ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை – 2

இக்கட்டுரையின் முதல் பாகத்தை இங்கு படிக்கலாம்

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த அங்காடித்தெரு

obama-marx1இப்படிப்பட்ட ரத்தப்புரட்சி இங்கிலாந்தின் நெசவாலைத் தொழிலாளிகளால் உருவாவது வரலாற்றின் கட்டாயம் என ஏங்கெல்ஸ் எக்களிப்புடன் எதிர்பார்த்தார். 1850களில் ஐரோப்பிய நகரங்களிலும் வர்க்கப்புரட்சி உருவாகும் என ஆரூடங்கள் எழுதி காத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அந்தப் புரட்சி இங்கிலாந்திலோ, ஐரோப்பிய நாடுகளிலோ வரவே இல்லை. 1840, 50, 60 என்று பல பத்தாண்டுகள் வந்து போயின. இங்கிலாந்தின் நெசவுத்தொழிலாளர்கள் ஆட்சியைக் கவிழ்க்கவோ ஆயுதப்புரட்சியில் ஈடுபடவோ முனையவேயில்லை. கடுமையான வாழ்நிலைகளைச் சகித்துக்கொண்டாலும், தொடர்ந்து படிப்படியாக உரிமைகளையும் வாழ்க்கை வசதிகளையும் அவர்களால் பெற முடிந்தது, அவர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. ஆயுதங்களோ ரத்தப்புரட்சியோ சாதிக்காததை பேச்சுவார்த்தையும், இங்கிலாந்து சமூகத்தில் வலுப்பெற்று வந்த ஜனநாயக மரபுகளும் அவர்களுக்கு ஈட்டித்தந்தன. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 1887-இல் ஏங்கெல்ஸ் ”மான்செஸ்டர் தொழிலாளர்களின் நிலை”யின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடுகையில் தற்போது நிலை மிகவும் முன்னேற்றமடைந்து விட்டதாகவும் தம் நூலில் காணும் விவரணைகள் இந்நிலையில் பொருந்தாது என்றும் குறிப்பிடுகிறார்.

ஆனால், 1890-களிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இங்கிலாந்தின் நெசவாலைத்தொழில் ஆட்டம் காணத்தொடங்கி விட்டிருந்தது. அமெரிக்காவின் கிழக்குக்கடற்கரைப்பிரதேசம் உலக நெசவுத்தொழிலில் பெரும் சக்தியாக வளர்ந்து விட்டிருந்தது. தொழிலாள அவலங்கள் மான்செஸ்டரிலிருந்து நியுயார்க்கிற்கு இடம்பெயர்ந்து விட்டிருந்தன.

நியூயார்க்கின் தையல் தொழிற்சாலைகள் புதிதாய் வந்திறங்கிய புலம்பெயர்ந்த ஐரோப்பியர்களுக்கு வேலையும் வாழ்க்கையும் தந்தன. மொழிதெரியாத புலம்பெயர்ந்த ஏழை ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்க சிற்றூர்களில் இருந்து வேலை தேடி வரும் மக்களுக்கும் உடனடி வேலை கிடைக்கும் ஒரே இடமாக தையல் தொழிற்சாலைகள் விளங்கின. ஆனால் அதற்கு விலையாக வாரத்தில் 7 நாட்களும் உழைக்க வேண்டியிருந்தது- ஒவ்வொரு நாளும் 14 மணி நேர உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டது. நியூயார்க்கின் தையல் தொழிற்சாலைகள் உழைப்புச் சுரண்டலின் உச்சமாக விளங்கின. சில நிமிடங்கள் தாமதமாய் வேலைக்கு வந்தாலும் ஒரு மணிநேர சம்பளம் வெட்டப்பட்டது. வேலை நேரத்தைக்குறைத்துக்காட்ட வேண்டி வேலை துவங்கிய முதல் இரண்டு மணி நேரமும் வேலை இறுதியின் கடைசி இரண்டு மணிநேரமும் கணக்கில் காட்டப்படாமல் சம்பளம் தரப்பட்டது. ஜன்னல்களற்ற அறைகளில் தையல் யந்திரங்களை இயக்கும் மனித யந்திரங்களாக மனிதர்கள் அடைக்கப்பட்டனர்.

உச்ச கட்ட உற்பத்தி காலங்களில் ஏழு நாட்களும் கூடுதல் நேர சம்பளம் எதுவும் இல்லாமல் உழைக்க வேண்டியிருந்தது. ”ஞாயிறு வேலைக்கு வராவிட்டால் திங்கள் வர வேண்டாம்” என்று நிர்வாகத்தின் போர்டுகள் கறாராக அறிவித்தன. பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவருக்கும் தையல் தொழிற்சாலைகள் வேலை தந்தன; அனைவரையும் பிழிந்தெடுத்தன. பத்து வயது சிறுவர் சிறுமிகள் துணிமூட்டைகளை முதுகில் பாரம் சுமந்தனர். அதோடு தத்தம் குடும்பங்களையும் சுமந்தனர். பஞ்சுத்துகள்கள் நிறைந்த தையல் ஆலைகளின் காற்றைத் தொடர்ந்து சுவாசித்த தொழிலாளர்கள் காச நோயால் பீடிக்கப்பட்டனர். ஐந்து வருடம் தொடர்ந்து இத்தொழிற்சாலைகளில் உழைத்த தொழிலாளர்களின் உடல்நிலை அடியோடு சீர்கெட்டது. ஆனாலும் தொடர்ந்து இந்தத்தொழிற்சாலைகளுக்கு மக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர்.

ஐரோப்பாவின் மதவாத அராஜகங்களில் இருந்தும், யூத வெறுப்பிலிருந்தும், கத்தோலிக்க-பிராட்டஸ்டண்ட் சண்டைகளிலிருந்தும், இடைவிடாத போர்களிலிருந்தும் தப்பித்து ஜனநாயகத்தையும் விடுதலையையும் நோக்கி, தம் சந்ததிகளுக்கு புதிய வாழ்வு வேண்டி அலை அலையாய் மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. அவ்வாறு வந்திறங்கிய அத்தனை கூட்டமும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளில் தங்களை நுழைத்துக்கொண்டனர். உலகில் எல்லா எளிய மக்களும் செய்வது போல, அடுத்த தலைமுறையின் நல்வாழ்வுக்காக முதல் தலைமுறை ஒன்று அயராத உழைப்பிற்கும் அநீதிக்கும் சுரண்டலுக்கும் தம்மை ஆட்படுத்திக்கொண்டது. அத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும் அமெரிக்காவின் ஜனநாயகமும் சாதாரண தனிமனிதக் குரல்களுக்குக்கூட கிடைத்த ஊடக வெளியும் ஒரு துடுப்பு போல அவர்களுக்கு இருந்தன. கரையேறும் நம்பிக்கையைத் தந்தன.

அநீதியும் சுரண்டலும் எக்காலத்திலும் இல்லாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஆனால் அவற்றை எதிர்த்து சமூகத்திலும், சட்டரீதியாகவும் குரல் எழுப்ப முடிகின்ற அரசியல் சூழல் அமைந்து விட்டால், அநீதியும் சுரண்டலும் அதிக காலம் ஓரிடத்தில் நீடிக்கவும் முடிவதில்லை. அப்படிப்பட்ட குரல் எழுப்ப இயலுகின்ற சூழல் உருவாக ஜனநாயகமும், சுதந்திர நீதித்துறையும், ஊடகங்களும் அவசியமானவை, இவை எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இயங்க முடிகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வலுப்பெறுகின்றது. வலுவான ஜனநாயகத்தில் அநீதியையும் சுரண்டலையும் அச்சமின்றி தட்டிக்கேட்க முடிகிறது. படிப்படியான இந்த வளர்ச்சியும் அது மக்களிடையே வளர்க்கும் சமூகப்பொறுப்பும் தைரியமும் நம்பிக்கையும் எல்லாவித சர்வாதிகாரத்திற்கும் — பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உட்பட – இயல்பாகவே எதிரானது. இதனால்தான் உலகெங்கும் கம்யூனிஸ ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை ஒடுக்குகிறார்கள்; ராணுவப்பின்புலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடுமையான அடக்குமுறையாலும் வன்முறையாலும், மக்களின் குரல்வளையை நெரிப்பதில் முதன்மை வகிக்கிறார்கள். (கம்யூனிஸம் மட்டுமல்ல, ஜனநாயகமற்ற எந்த விதமான மையப்படுத்தப்பட்ட மொத்த-அதிகார (totalitarian) அரசுக்கும் இது பொருந்தும்தான்).

நியுயார்க் தையல் தொழிற்சாலைகளின் சுரண்டலை எதிர்த்து அந்தத் தொழிலாளர்களே ஊடகங்களில் எழுதத்தொடங்கினர். இந்த அவலங்களை எதிர்த்து திரண்டவர்களில் பெண் தொழிலாளர்கள்- அதிலும் யூதர்கள்- முதன்மையானவர்கள். பல வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. ஊடகங்களும் அவற்றின் வழியே ஜனநாயக அரசியலின் கவனமும் இவர்களைத் நோக்கித்திரும்பத் தொடங்கியது.

நியுயார்க் தையற்தொழிற்சாலைக் கொடுமைகளின் உச்சகட்டமாக Triangle Shirtwaist Company– தொழிற்சாலை எரிந்து சாம்பலான நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர்கள் உள்ளே வந்ததும் தொழிற்சாலை வேலை நேரத்தில் வெளியில் சென்று காலத்தைக்கடத்துவார்கள் என்று காரணம் சொல்லி தொழிலாளர்களை உள்ளே அடைத்து வெளிப்புறம் தாளிடப்படும் வழக்கம் இருந்தது- இத்தனைக்கும் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் பெண்களும், சிறார்களும்தான். ஜன்னல்களை உடைத்துக்குதிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு அறையிலும் சுவர்ப்பகுதிகள் தையல் யந்திரங்களால் அடைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைக்குள் நெருப்பு பற்றிக்கொண்டதும் வெளியில் தப்பித்து ஓட முடியாமலும் ஜன்னல் வழியே குதிக்க முடியாமலும் உள்ளே வேலை செய்த 500 தொழிலாளர்களில் 146 பேர் எரிந்து இறந்தனர்.

இந்த நிகழ்ச்சி அமெரிக்காவையே அன்று அதிர்ச்சியில் உறைய வைத்தது. அமெரிக்காவில் வலுப்பெற்று வந்த நீதித்துறையும், ஜனநாயகமும், தொழிற்சங்கங்களும் நியூயார்க்கின் தொழிலாளர்களின் தரப்புக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவைக் கொண்டு சேர்த்தன. தொழிற்சட்டங்களில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இவை படிப்படியாக நியூயார்க் மட்டுமன்றி அமெரிக்கா முழுவதும் தொழிலாளர் குரலை வலுப்பெறச்செய்தன. தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேலை நேரமாக எட்டு மணி நேரம் என்று முதலில் நிர்ணயம் செய்யப்பட்டது முதலியத்தின் முன்னணி நாடென சொல்லப்படும் அமெரிக்காவில் என்பதில் ஒரு பாடம் உள்ளது. ஜனநாயகம், நீதித்துறை, சட்டம்-ஒழுங்கு ஆகியவை ஆரோக்கியமாய் செயல்படும் சூழல், இயல்பான முதலியம் செழித்து வளர அவசியம் என்பதுதான் அந்தப்பாடம்.

இயல்பான முதலியத்தின் விளைநிலம்

ஆனால் அமெரிக்காவின் இன்றைய முதலியம் இயல்பான முதலியமா என்பதையும் ஆராய வேண்டும். காலனியம் நேரடி ஆதிக்கத்தின் மூலம் சந்தைகளைக் கட்டுப்படுத்தியது. ஆப்பிரிக்க அடிமைகளை வைத்து பண்ணைகளில் பயிர் செய்தது; இந்தியா போன்ற நாடுகளை அடிமைப்படுத்தி கச்சாப்பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கியது. அடிமை மற்றும் காலனி நாட்டு மக்களின் கடும் உழைப்பை ஆயுத அராஜகத்தின் முனையில் தொழிற்புரட்சியின் எரிபொருளாக உபயோகப்படுத்திக்கொண்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பின், காலனி நாடுகளை நேரடியாக ஆள்வதற்குத தர வேண்டிய விலை அதன் மூலம் கிட்டும் வரவை விட மிக மிக அதிகமாகிப்போனது. ஜனநாயகப்பரவலின் விளைவாக மேற்கில் தார்மீகக்குரல்கள் வலுப்பெறத்தொடங்கின. இந்நிலையில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் காலனிய சுரண்டலை வேறு விதமாய் செயலாக்கத்தொடங்கின. அதாவது தம் ஆட்சி நிலங்களில் அடிப்படை உரிமையாக விளங்கும் விஷயங்களான- பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பிரச்சார உரிமை, குழும உரிமை- இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஜனநாயகம் என்ற பெருமக்கள் அரசுரிமை- ஆகிய அனைத்தும் மறுக்கப்படும் சர்வாதிகார நாடுகளுக்கு முன்னுரிமையும் காண்ட்ராக்டுகளையும் அளிக்கத் தொடங்கின!

இப்படிப்பட்ட அராஜக நாடுகளில் இன்று முன்னணியில் நிற்பவை மதவாத சவுதி அரேபியாவும், கம்யூனிஸ்டு சீனாவும். இவை இரண்டுமே இன்று வளர்ந்து பெரும் சக்தியாக நிற்பதற்குக்காரணம் ஜனநாயகம் மற்றும் நவீன முற்போக்கு சிந்தனைகளின் முன்னோடிகளான அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். மனித உரிமை, ஜனநாயகம் என்ற பல விஷயங்களை முன்னிறுத்தும் இந்த நாடுகள் இந்த விஷயங்களுக்கெல்லாம் எதிரான நாடுகளுடன் கைகோர்க்கின்றன- இதற்குப்பெயர் முதலியம் கிடையாது. ஏனெனில் இயல்பான முதலியம் அராஜகத்தால் உருவாவது இல்லை. அது மேலிருந்து கீழ்நோக்கி செலுத்தப்படுவது இல்லை. அது கட்டற்ற சந்தைப்பொருளாதாரம் (free market economy) சார்ந்தது. சமூக இயக்கத்தில் கீழிறுந்து மேலாய்ப்பயணிப்பது. அராஜகத்தால் உருவாகும் முதலியம் உடனடியாக அதன் அடிப்படை இயல்பான கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராகப் பிறழ்ந்து போகிறது.

இந்த முரண்நகையின் மூல வேர் முதலியத்தில் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் முதலியம் என்பது கட்டற்ற சந்தையைச் சார்ந்தது. காலனீயம், சவுதி அரேபியா, சீனா ஆகிய எதுவுமே கட்டற்ற சந்தை கிடையாது. எப்படி காலனீய இங்கிலாந்து அராஜகத்தையும் நிற வெறி அடிமைத்தனத்தையும் வைத்து செயற்கையான சந்தை ஒன்றையும் அதன் ஏகபோக நிர்வாகியாக தன்னையும் கட்டியெழுப்ப முனைந்ததோ அதேபோல அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும் சீனா போன்ற தேசங்களை (இந்தியா போன்ற ஜனநாயக தேசத்திற்கு எதிராக) முன்னிறுத்தி சலுகைகளும் ஏற்றுமதி கோட்டாக்களும் தந்து உற்சாகப்படுத்தி அமெரிக்கா வளர்த்தெடுக்கிறது.

மனித உரிமை, ஜனநாயகம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இந்தியா போன்ற ஜனநாயக தேசீயங்களுக்கெதிராக சவுதி அரேபியாவுடனும், சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் கைகோர்ப்பது என்பது முதலியத்தின் சுதந்திர சந்தைப்பொருளாதாரம் என்ற அடிப்படை இயல்புக்கே எதிரானது. மனித உரிமை என்ற பெயரில் இந்தியாவின் ஏற்றுமதியை கோட்டா வைத்து கழுத்தை நெரித்த அதே காலகட்டத்தில்தான் மனித உரிமை ”கொடிகட்டிப்பறக்கும்“ சீனத்திற்கும் பாகிஸ்தானத்திற்கும், பங்களாதேஷிற்கும் அமெரிக்கா, ஏற்றுமதி கோட்டாக்களை தாராளமாய்த் திறந்து விட்டது. கோட்டா கழுத்தறுப்பால் 1980-90களில் நடுத்தர, சிறு உற்பத்தியாளர்களின் நெசவாலைத் தொழில் பாதிக்கப்பட, அதனைத்தொடர்ந்த ஆட்குறைப்புக்கும் போனஸ் வெட்டலுக்கும் எதிராக கம்யுனிஸ்டு யூனியன்கள் வேலை நிறுத்தம் செய்ய, இருக்கும் வியாபாரமும் படுத்து, கொடிகட்டிப்பறந்த தென்னிந்திய நெசவாலைகளும் அதன் சார்புத்தொழிற்சாலைகள் பலவும் ஒரேயடியாய் நொடித்துப்போயின. இந்த சங்கிலித்தொடரில் எவ்வளவு நகைமுரண்கள் சிதறிக்கிடக்கின்றன பாருங்கள்:

– மனித உரிமை என்ற பெயர் சொல்லி இந்தியா ஏற்றுமதித்துறையில் ஓரங்கட்டப்பட்டது.

– சீனா, பாகிஸ்தான் போன்ற மனித உரிமை ”கோலோச்சும்” உன்னத நாடுகளுக்கு அமெரிக்க சந்தையின் கதவுகள் பெரிதாகத்திறந்து விடப்பட்டன.

– ஏற்றுமதி பாதித்த இந்திய நெசவாலைகள் ஆட்குறைப்போ, போனஸ் வெட்டலோ செய்தால் கம்யூனிஸ்டு யூனியன்கள் முழு அடைப்புப் போராட்டங்களிலும், பந்த்களிலும் இறங்கின.

– கம்யுனிஸ சீனாவிலோ ஸ்ட்ரைக்குகளும் பந்த்களும் தடை செய்யப்பட்டு ஆலை முதலாளிகளுக்கு குறைந்த விலையில் தொடர்ந்த உற்பத்திக்கு லேபர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

– உலகளாவிய மானுடம் பேசும் நம் கம்யூனிஸ்டுகள் இதைப்பற்றியெல்லாம் உள்ளூரில் வாய் திறக்கவேயில்லை.

சமூக முரண்களையும் பொருமல்களையும் கடுமையாய் ஒடுக்கும் ஜனநாயக/மனித உரிமை மறுப்பு என்ற அடித்தளத்தின் மீதுதான் சீனப்பெருவளர்ச்சி கட்டப்பட்டிருக்கிறது. தனிமனித சுதந்திரம் என்று மனித உரிமை என்றும் ஜனநாயக தார்மீகம் பேசும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சீனாவில் பணத்தைக்கொட்டி கடை போட அது தடையாகவில்லை. முதலியத்திற்கு அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரமான சந்தை (Free Market) ஆகிய விஷயங்களைக் காவுகொடுத்துதான் இந்த சங்கிலித்தொடரே ஆரம்பமாகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

உண்மையில் ஜனநாயகம் இல்லாத முதலியம் சரியான முதலியமே கிடையாது. வேறு வகையில் சொல்வதென்றால் முதலியத்திற்கு குறைந்த பட்ச அவசியம் ஜனநாயகம். ஜனநாயகம், முதலியத்திற்கு அவசியமான சந்தை மற்றும், தனியார் நிறுவனங்கள் சுதந்திரமாய்ப் போட்டியிடக்கூடிய சமதளப்பரப்பு (Level Playing Field) ஆகியவை உருவாக குறைந்த பட்ச சூழலைச் சாத்தியப்படுத்துகிறது. அதன் பின்னரும் பல குறைகள் இருக்கலாம், ஆனால் ஜனநாயகம் என்பது குறைந்தபட்ச அடித்தள அவசியம். அதுவே இயல்பான முதலியத்தின் செழிப்பான விளைநிலமாய் ஆகிறது.

ஜனநாயகம் என்பது படிப்படியாக ஒட்டுமொத்த நல நோக்கால் ஆற்றுப்படுத்தப்படுகிற நிலையை நோக்கி ஒரு பெரும் மக்கள் திரளை நகர்த்திச்செல்கிறது. மக்களின் எதிர்வினைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது. மெதுவாக என்றாலும் அரசு என்ற யந்திரம் மிகக்குறைந்த அளவு வன்முறை மூலம் மிகப்பெரியதொரு தேசிய சமூக பொருளாதார இயக்கத்தை ஒரே திசையில் முன் நகர்த்த முடிகிறது. ஜனநாயகமும் முதலியமும் ஆரோக்கியமான சமூக பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படை அம்சங்கள். குறைபட்டதாக இருந்தாலும் கூட ஜனநாயகம் இல்லாத நாடுகள் உற்பத்தி உறவில் பங்கு கொள்வது என்பது முதலியத்தின் இயல்புக்கே எதிரானதாகின்றது.

தொழிற்புரட்சி கால பெருவளர்ச்சியின் ஆதாரம் எங்கிருந்தது?

– கப்பல் கப்பலாய்க் கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகளின் கடின உழைப்பு;

– கச்சாப்பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கவும் அந்த விலையை கடும் வரிபோட்டு மீட்கவும் உதவிய காலனீய சுரண்டல்

– அதே நேரம் தன் நாட்டுப்பொருட்களுக்கு வரிச்சலுகை தந்து சந்தைகளில் பொருட்களுக்கு செயற்கையான ஒரு தேவையை உருவாக்கியது

ஆக, கச்சாப்பொருட்களின் உற்பத்தி விலையிலிருந்து விற்பனைக்கு வசதியாக சந்தை வரை அனைத்தையும் அராஜகத்தால் கட்டுப்படுத்தி உருவான செயற்கையாய் அமைப்பு கட்டற்ற சந்தைக்கும் இயல்பான முதலியத்திற்கும் எப்படி சரியான எடுத்துக்காட்டாக முடியும்? இதன் இன்றைய பரிமாணம்தான் கம்யூனிஸ சீனாவின் உற்பத்தித்திறனை அமெரிக்காவும் ஐரோப்பாவும் உபயோகப்படுத்திக்கொள்வது.

கவனியுங்கள்: இவை எதுவுமே முதலியத்தின் இயல்பான இயக்கத்தால் விளைந்ததல்ல. முதலியத்தின் அடிப்படை இயல்பைப் புரிந்து கொள்ள சிறு தொழில்களைப் பார்க்க வேண்டும். சொல்லப்போனால் முதலியத்தின் இயக்கம் அழுக்குப்படியாமல் காணக்கிடைப்பது ரோட்டோர தட்டுக்கடைகளில். மக்களின் தேவையையும் விற்பனையையும் லாபத்தையும் ஒருங்கிணைக்கும் இயல்பான ஒரு முதலிய வியாபார வட்டம் அது. ஓரளவுக்கு மேல் லாபத்தை ஏற்றினால் கூட்டம் குறையும். தரம் குறைந்தால் பக்கத்துத் தெரு தட்டுக்கடைக்குக் கூட்டம் இடம் பெயரும். அதே சமயம், பக்கத்துத் தெரு தட்டுக்கடைக்காரனை அடித்து விரட்டி விட்டு செய்யப்படும் வியாபாரத்திற்குப் பெயர் முதலியம் கிடையாது, அதற்குப்பெயர் அராஜகம். சர்வாதிகாரமும் அராஜகமும், முதலியத்தின் இயல்பான வளர்ச்சிக்கு முரணானவை.

அவலத்திலிருந்து வெளியேறும் வழியாகின்ற அங்காடித்தெருக்கள்

அவலத்தில் லாபம் காண முனையும் சுரண்டல் முதலியம் முதிர்ந்த ஜனநாயகத்தில் நிலைப்பதில்லை. 50 வருடங்களில் மான்செஸ்டர் தொழிலாளர் நிலை மாறியது ஏங்கெல்ஸின் வாழ்நாளாக்குள்ளாகவே அவர் கண் முன்னேயே ரத்தப்புரட்சி ஏதுமின்றி இது நடந்தேறியது. நியுயார்க் தொழிலாளர்களின் நிலையும் வாழ்தரமும் அதேபோல் ஜனநாயகத்தைப் பற்றுக்கோடாக்கி படிப்படியாக உயர்ந்தது. ஏழ்மையும் ஜனநாயக அமைப்புகள் வலுவற்றும் இருக்கும் இந்தியாவில் கூட, ஜனநாயக அரசியலையும், ஊடகத்தையும் கொண்டு தொழிலாளர்கள் குரலெழுப்ப முடிகிறது. உற்பத்தித் தயாரிப்புத்துறைகளில் இந்திய தொழிலாளர் நிலை தொடர்ந்து மேம்பட்டே வந்திருக்கிறது. 60-இன் இறுதிகளிலும் 70-களின் துவக்கத்திலும் காணப்பட்ட அளவு தொழிலாளர்- நிர்வாக பூசல்கள் இன்று இல்லை. (அந்தப்பூசல்கள் பலவற்றிற்கு தொழிலாளர் நிலை தாண்டி அன்றைய அரசியல் சித்து விளையாட்டுகளும் காரணமாய் இருந்து. இக்கட்டுரை அதைப்பற்றியதல்ல என்பதால் விட்டுவிடலாம்).

ஆனால் இந்த உரிமைகளும் அரசியல் ரீதியாய்க் குரலெழுப்பும் வாய்ப்புகள் இல்லாத கம்யூனிஸ சீனாவில், மதவாத சவுதி அரேபியாவில், பங்களாதேஷில் தொழிலாளர் நிலை என்னவென்று எண்ணிப்பார்க்க வேண்டும். சீனாவின் ஷெஞ்சென் நகரின் 21-ஆம் நூற்றாண்டு தொழிலாளி சொல்வது 19-ஆம் நூற்றாண்டின் மான்செஸ்டர் தொழிலாளியின் நிலையையும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நியூயார்க் தொழ்லிலாளியின் நிலையையும் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. ஷெஞ்சென் நகர தொழிலாளியின் ஒரு வாக்குமூலம் அவர்கள் நிலையை இவ்வாறு ஆவணப்படுத்துகிறது: ” …குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அவசர ஆர்டர்கள் வருகையில் தொடர்ந்து 30 மணிநேரம் அல்லது அதற்கு மேலாகக்கூட வேலை செய்ய வேண்டியிருக்கும்….40 மணிநேரம் கூட தொடர்ந்து வேலை செய்திருக்கிறோம். துணிகளை இழுத்து நேராக்க தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்ய வேண்டியிருப்பதால் கால்கள் வலியெடுத்து மிகவும் களைப்படைந்து விடுவோம்; கீழே உட்காரக்கூட இடமிருக்காது,…தரையெங்கும் திட்டாக தூசி நிறைந்திருக்கும். பகலும் இரவும் இதில் வேலை செய்து எங்கள் உடலே கறுப்பாகிவிடும். வேலை முடிந்து வெளியே வந்து துப்பினால், எச்சல் கறுப்பாய் வந்து விழும்”.

இப்படிப்பட்ட பிழிந்தெடுக்கும் சூழல்தான் சீனத்தின் பல மின்னணு தொழில்நுட்பக் கம்பெனிகளிடம் இன்றும் காணப்படுகிறது. ஃபாக்ஸ்கான்(Foxconn) கம்பெனித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது சமீபத்தில் செய்திகளில் அடிபட்டது. இதற்கு முன்னும் இதுபோல பல தொழிற்சாலைத் தற்கொலகள் குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னணி தொலைத்தொடர்பு கம்பெனியான ஹூவேயில் இதுபோல் பல தற்கொலைச்சாவுகள் நடந்தது, சில வருடங்கள் முன்பு பரபரப்பான செய்தியாகப் பேசப்பட்டது. இவை தற்காலிக ஊடக கவனம் பெறுவதைத்தவிர நிலையான மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. சீனாவில் இரண்டு நிமிடத்துக்கொரு முறை ஒரு தற்கொலை நடப்பதாக W.H.O தெரிவிக்கிறது. ஏழ்மையையும் அவலத்தையும் விடக்கொடியது அவற்றை எதிர்த்துக்குரலெழுப்பவும் போராடவும் முடியாமல் முடக்கிப்போடப்படும் நிலை. கம்யூனிஸ சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயக முதலியத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதில்தான் அடங்கியுள்ளது. ஏழ்மையும் அவலமும் இவ்விரண்டு அமைப்புகளிலும் காணப்படுவதுதான் என்றாலும், ஜனநாயக முதலியம் அவற்றிலிருந்து விடுபடும் வழியையும் திறந்து வைத்திருக்கிறது. கம்யூனிஸமோ அந்தக்கதவுகளை இறுக்க மூடிவிட்டு சர்வாதிகார இருளில் சாவியைத்தொலைத்து விடுகிறது.

கொடுமையான ஏழ்மையும் நோயும், அசுத்தமும், வன்முறையும், பாலியல் கொடுமைகளும் நிறைந்த சேரிகள்தான் தொழிற்புரட்சிக்கு தொழிலாளர்களை அளித்தன. அதே ஆலைகள்தான் அந்த சேரிகளிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்பையும் நம்பிக்கையும் கூட அந்த சேரி மக்களுக்கு தந்தன.

மான்செஸ்டரின் நெசவாலைப்புகையில் தன்னை இழந்த ஐரிஷ் தொழிலாளிக்கும், நியூயார்க் நகரின் தையற்தொழிற்சாலை விபத்தில் வெந்து மடிந்த யூதப்பெண்ணுக்கும், பசுமையான கிராமங்களை விட்டு விட்டு ஷாங்காய் நகரின் புறாக்கூண்டு வசிப்பிடங்களில் தன்னைக் குறுக்கிக்கொண்டு வாழும் சீனனுக்கும், ஊர் விட்டு ஊர் வந்து அவதி விழுங்கி வாழும் அங்காடித்தெரு தொழிலாளிக்கும் –ஜனநாயக சூழல் மட்டும் கிடைத்து விட்டால்- அவனை அழுத்தும் அதே அவலச் சூழலிலேயே அதிலிருந்து விடுதலை பெறும் சாத்தியங்களும் உருவாகி விடுகின்றன. தன்னைக் கரைத்துக்கொண்டு குடும்பத்தை மேலேற்றிக்கொண்டுவரும் ஒரு தலைமுறையின் அவதியானது, அடுத்த தலைமுறைக்கு ஒரு வளர்ச்சிப்படியை அமைத்துத்தந்து விடுகிறது. இப்படி ஒரு தலைமுறை தம்மை படிக்கல்லாக்கிக்கொண்டு அடுத்த தலைமுறையை மேலேற்றிக்கொண்டு வந்த கதை உலகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நிலையில் நடந்திருக்கிறது. இந்த தியாகங்களும் அதன் மூலம் நிகழும் முன்னகர்வுகளும் குடும்பங்கள் முதல் தேசங்கள் வரை தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மேலிருந்து கீழும் கீழிருந்து மேலுமான சமுதாய சுழற்சி சாஸ்வதமாய் இருக்கிறது. இந்த சமூகச்சுழற்சியின் பொருளாதாரப்பிடிமானமாக விளங்குவது முதலியம் மற்றும் அதன் ஜீவனான ஜனநாயகம்.

வியாபாரம் இல்லாத நாகரீகம் பட்டுப்போன மரம் போல. முதலியம் இல்லாத வியாபாரம் காலொடிந்த தேர் போல. முதலியமும் தொழிலாளரும் முரண்படுகையில் இரு தரப்புமே வளர்வதில்லை. ஏனெனில் இரு தரப்பும் உண்மையில் தனியாய் முரண்பட்டு நிற்கும் எதிர் எதிர் தரப்பு இல்லை. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவை. ஆரோக்கியமான முதலியம் வலுப்பெற கருத்து சுதந்திரமும், ஜனநாயகமும் வலுப்பெறுவது அவசியம்.

முதலியம் ஏழ்மையை உருவாக்குவதில்லை, அது ஏழ்மையை ஸ்வீகரிக்கிறது. தலைமுறை தலைமுறையாய் எதிர்கால நம்பிக்கையின் விளைநிலமாய் அது விளங்குகிறது. சர்வாதிகாரங்களை நம்பி வளர்வதல்ல அது. மக்களை நம்பி மக்களூடே இயங்கும் இயக்கம் அது.

தெரு என்பதே கடந்து போகத்தான்- அங்காடித்தெருக்களும் அப்படித்தான். அவலங்கள் இருந்தாலும் அவற்றைக் கடந்து போவதற்கான பாதையும் கூட பலருக்கு அங்கேதான் கிடைக்கிறது. சர்வாதிகாரங்கள் அடைக்க முனையும் அந்தப்பாதையை ஜனநாயகமும் முதலியமும் திறந்து விடுகிறது. உலகெங்கிலும் உள்ள அங்காடித்தெருக்கள் ”ஏழ்மையிலிருந்து விடுதலை” என்ற நம்பிக்கையைத் தன் கருவில் தாங்கியே எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறன.

குறிப்புகள்

– மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதிக்குவித்தவை ஏராளம். www.marxist.org தளம் ஏராளமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இக்கட்டுரையில் உள்ள பல மேற்கோள்களும் இத்தளத்திலிருந்து பெறப்பட்டவையே.

– ஏங்கெல்ஸின் ”1844-இல் இங்கிலாந்து தொழிலாளர் நிலை” என்ற நூல் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான ஆவண நூல். மார்க்ஸிஸ்ட் தளத்திலும் ப்ராஜக்ட் குடன்பர்க் தளங்களிலும் முழுமையாய்க் கிடைக்கிறது.

– இங்கிலாந்தின் தொழிற்கட்சியைச்சேர்ந்த ட்ரைஸ்ட்ராம் ஹண்ட் எழுதியுள்ள “Marx’s General: The revolutionary life of Fredrick Engels” என்கிற புத்தகம் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பல பரிமாணங்களை வெளிச்சம் போடுகிறது.

– லியன் ஸ்டெய்ன் எழுதிய “Out of the sweatshop: the struggle for industrial democracy” என்ற நூல் அன்றைய அமெரிக்க தையற்தொழிலாளர் நிலை பற்றிய பல நேரடித்தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளது.

– Triangle Factory Fire பற்றி கீழ்க்கண்ட கார்னெல் பல்கலைக்கழக தளத்தில் படிக்கலாம்: http://www.ilr.cornell.edu/trianglefire/narrative2.html

– முர்ரே ராத்பர்ட் அமெரிக்க லிபர்ட்டேரியன் சிந்தனாவாதிகளில் முதன்மையானவர். அவரது ”Karl Marx as Religious Eschatologist” என்ற முக்கியமான நெடுங்கட்டுரை இந்த தளத்தில் கிடைக்கிறது: http://mises.org/daily/3769

– கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியரான முனைவர். சிங் க்வான் லீயின் “Against the law: labor protests in China’s rustbelt and sunbelt” என்ற புத்தகம் சீனாவின் நெசவுத்தொழில், துணி மற்றும் உற்பத்திக்கூட தொழிலாளர்களின் நிலையை நேரடியாக ஆய்வு செய்து விவரித்துள்ளது. இக்கட்டுரையிலுள்ள ஷென்சென் தொழிலாளியின் கூற்று இப்புத்தகத்தில் காணப்படும் ஆவணக்கூற்றிலிருந்து பெறப்பட்டது. சீனத் தொழிலாளர்களிடையே உள்ள அவலமும் கொந்தளிப்பும் நிறைந்த சூழ்நிலை உலகத்தின் கண்களிலிருந்து மறைக்கப்படுவதாக சிங் க்வான் லீ குற்றம் சாட்டுகிறார். வெளியே கொட்ட முடியாமல் குமற நேரும் அவர்களது அவதிக்கும் சீனத்தொழிற்சாலைகளில் பெருகும் தற்கொலைகள் பற்றி இன்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.