கண்டம் விட்டு கண்டம் பரவும் ‘காப்’ பஞ்சாயத்து
பல கோடி பல கோடி பல்லாயிரம் கோடி எறும்புகள் அர்ஜெண்டைனா முதல் கலிபோர்னியா வரை நீண்டெடுத்து வாழ்கின்றன. இதில் என்ன சுவாரசியம் என்கிறீர்களா – இவை எல்லாமே ஒரே எறும்பு குடியிருப்புவாசிகள். பொதுவாக ஒரே உயிரினவகை (species) தமக்குள் கலந்து இனப்பெருக்கம் செய்யும். ஆனால் ஒரே உயிரினவகையாக இருந்தாலும் இந்த மெகா குடியிருப்புக்களைச் சார்ந்த ஒரு ஆண் தப்பி தவறி மற்றொரு மெகா குடியிருப்புக்குள் நுழைந்தால் காப் பஞ்சாயத்து செய்து தீர்த்துவிடுகின்றன அந்த பிற குடியிருப்பு எறும்புகள். ஆக கண்டம் முழுமையாக பரவிய அளவில் உள்ளன ஒரே குடியிருப்பு எறும்புகள். இதுவரை பரிணாம செயல்பாட்டில் கண்டறியாத சகிப்புத்தன்மையின்மையை, மரபணு சாராத இனப்பெருக்க தடைகள் ஒரு உயிரின வகைக்குள்ளேயே செயல்படுவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
எந்திரத்தின் செவ்வியல் இசை
மேற்கில் தொடர்ந்து செயற்கை அறிவு அல்லது அறிவுள்ள எந்திரங்கள் மேம்பட்டு வருகின்றன. வீட்டில் தரையைப் பெருக்கும் எந்திரத்தில் இருந்து, முதியோர் அல்லது உடல் ஊனமானவர்களுக்கு உதவும் ரோபாட்களிலிருந்து, கார்கள், ட்ரக்குகள் தயாரிக்கும் எந்திரங்கள் வரை எங்கெங்கோ எந்திர அறிவு பயன்படுகிறது. தாமாகச் சிந்திக்கும் எந்திரங்கள் ஒரு நாள் உலகை மனிதர் கையிலிருந்து அபகரித்துக் கொண்டு மனிதரை அடிமைப் படுத்தும் என்ற பயத்தை மேற்கில் அறிவியல் நவீனங்கள் தொடர்ந்து எழுதி வந்திருக்கின்றன. ஆசிமாவ், க்ளார்க் காலத்திலிருந்து சமீபத்திய எழுத்தாளர்கள் பலர் வரை இத்தகைய கதைகளை எழுதி இருக்கிறார்கள். இப்போது ஒரு எந்திரம் மேற்கின் செவ்வியல் இசையைத் தானாகவே எழுதி அமைக்கத் துவங்கி உள்ளதாம். இனி இசை அமைப்பாளர்களே தேவைப்படாது போலிருக்கிறது என்று குறை சொல்கிறது இந்தக் கட்டுரை.
அமெரிக்க ராணுவத்தினரின் தில்லு முல்லுகள்
அமெரிக்க ராணுவத்தில பணியாற்றியதாகச் சொன்னால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு அந்நாட்டுத் தேர்தல்களில் வெல்லுவது கொஞ்சம் எளிது. ப்ளூமந்தால் என்ற ஒரு அரசியல்வாதி இப்படித்தான் வியத்நாம் போரில் தாம் பங்கெடுத்ததாகப் பொய் சொல்லித் தேர்தலை வெல்லப் பார்த்தார், சமீபத்தில் மாட்டிக் கொண்டார். அவரிருந்த ராணுவக் குழு, அமெரிக்காவை விட்டுப் போனதே இல்லை, வியத்நாம் போரின் போது அவர் வியத்நாமுக்குப் போகவில்லை. அவர்தான் அப்படி என்றால், இன்னுமொரு நபர் ராணுவத்தில் சேர்ந்ததே இல்லை, ஆனால் தான் சிறப்புப் படைப்பயிற்சி பெற்றவரென்றும், பல பதக்கங்கள் பெற்றவரென்றும் பொய் சொல்லி ஒரு யூனிட்டின் தலைவராகவே சேர்ந்து பணியாற்றி வந்திருக்கிறார். இந்தச் செய்தியைப் படிக்கும் அமெரிக்க மக்கள் தம் பாதுகாப்புப் படைகளை யார் பாதுகாக்கப் போகிறார்கள் என்று கவலைப்பட வேண்டியதுதான் இனிமேல்!
மீன்கள் கற்றுத்தரும் புதிய காற்றாலை தொழில்நுட்பம்
அறிவியலும், பொறியியலும், உயிரியலோடு இணையும்போது என்னென்னவோ அற்புதங்கள் நடக்கின்றன. 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இவை மூன்றும் அத்தனை ஒன்றுடனொன்று இணையாமல் தனித்தனியே இயங்கிக் கொண்டிருந்தன. உயிர்மரபணுக்கள் பற்றிய சோதனைகள் வெற்றி பெறத் துவங்கிய காலத்திலிருந்தே இந்த மூன்று வகை அணுகல்களும் ஒருங்கிணைந்து செயல்படத் துவங்கின எனச் சொல்லலாம். அப்ப்டி ஒரு இணைப்பில் மீன்களின் பெரும் கூட்டம் எப்படிக் கடலில் செல்கின்றன என்பதைக் கவனித்த ஒரு ஆய்வு, காற்றில் எப்படி விசிறிகளின் கரங்கள் நீந்துகின்றன என்பதற்கு இந்த உத்தியைப் பயன்படுத்தலாம் என்று யோசிக்கிறது. பின் அதே அணுகல் இந்த உத்தியைப் பயன்படுத்தி காற்றாலைகளின் விசிறிக் கரங்களை முற்றிலும் வேறு விதமாக உருவாக்கினால், அவை ஒவ்வொன்றும் அருகருகேயும் நிர்மாணிக்கப் பட முடியும், அதே நேரம் ஒன்றில் புகுந்து வெளியேறும் காற்றின் ஓட்டம் இன்னொன்றை பாதிக்காது என்று கண்டு பிடிக்கிறது. மேலும் அறிய இதை படியுங்கள்
மங்கோலியர்களின் அவலநிலை
மங்கோலியாவில் நாடோடிகளின் வாழ்வில் பெரும் சோகம் கப்பியிருக்கிறது. சென்ற வருடம் கோடையில் கடும் வெப்பமும் பஞ்சமும் நிலவின. வறட்சியால் ஆடு, மாடு, யாக் போன்ற கால்நடைகளை மேய்த்து, வளர்த்து அதையே தம் வாழ்வுக்கு ஆதாரமாக வைத்திருந்த மக்கள் தம் மந்தைகளில் நிரம்பிய நஷ்டத்தை அடைகின்றனர். அதைத் தொடர்ந்த கடந்த குளிர்காலமும் அசாதாரணமான கடுங்குளிர் நிலவிய காலமாக இருந்தது. கால்நடைகள் தீவனம் கிட்டாமல், குளிரைத் தாங்க முடியாமல் இறக்கத் துவங்கின. குளிர்காலம் இந்த வசந்த காலம் வரை, கடந்த சில வாரங்கள் வரை தொடர்ந்ததால் கால்நடைகளின் மேய்ப்பு நிலங்கள் இன்னமும் உயிர்த்து முழுதாக சாதாரண நிலைக்கு வரவில்லை. மொத்தக் கால்நடைகளில் 20% (ஐந்தில் ஒரு பங்கு) இறந்து விட்டன. அவற்றை ஐக்கிய நாட்டு அமைப்புகளின் உதவியால் மங்கோலியர்கள் புதைக்கிறார்கள். அந்தக் காட்சிகளை இங்கு காணலாம். இது ஒரு வீடியோ, ஒலியோடு பார்க்கவும்.