மகரந்தம்

பூனைக்குட்டி சித்து வேலை: இறந்தும் இறந்திடா இரண்டிலா பூனைக்குட்டி கதையை ஷோரிடிஞ்சர் சொன்ன போது க்வாண்டம் உலகின் முழுமையின்மையைத்தான் கதை சொல்லும் அறிவுரையாக நினைத்தார். இன்றைக்கு ஒரே “நேரத்தில்” இரண்டு இடங்களில் இருக்கும் துகள்கள் எல்லாம் கணித ஊகங்களைத் தாண்டி பயன்படுத்தளத்துக்கே வருவதாக சொல்கிறது இந்த அருமையான நியூ சயிண்டிஸ்ட் கட்டுரை. கட்டாயமாகப் படியுங்கள். அதற்காக ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பதாக சொல்லும் சாமியார்களையோ அல்லது அதற்கு அவர்களின் மார்க்கெட்டிங் எழுத்தாளர்கள் க்வாண்டம் விளக்கங்கள் கொடுத்தாலோ நம்பிவிடாதீர்கள்.

என்று பிரிந்தாய் தாயாதி என்று பிரிந்தாயோ:

இப்போது நியாண்டர்தல் சீசன் போலிருக்கிறது. இந்த மாத சயிண்டிஃபிக் அமெரிக்கன்-இந்தியா வில் நியாண்டர்தல்கள் குறியீட்டுப்பயன்பாட்டில் மானுடர்களுக்கு சரி சமமானவர்கள் என்று ஒரு கண்டுபிடிப்பும் அதனைக் கண்டுபிடித்தவரின் நேர்முகமும் வந்திருந்தது. (இந்திய எடிஷனில் பார்த்த விஷயம்தான்: இல்லையென்றால் யாராவது ‘சொல்வனமே அமெரிக்க வாடை அடிக்கிறது’ சொல்லப் போகிறார்கள்.) ஒரு வேளை நியாண்டர்தல் தனி இனமாக (species) இல்லாமல் மானுட வகையாகவே இருக்கலாமோ என்கிற எண்ணம் வருவதாக அவர் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது சர்வ நிச்சயமாக நியாண்டர்தல் மானுடப் பொது மூதாதையிலிருந்து 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கிளை பிரிந்து விட்டதாக சொல்லியிருக்கிறார்கள் அதாவது இதுவரை எண்ணியிருந்ததை விட 5 இலட்சம் ஆண்டுகள் முன்னதாக. ஆக – நியாண்டர்தல் தனி இனம்தான் அமானுட இனம்தான் என மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக வலியுறுத்துகிறோம். இந்த செய்தியை படிக்க இங்கே சொடுக்கவும்.

வௌவாலின் சிரசாசனம்: கொஞ்ச நேரம் சிரசாசனம் செஞ்சாலே கண் சிவப்பாகிறதே, தலையை என்னவோ செய்கிறதே, காலம்பூராவும் தலைகீழாகத்  தொங்கும் வௌவாலுக்கு எப்படி இருக்கும்? பாவம்… அட! ஒரு பையனுக்கு இப்படி சந்தேகம் வந்தால் எங்கேகேப்பான்? Why don’t bats get dizzy when they hang upside-down? Or do they? Year 5, Christopher Hatton School, London, UK இந்த கேள்விக்கு நீங்கள் உட்பட யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கிற பதில்களைப் படித்துப் பாருங்கள். சுவாரசியமாக இருக்கும். நியூ சயிண்டிஸ்ட் பத்திரிகையோட வெப் ஸைட்டில் இந்த அருமையான விஷயத்தைப் பார்க்கலாம்.

அண்டார்க்டிகாவில் விவசாயம்: அண்டார்க்டிகா என்ற பகுதியைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கு நீர் என்று தனியாகக் கிடையாது, ஏனெனில் உலகின் மிகக் குளிரான சில பகுதிகளில் இது ஒன்று. அங்கு எங்கும் கிட்டுவது பனிக்கட்டி. தரைப்பரப்பு முழுதும் பல மைல் உயர பனிக்கட்டிகளே அடுக்கப்பட்டிருக்கும் நிறைய சினிமாக்கள், ஆவணப்படங்களிலெல்லாம் இதைப் பார்த்திருப்பீர்கள், இங்கு வேறு விவரம் இதைப்பற்றிக் கொடுக்கத் தேவை இராது. அந்தப் பகுதியில் மனிதர் என்ன விளைவித்து எப்படிச் சாப்பிடுகிறார்? எல்லாவற்றையும் லாரி, ரயில், கப்பலில்தான் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமா என்றால் இல்லை. அங்கு தங்கி வருடக் கணக்காக ஆராய்ச்சிகள் செய்யும் விஞ்ஞானிகள் விதம் விதமான முறைகளில் தாவரங்கள், செடிகள், மலர்ச்செடிகள் எல்லாம் வளர்க்கிறார்களாம். எப்படி என்று படித்தால் மிகவுமே வியப்பாகத்தான் இருக்கும். இதோ அந்த விவரமெல்லாம்.

பலவருடங்களாக பற்றி எரியும் கரிச்சுரங்கம்: கரிச்சுரங்கங்களுக்குள் போகும் வாய்ப்பு நம்மில் எத்தனை பேருக்குக் கிட்டி இருக்கிறது? அங்கு வேலை செய்யும் மனிதர்கள் உண்மையிலேயே நாமெல்லாம் கோவில் கட்டி வைத்துக் கும்பிடத் தக்கவர்கள். சக மனிதருக்காக என்னென்னவோ துன்பம் பட்டு தம் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் அந்த வகைப் பாட்டாளிகளைப் பற்றிப் பெருவாரியான மனிதர் தம் வாழ்வில் ஒரு முறை கூட யோசிப்பாரா என்பது சந்தேகமே. அங்கு அடிக்கடி நிகழும் ஒரு பேரபாய நிலை எரிவாயுக்கள் தரையில் இருந்தோ, அடுக்குகளில் இருந்தோ திடீரென்று கசிந்து பெரும் அலையாக வரத் துவங்குவதுதான். ஒன்று அது பெரும் வெடி விபத்துபோல ஆகும் அபாயம் உண்டு. இல்லையேல் சுரங்கத் தொழிலாளரைக் கொல்லும். இல்லையேல் சுரங்கத்தின் பல அறைகளும் தீப்பிடித்து எரியத் துவங்கி அந்தக் கரிச் சுரங்கமே முழுதும் பற்றி எரியும். அதை அணைப்பது மிகக் கடினம். அமெரிக்காவில் ’சென்ட்ரலியா’ என்ற இடத்தில் ஒரு சுரங்கம் இப்படித் தற்செயலாகப் பற்றி எரியத் துவங்கி அணைக்கப்பட முடியாமல் 1962இலிருந்து எரிகிறதாம். அணைக்காமல் விட்டால் இன்னும் இரண்டு நூறாண்டுகள் எரியுமளவு இதில் கரிவளம் உள்ளது. இதுபற்றியும், இன்னும் இதே போல இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற பல நாடுகளிலும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் கரிச்சுரங்கங்கள பற்றியும் இந்தக் கட்டுரை பேசுகிறது.