எண்ணெய்ச் சிதறல் – என்ன நடக்கிறது?

மெக்ஸிகோ வளைகுடாவில் எண்ணெய்ச் சிதறல்/கசிவு எப்படி நிகழ்ந்தது?

எண்ணெய்க் குழாயில் பெருமளவில் அடைப்பட்டுக் கொண்ட இயற்கை எரிவாயுவினால், Deepwater Horizon என்றழைக்கப்படும் எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தளம் ஏப்ரல் 20, 2010-அன்று பெரும் சேதத்திற்கு உள்ளானது. எண்ணெய்க் குழாயிலிருந்து வெளியான மீத்தேன் வாயு, தீப்பற்றி வெடித்தது. இதனால் எண்ணெய்த் தளத்தில் பணியாற்றிய 11 பேர் உயிரிழந்தனர். எண்ணெய்த் தளம் தீபற்றி எரிந்தது. தீ பற்றியதாலோ அல்லது குழாய் வெடித்ததாலோ, ஒரு எண்ணெய்க் கிணறும் சேதமடைந்து, கடலில் எண்ணெயைக் கசியவிட்டது. இது போன்ற சூழ்நிலைகளில் சுற்றுச்சூழலையும், பணியாளர்களையும் காப்பாற்ற வேண்டிய ஆபத்து கால அமைப்புகள் எதுவும் செயல்படாமல் முடங்கின.

s33_239266571

அமெரிக்க அரசாங்கம் வானியல் புகைப்படங்களைக் கொண்டு, Macondo கிணறிலிருந்து சராசரியாக 5,000 பேரல் எண்ணைய் கசிந்து, மெக்ஸ்கோ வளைகுடாவில் கலப்பதாக தெரிவித்தது (ஒரு பேரல் 42 கேலன்களை, அதாவது  கிட்டத்தட்ட 160 லிட்டர்களைக் கொண்டது). அப்போதிலிருந்து கடலில் கலக்கும் எண்ணெய் பேரல்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் (பிபி) வெளியிட்ட கணக்குப்படி, எண்ணெய்க் கசிவை கணிசமாகத் தடுத்துவரும் blowout preventer அகற்றப்பட்டால், அதிகப்பட்சமாக ஒரு நாளில் 1 லட்சம் பேரல்கள் கடலில் கலக்கும் என்று கூறுகிறது.

எண்ணெய்ச் சிதறல் இதற்கு முன்பே ஏற்பட்டிருக்கிறதா?

1991-ஆம் ஆண்டு வளைகுடாப் போரின்போது அமெரிக்கக் கடற்படையின் முன்னேற்றத்தைத் தடுக்க, ஈராக் பல எண்ணெய்க் கப்பல்களின் வால்வுகளைத் திறந்து விட்டது. 52 கோடி கேலன்கள் எண்ணெய் கடலில் கலந்து, நான்கு இஞ்ச் ஆழத்துக்கு எண்ணெய் மிதந்தது.

1980-ஆம் ஆண்டு, இப்போதைய மெக்ஸிகோ எண்ணெய்க் கசிவைப் போலவே, இதே மெக்ஸிகோவில் ஒரு எண்ணெய்த்தளம் வெடித்து சிதறியது. அடைப்பைச் சரிசெய்ய கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு மேலானது. இக்கசிவின்போது ஒரு நாளொன்றொக்கு 30000 கேலன்கள் எண்ணெய் கடலில் கலந்தது.

கடந்த 50 வருடங்களில், மூன்று எண்ணெய் கசிவுகள் அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. 1969-இல் சாண்டா பார்பரா(கலிபோர்னியா) எண்ணெய் கசிவு, 1989-ல் Exxon Valdez எண்ணெய் கசிவு மற்றும் 2010-ல் மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய் கசிவு. இவை மூன்றும் ஒரு பொதுத்தன்மையை கொண்டுள்ளன. அது: எண்ணெய்த் தளங்களின் பாதுகாப்பு கட்டுமானத்தை அதிகரிக்க வேண்டி குரல் எழுப்பப்பட்டபோது, அந்த கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் வெற்றிகரமாக புறங்கையால் ஒதுக்கித்தள்ளின. இதுதான் இந்த மூன்று விபத்துகளுக்கான முக்கிய ஒற்றுமை. தேவையான பாதுகாப்புக் கட்டுமானத்தை நிறைவேற்றியிருந்தால் இந்த விபத்துகளனால் விளைந்த பாதிப்புகள் பெருமளவு குறைந்திருக்கும். இந்த கட்டுமானங்கள் யாவும் அவசியமானவை. மேலும் அடிப்படையானவை, அல்லது பின்னாளில் அடிப்படையானவையாக உணரபட்டவை. இந்த கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதன் விளைவாக, எண்ணெய் நிறுவனங்கள், தங்களைப் பெருமளவு பொருளாதார நஷ்டத்தை நோக்கிச் செலுத்துகின்றன. மற்றவர்களை பெரும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை நோக்கிச் செலுத்துகின்றன.

மற்ற இடங்களில் நிலத்தடியிலிருந்து பெருமுயற்சி செய்து எண்ணெயை உறிஞ்சி எடுக்கவேண்டியதாக இருக்கிறது. ஏன் இந்தக் கிணறு மட்டும் தானாகவே தொடர்ச்சியாக பெருமளவில் எண்ணெயை கக்கியபடியே உள்ளது?

இந்தப் பகுதியில் பல கடினமான பாறை அடுக்குகளுக்கு அடியில் எண்ணெய் உள்ளது. அதனால் அவற்றின் அழுத்தம் மிக மிக அதிகம். கவனக்குறைவான ஒரு சிறு திறப்பு கூட போதும், எண்ணெய் மொத்தமும் பீய்ச்சியடிக்கும். வளைகுடா நாடுகளிலும் எண்ணெய் இப்படித்தான் மேலே உள்ள பாறைகளால் மிக இறுக்கமாக மூடப்பட்டுள்ளது.

s37_23815935

நிலத்தின் மிக அருகில் இருக்கும் எண்ணெய் மிகக் குறைந்த அழுத்தத்தையே கொண்டிருக்கும். அதனால், எண்ணெயின் முதல் துளியிலிருந்தே நாம் அதை அகழ்ந்தெடுக்க வேண்டியிருக்கும். எண்ணெயை அகழ்ந்தெடுப்பதினால் நிலத்தடி அழுத்தம் குறையும். அதனால் பெரும்பாலான சமயங்களில் நிலத்தடியிலிருந்து எண்ணெயை எடுக்க நம்முடைய முயற்சி தேவையாகயிருக்கும். பொறியாளர்கள் அகழ்ந்தெடுக்கும் கலனில் நீரையோ அல்லது இயற்கை எரிவாயுவையோ உள்ளே செலுத்தி மீதிமிருக்கும் கச்சா எண்ணெயை வெளியே எடுப்பார்கள். அதன் பின், திரவங்களின் சேர்க்கையால் இந்த நீரும், இயற்கை எரிவாயுவும் கச்சா எண்ணையிலிருந்து பிரிக்கப்படும்.

(கடலில் மிதக்கும்) இந்த எண்ணெய்ப் படலம் ஏன் கறுப்பாக இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது?

கசியும் எண்ணெய் நீரில் கலப்பதால், எண்ணெயில் இருக்கும் பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு பொருட்கள், நீரின் அணுத்திரண்மங்களால் பிரிக்கப்படுகின்றன. பிரிந்த இந்த பொருட்கள் தங்கள் அளவுகளைப் பொறுத்து சூரியஒளி நிறப்பிரிகையை ஏற்படுத்தி வண்ணங்களை உருவாக்கும். இந்த பொருட்கள் சேரும்போதோ அல்லது பிரியும்போதோ வண்ணச்சேர்க்கைகள் மாறும்.

gulf-oil-rig-spill-thin-layer_19692_600x450

மெக்ஸிகோ வளைகுடாவில் கலக்கும் இந்த எண்ணெய்கள் என்னவாகும்?

நேரடியாக ஆழ்கடல் கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலில் கூட கடல் நீர் கலந்தேயிருக்கும். ஆகையால், இந்தக் கசிவினால் வெளியேறி கடல் நீரில் மிதக்கும் இந்த எண்ணெய், நாம் உபயோகிக்கும் எண்ணெயின் தண்ணீர் கலக்கப்பட்ட வடிவம்தான். அதிக அளவில் கலந்துள்ள தண்ணீரை பிரித்துவிட்டால், சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தப்படுத்தி இதைக் கார்கள் மற்றும் கொதிகலன்களில் பயன்படுத்தலாம்.

எண்ணெய் சிதறல் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வாழ்க்கை சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

விபத்து மூலம் வெளியேறி கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று: முக்கியமான மீன் வளங்களும், நீர்வாழ் உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்படுதல். குறிப்பாகச் சொல்வதென்றால், மிக நுண்ணிய படிநிலைகளை கொண்ட மீனின் வளர்ச்சிக் காலகட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. மீனின் முட்டைகளும், லார்வாக்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

எண்ணெய் கலந்த நீரில் மீன் முட்டைகள், லார்வாக்களின் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி சில வருடங்களுக்கு முன் நடந்தது. அந்த ஆராய்ச்சியில் ஒரே ஒரு சதவீதம் எண்ணெய் கலந்த நீரில் மீன்கள் முட்டையிடுவது வெகுவாகக் குறைந்ததைக் கண்டறிந்தார்கள். இவை தவிர லாவாக்களும் உடல் சிதைவுகளை சந்தித்தன. ஒவ்வொரு உயிரினத்திலும் RNA, DNA என்ற இரண்டு கூறுகளும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும். எண்ணெய் கலந்த நீரில் வளர்ந்த மீன்களீல் DNA வளர்சிதைவு குறைவதால், இந்த விகிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் கலந்த நீரில் வளர்ந்த லாவாக்களின் முதுகெலும்புகளில் சிதைவுகள் ஏற்படுகின்றன. கீழுள்ள படங்களில் எண்ணெய் கலந்த நீரில் வளரும் சிதைந்த முதுகெலும்பைக் கொண்ட லாவாக்களைக் காணலாம்.

deformed

எண்ணெய்க் கசிவு தொடங்கி 40 நாட்களில், வனவிலங்குத்துறை அதிகாரிகள் அமெரிக்க வளைகுடா கடற்பகுதிகளிலிருந்து 491 பறவைகள், 227 ஆமைகள் மற்றும் 27 பல்வேறு பாலூட்டி விலங்குகளின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர். இந்தத் தகவல் எண்ணெய் கசிவை கண்காணித்து வரும் ஒருங்கிணைந்த அமைப்பின் அறிக்கையில் உள்ளது.

அதிகாரிகள், இந்த அனைத்து இறப்புகளுக்கும் பிபி எண்ணெய் கசிவு இருக்கத் தேவையில்லை, ஒரு சில இறப்புகள் இயற்கையானவையாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். 491 பறவை சடலங்களில், 28 மட்டுமே எண்ணெயில் தோய்ந்துள்ளவை. இவை தவிர, எண்ணெயில் தோய்ந்த 66 பறவைகள் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளன.

s23_23950457பத்திரிக்கையாளர்களும் விஞ்ஞானிகளும் சுறாக்கள், விலாங்கு மீன்கள் மற்றும் ஆமைகள், எண்ணெய் படர்ந்த நீர் பகுதியில் நீந்தி சென்றதை பதிவு செய்துள்ளனர். ஆனால், வனவிலங்குத்துறை அதிகாரிகள் மேலும் பல கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் பாலூட்டி உயிரினங்கள் பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள்.

இந்த எண்ணெய் அடர்த்தியாக பரவி, ஒளிப் பந்தாகவும், தார் பந்துகளாகவும் கரையோர விலங்குகள் சரணாலயத்தை சென்றடைகின்றன. மெக்ஸிகோ எண்ணெய்க் கசிவு பல கரையோர விலங்குகள் சரணாலயங்களைப் பாதிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே மீன் உணவுப் பொருட்களின் வணிகம் மெக்ஸிகோ கரையோரங்களில் பெருமளவில் பாதிப்படையத் தொடங்கியுள்ளது.

ராமன்ராஜாவின் “எண்ணெய்ச் சிதறல் பற்றி: சில எண்ணச் சிதறல்கள்” என்ற கட்டுரையை இதே இதழில் படிக்கலாம்.

எண்ணெய்ச் சிதறல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள:

http://www.slate.com/id/2256255/