இது பின்நவீனத்துவ காலம். ‘இசையின் நுணுக்கங்களை அறிந்திருப்பது இசையை விமர்சிப்பதற்குத் தடையாக அமைந்துவிடக் கூடும்’ என்று சொல்பவர்கள் இசை விமர்சர்களாகக் கருதப்படும் காலம். இந்த நவீன சிந்தனைகள் புழங்காத காலத்தில் எழுத்தாளர் கல்கி, ‘கர்நாடகம்’ என்ற புனைபெயரில் எழுதிய இசை விமர்சனங்கள் “சங்கீத யோகம்” என்ற பெயரில் வானதி பதிப்பக வெளியீடாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்கொண்ட விஷயத்தைக் குறித்த பூரண அறிவோடும், பிரக்ஞையோடும் எழுதப்பட்ட விமர்சனங்கள், அதிலும் ஆங்காங்கே குத்தும் நகைச்சுவை உணர்வு எனப் பிரமாதமாக அமைந்திருக்கின்றன இந்த இசை விமர்சனக் கட்டுரைகள்.
கல்கி இந்த கட்டுரைகளை எழுதியபோது, தமிழில் கீர்த்தனைகள் பாட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்த காலம். கல்கி இந்த ‘தமிழ்ப்பாடல் இயக்கத்தில்’ பெரும்பங்காற்றியிருக்கிறார். அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை ஒரு ஆவணப்பட வரலாறு போல இக்கட்டுரைகள் காண்பிக்கின்றன. சென்னையில் ஒரு சபாவைத் துவக்கி வைத்துப் பேசிய ஒரு செல்வந்தர், “எனக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது. I am a musical ignoromous. ஆனால் தெலுங்குக் கீர்த்தனைகள்தான் கேட்க இனிமையாக இருக்கின்றன” எனப் பேசி, தமிழ்ப்பாடல் இயக்கத்தை ஹிட்லரின் நாஜி இயக்கத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். சும்மா விடுவாரா கல்கி? “அவர் சொன்ன ‘இக்னாரமஸ்’ என்ற வார்த்தையைத் தமிழில் எப்படி மொழிபெயர்க்க முடியும்? மட சாம்பிராணி? மெளடீக மாமலை? ஆனாலும் அந்த இக்னாரமஸ் என்ற வார்த்தையில் இருக்கும் கம்பீரம் இந்த வார்த்தைகளில் இல்லையே?” என இக்னாரமஸ் என்ற வார்த்தையை வைத்தே அந்த அபத்தப் பேச்சாளரைக் கிழித்துத் தோரணமாகத் தொங்கவிட்டிருக்கிறார்.
மொழி மீதான மனத்தடையைத் தாண்டி நாம் வெகு தூரம் வந்து விட்டோம். தமிழ்ப்பாட்டுக்கு முகம் சுளிக்கும் வித்வான்களையும், புரவலர்களையும் இன்று பார்க்க முடிவதில்லை. ஆனால் இக்னாரமஸ்கள் மறைவதில்லை. அவர்கள் வேறு வேறு ரூபங்களில் தோன்றியபடியே இருக்கிறார்கள்.
சென்ற டிசம்பர் சீஸனில் ஒரு சபா விழாவுக்கு, டாக்டர்.ஜெகத்ரட்சகனைத் தலைமை தாங்க அழைக்கிறார்கள். அவர் மேடையேறி, ‘மிருதங்க வித்வான் டி.என்.கிருஷ்ணன் அவர்களே!’ என்று முழங்குகிறார். டி.என்.கிருஷ்ணன் என்ற அந்த 81 வயது “வயலின்” மேதை முன்வரிசையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதற்காக ஒரு இசை விழாவுக்குத் தலைமை தாங்க, வித்வானின் இசைவகையைக் கூட அறிந்திராத ஒரு அரசியல்வாதியைக் கூப்பிட வேண்டும்? அப்படி என்னவிதமான சூழ்நிலைக் கட்டாயம்?
இல்லை, ஒரு 81 வயது மேதை என்ன வாத்தியத்தை வாசிக்கிறார் என்று தெரிந்து கொண்டிருப்பது, இசைவிழாவுக்குத் தலைமை தாங்கத் தடையாக இருக்கும் என்ற பின்நவீனத்துவ சிந்தனையா? உடம்பில் சாம்பல் பூசி, உடுக்கையொலியோடு நடனமாடுபவனுக்கே வெளிச்சம்.
டி.என்.கிருஷ்ணனின் அப்பா நாராயண ஐயரும் ஒரு வயலின் மேதைதான். அவரிடமிருந்துதான் கிருஷ்ணன் வயலனில் ஆரம்பப் பாடத்தைக் கற்றுக் கொண்டார். கிருஷ்ணனின் மகன் ஸ்ரீராம் கிருஷ்ணனும் சிறந்த வயலின் இசைக்கலைஞர். டி.என்.கிருஷ்ணனும். ஸ்ரீராம் கிருஷ்ணனும் சேர்ந்து வாசித்த ஒரு இசைத்தொகுப்பு ‘சரேகமா’ வெளியீடாக இரண்டு வருடங்களுக்கு முன் வெளியானது. நான் இதுவரை கேட்டதிலேயே ’முதல் ஐந்து’ இடங்களைப் பிடிக்கக்கூடிய கரஹரப்ரியா வாசிப்பு இந்த இசைத்தொகுப்பில் இருக்கிறது.
வயலினில் ஒரு இழுப்பு இழுத்து, மேல் ஷட்ஜமத்துக்குச் செல்லும் ஐந்தாவது விநாடியிலேயே கரஹரப்ரியா என்னும் அருவிக்கு அடியில் நிறுத்தி விடுகிறார் டி.என்.கிருஷ்ணன். ஒரு இடத்தில் கூட, நான் எப்படி வாசிக்கிறேன் பார்த்தாயா? என்று அலட்டாமல், செளக்யமாக, மனதை நிறைக்கும் கரஹரப்ரியா. கூடவே ஸ்ரீராம் கிருஷ்ணனின் சுகமான ஒத்துழைப்பு. வெறும் ஒத்துழைப்பு என்றளவில் இல்லாமல், தகப்பனாரின் கேள்விக்கு சில இடங்களில் பதிலும் (ஆரோஹணம் – அவரோஹணம்), சில இடங்களில் அழகான எதிரொலியும் தருகிறார்.
”வயலின் பேசுகிறது” என்று சில விமர்சகர்கள் எழுதிப் படித்திருக்கலாம். அது எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள, கிருஷ்ணன்களின் இந்த கரஹரப்ரியாவைக் கேட்டால் போதும்.
நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. எங்கோ பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், முற்றிலும் இந்திய இசைக்குத் தொடர்பில்லாத சூழலில் உருவானதொரு இசைக்கருவி, இன்று நம் மரபிசையின் வெகு முக்கியமானதொரு அங்கமாகியிருக்கிறது. அந்த அளவுக்கு மரபிசையின் மீதான பிடிப்பும், அந்தப் பிடிப்பு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தடையாக அமைந்து விடாத திறந்த மனப்பான்மையும் கொண்ட இசை மேதைகள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள்.
தஞ்சை மராட்டியர்களிடம் அமைச்சராக வேலை பார்த்த வராஹப்ப ஐயர், தன்னுடைய நண்பராக இருந்த ஒரு பிரிட்டிஷ் கவர்னரிடமிருந்து முதலில் வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். முதன்முதலில் அவர்தான் வயலினில் கர்நாடக சங்கீதத்தை இசைத்துப் பார்க்கிறார். வயலினில் நல்ல தேர்ச்சியடைந்த அவர், கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலினை இசைக்கிறார்.
இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் சகோதரர் பாலுஸ்வாமி தீட்சிதர், தன் ஊரான மணலியில் தங்கியிருந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்களிடமிருந்து வயலின் இசைக்கக் கற்றுக் கொள்கிறார். பல மேற்கத்திய இசைக்கோர்வைகளையும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு வயலினில் இசைக்கிறார்.
முத்துஸ்வாமி தீட்சிதரின் சீடர்களான தஞ்சை நால்வரில் இளையவரான வடிவேலு, ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் தூண்டுதலால் வயலினில் கர்நாடக சங்கீதம் இசைக்கக் கற்றுக் கொள்கிறார். வடிவேலுவின் வயலின் வாசிப்பில் வெகுவாக மகிழ்ந்த மகாராஜா, வடிவேலுவுக்கு யானை தந்தத்தால் செய்யப்பட்டதொரு வயலினைப் பரிசளிக்கிறார்.
இந்த மூன்று நிகழ்வுகளுமே இருநூறு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. வயலினை ஒரு கர்நாடக சங்கீத இசைக்கருவியாக மாற்றிய நிகழ்வுகள்.
எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியாது, சொல்வனத்தில் ஸ்வர்ணமால்யா கோலாட்டம் குறித்து எழுதிய கட்டுரையில் ஒரு வெகு அரிய புகைப்படம் வெளியாகியிருந்தது. தஞ்சை நால்வர் குடும்பத்தைச் சேர்ந்த நூறு வருடங்கள் பழமையான அப்புகைப்படம் கோலாட்டத்தின் பழமையைக் குறிப்பது. கோலாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளின் பின்னணியில் சுவரில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் மாட்டப்பட்டிக்கிறது – ஸ்வாதித் திருநாள் மகாராஜா வடிவேலுவுக்குப் பரிசாகத் தந்த ‘தந்த வயலின்’.
இத்தனை மேதைமையும், இசையைப் போற்றிப் பாதுகாத்து இசைக்கலைஞர்களையும், இசைக்கருவிகளைச் செய்பவர்களையும் கெளரவித்து வந்த நம் சமூகம் எங்கே போனது?
நாகஸ்வரம் செய்வதில் மேதையாக அறியப்பட்டிருந்த கும்பகோணம் ரங்கநாத ஆசாரியின் தொடர்ச்சி இன்று எங்கே போனது?
கேள்விகள் கேள்விகளாக நின்று விடுமோ என்ற கவலைதான் மனதை அரிக்கிறது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் வெளியான, ‘லாகூரின் நஷ்டம், டில்லியின் லாபம்’ என்ற அர்ஜுன் நாராயணன் எழுதிய கட்டுரை மனதுக்கு ஆறுதல் தருவதாக இருந்தது.
லாகூரில் இசைக்கருவிகள் செய்பவராகவும், சிறந்த இசைக்கலைஞராகவும் இருந்த பண்டிட் ரிக்கிராம், இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு அகதியாக வருகிறார். இந்திய அரசின் சார்பில் டில்லியில் அவர் இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடை வைத்துக் கொள்வதற்கென ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் பல இசைக்கலைஞர்களும் அறிந்த சிறந்த இசைக்கருவிக் கலைஞராகிறார் ரிக்கிராம். பல இசைமேதைகளும் ரிக்கிராமிடம் இசைக்கருவிகள் வாங்குகிறார்கள். ரிக்கிராமின் நிறுவனம் இந்தியாவில் மட்டுமில்லை, பல உலகக் கலைஞர்கள் மத்தியிலும் பிரபலமாகிறது.
இந்தியா வரும் உலக இசைக்கலைஞர்கள் தவறாமல் செல்லும் கடையாக இருக்கிறது ரிக்கிராம் ஆரம்பித்த இக்கடை. இந்தியாவின் பல இசை மேதைகளும் இக்கடையின் வாடிக்கையாளர்கள். ரிக்கிராம் ஆரம்பித்த அக்கடை, இன்று அவர் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த அஜய்ராமால் நிர்வகிக்கப்படுகிறது.
இதில் சந்தோஷப்பட வைக்கும் இன்னொரு விஷயம், அஜய்ராமுக்கு அடுத்த தலைமுறையும், இத்தொழில் ஈடுபட ஆர்வமாக இருப்பதுதான். ‘உயர்ந்த தரம் வேண்டுமென்றால், நிறைய விலையைத் தந்துதானே ஆக வேண்டும்?’ என்று அஜய்ராம் தன்னம்பிக்கையோடு கேட்கும் நிலையில் இருப்பதும் சந்தோஷமளிக்கிறது. இந்தியாவில் ஒரு ஸ்ட்ராடவேரி!
திருச்சியில் ஒரு நண்பனின் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். கல்யாண மண்டபங்களின் சம்பிரதாயமாக ஒரு மூலையில் அமர்ந்தபடி வாத்தியக்கோஷ்டி மங்கல வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தது. இரண்டு நாகஸ்வரங்கள். ஒருவர் வயது முதிர்ந்தவர். இன்னொருவர் கொஞ்சம் இளைஞர். அதிக ஈடுபாடு இல்லாமல் வாசித்தாலும் அவர்கள் நல்ல தேர்ந்த கலைஞர்கள் என்று தெரிந்தது. ‘சித்தம் இறங்காததேனய்யா?’ என்ற பாபநாசம் சிவனின் சஹானாவை வாசித்து விட்டுக் கொஞ்ச நேரம் அவர்கள் ஓய்ந்திருந்தபோது அருகில் சென்றேன்.
நாகஸ்வர இளைஞர் மிருதங்க வித்வான்களிடம் வம்படித்துக் கொண்டிருந்தார். பெரியவர் லயிப்பாகத் தாம்பூலத்தைத் தயார் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
அவர் வாசித்துக் கொண்டிருந்த அந்த நாகஸ்வரம் ரங்கநாத ஆசாரி செய்தது. தனக்கு இசை சொல்லிக் கொடுத்த குருநாதரிடமிருந்து ஒரு ஜோடி நாகஸ்வரங்களை இருபது ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அதில் ஒன்று பழுதாகிவிட, இன்னொன்றில் கோயில் கும்பாபிஷேகங்களுக்கும், கல்யாணங்களுக்கும் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் வாசிப்பைப் பாராட்டிவிட்டு சில புகைப்படங்களும் எடுத்தேன்.
ஒருவனாவது கவனிக்கிறானே என்ற பிரக்ஞையின் காரணத்தாலோ என்னவோ, பிரேக்குக்குப் பின் அவர்கள் வாசிப்பு மிகவும் சிரத்தையோடு இருந்தது. ‘சக்கணி ராஜ’ என்ற அருமையான கரஹரப்ரியா கீர்த்தனையை நல்ல விஸ்தாராமான ஆலாபனைக்குப் பின் வாசிக்க ஆரம்பித்தார்கள்.
வெகு லயிப்பாக அவர்கள் வாசித்துக் கொண்டிருந்தபோதே, மேடையிலிருந்து பரபரப்பாக ஒரு சைகை போக, கரஹரப்ரியாவை அப்படியே விட்டுவிட்டு ‘மெட்டி, மெட்டி, மெட்டி ஒலிதான்’ என்ற சீரியல் கீர்த்தனையை வாசித்தார்கள். மேடையில் மாப்பிள்ளை, பெண்ணுக்கு மெட்டி அணிவித்துக் கொண்டிருந்தார். அதுவரை பட்டுப்புடைவையும், வைரத்தோடும், அபார்ட்மெண்ட் வாழ்க்கையும் பேச்சாக இருந்த பார்வையாளர்கள், உடம்பே காதாக நாகஸ்வரம் பக்கம் திரும்பினார்கள்.