ரோபோட்கள்: ஞான உச்சமாகவும் விலக்கப்பட்ட கனிகளாகவும்

திரு.அரவிந்தன் நீலகண்டன் ஹாலிவுட் திரைப்படங்களில் அறிவியல், மூடநம்பிக்கை குறித்து எழுதும் தொடர் இது. இத்தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க : முதல் பகுதி | இரண்டாம் பகுதி | மூன்றாம் பகுதி | நான்காம் பகுதி

1811-12 இல் லூடைட் கலகங்கள் இங்கிலாந்தில் நிகழ்ந்தன. கைத்தறி தொழிலாளர்களும் கலவர கும்பல்களுமாக ஒரு கற்பனை தலைவனை சிருஷ்டி செய்து கொண்டு கைத்தறி இயந்திரங்களை உடைத்தெறிந்தனர். இன்றைக்கும் இயந்திர எதிர்ப்பு லூடைட்த்தனமானது என்று கூறப்படுகிறது.1818 இல் மேரி வொல்ஸ்டோ ன்க்ரேப்ட் ஷெல்லி என்கிற பெண்மணி “ப்ராங்கன்ஸ்டைன் அல்லது நவீன ப்ரொமிதீயஸ்” நாவலை எழுதினார்.

இந்நாவலின் எண்ணற்ற திரைச்சித்தரிப்புக்கள் இன்று வரை வந்த வண்ணமே உள்ளன. ஆனால் நாவலுக்கும் திரைச்சித்தரிப்புக்குமான ஒரு வேறுபாடு முக்கியமானது. சுவாரசியமானது. நாவலில் இந்த செயற்கை மனிதனை, புதிய மனிதனை, உருவாக்கும் அறிவியல் விஸ்தீரணமாக கூறப்படவேயில்லை. இன்னும் சொன்னால் அவனை சிருஷ்டிக்கும் காட்சி நாவலில் இல்லை. ஆனால் திரைப்படங்களில் இக்காட்சியே முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் நாவலில் இந்த சிருஷ்டி ஒருவித ரசவாதத்தால் செய்யப்பட்டதாக உணர்த்தப்படுகிறது. திரைப்படங்களிலோ பரிசோதனை சாலையில் மின்சாரம் மூலமாக இச்செயற்கை மனிதன் உருபெறுகிறான். ரசவாதத்திலிருந்து மின்சார தொழில்நுட்பத்துக்கு தாவிய இந்த திரைமாற்றம் சுவாரசியமானது. ப்ராங்கன்ஸ்டைனின் தொன்ம வேர்கள் யூத புனித நூலான தால்முட்டில் (Talmud) இருக்கின்றன. ஆதி மனிதன் கோலெம் (Golem) எனப்படும் ஆன்மாவற்ற இயந்திரமாகவே முதலில் இறைவனால் படைக்கப்பட்டான் என்பது யூத மறைநம்பிக்கை ஆகும். காபாலா எனும் மத்தியகால மறைஞான மரபில் ஞானியின் உச்சநிலை கோலெம் ஒன்றை உருவாக்குவதாகும். கோலெம் இறைநாம மகிமையால் உயிரூட்டப்படுவதாக யூத மரபிலும் விண்மீன்களின் சஞ்சார நிலையால் உயிரூட்டப்படுவதாக கிரேக்க அராபிய பண்பாடுகளிலும் கருதப்பட்டது.

கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் பட்ட கஷ்டங்களைத் தம் கதைக்களமாகக் கொண்டிருந்தன பெரும்பாலான கோலெம் கதைகள். உதாரணமாக 16 ஆம் நூற்றாண்டு பிரேக் (Prague) நகரத்தை மையமாகக் கொண்ட கதைகளில் கிறிஸ்தவர்கள் இறந்த குழந்தைகளின் சடலங்களை யூதக்குடியிருப்புகள் அருகே மறைத்து வைத்துவிட்டு பின்னர் யூதர்கள் தங்கள் மதச்சடங்குகளில் கிறிஸ்தவ குழந்தைகளைக் கொல்வதாகச் சொல்லி யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் தேடுவர். அங்கு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் கிறிஸ்தவர்கள் யூதக்குடியிருப்புகளை சூறையாடி யூதர்களைக் கொல்வர். இத்தகைய சூழ்நிலையில் அந்நகர யூதர்களின் ஆன்மிகத்தலைவர் ரபாய் கோலெத்தை உருவாக்குகிறார். கிறிஸ்தவர்கள் மறைத்து வைக்கும் குழந்தைகளின் சடலங்களை எடுத்து அப்புறப்படுத்தி விடுகிறது. யூதர்களை சூறையாட கிறிஸ்தவர்களுக்கு காரணங்கள் கிடைக்காமல் யூதர்கள் தப்புகிறார்கள். கோலெமின் உயிர் இறைநாமத்தால் ஏற்படுவது. யூதர்களின் வாராந்திர ஓய்வு நாளில் ரபாய் கோலெத்தின் வாயிலிருந்து இறைநாமத்தை எடுத்துவிடுவார். அது உயிரிழந்து மண் பிண்டமாகிவிடும். ஒரு முறை சபாத் நாளில் ரபாய் அப்படி வைக்காமல் விட்டுவிடவே கோலெம் தாறுமாறாக நடக்க ஆரம்பித்துவிடுகிறது. ரபாய் கஷ்டப்பட்டு அதனை அடக்கி தூங்க வைத்துவிடுகிறார். கிழக்கு ஐரோப்பிய யூதக்குடும்பங்கள் சிலவற்றில் இன்னும் அந்த கோலெத்தை எழுப்ப சொல்லப்பட வேண்டிய மறைஞான சொற்கள் குழந்தைகளின் பாடல்கள் வடிவில் சொல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனவாம். ஒரு பெரிய உலக நெருக்கடியின் போது கோலெத்தை உயிர் கொடுத்து துயிலெழுப்பும் அந்த மந்திரச் சொற்கள் சொல்லப்படுமாம்.

நிறுவன கிறிஸ்தவ இறையியல் பார்வையை ஆதாரமாகக் கொண்ட பண்பாட்டில் இந்த யூதமறைஞானம் முழுமையாக மாற்றமடைகிறது. இத்தகைய செயற்கையான மனிதனை அல்லது இயந்திர மனிதர்களை உருவாக்குவது இறைவனின் படைப்புக்கு மனிதன் விடும் சவாலாகக் கருதப்பட்டது. ஐஸக் அஸிமாவ் கூறுகிறார்:”செயற்கை மனித இயந்திரத்தை உருவாக்குவது மானுட அகங்காரத்தின் வெளிப்பாடாக காணப்பட்டது. …மானுடனை ஆன்மாவுடன் உருவாக்குவதென்பது கடவுளால் மட்டுமே முடிந்த ஒன்று. எனவே மனிதன் உருவாக்கும் செயற்கை மனிதன் ஆத்மா இல்லாத ஒரு வக்கிரமே. எனவே ஒரு செயற்கை மனிதனை உருவாக்குவதே தீமையில் தான் முடியும் ஏனெனில் மனிதன் அறியப்படக்கூடாத இரகசியங்கள் இருக்கின்றன என்பதே மீண்டும் மீண்டும் (புனைவுகள் மூலமாக) உபதேசிக்கப்பட்டன.” ரோபாட் அதன் உச்சத்தில் மற்றொரு விலக்கப்பட்ட கனி. ஐஸக் அஸிமாவ்வின் மொத்த ரோபாட் சிறுகதைத் தொகுப்பு “The Complete Robot”. இத்தொகுப்புக்கான முகவுரையில் மேற்கத்திய அறிவியல் புனைவுகளில் ரோபாட்களின் சித்தரிப்புகள் இருவகையாகவே இருப்பதாக அவர் கூறுகிறார். ஒன்று அவை ஆபத்தான தொந்தரவாகவோ அல்லது உள்ளூற உணர்ச்சிகளைக் கொண்டவையாகவோ மட்டுமே அணுகப்பட்டன. இந்த இருவகை சித்தரிப்புக்கள் அடிப்படையில் இந்த யூத-கிறிஸ்தவ மாறுபட்ட அணுகுமுறைகளிலிருந்து வந்திருக்கக் கூடும். ஆனால் அஸிமாவ் இந்த இருவித சித்தரிப்புகளைத் தாண்டி ரோபாட்களைத் தொழிற்சாலை படைப்புகளாக சித்தரிக்கலானார். அத்தகைய சித்தரிப்பில் கூட எத்தனை விதமான கற்பனை சாத்தியங்கள் வெளியாயின என்பது சுவாரசியமான விஷயம்.

ரோபாட் என்கிற பதம் முதன் முதலாக புகழ்பெற்ற செக்கோஸ்லேவோக்கிய எழுத்தாளர் கார்ல் கோபெக் என்பவரால் 1920 இல் அவர் எழுதிய நாடகத்தில் பிரபலப்படுத்தப்பட்டது. Rossum’s Universal Robots எனும் இந்த நாடகத்தைத் தொடர்ந்து “ந்யூட்ஸுகளுடனான போர்” (War with the Newts) எனும் நாவலையும் அவர் எழுதினார். இவை இரண்டிலுமே மனிதர்கள் உருவாக்கும் இயந்திர வேலையாட்களின் கலகமே கதைக்கருவாக அமைந்தன. அஸிமாவ் இவற்றின் இலக்கியத்தரத்தையும் அறிவியல் பார்வையையும் மிக மோசமானதெனக் கருதினாலும் ரோபாட் என்கிற பதத்தை பிரபலப்படுத்தியதன் மூலம் கோபெக்கின் நாடகம் ஒருவித அழியாத்தன்மையை அடைந்துவிட்டதாகக் கருதுகிறார்.

பொதுவாக ரோபாட்களை நான்கு விதமாக பிரிக்கலாம். பொத்தாம் பொதுவான இயந்திர மனிதர்கள் (ரொம்ப இயந்திரம் – ஆனால் மனிதர்கள் உடலமைப்பை ஒத்திருக்கும்). அடுத்ததாக அச்சு அசலாக மனிதர்கள் போலவே இருக்கும் ரோபாட்கள் ஆனால் உள்ளே இயந்திரங்களே இருக்கும். இவை ஹூமனாய்ட்கள் (Humanoids). பிறகு தொடக்கத்தில் மனிதர்கள் ஆனால் அவர்களின் உயிர்நிலை உறுப்புக்களின் இடங்களில் இயந்திரங்கள் செயல்படுகின்றன. இவை/இவர்கள் ஸைபார்க்குகள் (Cyborgs). அடுத்ததாக செயற்கை அறிவு (Artificial Intelligence)- கண்ணுக்குத் தெரியும் ஸ்தூலமான வடிவத்தில் இருக்க வேண்டியதில்லை.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ரோபாட்களில் மூத்தது ரோபி (1956) இது வந்த ஸைஃபி திரைப்படம் விலக்கப்பட்ட கிரகம் (Forbidden Planet). இத்திரைப்படம் உண்மையில் ஷேக்ஷ்பியரின் Tempest நாடகக்கருவை அடிப்படையாகக் கொண்டது. அந்நாடகத்தில் வரும் ஏரியல் (Ariel) இங்கெ ரோபி. கைவிடப்பட்ட அன்னிய கிரகத்தில் முன்பிருந்த கிரகவாசிகளின் தொழில்நுட்ப ஆவணங்களிலிருந்து அங்கு விண்கரை ஒதுங்கிய ஒரு விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது ரோபி. ரோபியால் கொல்ல இயலாது எனும் விதி அதனுள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பெயரும் இந்த விதியும் அஸிமாவ்வின் 1950 களில் வெளியான “ரோபாட்டாகிய நான்” (I, Robot) எனும் சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த ரோபாட் விரைவில் குழந்தைகள் பொம்மையாக பிரபல கலாச்சாரத்தில் புகழ் அடைந்தது.

irobot

மிகவும் பிரபலமான ஸ்டார்வார்ஸ்ஸில் இரண்டு ரோபாட்கள் வருகின்றன. R2-D2 என்கிற குட்டி ரோபாட் மற்றது C-3PO. இவை இரண்டுமே வேடிக்கையான பாத்திரங்கள். இந்த வேடிக்கையான நடத்தை கொண்ட ரோபாட்களின் பார்வையில்தான் கதை நகர்கிறது. இவை திரை உக்திகள் என்கிற முறையில் அகிரா குரோஸாவாவின் “மறைவான கோட்டை” (The Hidden Fortress, 1958) எனும் திரைப்படத்தில் வரும் உக்தியிலிருந்து கடன்வாங்கப்பட்டவை. திரை உக்தியாக புகுத்தப்பட்ட இந்த ரோபாட்கள் இத்துறை அறிவியலாளர்களுக்கு உத்வேகமாக அமைந்துவிட்டதுடன் தமக்கே உரிய ஆளுமையையும் ரசிகர் கூட்டத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டன. மற்றொரு வேடிக்கையான ரோபாட் 1986 இல் வெளிவந்த “ஷார்ட் சர்க்யூட்” எனும் திரைப்படத்தில் அறிமுகமானது. பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. அமைதியின் முக்கியத்துவமும் அணு ஆயுத குவியலும் உலகை நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருந்தன. SAINT எண்-5 என்று மட்டுமே அறியப்படும் செயற்கை அறிவு கொண்ட ரோபாட் அது. அதனை உருவாக்கிய அறிவியலாளர்கள் அது இசைக்கருவிகளை பயன்படுத்துவதை பார்க்க ஆவல் கொண்டிருந்தாலும் அரசாங்கமும் ராணுவமும் அதனை அழிவுக்கருவியாக பயன்படுத்தவே ஆவல் காட்டுகின்றன. இந்நிலையில் எண்-5 தப்பிச்சென்று நாடோ டி வாழ்க்கை வாழும் ஒரு விலங்கு நேசி கதாநாயகியின் வீட்டுக்குள் (அது ஒரு வேன்) வந்து விடுகிறது. வேடிக்கையை நோக்கமாகக் கருதி உருவாக்கப்பட்டிருந்ததுதான் இத்திரைப்படம். ஆனால் உள்ளூடே அந்த ரோபாட் புகழ்பெற்ற கத்தோலிக்கத் துறவியும் விலங்குகள் நேசருமான அசிசியின் பிரான்ஸிஸை பிரதியெடுத்து உருவாக்கப்பட்டிருந்தது. இராணுவம் இந்த ரோபாட்டுக்கு அளித்த சுருக்கப்பெயரான SAINT என்பதன் முழுமை Strategic Artificially Intelligent Nuclear Transport என்பது

ஹாலிவுட் ரோபாட்கள் அனைத்துமே வெகு தூரத்தில் இருக்கும் எதிர்காலத்திலோ அல்லது வெகு அருகிலிருக்கும் எதிர்காலத்திலோ அமைந்தவை அல்ல. 1994 இல் அலாஸ்கா எரிமலைக்குள் சென்று ஆராய்ச்சி செய்ய தாந்தே-2 (Dante-II) பயன்படுத்தப்பட்டது. அந்த ரோபாட் சிலந்தி-கால்கள் அமைப்புடன் எரிமலைக் குழிக்குள் இறங்கியது பின்னர் திரும்பும் போது இடறிவிடவே அதனை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கவேண்டியிருந்தது. 1997 இல் வெளிவந்த Dante’s Peak திரைப்படத்தில் சிலந்திகால்கள் (Spider legs) எனும் பெயருடன் காட்டப்பட்டரோபாட் தாந்தே-2வின் பிரதியாகவே அமைந்தது.

ஹுமனாய்ட்களில் புகழ்பெற்றது டெர்மினேட்டர் திரைத்தொடர்களில் வந்த ரோபாட்கள். எவ்வித ரசனையும் இல்லாமல் முழுக்க முழுக்க அடிதடி என அர்னால்ட் ஸ்வாஸ்நெக்கருக்காக உருவாக்கப்பட்டவை இவை. ஸைபார்க்குகளில் ரோபோகாப் திரைத்தொடர்கள் புகழ்பெற்றவை. தொலைக்காட்சித் தொடர்களில் வந்த நைட்ரைடர் கார் உருவில் இருக்கும் செயற்கை அறிவு. ஸ்டீபன் கிங்கின் “கிறிஸ்டைன்” காரின் வடிவில் செயல்படும் தீய சக்தி குறித்தது. அமெரிக்க கலாச்சாரத்தில் காரின் மீதான காதலிலிருந்து இவை இரண்டும் பிறந்தன எனலாம். கிறிஸ்டைனில் காருக்கு பெண்மைத்தன்மை இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தருணத்தில் இந்த காரினால் இறக்கப் போகும் எதிர்-கதாநாயாகன் அதனை மணந்து கொள்வதாகவே ஒரு காட்சியை காண்கிறான். சேதமடைந்த அந்த காரை வேர்க்க விறுவிறுக்கத் தள்ளிக் கொண்டு போகும் போது. பின்னர் அந்த கார் தன்னாலேயே இயங்கி கொலைகளைச் செய்கிறது. ஸ்டீபன் கிங்கின் பல கதைகளில் தொழில்நுட்ப எதிர்ப்பு இருப்பதை காணலாம். இந்த எதிர்ப்பு சமூக ரீதியிலான பரிமாணத்தை உள்ளடக்கி இருந்தாலும் அதன் ஆதாரமாக திகழ்வது “மானுடம் அறியப்படக் கூடாதென விலக்கப்பட்ட கனியாக” தொழில்நுட்பத்தைப் பார்க்கும் பார்வைதான்.

அடுத்து செயற்கை அறிவை ஹாலிவுட் திரைப்படங்கள் அணுகும் முறையை காணலாம். ஆனால் முடிப்பதற்கு முன்னால் ஒரு நிஜவாழ்க்கை சம்பவம். இஸ்ரேலின் முதல் கம்ப்யூட்டர் கோலெம் என அந்நாட்டு முதன்மை ராபியால் பெயரிடப்பட்டது பலரை வியந்து பார்க்க வைத்தது. அதைவிட சுவாரசியமான ஒரு கதை MIT எனும் மாசசூசட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வழங்குகிறது. செயற்கை அறிவு விஞ்ஞானத்தில் மிக முக்கியமான முன்னடைவுகளை கண்ட ஆராய்ச்சி நிறுவனம் இது. இங்கு செயற்கை அறிவு துறையில் பணியாற்ற சேர்ந்த இரண்டு ஆராய்ச்சி மாணவர்களைக் குறித்தது இது. இன்று இவர்கள் இருவருமே முக்கிய பேராசிரியர்கள் (Gerry Sussman & Joel Moses) இருவரும் கிழக்கு ஐரோப்பிய யூதக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இஸ்ரேலிய கம்ப்யூட்டர் கோலெம் என பெயரிடப்பட்டதைக் குறித்தும் கிழக்கு ஐரோப்பிய ஐதீகத்தில் ரபாய் கோலெத்தை அழித்தது குறித்தும் பேச்சு எழுந்த போது. ஜோயெல் மோஸஸ் இந்த கோலெம் கதையில் வரும் ரபாயின் ஒரு கிளை சந்ததியே தாம் என அவர் தாத்தா அவரிடம் சொல்லி அந்த கோலெமை எழுப்புவதற்கான மந்திர உச்சாடனத்தைக் கொடுத்திருந்தைச் சொன்னாராம். அதைக் கேட்டதும் ஸூஸ்மானும் இதே போல தனது தாத்தாவும் தன்னிடம் கூறியதை நினைவுக்கூர்ந்தாராம். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சக ஆராய்ச்சி மாணவர்கள் இந்த உச்சாடனத்தை அவர்களிடம் தனித்தனியாக எழுத சொன்னார்களாம். பிறகு ஒப்பிட்டுப் பார்த்த போது இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்டு வியந்தார்களாம். அப்போது செயற்கை அறிவு புலத்தின் தந்தை என்றே கருதப்படும் மார்வின் மின்ஸ்கியும் அங்கே வந்தாராம். அவரும் கிழக்கு ஐரோப்பிய யூதவம்சாவழியினர்தாம். ஆராய்ச்சி மாணவர்களின் இந்த வியப்பினைப் பார்த்துவிட்டு சொன்னாராம், ” அட இந்த பைத்தியக்கார மூடநம்பிக்கை இன்னும் இருக்கிறதாக்கும்! என்னுடைய தாத்தாவும் இதே போல என்னிடமும் சொன்னார். ஆனால் அந்த மந்திர சமாச்சாரமே முழு மூடநம்பிக்கை என எனக்குத் தோன்றியதால் அந்த மந்திரத்தையே நான் மறந்துவிட்டேன்.”

2 Replies to “ரோபோட்கள்: ஞான உச்சமாகவும் விலக்கப்பட்ட கனிகளாகவும்”

Comments are closed.