இரண்டாம் ஆண்டில் சொல்வனம்

mast

அன்புள்ள வாசகர்களுக்கு,

“விளையாட்டுப் போல் ஆரம்பித்து, திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது” என்ற cliche-வுடன்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை. சென்ற 26-ஆவது இதழ் வரை சொல்வனம் ஒருவருடம் தொடர்ந்து இயங்கியிருக்கிறது. இந்த 27-ஆவது இதழில் சொல்வனம் இரண்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த ஒருவருடத்தில் நாங்கள் கற்றுக் கொண்டவை ஏராளம். வலை வடிவமைப்புத் தொழில்நுட்பத்தையே கூட முதல் இதழுக்கு வடிவமைக்கும்போதுதான் கற்றுக் கொண்டோம். எந்த குழுப் பின்புலமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழைத் தமிழின் தேர்ந்த எழுத்தாளர்கள் ஆதரித்து உற்சாகப்படுத்தினார்கள்.  எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களின் தொடர்ந்த வருகையும், எதிர்வினைகளும் உற்சாகமூட்டுபவையாகவும், வழிநடத்துபவையாகவும் இருந்தன.

எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. சொல்வனத்தில் தொடர்ந்து எழுதிய, ஆதரவு நல்கிய அத்தனை படைப்பாளிகளுக்கும் சொல்வனம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. சொல்வனத்தைத் தொடர்ந்து கவனித்து, பல படைப்புகளும் பலருக்கும் சென்றடையக் காரணமாக இருக்கும் ‘கானகம்’ ஜெயக்குமார் அவர்களுக்கும் சிறப்பு நன்றிகள்.

சொல்வனத்தின் நல்ல படைப்புகளைக் குறித்துத் தன்னுடைய தளத்தில் தொடர்ந்து எழுதி கவனத்தைப் பெற்றுத் தந்த ஜெயமோகனுக்கும், சொல்வனத்தின் அறிவுப்புகளை வெளியிட்டு பரவலாகச் சென்றடைய உதவிய இட்லிவடை, திண்ணை, SISHRI போன்ற நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

பல நண்பர்களும், வாசகர்களும், எழுத்தாளர்களும் வாய்மொழியாகவும், ஈமெயில்கள் மூலமாகவும் சொல்வனத்தைப் பலருக்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

முக்கியமாக, இந்த ஒருவருடச் செயல்பாட்டைக் குறித்த உங்கள் விமர்சனங்களையும், கருத்துகளையும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

ஆசிரியர் குழு