மரங்கள் இல்லாத நிலம் பயங்கரமானது

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ஆம் தேதி ‘உலக சுற்றுச்சூழல் நாளாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்ற வாரம் அனுசரிக்கப்பட்ட இந்த நாளை முன்னிட்டு மரங்கள் பற்றியும்,  இயற்கையுடனான மனிதர்களின் உறவு பற்றியும் ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுகளில் சிலவற்றை இங்கே திரு.வ.ஸ்ரீனிவாசன் மொழிபெயர்ப்பில் தருவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

krishnamurti1மாணவன் (மா) : ஐயா, இங்கே ரிஷி வேலி (Rishi Valley) பள்ளியில் இருக்கும்போது நாங்கள் ஏதாவது இசைக் கருவிகளை வாசிக்கிறோமா, என்று நீங்கள் கேட்டீர்கள். நாங்கள் பாடுகிறோமா, சித்திரம் தீட்டுகிறோமா, கவிதைகள் எழுதுகிறோமா, மரங்களை நட்டு ஒரு அழகான தோட்டத்தை உருவாக்குகிறோமா என்றும் நீங்கள் கேட்டீர்கள். நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன் ஐயா :  ‘நாங்கள் எதற்காக மரங்களை நட வேண்டும்?’

ஜே. க்ருஷ்ணமூர்த்தி (கே) : நீங்கள் உங்களை ஏன் அழகு படுத்திக் கொள்கிறீர்கள்? ஏன் குளிக்கிறீர்கள், நல்ல ஆடைகளை அணிந்து கொள்கிறீர்கள், கண்ணாடியில் உங்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா, மரங்கள் இல்லாத ஒரு நிலம் பயங்கரமானது, அது ஓடுகின்ற நீர் அற்ற நிலத்தைப் போன்றது: ஒரு நதி. ஒரு ஆற்றின் அருகில் நீங்கள் எப்போதாவது அமர்ந்து இருக்கிறீர்களா? அதனுடன் மிதந்து செல்லும் அனைத்துடனும் அதைக் கவனித்திருக்கிறீர்களா? அது எடுத்துச் செல்லும் மாசு, பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், மற்றும் அனைத்து இதர இறந்த விஷயங்களை நீங்கள் பார்த்ததுண்டா? அதற்கும் அப்பால் தெளிந்த, தூய்மையான நீரைப் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் எப்போதாவது மரங்களை கவனித்திருக்கிறீர்களா? அசாதாரணமானவை இல்லையா? அவை நிழல் தருகின்றன. எழில் சேர்க்கின்றன. எங்கெல்லாம் அதிக மரங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அதிக மழை பொழிய வாய்ப்பிருக்கின்றது.

மரங்கள் பூமியை அழகாக்குகின்றன. பறவைகள் அவற்றுக்கு வருகின்றன. நீங்கள் ஒரு மரம் நட்டால் அதைக் கவனியுங்கள். ஒரு மரத்தை வளர்க்கையில், அதற்கு நீங்கள் சிரத்தை எடுக்கையில், இந்த பூமியின் ஒரு பகுதி நீங்கள் என்கிற – புத்தி அளவில் மட்டும் அல்லாத – உணர்வை அது தருகிறது.

மா : ஐயா, நான் ஒன்று சொல்லட்டுமா? மரங்கள் நாம் பயன் படுத்தும் சோப்பைக் கொடுக்கின்றன.

கே : ஆம், அனைத்து உபயோகப் பொருட்களையும். தருக்கள் நமக்கு  மரத்தைத் (wood) தருகின்றன. சம்ஸ்க்ருத மொழியில் மரத்தைக் குறிக்கும் வார்த்தைகளில் ஒன்று அது பயன்படு பொருள், உபயோகமானது, அதிலிருந்து பொருட்களைச் செய்யலாம் என்கிற அர்த்தத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.

பகல் வேளைகளில் ஒரு மரம் உங்களை வரவேற்கிற மாதிரி, திறந்து, வடிவழகோடு தெரிவதையும், மாலையில் அது எப்படியோ உள்வாங்கிக் கொண்டு, மூடிக்கொண்டு இருப்பதையும் நீங்கள் கவனித்ததுண்டா என்று எனக்குத் தெரியவில்லை.

ஒவ்வொருவரும் ஒரு செல்லப் பிராணியை வைத்திருப்பது இயலாத ஒன்று. செல்லப்பிராணி என்கையில் நான் ஒரு நாயை, பூனையை, பறவையை, குதிரையை – நீங்கள் அக்கறையெடுத்துக் கொள்கிற, நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிற ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் அதை ‘ப்ரஷ்’ செய்வீர்கள், அதற்கு சீவி விடுவீர்கள், அதற்கு நோய் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். நீங்கள் அதையும் அது உங்களையும் நேசிக்கையில், உங்களையும், – சேலைகள் வேண்டும், ‘கோட்’கள் வேண்டும்  பார்ப்பதற்கு எப்படி இருக்கிறோம் என்று வியந்து கொண்டு  இவை போன்ற – உங்களைப் பற்றிய விஷயங்களையும் மட்டுமின்றி வேறு ஏதோ ஒன்றை நேசிக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும்.

அநேகம் பேர் எல்லா நேரமும் தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மரங்கள் நட்டால், ஒரு தோட்டம் வைத்தால், உங்களைப் பற்றியே இருக்கும் இந்த நினைப்பை நிறுத்த அது உதவும்.

வேறொன்றையும் நீங்கள் கவனைத்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவில் வெகு சிலரே ஒரு தோட்டத்தை அமைக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதைக் கவனித்து இருக்கிறீர்களா?

கீழே போய் அவர்கள் கற்களை எடுத்துவிட்டு புதர்களையும், மரங்களையும் நடுவதைப் பாருங்கள். ஐரோப்பாவிலும், அமெரிக்காவில் கலிஃபோர்னியாவிலும் நான் இதைச் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் பூமி வெறும் இடிந்த கற்களாகவும், புதராகவும், பாறைகளாகவும் இருக்கும். அவற்றையெல்லாம் களைந்துவிட்டு மரங்களை நட்டேன். எதை நடப் போகிறோம் என்று யோசிக்கையில், ஒரு கல்லை அங்கே வைக்க வேண்டும், பெரிய பாறையை அங்கே வைக்க வேண்டும், அங்கே நட வேண்டும் என்று எண்ணுகையில் நீங்கள் ஏதோ ஒன்றை போற்றத் தொடங்குகிறீர்கள். நீங்கள் அழகான ஏதோ ஒன்றை உருவாக்குகிறீர்கள். இந்தியாவில் வெகு சிலரே – பணக்காரர்களிடையே கூட – இதையெல்லாம் செய்கிறார்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் அதைச் செய்யக் கூடாதா? நிலத்திலிருந்து ஏதோ ஒன்றை செய்வது – அது கல்வியின் ஒரு அங்கம் இல்லையா?  நீங்கள் படிக்காவிட்டால் உங்கள் மூளை மந்தமாகும். அதே போல் உங்களைச் சுற்றியுள்ள பூமியைப் பாருங்கள். கவனிக்காமல் விட்ட குழந்தையைப் போல் அது இருக்கிறது. ஐரோப்பாவில் வெகு அழகான சில தோட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். இருநூறு, முன்னூறு வருடப் பழமையானவை. அழகான புல்தரைகள். நூற்றாண்டுகளாக நீர் பாய்ச்சப்பட்டு, கத்தரித்து சீர் செய்யப் பட்ட அப்புல்தரைகள் – நாம் அதன் மேல் நடக்க அஞ்சும் ஒரு தரை விரிப்பைபோல். அது போன்ற பூமியின் மீதான அக்கறை, குழந்தைகள் மீதான அக்கறை – அதுவே நல்ல கல்வி என்று நான் நினைக்கிறேன்.

மா: ஐயா, நம்மிடம் ஒரு பூனை இருந்து நாம் அதைக் கவனித்துக் கொண்டால் அது நம்முடன் விளையாடும். ஆனால் ஒரு மரம் நட்டால் அது வளர்ந்து பயன் தர பல வருடங்கள் ஆகும்.

கே : வேறு யாரோ அதனால் பயனடைவார்கள். ஐரோப்பவிலும், அமெரிக்காவிலும் நான் நட்ட மரங்களை நான் பெரும்பாலும் பார்க்கவே போவதில்லை. ஆனல் ஒரு மரத்தை நடுவது என்பது ஜாலியான (fun) ஒரு விஷயம். யாரோ அதன் பயனை அடைவார்கள்.

நீங்கள் மரங்களை நட்டு அவற்றைக் கவனித்துக் கொண்டால் ஒருவேளை நீங்கள் திருமணமாகி ஒரு குழந்தையுடன் இங்கு வருகையில் அவன் “கடவுளே (by jove) எத்தனை அழகு’ எனலாம். மேலும் நீங்கள் மரங்களைப் பற்றி மிகப் பலவற்றையும் தெரிந்து கொள்வீர்கள். என்ன மாதிரி மண் வேண்டும் – அமிலத்தன்மையது, உப்பு தன்மையது, நைட்ரஜன் இருப்பது என்று – அதை நீங்கள் கவனித்துக் கற்பீர்கள். ஒரு ரோஜாவை நட வேண்டுமென்றால் ஆழமாக தோண்டவேண்டுமென்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். (அமெரிக்கர்கள் சொல்வது போல்: இரண்டு டாலருக்கு ரோஜா வாங்கி, பத்து டாலருக்கு குழி வெட்ட வேண்டும்). பிறகு நீங்கள் அந்தச் செடியை (nourish) அக்கறையோடு கவனித்துக் கொள்வீர்கள், அதற்கு உரமிடுவீர்கள். எனவே உங்கள் மனம் – உங்களுடுடைய அடுத்த வேலையைப் பற்றி, உங்கள் மனைவி அல்லது கணவரோடான சண்டையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிற – இறந்து போனதாய் இருக்காது. அது விழிப்பாய் இருக்க ஆரம்பிக்கிறது.

இங்கு தூரதர்சினி (telescope) இருக்கிறதா? நீங்கள் எப்போதேனும் நட்சத்திரங்களைப் நோக்கியதுண்டா? எவ்வளவு ஆச்சர்யமான விஷயங்கள் வானத்தில் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இவ்வனைத்து நட்சத்திரங்களையும், கோள்களையும், பால் வெளியையும் பார்க்கிறீர்கள். அவையெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று பிரமாதமான (terrific) வேகத்தில் தள்ளி நகர்ந்துகொண்டே இருக்கின்றன. எத்தனை மில்லியன் நட்சத்திரங்கள் அங்கே இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்யலாம். ஒன்றையொன்று தூரத் தள்ளிக் கொண்டு…. எவ்வளவு ‘வெளி’ (space) என்று எண்ணிப் பாருங்கள்.

(சுட்டிக் காட்டியபடி) அங்கே அணில்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? முன்னால் ஒரு பெரிய துவாரம் இருக்கிறது. அதைப் பார்த்தீர்களா?

மா : ஆமாம்.

கே : நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் இங்கே இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? எனக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ வந்துவிடும், நான் அதிகம் சூரிய வெப்பத்தில் நடப்பதில்லை. ஆயினும் நான் அங்கு ஒரு மரத்தை நடுவேன். அதற்கு முதல் தரமான உரத்தை போடுவேன். அந்த துவாரம் எனக்கு மனதைக் குறிக்கிறது. கிரிக்கட் விளையாடுவதில், படிப்பதில், சண்டை போடுவதில் நீங்கள் மூழ்கியுள்ளீர்கள். உங்களுக்கு என்றும் பூமியைப் பற்றி அக்கறை இல்லை. பூமியின் பால் உங்களுக்கு அக்கறை இல்லையென்றால் நீங்கள் வாழ்வதே இல்லை. ஆனால் யாரோ ஒருவர் அதன்பால் அக்கறை கொண்டுள்ளார். பயிரிடுபவர்.

-ரிஷி வேலி, ஃபிப்ரவரி, 1956.

************

tree

பூமியிலிருக்கும் ஒவ்வொரு மரத்தின், புதரின், பூவின் நண்பன்.

பச்சையான, ஜொலிக்கும் நிலங்களினூடே சூரிய ஒளியால் பிரகாசமான வனத்திலும் அதற்கப்பாலும் போகும் பாதை ஒன்று உள்ளது. ஒளியாலும், நிழல்களாலும் நிரம்பிய இவனத்திற்குள் யாரொருவரும் வருவதில்லை. அது மிக அமைதியாக, நிசப்தமாக, தனித்து இருக்கிறது. அங்கு அணில்களும், எப்போதேனும் கவனம் மிகுந்த வேகம் மிகுந்த மானுமிருக்கும். கிளைகளிலிருந்து அணில்கள் உங்களைக் கவனிக்கின்றன; சிலசமயம் திட்டுகின்றன. கோடையின் வாசனையும், ஈர மண்ணின் மணமும் இக்காட்டில் இருக்கின்றன. பழைய, பாசி படிந்த, பிரும்மாண்டமான மரங்கள் இருக்கின்றன. அவை உங்களை வரவேற்கின்றன, நீங்கள் அவ்வரவேற்பின் மனமார்ந்த அன்பை உணர்கிறீர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் அங்கு அமர்ந்து அற்புதமான நீல வானத்தை கிளைகள் மற்றும் இலைகள் வழியாக நிமிர்ந்து பார்க்கையில் அந்த அமைதியும் வரவேற்பும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.  நீங்கள் மற்றவர்களோடு வனத்தினூடே போனீர்கள்; ஆனால் அப்போது விலகி நிற்கும் தனிமையும், நிசப்தமுமிருந்தன. மரங்களின் காம்பீர்யத்தையும், கண்ணியத்தையும் அறியாத, கவனிக்காத மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவற்றோடு உறவில்லை. ஒருவேளை அவர்கள் ஒருவருக்கொருவர் இடையேயும் உறவில்லை.

உங்களுக்கும் மரங்களுக்கும் இடையே ஆன உறவு முழுமையானதும், உடனடியானதும் ஆகும். அவையும் நீங்களும் நண்பர்கள். எனவே நீங்கள் பூமியிலிருக்கும் ஒவ்வொரு மரத்தின், புதரின், பூவின் நண்பன். நீங்கள் அங்கே அழிப்பதற்காக இல்லை எனவே அவற்றுக்கும் உங்களுக்கும் இடையே அங்கு சாந்தி இருந்தது.

(க்ருஷ்ணமூர்த்தியின் சஞ்சிகை.)

***********

நான் இயற்கையின் ஓர் அங்கம். நாம் வாழும் இந்த மிருகத்தனமான உலகை அதன் அத்தனை கொடூரங்கள், பயங்கரவாதம் முதலியவற்றோடும்,  நாம் வாழும் இவ்வசாதாரணமான உலகின் ஒவ்வொரு பகுதியின், நதிகளின், நிலத்தின் அழகையும் புரிந்து கொள்ளாமல்  என்னைப் பற்றிய ஒரு தெளிந்த பார்த்துணர்தல் (perception) எனக்கு எப்படி இருக்க முடியும்? இவை அனைத்தோடும் எனக்கான உறவு என்ன? நான் அவையனைத்திற்கும் பார்வையின்றி இருக்கிறேனா? அவை அனைத்திற்கும் வாய்மூடி இருக்கிறேனா? அல்லது எனக்கு இருக்கும் குறிப்பிட்ட தீர்மானமான முடிவுகள் என் மீது அதிகாரம் செலுத்துகின்றனவா? முடிவுகள் எண்ணத்தின் விளைவு. இயற்கை எண்ணத்தின் விளைவு அல்ல.

(ஒரு உரையாடலில்)

*******

எனவே ஒன்றரை மணி அல்லது எவ்வளவு நேரமோ கழிந்து நீங்கள் உங்கள் சகல பிம்பங்களையும் விட்டு விட்டு வெளியே செல்கிறீர்கள். அதை முதன் முறையாகப் பார்ப்பது போல் மரத்தைப் பார்க்கிறீர்கள். அப்போது அந்த மரத்தின் எழிலால் உங்கள் கண்களில் நீர் துளிர்க்கும். பிறகு நீங்கள் மலைகளையும், குன்றுகளையும், நிழல்களையும் முன்பெப்போதும் பார்த்திராததனால் பார்ப்பீர்கள். பிறகு உங்கள் மனைவியை, நண்பரை, கணவரை முதன் முறையாகப் பார்ப்பீர்கள்; அவையனைத்தின் அழகையும் முதன் முறையாகக் காண்பீர்கள். அப்போது உங்களை நீங்கள் ஒரு பிம்பமுமின்றி பார்ப்பீர்கள். நீங்கள் ஒன்றுமேயில்லை என்பதை உணர்வீர்கள். முழுமையாக ஒன்றுமில்லாமல் இருப்பதில் மிகப் பெரிய அழகு இருக்கிறது. அப்போது உண்மை என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

(சானென் ஆகஸ்ட் 6, 1972.)

***********

tree23

பயன்பாட்டால் நிர்ணயிக்கப் பட்ட நோக்கத்துடனே நாம் மரங்களைப் பார்க்கிறோம்.

நாம் ஒருபோதும் ஒரு மரத்தைப் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தாலும் அந்த மரத்தை உபயோகப் படுத்தும் நோக்கில்தான் அதைச் செய்கிறோம், அதன் நிழலில் அமர்வதற்கோ, அல்லது அதை தட்டு முட்டு சாமான்களுக்காக வெட்டுவதற்கோ. வேறு வார்த்தைகளில் சொன்னால் பயன்பாட்டால் நிர்ணயிக்கப் பட்ட நோக்கத்தில்தான் நாம் மரங்களைப் பார்க்கிறோம். நமது சௌகர்யத்துக்காக உபயோகப்படுத்துவதை கற்பனை செய்யாமல் நாம் ஒரு மரத்தை பார்ப்பதேயில்லை. நாம் மண்ணையும் அதன் பொருட்களையும் அதே விதத்தில்தான் நடத்துகிறோம். பூமியின் மீது அன்பு இல்லை, பயன் படுத்துவதுதான் இருக்கிறது. ஒருவர் உண்மையிலேயே மண்ணை நேசித்தால்  அம்மண் தரும் பொருட்களை பயன் படுத்துவதில் சிக்கனம் இருக்கும். அதாவது பூமியோடான நமது உறவைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பூமி தரும் பொருட்களை பயன் படுத்துவதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

ஒருவரின் இயற்கையோடான உறவைப் புரிந்துகொள்வது அவருக்கும் அடுத்த வீட்டுக்காரருக்கும், அவருக்கும் அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்வதைப் போல் கடினமானது. நாம் அதைப் பற்றி சிந்தித்ததே இல்லை. நட்சத்திரங்களை, நிலவை, மரங்களைப் பார்ப்பதற்காக நாம் உட்கார்ந்ததே இல்லை. நாம் சமுதாய, அரசியல்  செயல்பாடுகளில் மூழ்கி இருக்கிறோம். இச்செயல்பாடுகள் நம்மிடமிருந்து தப்புவதற்கானவை என்பது தெளிவு. மெலும் இயற்கையைத் தொழுவதும் நம்மிடமிருந்து தப்புவதற்காகவே.

நாம் எப்போதும் இயற்கையை உபயோகப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், தப்புவதற்காக அல்லது பயன்பாட்டிற்காக. நாம் எப்போதும் உண்மையாகவே நின்று பூமியையோ அதன் பொருட்களையோ நேசிக்கிறதில்லை. நமது உணவு, உடைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறோமேயன்றி, நாம் மிகச் செழுமையான வயல்வெளிகளை கண்டு மகிழ்வுறுவதில்லை. நமது கைகளைக் கொண்டு நிலத்தை உழ நாம் விரும்புவதில்லை. நமது கரங்களால் வேலை செய்வது குறித்து நாம் அவமானம் கொள்கிறோம். உங்கள் கைகளால் நிலத்தில் நீங்கள் உழைக்கையில் ஒரு அசாதாரணமான விஷயம் அங்கே நிகழ்கிறது. ஆனால் இந்த வேலை கீழ் ஜாதி மக்களாலேயே செய்யப் படுகிறது.

மேல்தட்டு மக்களாகிய நாம் நமது கரங்களையே உபயோகிக்க முடியாத அளவுக்கு மிக முக்கியமானவர்கள்! எனவே நாம் இயற்கையுடனான நமது உறவை இழந்து விட்டோம். அந்த உறவை, அதன் முக்கியத்துவத்தை நாம் ஒரு தடவை உணர்ந்து கொண்டிருந்தால், சொத்தை உனதென்றும் எனதென்றும் பிரித்துக் கொள்ள மாட்டோம். ஒருவருக்கு ஒரு துண்டு நிலம் சொந்தமாயிருந்து அதில் அவர் ஒரு வீட்டையும் கட்டிக் கொண்டிருக்கலாம்; எனினும் அது ‘எனது’ அல்லது ‘உனது’ என்று பிறருக்கில்லாத பிரத்யேக உரிமை என்கிற பொருளில் இருக்காது. அது உறைவிடம் என்கிற அர்த்ததிலேயே இருக்கும். நாம் பூமியையும் அதன் பொருட்களையும் நேசிக்காமல் வெறுமனே பயன் மட்டும் படுத்துவதால் ஒரு அருவியின் அழகிற்கு நாம் நுண்புலனுணர்வு (sensitivity) அற்றவர்களாக இருக்கிறோம். வாழ்வின் தொடர்பை இழந்து விட்டோம். ஒரு மரத்தின் மீது சாய்ந்து நாம் அமர்ந்ததேயில்லை; எனவே நாம் இயற்கையை நேசிக்காததனால், மனிதர்களையும், விலங்குகளையும் நேசிப்பது எப்படி என்று நமக்குத் தெரியாது. தெருவில் இறங்கிப் பாருங்கள் அவற்றின் வால்களெல்லாம் வடிவற்றுப் போய் வண்டி மாடுகள் எப்படி நடத்தப் படுகின்றனவென்று. நீங்கள் உங்கள் தலையை ஆட்டி ‘ரொம்ப பரிதாபம்’ என்கிறீர்கள். ஆனால் நாம் மென்மையை, நுண்புலனுணர்வை, அழகான விஷயங்களுக்கான மறுமொழியை இழந்து விட்டோம்.  அந்த நுண்புலனுணர்வின் புதுப்பித்தலில்தான் நமக்கு உண்மையான உறவினைப் பற்றிய புரிதல் இருக்க இயலும். ஒரு சில ஓவியங்களை மாட்டுவதிலோ, ஒரு மரத்தை வரைவதிலோ, சில மலர்களைத் தலையில் சூடிக் கொள்வதிலோ அந்த நுண்புலனுணர்வு வருவதில்லை. இந்த பயன்பாட்டு நோக்கத்தை முற்றிலும் விட்டொதுக்கும் போது மட்டுமே அந்த நுண்புலனுணர்வு வரும். இதன் பொருள் நீங்கள் நிலத்தை உபயோகப்படுத்தவே கூடாது என்பதில்லை, அதை எப்படி உபயோகப் படுத்த வேண்டுமோ அப்படி உபயோகப் படுத்தவேண்டும். ‘உன்னுடையது’ ‘என்னுடையது’ என்று பிரிப்பதற்காகவன்றி, அன்பு செலுத்தப் படுவதற்காக, அக்கறையோடு கவனித்துக் கொள்ளப் படுவதற்காக இந்த பூமி உள்ளது. ஒரு சுற்றுச் சுவருக்குள் ஒரு மரத்தை நட்டு அது ‘என்னுடையது’ என்பது முட்டாள்தனம். பிறர் யாருக்குமின்றி எனக்கு மட்டுமே என்கிற தன்மையிலிருந்து விடு பெறும் போதே இயற்கைக்கு மட்டுமின்றி, மனிதர்க்கும் வாழ்க்கையின் முடிவில்லாத சவால்களுக்குமான நுண்புலனுணர்வு சாத்தியம்.

புனே, அக்டோபர் 17, 1948.