ராஜ்நீதி, ராவண்: கசக்கியெறிந்த காவியங்கள்

rajravan

ஒரே நேரத்தில் இந்தியாவின் இரண்டு பெரும் இதிகாசங்களை தழுவிய கலைப்படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று பிரகாஷ் ஜாவின் ‘ ராஜ்நீதி’. மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட படம். (என்று சொல்லப்பட்டது). மணிரத்னத்தின் Magnum Opus என்று வருவதற்கு பரபரப்பை ஏற்படுத்திய ‘ராவணன்’, ராமயணத்தை அடிப்படியாக கொண்டது. இரு பெரும் கதைகளையும் எத்தனையோ கிளைக்கதைகளையும் தம்முள் கொண்ட, இந்தியாவின் எல்லா பகுதி மக்களாலும் நன்கு அறியப்பட்ட இந்த இரு இதிகாசங்களையும், இந்தியாவின் சிறந்த இயக்குநர்கள் என்று நம் மீடியாக்கள் கொண்டாடுபவர்கள் எவ்வாறு உள்வாங்கி இருக்கிறார்கள், அதைத் தாம் கற்ற சினிமாவில் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்க்க ஆர்வம் இருந்தது. ஆனால் படங்களைப் பார்க்கும்போது இதிகாசம் மட்டுமல்ல தம் சமகாலத்தையும் நிகழ்வுகளையும் இந்தியாவின் பிரதேசங்களையும் இவர்கள் அறிந்து வைக்கவில்லை அவற்றைக் கையாள தமக்கு எந்த தகுதியும் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள் என்றே தோன்றியது.

இந்தியாவின் பத்திரிக்கைகளும், சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஞானிகளும் இவ்விரு படங்களையும் பாராட்டித் தள்ளுகிறார்கள். ராவணன் பற்றிக் கூட சில இணைய தளங்கள் சரியான விமர்சனத்தை எழுதியிருக்கின்றன. ஆனால் ராஜநீதி பற்றி Times of India-வும், சில வட இந்திய பத்திரிகைகளும் எழுதிய விமர்சனத்தைப் படிக்கையில் இவர்களுக்கு சினிமா ஞானம் என்ன, உலக அறிவே இல்லையோ என்று தான் நினைக்க தோன்றியது.

முதலில் ராஜ்நீதி.

அரசியலின் நீதி எப்படிப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். உறவுகளையும் நட்பையும் எவ்விதத்திலும் பொருட்படுத்தாத வெற்றியை மட்டுமே குறிக்கோளாய் கொண்ட அரசியல்வாதிகளால் நேரடி பாதிப்புக்குள்ளாகும் மக்களிடம்தான் அதே அரசியல்வாதிகள் நியாயம் கேட்டு நிற்பார்கள். அரசியல் சார்ந்த வன்முறைகளைப் பிரதானமாக வைத்து வந்த படங்கள் தமிழிலும் தெலுங்கிலும்தான் அதிகம். சத்யா போன்ற சில படங்களும் ஹிந்தியில் வந்திருக்கின்றன. ஆனால் வன்முறை சார்ந்த அரசியலை மையமாகக் கொண்டு வந்த படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ராஜ்நீதி. வடக்கத்திய இதழ்களால் ஆஹா ஓஹோவென்று பாராட்டப்பட்ட படம். எனக்கு இவர்கள் செய்த ஆராவாரமே சந்தேகம் தருவதாக இருந்தது.

ஏதோ விஷயம் இருக்கிறது என்பது போல் படங்காட்டும் முதல் அரை மணி நேரத்துக்குப் பிறகு வரிசையாக மக்கள் காதில் பூ சுற்றுகிறார்கள். அரசியல் என்றால் என்னவென்று, அதுவும் வாரிசு அரசியல் என்றால் என்னவென்று நம் இந்திய மக்களுக்குப் புதிதாகச் சொல்லித்தரத் தேவையில்லை. ஆனால் இவ்வளவு வெளிப்படையாக ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவதும் நியாயத்துக்காகச் செய்கிறேன் என்று சொல்லி, எதிரியை விட படு பாதகமாக நடந்துகொள்வதும், பின்பு காதல், குடும்பப் பாசத்தில் உருகுவதுமாகச் செல்லும் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகளை நாம் சுந்தரத் தெலுங்கில் பலமுறை பார்த்திருக்கிறோம். இதையும் ஒரு பெரும் முயற்சி என்று இங்குள்ளவர்கள் பாராட்டுகிறார்கள்.

பலம் பொருந்திய கட்சியில் ஒரு சாதாரண கபடி வீரரான தலித் அஜய் தேவ்கன், கட்சி ஆட்களிடமே மோதி உள்ளே நுழைகையிலேயே நாடகத்தனம் ஆரம்பமாகிறது. திடீரென்று பக்கவாதத்தில் படுத்துவிடும் சந்திர பிரதாப் தனக்குப் பிறகு அரசை ஆளத் தன் தம்பிக்கு அதிகாரம் கொடுக்கிறார். அவர் மகனான மனோஜ் வாஜ்பாய் அதிர்ந்து போய் விடுகிறார். அர்ஜுன் ராம்பால் கடுமையாக அஜய்யை எதிர்க்க, சந்தர்ப்பம் வேண்டி காத்திருக்கும் மனோஜ் பாஜ்பாய் அவரை ஆதரிக்கிறார். உடனே ஆரம்பமாகிறது வன்முறை அரசியல். எனில் ஒரு தலித்அரசியலுக்கு வந்தால் வன்முறைதான் செய்வானா?

அவரைப் பயன்படுத்தி அடுத்து முதல்வராக வரவிருக்கும் சித்தப்பாவை மனோஜ் காலி செய்ய அமெரிக்க ரிட்டர்ன் ரன்பீர் தனது அப்பா சாவுக்கு காரணமான அனைவரையும் ‘முடித்துவைக்கிறார்’. இடையில் தன்னை சிறுவயதிலிருந்தே காதலிக்கும் கத்ரினாவை அரசியல் பொருளாதார சமரசம் என்ற பெயரில் கத்ரினாவின் தந்தை சொல்வதற்குத் தலையாட்டி தன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இவை அனைத்துக்கும் வழிகாட்டியாய் இருந்து கிருஷ்ணலீலை செய்கிறார் அவரது தாய்மாமனான நானா படேகர்.

இறுதியாக இவர்களின் உள்விரோதங்களின் காரணமாக ரன்பீரின் அமெரிக்க மனைவியும் அர்ஜுன் ராம்பாலும் குண்டு வெடிப்பில் இறக்க இறுதிவரை காதலுக்காக போராடி பிறகு ‘மக்களின் ‘ விருப்பத்துக்கிணங்க தேர்தலில் போட்டியிடுகிறார் காத்ரீனா. அவர் மேடையில் பேசும் உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்கும்போது மயக்கமே வந்து விடுகிறது. “என் குடும்பத்தில் பலரை இழந்தேன்… இதற்கெல்லாம் யார் காரணம்? பதில் சொல்லுங்கள்…” என்று இந்த வன்முறைகளிலோ சூழ்ச்சிகளிலோ எந்தவித தொடர்புமில்லாத ஆரம்பம் முதல் ஒரு பரிதாப பார்வையாளராக இருக்கும் அப்பாவி மக்களிடம் ‘நீதி’ கேட்கிறார். இயக்குனர் இதில் என்ன சொல்ல வருகிறார்? பதவிக்காக எதையும் செய்ய துணியும் ஒரு குடும்பம், தன் அழிவுக்கு எந்தப் பாவமும் அறியாத மக்களிடம் சென்று முறையிடுகிறது. நல்ல அரசியல் பார்வை கொண்ட இயக்குனர் எனில் இந்த முரண்பாட்டை தன் வழியில் பார்வையாளர்களிடம் முன்வைத்திருப்பார். ஆனால் காலம்காலமாக சினிமா எனும் மிகப்பெரிய ஊடகத்தை புரியாமல் கையாண்டு வருபவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?

இது மகாபாரதக் கதை என்பதால் கதைப்படி துரியோதனனான மனோஜ் பாஜ்பாயுடன் நல்ல நட்பில் இருக்கும் தலித்தான அஜய்யைக் கொல்ல நானா செல்லும்போது அந்த அப்பாவி தலித் பெற்றோர் “இவன் எங்கள் சொந்த மகன் அல்ல. ஆற்றில் கிடைத்தான்” என்று அந்தக் குழந்தையுடன் கிடைத்த துணியைக் காட்டிக் கதறுகிறார்கள். இதையெல்லாம் தளபதியிலேயே பார்த்து விட்ட நமக்கு எரிச்சல்தான் வருகிறது. மகாபாரத காலத்தில் ஒருவரை ஒருவர் கொன்றார்கள் என்றால் சமகாலத்தில் நடக்கும் அரசியல் அடிப்படை கதையிலும் ஒருவரை ஒருவர் கொன்று தான் தீர்வு காண்பார்களா?

இங்கு தான் பிரகாஷ் ஜா தான் ஒரு அறிவிலி என்று காட்டுகிறார். கிருஷ்ணர் போன்ற கதாபாத்திரத்தில் வரும் நானாவின் அதிகபட்ச ‘ராஜதந்திரமே’ இவனைக்கொல், அவனைக்கொல் என்று ரன்பிரையும் அர்ஜுன் ராம்பாலையும் தூண்டிவிடுவது தான் . இதில் எங்கே வருகிறது ராஜதந்திரம்? அது போன்றகாட்சிகளில் நானா சிரித்துகொண்டே தலையை திருப்பிக் கொள்கிறார். அவருக்கே இது நகைச்சுவையாய் தோன்றியிருக்கும்.

தன் எதிரிகள் தன் சகோதரர்கள் என்று தெரிந்தும் தன் தாய் அழைத்தும் நட்பு காரணமாக மனோஜை விட்டு விலகாத அஜய் கொலைவெறியுடன் திரியும் நானா, ரன்பிரிடம் இருந்து மனோஜை காப்பாற்ற வரும்போது ‘இந்த வன்முறையை இத்தோடு நிறுத்திக்கொள்வோம் ‘ என்று நேர்மையாக பரிதாபமாக சொன்னாலும் அவரையும் கொல்லச் சொல்லி ரன்பிரிடம் சொல்கிறார் நானா. ‘அரசியல் நீதியில் இவை செய்யப்பட வேண்டியவையே ..’ என்று காரணம் சொல்கிறார். இதுதான் பிரகாஷ் ஜாவின் கிருஷ்ணர் சொல்லும் பகவத் கீதை. எல்லாம் முடிந்து ரன்பீர் தன் ‘கடமைகளை’ முடித்துவிட்டு அரசியல் அறிவே இல்லாத காத்ரினாவிடம் பொறுப்பை விட்டு அமெரிக்கா புறப்படுகிறார். இப்படி நடந்துகொள்பவர்களை விமர்சன நோக்கில் படமாக்காமல் ஆதரிப்பது போல் படம் எடுப்பது என்ன அரசியல் நீதி என்று தான் புரியவில்லை.

ஏறக்குறைய ஒரு மாத இடைவெளியில் இன்னொரு இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருக்கிறது ராவண். தமிழில் ராவணன். மணிரத்னத்தின் பெரும்பாலான படங்கள் inspired படங்கள். மௌனராகம் மகேந்திரனின் ‘நெஞ்சதை கிள்ளாதே’ படத்தின் திருந்திய பதிப்பு; காட்ஃபாதரின் தமிழ் வடிவம்தான் நாயகன் என்று எல்லோருக்கும் தெரியும்; ரோஜா ‘ சத்யவான் சாவித்ரி’ ; தளபதி ‘கர்ணன் கதை’ என்று பல படங்களின் கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்டவை.

மணிரத்னத்தின் மிகப்பெரிய பலவீனம் குறைந்த செலவில் அதிக லாபம் பார்க்க நினைத்து ஒரே நேரத்தில் ரெட்டைச் சவாரி செய்வது. பூகோள ரீதியில் மட்டுமல்லாது கலாசாரரீதியிலும் நுண்ணிய வேறுபாடுகள் கொண்ட வட மற்றும் தென்னிந்தியாவை சினிமா சமரசத்தில் ஒன்று போல் காட்டி தோற்பது மணியின் வாடிக்கை. வட இந்திய பனியாவை திருநெல்வேலி பாஷை பேச வைத்ததன் மூலம் தனது அறிவுஜீவுதனத்தை நிலைநாட்டி கொண்டவர். இவ்வளவுக்குப் பிறகும் ஒரே நேரத்தில் இருவேறு மொழிகளில் மாறுபட்ட கதாபாத்திரத்தை விக்ரம் செய்வதையும், ஒளிப்பதிவில் படம் சாதனை செய்திருக்கிறது என்று விஷயம் அறிந்த பலர் சொன்னதாலும் படம் பார்க்கச் சென்றிருந்தேன்.(அதிலும் படத்துக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு எண்பது சதவீதம் ஒளிப்பதிவு செய்த மணிகண்டனை விட்டு விட்டு மீதியை முடித்துக்கொடுத்த சந்தோஷ் சிவனை மட்டும் பாராட்டும் மீடியா ஒரு பக்கம்!) டெல்லியின் PVR ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஷோ காற்று வாங்கி கொண்டிருந்தது.

என்ன base , என்ன place, என்ன cause என்று காட்டாமலேயே கதையை நகர்த்துகிறார் மணி. போலீஸ் எஸ்.பி.யான தேவின் (விக்ரம்) மனைவி ராகினியை பீரா (அபிஷேக்) கடத்தும் முதல் காட்சியின் ஒளிப்பதிவு அற்புதம். சரி சீதையை கடத்தியாயிற்று. எஸ்.பி. தேவும் அவரது போலீஸ் படையும் எங்கு இருக்கிறான் என்று கூட தெரியாமல் காட்டுக்குள் தேடுதல் நடத்துகிறார்கள். ராமசேனைக்கு அனுமன் வேண்டுமே. காட்டிலாக அதிகாரியாக கோவிந்தா அறிமுகம் ஆகிறார். அவரை ஹனுமானாகக் காட்ட வேண்டுமே. அவர் திடீரென்று நியூட்டன் விதிகளை காற்றில் பறக்கவிட்டு மரத்துக்கு மரம் தாவுகிறார். என்ன ஒரு கற்பனை வறட்சி. தமிழில் இந்த பாத்திரத்தை கார்த்திக் செய்திருக்கிறார். மெளனராகத்தில் அவர் செய்த அற்புதமான பாத்திரம் நினைவுக்கு வருகிறது. பாவம்.

கடத்தப்பட்ட இரண்டு நாட்களுக்கு முரண்டு பிடித்து அபத்த வசனம் (தமிழில் சுகாசினி வசனம்!) பேசி உறுமும் ஐஸ்வர்யா கட்டு அவிழ்க்கப்பட்ட பிறகு தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் அங்கேயே தங்கிவிடுகிறார். அவ்வப்போது அபிஷேக் அவரிடம் காதல் வசனம் பேசுகிறார். தேடி வரும் தேவ் காட்டில் வாழும் மக்களிடம் பீராவை பற்றி விசாரிக்க அதில் ஒருவன் ‘பீராவிடம் பெண்கள் மயங்குவார்கள்’ என்று சொன்னதை கேட்டதும் தேவ், மற்றும் சஞ்சீவனி (கோவிந்தா) வின் முகம் மாறுகிறது. என்ன ஒரு மட்டமான சிந்தனை! அதன் பிறகும் கதை என்கிற வஸ்துவை நம் கண்ணில் காட்டாமல் மணிகண்டனின் காமெராவை வைத்துக்கொண்டு இமயம் முதல் குமரி வரை இருக்கும் மலை காடு என்று சுற்றியலைகிறார் மணி. அது வரை அபிஷேக்கின் முதிர்ச்சியற்ற எரிச்சல் மூட்டும் நடிப்பை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவ்வப்போது பதினைந்து வருடங்களுக்கு முன் காலாவதியான பாடல்களுக்கு ஒரு பெரும் க்ரூப்பே ஸ்டெப் போட்டு ஆடுகிறார்கள். சினிமாவில் இருபது வருடங்களாக இருக்கும் மணிரத்னம் அடுத்த கட்டத்தை தாண்ட இன்னும் யோசிக்க கூட ஆரம்பிக்கவில்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது. இப்படி அபத்தங்களை எழுதிக்கொண்டே இருக்கலாம். இதில் மிக முக்கியமான அபத்தம், புரட்சி செய்கிறேன் என்று கடைசியில் ராகினிக்கு (சீதா) பீராவின் (ராவணன்) மேல் மெல்லிய காதல் (?) இருக்கிறது என்பது போல் காட்டுகிறார் மணிரத்னம். சரி அதற்காக கதையின் சம்பவங்களில் என்ன முடிச்சு வைத்தார் என்றால் எதுவும் இல்லை. கடைசியில் தன்னை மீட்டுக்கொண்டு போகும் தேவ் தன்னை பீராவுடன் சேர்த்து பேச கோபம் கொள்ளும் ராகினி செயினை பிடித்து ரயிலை நிறுத்திவிட்டு இவ்வளவு நாட்கள் கட்டிலும் மேட்டிலும் அலைந்து போலீஸ் தேடிய பீராவை பார்க்க டூரிஸ்ட் பஸ்ஸை பிடித்து போய் சேருகிறார். அங்கும் துரத்திக்கொண்டு வரும் தேவ் தலைமையிலான போலீஸ் படை, பீராவை சுட்டுகொல்கிறது. பீராவின் இறப்பைத் தாங்க முடியாத ராகினி ‘பீரா’ என்று கத்துவதோடு படத்தை முடிக்கிறார் மணி. மீதியை பார்வையாளர்களான நாம் சிந்திக்க வேண்டுமாம். நமக்கு வேறு வேலை இல்லை பாருங்கள். கதையின் இடையில் எதோ ஞாபகம் வந்தாற்போல் சூர்ப்பனகை, விபீஷணன் போன்ற இராமாயண சாயல் கதாபாத்திரங்கள் அவர்கள் இஷ்டத்துக்கு வருகிறார்கள், போகிறார்கள். இது தான் ஒரு மூத்த இயக்குனர் இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஒரு பெரிய இதிகாசத்தை கையாளும் முறையா? இதற்காகத்தான் இதனை வருட உழைப்பா என்று கேட்காமல் யாரும் திரையரங்கத்தை விட்டு வெளியில் வர முடியாது.

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளை எடுத்தாள்வதில் ஒரு சௌகரியம் உண்டு. ‘ஓஹோ ‘ ப்ரொடக்ஷன் நாகேஷ் போல் ‘கதை’ க்காக அலையவேண்டியதில்லை. ராமாயணம் என்றால் கதாநாயகியை வில்லன் கடத்துவது, மகாபாரதம் என்றால் குடும்ப-அரசியல் தகராறு என்று ஒரு மெல்லிய கதையை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் எடுத்துவிடலாம். இந்த இருபெரும் காவியங்களில் வரும் ஒவ்வொரு சின்னச்சின்ன பாத்திரமுமே அதற்கென்ற தனித்தன்மையுடனும், ஆழத்துடனும் இருக்கும். ஆனால் உங்கள் திரைவடிவக் கதையில் அதை எவ்வளவு எளிமையும், மலினமும் செய்யமுடியுமோ அவ்வளவு செய்துவிடலாம். இப்படிப் புராணங்களைப் படமாக எடுத்தால் உங்களைப் பழமைவாதி என்று யாராவது முத்திரை குத்திவிட்டால்? அதற்கும் ஒரு வழி இருக்கிறது. காவியங்களில் நல்லவர்களாக வருபவர்களை திரைவடிவத்தில், குரூர மனப்பான்மை கொண்ட சாடிஸ்டுகளாக மாற்றிவிடலாம். ராஜ்நீதி கிருஷ்ணனைப் போல, ‘ராவண்’ ராமனைப் போல. உங்கள் அகலமுதுகில் ஒரு முற்போக்கு முத்திரை விழும்!

ராவண் திரைப்பட இடைவேளையில் PVR கலாசாரத்தில் இருநூறு ரூபாய்க்கு கிடைக்கும் பெப்ஸி மற்றும் பாப்கார்னுக்கான விளம்பரம் திரையில் ஒளிர்ந்தது. Good movies taste better with this combo என்று எழுதப்படிருந்த அந்த வாசகத்தை படித்த ரசிகர் ஒருவர் சத்தம்போட்டு சொன்னார், ” யே தோ பேட் மூவி ஹை..” (மோசமான படமாயிற்றே!) சத்தமாக எழுந்த சிரிப்பலை கேட்டு, மணிரத்னத்தின் அரைகுறை இராமாயண முயற்சிக்கு கிடைத்த சன்மானம் இதுதான் என்று நான் நினைத்துகொண்டேன்.

chandru1 நான்கு வருடங்களாக டெல்லியில் வசித்து வரும்வெ.சந்திரமோகன் அடிப்படையில் ஒரு இருபரிமாண அனிமேஷன் கலைஞர். சிறுபத்திரிகைகளில் படைப்புகளுக்கு ஓவியங்கள் வரைந்து வருகிறார். சொல்வனத்தில் கூட சில சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறார். இசை, இலக்கியம், சினிமாவில் ரசனை உள்ளவர். இவருடைய பதிவுகளை http://chandanaar.blogspot.com/ என்ற முகவரியில் படிக்கலாம்.

One Reply to “ராஜ்நீதி, ராவண்: கசக்கியெறிந்த காவியங்கள்”

Comments are closed.