கடவுள் நமக்குத் தேவையா?

மர்லீன் வெஸ்ட்ஃபால்
மர்லீன் வெஸ்ட்ஃபால்

அண்மையில் டெக்ஸாஸ் மாகாண கல்வித்துறை பள்ளிப்பாடநூல்களில் சில மாற்றங்கள் செய்தது. இம்மாற்றங்கள் வலதுசாரி மத அடிப்படைவாதிகளின் உலக-தேசிய பார்வையை ஒத்ததாக அமைந்தது. சுய சிந்தனையாளராக கருதப்பட்ட தாமஸ் ஜெஃபர்ஸன் குறித்த தகவல்கள் நீக்கப்பட்டிருந்தன. ஐரோப்பியாவில் நிறுவனமதத்துக்கும் அறிவியலுக்கும் நிகழ்ந்த சண்டைகள் மிகவும் மென்மையாக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அமெரிக்க கல்விதுறையில் அறிவியலாளர்களுக்கும் படைப்புவாத அடிப்படைவாதிகளுக்கும் இடையே ஒரு பண்பாட்டுப் போர் நடந்து வருகின்றது. படைப்புவாதிகளின் கைகள் சில மாகாணங்களில் மேலோங்கி நிற்பதுடன் அவர்களுக்கு அரசியல் பலமும் இருக்கிறது. இந்நிலையில் புகழ்பெற்ற உளவியலாளர் ஸ்டீவன் பிங்க்கர் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்திருந்தார். அமெரிக்க மானுடவாதி (American Humanist) அமைப்பைச் சார்ந்த மார்லைன் வெஸ்ட்ஃபால் (MARILYN WESTFALL) 2006 ஆம் ஆண்டின் மானுடவாதி பரிசு பெற்ற பிங்க்கரை சந்தித்து இந்த பண்பாட்டு மோதல் குறித்து உரையாடினார். அந்த உரையாடலை கீழே அளிக்கிறோம்.

Steven Pinker

Humanist Network News: மிட்லேண்ட், டெக்சாஸ் மற்றும் அதன் பழமைவாத அரசியல் சூழ்நிலை குறித்த உங்கள் கருத்து என்ன?

ஸ்டீவன் பிங்கர்: (சிரிக்கிறார்) நமது சமீபத்திய முன்னாள்-அதிபர் வளர்ந்த இடம் இது. இந்த இடத்தின் அரசியல் சூழ்நிலையை ஒருவர் அறியாமல் இருக்க முடியாது.

டெக்சாஸ் பள்ளிப்புத்தகங்கள் தொடர்பாக தற்போது நடைபெறும் கருத்துமோதல்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? ஜெஃபர்ஸனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படாதது, (ஐரோப்பிய) அறிவொளி காலகட்டம் குறித்து அடக்கி வாசிப்பது, ”நமது முன்னோர்கள் கிறித்துவர்களே” போன்ற டெக்சாஸ் மாநில கல்வித்துறையின் முடிவுகளைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

இது ஒரு கேவலமான செயல். பாடப்புத்தகப் பதிப்பாளர்கள் இத்தகைய பரிந்துரைகளுக்கு அடிபணிய மாட்டார்கள் என நம்புவோம். அப்படி அடிபணியாமல் இருப்பதன் மூலம், அமெரிக்காவின் பிற பகுதிகளின் பாடப்புத்தகங்களையும் கெடுக்காமல் இருப்பார்கள் என்று நம்புவோம்.

அமெரிக்கா மீது வலது மற்றும் இடதுசாரிகளின் அரசியல் தாக்கத்தை குறித்து நீங்கள் பெருமளவு எழுதியுள்ளீர்கள். பாடப்புத்தகம் குறித்த சர்ச்சையில், குறிப்பாக (டார்வினிய) பரிணாமம் பள்ளிகளில் கற்பிக்கப்படுவது குறித்து இந்த இரு பிரிவினரின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது?

ஒருவகையில் இது ஒரு கலாசாரப் போர். இந்த நாடு இருவேறு கலாசாரங்களைக் கொண்டது: ஒன்று ஐரோப்பிய அறிவொளி இயக்கம். இன்னொன்று பெருமிதக் கலாசாரம் (culture of honor).

ஸ்காடிஷ்-ஐரிஷ் குடியேறிகள் (அமெரிக்காவின்) தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் குடியமர்ந்தனர். இதனால் அமெரிக்க நாகரிக வளர்ச்சி இருவேறு பாதைகளில் பிரிந்து சென்றது. ஒரு பாதை, சட்டம், அரசு, அரசன் போன்ற கறாரான அமைப்புகளால் நாகரிக வளர்ச்சி அடைந்தது. இன்னொரு பாதையில் அமைப்பு சாரா சுயாட்சி இருந்தது. அங்கே காயங்களும், அவமானங்களும், முரண்பாடுகளும் சொந்த உடல்வலிமையால் பழிவாங்கப்பட்டு சரி செய்து கொள்ளப்பட்டன. இவை இரண்டும் இருவேறு கலாசாரங்கள், ஆனால் அவை இந்த நாட்டில் ஒருங்கே இருக்கின்றன (co-exist). மேற்கு (மாகாணங்களில்) சமூகத்தை பண்படுத்தும் சக்தியாக முதன்மையாகச் செயல்பட்டது நிறுவன கிறிஸ்தவ சபை. பல மேற்கத்திய கௌபாய் நகரங்கள் பெண்களாலும் கிறிஸ்தவ சபைகளின் கூட்டு முயற்சியினாலும்தான் பண்பட்டன. கிறிஸ்தவ சபைகளே ஒழுக்கவிதிகள், அடிப்படை நல் பழக்கம், பண்பாடு ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாக விளங்கி அச்சமூகங்களை காக்கும் மந்திரக் காப்பாக இருந்தன. ஆனால் இந்த பண்பாட்டு பிளவின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று எதிர்ப்பதற்காகவே எதிர்ப்பது. லிபரல்கள் எதைச் சொன்னாலும் அதை எதிர்க்கும் மனோநிலை. இன்னொரு காரணம் கிறிஸ்துவ சபைகளுடனான உணர்வுபூர்வமான நெருக்கம். மற்றொரு காரணம் பரந்த உலகிலிருந்து தங்களை விலக்கி குறுக்கிக் கொண்டது.

பரிணாமவாதத்தை மறுக்கும் மனோநிலை நிலவும் டெக்சாஸில் உங்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

தெற்கு (மாநிலங்களின்) பல்வேறு பல்கலைக்கழகங்களில் நான் உரையாற்றியிருக்கிறேன். இவற்றில் சில அதிகம் அறியப்படாத பல்கலைக்கழகங்கள். அந்த சந்தர்பங்களில் நான் எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. அலபாமா, மிசிசிப்பி, யோட்டா (Utah) மற்றும் டெக்சாஸில் உரையாற்றிருக்கிறேன். இந்த நகரங்களின் பல்கலைக்கழகங்கள் பொதுவாக கலாசார குமிழிகளாக விளங்குகின்றன. இந்தக் குமிழிகள் தாங்கள் இருக்கும் நிலப்பகுதியின் எண்ணப்போக்கைப் பிரதிபலிக்காமல், நாட்டின் பிற பகுதிகளிலிருக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் எண்ணப்போக்கைப் பிரதிபலிக்கின்றன என்று யூகிக்கிறேன்.

ஆனால், 38 சதவீத டெக்சாஸ் மக்கள், மனிதர்களாகிய நாம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு தற்போது இருப்பதை போலவே உருவாக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறார்கள். பரிணாமம் மீது எந்த நம்பிக்கையும் இல்லாத அவர்கள், பரிணாம உயிரியல் குறித்து எந்தவிதப் புரிதலைக் கொண்டிருக்கப் போகிறார்கள்? நீங்கள் சொல்லும் விஷயங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

ஆமாமாம் இன்றிரவு என் உரை பரிணாமம் என்பதைக் குறித்ததாக என்று இருக்கப் போவதில்லை. ஆனால் பரிணாமத்தை நான் பேசப் போகிற ஆதிக்கத்தன்மை, ஆத்திர வசை போன்ற விஷயங்களுடன் தொடர்புடைய ஒரு விஷயமாகச் சொல்ல நான் தயங்கப் போவதில்லை. ஆனால் அவர்களை மிகவும் ஆத்திரப்படுத்தி கிளர்ந்தெழ வைக்கப்போகும் ஒரு பேச்சை அவர்கள் இன்றிரவு கேட்கப்போவதில்லை.

பரிணாமம் தரும் பரந்த அறிவுத்தளம் உயிர்கள் குறித்த புரிதலுக்கு அத்தியாவசமானது. இந்த அறிவுத்தளம் குறித்த அறியாமை பரிணாமம் மீதான மனக்கசப்புக்கு ஒரு காரணம். பரிணாமக் கொள்கை மீது நம்பிக்கை இல்லாமல், ஒருவரால் உயிரியல் துறையில் பணியாற்ற முடியாது. அனைத்து அறிவியல் துறைகளிலும் பரிணாமக் கொள்கை இருக்கிறது. பரிணாமம் குறித்த ஆதாரம் என்றெல்லாம் பேசக் கிளம்பும்போது எங்கிருந்து தொடங்குவது என்று திகைப்பூட்டும் அளவுக்கு பரிணாமம் நம்மைச் சுற்றிலும் எங்கெங்கும் இருக்கிறது. ‘பரிணாமம்’ என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் அறிவியல் ஒரு மிகப்பெரும் வீழ்ச்சியே.

பரிணாமம் மீதான கசப்பின் இன்னொரு காரணம் குறியீடுகள் சார்ந்ததாகவும் இருக்கலாம். பரிணாமம் அறமற்றதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. மனிதர்கள் விலங்குகளைப் போல நடந்து கொள்வார்கள் என்று சிலரால் அர்த்தப்படுத்திக் கொள்ளப்படுகிறது. மனிதர்கள் விலங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் என்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால், அவர்கள் விலங்குகளைப் போல நடந்து கொள்ளுவார்கள் (என்று சிலர் நினைக்கிறார்கள்).

இஸ்லாமிய நாடுகளில் கல்வித்திட்டத்தின் மீது மத ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு அமெரிக்காவிலும் மத ஆதிக்கம் இருக்கிறது. தொழிற்வளம் முன்னேறிய (இஸ்லாமிய) நாடுகளில் நம்மை துருக்கியுடன் ஒப்பிடலாம். சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைவிடவாவது நாம் சில படிகள் மேலே இருக்கிறோம் என்றே நான் நினைக்க விரும்புகிறேன்.

உங்களது “வெற்றுப் பலகை”(The Blank Slate) புத்தகத்தில் இர்விங் கிரிஸ்டல்(Irving Kristol) குறித்து எழுதியுள்ளீர்கள். ”மக்களால் உண்மையை எதிர்கொள்ளமுடியாது. ஆகையால் மதம் அளிக்கும் பாதுகாப்பு அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது” என்றொரு கோட்பாட்டை முன்வைத்து, பள்ளிகளில் பரிணாமம் குறித்த வகுப்புகளை அவர் எதிர்ப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளீர்கள். ”இறைமறுப்பு எனும் உண்மை ஒரு சில சாதுகளுக்கானது(sage). அது ரகசியமாக வைக்கப்பட வேண்டும்” என்றும் இர்விங் க்ரிஸ்டல் எழுதியுள்ளாரே?

ஒரு மதச்சார்பற்ற யூத அறிவாளியின் பரிணாமம் குறித்த பார்வை எந்த ஒரு போப்பின் (அல்லது, குறைந்தபட்சம் முந்தைய போப்பின்) பார்வையை விடவும் பழமைவாதம் சார்ந்ததாக இருப்பதை முரண்நகை என்றே சொல்வேன். தற்போதைய போப் வலதுசாரிப் பார்வையை கொண்டிருக்கிறார். இரண்டாம் ஜான் பால் பரிணாமத்தை மனித உடல், விலங்கின் உடல் மற்றும் மூளையின் தோற்றத்தை விளக்கும் சிறந்த கொள்கையாகக் கண்டார்.

அந்தக் கருத்தை “இறை நம்பிக்கை பரிணாமம்” (theistic evolution) என்று குறிப்பிடுவீர்களா?

ஆமாம் அப்படித்தான். மானுட ஆன்மாவைத் தவிர மற்ற அனைத்து (உயிரியல் தொடர்பான) விஷயங்களூக்கும் பரிணாமம் காரணமாக அமைந்தது. ஆன்மா மட்டும் நமக்கு ஒரு ஊசியால் ஏற்றப்பட்டது. உண்மையில் இந்த கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது கூட ஜான்பால் அல்ல. 1953 இல் தம் பாப்பரச அறிக்கையில் பயஸ் மனிதனின் பரிணாம உதயத்தை ஒத்துக் கொள்கிறார்.

“பெரும்பான்மையான மக்களுக்கு மதம் தேவைப்படுகிறது. இறை மறுப்பு எனும் உண்மையை அவர்களால் எதிர்கொள்ளமுடியாது”, என்ற இர்விங் க்ரிஸ்டலின் கருத்து குறித்து உங்கள் எண்ணம் என்ன?

இந்தக் கருத்து லியோ ஸ்ட்ராஸ் (Leo Strauss) முன்வைத்ததாகச் சொல்லப்படுவது. இந்த கருத்து சுய அனுபவத்தால் கூறப்படும் யூகம் மட்டுமே. ஆனால் இந்த கருத்து பொய்மைப்படுத்தப்பட்டுவிட்டது. உதாரணமாக, ஐரோப்பிய நாடுகள் அதிகபட்ச மதசார்பின்மை நிலைப்பாட்டை கொண்டவை. அந்நாடுகளில் பல இறை-மறுப்பைக் கொண்டவை. இருந்தும், அந்நாடுகளின் வன்முறை அளவு கிறிஸ்துவத்தை அதிக அளவு நம்பும் சில அமெரிக்க மாநிலங்களை விடக் குறைவு. ஆகையால், எந்த சித்தாந்தம் மக்களை பண்படுத்துகிறது? எந்த சித்தாந்தம் மக்களை ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லத் தூண்டுகிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை நம்மிடம் இருக்கிறது: இறைமறுப்பு தேசங்களில் ஒரு லட்சம் பேரில் ஒருவர் கொல்லப்படுகிறார். ஆனால் தெற்கு அமெரிக்க மாநிலங்களில் இந்தக் கொலைக் குற்ற விகிதம் 10 மடங்கு அதிகம்.

religion-rational-thought1

கிரிஸ்டல், “மனிதர்கள் மாற்றத்திற்கு தகுந்தபடி உடனடியாக தம்மை தகவமைத்துக் கொள்வதில்லை. குறிப்பாக மனிதர்களது நடவடிக்கைகள் உடனடியாக மாறாது” என வாதிடுகிறார். மாற்றங்களுக்கு தகுந்தாற் போல் தன்னை தகவமைத்துக் கொள்வதில் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்?

பல உணர்ச்சிகளும் ஓரளவுக்கான தகவமைப்புக்கே சாத்தியமானவைதாம். ஆனால் நம் அறிதலுக்கான பொறிகளோ திறந்த தன்மை கொண்ட இணைவமைவுகளே (open-ended combinatorial system). இதுதான் மொழியின் சாரமும். பழங்காடியாகிவிட்ட (Cliche) சில வாக்கியங்களைத் தவிர, எந்த இரு வாக்கியங்களும் ஒன்று போல இருப்பதில்லை. நாம் தொடர்ந்து பல புதிய வாக்கியங்களை உருவாக்கி அவற்றை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். இதன் காரணம், (பிறப்பு முதலே) நம்முள் உறைந்திருக்கும் மனித இயல்பின் ஒரு பகுதி, புதிய சிந்தனைகளை/போக்குகளை ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது. இதன் எல்லையை நாம் இன்னும் கண்டறியவில்லை. என்னைப் பொருத்தவரை, பெரும்பாலான மனித நடவடிக்கைகள் சித்தாந்தங்கள் சார்ந்ததாக இருப்பதில்லை. மாறாக, காலத்தோடு பரிணாம வளர்ச்சியடைந்த பண்பான நடத்தை குறித்த தன்ணுணர்வே மனித நடவடிக்கைகளை நிர்ணயிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் யாரும் கொலை செய்வதில்லை. கற்பழிப்பதில்லை. இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபடாததன் காரணம் நரகத்தீயில் வெந்து தணிய நேரிடுவதைக் குறித்த அச்சம் இல்லை. மாறாக, மனித நடவடிக்கையின் மாற்றங்கள், மனித குல வரலாற்றில் நம் உள்ளுணர்வு தமக்குத் தாமே வகுத்த கொண்ட“செய்யக்கூடாதவைகள்” குறித்த சட்டங்களே என்று நினைக்கிறேன்.

நீங்கள் முன்பு குறிப்பிட்ட வன்முறையற்ற யூரோப்பிய பாதுகாப்பு வலையைக் குறித்து உங்கள் கருத்து என்ன? சமுதாயத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும் பகுதிகளில் இருக்கும் மக்கள் இறைநம்பிக்கையை அணுகும் விதத்தில் வித்தியாசம் எதுவும் இருக்கிறது?

ஃபில் சக்கர்மேன், க்ரெகரி பால் இருவரும் Edge பத்திரிகையில் எழுதிய, “கடவுளர்கள் வெற்றி பெறாதபோது..” என்ற கட்டுரையில், ‘வாழ்வின் பெருந்துயரங்களைக் குறித்த நிலையின்மையே இறைநம்பிக்கையாகிறது’ என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். எல்லா வசதிகளும் எளிதில் கிட்டக்கூடிய ஒரு சமுதாயத்தில் இருக்கும்போது, வாழ்க்கை அவ்வளவு மோசமானதாக இருப்பதில்லை; வாழ்க்கை முன்வைக்கக் கூடிய துயரநிகழ்வுகள் குறைச்சலாக இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் கடவுள் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. சமுதாயத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும் சூழலில் இருக்கும் நாடுகளுக்கும், அங்கு நிலவும் இறைமறுப்புக்கும் இடையே தொடர்பிருப்பதாக இந்த இருவரும் கருதுகிறார்கள்.

மதத்துடனான சமரசத்தை மானுடவாதிகளும், இறைமறுப்பாளர்களும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?

பெரும் திரளான மக்களைக் கொண்ட மதம் போன்ற பெரும் அமைப்புகளுடனான உரையாடலில் அடிப்படை நாகரிகமும், சாமர்த்தியமும் அவசியமானது. அறிவார்ந்த தளத்தில் மதத்துடன் எந்த சமரசப் போக்கும் இருக்ககூடாது என்று எண்ணுகிறேன். “கடவுள் ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம், செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இருக்கலாம்”, போன்ற வாதங்களில் அர்த்தமில்லை. மதங்களின் தடவரலாற்றைக் குறித்துப் பேசும்போது நாம் சில தெளிவான வேறுபாடுகளை வைத்துக்கொள்வது அவசியம். மதங்கள் செய்யும் ஒரு சில பணிகள் போற்றத்தகுந்தவை. ஒட்டுமொத்தமாக அனைத்து மதப்பணிகளையும் வெறுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அது சிறந்த நிலைப்பாடும் அல்ல. புனித விசாரணைகளும், சிலுவைப்போர்களும், தீவிரவாத இஸ்லாமும் நிச்சயமாக கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவைதாம். அதே நேரத்தில் க்வாக்கர்கள் (கிறிஸ்தவ சீர்திருத்த பிரிவினரில் அதி தீவிர அஹிம்சைவாதிகள்) அவர்கள் காலத்திய அடிமை அமைப்புக்கு எதிராக நல்ல விஷயங்கள் சிலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆப்பிரிக்க அமெரிக்க சபைகள் சமூகச் செயல்பாட்டுக்கான மூலமாக இருந்தன என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். நம் பார்வையில் இத்தகைய வேறுபாடுகளை நாம் கொண்டிருக்க வேண்டும். எது விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டுமோ அதை நிச்சயம் விமர்சிக்க வேண்டும். அதே சமயம், பொய்மையுடன் எத்தகைய சமரசமும் இருக்கக்கூடாது. முன்னொரு காலத்தில் மதங்கள் அனுமதித்த முற்றிலும் அறமற்ற, கொடூரமான மதச் சடங்குகளுடனும் எந்த சமரசமும் இருக்கக்கூடாது.

good-without-god-what-a-billion-nonreligious-people-do-believeமனிதநேயம் மற்றும் இறைமறுப்புக் கொள்கைகளை இன்னும் விரிவாக்கும் பொறுட்டு, AHA-யின் “கடவுளற்ற நல்வாழ்வு” எனும் பிரச்சார முயற்சி குறித்து உங்கள் கருத்து என்ன?

Greg Epstein [Humanist Chaplain at Harvard University] தன்னுடைய புத்தகத்தின் தலைப்பாக இதே வாக்கியத்தை உபயோகப்படுத்துகிறார். இது ஒரு வெற்றிகரமான அணுகல் என்றே கருதுகிறேன். இந்த விளம்பர வாக்கியம் அற்புதமானது. இதைவிட சிறப்பான ஒன்றை மாடிசன் அவின்யூ செய்திருக்க முடியாது.

இந்த பிரச்சார நடவடிக்கை குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நான் தொடர்பு கொண்ட Unitarian Universalist humanist-கள் ”இறைமறுப்பாளர்”(atheist) மற்றும் ”இறையின்மை”(Godless) போன்ற வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது என்று அக்வர்கள் கருதுகிறார்கள். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது ஒரு மொழியியல் நிகழ்வு. “இறைமறுப்பு”(Atheism) எனும் வார்த்தை மக்களின் மனதில் வெகு அடிப்படையான ஒரு உணர்வு சார்ந்த எதிர்வினையை எழுப்புகிறது. பலரும் “இறைமறுப்பு” எனும் வார்த்தையை “அறமற்றது” எனும் வார்த்தையுடன் தொடர்புப்படுத்திக் கொள்கின்றனர் என்று நினைக்கிறேன். அதனால்தான் கருத்துக்கணிப்புகளில் மக்கள் இறைமறுப்பாளர்களைத்தான் மிக அதிக அளவில் நம்பாததாகத் தெரிவிக்கிறார்கள் போலும். பொதுவாக, எந்த ஒரு பெரிதும் வெறுக்கப்படும் வார்த்தைக்கு -குறிப்பாக எதிர்மறை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைக்கு- மக்கள் ஒரு பதிலி வார்த்தையை (euphemism) கண்டுபிடிக்கின்றனர். அதனால்தான், “garbage” என்றழைக்கப்பட்டது “sanitation” என்றும், இப்போது “environmental services” என்றும் அழைக்கப்படுகிறது. இதைப்போலவே, ”நாத்திகம்” எனும் வார்த்தையும் எந்தவித கறையும் படியாத வார்த்தைகளைக் கண்டடைய வேண்டிய அவசியமாகிறது. மதச்சார்பற்றவர், சுதந்திர சிந்தனையாளர், மானுடவாதி போன்ற வேறு வார்த்தைகள் இறைமறுப்பாளர் என்ற வார்த்தைக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்படுகிறது . சமூகத்தின் மனப்போக்கு மாற்றம் அடையாத வரை இந்த வார்த்தைகளின் மீதும் கறை படியும்.

“இறைமறுப்பு” என்பது நம்பிக்கையின்மை மட்டுமே. “மானுடவியல்” (Humanism) என்பது மேற்கத்திய நாகரிகத்தின் உள்ளார்ந்த பண்பாடு என்ற நிலை ஏற்பட வேண்டும். எப்போது மானுடவியல் எனும் வார்த்தை தன்னுடைய விசேஷ கவனிப்பை இழக்கிறதோ அப்போதுதான் மனிதப் பண்பாட்டியத்தின் வெற்றி சாத்தியமாகும். ஒரு வகையில், உண்மையில், மனித பண்பாட்டியம் சமூகத்துடன் கலந்துவிட வேண்டும். மேற்கத்திய நாகரிகம் (ஐரோப்பிய) அறிவொளி காலந்தொட்டு இறை சார்ந்த நம்பிக்கையைத் துணையாகக் கொள்ளவில்லை. அனைத்து தத்துவங்களும், அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளும், அனைத்து சட்டங்களும் மானுடத்தைத்தான் பேசுகின்றன என்ற நம்மால் சொல்ல முடியவேண்டும். ஷேக்ஸ்பியர், நவீன உயிரியல், நவீன மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜனநாயகம் – இவை அனைத்தும் மானுடவியலின் வெளிப்பாடுகளாக அறியப்படவேண்டும்.