‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல்

சென்ற வருடம் தென்றல் இதழுக்காக மதுரபாரதி, அர்விந்த் சுவாமிநாதன் இருவரும் வெங்கட் சாமிநாதனை விரிவான பேட்டி கண்டார்கள். அச்சுப்பத்திரிகையின் இடநெருக்கடி காரணமாக ஆறு மணி நேரம் நீண்ட விரிவான நேர்காணல், சுருக்கப்பட்டு வெளியானது. வெங்கட் சாமிநாதன் எழுத ஆரம்பித்து இந்த வருடத்தோடு ஐம்பது வருடங்களாகின்றன. இத்தருணத்தில் வெ.சா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, தில்லி வாசம், இலக்கிய நண்பர்கள், தமிழக அரசியல், இலக்கியம் எனப் பல விஷயங்களைக் குறித்தும் பேசும் அப்பேட்டியின் விரிவான வடிவத்தை, சொல்வனத்தின் இரண்டாமாண்டு சிறப்பிதழில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். (புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்)

vesaஉங்கள் இளமைப்பருவம் கழிந்த நிலக்கோட்டையிலிருந்து தொடங்கலாம். அந்த கிராமத்து அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்?

நிலக்கோட்டை என்ற கிராமத்தில், அது கிராமமும் இல்லை, டவுனும் இல்லை, எனது மாமாவின் வீட்டில் நான் வளர்ந்தேன். அவர் மிகவும் கண்டிப்பானவர். அதே சமயம் ரொம்ப சாதுவும் கூட. அவரது சுபாவத்துக்கும், நிலக்கோட்டையின் வாழ்க்கை அனுபவத்துக்கும் உதாரணமாகச் சொல்லப் போனால், மாமா என்னை அதிகமாக எங்கும் வெளியில் செல்ல விடமாட்டார். கோடைகாலத்தில் குளத்தில், கிணறுகளில் எல்லாம் தண்ணீர் வற்றிப் போய் விடும். வீட்டிலிருந்து 2, 3 ஃபர்லாங் தொலைவில் கோட்டைக் கிணறு என்ற ஒன்று இருக்கும். அங்கு சென்று குளித்து விட்டு வருவோம். அது ஒரு ஏற்றக் கிணறு. உள்ளே இறங்கப் படியெல்லாம் இருக்கும். மாமா மெதுவாகப் படியிறங்கி என்னை அழைத்துச் சென்று, மூன்றாவது படியில் உட்கார வைத்து விட்டு, சொம்பால் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து என் மேல் ஊற்றிக் குளிப்பாட்டுவார். கிணற்றுக்குள் இறங்க விட மாட்டார். அவரும் இறங்க மாட்டார். ஏனென்றால் அவர் ரொம்ப சாது, மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். எங்களையும் அப்படியேதான் வளர்த்தார்.

என்னுடைய பாட்டி நான் அறிந்த காலத்திலிருந்து விதவை. ஆசாரமான, பக்தி நிறைந்த பிராமண விதவைக்கு வாழ்க்கை வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பதுதான். கோயில், கதாகாலட்சேபம் என்றெல்லாம் அந்த ஊரில் போக முடியாது. ஊருக்கு வெகு தொலைவே ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. ஆனால் என் நினைவில் பாட்டி அந்தக் கோவிலுக்குப் போனது கிடையாது. ஒரு வேளை விதவைகளுக்கு கோவிலில் அனுமதி இல்லையோ என்னவோ? ஆக, ஆசாரமான பாட்டிக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாவுக்குப் போவதுதான். பொழுதுபோக்கு மட்டுமில்லை. அதுதான் பாட்டியின் பக்திக்கு வடிகால் மாதிரியும் கூட. நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிர்த்தாற் போலத்தான் டூரிங் டாக்கிஸ் இருந்தது. அந்தக்காலத்தில் பெரும்பாலான படங்கள் புராணப் படங்கள்தான். மோட்சத்திற்கு வழிகாட்டக் கூடியவை அந்தப் புராணப்படங்கள் என்று ஒரு நம்பிக்கை.

மூன்று நாளைக்கு ஒருமுறை அங்குள்ள தியேட்டரில் படம் மாற்றுவார்கள். பாட்டி எல்லா படத்தையும் பார்த்து விடுவாள். என்னையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அந்த சினிமாவிற்குக் கூட்டிக் கொண்டு போவாள். அந்த சினிமா தியேட்டர் முதலாளி அடிக்கடி எங்கள் தெருவிற்கு வருவார். கருப்பாக, அழகாக இருப்பார். ஆஜானுபாவன். முன் தலை வழுக்கை விழுந்திருக்கும். இருந்தாலும் வசீகரமான முகம். எப்போதும் கையில் ஒரு டார்ச் லைட் ஒன்று வைத்திருப்பார், பகல் பொழுதாக இருந்தாலும் கூட. எங்களையெல்லாம் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. என்னைத் தூக்கிக் கொண்டு பாட்டி சினிமா கொட்டைகைக்குள் நுழையும் போதெல்லாம், ‘பாட்டியம்மா, பையனை கீழே இறக்கி விடுங்க. ஏன் கஷ்டப்படறீங்க? நான் டிக்கெட் கேட்க மாட்டேன்’ என்று சொல்வார். அதற்கு பாட்டி, ‘இவன் கேட்க மாட்டேங்கறாண்டா! என்னாலயும் தூக்கத்தான் முடியலை, என்ன பண்ணச் சொல்றே சொல்லு’ என்று சொல்லிக் கொண்டே என்னைக் கீழே இறக்கி விடுவாள் பாட்டி. மற்ற நாட்களில் நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அந்தப் படத்தின் பாடல்களை, வசனங்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அந்தக் காலத்தில் சினிமாவில் வந்த பாட்டுக்கள் எல்லாம் கேட்க மிக இனிமையாக இருக்கும். 60,70 வருடம் கழித்து இன்றும் அவற்றையெல்லாம் கேட்க முடிகிறது. அப்போதெல்லாம் நிறைய நாடகங்களும் நடக்கும். வி.எஸ். செல்லப்பா, தனலட்சுமி போன்றவர்கள் எல்லாம் ஸ்பெஷல் நாடகம் போட வருவார்கள் ஆக இரண்டு மூன்று வயசிலிருந்தே சினிமா, நாடகங்களோடு எனக்குப் பரிச்சயம் தொடங்கி விட்டது என்று சொல்லலாம்.

உங்கள் பள்ளி வாழ்க்கை பற்றி…

நிலக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் நான் படித்தேன். பள்ளிப்பாடங்களில் எனக்கு விருப்பம் கிடையாது. சரித்திரப் பாடம் என்றால் கேட்டுக் கொண்டிருப்பேன். கும்பகோணம் வாணாதுரை ஹைஸ்கூலில் படித்தபோது, சுந்தரம் பிள்ளை என்று ஒரு ஆசிரியர். காங்கிரஸ்காரரா என்பது தெரியாது. ஆனால் சுதந்திரப் போராட்டம் பற்றியும், காங்கிரஸ்காரர்கள் பற்றியும் அதிகம் பேசிக் கொண்டிருப்பார். அவர் வகுப்பில் தவறாது கலந்து கொள்வேன். மற்றபடி இங்கிலீஷ், கணக்கு என்று எதுவுமே வராது. ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி எடுத்தால் எதிர்காலத்துக்கு உதவும் என்றார்கள். சரி என்று அதை எடுத்துக் கொண்டேன். முதல் நாள் வகுப்பிற்குச் சென்றால் ஒன்றுமே புரியவில்லை. அதனால், சரி இது நமக்கு சரிப்பட்டு வராது என்று வெளியே வந்து விட்டேன். அப்புறம் ஹிந்தி படிக்கலாம் என்று சொன்னார்கள். அதனால் ஹிந்தி வகுப்பில் போய் உட்கார்ந்தேன். இரண்டு வருடம் ஹிந்தி படித்தேன்.

நரசிம்ம நாயுடுதான் அவர் பெயர் என்று நினைக்கிறேன். அவர்தான் எனக்கு தமிழ் வாத்தியாராக இருந்தார். அவர் கும்பகோணம் சேர்ந்த ஆரம்ப வகுப்பிலேயே, தேமாங்காய், புளிமாங்காய் என்று ஆரம்பித்தார். அப்போதுதான் ஆர்.சண்முகம் என்பவன் எனக்கு நெருங்கிய நண்பனான். சண்முகம், ’இதெல்லாம் படிக்கவே வேண்டாம்’ என்று என்னிடம் சொல்வான். அவனுக்கு அதெல்லாம் படிக்காமலேயே கரதளபாடம். He was a born poet. சண்முகம் என்றாலே எனக்கு பிரமிப்பு தான். பின்னாட்களில் அவன் எனக்கு எழுதிய கடிதங்களைக் கவிதையாகவே எழுதுவான். கும்பகோணத்தில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த காவேரி என்ற இதழில் அப்போது அவன் எழுதிக் கொண்டிருந்தான். ஒருநாள் அது வெளியாகி இருந்த பழைய இதழை எனக்குக் காட்டினான். அந்தக் கவிதை எனக்குப் புரியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் எனக்கும் அவனுக்கும் பலவிதங்களில் ஒத்த சிந்தனை இருந்தது. தமிழறிஞர்கள் என்று சிலரைச் சொல்வதை எங்களால் ஏற்க முடியவில்லை. பல புலவர்களை, கவிஞர்களை, அவர்களது கவிதைகளை ஏற்க என்னால் முடியவில்லை. இதையெல்லாம் நான் சண்முகத்திடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். சண்முகமும் அதை ஒப்புக் கொள்வான். பல கேள்விகள் கேட்டு, எங்களுக்குள் விவாதித்துக் கொள்வோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்கும் பதில்களைத்தான் அங்கீகரிக்க முடிந்ததில்லை.

எழுத்து மற்றும் புத்தகங்களின் மீதான ஆர்வம் வந்தது எப்போது?

நிலக்கோட்டையில் இருந்த போது முதலில் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு பின்னர் மாறிப் போனோம். முத்துசாமி ஐயர் என்பவரின் வீடு அது. பின்னர் அதை எங்கள் ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட் குடும்பத்தினர் வாங்கினார்கள். அந்த வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாதியில் கூரை போட்டிருக்கும். அதில் பழைய சாமான்களையெல்லாம் போட்டு வைத்திருப்பார்கள். அதில் இருந்த சில புத்தகங்கள் எனக்குக் கிடைத்ததன. அதில் ஒன்று பிரதாப முதலியார் சரித்திரம். அப்போது எனக்கு 11 வயது. அடுத்து சுவாமியும் சிநேகிதர்களும் படிக்கக் கிடைத்தது. ஆனந்த விகடனில் வந்த தொகுப்பு. ஆக சின்ன வயசிலேயே எனக்கு இலக்கியம் அறிமுகமாகி விட்டது என்று நான் சொல்லிக் கொள்ளலாம் இல்லையா? சொல்லிக்கொள்ளலாம்தான். ஆனால் உண்மை அதுவல்ல. படிக்கும் ஆர்வம் இருந்தது. கிடைத்ததை, சுவாரஸ்யமாக இருந்ததைப் படித்தேன். நன்றாகப் பொழுது போயிற்று. அவ்வளவுதான்.

அதற்கு சில வருடங்களுக்குப்பின் கும்பகோணம் வாணாதுரை ஹைஸ்கூலில் சேர்ந்த போது ஒரு நாள் பள்ளி நூலகத்திலிருந்து நூலகர் வந்து ஒரு அறிவிப்புச் செய்தார். “மாணவர்களுக்கு நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொடுக்குமாறு ஹெட்மாஸ்டர் சொல்லியிருக்கிறார், நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்” என்று. ஆனால் இலக்கியப் புத்தகங்கள்தான் தருவேன். கதைகள், நாவல்கள் எதுவும் கொடுக்க மாட்டேன் என்றும் சொன்னார். ஆக, எங்கள் பல்ளிக்கூட லைப்ரரியிலிருந்து எனக்குப் படிக்கக் கிடைத்தவை சுபாஷ் சந்திர போஸின் இளைஞனின் கனவு, வ.ரா. எழுதிய தமிழ்நாட்டுப் பெரியார்கள், நேருவின் பேச்சுக்கள் அடங்கிய நூல், முஸ்தபா கமால் பாஷா போன்ற வெ.சாமிநாத சர்மா நூல்களெல்லாம் அப்படித்தான் அறிமுகமானது.

சண்முகமும் அவ்வப்போது ஏதாவது புத்தகம் கொண்டு வந்து கொடுப்பான். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை போகும் ரோடில் அருகே உள்ள கொட்டையூர் தான் சண்முகத்தின் ஊர். ஒருமுறை அவன் ஊருக்குப் போயிருந்தபோது மலேயாவின் கோலாலம்பூரில் அச்சிடப்பட்ட ஒரு புத்தகம் கிடைத்தது. எனது போராட்டம் – என்ற ஹிட்லரின் சுயசரிதை. அப்போது, அந்த நூல் இங்கே தடைசெய்யப்பட்ட ஒன்று. இப்படி பல புத்தகங்கள் அறிமுகமாகின. சில மாதங்களில் நூலகத் திட்டம் சரியாகச் செயல்படாததால் புத்தகம் தருவதை நிறுத்தி விட்டார்கள். எனக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. அது போன்ற சமயங்களில் சண்முகம்தான் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பான். சுத்தானந்த பாரதியின் நூல்கள், அப்புறம் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய ‘முதல் இரவு’ என்ற நூல் அவன் மூலம் கிடைத்தது. அந்த நூல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒன்று. அந்தப் புத்தகம் எழுதியதற்காக கோர்ட்டில் கேஸ் எல்லாம் நடந்து ரகுநாதன் ஜெயிலுக்குக் கூடப் போக வேண்டி இருந்தது. தொ.மு.சி. பாஸ்கரத் தொண்டைமான், ரகுநாதனை, ‘அவன் எனக்குத் தம்பியே இல்லை,’ என்று ஒரு அறிக்கை கூடக் கொடுத்தார். அந்தப் புத்தகங்களையெல்லாம் என் இளம் வயதிலேயே படித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் அண்ணாதுரையின் பேச்சுகள் அடங்கிய நூல்கள் எல்லாம் சிறு சிறு நூல்களாக அச்சிடப்பட்டு கழக வெளியீடுகளாகக் கிடைக்கும். பின் வாசக சாலைகள், கழகப் படிப்பகங்கள் மூலமும் பல நூல்கள் அறிமுகமாகின. இது போன்ற நூல் அறிமுகங்களெல்லாம் என் 15 வயதிற்குள்ளேயே நடந்த விஷயங்கள். ஆனால் இந்த மாதிரி ஆரம்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. எல்லா மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. கருணாநிதிக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொருத்தரையும் எங்கு எங்கேயோ கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. சிவாஜி கணேசனுக்கும் கிடைத்திருக்கிறது. அது அவரை எங்கேயோ கொண்டுபோய் சேர்த்திருக்கிறது, இல்லையா? அதனால் இந்த டைனமிக்ஸ் இருக்கிறதே, ஒருத்தர் பாதிக்கப்படுவது எதனால், எப்படி என்பதும், அதே போல, தான் தன் சூழலை பாதிப்பதும் அது எப்படி என்பதும் எதுவுமே எல்லோருக்கும் இருக்கக் கூடியதே, ஆனால் அதனால் பாதிக்கப்படுகிறோமா, அல்லது அதை மீறி எழ்த்தோன்றுகிறதா, என்கிற அந்த டைனமிக்ஸ்தான் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறது.

இலக்கியம் மட்டுமில்லாது நாடகம், ஓவியம், இசை, சிற்பம் சினிமா, விமர்சனம் என்று கலையின் சகல துறைகளிலும் உங்களது பங்களிப்பு இருக்கிறது. இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

இந்த ஆர்வம் எப்படி வந்தது என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் இங்கிருக்கும் ஒவ்வொருவருமே ஏதோ ஒருவிதத்தில் எனக்கு இசை பிடிக்கும், இலக்கியம் பிடிக்கும், சினிமா பிடிக்கும் என்று சொல்லும் வகையான நிலைதான் இருக்கிறது. அதுபோன்று, மற்ற எல்லோரையும் போல, எனக்கும் இவையெல்லாம் பிடித்தது. ஆர்வமாக இருந்தது. ஒவ்வொன்றும் என்னை ஈர்த்தது. அந்த ஈர்ப்பிலிருந்து ஈடுபாடு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவையெல்லாம் நம்மை ரசிக்க வைக்கும். சில சமயங்களில் தொந்தரவு செய்யும். நமது முன் தீர்மானங்களை மாற்றி அமைக்கும். சிந்திக்க வைக்கும். அப்படித்தான் சிறுவயது முதலே எனக்கும் இவற்றில் எல்லாம் ஈடுபாடு ஏற்பட்டது. சிறுவயதில் நான் என்னைச் சுற்றி கேட்டதெல்லாம் சங்கீதம்தான். கல்யாண கச்சேரி, சினிமா, டிராமாவிலிருந்து, ராப்பிச்சைக்காரன் வரை. சுற்றிப் பார்த்ததெல்லாம் கோவில்கள், அந்தக் கோவில்களில் நடக்கும் பஜனைகள், மார்கழி மாத உற்சவங்கள் போன்றவைதான்.

தமிழக வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஏற்றம் இறைத்தால் பாட்டு; நாட்டு நட்டால் பாட்டு; கல்யாணம் என்றால் பாட்டு; பாட்டு இல்லாத தமிழ் வாழ்க்கையே இல்லை. அதனால்தான் சினிமாவிலும் பாடல்கள் இருக்கறதா சினிமாக்காரங்கள்லாம் சொல்கிறது ஒரு விதத்திலே வாஸ்தவம்தான். ஆனால் வாழ்க்கையில் காணும் வாஸ்தவம்தான் சினிமாவில் இடம்பெறுகிறதா என்று பார்த்தால், இது அவர்கள் செய்வது கீழ்த்தரமான வியாபாரம். ஆனால் சொல்லிக்கொள்வது என்னமோ வாழ்க்கை அது இது என்று. வாழ்க்கையில் பாட்டு எங்கே எப்படி இடம் பெறுகிறது, அது சினிமாவில் எங்கே, எப்படி இடம் பெறுகிறது என்று பார்த்தால், அது இவர்கள் சும்மா அப்படி சொல்லிக்கிறதுதான். ஆனால் இவர்கள் பாட்டையும், டான்ஸையும் சினிமாவில் நுழைக்கிற காரணமும், நுழைக்கிற விதமும், வேறாக இருக்கும். நுழைக்கிற பாட்டும், டான்ஸும் கூட வேறேதான். ஆக வாழ்க்கையில் ஒரு profound diffusion of art இருந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையாக இருந்திருக்கிறது. அதை மேலே வளர்த்தெடுத்துச் செல்வதும் சாத்தியம். கொச்சைப்படுத்துவதும் சாத்தியம். எல்லா சினிமா ஸ்டார்களும் சொல்கிறார்கள் ‘எனக்கு சிறுவயது முதலே கலைகளில் ஈடுபாடு இருந்தது’ என்று. ஆனால் அவர்கள் சொல்லும் கலை, ஈடுபாடு என்பது வேறு விஷயம். ஆக இவற்றை வார்த்தைகளை மீறிப் புரிந்து கொள்ள வேண்டும். என்னளவில் எல்லோரையும் போலவே எனக்கும் இது போன்ற கலைகளில் சிறுவயது முதலே ஆர்வம் இருந்தது என்று சொல்லிக்கொள்ளலாம் தான். ஆனால், அது எப்படிப்பட்ட ஆர்வ மாக இருந்தது, பின் அதை எப்படி நான் வளர்த்துக்கொண்டேன் என்பதெல்லாம் வேறு விஷயங்கள்தான்.

மதுரையில் நான் படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பெயிண்டர்ஸ் ஷாப் இருக்கும். அந்த பெயிண்டர் ஹோர்டிங்க்குக்காக ஏதாவது வரைந்து கொண்டிருப்பான். நான் அதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். யாராவது ஏதாவது சொன்னால் கூட, ‘தம்பி அது பாட்டிலே பார்த்து விட்டுப் போகட்டும்,’ என்று சொல்லுவான். நான் ஸ்கூலுக்குப் போகும் போதும் வரும் போதும் வழியில் அங்கே நின்று அதைப் பார்த்து விட்டு வருவேன். நிலக்கோட்டையில் பள்ளிக்கூடம் போகும் வழியில் தகரக் கடையில் விளையாட்டாக துருத்தி ஊதுவதைப் பார்த்துக் கொண்டிருந்தது போல. இது போன்றவற்றைப் பார்த்துக் கொண்டு நேரம் போக்குவதில் எனக்கு ஒரு ஆர்வம். யாராவது ஏன் இங்கே நின்று கொண்டு இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் எனக்கு பதில் சொல்லவும் தெரியாது. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

அதற்கும் முன்னால் நிலக்கோட்டையில் இருக்கும்போது வீட்டின் சுவர்களில் லஷ்மி படம், முருகன் படம் எல்லாம் பென்சிலால் வரைந்து வைப்பேன். மாமா திட்டுவார். சுவற்றையெல்லாம் கரியாக்கிக் கொண்டிருக்கிறானே என்று. படித்து முடித்ததற்குப் பிறகு ஜம்ஷெட்பூரில் இருந்த மாமா வீட்டிற்குப் போயிருந்தேன், வேலை ஏதாவது கிடைக்குமா என்று கேட்பதற்காக. ஒரு ஆறுமாதம் வரை அங்கே இருந்தேன். அங்கிருக்கும் போதுதான் ஹிராகுட்டில் வேலை காலி இருப்பது தெரிந்தது. பின் ஹிராகுட் போனேன். நான் ஜம்ஷெட்பூர் போன இரண்டு, மூணுநாளிலேயே மாமா காந்தி, கஸ்தூரிபா எல்லோரையும் பென்சிலில் வரைந்து பிரேம் போட்டு வைத்திருந்ததைப் பார்த்தேன். மிக நன்றாகவே வரைந்திருப்பார். ஃப்ரேம் போட்டு சுவரில் மாட்டும் நேர்த்தி கொண்டவைதான். ’பார்க்கறியா, எல்லாம் நான் தான் வரைஞ்சேன்’ என்று சொல்வார் மாமா. எல்லாவற்றிலும் ஆர்.என்.சாமி என்று கீழே அவர் பேர் போட்டிருக்கும். அவர் அதை எப்படி வரைவது என்றெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனந்த விகடனிலோ எதிலோ சுபாஷ் போஸின் படம் ஒன்று வந்திருந்தது. அதைப் பார்த்து நானும் வரைந்திருந்தேன்.

அதைப் பார்த்த மாமி, ‘உங்க மருமான் படம் வரைஞ்சிருக்கான் பாருங்கோ, உங்களப் பார்த்து’ என்று மாமாவிடம் சொன்னாள். அவர் ‘எப்படிடா போட்டே?’ என்று கேட்டார். அவர் மெஷர்மெண்ட் எல்லாம் எடுத்து போடுபவர். ‘நானா பத்திரிகையிலே வந்த போட்டோவைப் பாத்து வரஞ்சேன்’னு சொன்னேன். மறுநாளைக்கே அவர் என்னை ஒரு ஆர்டிஸ்ட் ஸ்டூடியோவிற்குக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். ஆனால் நான் அங்கே அதிகம் நாள் இல்லை. ஏனென்றால் டைப்-ரைட்டிங் படிக்க வேண்டும், ஷார்ட் ஹேண்ட் படிக்க வேண்டும். புக்-கீப்பிங் படிக்க வேண்டும். பின் அவரது ஆபிஸிற்குச் சென்று மூன்று மணிநேரம் வரை இருந்து ஆபிஸ் பற்றி, அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதுபற்றி எல்லோரையும் கேட்க வேண்டும். மாமா அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸர் என்பதால் எல்லோரும் பதில் சொல்வார்கள். அவர்கள் என்ன சொல்வார்கள், நான் என்ன புரிந்து கொண்டேன் என்பது வேறு விஷயம். ஆனால் நான் கேட்டால் பதில் சொல்வார்கள். இப்படி பல அனுபவங்கள். ஆக, என்னுடைய மூலத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் ஒருவேலை நிலக்கோட்டைக்கு அதில் இடமிருக்கலாமோ என்னமோ?

ஹிராகுட் வாழ்க்கை அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்?

ஹிராகுட் என்னும் அணைக்கட்டு கட்டும் கேம்பில் நான் ஒரு ஆறு வருஷம் இருந்தேன். அங்கிருந்த போதுதான் க.நா.சு., தி.ஜானகிராமன் போன்ற பலரது இலக்கியங்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது டி.வி. கிடையாது. ஆரம்பத்தில் சினிமா தியேட்டர் கூட கிடையாது. சினிமா பார்ப்பதென்றால் சம்பல்பூர் என்னும் 9 மைல் தூரத்தில் உள்ள ஊருக்குத் தான் போக வேண்டும். குறுகிய சாலை. லாரி, பஸ் எல்லாம் விரைவாகச் சென்று கொண்டிருக்கும். அது 1950-51ம் வருடம். சாலைகளில் விளக்குகள் எல்லாம் இருக்காது. தனியாக நான் செல்வதென்றால் பஸ் பிடித்துதான் போக வேண்டும். ஐந்தாறு பேர்களாக இருந்தால் சைக்கிளில் போவோம். நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒருவர் பின் ஒருவராகச் செல்லாமல், சாலையை மறித்துக் கொண்டு ஒரே வரிசையாகத் தான் செல்வோம். இரவு 9 மணிக் காட்சிக்குச் சென்று விட்டு இரவே திரும்பி விடுவோம்.

அந்த ஆரம்ப காலங்களில் அதைத் தவிர வேறு பொழுதுபோக்குகள் கிடையாது. கோடைகாலங்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை தான் ஆபிஸ் இருக்கும். அதன் பிறகு ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போய் விடுவோம். ஃபேனைப் போட்டுவிட்டு, கயிற்றுக்கட்டிலில் ஈரத்துணியைப் போட்டு விட்டு அதன் கீழே படுத்து ஒரு தூக்கம் போடுவோம். பிறகு மாலை 4, 5 மணிக்குத் தான் எழுந்திருப்போம். அப்போது என்னுடைய குவார்ட்டர்ஸில் என்னோடு ஒரு ஏழெட்டு பேர்கள் இருந்தார்கள். அவர்களுள் சிவ கோபால கிருஷ்ணன் என்பவர் கவிஞர். மற்றொருவர் வி.வி.சீனிவாசன். இவர் ஒரு great intellectual. ஆழ்ந்த படிப்பாளி. மிகுந்த புத்திசாலி. என்னுடைய நெருக்கமான நண்பர். He was very close to me. இருவருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான நட்பு. அவரது பேச்சு, செயல், சிந்தனை எல்லாமுமே மிக வித்தியாசமானதாக இருக்கும். எல்லோரும் மாலையில் ஒரு 3 மைல் தூரம் நடந்து சென்று, மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு கல்வெட்டில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்போம். ஒருவர் புத்தகம் படிக்க மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்போம். இப்படித்தான் ரஸ்ஸல், பெர்னார்ட் ஷா, ஆல்பெர்ட் ஷ்வைட்ஸர் உட்பட பலருடைய புத்தகங்கள் அறிமுகமாகின. இவற்றில் மற்றவர்கள் நட்புக்காகக் கலந்து கொள்வார்கள். ஆனால் அதிகமும் அதில் ஈடுபாட்டோடு இருந்தது நானும் சீனிவாசனும் தான். So, I was exposed to those things in life. அப்போதுதான், Will Durant-ý Story of Philosophy, 1,2,3 infinity, Short History of the World by H.G. Wells போன்று அந்த ஆறு வருஷத்தில் இது மாதிரி பல புத்தகங்களைப் படித்தோம்.

அங்கே இருக்கும் போது சம்பல்பூரில் இருந்து ஒருவர் சைக்கிளில் வருவார். அவருக்கு புத்தகம் விற்பது தான் வேலை. அவரது மனைவி ஆசிரியராகவோ என்னவோ வேலை பார்த்தார். இவர் இரண்டு பைகளில் புத்தகங்களை நிரப்பி சைக்கிளில் எடுத்துக்கொண்டு எங்களிடம் வந்து, என்ன புத்தகம் வேண்டும்? என்று கேட்பார். என்னென்ன புத்தகம் வந்திருக்கிறது என்று சொல்வார். கேட்பதை அடுத்த வாரம் கொண்டு வந்து கொடுப்பார். அவருடைய வேலையே இந்தப் புத்தகம் விற்பதுதான். இதில் என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியாது. ஏனென்றால் பெங்குவின் நூல்களே 12 அணா விற்றுக் கொண்டிருந்த காலம் அது. பெர்னார்ட் ஷாவின் மேஜர் பார்பராவையே நான் எட்டணாவுக்கு வாங்கிப் படித்திருக்கிறேன். அவர் வந்தாலே எங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷமாக இருக்கும். பாதி வந்தாச்சா? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்போம். அவர் பெயர் பாதி.. “ஊர்வலம் வந்திண்டிருக்கா, சுவாமி வந்தாச்சா? என்று எல்லோரும் ஆர்வத்துடன் கேட்பது போல, பாதி வந்தாச்சா? என்று எல்லோரும் ஆர்வத்துடன் விசாரிப்பார்கள்.

அதில் சீனிவாசன் மட்டும் ’மிஸ்டர் ஹாஃப்’ வந்தாச்சா? என்று தான் விசாரிப்பார். சீனிவாசன் ஒரு சிறந்த படிப்பாளி, விசித்திரமான மனிதர் என்று சொன்னேன். விசிததிரம் என்றால், அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நாம் சாதாரணமாக, செய்யும் காரியமாக இராது. என்னோடு அப்போது அவரும் இன்னும் நாலைந்து நண்பர்களும், வீடு கிடைக்காத காரணத்தால், என்னுடன் தங்கியிருந்தனர். அதில் ஒருவருக்கு காலில் என்னவோ வலிக்காகவோ என்னவோ ஞாபகமில்லை, ஆலிவ் ஆயில் தடவினால் சரியாகும் என்று டாக்டர் சொல்ல, ஆலிவ் ஆயிலுக்கு புர்லாவில் எங்கே போவது என்று தலையைச் சொரிந்து கொண்டிருந்தோம். இரண்டு நாளில் ஒரு நாளில் திடீரென்று சீனிவாசன் அந்தக் காலத்தில் பெட்ரோல் வாங்கும் கான் அளவு பெரிதான கானை எங்கள் முன்னால் வைத்து, “இந்தாய்யா நீர் தேடின ஆலிவ் ஆயில்” என்றார். “ஏதுய்யா இது, எங்கே கிடைச்சது? என்ன விலை? இவ்வளவு என்னத்துக்கு?” என்று திகைத்துப் போய் நாங்கள் சரமாரியாக் கேட்ட கேளவிகளுக்கு, “இந்தக் கேள்விகள் எல்லாம் அனாவசியம். ஆலிவ் ஆயில் உங்களுக்குத் தேவை. நான் வாங்கிண்டு வந்திருக்கேன். காலில் தடவிக்க. மிச்சம் இருந்தா இன்னும் யாருக்காவது கால்லே வலி வந்தால் உடனே தடவிக்க கை வசம் இருக்கும். அப்போ ஆலிவ் ஆயில் எங்கே கிடைக்கும்னு தேடீண்டு போகவேண்டாமில்லியா?” என்றார். காசைப் பத்தி கவலை இல்லை.

அவர் எங்களுடன் இருந்தவரை, சம்பல்பூருக்கு சினிமா பார்க்க எல்லாருக்கும் சைக்கிள் எங்கே கிடைக்கும்னு தேடவேண்டாம். பஸ்ஸிலே போய் அவதிப்படவும் வேண்டாம். அவர் வேலை செய்த காண்டிராக்டரின் ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். நாங்கள் ஐந்தாறு பேர் கூட்டமாகத் தான் போவோம். சினிமாவுக்கோ எதற்குமோ.

அவர் ஒரு சிவில் கண்டிராக்டரிடம் அக்கௌண்டண்டாக வேல் பார்த்து வந்தார். ஒரு நாள் ‘நான் வேலையை விட்டுட்டேன் இனிமே அவன்கிட்ட வேலை பாக்கப் போறதில்லே’ என்றார். ஏன்யா? வேறே வேலை கிடைச்சிட்டதா? என்று கேட்டால்,  ‘அதெல்லாம் இல்லை, இனிமேதான் வேறே வேலை தேடணும். அவன் கிட்டே வேலை பண்ணப் பிடிக்கலை. அதான். ஒரு சிவில் கண்டிராக்டர், மெயின் டாமில் ஸ்பில்வே செக்ஷனில் வேலை பாக்கறான். அவனுக்கு ஹைட்ரோ டைனமிக்ஸ ஹைட்ரோ ஸ்டாடிக்ஸ் ஒண்ணுமே தெரியலை. தப்புத் தப்பா சொல்றான். அவன் கிட்டே எப்படி வேலை பண்றது?’ என்றார். அந்த மாதிரி விசித்திர மனிதர் அவர். That was a great time. ரஸ்ஸலின் எளிய தத்துவப் புத்தகங்கள் Marriage and Morals, Sceptical Essays, Portrait from Memory and other essays, ஷாவின் சின்ன நாடகங்கள், Androcles and the Lion, Major Barbara இப்படி, எல்லாம் அங்கே அப்படித் தான் படித்தோம்.

இவர்களோடு இன்னுமொரு முக்கியமான நண்பன் மிருணாள் காந்தி சக்கரவர்த்திதான். அவன் ஒரு வங்காளி. அவனுடைய தந்தை சுரேஷ் சந்தர சக்கரவர்த்தி. அவர் – a man of profound learning and scholarship. அவர் ஒரு ஹைஸ்கூலில் இங்கிலீஷ் டீச்சர்தான். மிருணாள் காந்தி என்னை விட மூன்று வயது பெரியவன். மிருணாள் சொல்வான் சின்ன வயசிலிருந்தே தன் அப்பாவிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் – தவளைக்கு ஏன் பின்னங்கால் பெரிதாக இருக்கிறது; முன்னங்கால் சிறிதாக இருக்கிறது? இப்படி – அவனுக்கு அப்பாவிடமிருந்து பதில் கிடைக்காது. ஜுலியன் ஹக்ஸிலியின் முகவரியைக் கொடுத்து, அவருக்கு எழுதிக் கேட்டுக்கோ, என்பாராம். வங்கமொழி பற்றி ஏதாவது சந்தேகம் வந்தால், சுநிதிகுமார் சட்டர்ஜிக்கு எழுதிக்கேள் என்று அட்ரஸ் கொடுப்பாராம். அவர் தன் பையனை இப்படித்தான் வளர்த்தாராம். அவன் தன்னிடம் இப்படி எழுதி ஜூலியன் ஹக்ஸ்லியிடமிருந்தும், சுநிதி குமார் சட்டர்ஜியிடமிருந்தும் வந்த கடிதங்கள் இருப்பதாகச் சொன்னான். He was very very dear to me and I was also very dear to him. அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் மாதிரி நல்ல நெருக்கமான நட்பு எங்களுடையது. நாங்கள் அடிக்கடி சின்னச் சின்ன விஷயங்களில் சண்டை போட்டுக்கொள்வோம். ஒரு சமயம் சண்டை போட்டு அப்போதான் சமாதானமாயிருக்கிற சமயம். ஒரு நண்பனை அலுவலக மாற்றலில் பிரிய நேர்ந்த போது நாங்கள் இருவரும் அவனுக்கு கொடுத்த ‘பார்ட்டி’யின் போது, மிருணாள் மிகவும் மனம் நெகிழ்ந்து, தளதளத்த குரலில், ‘my father would feel very proud of having you as his son, more than me’ என்றான். அந்த இரவு எனக்கு மிக முக்கியமான இரவு. நான் கலந்து கொண்ட அந்த முதல் ‘பார்ட்டி’க்காகவும், மிருணாள் பாதி போதையில் சொன்ன அந்த வார்த்தைகளுக்காகவும்.

இப்படி இருக்கும் போது சில வருடங்களில் மகாநதியின் மறுகரையில் இருந்த புர்லா முகாமுக்கு தியேட்டர் வந்தது. சத்யஜித் ரேயைப் பார்த்தது அங்கேதான். மெட்ராஸில் இருப்பவர்கள் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அதற்கு ஒரு ஆறேழு வருடம் கழித்து நான் மெட்ராஸ் வந்தபோது, பிராட்வே தியேட்டரில் பாதேர் பஞ்சலி ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டரில் ஒரு 12 பேர்தான் இருந்தார்கள். அது 1961. ஆனால் நான் 1954-55-லேயே அந்தப் படத்தைப் பார்த்து விட்டேன் ஒரிஸ்ஸாவில் ஒரு அணைக்கட்டு முகாமில் இருந்த டெண்ட் தியேட்டரில் பார்க்கக் கிடைத்த பாதேர் பஞ்சலி, உலகப் பிரசித்தி பெற்ற பின்னும், சென்னை போன்ற இடத்தில் பார்க்க ஆளில் இல்லாமல் போய்விட்டது. ரித்திக் கட்டக், ரே போன்றோரின் படங்களையும், மற்றும் சில பெங்காலிப் படங்களையும் ஹிராகுட்டிலும், சம்பல்பூரிலும் போய்ப் பார்ப்போம்.

ஒரிய மொழிக்கும் வங்காளி மொழிக்கும் ஒரு நெருக்கமான உறவு இருந்தது. அதாவது தமிழுக்கும் மலையாளத்திற்கும் இருப்பது போன்று. 1951லிருந்தே வங்காளி படங்கள் எனக்கு மிகவும் பழக்கமான ஒன்றாக இருந்தது. இந்தப் பாட்டு, கூத்து இதெல்லாம் இல்லாமல், காமெடி சீன்ஸ் என்பதெல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரு கதையை கதையை மாததிரம் சொல்லும் மரபு அங்கே இருந்தது. மேலும் அங்கு திரைப்படங்களின் எல்லாக் கதைகளுமே சரத் சந்திரர், பங்கிம் சந்திரர் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடையதாக இருந்தது. அது எனக்கு இன்னும் ஒருவிதமான Exposure என்று சொல்லலாம். இங்கே தமிழ் வாழ்க்கை பாட்டும், நடனமும் கலந்தது; அதனால்தான் “கல்யாணம் கட்டிக் கிட்டு ஓடிப்போலாமா?” என்று பாட்டும் டான்ஸும் கட்டாயம் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள் இல்லையா? அதற்குக் காரணம் நம் தமிழ் வாழ்க்கைதான் என்கிறார்கள் இல்லையா? இதே பாட்டும், நடனமும் கலந்த வாழ்க்கைதான் வங்காளிகளினுடைய வாழ்க்கையும். ஆனால் அவர்கள் சினிமாவில் அப்படி மசாலாக்கள் அவர்கள் சேர்ப்பதில்லையே, ஏன்?

சினிமாவை வங்காளிகள் ‘பொய்’ (‘boi’) என்று சொல்வார்கள். நாம் படம் என்று சொல்வதைத் தான் அவர்கள் ‘பொய்’ என்று சொல்வார்கள். அதற்கு புத்தகம் என்பது பொருள். சினிமா பார்க்க போகலாமா? என்று கேட்க,  ‘சொலுன், பொய் தேக் தே சொலி’ என்றுதான் சொல்வார்கள். படம் பார்க்க அல்ல – புத்தகம் பார்க்கப் போகிறேன் என்று. Mostly well known authors were brought on to the screen. அப்புறம் இல்லஸ்ட்ரேட் வீக்லியில் சி.ஆர்.மண்டி என்பவர் எடிட்டராக இருந்தார். அப்போது நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸோட ரீ-ப்ரொடக்‌ஷன்ஸ் எல்லாம் வரும் வீக்லியில். ஜெமினி ராய், டாகூர், கல்யாண் சென், பரிதோஷ், ஹுஸேன், அப்போ பாரிஸிலிருந்த டி ஸோஸா, அப்புறம கோவாவில் இருந்து ஒருவர், லக்ஷ்மண் பாய் இப்படி… I was drawn to all these artists..

இதற்கெல்லாம் முன்பு ஒருமுறை ஹிராகுட்டில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவர் சம்பல்பூருக்கு வருகிறார் என்று சொன்னார்கள். நானும், மிருணாள் காந்தி சக்கரவர்த்தியும் போனோம். அது தேர்தல் நேரம். ஆனால் அவர் அதற்காக வரவில்லை. நாங்கள் அதற்கு முன்பே Hindu view of life , Indian Philiosophy, Bhagwat Gita எல்லாம் படித்திருந்தோம். அவர் ஆங்கிலத்தில்தான் பேசினார். He was great orator. ரொம்ப அற்புதமாகப் பேசினார்.

(தொடரும்)

One Reply to “‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல்”

Comments are closed.