் நோபல் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானது. என்றாவதே நடக்கலாம்.

இத்தேய்மானம் ஒன்றும் புதிதல்ல. ஒருவிதத்தில் தற்கால சங்கீதகச்சேரி என்ற அமைப்பே அரியக்குடியார் ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கர்நாடக சங்கீத தேய்மானம்தான். இதனால் விஸ்தாரமாய் நுணுக்களை கவனித்து கேட்டு புரிந்துகொள்ளுமாறு மணிக்கணக்கில் ஒருசில கீர்த்தனைகளையும் ராகங்களை மட்டுமே பாடிவந்த முறை க்ஷீனித்தது என்பர்.

நாள் முழுக்க சில பாட்டுக்களே விஸ்தரித்து பாடி, நுணுக்கங்களை அனுபவிப்பதற்கான உல்லாச நேர அவகாசங்களும், சங்கீதக்கலையைத்தான் பொழுதுபோக அனுபவிக்கவேண்டும் என்ற தேவைகளும் தொழில்நுட்ப விழிப்புற்ற மக்களிடையே குறைந்து வருகிறது. சில பாட்டுக்களை மட்டும் பாடி, கர்நாடகசங்கீதத்தை கேட்கும் மக்கள் எண்ணிக்கையை போரடித்தே குறைக்கக்கூடாது என்றுதான், விஸ்தாரமான யானைக்கட்டி போரடித்தால் ரசிகர்க்கு மாளாது என்று துரித குதிரைகட்டி போரடிக்கப்பார்த்து, மூன்று நான்கு மணிநேர பலசரக்கு உருப்படிகள் அடங்கிய கச்சேரி என்று அரியக்குடியார் கொண்டுவந்தார்.

மேலும் சில மணி நேரங்களே பிடிக்கும் கச்சேரி முறையில் கலைஞர்கள் சங்கீதத்தை ஊர் ஊராய் சென்று வயிற்றுப்பிழைப்பாகச் செய்ய முடியும். மாதத்தில் பல கச்சேரிகள் செய்யலாம்.அதேபோல் இசை கேட்கும் ரசிகர்களும், குவித்து, பாத்திகட்டி சாம்பார்சாதத்தை மட்டுமே வெட்டி நாக்கு செத்துபோய் சாப்பிடுவதையே குறைத்துக்கொள்ளாமல், இலையில் பல பதார்த்தங்களை பார்க்கையில் பசி வளரும். சில புரியாத பதார்த்தங்கள் இருந்தாலும், புரிபவையும் இருப்பதால், விரும்பி பலமுறை சாப்பிடுவார்கள்.

இக்கச்சேரி அட்டவணையை எழுபது என்பதுவரையில் டெஸ்ட் மாட்சுகளாக விஸ்தரித்து ஆடிவந்தவர்கள், சமீபகாலங்களில் ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச் பாணி கச்சேரியை வழக்கொழித்து, ஒருநாள் ஆட்டமாக்கி, இப்போது ட்வெண்டி ட்வெண்டியில்தான் காசு புரள்கிறது, என்று சுருக்கியுள்ளனர். கச்சேரிகளை மட்டும் நம்பிப் பிழைப்பை நடத்தும் வித்வான் பாப்புலராக இருக்கவேண்டுமெனில் சில அநாவசியங்களை, அனுசரித்தல்களை இன்று செய்யத்தான் வேண்டும் என்பது ஒரு கூற்று. கூடவே சில அவசியங்களை தேவைக்கதிகமாய் செய்யாமல் போகிறார்கள். ராகம் தானம் பல்லவியை பாடாதது போல. (RTPஐ) அவாளே வேண்டாம்னுட்டா சார், அதுக்கு பதிலா துக்கடா செட் பாடிட சொல்லிட்டா என்று வித்வான்கள் கூறும் சால்ஜாப்பில் ஓரளவு உண்மையுமிருக்கிறது. சீசன் சமயத்தில் பல சபாக்களில், ராகம் தானம் பல்லவியை வித்வான் கச்சேரியின் அங்கமாய் விஸ்தாரமாய் பாடுவதற்கு, காரியதரிசிகள் முகம் சுளிக்கிறார்கள். வியாபார நேர விரயம் என்று.

ஆந்திராவில் பொதுவில் இப்படி இல்லையாம். இங்கு கச்சேரிகளில் நிச்சயம் பல்லவி பாடுகிறார்கள். ஒருவேளை டிசம்பர் சீசன் எனும் கமர்ஷியல் அளவுகோல் இல்லை என்பதாலா? இன்னொரு கூற்று ஆந்திராவில் கர்நாடக இசை கேட்கும் மக்கள் தமிழ்நாட்டைவிட கம்மி, ஆனால் சுத்தம்; சாஸ்திர இசை நீர்க்கடிக்கப்படுவதை விரும்புவதில்லையாம். பல்லவிகளும் இன்னமும் பிழைக்கிறது. சமீபகாலமாக நான் கேட்டுவரும் ஆந்திர பாடகர்கள் பந்துலராமா, எம்.எஸ்.ஷீலா, மண்டா சுதாராணி என்று அனைவரும், மேலேயுள்ள கூற்றை மெய்பிக்குமாறு, தங்கள் அனைத்து கச்சேரிகளிலும் பல்லவி பாடியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல கச்சேரிகளில், கூட்டம் சேர (இல்லை அடுத்தமுறை வர) அநேகரை திருப்திபடுத்தவேண்டும். இதற்காக கடினமான விஷயங்களை சற்று ஒதுக்கி, இசையையே நீர்க்கச்செய்கிறோம். இதில் முதலில் அடிபடுவது RTPயே. ஒன்று மொத்தமாய் தூக்கிவிடுகிறோம். இல்லை இடக்கு ராகத்தில் சிறு பல்லவியாய் திஸ்ர தாளத்தில் 20 நிமிடத்திற்குள் சுருக்க முடித்துவிடுகிறோம். வேண்டாவெறுப்புடன் தீபாவளி மருந்து சாப்பிடுவது போல.

மேட்டிமைவாதம் என்று ஆந்திராவை சாடுவதா, எளியோர்க்கு எளியோனாய் RTPஐயே பெரும்பாலான கச்சேரிகளில் தூக்கிவிடும் தமிழ்நாட்டை பாடுவதா.

கலைஞன் தேய்ந்தால், ”சிந்து பைரவி” உட்பட, சில காரணங்களே. கலை தேய்ந்தால் சமுதாயம் மொத்தமும் பொறுப்பே.

1965இல் ஆலத்தூர் வெங்கடேச ஐயர் கலாநிதியாக கௌரவிக்கப்படுகையில் ஆனந்தவிகடனில் பல்லவி என்றாலே கேண்டீன் பக்கம் ஒதுங்கிவிடும் ரசிகர்களை, தன் பல்லவிகளால் சபைக்கு இழுத்தவர் என்றவிதமாய் சிலாகித்திருந்தனராம். பல்லவி பாடினால் கேட்கமாட்டார்கள் என்று ரசிகர்களை முட்டாளாக்குவது, உழைக்க நேரமின்றி, பிழைக்கச் சொல்லும் நொண்டிச்சாக்கு. தற்கால கர்நாடக இசையின் டாப் டென் மோசடிகளில் ஒன்று (மிச்ச மோசடிகளை பிறகு தனிக்கட்டுரையாக்குவோம்).

*****

கட்டுரை மொத்தமும் இவ்வகையில் அங்கலாய்த்து, குறைபட்டுக்கொள்ளும் விமர்சனமாய் எழுதப்போவதில்லை. நல்லதை பல தடவை சொல்லலாம். இணையத்தில் அநேகமாக தங்காது. நல்லதல்லாதவற்றை சொல்லாமல் விட்டுச்செல்வது உத்தமம். சொன்னாலும் சுருக்கமாக சொல்லி தாண்டிச்செல்வது மத்தியமம். இப்படி செய்தாலும், நீ அன்று அப்படி குறை சொன்னியே என்று நினைவூட்டிக்கொண்டிருப்பது அதமம். இணையத்தின் சாசுவதத்தில் அதமம் கோலோச்சியிருக்கிறது என்றாலும், நம்பிக்கை வைத்து நல்லதை மட்டும் அதிகம் சொல்லுவோம்.

போதும் குறை. இப்போது நிரை.

ராகம் தானம் பல்லவி என்றால் என்ன? அறிமுகதளத்தில் விளக்குவோம்.

ராகம் தானம் பல்லவி – சுருக்கமாக RTP – கச்சேரியின் பிரதான அங்கம். இது கீர்த்தனை, அதாவது பெரிய பாட்டு, இல்லை. சிறு பாட்டு வரிகள் மட்டும் உடையது. பெயருக்கேற்றவாறு RTPயில் முதலில் எடுத்துக்கொண்ட ராகத்தில் ஆலாபனை செய்யப்படும். ஒரு ராகமாகவோ, பல ராகங்களகவோ இருக்கலாம். ஆனால் அனைத்தையும் விஸ்தரித்து ஆலாபனை செய்யவேண்டும். பாடுபவரும், பக்கவாத்ய வயலின் வித்வானும் ஆலாபனை கூறுகளை ஓரிருமுறை பரிமாறிக்கொள்வர்.

பேராசிரியர் சாம்பமூர்த்தி தன் இசைப்புத்தகத்தில் (South Indian Music, Book IV) ஆக்‌ஷீப்திகா (அறிமுகம்), ராகவர்தினி (விவரிப்பு), ஸ்தாயி மற்றும் மகரினி (முடிவுரை) என்று பலவகை ஆலாபனை வழிமுறைகளை கூறி, RTPயில் ஆலாபனை முக்கால் மணிநேரம் இருக்கலாம் என்கிறார். ஜி.என்.பி. காலத்தில் ஷண்முகப்பிரியா ராகத்தில் முக்கால் மணிநேரம் இருந்திருக்கிறது. இன்று இத்தெம்பு இள வித்வான்கள் பலரிடம் இல்லை. அப்படியே ஒரு 15 நிமிடம் உழைத்துப் பாடினாலும் ரசிகர்கள் சிலரிடமே ஒருமுகப்படுத்தி கேட்கும் தெம்பும் இருக்கிறது. தலை ஆடுவது நின்று, கால் ஆடி, பிறகு கை நடுங்கி, வாவ், ஃபுல் ஸெட் மா என்று எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொள்கிறார்கள். இல்லை தரஸ்தாயியில் ஆசுவாசிக்க பாடகர் சற்று மூச்சுபிடித்து நின்றால், அவசரமாய் கைதட்டி நடுக்கத்தை குறைத்துக்கொள்கிறார்கள்.

தஞ்சாவூர் எஸ் கலியாணராமன் நாட்டைகுறிஞ்சி ராகம் தொடக்கம் ஒலிக்கோப்பு

மேலே ராகம் ஆலாபனை தொடக்கம். நீர் திரையிசை மட்டும் கேட்பவராயினும், ஆலாபனை முதலடிb002b4dtre தொடங்கியதும் (இல்லை ஒரிருமுறை கேட்டதும்) ஆ, இது கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) மாதிரி இருக்கே என்று கண்டுகொண்டால், கர்நாடக இசைக்காதுகளை அமர்களாமாய் பெற்றிருக்கிறீர்கள். அடுத்த சீசனில் ஒரு முழுக்கச்சேரியாவது தைரியமாய் கேட்கலாம். ரசிப்பீர்கள்.

இப்படி ராகத்தை சில பரிச்சயமான, ஆதாரமான, பிடிகள் (ஸ்வரக்கோர்வைகள்) வைத்து உடனே கண்டுகொள்ளுமாறு ஆலாபனை முதலில் அறிமுகம் செய்யவேண்டும். இதைத்தான் ஆக்‌ஷீப்திகா (அறிமுகம்) என்பதில் நியதியாக்கியுள்ளனர்.

போதும்.அடுத்து தானம்.

தானம், ஆனந்தம் போன்ற சொற்களையும், அவ்வப்போது தானம்த, அனம்த, தானன்ன, தானம்ன என்ற சொற்களையும் வைத்துக்கொண்டு ராகத்தை விஸ்தரித்து பலவகை கால அளவிலும், கதியிலும் பாடுவார்கள். சஞ்சய் சுப்பிரமணியன் போன்றோர் இன்று சதானந்தம் போன்ற சொற்களையும் ஸ்வரக்‌ஷரமாக (ஸ – தானந்தம்) சேர்கிறார்கள்.

பல வகை தானங்கள் இருக்கிறன. சாம்பமூர்த்தி மானவ, அஸ்வ, கஜ, மயூர, மண்டூக என்று மிருகங்களின் பெயர்களுடைய தானங்களையும், சக்ர, வக்ர, மிஸ்ர, மாலிக, கம்பீர, வித்ய தானங்களையும் குறிப்பிடுகிறார். உதாரணமாய், சக்ர தானத்தில் வளையமாய் ஸ்வரங்களை கோர்த்து அதிவேகத்தில் தானம் செய்வதாம். பொதுவில் சௌககாலத்தில் ராகத்தை மெதுவாய் விஸ்தரித்து ஆலாபனை செய்திருக்கையில், மத்தியமகாலத்தில், அதாவது மிதவேகத்தில் தானம் செய்வது ஸொஸ்தமானது. தற்காலத்தில் வேதவல்லி இவ்வகை தானத்தில் கில்லாடி, இல்லை கில்லேடி.

எஸ்.பாலசந்தர் வீணையில் தானம் ஒலிக்கோப்பு

தானம் வீணையில் சுகிர்தமாய் சுநாதமாய் வரும். நாகஸ்வரம் சற்று தடுமாறும். மேலே ஒலிக்கோப்பில்b002b4fht2 எஸ்.பாலசந்தரின் காம்போஜி ராக மத்தியமகால (மிதவேகத்தில்) தானப் ப்ராபல்யத்தை கவனித்திருப்பீர்கள். இது தொடக்கமே. இப்படியே போய் வீணை வயலின் பொறிபறக்கும் தானக்கோர்வை பரிமாற்றங்களில், 15நிமிடம் கழித்து உச்சத்தில், மூச்சுவிட மறந்து, சீட்டின் நுனிக்கு வந்து எழுந்துவிடாமல் கெட்டியாய் பிடித்துக்கொண்டு… யாராவது சத்தமாய் இருமுவார். இப்போதெல்லாம் செல்போன் அடிக்கிறது. எடுத்தும் பேசுகிறார்கள் (நா கச்சேரில இருக்கேண்டி…) பெண்கள் ஒருகாலத்தில் தானம் செய்யாமல் அல்லது செய்யவிடப்படாமல் இருந்தார்கள். பிரபலமான பிருந்தா முக்தா போன்றோர் பெரிதாக தானம் பாடியதே இல்லை. இவர்கள் ஸ்வரகல்பனை செய்வதையே தவிர்த்தனர் என்றும் கூறுவர். ராகம் கீர்த்தனை, பதம் ஜாவளி என்று போய்விட்டனர். பெண்களுக்கு கணக்கு வழக்கு அறிவு கம்மி, இதெல்லாம் எதற்கு இவர்களுக்கு என்று ஒரு காலத்தில், கர்நாடகசங்கீதம் பாமரர்களுக்கு தேவையில்லை என்கிற மேட்டிமைவாதத்தின் நீட்சியாய் ஒரு உப முடக்குவாதம் பேசியிருக்கிறோம். செயல்படுத்தியும் இருக்கிறோம்.

எனக்கு தெரிந்து இதை உடைத்து தானம் பாடலாம், பெண்களும் RTP செய்யலாம் என்று காட்டியவர் டி.கே. பட்டம்மாள். ஆனால் இவரால் அனைத்து RTP வகையறாக்களுக்கும் முழுமையாக கைங்கர்யம் செய்யமுடியவில்லை என்றே கூறுவேன். பிறகு எம்.எல்.வசந்தகுமாரி, வேதவல்லி, சுகுனா புருஷோத்தமன் என்று பலர் ராகம் தானம் பல்லவியில் ஆதிக்கக் கொடி நட்டனர். இன்று தமிழ்நாட்டில் சௌம்யா, சுதா ரகுநாதன், வசுந்த்ரா ராஜகோபால் போன்றோர் நல்ல லய ஞானத்துடன், கையில் என்ன கடின தாளம் வேண்டுமானலும் நிற்கும் என்று காட்டி, அரிதான ராகங்களிலும் சமயம் அமைகையில் RTP செய்கின்றனர். உதாரணமாய், 2009 அகதெமி கச்சேரியில் சௌமியா, வர்தனி என்கிற அரிதான ராகத்தில் அருமையாக RTP செய்தார். ஆலாபனை ஒலித் துண்டுகளை கேட்டுப்பாருங்கள்.

சௌமியா வர்தனி ராகம் ஒலிக்கோப்பு.

ராகம், தானம், பிறகு பல்லவி. பொதுவாக இரண்டு வாக்கிய சாஹித்தியம் அல்லது பக்தி போன்ற ரஸங்கள் மிளிரும் சொற்கள். இதை முன்னர் ராகம் தானம் என்று விஸ்தரித்த ராகத்தில் மெட்டமைத்து, தாளம் அமைத்து பாடவேண்டும்.

பல்லவி என்றால் பதம் லயம் வின்யாசம் (ப-ல-வி) இவற்றின் கூட்டு என்பர். பதம் என்றால் சாஹித்தியம்25theftb-s_sowmya_vo_19348e அல்லது பாட்டு வரிகள். லயம் என்றால் என்ன தாளம், கால இடைவெளிகளில் பாடுகிறோம் என்பது. வின்யாசம் என்றால், கற்பனைவளஞ்செரிய ராகத்தையும், லய கணக்குகளையும் இசையாய் வெளிக்காட்டுவது.

பல்லவிகள் பலவகை. திரப்படப்பாடல்களில் வரும் முதல் இரண்டு வரிகள் அனைத்தும் பல்லவிகளே. கீர்த்தனைகளிலும் இவ்வாறே. RTPக்காக பிரத்யேகமாக பல்லவிகளும் உண்டு. அதீத, அனாகத எடுப்பு பல்லவி, கோபுச்ச பல்லவி, ஷட்கால பல்லவி, ராகமாலிகை பல்லவி என்று பலவகையாக பார்க்கலாம்.

பிரபலமான சதுர் ராகமாலிகை பல்லவியை கூறி இக்கட்டுரையை முடிப்போம். சதுர் என்றால் நான்கு; நான்கு ராகங்களில் அமைந்த பல்லவி. சிறப்பு, ராகங்களின் பெயர்களையே சாஹித்தியமாக, பாட்டின் வார்த்தைகளாக பொருள்பட அமைந்துள்ள பல்லவி.

‘சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு’ எந்த நான்கு ராகங்களில் இதைப்பாடவேண்டும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். இசைக்கலையின் சாஹித்திய கற்பனைத்திறனின் வெளிப்பாடு. அரியக்குடியாரின் இப்பல்லவியை விடியோ வழியே ஆடியோவாக கேட்டுமகிழுங்கள். விரிவாக இதையே அடுத்த பகுதியில் பார்ப்போம்.

பல்லவி பாடுகையில், இடையே நிரவல் (சாம்பமுர்த்தி, நிறவல் என்கிறார்), ஸ்வர கோர்வைகள், கணக்குகள், அனுலோமம், பிரதிலோமம் (இதைபற்றி விரிவாய் அடுத்த கட்டுரையில்) போன்ற ஸ்வர லய விற்பனங்களைக் கடந்து ராகமாலிகா என்ற நிறைவு பகுதியில் முன்கூறிய பல்லவியை பல ராகங்களிலும் தாளத்திற்கேற்ப பாடி முடிக்கவேண்டும். பிறகு பக்க வாத்தியங்களின் தனி ஆவர்த்தனம், முடிவில் பல்லவியை மீண்டும் ஷட்காலத்திலும் (அமைந்திருந்தால், இல்லை த்ரிகாலத்தில்) பாடி நிறைவுசெய்யவேண்டும்.

ஒழுங்காய் விஸ்தாரமாய் செய்தால் RTP மட்டும் குறைந்தது ஒன்றரை மணிநேரம் ஆகும். தேர்ந்த இசைக்கலைஞர்களுக்கு ஆங்காங்கே உற்சாகம் கரைபுரண்டால் தேர்ந்த ரசிகர்கள் இருக்கும் சபையில் இரண்டு மணிநேரம் போவதே ஒருவருக்கும் ஸ்மரனிக்காது.

*****

[இரண்டாம் பாகத்தில் பல்லவி பற்றி மேலும் விவரங்கள், மேலே உள்ள ராகமாலிகை பல்லவி விஸ்தாரமாக அறிமுகம்.]

aru-2010-profile-128அருண் நரசிம்மன் ஒரு ஆசிரியர். அறிவியலாளர். கலை ரசிகர். இணையத்தில் இவருடைய கட்டுரைகளை Ariviyal.info தளத்திலும், இவருடைய வலைப்பதிவிலும் படிக்கலாம்: http://ommachi.net


2 Replies to “ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று”

Comments are closed.