பாகிஸ்தானிய ஆங்கில இலக்கியம் – ஒரு பார்வை

பாகிஸ்தானில் இப்போது ஒரு புதிய அலை வீசிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் ஆங்கிலம் தெரிந்த எழுத்தாளர்களுக்கு இப்போது ஏகக் கிராக்கி! இங்கிலாந்து, அமெரிக்காவிலிருக்கும் சில முக்கிய பதிப்பகங்கள் பாகிஸ்தானியர்களின் கதையை வாங்கிக் காசாக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானிய நடைமுறை வாழ்க்கை மீது திடீரென்று மேற்குலகு மக்களுக்கு ஓர் பெரிய ஈடுபாடு வந்திருப்பது போன்றதொரு பிரமையை பதிப்பகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. கலீத் ஹுசைனி என்ற ஆஃப்கானிஸ்தானிய எழுத்தாளரின் The Kite Runner என்ற 2005-ஆம் வருட நாவலின் மாபெரும் வெற்றி மேற்கின் கவனத்தை ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இலக்கியத்தின் பக்கம் திருப்பியது. மோஹ்சின் ஹமித் (Mohsin Hamid) எழுதிய ‘The reluctant fundamentalist’ என்ற புதினம் 2007-ஆம் வருடத்தின் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. புக்கர் பரிசு வெல்லவில்லையென்றாலும் உலகின் வேறு பல இலக்கியப் பரிசுகளை வென்றது இப்புத்தகம்.

mohsinதொடர்ந்து சில மேற்குப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் இப்புத்தகத்தைச் சேர்த்துக்கொண்டன. நன்றாகப் படித்து, அமெரிக்காவில் வேலை செய்து பணம் சம்பாதித்த ஒரு பாகிஸ்தானியருக்கு, அமெரிக்கா மீது கொஞ்ச கொஞ்சமாக ஏற்படும் வெறுப்பும், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப்பின் அமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர்கள் மீது ஏற்படும் வெறுப்பும் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தானுக்குத் திரும்பித் தன் வீடும், கிராமமும் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதைப் பார்க்கும் அவனுக்கு உலகின் மற்ற நாடுகள் மீது தீராத வெறுப்பு ஏற்படுகிறது. தன் வீட்டையும், கிராமத்தையும் தான் வெறுக்க நேரும் மனநிலைக்கு மேற்குலகும், இந்தியாவுமே காரணம் என முடிவு செய்கிறான். கிட்டத்தட்ட இதே சூழலில் மேற்கில் இஸ்லாமியர்கள் மீது ஏற்படும் சந்தேக மனோபாவம் அவன் வெறுப்பை மேலும் துரிதமாக்குகின்றது. அவன் ஒரு அடிப்படைவாதியாக மாறுகிறான்.

இது ஓர் சமூக அரசியல் நாவல். ஆரம்பத்திலேயே, இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முன்பே நாவலின் நாயகனுக்கு அமெரிக்கா மீது வெறுப்பு இருப்பதாக சித்தரிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் இந்த நாவலுக்கு ஒரு நடுநிலைமையும் கிடைத்துவிடுகிறது. இந்த நாவலின் பெரு வெற்றி, கிட்டத்தட்ட இதே அச்சுப்பிரதியில் வார்க்கப்பட்ட ஏகப்பட்ட பாகிஸ்தானிய – ஆஃப்கானிஸ்தானிய நாவல்களுக்கு வித்தாக அமைந்துவிட்டது. தீவிரவாதம், குண்டுவெடிப்பு, வறுமை, முஸ்லிம்கள் பல்வேறு விதங்களில் மேற்கில் அவமானப்படுத்தப்படுதல், அந்நிய நாட்டின் ஊடுருவல் (வேறு யார்? இந்தியாதான்!) இதெல்லாம் இந்தப் பாகிஸ்தானிய நாவல்களில் இடம்பெறும் பிரதி மாறாதக் கூறுகளாக இருக்கின்றன.

பாகிஸ்தானிய மக்களின் சமூக வாழ்வு நமக்கு மிக நெருக்கத்தில் இப்பிரதிகளிலிருந்து படிக்கக் கிடைப்பதில்லை. சமூக நிலை என்றால் பாகிஸ்தானிய மக்களின் ரத்தமும், சதையுமான நிலை இல்லை. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கி, வெளிநாட்டு மது அருந்திக்கொண்டே, அழகான, உணர்ச்சிகரமான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வறுமையின் சித்தரிப்புதான் அந்த நிலையாக முன்வைக்கப்படுகிறது. பாகிஸ்தானிய கிராமங்களின் நிலப்பகுதியோ, வாழ்க்கை முறையோ, அவர்களின் சிறு சந்தோஷங்களோ, பெருந்துயரமோ எதுவுமே நமக்குக் கிடைப்பதில்லை. இது தொடர்ந்து மேற்கின் கவனம் பெரும், இந்திய ஆங்கில மாதப்பத்திரிகைகளில் படிக்கக்கிடைக்கும் இந்திய ஆங்கில புனைகதைகளையே பிரதிபலிக்கின்றன. இப்படிப்பட்ட இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல் எழுத்தாளர்கள், இந்தியாவில் கலவரங்கள் நடக்கும்போதும், இந்தியர்கள் புக்கர் பரிசு வாங்கும்போதும் புற்றீசல் போல பத்திகளோ, புனைகதைகளோ எழுதுவார்கள். அவற்றிலிருந்து இவர்களை இனங்கண்டு கொள்ளலாம்.

a-case-of-exploding-mangoesஇது போக, உள்நாட்டு அரசியலை வைத்தும் ஏராளமான ஆங்கிலப் புதினங்கள் பாகிஸ்தானில் எழுதப்படுகின்றன. 2008-இல் மொஹம்மத் ஹனீஃப் எழுதிய ‘A case of Exploding Mangoes’ என்ற புதினம் இந்தியாவின் அனைத்து பிரபலமான புத்தகக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. பாகிஸ்தானின் நிலையாமை அரசியலை, ஜெனரல் ஜியா உல்-ஹக்கின் படுகொலையைப் பின்னணியாக வைத்து சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும் சொல்கிறது இந்த நாவல்.

அடிப்படையில் மொஹம்மத் ஹனீஃப் ஒரு இதழாளர். இவருடைய புத்தகமும், கட்டுரைகளும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிற சமூக நாவல்களை விட நேர்மையானவை என்று நினைக்கிறேன். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ‘பாகிஸ்தானைக் குறித்து இந்தியர்களுக்கு இருக்கும் தவறான அபிப்ராயங்கள்’ என்ற கட்டுரை சில முக்கியமான பார்வைகளை முன்வைத்தது. 1980-களில் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானிய இதழாளர்கள், இந்தியா பெரும் வறுமையில் இருக்கிறது, சேரிகளைத் தவிர அங்கே வேறெதுவும் இல்லை என்றொரு கருத்தை மகிழ்ச்சியோடு பரப்பினார்களாம். அதைப்போல பாகிஸ்தானில் சேரிகளே இல்லை, அங்கே பசியோடு யாரும் தூங்குவதில்லை என்ற கருத்தையும் இந்தியாவில் பாகிஸ்தானிய இதழாளர்களும், பாகிஸ்தானால் விலைக்கு வாங்கப்பட்ட இந்திய இதழாளர்களும் எழுதினார்கள். இக்கருத்துகளை மறுத்துச் சொல்லும் ஹனீஃப், இரண்டு நாடுகளிலும் வறுமை நிலவுகிறது. பாகிஸ்தானில் பசிக்கொடுமை தாங்காமல் தூக்குப்போட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள் என டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஹனீஃப். தம் ‘சொந்த செலவில்’ பாகிஸ்தானுக்குச் சென்று வந்துவிட்டு, அங்கே வறுமையே இல்லை, பிச்சைக்காரர்களே இல்லை என்றெழுதும் தமிழக ஆராய்ச்சியாளர்கள் படிக்க வேண்டிய கட்டுரை இது.

ஹனீஃப்பின் புத்தகம் கார்டியன் பத்திரிகையால், ‘சிறந்த முதல் புத்தகமாகத்’ தெரிவு செய்யப்பட்டதையடுத்து, மேற்கின் கவனம் அவர் மீது விழுந்திருக்கிறது. பல பதிப்பகங்களும் அவரை அடுத்த புத்தகத்துக்காக அணுகிய வண்ணம் இருக்கின்றன.

மொஹம்மத் ஹனீஃபை விட முக்கியமானதொரு பாகிஸ்தானிய ஆங்கில எழுத்தாளரை நியூயார்க்கர் சிறுகதைகள் வழியே சமீபத்தில் கண்டடைந்தேன். அவர் தானியால் முயுனுதீன். குலாம் முயுனுதீன் என்ற பாகிஸ்தானியருக்கும் (இவர் பிரிவினைக்கு முன் இந்திய சிவில் சர்வீஸில் வேலை பார்த்தவர்), பார்பரா என்ற அமெரிக்க இதழாளருக்கும் பிறந்தவர். குலாம் முயுனுதீன் பாகிஸ்தானின் தேர்தல் கமிஷனராக இருந்தவர். இந்திய – பாகிஸ்தான் உறவுக்கான தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியவர். பாகிஸ்தானின் சிறந்த சர்வதேசப்பள்ளிகளிலும், மேற்கின் பல்கலைக்கழகங்களிலும் தன் மகன் தானியாலைப் படிக்க வைத்தார். இறுதியில் பாகிஸ்தானின் மூதாதையர் பண்ணையைப் பார்த்துக்கொள்ளுமாறு தானியாலைப் பாகிஸ்தானிலேயே, தன் பண்ணையில் தங்க வைத்துக்கொண்டார். அந்த அனுபவம், தானியாலுக்கு பாகிஸ்தானின் எஜமான – தொழிலாளர் உறவைக் குறித்தும், பாகிஸ்தானின் சிறு தொழிலாளிகள், பழங்குடியினர், கிராமத்து வாழ்க்கை ஆகியவற்றைக் குறித்து அறிமுகப்படுத்தியது.

அந்த அனுபவங்களின் பின்னணியில் அவர் ஆங்கில சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். முதல் சிறுகதையான ‘எலெக்ட்ரீஷியன் நவாப்தீன்’ நியூயார்க்கரில் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் மேற்கில் பெரிதும் வரவேற்கப்பட்டார். மேல்தட்டு பாகிஸ்தானிய ஆங்கில எழுத்தாளர்களைப் போலல்லாமல் தானியாலின் கதைகளில் பாகிஸ்தானிய நிலப்பரப்புகளையும், மக்களுக்கிடையேயான உறவுகளையும், வறுமையையும், அதை மீறிய சந்தோஷங்களையும் குறித்துப் படிக்க முடிகிறது.

எலெக்ட்ரீஷியன் நவாப்தீன் சிறுகதை ஓர் எளிய, ஏழை எலெக்ட்ரீஷியனின் வாழ்க்கையையும், அவன் வாழ்வின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் – இரண்டு பெரும் வறுமைகள் மோதிக்கொள்ளும்போது நம்முன் எழும் அறம் சார்ந்த கேள்வியையும் முன்வைக்கிறது. (இக்கதையின் மொழிபெயர்ப்பில் இதே இதழில் படிக்கலாம்: ‘எலெக்ட்ரீஷியன் நவாப்தீன்’).

daniyal-mueenuddin-collage

இவருடைய பிற கதைகளும் இதே ஹரவ்னியின் பண்ணை, அருகிலிருக்கும் கிராமங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றையே கதைக்களனாகக் கொண்டவை. இவர் மேற்கத்திய மீடியாவில் ஆர்.கே.நாராயணனோடு ஒப்பிடப்படுகிறார். இருவரின் கதைகளிலும் எளிய நகைச்சுவை, அறம் சார்ந்த கேள்விகள் இருக்கும். இருவருமே பெரும் அகச்சிக்கல்களையோ, சமூக அரசியல் குறித்தோ பேசுவதில்லை என்பது குறையாகப் பட்டாலும், இத்தகையான எளிய நேர்மையான எழுத்தே பாகிஸ்தானிய ஆங்கில எழுத்தில் படிக்கக் கிடைப்பதில்லை என்பதால் தானியாலின் எழுத்து முக்கியமான ஒன்றாகிறது. அது மட்டுமில்லாமல், பாகிஸ்தானின் நிலப்பரப்புகளைக் குறித்த நுணுக்கமான வர்ணனைகள் தானியாலின் எழுத்துகளில் படிக்கக் கிடைக்கின்றன.

இவருடைய பத்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ’In other rooms, Other wonders’ என்ற தலைப்பில் புத்தகமாகக் கிடைக்கின்றது.

இப்புத்தகம் கிடைக்குமா என பெங்களூரின் பிரபலமான இரண்டு கடைகளில் விசாரித்தபோது, இரண்டு கடைகளிலிருந்தும் வந்த பதில்: “அந்தப் புத்தகம் இல்லை. Benazir Bhutto -Daughter of Destiny புத்தகம் இருக்கிறது வாங்கிக் கொள்கிறீர்களா?”

One Reply to “பாகிஸ்தானிய ஆங்கில இலக்கியம் – ஒரு பார்வை”

Comments are closed.